Tuesday, April 26, 2005

ரஜனியின் விஸ்வரூபம்

சந்திரமுகியில் தலைவர் பின்னியெடுத்திருக்கிறார். ரஜனி படத்துக்குரிய அத்தனை சூத்திரங்களையும் உள்ளடக்கி (அரசியல் உட்பட) வெளிவந்து சக்கை போடு போடுகிறது சந்திரமுகி. ஏறத்தாழ 3 வருடங்களின் பின் வரும் படமிது. பாபா படத்தோல்வியில் துவண்டிருந்த ரசிகர்களுக்கு நல்ல தீனி. எல்லோரும் ‘ஜென்ம சாபல்யம்’ அடைந்து விட்டார்கள். பிறவிப் பயனை அடைந்த அவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாலே புரியும். இனி படத்திற்கு வருவோம்.

திரைக்கதை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மணிச்சித்திரதாழின் படி தானென்றாலும் அருமையாக கதை பின்னப்பட்டுள்ளது. அழகான படியெடுப்பாளன் என்ற பட்டம் வாசுவுக்குத் தரலாம். ரஜனி பின்னியெடுத்திருக்கிறார். அவர் அறிமுகமாகும்போது சருகுகள் அந்தரத்தில் நிற்பது அழகான ‘சூப்பர்’ கற்பனை. அறிமுகக் காட்சியில் அவர் ஆட்களைத் துவைத்தெடுப்பது கலக்கல். பிரபுவும் நடித்திருக்கிறார். அடிக்கடி அவர் சீரியசாகக் கதைக்கும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.

வடிவேலு நகைச்சுவைக்காக வருகிறார். ஆனால் நிறைய காட்சிகள் அருவருப்பாக இருக்கின்றன. நாசர் ஒப்புக்கு நடித்துள்ளார். படம் முழுவதும் ரஜனி ஆதிக்கம் தான். ஜோதிகா கடைசி 30 நிமிடங்களில் தான் யாரென்று நிருபிக்கிறார். அழகான ஆக்ரோசமான நடிப்பு. சந்திரமுகியின் ஆவி புகுந்த பின் அவரின் நடிப்புத்திறன் ‘சூப்பர்’.

இசை பரவாயில்லை ரகம். தேவுடா பாட்டு வழமையான ரஜனியின் அறிமுகப் பாட்டுக்கள்(opening song) போல் வரவில்லை. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. அறிவியல் உண்மைகளின் படிதான் எல்லாக் காட்சிகளும் போகிறது என்று சொல்ல முடியாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அறிவியல் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது. இதில் மிகை நடிப்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. ஆனால் இருப்பதாகப் படுகிறது. மிகக் கவனமாக மூடநம்பிக்கை பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்புகிறது. ஆனால் மூடநம்பிக்கை ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. அது எப்படி சாத்தியப்படுகிறது என்பதில்தான் நெறியாள்கையின் (டைரக்சன்) திறமை உள்ளது. உண்மையில ஆவி இருப்பதாகச் சொல்லப்படுகிறதா? அல்லது அதெல்லாம் பொய், வெறும் ‘பிளவாளுமை’ என்று சொல்லப்படுகிறதா? தீர்மானமாச் சொல்ல முடியாது. நல்ல பட்டிமன்றம் ஒன்றுக்கான அருமையான தலைப்பு.

படத்தில் ஒரு பாம்பு காட்டப்படுகிறது. அது ஏன் என்று பலரும் குழம்புகிறார்கள். அதில்தான் படத்தின் மையமே இருக்கிறது. அதை பலவிதமான வாசிப்புக்கு உட்படுத்தலாம். எப்படியெப்படி வாசிக்கலாம் (பாக்கிறதைத் தான் சொல்லிறன்) என்பதை நான் இங்கே சொன்னால் சுவையில்லை. உங்களின் அனுமானத்துக்கே விட்டுவிடுகிறேன்.

மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையா என்பதை இனி படம் பார்க்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்ப இன்னும் படம் பார்க்கவில்லையா? என்று கேட்கிறீர்களா?
இல்லை. படம் பார்க்கவில்லை.
பிறகெப்படி இவ்வளவும் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
தமிழ்மணத்தில் சந்திரமுகி பற்றி எழுதப்பட்ட பதிவுகளில் பொறுக்கியைவதாம். மேற்கூறியவைகள் எவையும் என் கருத்துக்களே அல்ல.
அப்போ ஏன் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
அதுதான் முக்கியமே. இப்போது கொஞ்ச நாட்களாக எழுத முடியாமல் நிறைய வேலை. பரீட்சைகள் வேறு நெருங்கி வருகிறது. கொஞ்ச நாளா எழுதுவதில்லை என்று இருந்த நான் திடீரென்று அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால்;

சந்திரமுகி பற்றி நாலு வார்த்தை எழுதாவிட்டால் எங்கே நாம் தொலைந்து போவோமோ, மறக்கடிக்கப்பட்டு விடுவோமோ, தனித்துப் போய்விடுமோ என்று எழுந்த பயத்தில், கும்பலில் கோவிந்தாவாக கோசம் போட்டு எழுதின பதிவுதான் இது.
என்னையும் உங்கள் ஆலாபனையில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே.
சந்திர முகிக்கு ஒரு ஓ............

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, April 13, 2005

வாழ்த்துச் சொல்ல மாட்டேன்

புதுவருட வாழ்த்துக்கள் என்று பலர் கூறிவிட்டார்கள். நான் கூறப்போவதில்லை. கூறுவதால் ஏதும் குறைந்து விடப்போவதுமில்லை.

உண்மையில் இரு தமிழரின் புதுவருடப்பிறப்புத் தானா? அல்லது தனியே மதத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதா? இது பற்றி திராவிடர் கழகம் உட்பட பலர் கூறிவிட்டார்கள். காஞ்சி பிலிம் கூட அண்மையில் ஒரு கட்டுரையைப் போட்டிருந்தார்.

ஈழத்தில் வன்னியில் இது தமிழரின் வருடப்பிறப்பன்று என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதைத் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதவில்லை. மாறாக தைப்பொங்கல் தினத்தையே வள்ளுவரின் பிறந்த நாளாகவும் அதையே தமிழ் வருடப்பிறப்பாகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் இது இலங்கையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு என்றே அழைக்கப் படுகிறது.

உண்மையில் இது பற்றி பூரண விளக்கம் இல்லாமல் இருக்கிறேன். வலைப்பதிவரில் யாராவது விளங்கப் படுத்துவீர்களா?

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, April 12, 2005

வரலாற்றுச் சாதனை.

கடைசியாக பரலோகத்திலிருந்து கிடைத்த அறிக்கையின்படி, கடவுள்களின் வாழ்க்கை வரலாற்றில்(?) ஒரே நேரத்தில் அதிகூடிய வேண்டுதல்கள் வந்ததாக இன்றைய நாள் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த கடவுள்களின் கூட்டமைப்பு(?) வெளியிட்ட அறிக்கை ஒஸ்ரேலிய நேரப்படி இரவு 10.15 க்கு வெளியாகியது.

அந்த அறிக்கையின் விவரப்படி, பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கிடையேயான துடுப்பாட்டப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் கடவுள்களுக்கு வரும் மன்றாட்டங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியதாகவும், இறுதி ஓவர் வீசப்படும் போது அது இன்னும் அதிகரித்து உச்சத்தைத் தொட்டதாகவும் கூறப்படுகிறது. அதுவும் கடைசிப்பந்து வீசப்படுவதற்கான நேரத்திலேயே வரலாறு காணாத அளவு வேண்டுதல்கள் கடவுள்களின் சன்னிதானத்துக்கு வந்து சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுதான், இதுவரையான வரலாற்றுக்காலத்தில் அதிகூடிய வேண்டுதல்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்த சம்பவமாகக் கடவுள்களின் கூட்டமைப்புக் கருதுகிறது. இதை கின்னஸ் புத்தகக் குழுவுக்கு அறிவிக்க ஒவ்வொரு கடவுளிடமிருந்தும் ஒவ்வொரு சிறப்புத் தூதுவர் விரைகிறார்கள்.

பரிதாபமான விசயம் என்னவென்றால், அந்தக் கடைசிப் பந்து வீசி முடிந்ததும் சில கடவுள்களுக்கு கடுமையான வசைமழை பொழியப்பட்டதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார். எனினும் கடவுள்களின் கூட்டமைப்பு இச் செய்தியை மறுத்துள்ளது.

பிந்திய செய்தி:
கடவுள்களுக்கு வந்த வேண்டுதல்களின் எண்ணிக்கை விவரம் கின்னஸ் குழுவினரால் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து கடவுள்களுக்கிடையில் சண்டை மூண்டு விட்டதாக எமக்குக் கிடைக்கும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுதிச் செய்திகள் பின்னர் விரிவாகத் தரப்படும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, April 11, 2005

மனுசப் பிறவிகள்.

இப்ப மாலனுக்கும் சிவகுமாருக்கும் நடக்கிற பிரச்சின தான் தமிழ் மணத்தில சூடான விசயமாயிருக்கு. என்ர வலைப்பதிவின்ர தீவிர வாசகர் சிலர் எனக்கு தனியாக மின்னஞ்சல் போட்டிருக்கினம். என்ர பதிவில கடசியா நான் எழுதினது 'நாய்ப் பிறப்புக்கள்' எண்ட பதிவு. என்ர வலைப்பக்கத்துக்கு இடைக்கிடை வாற ஆக்களுக்கு இந்த ‘நாய்ப் பிறப்புக்கள்’ எண்ட பதிவுதான் முதலில வரும். அது அவயளச் சங்கடப்படுத்திறதாயும் வேறயொரு பதிவ எழுதி அத பின்னுக்கு அனுப்பச்சொல்லியும் அரியண்டம் குடுக்கினம். அவயளின்ர அரியண்டத்தால தான் 'மனுசப்பிறவிகள்' எண்ட இந்தப் பதிவு. இனி கொஞ்ச நாளா இந்தப்பதிவு இருக்கேக்க வாற ஆக்களுக்கு முகஞ்சுளிக்காது.

நான் இப்ப கொஞ்ச நாளா ஒண்டும் எழுதேல. எழுத விசயமில்ல எண்டில்ல. எல்லாப் பதிவையும் வாசிச்சுக்கொண்டிருக்கிறன். அப்பப்ப பின்னூட்டங்களும் குடுத்துக்கொண்டிருக்கிறன். எனக்குத் எழுதத் தோன்றேக்க எழுதுவன். அதுக்கிடையில ரெண்டு கிழம விடுமுறைக்குப் பிறகு இண்டைக்கு பள்ளிக்கூடம் தொடங்கீற்றுது. லீவு விடேக்கயே ஏராளமான வீட்டுப்பாடங்கள் தந்திட்டாங்கள். கடசி மூண்டு நாளாத்தான் அதுகளச் செய்யத் துடங்கினனான். இன்னும் நிறைய வேலையள் மிச்சமிருக்கிறதும் நேரமில்லாததுக்குக் காரணம்.

அதுக்குள்ள என்னையும் சயந்தனையும் ஒரே ஆள் எண்டு கொஞ்சப் பேர் குழம்பிக்கொண்டு இருக்கினம். அருணன் முக்கியமான ஆள். அவரோட ரெண்டு பேருமே ஒரே நேரத்தில சற் பண்ணிக்கூட அந்தாள் நம்பேல. பரிசீலிச்சுக் கொண்டு இருக்கிறாராம். ரெண்டு பேரிண்ட எழுத்தும் ஒரே மாதிரி இருக்காம். சரி நீர் பரிசீலிச்சுக்கொண்டே இரும் எண்டு அவரிட்டச் சொல்லீட்டன்.

சீ!!!...
இப்பிடிச் சந்தேகப் படுகிறதுகளும் ஒரு மனுசப் பிறவியோ? (அப்பாடி ஒரு மாதிரி தலைப்பை பொருந்த வச்சிட்டன்)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, April 02, 2005

‘நாய்ப் பிறப்புக்கள்’

வணக்கம்!

இப்ப எனக்கு பதினஞ்சு வயசு. சொந்த ஊரிலயிருந்து இடம்பேந்து (இடம்பெயர்ந்து) மானிப்பாயில இருக்கிறன். நேற்று பக்கத்து வீட்டு வேணியக்காவின்ர நாயக்கு கல்லால எறிஞ்சிட்டன் எண்டு வீட்ட ஆரவாரம். இப்பிடி அடிக்கடி எங்கயாவது நடக்கிறதுதான்.

‘உனக்கென்ன கிறுக்கே பிடிச்சிருக்கு’ எண்டு சிலவேள பேச்சு விழும். அதென்னவோ தெரியேல, எனக்கு நாய்கள் எண்டாச் இப்ப பிடிக்கிறேல. குறிப்பா நாயத் தூக்கிக் கொஞ்சிற ஆக்களக் கண்டாக் கடுமையான எரிச்சல்தான் வருகுது. கடிக்கிற மாதிரி வெருட்டிற அல்லது குலைக்கிற நாயளக் கண்டாக்கூட எனக்கு எரிச்சல் வாறேல. ஏதோ பழக்க தோசத்தில பக்கத்தில வந்து வாலாட்டிக் கொண்டு நிக்கிற நாயள் உரஞ்சி செல்லம் விளையாடிற நாயள் எண்டா அடிக்கத்தான் வரும். ஆக்கள் நிக்கிறதால தள்ளித்தள்ளி விடுவன்.

‘அவனுக்கு நாயள் எண்டா சரியான கறள்.’
எண்டு சொல்லிக்கொண்டினம்.
‘சின்னனில நாயளில நல்ல வாரப்பாடு. ஆனா பிறகுதான் மாறீட்டான்.’
எண்டு அம்மா சொல்லுவா.
‘மூண்டு தரம் முறையா நாயிட்டக் கடி வேண்டினவனெல்லே. ரெண்டு தரம் பொக்குளச் சுத்தி ஊசியும் போட்டது. அதுதான் இப்பிடி’
எண்டும் சொல்லுவினம்.

நாயிட்ட மூண்டுதரம் கடிவாங்கினது உண்மதான். 7 வயசில இந்தியா-மதுரையில தெருநாய் ஒண்டிட்டக் கடிவாங்கி பொக்குளச் சுத்தி 14 ஊசி போட்டது தான். ஏன் கடிவாங்கினனான் எண்டது ஞாபகமில்ல. பிறகு ஊரில ரெண்டு தரம் கடிவாங்கினதும் நிறையத்தரம் கலைபட்டதும் நடந்தது. அதெல்லாம் நாயள வெறுக்கக் காரணமேயில்ல. கள்ள மாங்காய் கள்ள விழாங்காய் பிடுங்கப் போனா நாய் துரத்தாம என்ன செய்யும்?

எங்கட வீட்ட ஜிம்மி எண்டொரு நாய் வளத்தினம். நல்லா வயது போன நாய். கனகாலப் பழக்கமில்லாததால அவர் எனக்குப் பிரண்ட் இல்ல. கொஞ்ச நாளா வருத்தமெண்டு படுத்துக்கிடந்துது. முடியெல்லாம் கொட்டி பாக்க வடிவில்லாமல் கிடந்துது. பிறகொருநாள் செத்துப்போச்சு. அதப் புதக்கேக்கதான் அந்த ஜிம்மியின்ர இழப்புத் தெரிஞ்சுது. ரெண்டு கிழமையா நாயில்லாமக் கிடந்துது எங்கட வீடு. திடீரெண்டு களை இழந்து போன வீட்டுக்கு ‘நாயில்லாத வீடு’ எண்டு உவமை சொல்லலாம். பிறகு அப்பா எங்கயோ போய் ஒரு நாய்க்குட்டிக்கு ஓடர் குடுத்திட்டு வந்தார். ஒரு கிழம கழிச்சு என்னையும் கூட்டிக்கொண்டு அந்த வீட்ட போனார். அங்க இருந்த 4 குட்டியளில ஒரு ‘பெடியன்’ குட்டியத் தூக்கிக் கொண்டு வெளிக்கிட்டார்.
‘மற்றக்குட்டியள என்ன செய்வியள்?’
எண்டு அந்த வீட்டுக்காரரிட்டக் கேக்க,
‘அதில மற்ற பெடியன் குட்டிய இன்னொராள் கேட்டவர். மற்ற ரெண்டும் பெட்டையள். அதுகளக் கொண்டே எங்கயும் விடோணும்.’
‘நான் ஒண்டக் கொண்டு போறன் தாறியளோ?’
எண்டு கேட்டு வாங்கீற்றன். அப்பா ரெண்டு தரம் விட்டிட்டு வா, விட்டிட்டு வா எண்டு சொல்லிப்பாத்திட்டு சரிவராம விட்டிட்டார். ரெண்டு குட்டியளோடயும் வீட்ட வெளிக்கிட்டாச்சு.

வீட்ட என்ன ஒரு மாதிரித்தான் பாத்தீச்சினம். என்னெண்டு தான் கத பரவீச்சோ தெரியேல அக்கம்பக்கத்திலயிருந்த என்னொட்ட பெடிபெட்டையளெல்லாம் வந்திட்டுதுகள். நான் ஒரு பெட்டைக் குட்டியக் கொண்டந்திருக்கிறேனாம் எண்டதுதான் அவயின்ர விடுப்பு. எந்தக் கேள்வியுமில்லாம என்ன ஆதரிச்சது அம்மம்மா தான். அதுக்குப்பிறகு பெடியனுக்கு ஜிம்மி எண்டுதான் அப்பா பேர் வச்சார். பெட்டைக்கு லசி எண்டு நான் பேர் வச்சன். ரெண்டு கிழமைக் குட்டியாத்தான் எங்கட வீட்ட வந்தவை. தங்கச்சியளுக்கு ஆரம்பத்தில நான் லசியக் கொண்டந்தது பிடிக்கேல. ஜிம்மிக்கு மட்டுந்தான் சாப்பாடு வப்பினம். லசி சாப்பாட்டுக்கு வந்து நிண்டாலும் ‘போய் கொண்ணாவிட்ட கேள்’ எண்டு ஒரு அதட்டு அதட்டுவினம். ஆனா அதுகள் குழந்தயள் மாதிரி பழக வெளிக்கிட வித்தியாசமில்லாமலே ரெண்டையும் கவனிக்கத் துவங்கீச்சினம்.

நான் ரெண்டிலயும் சரியான வாரப்பாடு.
‘ஏன்ரா பெட்டக் குட்டியத் தூக்கியந்தனி?’
எண்டு ஆராவது கேட்டா,
‘பெட்டை நாய் தான் நல்லா வேட்டையாடும்’
எண்டு பெரியாக்கள் கதைக்கேக்க கேள்விப்பட்டதச் சொல்லுவன். நான் லசியோட 'கெற்றப்போல்' சகிதம் அடிவளவுக்கயும் பின்னாலயிருக்கிற பத்தக் காட்டுக்கயும் போய் அணில், உடும்பு எண்டு பிடிச்சாற மாதிரியெல்லாம் கற்பனை பண்ணியிருக்கிறன். ('கெற்றப் போல்' பற்றி பிறகொருக்கா எழுத வேணும்) இதுக்குள்ள ரெண்டு பேரும் வளந்தீட்டினம். வீட்டில எல்லாரையும் விட அவைக்கு நான் தான் எசமானன். மற்றாக்கள விட எனக்குத்தான் பவர் கூடக் குடுத்திருந்தவை.

இந்த நேரத்தில லசி குட்டிபோட்டீச்சு. 5 அழகான குட்டியள். (குட்டியெண்டா எல்லாமே அழகுதான் எண்டு குழப்ப வேண்டாம்) இந்த நேரத்தில தான் லசியிட்ட எனக்கிருக்கிற பவர் வெளியில தெரிஞ்சிது. சொந்தக்காரர் வீட்டுக்குப்போயிருந்த நான் குட்டி போட்ட அடுத்தநாள்தான் திரும்பி வாறன். தங்கச்சி தான் விசயத்தச் சொன்னாள்.

‘ஆ…அப்பிடியோ? எத்தின குட்டி?’
‘அஞ்சு குட்டி எண்டு அப்பா சொன்னவர். எட்ட இருந்துதான் பாத்தவர். அது ஒருத்தரயும் கிட்ட விடேல.’
‘எங்க போட்டிருக்கு?’
‘பின் பத்திக்குள்ள’
உடுப்புக் கூட மாத்தாமல் பாக்கிறதுக்கு ஓடிறன்.
‘எடியே உவன் எங்க ஓடுறான்?’ எண்டு அம்மா கேக்கிறா,
‘நாய்க்குட்டி பாக்கப் போறார்’
‘எடேய்! இஞ்சால வாடா. அப்பாவயே கலைக்குது. நீ எங்க போறா?’
நான் காதில விழுத்தாமல் பத்திப்பக்கம் போறன்.
கத்திக்கொண்டு அம்மாவும் அம்மம்மாவும் ஓடியருகினம். என்னக் கண்ட லசி குலைச்சுக் கொண்டு எழும்பி ஓடியந்துது. கடிச்சுக் குதறப்போகுது எண்ட மாதிரித்தான் நினைச்சன். ஆனா அஞ்சு யார் தூரத்தில நிண்டிட்டுது. ஆனா முறாச்சுக் கொண்டு உறுமிக்கொண்டு நிண்டுது. கிட்ட விடுற பிளான் இல்ல. ஆனா நான் அசயாம அதிலயே நிக்கவும் திரும்பப் போய் குட்டியளிட்டப் படுத்திட்டுது. நான் கொஞ்சம் கிட்ட நெருங்கிறன். இவ்வளவுக்கும் பின்னால தங்கச்சி நிண்டு கொண்டு,
‘அது உன்ன ஒண்டும் செய்யாது. கிட்டப்போ’
எண்டு உசுப்பேத்த, அவளுக்கு மண்டையில குட்டு விழுகுது. என்னத்திரும்ப வரச்சொல்லி அம்மா கத்திறா. நான் கிட்டப்போயிட்டன். உறுமின படியே லசி எழும்பிவிட்டுது. ஆனா குட்டியள தெளிவாப் பாக்கக் கூடியமாதிரிவிட்டிட்டு பேசாம நிண்டிது. அது இனி என்ன விடும் எண்டு விளங்கீற்றுது.

கண்முழிக்காமல் 5 குட்டியள். அப்பிடியே விட்டிட்டு குசினிக்க போய் இறைச்சிக் கறியோட சோறு குழச்சுக் கொண்டு வந்தன். மற்றாக்களுக்கு ஆச்சரியம். அதுக்க பம்பலென்னெண்டா, காலமதான் அப்பாக்கு முழங்காலில சிராய்ப்பு. லசிக்கு சாப்பாடு குழச்சு அதக் கஸ்டப்பட்டு வீட்டின்ர முன்பக்கம் கூப்பிட்டு சாப்பாடு வச்சிட்டு நைசா வீட்டுக்கால ஓடியந்திருக்கிறார் குட்டியளப்பாக்க. 'வசந்தனிட்ட' வளந்த நாயெல்லோ! விடுமே? அதுவும் சாப்பிடிறத விட்டிட்டு உடன வீட்டச் சுத்தி குட்டியளிட்ட வந்திட்டுது. அப்பரக் கண்டதும் கலைச்சிருக்கு. தல தெறிக்க ஓடி குமிச்சு வச்சிருந்த பனங்கொட்டையளுக்க விழுந்து காயம். ஆனா என்ன அது பேசாம விட்டது அவைக்கு ஆச்சரியம்தான்.

சாப்பாடு வக்கப்போற என்னோட, தங்கச்சியளும் வருகினம் குட்டிபாக்க. மற்றாக்கள எட்ட நிண்டு பாக்கச் சொல்லீட்டு நான் மட்டும் போய் சாப்பாடு வச்சன். லசிக்குச் சரியான பசி. அவுக்அவுக் எண்டு விழுங்கீச்சு. இந்த இடைவெளிக்குள்ள நான் குட்டியளத் தொட்டத பாத்தாலும் உறுமிக்கொண்டே பேசாம சாப்பிட்டிச்சு. பின்னேரம் அப்பா வந்தோடன இதுதான் கத. என்ன லசி விட்டது எப்படி எண்டதுதான். அடுத்தடுத்த நாளும் என்னத் தவிர ஒருத்தரையும் கிட்ட விடேல. நான் குட்டியளத் தூக்கி வச்சிருக்கறன், ஆனா எட்ட நிண்டு பாத்துக்கொண்டிருக்கிற அப்பரப் பாத்துக் குலைக்கிது. அப்பிடி என்னோட லசி அந்தமாதிரி. பக்கத்திலயிருந்து வாற ஆக்களுக்கு நான் தான் குட்டியளக் காட்டிறது. இப்படித்தான் ஒருநாள் அம்மம்மா சொன்னா,
‘உவன் சுரேஸ் இண்டைக்கு நாய்க்குட்டியள் பாக்க வாறன் எண்டவன். பின்னேரம் நிப்பாய் தானே?’

ஓமெண்டன். கிட்டத்தட்டச் சொந்தக்காரன் மாதிரித்தான் அவன். குட்டிபோட்டு ஒரு கிழம ஆயிட்டுது. ஆனா லசி இன்னும் தன்ர பாதுகாப்பக் குறச்ச மாதிரித் தெரியேல. பின்னேரம் சுரேஸ் வந்தான். (என்ன விட 4 வருசம் மூத்தவனெண்டாலும் அண்டைக்குப் பிறகு அவன் இவன் எண்டுதான் சொல்லிறனான். அவ்வளவுக்கு அவன் என்ர எதிரி) நாய்க்குட்டியக் காட்டிறதுக்கு வீட்டுக்குப் பின்னுக்குக் கூட்டிக்கொண்டு போனன். தான் ஒரு நாய்க்குட்டியத் தூக்கிப்பாக்க வேணும் எண்டு கேட்டான். அவன் காட்டினத தூக்கிக் குடுத்தன். லசியும் என்னில நம்பிக்க வச்சு லேசா உறுமிக்கொண்டு பாத்துக்கொண்டு நிண்டீச்சு.

பாத்தவன் அத விட்டிட்டு இன்னொரு குட்டியத்தூக்கித் தரச்சொன்னான். நானும் தூக்கிக் குடுத்தன். பிறகு அத ஒருக்காத் தூக்கு எண்டு இன்னொண்டக் காட்ட, நானும் அதத் தூக்கப்போக, லசியும் என்னோட குட்டியளுக்குக் கிட்ட வர, அந்தநேரம் பாத்து கையிலயிருந்த குட்டியோட எடுத்தானே ஓட்டம். என்ன நடந்ததெண்டு விளங்கிறதுக்குள்ள லசியும் கலச்சுக்கொண்டு போய் 25 யாரிலயே நிண்டு என்னத் திரும்பிப் பாத்திச்சு. அது நினைச்சிருந்தா அவனக் கலச்சு ஒரு வழி பண்ணியிருக்கலாம். அனா நான் பொறுப்பா தன்ர குட்டிய வேண்டித்தருவன் எண்டு நம்பி நிண்டிருக்கோணும். அதின்ர பார்வய என்னால தாங்க முடியேல. எனக்கு என்ன நடந்ததெண்டு விளங்கீற்றுது. இப்பிடி கால வாருவான் எண்டு நான் நினைக்கேல. நான் கால வாருவன் எண்டு லசியும் நினைக்கேல. உடன ஓடிப்போய் அப்பாவிட்டச் சொன்னன். அம்மா, அம்மம்மாவிட்டயும் சொன்னன். அவனிட்டக் கதச்சு வேண்டித்தாரதாச் சொல்லிச்சினம். இப்ப உடனயே போக வேணுமெண்டு அடம்பிடிக்க, நாளைக்குப் போகலாமெண்டு சொல்லிச்சினம். அவைக்கு பின்னேரம் பூசைக்குப்போற அவசரம். என்னையும் பூசைக்கு வெளிக்கிடச்சொல்லிச்சினம். ஓமெண்டு போட்டு வெளிக்கிட்டு நேரா அவன்ர வீட்டதான் போனன். அவன் அங்க வந்து சேரேல. தேப்பனிட்ட விசயத்தச் சொன்னன். எனக்கு அவரில நம்பிக்க இருந்தீச்சு. ஆனா சுரேஸ் அத வேற ஆருக்கோ குடுத்திட்டானாம். தேப்பன் அடிஅடியெண்டு அவன அடிச்சதுதான் மிச்சம். எனக்கு அந்தக் குட்டி கிடக்கேல. லசிக்கு அதின்ர பிள்ள கிடைக்கேல.

லசி அழுதுகொண்டிருந்தீச்சு. அது என்னப் பாக்கிற பார்வையெல்லாம் ‘உன்ன நம்பித்தானே குட்டியத் தந்தனான். இப்பிடி மோசம் பண்ணீட்டியேடா பாவி’ எண்டிற மாதிரி இருந்தீச்சு. அப்ப தவணை லீவு வந்ததால ஒரு கிழம ஈச்சமோட்டையில சொந்தக்காரரிண்ட வீட்ட போய் இருந்தன். (இது தான் எங்கட ரூர். இத்தினியளவு யாழ்ப்பாணத்திலயே கால்வாசி ஆமியிட்ட. மிச்ச இடத்துக்க மட்டும் தான் சுத்த ஏலும்.) நான் என்ர ரூர் முடிஞ்சு வீட்ட வரேக்க எல்லாமே தலகீழ். லசி ஒரு மூலையில படுத்துக் கிடந்துது. குட்டியள் ஒண்டையும் காணேல. தங்கச்சி தான் சொன்னாள், எல்லாத்தையும் கேக்கிற ஆக்களுக்குக் குடுத்திட்டினமாம். நான் ஒருத்தரோடயும் கதைக்கேல. அண்டைக்குப் பின்னேரம் அம்மம்மாவிட்ட மட்டும் அழுதுதீர்த்தன்.

லசியும் ரெண்டொரு நாளில சரியாகீட்டுது. அது பழய படி ஓடித்திரிஞ்சீச்சு. என்னட்ட எந்தக் கோபமுமில்லாமல் முந்தியப் போலவே மற்றாக்கள விட அதிக நேசமா இருந்தீச்சு. ஜிம்மியும் தான். குட்டி போடுறதும் குட்டி துலைக்கிறதும் தங்கட வாழ்க்கையில சகஜம் எண்டு விளங்கீட்டுதோ தெரியேல. எல்லாம் இயல்பா போய்க்கொண்டிருந்தீச்சு. ஈழத்தமிழனெண்டா என்னெண்டு ஒரே இடத்தில இருக்கிறது? எங்கட முற வந்தீச்சு. அதுதான் இடப்பெயர்வு. சொந்த ஊரிலயிருந்து நிரந்தர இடப்பெயர்வு துடங்குது. எங்கட இடப்பெயர்வு சுற்றோட்டத்தில முதலாவது பெயர்வு.

1992 ஆடி மாசம். ஆமி வெளிக்கிட்டிட்டான். வழமைபோல அத்தியாவசிய மூட்ட முடிச்சுக்களோட சைக்கிளில வெளிக்கிட்டாச்சு. காலம வந்து மானிப்பாயில தங்கச்சி அம்மா ஆக்கள விட்டிட்டு இன்னும் ஆமி வரேல எண்டாப்போல பின்னேரம் போல திருப்ப நானும் அப்பாவும் வீட்ட போறம். கிட்டத்தட்ட ஊர் வெறிச்சோடிப்போய் இருந்தீச்சு. இப்பிடி சாமான் எடுக்க வந்தாக்கள் தான் அங்கினேக்க தென்பட்டீச்சினம். வீட்ட வந்தா ஜிம்மியும் லசியும் ஓடியந்து பாஞ்சு விழுந்துதுகள். எப்பிடியும் ரெண்டையும் கூட்டிக்கொண்டு போறதுதான் என்ர திட்டம். எடுக்கக் கூடிய சாமானுகள எடுத்துக் கொண்டு பொழுது படுறதுக்குள்ள வெளிக்கிட வேணும். சாமானெல்லாம் எடுத்தாச்சு. அப்பாவுக்கு ரெண்டையும் கூட்டிக்கொண்டு போக முழுமனமில்ல. நாங்களே இருக்க இடமில்லாம இருக்கேக்க இதுகள என்ன செய்யிறது எண்டது அவரிண்ட கவல. ஆனா விட்டிட்டுப் போகவும் அவருக்கு மனமில்ல. நான் கூட்டிக்கொண்டுதான் போறதெண்டதில உறுதியா நிண்டன். படலையையும் சாத்திக்கொண்டு வெளிக்கிட்டு ரெண்டையும் கூப்பிட்டா ரெண்டு வருதுகளில்ல. ரெண்டையும் வெளியில விட்டுத்தான் படலையச் சாத்தினனான் எண்டாலும் வேலிப்பொட்டுக்காலப் பூந்து உள்ள போய் முத்தத்தில நிக்குதுகள். எவ்வளவு கூப்பிட்டும் வருதுகளில்ல. முதன் முதலா லசியிட்டயும் ஜிம்மியிட்டயும் என்ர பவர் வேல செய்யேல. ஒரு கால் மணித்தியாலமா கஸடப்பட்டும் அதுகள் வீட்ட விட்டிட்டு வாற பிளான் இல்ல. திரும்பப் போய் ரெண்டையும் வெளியில கூட்டியந்து படலையப் பூட்டினாலும் திரும்ப பொட்டுக்குள்ளால போய் நிக்குதுகள். நல்லாப் பொழுதுபடத் துவங்கீட்டுது. எந்த நேரமும் ஆமி வந்திடுவான் எணட பயம். அதுக்குள்ள ரெண்டு மூண்டு செல்லும் (எறிகணை) வந்து விழத்துவங்கீட்டுது. (லீலியாச்சியின்ர படலைக்க எண்டு முதலொரு பதிவில எழுதினனான்)

நாங்கள் இனியும் அங்க நிக்கேலாத நிலை. ஆனா ஜிம்மியும் லசியும் கேக்கிறபாடாக் காணேல.
‘நீ வா. இதுகள் கொஞ்ச நேரத்தால பிறத்தால வருங்கள்’
எண்டு அப்பா சொல்லி என்னக் கூப்பிட்டுக்கொண்டு வெளிக்கிட்டார். எனக்கெண்டா நம்பிக்கயில்ல. அப்பாவுக்கும் இருந்திருக்காது. ஆனா சொன்னார். போகப் போக ரெண்டும் வருகுதுகளா எண்டு பாத்துப் பாத்துப் போனன். ஆனா இண்டை வரைக்கும் அதுகள் வரேல. அடுத்த நாள் ஆமியடிச்ச செல்லில செத்திருக்கலாம். இல்லாட்டி வளவுக்கு வாற ஆமியப்பாத்துக் குலைக்கவோ கடிக்கவோ வெளிக்கிட்ட அதுகள ஆமியே சுட்டிருக்கலாம். கட்டாக்காலிகளாய்த் திரிஞ்சு செத்துப்போய் இருக்கலாம். சனமெண்டு ஒருத்தருமே இல்லாததால ஆமியின்ர சாப்பாட்ட விட்டா வேற இல்ல எண்ட நிலையில பட்டினி கிடந்து செத்திருக்கலாம்.

அதுக்குப்பிறகு நாங்கள் தங்கியிருந்த வீட்டில நாய்க் குட்டியொண்டு வளப்பமெண்டு வெளிக்கிட்டினம். அனா நான் விடேல. நாய் வளக்கிறதெண்டதையே கடுமையா வெறுக்கிற அளவுக்க இருந்தன். இந்த நிலைதான் நான் பதிவின்ர முதற்பகுதியில விவரிச்ச நிலை. (பதினஞ்சு வயசில நினைச்சது).

ஜிம்மியயும் லசியையும் துலச்சப்பிறகு இண்டை வரைக்கும் நான் நாய் வளக்கவேயில்ல. வீட்டிலயும் நான் வெளிக்கிடும் வரைக்கும் மற்றாக்கள வளக்க விடேல. இப்ப ரெண்டு மாசத்துக்கு முதல் தங்கச்சி ஒரு நாய்க்குட்டி வேண்டி வச்சிருக்கிறாளாம். எல்லாம் நான் இல்லாத துணிவு. நாய் நன்றியுள்ள விலங்கு எண்டு சொல்லுகினம். ஆனா என்னைப் பொறுத்தவரை ஜிம்மியும் லசியும் நன்றியில்லாததுகள். பின்னயென்ன? கொஞ்சமாவது நன்றி இருந்திருந்தா என்னோட வந்திருக்க வேணுமெல்லோ?

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________