Friday, July 28, 2006

இலங்கையில் இப்போது நடப்பவை

கடந்த நாலைந்து நாட்களுள் இனச்சிக்கலின் நிலை தீவிரமடைந்துள்ளது.


கண்காணிப்புப் பணியிலிருந்து தனது நாட்டு அங்கத்தவரை விலக்கிக் கொள்வதாக பின்லாந்து அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென புலிகள் கேட்டிருந்தனர். அவர்கள் செயற்படுவதற்கான கால எல்லையையும் வரையறுத்திருந்தனர்.
அதன்படி இன்னும் ஒரு மாதமேயுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட 3 நாடுகளில் பின்லாந்து தன் விலகல் முடிவை அறிவித்துவிட்டது.

அம்மூன்று நாடுகளும் கண்காணிப்புப் பணியிலிருந்து விலகவேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் விமர்சனத்துக்கு இடமேயில்லை. மிகமிக நியாயமான கோரிக்கையே. தங்கள் சொந்த அரசியலுக்காக சகட்டுமேனிக்குப் பட்டியல் வெளியிடுவதும் இன்னொருவர் மீது தமது விருப்பத் தீர்வைத் திணிப்பதும் தாங்கள் நினைத்த எதையும் மற்றவர் மீது செய்துவிடலாம் என்ற மமதையுமாக இவர்கள் ஆடும் கூத்துக்கு ஓர் ஆப்பு வைக்கப்பட வேண்டும். முடிவைப் பரிசீலிக்கச் சொல்லி புலிகளுக்கு இவர்கள் விடும் கோரிக்கையிலும் எச்சரிக்கையிலும் எந்தவித தார்மீக நியாயமுமில்லை.
என்வரையில் சம்பந்தப்பட்ட நாடுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடக்கூடா என்பதில் இன்னுமின்னும் தமிழர் தலைமை இறுக்கமாக இருக்கவேண்டுமென்பதே அவா.

ஏற்கனவே சும்மா பெயரளவில் மட்டுமே இருந்துகொண்டிருக்கும் குழுவுக்கு இவ்வெளியேற்றத்தால் ஏதும் வித்தியாசம் தெரியுமென்று தோன்றவில்லை. அறிக்கை விடுவதை மட்டும்கூட பக்கச்சார்பற்றும் ஒழுங்காகவும் செய்யமுடியாத நிலையிலிருக்கும் கண்காணிப்புக்குழு, அப்படி வெளியிடும் அறிக்கைகளுக்கும் துளியும் மதிப்பற்ற நிலையில் அறிக்கை வெளியிடும் கண்காணிப்புக்குழு எண்ணிக்கை குறைவதாலோ அதிகரிப்பதாலோ ஏதும் வெட்டிப் பிடுங்கப் போவதில்லை.
பெருமெடுப்பில் ஒரு இராணுவ நடவடிக்கையே நடைபெற்ற 'வாகனேரி'ச் சம்பவத்தில் இக்கண்காணிப்புக்குழு என்ன செய்தது என்பது எனக்குத் தெரியவில்லை.
கருணா குழுவை இயக்குவது / ஆதரவளிப்பது அரசபடைதான் என்று இவர்கள் வெளயிட்ட அறிக்கைக்கு ஏதும் பலனிருந்ததாகவும் தெரியவில்லை.
*************************************************
நோர்வேயின் சிறப்புத் தூதுவர் இலங்கை வருகிறார்.
ஜப்பானிய தூதுவர் அகாசியின் இலங்கை வரவு தொடர்பான செய்திகளும் கருத்துக்களும் பரவலாக அடிபடுகின்றன.
முன்பும் பிரபாகரனைச் சந்திப்பது என்று வந்து நிறைவேறாமலேயே அவரது பயணம் முடிந்தது.
இந்தமுறையும் பிரபாகரனைச் சந்திப்பது என்பது தான் அவரது முழு நோக்கமாம்.

அவரது கதையைப் பார்த்தால் அவர் பிரச்சினை தொடர்பாக ஏதும் ஆக்கபூர்வமாகச் செய்வதாகத் தெரியவில்லை. இலங்கை வருவதாக திட்டம் அறிவிக்கும்போதே புலியை வெருட்டும் விளையாட்டைத் தொடங்குகிறார். சில வெருட்டல்களோடு, தன் பிரபாகரனைச் சந்திக்கவேண்டுமென்று சொல்லி, அப்படி அவர் சந்திக்க மறுத்தால் ஏற்படும் பின்விழைவுகள் என்று தொடர்ந்து சில வெருட்டல்கள்.
இந்த நேரத்தில் புலிகள் டோக்கியோ மாநாட்டைப் புறக்கணித்தது ஞாபகம் வருகிறது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு 'சொறிக்கதை' கதைத்துக்கொண்டிருப்பார்கள்.
இப்போதைய நிலையில் அபிவிருத்தி, இடைக்கால நிர்வாகம், சுனாமிக் கூட்டமைப்பு என்பவை சாத்தியமற்ற நிலை தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு சுழற்சி நடக்க வேண்டும்போல உள்ளது. இந்நிலையில் ஜப்பான் ஏதாவது செல்வாக்கைக் கொண்டிருப்பதாக வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை.
தனிப்பட்டவனாக என்னுடைய கருத்து என்னவென்றால், அகாசியுடனான சந்திப்புக் கோரி்க்கையை புலிகள் மறுத்துவிடவேண்டுமென்பதே.
ஆனால் இன்று பிரிட்டன் தூதுவருடன் வன்னியில் சந்திப்பை நடத்தியதைப் பார்த்தால் அகாசி வன்னி வருவார் போலத்தான் கிடக்கு.
*************************************************

கொஞ்சக்காலமாக அடங்கிக் கிடந்த வான் தாக்குதல்கள் மீளத் தொடங்கியுள்ளன.
சரத் பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாகத் தொடங்கப்பட்டது இம்முறை. திருகோணமலை சம்பூரில் நடந்த முதல்தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் வன்னியில் பலதடவைகள் வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புலிகளின் ஓடுபாதை எனச்சொல்ப்படும் இடம்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள். அதைவிட திருகோணமலையில் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் இத்தாக்குதல்களால் இடம்பெயர்ந்தனர்.
இவையனைத்தும் தம்மீதான தாக்குதலுக்கான "மட்டுப்படுத்தப்பட்ட எதிர்வினை" என்று அரசு சொல்லிற்று.

பின் கொழும்பில் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க மீதான தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டு அதில் அவர் கொல்லப்பட்டபோது ஆச்சரியப்படும்படி அரசதரப்பு எந்த எதிர்த்தாக்குதலையும் செய்யவில்லை. அதற்கு முன் இறுதியாக நடத்ப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் விடுத்த கடுமையான எச்சரிக்கையும், அதன் நீட்சியாக கொழும்புத் துறைமுகம் மீதான பெரிய தாக்குதலுக்கான திட்டமொன்று சிக்கலுக்குள்ளான நிலையில் அதோடு சம்பந்தப்பட்ட இருவர் படையினரால் கைதுசெய்யப்பட்டதும், அதையும் தொடர்ந்து வெடிபொருட்கள், படகுகள், முகவர்கள் என புலிகளின் கணிசமான விசயங்கள் கொழும்பில் தெரியவந்ததும்தாம் அரசபடையினரின் அமைதிக்குக் காரணமென ஊகிக்கப்பட்டது.

குறிப்பிட்ட இடைவெளியின்பின் மீண்டும் அரசவான்படை தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இம்முறை படையினர் மீதான தாக்குதலுக்கான பதிலடியாக இன்றி வேறொரு பிரச்சினைக்கு நடந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளால் வரும் மாவலியாற்று நீர் படையினரின் பகுதிக்கு வராமல் தடுக்கப்பட்டதால் இத்தாக்குதல் என அறிவிக்கப்பட்டது.
மூன்றுநாட்களாக திருகோணமலையில் சம்பந்தப்பட்ட பகுதிகள் மீது வான்படைத் தாக்குதலும் எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று நடந்த குண்டுவீச்சில் ஐந்து புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆதேவேளை வன்னியிலும் வான்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்னியில் முல்லைத்தீவுப் பகுதியிலும் அதையண்டிய "கேப்பாப்புலவு" எனுமிடத்திலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. திருகோணமலையின் நீர்ப்பிரச்சினைக்கு வன்னியில் தாக்குதல் நடத்தியாக எடுக்க முடியாது. அண்மைக்காலமாக புலிகள் முல்லைத்தீவை அண்டிய பகுதியில் பெரிய விமான ஓடுபாதை அமைப்பதாக அரசதரப்பு செய்தி வெளியிட்டு வந்தது. அதன் பின்னணியில் அப்பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு என்பது, புதுக்குடியிருப்பிலிருந்து முள்ளியவளை செல்லும் வீதியில் வரும் இடம். சிறு காட்டுத் துண்டுகளையும் கணிசமான விவசாய நிலங்களையும் அதேபோல் குறிப்பிடத்தக்களவு சிறுபற்றை மற்றும் கட்டாந்தரைகளையும் கொண்ட பகுதி. வீதியின் ஒருபக்கம் சில வயற்காணிகளைத் தாண்டி நந்திக்கடல் நீர் நிற்கும். மறுபக்கம் வயற்காணிகளைத் தாண்டி காட்டுப்பகுதி இருக்கும். மக்கள் செறிவாக வாழாத வயல், சிறுபற்றை, மந்துக்காடுகளைக் கொண்ட நிலப்பகுதிதான் கேப்பாப்புலவு.

ஓயாத அலைகள்-3 இன்பின் புலிகள் கைப்பற்றி வைத்திருக்கும் பெரிய நிலப்பரப்பில் இன்னும் சில இடங்கள் இவ்வாறு "விமான ஓடுபாதை அமைக்கும்" இடமாக அரசதரப்பால் சொல்லப்படும். மிகப்பெரும் நிலப்பரப்பு சும்மா இருப்பதால் புலிகள் அரசைப் பேயக்காட்டவோ அல்லது உண்மையாகவோ விமானத்தள வேலைகளைச் செய்வர் என எதிர்பார்க்கலாம். (திருகோணமலையின் சம்பூரும் புலிகளின் விமானத்தளப் பெயரைப் பெற்றுத்தான் கொஞ்சக்காலம் பிரபலமாக இருந்தது)

திருகோணமலை நீர்த்தகராறு விசயம் கடுமையாக மாறியுள்ளது. இன்று தரைவழியாக அப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பொன்று நடைபெற்றதாகவும் அதை தான் முறியடித்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் நிறுத்தப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவரவில்லை. அப்பகுதி மக்கள் கண்காணிப்புக் குழுவோடு நடத்திய சந்திப்பில் முன்வைத்தவற்றுள் மூதூருக்கு சொந்த நீர்த்தாங்கி, குறிப்பிட்ட பாதையொன்றில் சுதந்திரமான போக்குவரத்து அனுமதி மற்றும் தம்மீதான பொருளாதாரத்தடை நீக்கம் என்பன இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பகுதி மக்கள் மீதான பொருளாதாரத் தடையென்பது ரணில் காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட ஒன்று. பல சந்தர்ப்பங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் தொடர் போராட்டங்களைச் செய்திருக்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பொருளாதாரத் தடை ஒரு மீறல்.
மூலப்பிரச்சினை இனிமேல்தான் வெளிவரும். ஆனால் சம்பந்தப்பட்ட அணைப்பகுதியைக் கைப்பற்ற இராணுவம் முயல்வதன் மூலம் பிரச்சினை வலிந்த சண்டையொன்றை ஏற்படுத்தும்.

முன்பு "வான் தாக்குதல் நடத்த்பபட்டால் பதிலடி நிச்சயமுண்டு" என்று புலிகள் அறிவித்தபடி ஏதாவது செய்வார்களா என்று தெரியவில்லை. இத்தாக்குதலுக்கு புலிகள் கடுமையாக ஏதும் சொல்லாமலிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
************************************************************
பிந்திய செய்தியின்படி கிழக்கு மாகாணத்தில் வவுணதீவு புலிகளின் சோதனைச் சாவடியொன்றின் மீது 'தற்கொலைத் தாக்குதல்' நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வாகனமொன்று வெடித்ததை புலிகள் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் தற்கொலைத் தாக்குதல் என்பதற்கு இருக்கும் சாத்தியம் என்வரையில் மிகமிகக் குறைவே. தாக்குதலுக்குக் கொண்டுவந்த வெடிபொருட்கள் தவறுதலாக வெடித்திருக்கலாம் (குறிப்பாக நேரக்கணிப்புக் குண்டு). அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடம் அரசகட்டுப்பாட்டுப் பகுதியென்றும் சொல்லப்படுகிறது. அதாவது புலிகளின் நிலைக்குச் செல்ல முன்பேயே வெடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில் தற்கொலைத் தாக்குதல் முயற்சியாக இருந்தாற்கூட திகிலடைய ஒன்றுமில்லையென்றே நினைக்கிறேன். அதிரச்சியாக ஏதாவது பின்னர் வெளிவரலாம்.
**********************************************************


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, July 11, 2006

இலங்கையில் இதுவரை நடந்தவை

படிப்பதிவு

விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகர் உருத்திரகுமாரனால் தற்போதைய அமைதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்று வெளிவிடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் அமைதி நடவடிக்கையின் போதான தமிழர்தரப்பு நியாயப்பாடுகளை வாத அடிப்படையில் முன்வைத்து செல்கிறார். அதில் அவர் குறிப்பிட்ட விடயங்களை தொகுத்து தருகின்றேன்.

முதலாவதாக அமெரிக்காவின் செப்ரம்பர்-11 2001 தாக்குதலுக்கு முன்னதாகவே விடுதலைப்புலிகளால் அமைதிமுயற்சிகள் டிசம்பர் 2000 அளவில் முன்னெடுக்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளே பேச்சுவார்த்தைக்கான அடிப்படையை உருவாக்கினார்கள். இதற்காக விடுதலைப்புலிகளால் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளாலும் அப்போது ஆட்சிபீடமேறிய அரசினாலும் இடைக்கால நிர்வாகம் ஒன்றை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பமுயற்சியாக கருதப்பட்டு அதற்கான ஆணையும் மக்களால் பெறப்பட்டது. ஆனால் தெற்கில் தொடர்ந்த கடும்போக்குவாத நிலைப்பாட்டால் அதனை ஏற்படுத்தமுடியாத நிலையில் அப்போதைய அரசு இருந்தது. அந்த விடயத்தில் கூட விடுதலைப்புலிகள் நெகிழ்வுதன்மையை பேணி வேறு வழிகளில் அமைதி முயற்கிகளை தொடர சந்தர்ப்பம் வழங்கினர்.

அதன்படி அரசு – புலிகள் இணைந்த சம அங்கத்துவமுடையதாக உபகுழுக்களை அமைக்கும் முயற்சி பரிந்துரைக்கப்பட்டு விடுதலைப்புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இக்குழுவிலிருந்த அரசு தரப்புக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இவ்வாறான கட்டமைப்பை சிறிலங்கா அரசியல் யாப்பின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாதென காரணங்களை கூறி அவ் உபகுழுக்களும் செயலிழக்கம் செய்யப்பட்டது.


இவ்வாறான சூழ்நிலையில் விடுதலைப்புலிகளால் முதன்முதலாக ஒக்ரோபர் 31 2001 இல் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு முன்வைக்கப்பட்டது. இதனை ஆரம்பகட்டமாக கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அது வழங்கியது. ISGA என அழைக்கப்பட்ட இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இடைக்கால செயல்திட்டமாக இருந்தது.


துரதிஸ்டவசமாக அப்போது சனாதிபதியாகவிருந்த சந்திரிகா குமாரதுங்கா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்குள் இருந்த மிக முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசப்படுத்தி அமைதி முயற்சிகளை முடக்கினார்.

டிசம்பர் 2005 ஏற்பட்ட சுனாமியை தொடந்து ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். அவ்வாறான தொடர்முயற்சிகளின் விளைவாக PTOM என அழைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு – புலிகள் என இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட இக்கட்டமைப்பை செயற்படுத்தமுடியாதவாறு சிறிலங்காவின் நீதித்துறை தடுத்துவிட்டது.

விடுதலைப்புலிகளால் வெளிக்காட்டப்பட்ட ஒவ்வொரு சமாதானத்துக்கான அர்ப்பணிப்பும் சிறிலங்கா சட்டங்கள் யாப்புக்களின் பெயரால் செயல்முடக்கம் செய்யப்பட்டது.


போர்நிறுத்த வன்முறைகளை பொறுத்தவரை – SLMM குறிப்பிடுவதுபோல – சிறிலங்கா தேசிய கொடியை வடக்குகிழக்கு பகுதியில் ஏற்றுவதற்கு தடுக்கப்படுவதையும் தமிழர் வாழ்விடங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றி சிங்கள இராணுவத்தினர் தமது இராணுவ தளங்களை அமைத்து இருப்பதையும் தமிழர்கள் மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்யமுடியாதவாறு தடுக்கப்படுவதையும் ஒருங்கே ஒப்பிட்டுபார்க்க முடியாது.


சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளே ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டதாக கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச்செல்லமுடியாதவாறு நான்கு வருட சமாதான காலத்தில் கூட தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நான்கு வருட காலத்தின் 1460 நாட்களையும் கருத்தில் எடுத்தால் உண்மையில் சிறிலங்கா அரசுதான் ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறது.


போர்நிறுத்த உடன்படிக்கையின் பந்தி 2 படி, இராணுவத்தினர் பாடசாலைகள், ஆலயங்கள் பொதுக்கட்டடங்கள் அனைத்திலிருந்தும் வெளியேறி பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இராணுவத்தினர் அவ்வாறு வெளியேறவில்லை. யாழ்குடாநாட்டில் பொதுமக்கள் வாழக்கூடிய பிரதேசங்களின் மூன்றிலொரு பகுதியில் இராணுவத்தினர் தமது இராணுவதளங்களை அமைத்துள்ளனர்.


இராணுவவலுச்சமநிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் வாழ்விடங்களில் இராணுவத்தினர் தளங்களை அமைக்கலாம் என சில தரப்பினரால் கூறப்படுகிறது. சர்வதேச சட்டங்களின்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அல்லது இராணுவரீதியான தவிர்க்கமுடியாத மிக முக்கிய காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியேறுமாறு கோரப்படலாம்.

ஆனால் நான்கு வருடங்களாக போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கும்போது இராணுவ வலுச்சமநிலைக்காக ஒரு அரசாங்கமானது மக்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழக்கூடாது என கூறமுடியாது. அத்தோடு சர்வதேச சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹேக் உடன்படிக்கையின் கீழ் பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்தப்படுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

புறூண்டி, ஜோர்ஜியா, பொஸ்னியா, கம்போடியா, கொசோவா, குவாட்டமாலா, எல்சல்வோடர், மசிடோனியா, சியாராலியோன், லைபீரியா போன்ற எந்த நாடுகளின் அமைதி உடன்படிக்கைகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதை இராணுவவலுச்சமநிலையோடு கருதி பிரச்சனைகளை இழுத்தடித்து செல்லவில்லை.

அரச ஆதரவுடனான துணைஆயுதப்படைகளின் செயற்பாடுகளும் அமைதி முயற்சிக்கான பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது. இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் அனைத்து துணை ஆயுதப்படைகளும் செயல்முடக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும். தற்போதும் துணைப்படைகளின் செயற்பாடு இருப்பதை SLMM உம் அமெரிக்காவின் 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் வெளிக்காட்டியுள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையானது அவ்வுடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்த துணைப்படைகளை மட்டுமே குறிப்பதாகவும் அதற்கு பின்னர் உருவான துணைப்படைகளை அது கட்டுப்படுத்தாது எனவும் வாதம் முன்வைக்கப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையானது செயற்பாட்டு நடைமுறையில் உள்ள உயிர்நிலை உடன்படிக்கை என்பதால் அது அனைத்து துணைப்படைகளையும்தான் கருதுகிறது. அவ்வாறு இல்லாவிடில் இரண்டு தரப்புமே வெவ்வேறு பெயர்களில் துணைப்படைகளை உருவாக்கி தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.


அடுத்து சிறிலங்கா ஆயுதப்படைகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கயாகும். 2003 ஆம் ஆண்டில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 24 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வணிககப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோதும் புலிகள் அதியுச்ச சகிப்புத்தன்மையை வெளிக்காட்டி சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.


சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளின் கப்பலானது ஆயுதங்களை கொண்டிருந்ததாகவும் அதனால்தான் அதனை மூழ்கடித்ததாகவும் கூறியது. அவ்வாறு புலிகளின் கப்பல்கள் ஆயுதங்களை கொண்டிருந்தாலும் அதனை தாக்குவதற்கான அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கமானது கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.

வெளிப்படையாக போர்நிறுத்த உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போக்குவரத்துக்கள் பற்றி குறிப்பிடுவதை இரண்டு தரப்பாலுமே வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தன. ஏனெனில் விடுதலைப்புலிகளுக்கான வழங்கலகள் கடல்வழியாகத்தான இருக்கின்றன என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருந்தன. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் வரையறுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அவை தவிர்க்கப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகும். அதன்காரணமாக, U.N General Assembly Resolution சரத்து 3034 மற்றும் 3014 படி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள்.


அடுத்ததாக சர்வதேச சமூகம் சரியான முறையில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உதவவில்லை. சர்வதேச சமூகம் எப்போதும் இறுதித்தீர்வானது ஐக்கியப்பட்ட சிறிலங்காவுக்குள் அமையவேண்டும் என வற்புறுத்திவருகிறது. இது தமிழ்மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிறது. அத்தோடு உலகின் வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறையுடன் முரண்படுகிறது.


Machakos Protocol ஆனது தென்சூடான் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறது. அதன்படி ஆறு வருடங்களுக்கு பின்னர் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அவர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதா? அல்லது சூடானுடன் இணைந்து இருப்பதா? என முடிவெடுக்க முடியும்.

அதேபோல Good Friday உடன்படிக்கையானது வட அயர்லாந்து மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தீர்மானித்துக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது.

இதேவிதத்தில் சேர்பியன் – மொன்ரிகிறின் உடன்படிக்கையானது மொன்ரிகிறின் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான அவர்களது உரிமையை ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான வாக்கெடுப்பை அடுத்த மூன்று வருடங்களில் நடாத்தப்படுவதற்கு வழிவகை செய்கிறது.

பப்பூவா நியூகினியா - போகன்விலே உடன்படிக்கையானது போகன்விலே மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக்கொள்ளும் வாக்கெடுப்பை 10 – 15 வருடங்களுக்கு இடையில் நடாத்தப்படுவதை ஏற்றுக்கொள்கிறது.

சர்வதேச சமூகமானது மேற்கூறப்பட்ட எந்த உடன்படிக்கைகளையும் – அந்தந்த நாடுகளின் ஐக்கியத்தையும் ஓருமைப்பாட்டையும் பாதித்தபோதும் – எதிர்க்கவில்லை என்பதையும் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறப்படும் தீர்வுக்கு முன்னரே அதற்கான எல்லைகளை வரையறுத்து இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.


இவ்வாறு மேற்கூறப்பட்ட நாடுகளில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக பல்வேறு வடிவங்களான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டபோதும், இலங்கை இனநெருக்கடியில் காணப்படும் தீர்வானது இலஙகையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணக்கூடியதாக இருக்கவேண்டும் என கூறுவது சர்வதேச சமூகம் இரட்டை அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக கருதவேண்டியுள்ளது.


இவ்வாறு தமிழர்களின் நியாயமான கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வினை சர்வதேச சமூகம் ஆதரிக்காதுவிட்டால், அது சிறிலங்கா அரசை நியாயமான தீர்வொன்றை முன்வைக்க உந்துதலாக அமையமாட்டாது. அதேவேளை சர்வதேச சமூகம் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழர்களும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவர்.

விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகரின் முழுமையான அறிக்கை

உயர்வலய பாதுகாப்புவலயங்கள் சம்பந்தமான இன்னொரு பதிவு


நன்றி: தமிழ்வாணன்.


_____________________________________________

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, July 10, 2006

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

வெளியான முதல்நாளே பார்க்கவேண்டுமென்று இன்றுவரை நான் எந்தப்படத்துக்கும் முயன்றதில்லை. அப்படிப் பார்த்ததுமில்லை. ஆனானப்பட்ட தலை, வால்களின் படங்களுக்கே அப்படித்தான்.

முதன்முறையாக இம்சைஅரசனுக்கு முயன்றேன்.

கதையை முழுக்கச் சொல்லி வழமையாக விமர்சனமென்ற பெயரில் பலர் செய்யும் கேலிக்கூத்தை நான் செய்யப்போவதில்லை. எனக்குப் படம் பிடித்திருக்கிறது. நிறைவைத் தருகிறது.
கதையென்று புதிதாக ஏதுமில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளை நாமே முன்கூட்டிக் கற்பனை செய்துகொள்ளக்கூடியதாக உள்ளது. பெரும்பாலும் சரியாகவே அனுமானங்கள் அமைகின்றன.
அவற்றை அழகாகக்கோர்த்து முழுநீளப் படமாகத் தந்துள்ளார்கள்.

என் கணிப்பில் நகைச்சுவைக்கென்று தனியாக நடித்தவர்களில் நாகேசுக்கு அடுத்ததாக வடிவேலுவைச் சொல்லலாமென்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு அருவருப்பையும் அயர்ச்சியையுமே தந்தார். (விவேக் போட்டியிலேயே இல்லை). மற்றவர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுமளவுக்கு நான் வடிவேலுவைக் கொண்டாடியதில்லை. ஆனாலும் ஏதோவொன்று அவரிடம் என்னை ஈர்க்கிறது.

இப்படத்தில் தன்பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். அவருக்கேயுரிய வாய்ச்சவடால் பாத்திரம்தான் 23ஆம் புலிகேசி.

நாயகிகள் பலர். அந்தப்புரப் பாட்டுக்காட்சியில் 'குறைந்தபட்சம்' மூன்று நடிகைகளோடு ஆடுகிறார். இவ்வளவுகாலமும் கதாநாயக நடிகர்கள் எனற பேரில் திரையில் வந்தவர்களுக்கு மட்டும் கிடைத்த பேறு இம்முறை முழுநேர நகைச்சுவை நடிகனுக்கு. நன்றாக இருந்தது.
பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகப்பிடித்தன. முக்கிய காரணம் இசைதான். பாடல்வரிகள் புலமைப்பித்தன். நல்ல தேர்வு. பாடற்காட்சிளும் அருமை. நீண்டகாலத்தின் பின் பாடற்காட்சிகளை இரசித்திருக்கிறேன். சில காட்சிகள் எம்.ஜி.ஆர், ஜெமினியை ஞாபகப்படுத்தின.



நகைச்சுவைக் காட்சிகளை தொட்டுக்கொள்ளும் அளவுக்கு வைத்துக்கொள்ளும் படங்களிலேயே அருவருப்பான காட்சிகளும் வசனங்களும் தாராளமாக இடம்பெறும். சொல்லப்போனால் இரட்டையர்த்த வசனங்களும் கீழ்த்தரமான காட்சிகளுமே நகைச்சுவையென்ற மனப்பான்மை வந்துவிட்டது. ஆனால் முழுநீள நகைச்சுவைப் படத்தில் அப்படியேதுமில்லாதது ஆச்சரியம்தான்.

படத்தில் எங்குமே தொய்வு இருந்ததாக நான் உணரவில்லை. என்வரையில் திரைக்கதை அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
அரங்கமைப்புக்கள் இயன்றவரை சரியாக இருக்கின்றன. தமிழ்ச்சினிமாவுக்குரிய எல்லையைப் பார்த்தால் திருப்தி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வில், அம்பு போன்றவற்றில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சாதிச்சண்டைக் காட்சியின்போது ஒருவர் தற்கால 'இரட்டைத் தொலைநோக்கி'யைப் பாவிப்பது தவறா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

படத்தின் ஒரேகுறையாக நான் சொல்வது வெள்ளையர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தாம். படத்தில் எவ்விதத்திலும் ஒட்டவில்லையென்பதுடன் முழுக்கோமாளித்தனமாக இருந்தன. ஆங்கிலேயர் தமிழ்பேசுவதைத் தவிர்த்து வேறொரு முறையைக் கையாண்டிருக்கலாம். ஆனால் இப்படம் மிகச்சாதாரண மக்களை இலக்காகக் கொண்டது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. (உயர்வாகச் சிந்தித்தாலும் ஹேராமுக்காக கமல் வாங்கிய விமர்சனம் போல்தான் வரும்)

திரையில் அனைவரும் தத்தமது பாத்திரத்தைச் சரியாகச் செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். வடிவேலுவுக்கு அடுத்து முக்கிய பாத்திரம் நாசர்தான். நன்றாகச் செய்திருக்கிறார்.

வடிவேலு திரையில் வரும் முதற்காட்சியிலேயே வரலாறு தடம்புரளத் தொடங்குகிறது. முக்கியமான தலைவர்கள், மன்னர்களைச் சொல்லி அவர்களைப்போல் தானும் ஆளவேண்டும் என்று கடவுளை வேண்டும்போது நெப்போலியனின் பெயரையும்சொல்கிறார். ஆனால் படத்தில் அக்காட்சி நெப்போலியனுக்கு முந்திய காலம். அடடா, கதையில் பிசகு விடத் தொடங்கிவிட்டார்களே என்று நினைத்தவேளையில் ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் இவற்றை எதிர்பார்க்கக்கூடாதென்று அடங்கிவிட்டேன். ஆனால் அது தெரிந்தே சொல்லப்பட்டது என்று நினைக்கும் வகையில் பின்வரும் காட்சிகள் பல இருந்தன. இயக்குனர் சமகாலத்தையும் கலந்துதான் படத்தைச் செய்துள்ளார். முக்கியமான இடங்களில் அவர் சமகாலத்தைப் புகுத்தி அருமையான நகைச்சுவையைத் தந்துள்ள்ளார்.

இரண்டு வடிவேலுக்களும் சந்தித்துக் கொண்டபின் சோதிடர், "நீங்கள் ரெண்டு பேரும் இணைவீர்களென்று எனக்கு முன்பே தெரியும்" என்று சொல்வார். "தெரியுமா? எப்படியப்பா?" என்று ஆவலோடு கேட்டுக்கொண்டு வருவார்கள். அப்போது சோதிடர் சொல்வார், "இரட்டைக்குழந்தை பிறந்தால் திரைக்கதையில் வேறெதைத்தான் செய்ய முடியும்?"

நாசருடன் உக்கிரபுத்திரன் (வீரன் வடிவேலு) வாட்சண்டை செய்துகொண்டிருக்க புலிகேசி (கோழை வடிவேலு) பதுங்கியிருந்து ஒரு கதவுக்குள்ளால் எட்டிப்பார்ப்பார். கதவில் "Enter the Dragon புரூஸ் லீ" யின் இரத்தக் கீறல்கள் விழுந்த உடம்பில் வடிவேலுவின் தலைபொருத்திய ஓவியம்.

படம் முடியும்போது வடிவேலு எல்லோருக்கும் ஒரு பிரசங்கம் வைப்பார். அதில் பல இராசாக்களைச் சொல்லி அவர்களைப் போல் நாமும் வீரமுடன் பகைவரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று முடிப்பார். அதில் இராசஇராசன் தொடக்கம் பலரைச் சொல்லி, Brave Heart மெல்ஜிப்சனையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார். இருக்கையை விட்டு ஓடும் முனைப்பிலிருக்கும்போது இவ்வசனம் வரும். பலருக்கு வெளியில் வந்து மற்றவர்கள் சொல்லித்தான் அந்த இறுதி வசனம் புரிந்தது.


படம் நல்ல வெற்றி பெறும் என்பதிற் சந்தேகமில்லை. வடிவேலு இனி தனக்குரிய படங்களையும் பாத்திரங்களையும் கவனத்திற் கொள்வது நன்று. இதுவரைகாலமும் அவர் செய்த பல காட்சிகள் அருவருப்பானவை. குறிப்பாக பெண்வேடமிட்டு அவர் செய்த படங்கள் மோசமானவை. இனிமேலும் அப்படி நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை இப்படம் தமிழ்ச்சினிமாவில் புதிய போக்கைத் தொடங்கிவிடுமா? தமிழ்ச்சினிமாவில் நீண்ட இடைவெளியில் யாரும் இறங்காத, பழைய காலத்துக் கதைக்குள் இறங்குவார்களா? முழுநீள நகைச்சுவைப்படங்கள் புதிய பரிமாணத்தோடு வெளிவருமா? (கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் வெற்றி பெறாதது தமிழ்ச்சினிமாவின் சறுக்கலே. கமலின் சறுக்கலன்று).


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, July 09, 2006

நவாலியில் நரபலி

இன்று ஓர் இனஅழிப்பு நடவடிக்கையின் பதினோராம் அண்டு நினைவு.
நூற்றைம்பது வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டும் மேலும் ஏராளமானோர் காயப்பட்டும் போகுமாறு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின் நினைவுநாள். இது பதினொரு வருடங்களுக்கு முந்திய நாளின் நினைவு மீட்டல்.

சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென பெரிய ஆயத்தங்களைச் செய்தது. 3 மாதங்களுக்கு முன் தொடங்கியிருந்த மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. கடலில் கடற்கலங்களை அழித்திருந்தனர் புலிகள். இரு விமானங்களை அடுத்தடுத்த நாட்களில் சுட்டு வீழ்த்தியிருந்தனர். மண்டைதீவு இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்தி பெரிய இழப்பை இராணுவத்துக்கு ஏற்படுத்தியிருந்தனர். (அதையடுத்து மணலாற்றில் மிகப்பெரும் தாக்குதலொன்றைச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அரசும் அதை அறிந்திருந்தது.)
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை முற்றாகக் கைப்பற்ற அரசு திட்டம் போட்டிருந்தது. அதன் முதற்கட்டமாக வலிகாமத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் தான் 'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை.

பெருமளவு எறிகணை வீச்சுடன் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய பட்டினமான மானிப்பாயிலும் அதற்கடுத்த கிராமமான நவாலியிலும் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தனர். பொதுவாகவே பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும்தான் மக்கள் தஞ்சமடைவர். அதேபோல் நவாலியிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயமான புனித பேதுருவானவர் கோயிலில் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்தனர். இராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இராணுவம் முன்னேறிய பகுதியிலிருந்து நீண்டதூரத்தில்தான் நவாலியுள்ளது.

09.07.1995 அன்றுதான் அந்தக் கரியநாள்.
பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசியது. இலக்குத் தப்பவில்லை. சரியாகவே குண்டுகளை வீசியது. ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டன.

தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை யாழ்ப்பாண நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான வாகனங்கள்கூட இல்லை.
அன்றிரவு எடுக்கப்பட்ட கொல்லப்பட்டோர் கணக்கெடுப்பு 100 ஐத்தாண்டிவிட்டது. போகப்போக அவை அதிகரித்துச் சென்றன.
இதில் இறப்பு விவரங்கள் சரியாகத் தொகுக்கப்படாமைக்கு முக்கிய காரணம், தாக்குதலுக்குள்ளானோர் இடம்பெயர்ந்தவர்கள் என்பதே.

பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள்தாம் பொறுக்கப்பட்டன. அத்தேவாலயத்தில் தங்கியிருந்த முழுப்பேரின் விவரமும் தொகுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. விவரத்தொகுப்பில் ஈடுபட்டிருந்த நான்கு கிராமசேவையாளர்களும் அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டு கிழமைகள் வரை பொறுத்து, காணாமல் போனவர்களின் விவரங்கள் இந்தப் படுகொலை விவரத்தில் சேர்க்கப்பட்டன. இறுதிக்கணக்காக 140 பேர் மரணம் என்று வந்தாக நினைக்கிறேன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர். குறைந்த வசதிகள், மருந்துகளோடு அவர்கள் அயராது போராடினர். இரத்தச் சேமிப்பென்பது அப்போது முழுமையாக இல்லை. நிரந்தர மின்சார வசதியில்லை. மக்கள் இரத்தம் கொடுத்தனர்.
யாழ்குடாநாடு பெரும் அவலத்தைச் சுமந்து நின்றது. ஒருபக்கம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வும் அவர்களின் பராமரிப்பும். இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட, காயமடைந்த கொடுமை.
அதைவிட முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவும் குடாநாடு தன்னைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.



பதினொரு வருடங்களின்முன் இந்நாளிற் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலி.
____________________________________________________________
இன்று பத்துபேர் கொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் பன்னாட்டுச் செய்திகளில் வருமளவுக்காவது எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அன்று நிலைமை அப்படியில்லை.
நவாலிப் படுகொலையோடு பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "சர்வதேசம் தலையிட்டு இதற்கொரு முடிவு கிடைக்கும், வத்திக்கான் இதைச் சும்மா விடாது" என்று பலர் பேசி்க்கொண்டனர்.
தேவாலயப் படுகொலைகள் என்று எடுத்துக்கொண்டால், நாவலிதான் முதலாவது அன்று.
நவாலிதான் இறுதியானதும் அன்று. அதற்கு முன்னும் பின்னும் தேவாலயப்படுகொலைகள் சிங்கள அரசால் நடத்தப்பட்டன. (இந்த வரிசையில் இந்துக்கோயில் மீதான தாக்குதல்களும் அதிகம்.) ஆனாலும் வத்திக்கானால் ஏதும் செய்ய முடிந்ததில்லை (முனைந்ததில்லை என்றுகூடச் சொல்லலாம்).

பொதுப்பார்வைக்கு கத்தோலிக்க பீடத்தின் கீழ்மட்டம் வடக்கு கிழக்கில் புலிச்சார்பு நிலையாகவே வெளித்தெரிகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. கட்டாய இராணுவப் பயிற்சியை முதன்முதலில் (தொன்னூறுகளின் இறுதியில்) வலியுறுத்தியது தொடக்கம் நிறையவுண்டு. இராணுவத்தினர் கோயிலைச் சுற்றிக் காவல் நிற்க, இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு திருப்பலியின் மன்றாட்டு நேரத்தில் 'எங்கள் பகைவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். எங்கள் விடுதலைக்குப் போராடும் போராளிகள் வெற்றியடைய வேண்டும். நாங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.' என்று திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவர் பகிரங்கமாக மன்றாடும் அளவுக்கு நிலைமை இருந்தது. (பூசை முடியமுன்னமே அரைவாசிச் சனம் வீடு வந்தது தனிக்கதை)
ஒரு குருவானர் தனது பங்குத்தளத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தை முன்னறையில் மாட்டி வைத்திருந்ததை எதிர்த்தும் அதை உடனடியாக நீக்கவும் மேலிடம் உத்தரவு போட்டதை உறுதியாக எதிர்த்து, இறுதியில் அவர்கள் பேசாமலேயே விடுமளவுக்கு நிலைமை இருந்தது.

இவற்றுக்கான மூல காரணிகளில் நாவலிப்படுகொலை போன்றவையும் அடக்கம். நான் அறிந்தவரையில் சிலரின் நிலைப்பாடு மாற்றத்துக்குக் காரணம் நவாலிப் படுகொலையும் அதைத்தொடர்ந்து நடந்தவையும். எமது பிரச்சினைக்கு மற்றவர்களிடம் தீர்வுக்குப் போவது மட்டில் தம்மளவிலேயே நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது தலைமைப் பீடங்கள் மட்டிற்கூட வெளிப்படையான நம்பிக்கை வைக்குமளவில் அவர்கள் இல்லை. இன்று இலங்கையிலுள்ள கத்தோலிக்க ஆயர்களை எடுத்துக்கொண்டாற்கூட தனித்தீவுகளாகச் செயற்படும் நிலையைக் காணலாம்.

மிக அண்மையில் நடந்த பேசாலைத் தேவாலயம் மீதான தாக்குதல் வரை வரலாறு தொடர்கிறது.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, July 05, 2006

கரும்புலிகள் நாள்.






யூலை-5. கரும்புலிகள் நாள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. ]


“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.



திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இப்போது எப்படியோ தெரியவில்லை. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் இங்கே செல்லவும். சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருள்க.

அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.




அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பு போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படத் திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் அத்தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்படுகிறது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)



அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் மோதி கட்டளைக் கப்பலொன்றின் மீதான தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்றால் மிகையாகாது.

வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. பலாலி விமாத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள் பெண்கள் என இருநூற்றைம்பதுக்கும் அதிகமான வீரர் வீராங்னைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இதைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறைய.

பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இன்னும் அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.) முதற் பெண் கடற்கரும்புலி கட்பன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.

பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்:
பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்

போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகள் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. கடற்புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது தான் காரணம்.)

பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலந்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தான் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தது. பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தான் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.

----------------------------------------------------
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டடியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தான். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாத படிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்."
----------------------------------------------------
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.

புலிகளால் வெளியிடப்பட்ட கரும்புலிகளின் எண்ணிக்கை 274.
அவர்களின் விவரங்களையும் படங்களையும் பார்க்க அருச்சுனாவுக்குச் செல்லுங்கள்.
கரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.
____________________________

மாவீரர் பற்றிய குறிப்புகளைச் சேமித்து வைத்த சந்திரவதனாவுக்கு நன்றி.

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


சக வலைப்பதிவாளரின் திருமணம்

இது தமிழ் வலைப்பதிவாளர்களின் திருமணக் காலம் போலுள்ளது. அடுத்தடுத்து சில திருமணங்கள்.
அந்தவகையில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணத் திரட்டியில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவான "சாரல்" என்ற வலைப்பக்கத்துக்குரிய பதிவாளர் திரு. சயந்தன் அவர்களுக்கு திருமணம்.

இப்போது ஏராளமான புதிய வலைப்பதிவாளர்கள். கொஞ்சம் பழையவர்கள் வசந்தனையும் சயந்தனையும் மறந்திருக்க மாட்டார்கள் ;-).
கொஞ்சக்காலமாக 'சாரல்' வலைப்பதிவில் பதிந்து வருவதைக் குறைத்துக் கொண்டார். (பதியாமலே இருப்பதற்கு தன்னைப் பயிற்றுவித்திருப்பார் போலும்) பதிந்த காலங்களிற்கூட அடிக்கடி பதிவுகளை வெட்டிக் கொத்தித் திருத்துவதும், சிலசமயம் வெளியிடப்பட்ட பதிவையே ஒளித்து வைப்பதுமாக அவர் அல்லாடியதை உணர்ந்தவர்களுக்கு 'ஆட்டிப்படைத்த கை' பற்றி ஓரளவு புரிந்திருக்கும். ஆனாலும் ஆங்காங்கே அவரின் கைவண்ணத்தைக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

சரி. தகவலுக்கு வருகிறேன். இந்த மாதம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் திகதிகளில் சுவிஸ் நாட்டில் Zug என்ற நகரத்தில்
செல்வன் கதிர் சயெந்திரன் அவர்களுக்கும்
செல்வி Virginia தேவசகாயம் அவர்களுக்கும்
திருமணம் இனிதே நடைபெற உள்ளது.

அன்பர்கள், நண்பர்கள், சகவலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவரும் தங்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாழ்த்தவும்.
(அப்படியே தொடர்ந்தும் வலைப்பதிவுத் தொடர்போடு இருக்கும்படியும் அறிவுறுத்துங்கள்.)

(ஏன் இரண்டு நாட்கள் திருமணம் நடக்கிறதென்று என்னைக் கேட்காதீர்கள்.
அதெல்லாம் பிறப்பில் வந்த பலன். எல்லோருக்கும் இப்படியொரு பாக்கியம் கிடைக்காது;-))

"இன்னும் 34 நாட்கள்தாம்" என்று நான் பதிவு போட்டு உங்களை ஆவலில் காத்திருக்க வைத்ததை இப்பதிவு மூலம் தீர்த்துக் கொள்கிறேன்.
"மூன்று வருட ஆவலை" இந்நாளில் அவர் தீர்த்துக் கொள்வார்.

_____________________________________________

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, July 02, 2006

தமிழக ஊடகங்களின் ஈழம் பற்றிய அறிவு.

கீழே இருப்பது தமிழக ஊடகமொன்றில் வந்த செய்தி.

"விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 கடற்படை வீரர்கள் பலியாயினர். விடுதலைப்புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன.

மன்னார் மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
காங்கேசன்துறை பகுதியில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த மோதலில் நான்கு கடற்படை வீரர்கள் பலியாகினர்.
"

என்று அச்செய்தி தொடர்ந்து செல்கிறது. இது thatstamil என்ற வலைச்செய்தித் தளத்தில் வந்தது.

இச்செய்தி சொல்லவந்தது, நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன் துறைக்கு அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி.
இவர்கள் எங்கிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள் என்ற குழப்பம் வருகிறது. புலிகளின் செய்தித்தளங்களும் இலங்கை அரசு தரப்பின் செய்தித்தளங்களும் இப்படியொரு தவறான அமைவிடத் தரவைத் தந்திருக்கமுடியாது. நாலைந்து செய்திகளை ஒன்றாகக் குழைத்துத் தருகிறார்களா?
காங்கேசன்துறை கடற்படை முகாம் மீது அதிரடித்தாக்குதல் நடத்துவதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம்?

பொதுவாகவே தமிழகத்தின் அச்சு மற்றும் இணைய ஊடகங்களுக்கு ஈழம் தொடர்பான அத்தியாவசிய அறிவே குறைவுதான். சில ஊடகங்கள் தெரிந்தும் விசமத்தனமாகத் திரிப்பவை.
பிரபாகரனின் வருடாந்த உரையை, அவரது பிறந்தநாளுக்காக வெளியிடப்படும் உரையென்று பல ஊடகங்கள் சொல்லிவருகின்றன. இவற்றிற் சில, உண்மையிலேயே அறியாமையால் சொல்வன. சில உண்மை தெரிந்தும் விசமத்தனமாகச் சொல்வன. புலியெதிர்ப்புக் கும்பல் இதே கதையைச் சொல்லும் நோக்கத்தையே இந்த ஊடகங்களும் கொண்டிருக்கின்றன. (வலைப்பதிவுச் சூழலிலும் சிலருள்ளனர்)

அதைவிட இவ்வூடகங்களுக்கு ஈழம் பற்றிய அமைவிட, பிரதேச அறிவு என்பது மிக மோசமாக உள்ளன. மேற்குறிப்பிட்ட செய்தியை எடுத்துக்கொண்டால் கூட, காங்கேசன்துறை என்பது ஏதோ குச்சொழுங்கைக்குள் இருக்கும் இடமன்று. முக்கியமான துறைமுகம். இன்றும் அதற்கு ஒரு பிரச்சினையென்றால் இந்தியக் கடற்படைதான் முதலில் வரிந்துகட்டிக்கொண்டு வந்து நிற்கும். அதைவிட இந்தியாவிலிருந்து அகதிகள் பரிமாற்றம் வரை நெருங்கிய தொடர்புள்ள துறைமுகம் இது. இதைக்கொண்டுபோய் மன்னாரில் வைத்து, அல்லது மன்னாரைக் கொண்டுவந்து காங்கேசன்துறையில் வைத்து ஒரு செய்தியைத் தருகிறார்கள். (மணிரத்தினம் செய்த 'கன்னத்தில் முத்திட்டால்' எவ்வளவோ பரவாயில்லை)

ஒரு செய்தி ஊடகம் இப்படியொரு அரைகுறை பிரதேச அறிவுடன் இயங்குகிறது என்பது வருத்தத்துக்குரியதே. இந்தப் பிரதேச அறிவைப் பெற ஈழத்தில் இருந்திருக்க வேண்டுமென்ற அவசியமேயில்லை. தமிழ் தவிர்ந்த ஏனைய ஊடகங்கள் இப்படித் தவறான பிரதேச அறிவோடு செய்தி வெளியிட்டதாகவும் நினைவில்லை. குறைந்தபட்சம் இவ்வளவு காலத்தில் முக்கிய இராணுவ நிலைகள், இராணுவத் தளங்கள், விமானத்தளங்கள், கடற்படைத்தளங்கள், போர் இலக்குகள், புலிகளினதும் இராணுவத்தினதும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பற்றிய தரவுகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமாக ஒரு வரைபடமாவது குறிப்புக்களுடன் இருந்திருக்க வேண்டும்.

இவற்றை விட்டுப்பார்த்தாலும் இவ்வாறான செய்திகளுக்கு நம்பகரமான பல்வேறு மூலங்களுள்ளன.
****************************************************
அடிப்படையில் தமிழகத்தின் அரசியல், புவியியல், கலை - இலக்கிய - கலாச்சாரம் பற்றி ஈழத்தவருக்கு இருக்கும் அறிவுக்கு எதிர்மாறானதாகவே ஈழம் பற்றி தமிழகத்தார்க்கு உள்ளது என்பது என் கருத்து. இதற்குப் பல்வேறு காரணிகளுள்ளன. ஆனால் ஒரு செய்தி ஊடகமும் ஏனோ தானோவென்று மெத்தனமாக அறிவை வைத்துக்கொண்டிருப்பது அவ்வளவு சரியில்லை. குறைந்தபட்ச தேடலாவது வேண்டும்.

thatstamil வலையூடகம் ஒப்பீட்டளவில் ஈழம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வலையம் என்பது எனக்குத்தெரியும். இயன்றவரை நடுநிலையையும் பேணுகிறது. ஆனால் இதே தளத்தில இப்படியான தவறான செய்திகள் வரும்போது வருத்தமாயிருக்கிறது. அதுதான் இப்பதிவு, இதுவே வேறோர் வலைத்தளத்தில் வந்திருந்தால் எழுதியிருப்பேனா தெரியாது.


_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________