Friday, November 04, 2005

ஒண்ணாங் கிளாஸ்.

இப்போது ஒண்ணு, ஒன்னு, ஒண்டு பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அதைப்பார்த்த போது எனக்குப் பழைய ஞாபகமொன்று வந்தது.

அப்போதுதான் எங்கள் குடும்பம் இந்தியாவிலிருந்து ஈழத்துக்குத் திரும்பியிருந்தது. சிறிதுகாலம் இந்தியாவில் அகதிகளாக இருந்துவிட்டு 1988 இன் தொடக்கத்தில் ஈழம் திரும்பியாயிற்று. அப்போது நான் மூன்றாம் வகுப்பு.எங்கள் ஊர்ப்பாடசாலையில் என்னைச் சேர்த்தார்கள்.பாடசாலை சென்ற முதல்நாள் என்னை அறிமுகப்படுத்துவதற்காக வகுப்பில் ஆசிரியர் கேள்விகள் கேட்கிறார்.

"அங்க என்னென்ன வகுப்புக்கள் படிச்சனீர்?"
"ஒண்ணாங் கிளாஸ்.... ரெண்ணாங் கிளாஸ்..."
வகுப்பே கொல்லென்று சிரித்தது.

எனக்கு உடனே புரியவில்லை.அடடே 'கிளாஸ்' என்று யாரும் கதைப்பதில்லையே, அதற்காகத்தான் சிரிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். (உண்மையில் அப்போதெல்லாம் கிளாஸ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதில்லை)

ஆனால் அடுத்தடுத்த கதைகளில் ஒண்ணாம், ஒண்ணாவது என்ற சொற்கள் வந்தபோதும் சிரிப்புத் தொடர்ந்தது.
பிறகு ஆசிரியரே விளக்கினார். ஒண்ணாம், ஒண்டாம், ஒன்றாம் என்று எந்த வடிவங்கபளுமே யாழ்ப்பாணத்தில் பயன்பாட்டிலில்லை.

உண்மைதான். 'ஆம்', 'ஆவது' என்பவற்றை 'ஒன்று' என்ற சொல்லோடு நாம் சேர்த்துச்சொல்வதில்லை.ஒன்றாம் திகதி என்றோ, ஒன்றாம் பிள்ளையென்றோ யாரும் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் அது சிரிப்புக்குரியதுதான்.
மாறாக எதற்கெடுத்ததாலும் முதலாம், முதலாவது என்பவற்றைத்தான் பாவிப்போம். முதலாம் திகதி, முதலாவது பிள்ளை என்று.

'முதலாவது', 'முதலாம்' என்று சொல்வது சரி. ஆனால் 'ஒன்றாம்', 'ஒன்றாவது' என்ற வழக்கு ஏன் அறவே இல்லையென்பது தெரியவில்லை. அது தவறான வடிவமாகவும் தெரியவில்லை.
நான் கண்டளவில் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் இந்த ஒன்றாம், ஒன்றாவது என்பவை பயன்பாட்டிலில்லை. அப்படியிருக்கிறதா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________