Saturday, September 30, 2006

ஆணிவேர் இயக்குநர் ஜோன் மகேந்திரன் செவ்வி.

‘‘இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... ‘‘ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது’’ உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்’’ என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்.



கேள்வி: ஆணிவேர் முயற்சியின் தொடக்கம் பற்றி...

பதில்: ‘‘நான் சச்சின் படம் பண்ணி முடித்து அது தியேட்டரில் ஒடிக்கொண்டிருந்த போது சுவிட்சர்லாந்தில் 'தமிழ் லீவிங் மீடியா நெட் வொர்க்' நிறுவனத்தை நடத்திவரும் பிரபாகரன் அவர்கள் சச்சின் பார்த்துவிட்டு என்னை அழைத்து விஷ் பண்னினார். அப்புறம் என்னிடம் ஈழத் தமிழர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர முடியுமா என்று கேட்டார். ஒரு பிலிம் மேக்கரா எனக்கு இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இருக்குண்ணு தெரியும், ஆனா அதோட அரசியலோ கடந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் ஈழ மண்ணில் யுத்தம் நிகழ்த்தியிருக்கும் கோர தாண்டவம் பற்றியோ எனக்கு தெரியாது.. ஆனால் ஒரு யுத்த பின்னணியை வைத்து ஒரு சினிமா பண்ணவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. பிரபாகரன் நிறைய புத்தகங்கள், வி.சி.டி என கடந்த கால வரலாற்று ஆவணங்களை கொடுத்தார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் அடைந்த துயரங்களை பார்த்தேன். படம் எடுப்பதற்கு முன்னால் ஈழப்பகுதிகளுக்கு போகவேண்டும் என்று சொன்னேன். அங்கே போய் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து மக்களை சந்தித்தேன். ஒவ்வொரு கதைகளும் ஒரு ஈழ சினிமாதான். நிறைய பேரை சந்தித்தேன். நீண்ட நேரம் பலமான அவர்களின் கதையை, வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்தேன். நான் பதிவு பண்னின மொத்த விஷவலையும் வெச்சு இரண்டு வருஷத்துக்கு ஒரு மெகா சீரியலே பண்ணலாம். அங்கே ஈழத்தில் இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள். ஒன்று யுத்தத்தின் நெருக்குவாரத்தை சந்தித்து தினம் தினம் மரணத்தோடு இன்னும் சொந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்து உலகெங்கிலும் தாயகம் பற்றிய கனவுகளோடு வாழ்பவர்கள். ஐம்பதுகளில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இவளவு கொடூரம் நடந்தும் இன்னும் இது சரியாக வெளியுலகத்துக்கு வரவில்லை என்கிற ஏக்கமும் கோபமும் அவங்ககிட்டே இருக்கு. இரண்டு சமூகங்கள் ஒரு பிரச்சனை காரணமாக மோதி அதில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டா அதுக்கு பேர் கலவரம். ஆனா இலங்கையில் காலம் காலமா தமிழர்கள்தானே பாதிக்கப்படுறாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதலை கலவரமாகத்தான உலக மீடியாக்கள் பார்க்குது. இப்படிபட்ட வருத்தங்கள் அவங்களுக்கு இருக்கு. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட இரண்டாவது ஆயுதமாக சினிமாவை கையிலெடுத்திருக்காங்கண்னு நினைக்கிறேன்.



கேள்வி: ஆணிவேர் படம் எடுப்பதற்க்காக நீங்கள் ஈழத்தில் எவளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன்.சென்னையில் இருந்து கொழும்புக்கு போய் இறங்கிய போது ஒரு தமிழ் நாளிதழை வாங்கி பார்த்தேன் ‘‘கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள்’’ என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள். ஈழத்தில் உள்ள போராளிகளாக உள்ள பொது நிலையினரின் வாழ்க்கையை அந்த தலைப்பு எனக்கு உணர்த்தியது. ஏகப்பட்ட பரிசோதனைகள் கொழும்பில் உலவுகிற ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களோடு கண்காணிக்கப்படுகிறான். புல்லட் நிரப்பப்பட்ட ஒப்பன் செய்யப்பட்ட ஏகே 47 நவீன ரக துப்பாக்கிகள் வழியாக ஊர்ந்துதான் கடுமையான கெடுபிடிகளை தாண்டி ஈழத்துக்குள் பிரேவசிக்க முடிந்தது. என்னை அழைத்து வந்த காரோட்டி சொன்னார் ‘‘சார் கை தவறுதலாக பட்டால் கூட அந்த துப்பாக்கியின் குண்டுக்கு யாரோ ஒருத்தர் பலியாக நேரிடும்’’ என்றார். அப்புறம் ஈழத்துக்கு போய் என்னோட பணிகளை கவனித்தேன். அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது யுத்தத்தோடு தொடர்புடைய கதை. ஒவ்வொரு மனிதனும் சகோதரியையோ,தாயையோ.உறவுகளையோ இழந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ மனிதனாகவோ இதற்க்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று எனக்கு தெரியவில்லை. ஒரு தாயை சந்தித்தேன் அவங்களோட மகனை சில வருடங்களாகவே காணவில்லை. பின்னர் செம்மணி புதை குழி மர்மங்கள் வெளிபட்ட போது அதில் அவங்களோட மகனும் கொலை செய்யப்பட்டாராம். அதே மாதிரி இன்னொருத்தங்க ஒரு கதை சொன்னாங்க. ஒரு நாள் ஆர்மிக்காரன் வருகிறான் என்று எல்லோரும் ஒடியிருக்காங்க அப்படி ஒடினபிறகு பார்த்தா அவங்களோட குழந்தையை மிஸ் பண்னிட்டாங்க பதறிப்போய் பார்க்கும் போது அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டிருக்காங்க. அதே மாதிரி தன்னோட தாய் இறந்து போயிட்டாங்க எனபது கூட தெரியாமல் தாயோட மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையின் கதை ஒன்றை ஒரு டாக்டர் சொன்னாங்க. அவங்க அந்த சமூகத்தோட மனச்சாட்சி மாதிரி ஏண்ணா?அவங்கதானே யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா பார்க்கிறாங்க மருத்துவம் செய்றாங்க. ஒரு நாள் ஷெல் அடிக்கும் போது குழந்தையோட பதுங்கின தாய்க்கு தோளில் நல்ல காயம் ஏற்ப்பட்டிருக்கு அந்தம்மாவுக்கு அவசரமா ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டும் அவங்ககிட்டே மயக்க மருந்து எடுத்துக்கோங்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாவது ஆகும என்று டாக்டர் சொன்னபோது ‘‘வேணாம் அவளவு நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க முடியாது.மயக்க மருந்து இல்லாமலே பண்ணுங்க’’ எனறு சொல்லி மயக்க மருந்து இல்லாமலே அந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கு இதை மனத்தைரியமா எடுத்துக்கறதா?இல்லை போர் இப்படி ஒரு மன இறுக்கத்தை அந்த மக்களிடம் ஏற்ப்படுத்தியிருக்குண்னு நினைக்கிறதாண்னு தோணலை...தர்ஷினி கொலை செய்யப்பட்டது பற்றி ஒரு ஆசிரியரிடம் பேசினேன் அவங்க சொன்னதும் நான் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது காரணம் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது அவங்களோட ஒவ்வொரு அடியும் இராணுவத்தால் கண்காணிக்கப்படுவதும் பரிசோதனை என்கிற பெயரில் கொடூரமான வக்கிரமான வதைகளுக்கு ஆட்படுவதும் இன்றும் தொடர்கிறது.அதை நேரில் என்னால் பார்க்க முடிந்தது.

தொடர்ச்சி.......

[இச் செவ்வி முழுமையாக சலனம் வலைப்பக்கத்தில் இருக்கிறது. அதுவும் ஒருங்குறியில் இருப்பதால் முழுச் செவ்வியையும் இங்குப் பதியாமல் இணைப்புக் கொடுத்துள்ளேன்.]

இச்செவ்வி பற்றி ஏற்கனவே யாராவது வலைப்பதிவில் பதிந்தார்களா தெரியது. முக்கியமான சுவாரசியமான செவ்வி என்பதால் இங்கே பதிவாக்கினேன்.

ஆணிவேர் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் அதுபற்றி பதிகிறேன்.

_____________________________________________

ஜோன் மகேந்திரனின் ஒலிவடிவிலான செவ்வியும் கிடைக்கிறது.
ஒலிவடிவச் செவ்வியைக் கேட்க....


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 29, 2006

தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்

மெழுகல் பற்றி ஒரு குரற் பதிவு.







Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala.

ஈழம், விடுதலைப்புலிகள் இயக்கம் என்பன மட்டில் சுவாரசியமற்ற மூன்றாம் நிலையில் ஐரோப்பாவில் வாழ்ந்தவரின் தாயகம் நோக்கிய பயணம் என்று சொல்லலாம்.
கொழும்பு வாழ்க்கை, அங்குள்ள தமிழர்கள், யாழ்ப்பாணத்துக்கான விமானப்பயணம், யாழ்ப்பாண மக்கள், தமிழகத் தொலைக்காட்சிகளின் செல்வாக்கு, வன்னிப் பயணம், வன்னி மக்கள் என்பவை தொடர்பான பார்வை இவராற் பதியப்படுகின்றன.

அதில் வன்னியில் தான் ஒன்றாகத் தங்க நேரிட்ட குடும்பமொன்றைப் பற்றிய பதிவு வருகிறது. கண்ணம்மா என்ற பெண் பற்றி விவரிக்கிறார்.
வலைப்பதிவாளர் மாட்டுச் சாணத்தால் நிலம் மெழுக வேண்டி வந்த சம்பவம் உட்பட பல சுவாரசியங்களைக் கொண்டு செல்கிறது அப்பதிவு.
______________________________________________________________

பதிவை வாசித்தபோது, பதிவாளர் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட தரை தொடர்பில் இவ்வளவு தூரம் அரியண்டப்பட வேண்டுமா? என்று என்னுள் ஆச்சரியம் வந்தது. பிறகு யோசித்தபோது புரிந்தது. வெளிநாடொன்றில் வாழ்ந்த, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட எந்த இடத்தையும் எதிர்கொள்ளாத ஒருவருக்கு முதல் அனுபவம் எப்படியிருக்கும் என்பது புரிந்தது.
இந்த விசயத்தில் என் அனுபவம் எப்படி இருந்தது என்று யோசித்துப்பார்க்கிறேன்.

யாழ்ப்பாணத்தில், மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட இடங்களில் வாழ்ந்த ஞாபகம் எனக்கில்லை. எங்கள் ஊர் கிராமம்தான் என்றாலும் எங்கள் பகுதியில் பெரும்பாலும் கல்வீடுகள்தாம். பெரும்பாலும் எல்லாமே காறை பூசப்பட்டவை. காறை பூசப்படாதவைகூட புத்துமண்ணால் மெழுகப்பட்டவை, மாட்டுச்சாணத்தால் அன்று.

ஆனால் அப்படி புத்துமண்ணால் மெழுகப்பட்ட தரை அழுத்தமாக, சீராக இருக்காது. நிறைய வெடிப்புக்கள் வரும். புழுதி கிளம்பும். சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குள்ளயே தங்கியிருந்த காலத்திலயும் நான் கல்வீட்டிலதான் இருந்திருக்கிறேன்.

மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட குடிசைகள் எனக்கு அறிமுகமானது 1996 இல் வன்னியிலாகத்தான் இருக்க வேண்டும். பலதடைவைகள் நான் சாணியில் மெழுகியிருக்கிறேன். ஆனால் மாட்டுச்சாணத்தால் மெழுகுதல் பற்றிய எனது முதல் அனுபவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி என் மனத்தில் ஏதுமில்லை. எனவே எந்த அதிர்ச்சியோ அருவருப்போ இன்றி இயல்பாகவே இசைவாக்கப்பட்டிருக்கிறேன். இப்படி மெழுகப்பட்ட வெறும் நிலத்தில் உருண்டு புரண்டிருக்கிறேன். அவற்றின் மணம்கூட என்னைத் தொந்தரவு செய்த ஞாபகமில்லை.



மாட்டுச் சாணத்தால் மெழுகுவது மிக நேர்த்தியாக இருக்கும். நிலம் நல்ல அழுத்தமாக, சீராக இருக்கும். வெடிப்புக்கள் வந்து அழகைக் குலைக்காது. மெழுகியபின் தரையில் ஓர் அழகு தெரியும். விளக்குமாறால் முற்றம் கூட்டியபின், நாம் கூட்டிய ஒழுங்கில் ஈர்க்குக் கீறல்கள் நிலத்தில் கோலம் போட்டு ஓர் அழகு தெரியுமே, அதேபோல் நாம் மெழுகிய ஒழுங்கில் மெழுகப்பட்ட தரையில் கோலம் தெரியும்.

எனவே மெழுகும்போது ஒரு கலையுணர்ச்சி தேவை. அங்கிங்கென்று ஒழுங்கற்ற முறையில் கைகளை அலைத்து மெழுகலாம். நிலம் சீராக மெழுகப்பட்டிருக்கும். அனால் அழகாக இராது. ஒரே அகலத்தில், ஒரே பக்கமிருந்து (வலமிருந்து இடம் போல) ஒரே ஆரையில் இழுத்துக்கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு இழுவையும் ஒரே வளைவாக ஒரே அகலத்தில் இருக்கவேண்டும். இப்படி அழகாக மெழுகுவதென்பது உடனடியாக வராது என்றே நினைக்கிறேன்.
நான் பார்த்தளவில் சிலர், மாடு காலையில் போட்ட சாணம், மாலையில் போட்ட சாணம் என்று வேறுபடுத்திக்கூட மெழுகுவார்கள். நிறத்தில், தடிப்பில் மாற்றம் இருக்கும்.
__________________________________________--
அனுபவத்தின் அடிப்படையில் மாட்டுச்சாணம் பூசிய நிலங்கள் தொடர்பில் சொல்லக்கூடியது 'நித்திரை'.
அந்த மாதிரி நித்திரை வரும். நினைத்த நேரத்தில் அமைதியாக நித்திரை கொள்வது எப்போதும் கிடைப்பதில்லை. குறிப்பாக வெளிநாட்டில் என் அனுபவப்படி விருப்பமான நித்திரை இதுவரை கிடைக்கவில்லை. நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்த நேரத்தில் நித்திரை வராது. வரக்கூடாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யும்.

மாட்டுச்சாணத்தில் மெழுகப்பட்ட வீட்டு நிலங்களில் நல்ல குளிச்சியை உணர்ந்திருக்கிறேன். நல்ல நித்திரையை அனுபவித்திருக்கிறேன். நல்ல அலாதியான பகல் நித்திரைக்கு நான் பரிந்துரைப்பவை: கடற்குளிப்பு முடிந்ததும் நிழலில் வந்து படுப்பது, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் படுப்பது.

__________________________________


என்னுடைய பழைய குரற்பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.
விரும்பினால் அப்பக்கங்களுக்குச் சென்று கேட்கலாம்.


"படலையும்" பால்ய நினைவும்.

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
___________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, September 17, 2006

தனிநாடு ஒன்றே தீர்வு - கலாநிதி செனவிரட்ன

ஒஸ்ரேலியாவில் ஈழத்தமிழருக்காக நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் சிங்களவரான மருத்துவக் கலாநிதி பிறையன் செனவிரட்ன அவர்கள் இன்பத் தமிழொலி வானொலிக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம்.

ஜேவிபி யின் பயங்கரவாதம், அரச பயங்கரவாதம், மகிந்தவின் அணுகுமுறை என்பவற்றோடு தற்போது நடந்தது கொண்டிருப்பது என்ன என்பது பற்றி உரையாடுகிறார்.
தமிழருக்கான ஒரே தீர்வு தனிநாடுதான் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார்.

இலங்கைத் தீவு கடந்த காலத்தில் ஒரேநாடன்று, அது தனித்தனி நாடுகளாக இருந்தது, என்று சொல்லும் இவர் இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கு அது இருநாடுகளாகப் பிரிவதே சிறப்பு என்கிறார்.

கலாநிதி பிறைன் செனவிரட்ன அவர்கள் பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து வந்தவர். முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்காவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓலி இணைப்பு


_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, September 16, 2006

ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி

* வடமராட்சியின் இசை, நாடக கூத்து பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்
-தாவீது கிறிஸ்ரோ-
_____________________________________

இக்கட்டுரை நானெழுதியதன்று.
ஞாயிறுத் தினக்குரலில் வந்த கட்டுரை.
படியெத்து இங்கு இடுகிறேன்.
_____________________________________

`ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி' என ஒரு பழமொழி யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக, யாழ்நகரைச் சுற்றியுள்ள, நகர்ப்புறங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இக் கூற்று பெரும்பாலும் பாவிக்கப்படுவதுண்டு. கூத்துகள் எனப்படுபவை வடமோடி, தென்மோடி, மன்னார்பாங்கு, காத்தான் கூத்து என பல்வகைத்தனவாக இருந்தாலும் குறிப்பாக, நகர்ப்புறம் சார்ந்தே தென்மோடி, வடமோடி கூத்துகள் அண்ணாவிமார்களால் அரங்கேற்றப்பட்டன. பூந்தான் யோசப் முதல் அண்ணாவி டானியல்வரை குருநகர், பாஷையூர், நாவாந்துறைவரை ஏராளம் அண்ணாவிமார்கள் பல்வேறு கூத்துகளை பழக்கி மேடையேற்றி உள்ளனர். கத்தோலிக்க கூத்துகளில் செபஸ்தியார், ஞானசௌந்தரி, அனற்ரோலி சரிதம் என்பன முக்கியமானவை. அரிச்சந்திரா, நல்லதங்காள், பூதத்தம்பி, கண்டி அரசன் என்பன பிறிதொரு வகைக்குள் அடங்கும். கத்தோலிக்க அண்ணாவிமார்களே இத்தகைய பிறமதக் கூத்துகளைப் பழக்கியுள்ளமை ஒரு முக்கிய செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வடமோடி, தென்மோடிக் கூத்துகளை விட காத்தான் கூத்துகளே அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் விசேடமாக, வடமராட்சிப் பகுதியில் காத்தான் கூத்து பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல அண்ணாவிமார்களால் பல்வேறு இடங்களில் பழக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

வடமராட்சியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஒரு விதத்தில் பிரசித்தமானது. `இத்திமரத்தாள்' என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் பக்தர்கள் கூத்து அல்லது இசை,நாடகம் ஒன்றை மேடையிடுவதாகவே நேர்த்தி வைப்பார்கள். கூத்து அல்லது இசை நாடகம் மேடையேற்றப்படும் தினத்தில் சம்பந்தப்பட்டவர்களது பிரசன்னமில்லாமலே அவை மேடையேறும். நெல்லண்டையில் பங்குனி,சித்திரை, வைகாசி மாதங்களில் பல நாட்கள் கூத்துகளும் நாடகங்களும் தொடர்ச்சியாக நடைபெறும். சிவாலிங்கத்தின் சீன்,ஜெயா லைற்று மிசின் என்பன நெல்லண்டையில் நிரந்தரமாக இம் மாதங்களில் தங்கி விடுவதும் உண்டு.

வடமராட்சிக்கு இன்னொருவிதத்தில் பெருமைப்படக்கூடிய விதத்தில் கிருஷ்ணாழ்வாரின் பங்களிப்பு முக்கியமானது.இசை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி பலர் விதந்து பாராட்டியுள்ளனர். காங்கேசன்துறையைச் சேர்ந்த வி.வி.வைரமுத்துவின் புகுந்த ஊர் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் என்றமையால் வடமராட்சியில் வைரமுத்துவின் நாடகங்கள் நிறைய மேடையேற்றப்பட்டது மட்டுமல்ல, அவரது நாடகங்களில் வடமராட்சியைச் சேர்ந்த நற்குணம், பபூன் செல்லையா, சின்னத்துரை போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தமையும் ஒரு சிறப்பான நிலையாகும்.

வைரமுத்துவின் நாடகங்கள் மேடையேறுகின்ற காலங்களில் வி.என். செல்வராசா சகோதரர்களின் இசை நாடகங்களும் மேடையேற்றப்பட்டாலும் வைரமுத்துவின் `மயான காண்டம்' நாடகம் மட்டும் பெரும் வரவேற்பைப் பெற்றமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்து - சத்தியகீர்த்தியென்றால் நற்குணம் - காலகண்டஐயரென்றால் சின்னத்துரை என ஒரு அடையாளம் நடிகர்கள் மேல் ரசிகர்களால் சுமத்தப்பட்டது. இதேபோல், சந்திரமதி - இரத்தினம், எமன் - மார்க்கண்டு (சத்தியவான் சாவித்திரி) என அடையாளங்கள் அக்கால நடிகர்களுக்கு சூட்டப்பட்டிருந்தன.

வடமராட்சியில் காத்தான் கூத்து உழைப்பாளர்களினால் மட்டும் மேடையிடப்பட்டமையை அவதானிக்க வேண்டியுள்ளது. மாதனையைச் சேர்ந்த கம்மாளரும், கற்கோவளம் பொலிகண்டியைச் சேர்ந்த மீனவரும் வடமராட்சி சீவல் தொழிலாளர்களும் காத்தான் கூத்துகளை தொடர்ச்சியாக ஆடி வந்துள்ளனர். காத்தான் கூத்தில் பல பின் நவீனத்துவ கூறுகளை நாம் அவதானிக்க முடியும். மரபு வழியாக கட்டமைத்து வைத்திருக்கும் சிவன், பார்வதி, விஷ்ணுவை நையாண்டல் செய்யும் பல பாடல்கள் காத்தான் கூத்தில் அமைந்துள்ளன. தொட்டியத்து சின்னான், டாப்பர் மாமா போன்ற பாத்திரங்கள் வாயிலாக இவை அம்பலப்படுத்தப்படுகின்றன. பாடல்கள் இடையிட்ட வசனங்கள் கூட பேச்சு வழக்கில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும்.

ஸ்ரீவள்ளி - நல்லதங்காள், பூதத்தம்பி, சாரங்கதாரா என பல இசை நாடகங்கள் அக் காலத்தில் மேடையேறின. பூதத்தம்பி, கருங்குயில் குன்றத்துக் கொலையென்றும், காத்தவராயன் ஆரியமாலா என்றும் மேடையேற்றப்பட்டன. அதேபோல், அரிச்சந்திரா, மயானத்தில் மன்னன் என்றும் மேடையேற்றப்பட்டது. விடியவிடிய சம்பூர்ண அரிச்சந்திரா என்றும் சுருக்கமாக மயான காண்டம் என்றும் மேடையேற்றப்பட்டன.

மேடையில் ஒரே நாடகத்தில் பல நாடகங்களின் காட்சிகளை இணைத்து அளிக்கை செய்யப்பட்டதும் உண்டு. வடமராட்சியில் அண்ணாச்சாமி வாத்தியாரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. அண்ணாச்சாமியிடம் ஓவியத்திறமையும் இருந்தமையால் அவரது சீன்களும் அவரது நாடகங்களும் பயன்பட்டன. மின்சாரம், ஒலிபெருக்கி இல்லாமல் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் இந் நாடகங்கள் கிராமப்புறங்களில் மேடையேற்றப்பட்டன. தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்வதிலும் இந் நடிகர்கள் திறமை பெற்றிருந்தனர்.

ஸ்ரீவள்ளி நாடகம் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த கைக்குழந்தை ஒன்றைப் பெற்று மேடையில் வள்ளியாக நடிகர்கள் பாவனை செய்தார்கள். அந்த ஆண் குழந்தை வயது வந்து பெரியவனாக மாறிய பின்னும் வள்ளியென அழைக்கப்படும் விபரீதமும் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை பாராட்டுவதற்காக அவர்கள் பாத்திரமாக ஒப்பனை செய்து மேடையில் தோன்றியவுடன் மாலை அணிவித்து பொன் முடிச்சுக் கொடுக்கும் `அகோனா' எனும் கௌரவ நிகழ்ச்சிகள் அக் காலத்தில் அடிக்கடி மேடைகளில் நிகழ்ந்துள்ளன. இன்று கூத்துகளோ, நாடகங்களோ மேடையேற்றப்படாமையால் இப்படியான நிகழ்வுகளும் அருகிப் போய் விட்டன.

1960 களில் `புழுதிக் கூத்து' எனும் ஒருவகைக் கூத்து வடமராட்சியில் நிகழ்த்தப்பட்டமை பற்றி வயதானவர்கள் சிலர் மூலம் அறியக் கிடைத்தது. 60 களின் ஆரம்பத்தில் `மாயக்கை' எனும் கிராமத்தில் இவ் வகையான `குசலவன்' எனும் கூத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிலத்தில் நான்கு கம்புகள் கட்டி ஒரு வெள்ளை வேட்டியின் மறைப்பில் அண்ணாவியாரோடும் மத்தளக்காரரோடும் நாடக பாத்திரங்கள் தோன்றி பாடி ஆடும் ஒருவகை கூத்தாக அது விளங்கியது. இதற்கு `புழுதிக்கூத்து' எனும் பெயர் பொருத்தமானது தான். ஆயினும் இதன் உண்மைப் பெயரென்ன? என்பதை நாடக விற்பன்னர்கள் தான் விளக்கமாக எழுத வேண்டும். பாத்திரங்களின் உடைகள், ஆட்ட முறைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான முறையில் இருந்தமையையும் கரப்பு கட்டிய உடைகளுடன் அவர்கள் தோன்றியமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

வடமராட்சியின் கத்தோலிக்கக் கிராமங்களில் கோவில் திருநாள் இறுதி நாட்களில் கத்தோலிக்கக் கூத்துகள் மேடையேற்றப்படுவது வழமை. சக்கோட்டை புனித சவேரியார் ஆலயம் - தும்பளை லூர்து அன்னை தேவாலயம் போன்றவற்றில் செபஸ்தியார், பூதத்தம்பி போன்ற கூத்துகள் ஆடப்பட்டன. இக்கூத்துகள் ஆடப்பட்டவை என்பதை விட பாடப்பட்டன என்பதுவே பொருத்தமாகும். மன்னார்பாங்கில் அமைந்ததாகக் கூறப்படும் இக்கூத்துகளில் பக்கப் பாட்டுக் காரர்களின் குரலே ஓங்கி ஒலிப்பதும் `பசாம்' எனப்படும் யேசுவின் பாடுகளை வாசிக்கும் இராகத்தில் கூடுதலாக இக்கூத்துப் பாடல்கள் பாடப்படுவதும் ஒரு வித்தியாசமான விடயம். காத்தான் கூத்துகளில் வரும் சிந்துநடையை ஒத்தாக இம்மன்னார்ப்பாங்குக் கூத்துப் பாத்திரங்கள் மேடையில் நடந்தும் பாடியும் நடிப்பது முக்கியமானதாகும். ஆயினும், இவ்வகை நாடகங்களின் அளிக்கைககள் மிகக் குறைவு. காத்தான் கூத்தின் ஆதிக்கமே வடமராட்சியில் மிகக் கோலோச்சியமையை நாம் அவதானிக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச காலத்தில் உருவாகிய அம்பலத்தாடிகளின் `கந்தன் கருணை' ,காத்தான் கூத்துப் பாணியில் அமைந்தமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. வடமராட்சி மக்களுக்கு மிகவும் வாலாயமான ஒரு பாணியை அம்பலத்தாடிகள் தேர்ந்தமையும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளையின் ஆளுமையும் இதற்கொரு காரணம். மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் பற்றிப் பேசும் அல்லது எழுதும் படைப்பாளிகள் மக்களின் மொழியை மக்களுக்குப் புரியும் விதத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களை ஈர்க்க முடியும் என்பதற்கு கந்தன் கருணை ஒரு முக்கிய உதாரணம். கந்தன் கருணை வடமராட்சியில் மட்டுமல்ல, திருகோணமலை, கொழும்பு மற்றும் வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டு வரவேற்கப்பட்டமையும் ஈண்டு குறிப்பிடல் வேணடும். பின்னர் கந்தன் கருணை தாசிசீயஸ், சுந்தரலிங்கம் போன்றவர்களால் வேறொரு விதத்தில் மேடையேற்றப்பட்ட போதும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை பெற்ற வரவேற்பையும் பலனையும் பெற முடியவில்லை.

ஒரு விதத்தில் நாடக - கூத்து ரசிகன் என்ற வகையில் சில தகவல்களை இக்கட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவை பற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம். எழுதுங்கள் எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக நாமறிவதனூடாக உலகமும் அறியவரட்டும்.
________________________________________


நன்றி: ஞாயிறு தினக்குரல் Sunday, September 10, 2006


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________