Friday, July 29, 2005

திருவாசக வெளியீட்டில் வை.கோ. பேசியதன் ஒலிப்பதிவு

சென்னையில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் திருவாசக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க பொதுச்செயலர் திரு. வை.கோ. அவர்கள் ஆற்றிய உரையின் ஒருபகுதியின் ஒலிப்பதிவைக் கேளுங்கள்.



இவ்வொலிப்பதிவுக்கான இணைப்பு தமிழ்நாதம் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.
நன்றி தமிழ்நாதம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, July 28, 2005

வேலை தேடும் படலமும் வெளிப்பட்ட சில உண்மைகளும்

மெல்பேணில் அண்மையில் நடந்த சுவாரசியமான சம்பவமொன்று.
இதில் சம்பந்தப்பட்டவர்களை உங்களுக்குத் தெரியுமாகையால் இதை இங்கே பகிரலாம் என்று எண்ணுகிறேன்.

அருணன் எண்ட பேரில ஒருவர் முந்தி எழுதிக்கொண்டிருந்தவர். ஞாபகமிருக்கோ? இப்ப ஏன் எழுதிறேல எண்டு கேட்டா ஒவ்வொரு தரமும் புதுசுபுதுசா ஒவ்வொரு சாட்டு சொல்லிக்கொண்டு திரியிறார். அவர் பகுதி நேர வேலை தேவையெண்டு சில இடங்களில விசாரிச்சுத் திரிஞ்சவர். அந்த நேரம் மெல்பேணில இருக்கிற எங்கள் எல்லாருக்கும் சீனியர் ஒருத்தர், (இவரும் வலைப்பதிவாளர் தான். இப்பவும் பதியிறார்.) தான் வேலை ஒழுங்கு செய்து தாறன் எண்டு அருணனுக்குச் சொல்லியிருக்கிறார். பிறகு தனக்கு வேலையெடுத்துத் தந்த, தனக்கு நல்லாத் தெரிஞ்ச ஒருத்தரிட்ட அருணனைப் பற்றிச் சொல்லி அவருக்கு ஒரு பகுதி நேர வேலை ஒழுங்கு செய்து தரச்சொல்லியும் கேட்டிருக்கிறார். அந்த மனுசனும் (தமிழர் தான்) சரியெண்டு சொல்லியிருக்கு.

அந்த மனுசன்தான் வெள்ளைக்கார முதலாளி இல்லாத நேரத்தில கடையப் பாக்கிறவர். ஒரு பொறுப்பான ஆள். நிறையத் தமிழருக்கு வேலை எடுத்துக் குடுத்திருக்கிறார். அந்தக் குறிப்பிட்ட சீனியர் வலைப்பதிவாளரோட கனநாள் பழக்கமும்கூட. சரியெண்டு அந்தாளும் எரிபொருள் நிரப்பு நிலையமொண்டில அருணனுக்கு வேலையொண்டு ஒழுங்கு பண்ணியிருக்கிறார். அதுக்குள்ள அருணனுக்குப் பரீட்சைகள் வந்ததால ஆள் ரெண்டு கிழம படிப்போட நிண்டிட்டார். பிறகு வேல சம்பந்தமா குறிப்பிட்ட வலைப்பதிவாளரிட்டக் கதைப்பமெண்டா அவர் மெல்பேணில இல்ல. தாயகம் போயிட்டார். அப்ப அருணன் ‘சீனியர்’ தொடர்புபடுத்தி விட்ட, வேல தாறணெண்டு சொன்ன மனுசன தொடர்பெடுத்திருக்கிறார்.

அப்ப அந்த மனுசன், அருணணிட்ட ஒரு கேள்வி கேட்டாராம்.
தம்பி, உண்மையாவே உமக்கு உழைக்கோணுமெண்ட ஆசையிருக்கோ? இல்லாட்டி ‘அவன’ மாதிரி சும்மா முசுப்பாத்திக்கும் பொழுது போக்குக்கும் தான் வேல செய்யப் போறீரோ? அவன மாதிரி விளையாடித்திரியத் தான் வேலையெண்டா முதலே சொல்லும், அதுக்கேத்த மாதிரி வேல தாறன். பிறகு எங்களக் கரைச்சல் படுத்திக்கொண்டு இருக்கக் கூடாது. அவனொருத்தனோட நாங்கள் படுற பாடு போதும்
எண்டு அருணணிட்டச் சொல்லியிருக்கிறார் அந்த மனுசன்.
அவன்’ எண்டு குறிப்பிடப்பட்டது, அந்த சீனியர் வலைப்பதிவர் தான். ஆள நல்லாத்தான் மனுசன் புரிஞ்சு வச்சிருக்கிறார். (பின்ன? ஒரே இரவில 800 டொலர் தண்டம் கட்டவைக்கிற வேலைக்காரனெல்லே அவர்.) அருணன் என்னட்ட இதச்சொல்லி சிரிசிரியெண்டு சிரிச்சார். இதுக்குள்ள ஒரு மாத சுற்றுலாவில தாயகம் போனவர் அரை மாதத்தில பதறியடிச்சுக் கொண்டு வந்து சேந்திட்டார். ஏன் விழுந்தடிச்சு வந்தாரெண்டது அவருக்குத் தான் வெளிச்சம்.

இதில அந்த சீனியர் வலைப்பதிவர் ஆரெண்டு தெரியுதோ உங்களுக்கு. சீனியர் எண்டது வயதில இல்ல. மெல்பேணுக்கு வந்ததிலயும் வலைப்பதியிறதிலயும் தான். இப்பிடியான வேலையாட்கள் கிடைக்க முதலாளிமார் என்ன தவம் செய்தினமோ தெரியேல. பாரதி பாட்டு மாதிரி அவையளும் ஒரு பாட்டு இயற்றக்கூடும். இவ்வளவுக்கும் அதைப் பெருமையா வேற சொல்லித் திரியினமாம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, July 26, 2005

சயந்தனும் நண்பர்களும்

"கூட்டாளி" சயந்தன், தன்ர பக்கத்தில தானும் தன்ர நண்பர்களும் நிண்டு எடுத்த படமொண்டைப் போட்டிருக்கிறார்.
அதே நண்பர்களோடு சயந்தன் நிண்டு எடுத்த படங்கள் சிலதும் சயந்தனின்ர படங்கள் சிலதும் ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் வந்து சேர்ந்தன.

அதுகள உங்களோட பகிரலாமெண்டு தான் இந்தப் பதிவு.



ஏற்கெனவே, கறுப்பாக்கி 'கண்ணிவெடியகற்றுவதாக'ப் போட்ட படம்.



"அயுத எழுத்து" பார்த்த தாக்கத்தில் எடுத்திருப்பார்களோ?



"ஒளித்துப் பிடித்து" விளையாடும்போது எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. திருமுகம் யாருடையதென்று தெரிகிறதா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, July 14, 2005

பாட்டுக் கேட்கிறதா?

இந்த ஒலிப்பேழை செயற்படுகிறதா என்று பாருங்கள்.
செயற்பட்டால் பாட்டைக் கேட்டுக் கருத்தைத் தெரிவியுங்கள்.


நன்றி.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, July 09, 2005

முப்படைப் பூச்சாண்டி

பலரால் புலிகளின் முப்படை பற்றிப் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
இதில் நான் மட்டுமேன் ஒதுங்கியிருக்க வேண்டும்?
அதுதான் இந்தப் படம் தேடியெடுத்துப் போட்டிருக்கு.


படம் தயாரித்தது நானல்லன்.
படம் தந்தவர்களுக்கு நன்றி.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, July 06, 2005

குழந்தைகளோடு குழந்தைகளாக...





இடம் பண்டூறா.
12.03.2005.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


இணையத்தில் விடுதலைப் புலிகள்.

(இப்பதிவு நேற்று எழுதிப்போடப்பட்டது. ஆனால் இணைப்பு வேலை செய்யவில்லை. இப்போது வேலை செய்வதால் மீண்டும் இப்பதிவு போடப்படுகிறது.)

விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" கரும்புலிகள் நாளான இன்று முதல் இணையத்தில் வருகிறது. இப்போது அதன் 123 ஆவது இதழ் வெளிவந்துள்ளது. அதைத்தும் pdf கோப்பாக உள்ளது.

புலிகளினதோ புலிகள் சார்ந்தவர்களினதோ வெளியீடுகள் வெளியிடங்களில் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை. குறிப்பாக இந்தியர்க்கு அவை நினைத்தும் பார்க்க முடியாது. இக்குறையை நிவர்த்தி செய்ய இணையம் பயன்படுத்தப்பட வேண்டும். இப்போது "விடுதலைப் புலிகள்" ஏடு இணையத்தில் வந்துள்ளது. ஏறத்தாள இருபது வருடத்துக்குமதிகமான காலம் வெளிவருகிறது இந்த ஏடு. இப்போது இணையத்தில் வந்ததன்மூலம் புதியதொரு பாய்ச்சலைச் செய்துள்ளது. இதன்மூலம் ஆர்வமுள்ளவர்கள் இணைய வழியில் இச்சஞ்சிகையை வாசித்துக் கொள்ளலாம்.

இதேபோல் போராட்டக்களத்தின் கலை இலக்கியங்களைத் தாங்கி வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கும் சஞ்சிகை "வெளிச்சம்". போர்க்களத்தின் இலக்கியம் பார்க்க வேண்டுமென்றால் வெளிச்சத்தை விட வேறு சஞ்சிகைகளைப் பரிந்துரைக்க முடியாது. போரின் மக்களாலும் போராளிகளாலும் படைக்கப்பட்ட இலக்கியங்களைத் தாங்கி வந்த வெளிச்சமும் இணையத்தில் வர வேண்டும். அதற்குரியவர்கள் ஆவண செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழக வெளியீடான "வெளிச்சம்" இணைத்தில் வருவதன் மூலம் வெளித்தெரியாமல் அமுங்கிக் கிடக்கும் இலக்கியப் பக்கமொன்று வெளிச்சத்துக்கு வரும்.

இதே போல் தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் வெளியீடான "ஆதாரம்" சஞ்சிகையும் ஒரு காலத்தின் பதிவு. போர்க்காலத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எம்மக்கள் வெற்றி கொண்ட விதங்களை அதன் பதிவுகளினூடகப் பார்க்கலாம். எம் மக்களின் முயற்சியும், அயராத உழைப்பும் வெளிப்படும். நிச்சயம் அந்தச் சஞ்சிகையும் இணையத்தில் வெளிவரவேண்டும்.

விடுதலைப் புலிகள் ஏட்டின் இணையப் பதிப்போடு மேலும் பல நல்ல செய்திகள் வருமென்ற அவலுடன் காத்திருக்கிறோம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, July 05, 2005

இறுமாப்பின் இமயம்.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.

ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)

கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 265 கரும்புலிகளுக்கும் வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.



கடற்கரும்புலி கப்டன் பாலன்
சோமசுந்தரம் திலீபன்.
மட்டக்களப்பு.

பட உதவி: தமிழ்மறவன் இணையத்தளம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, July 03, 2005

ஷ்ரேயா அக்காவுக்குப் பதில்.

1. யாருடைய கண்ணிலும் தெரிய மாட்டீர்கள் (invisible) என்றால் என்னென்ன செய்வீர்கள்?

அடடே!இப்படியொரு சக்தி கிடைத்தால் எப்படியிருக்கும். அச்சக்தியை வைத்துச் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன. அதற்குத்தான் இருக்கவே இருக்கின்றனவே என் நாட்டில் சிங்கள இராணுவ முகாம்கள்.

2. புதிதாய் எதோ ஒன்றைக் கண்டு பிடிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்னவாக இருக்கும்?

இதற்குரிய பதில் முதற்கேள்விக்குரிய பதிலோடு சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புத்தான்.

3. உங்களுடைய முதல் ஞாபகம் என்ன?

ஆச்சரியமாயிருக்கலாம். முதல் ஞாபகமும் இராணுவம் சம்பந்தப்பட்டது தான்(ஏறக்குறைய மூன்றரை வயது). ஒரு சுற்றிவளைப்பும் என் வீட்டிலிருந்தவர்கள் உட்பட சில கைதுகளும்.

4. உலக வரலாற்றிலே எந்தக் காலகட்டத்திற்குமோ, அல்லது குறித்த ஒரு சம்பவத்திற்கோ 'செல்ல' முடிந்தால், எந்தக் காலம்/சம்பவத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

இது சற்றுக் கடினமானது தான். இருந்தாலும் நான் ஆசைப்படும் பலவற்றுள் ஒன்று மனிதனின் முதலாவது பறப்பு முயற்சியில் பங்கெடுத்தல். அதாவது வானத்தில் பறந்த முதல் மனிதன் நானாக இருக்கும் சந்தர்ப்பம். (கண்டு பிடிப்பாளிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது சந்தர்ப்பத்தைப் பெற்றிருப்பேன். என் அனுபவத்தைப் பற்றி வலைப்பதிவிலும் எழுதியிருப்பேன்)

5.கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்கள் கருத்து?

கரப்பான் பூச்சிகள்: நிறையப் பேரைப் போல் நான் பயப்படுவதில்லை. அருவருப்பு சிறிதளவு உண்டு. அது உண்ணக்கூடிய உயிரினம் என்று அறிந்தபின், அதை உணவாக உட்கொண்டவரை (விரும்பித்தான். கட்டாயத்தால் அன்று) சந்தித்தபின் உண்ண ஆசை. ஆனால் எப்படி? எந்த வடிவத்தில் என்று சரியாகத் தெரியாததால் இதுவரை உண்ணவில்லை. வேறு எதுவும் அதுகுறித்து நினைப்பதற்கில்லை.


நான் புதிதாகக் கேள்விகள் கேட்கப்போவதில்லை. புதிதாக யாரையும் போட்டிக்கு அழைக்கப்போவதுமில்லை. விரும்பியவர்கள் நீங்களே கேள்வியைத் தயார் செய்து பதிலளியுங்கள். அல்லது ஷ்ரேயா கேட்ட கேள்விக்கே பதிலளியுங்கள்.

நன்றி.
வரட்டுமா?
ஷ்ரேயா அக்கா!
திருப்திதானே?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, July 01, 2005

புலம்பெயர்ந்தோர் நாடு மீளல்

வணக்கம்!
ஷ்ரேயாவின் பதிவில் புலம்பெயர்ந்தோர் நாடு மீளல் என்பது பற்றிக் கேள்வி எழுந்துள்ளது. எதிர்பார்த்தது போலவே அதுபற்றிக் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் எழவில்லை. சில கருத்துக்கள் மட்டுமே வந்தன. இங்கே நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

தமிழர்க்கான புலம்பெயர்வென்பது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதோடு எங்கிருந்து புலம்பெயர்ந்தார்கள் என்பதும் முக்கியமானது. இங்கே கருத்திலெடுப்பது, ஈழத்தைப் பற்றியும், போர் தொடங்கிய பின் நடைபெற்ற புலம்பெயர்தலைப்பற்றியுமே.

நடுத்தர வயதுடைய ஒரு பரம்பரையில் (பெரும்பாலும் இளைய பருவத்தில் புலம்பெயர்ந்தவர்கள்) திரும்பிச் செல்லல் பற்றிய அவா ஓரளவு இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தம் நெருங்கிய உறவுகளை ஈழத்திற் கொண்டிருப்பவர்கள். முற்றுமுழுதாக சொந்தங்களோடு புலம் வந்துவிட்டவர்களில் நாடு மீளல் பற்றிய எண்ணத்திலிருப்போர் குறைவுதான். மேலும் அவர்களால் தனித்து முடிவெடுக்க முடியாது, அவர்களின் சொந்தங்களில் முடிபுகளிலும் தங்கியுள்ளவர்கள். இத்தகைய சிலரைச் சந்தித்த அனுபவமுண்டு.
“திரும்பிப்போறதெண்டா எல்லாரும் போனாத்தானே நல்லம். அண்ணா, தங்கச்சியாக்கள் இல்லயெண்டா போயும் என்ன பிரியோசனம்?” என்ற கதைகளுண்டு.

மிக முதியவர்களிற்கூட திரும்பிப்போகும் எண்ணம் எதிர்பார்த்ததைவிடக் குறைவு தான். ‘அங்கதான் சாக வேணும்’ என்ற ஒரு விருப்பத்தோடிருக்கும் சிலருண்டு. இப்படி அடம்பிடித்துப் போன ஒரு மூதாட்டி வலிகாமத்தில் சொந்த ஊரிற்கூட இருக்க முடியாமல் (அவர்களின் இடம் உயர்பாதுகாப்பு வலையத்துள் வருகிறபடியால் அங்கு வசிக்க முடியாது. ஏன் வீட்டைப் போய்ப் பார்க்கக்கூட முடியாது.) நல்லூரில் தெரிந்தவர்கள் வீட்டில் வாழ்க்கையைக் கழிக்கிறார்.

வெளிநாட்டில் பிறந்த மிக இளந்தலைமுறையைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையிலலை. ஷ்ரேயா சொல்வதைப் போல ஆச்சரியப்படும் வகையில் ஈழம் திரும்ப வேண்டுமென்ற அவாவுடனிருக்கும் இளையவரையும் பார்த்திருக்கிறேன். சிறிதுகாலத்தின்பின் இது மாற்றமடையலாம். ஈழம் சென்று திரும்பும் போது ஓரளவுக்குச் சரியான முடிபை எடுப்பார்கள். நேரிற் சென்றுவரும்போது சரியான ஒரு பார்வையைப் பெறுவார்கள். அவ்வாறு வந்து சென்ற பலரில் மாற்றங்கள் இருக்கிறது.
அதாவது ஈழம் திரும்புதல் பற்றிய உறுதியான முடிபு இல்லாவிட்டாலும், இதுதான் தம் தாயகம் என்பதிலோ, நம்மைப் பெரிதும் நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதிலோ எந்தத் தயக்கமும் இல்லாத ஒரு தெளிவு அவர்களிடம் உண்டு.

ஆனால் ஒரு விதயம் மிகத் தெளிவானது. ஏதோவொரு முறையில் ஈழத்துடனான புலம் பெயர்ந்தவர்களின் தொடர்பு நீடிக்கும். பெருமளவானோர் நிரந்தரமாக நாடு திரும்ப மாட்டார்கள். ஆனால் அடிக்கடி ஊர் சென்று வருவார்கள். (பெரும்பான்மை தமது பணமதிப்பைக் காட்டுவதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம்.) கோயில் திருவிழாக்களில் பங்கெடுப்பார்கள். தேர் செய்து கொடுப்பார்கள். பாடசாலைக் கட்டடங்கள் கட்டிக் கொடுப்பார்கள். பலர் வெளிநாட்டில் இருந்துகொண்டே ஊரில் குறிப்பிட்டளவு செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பர்.
-----------------------------------------------------

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் (இது வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்) மூன்றாம் தலைமுறையை மலேசியாவில் சந்தித்திருந்தேன். சிலகாலப் பழக்கமுமுண்டு. யாழ்ப்பாணத்தின் உடுவில், அரியாலை போன்ற அவர்களின் முப்பாட்டனது ஊர்களின் பெயர்களையும் உறவுமறையைக் குறிக்கும் நாலைந்து சொற்களையும் தவிர, தமிழில் வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. மூதாட்டியொருத்தி தமிழ் புரியக்கூடிதாகவும், ஓரளவு தமிழ் கதைக்கக் கூடிய நிலையிலும் இருந்தா.

சிறுவர்களுக்கு, தமிழ் சுத்தமாக வராது. ஆனால் உடுவிலும் அரியாலையும், யாழ்ப்பாணமும் தங்கள் இடம் எனச் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக் குடியுரிமையும் பெற்றுள்ள அக்குடும்பம், ஏதோவொரு வகையில் தாம் யாழ்ப்பாணத்தவர் என்று தம்மை அடையாளப்படுத்துவதில் விருப்பமாயிருந்தது. யுத்த நிறுத்தத்தின் பின் மிகமிகத் தூரத்து வழிச் சொந்தம் ஒன்றைச் சிங்கப்பூரில் சந்தித்ததைச் சொல்லும்போது அவர்களின் உணர்ச்சிகள் வித்தியாசமானது. அப்போதுதான் புதிதாக நாலைந்து கடிதப்போக்குவரத்தும் ஏற்படுத்தியிருந்தார்கள். எம்மைக் கண்டால் விழுந்துவிழுந்து கதைப்பார்கள். எங்களைத் தமிழிலேயே கதைக்கச் சொல்வார்கள். இடையே பலசொற்களைப் பொறுக்கிக்கொள்வார்கள். தம் பாட்டன் இச்சொற்களைப் பாவித்ததாக ஞாபகத்திலிருந்து சொல்வார்கள். “வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” என்பதை ஞாபத்திலிருந்து எடுத்து வட்டுக்கோட்டைக்கு விளக்கம் கேட்டார்கள். அராலிக்குப் பக்கத்தில தான் என்றபின் பதிவேட்டில் குறித்துக்கொண்டார்கள், போகும்போது வட்டுக்கோட்டைக்கும் போக வேண்டுமாம்.

யாழ்ப்பாணம் பற்றிய ஓர் ஏக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. உண்மையில் தாய் நாடு பற்றின குழப்பம் அவர்களிடம் நிரம்பவே இருக்கிறது. இங்கிலாந்துக் குடியுரிமை பெற்ற பிள்ளைகளால் அதைச் சொல்ல முடியவில்லை. மலேசியாவிலிருக்கும் தாய் தந்தையால் மலேசியாவையும் சொல்ல முடியவில்லை. அக்குடும்பம் ஈழம் திரும்புவதைப்பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால் குறைந்த பட்சம் கடிதத்தொடர்புக்காவது சில அறிமுகங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தேடுகிறது அக்குடும்பம். தம் முப்பாட்டன் வழிச் சொந்தங்கள் இன்னும் உடுவிலிலும், அராலியிலும் இருப்பார்கள் என்றும், ஒருமுறை நேரே போய் அவர்களின் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமென்றும் ஆவலாயிருக்கிறது.

இதுதான் நான் சொன்ன தொடர்பு. ஏதோவொரு வழியில் பெரும்பான்மையானோர் தாயகத்துடன் தமது தொடர்பைப் பேண விரும்புவர். உளமார்ந்த நேசிப்பாகவும் இருக்கலாம்; வெளிநாட்டில் காட்ட முடியாத பணத்திமிரைக் காட்டவும், பெற முடியாத மரியாதையையும் உபசரிப்பையும் பெறவும் தாயகத்தைப் பாவிக்கலாம்.

என்ன இருந்தாலும் காலம் செல்லச்செல்ல, தாயகம் நோக்கிய கவர்ச்சியும் குறைந்துகொண்டே செல்லும். போராட்டம் நீடிப்பதும் ஆபத்தானது. இப்போது புலத்தில் உழைக்கும் தலைமுறை நேரடியாக யுத்தத்தினாற் பாதிக்கப்பட்டது. ஆனால் அது ஓய்வு பெறும் காலம் வரும்போது, போராட்டத்துக்கான பொருள் வழங்கலிற் பெரும் தொய்வு ஏற்படுமென்றே படுகிறது. முற்றாக நிறுத்தப்படாவிட்டாலும் பெரும் தொய்வொன்று வரும். அதற்குமுதல் ஏதாவது முடிவு கண்டால்தான் உண்டு.

(ஏதோ எழுதப் புறப்பட்டு எங்கோ வந்துவிட்டதுபோல் உள்ளது. திருத்தம் செய்ய எண்ணமில்லை.)

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________