"அன்பே சிவம்" எனது பார்வையில்...
ஏறத்தாள ஒரு வருடத்தின் முன்பு பார்த்த படம். மீண்டும் பார்க்க நினைத்தாலும் முடியாத இடம். எனவே நினைவிலிருப்பவற்றை வைத்து இப்படத்தின் மீதான என் பார்வையைச் சொல்கிறேன். இதுவொரு திரைப்பட விமர்சனமன்று. அதற்கான முழுவடிவத்தை இது பெறவியல்லை. குறிப்பாக முழுத்தகவல்களும் தெரியவில்லை. மேலும் எனக்கந்த அருகதை இருப்பதாகவும் எண்ணவில்லை. ஒரு இரசிகனாக என்னை வசீகரித்த இப்படத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியதன் விளைவிது. சிவப்புச் சிந்தனை கொண்ட தொழிலாளியான நாயகன் கமல் (நல்லான் அல்லது சிவம்) வீதிநாடகக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருக்கிறார். முதலாளியின் (நாசர்) மகளான பாலாவுடன் (கிரண்) எதிர்பாராவிதமாய் நட்புக் கொண்டு, பின் காதல் கொண்டு... இப்படியே போகிற போது (என்ன பாட்டி கதை சொன்ன மாதிரியிருக்கா?) அவளின் தந்தைக்குக் காதல் தெரியவந்து அவளை வீட்டில் அடைத்து வைக்க, இருவரும் தப்பிக் கேரளாவுக்குப் போக முடிவெடுக்கிறார்கள். கமல் தன் நண்பர்களுடன் பேருந்திற் பயணம் செய்யும்போது (நாயகி இல்லை) நடக்கும் விபத்தில் ஏனையோர் சாக அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்படுகிறார் கமலின் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முகம் முழுவதும் வடுக்களோடு அடிக்கடி தாடை இழுத்தபடி வரும் கமல் நெஞசில் நிறைகிறார். ஒப்பனைக் கலைஞனுக்கு ஒரு சபாஷ். (வெளிநாட்டிலிருந்து யாரோ வந்திருந்ததாக அறிந்தேன். விபரம் தெரிந்தாற் சொல்லவும்). காவல் நிலையத்தில், “நான்கூட நீ ஏதோ உண்மையான கம்யூனிஸ்டோன்னு நெனச்சிட்டேன். புடிச்சாலும் புளியங்கொம்பாத் தான்யா புடிச்சிருக்கே” என்று காவலாளியொருவன் கேட்கும்போது, குற்ற உணர்வில் தவிக்கும் கமல்; கிரணிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தன்னை மறந்து விடும்படி கூறும் காட்சியில் “போராடலாம், ஆனா வாழ்நாள் பூரா போராடிக்கிட்டிருக்க முடியுமா?” என்று ஆற்றாமையை வெளிப்படுத்தும் கமல்; பலவீனமான நேரத்தில் கிரணைக் கட்டிக்கொண்டு திருமணதத்திற்குச் சம்மதிக்கும் கமல்; விபத்துக்குக் காரணமான நாயைத் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்க்கும் கமல்; என கமல் நிறைந்திருக்கிறார். கிரண் தான் கதாநாயகி. உடம்பைக் காட்டவோ ஆபாச நடனத்திற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. கொடுத்த பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். நாசர் ஆர்ப்பாட்டமில்லாத பாத்திரம். (வில்லன் என்று சொல்ல முடியாது, ஏனெனில் வில்லன் பற்றிய ஒரு விம்பம் எனக்குத் தமிழ் சினிமாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது). “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு திரிவது; “இன்னைக்கு விரதம். பச்சத்தண்ணி தொட மாட்டம்ல” என்றுவிட்டு பின்புறம் போய்த் தண்ணியடிப்பது; சந்தர்ப்பம் கிடைத்தும் கமலைக் கொல்லாமல் விடுவது, பின் இறுதி நேரதிதில் கொல்ல ஆள் ஏவி விடுவது; என்று மனிதர் இயல்பாக அசத்தியிருக்கிறார். மதன் வசனமெழுதி நடித்துமிருக்கிறார். அவ்வப்போது கதைக்கருவைச் சார்ந்து வசனங்கள் வரும்போது மின்னுகிறார். எ.டு:- “ரஸ்யா தான் ஒடஞ்சிடுச்சே அப்புறமேன் கம்யூனிசத்தத் தூக்கிப் பிடிக்கிறீங்க?” என்று மாதவன் கேட்க, “தாஜ்மகால் இடிஞ்சிட்டா காதலிக்கிறதயே விட்டிடுவீங்களா?” என்று கமல் திருப்பிக் கேட்பார். “காதல் ஒரு feeling என்றால் கம்யூனிசமும் ஒரு feeling தான்”; என்பார் கமல். நீச்சற்குளத்தில் “I can't swim” என மாதவன் அலறுகையில். “சாகப் போறப்பவாவது தமிழ் பேசுங்க” என்று கமல் சொல்வது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். நானும் கடவும், நீயும் கடவுள் என்பதாகட்டும், கிரடிட் கார்ட் சம்பந்தமான காட்சிகளாகட்டும் மிக நன்று. வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் அருமை. வைரமுத்துவின் “யார் யார் சிவன்” எனும் பாட்டு வசீகரிக்கிறது. காட்சிகள் சிறப்பாக உள்ளன. வெள்ளப் பெருக்குக் காட்சியும், தொடருந்து (ரயில்) விபத்துக்காட்சியும் பிரமிப்பூட்டுகிறது. மிகுந்த சிரத்தையெடுத்துச் செதுக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநர் பிரபாகருக்கு ஒரு சலாம். தெருக்கூத்துக் (வீதி நாடம்) காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பிரளயனின் கலையைப் படத்தில் அருமையாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படத்திற் பிடிக்காத விசயங்களேயில்லையா? எனக் கேட்கலாம். ஆம், எனக்குக் கமல் மேல் (அது விரிவடைந்து இறுதியில் தமிழ்ச் சினிமாச் சூழல் மீதே திரும்புகிறது) கோபம் வந்த இடமொன்றுண்டு. (சுந்தர். சி. தானே இயக்குநர் என்றுவிட்டு கமல் தப்ப முடியாது). கமலை அடிக்க நாசரால் ஏவிவிடப்பட்டவர்களை, தன்னுடனிருப்பவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு கமல் ஒத்தை ஆளாக ஒரு குடையை வைத்து அடித்துத் துவம்சம் செய்கிறார். அதுவும் அவருடைய வீதிநாடகக் கலைஞர்களும் தொழிலாளர்களும் வாழும் இடத்தில். என்னவொரு கோமாளித்தனம்? (நான் மற்றைய படங்களைப்பற்றிக் கதைக்கவில்லை.) அழகிய ஒரு கோலத்தில் மலம் கழித்த மாதிரி. இப்படியொரு படத்தில் (சாத்தியமேயற்ற) தனிமனித பராக்கிரமம் தேவையா? (அதற்குள் ஜேம்ஸ் பாண்ட் பாணிச் சண்டை வேறு) கம்யூனிசத்தின் அடிப்படையே தோழமை, ஒற்றுமை, சேர்ந்து முகங்கொடுக்கும் தன்மை. அக்கோட்பாடு சார்ந்த படத்தில் அக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கலைஞன் இப்படிச் செய்யலாமா? மாறாக எல்லாத் தொழிலாளர்கயையும் (பார்வையாளராய் மேளமடித்து நாயகனுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருந்த) இணைத்து அவர்களை அடித்து விரட்டியிருந்தால் கதைக்கருவிற்கு இன்னும் வலுச்சேர்த்திருக்கும். (இதைப்பற்றி என் நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது அவன் சொன்னான் “படம் பார்க்கும் எங்களுக்கு “அட! நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம் தான்” என்பதை நினைவூட்டத்தான் அப்படியொரு காட்சியை கமல் வைத்தாராம்.” அவனுக்குக் குசும்பு அதிகம்தான்.) நகைச்சுவைக்கென தனியான சுவடோ (track) தனிநடிகரோ (விவேக், வடிவேலு) இப்படத்தில் இல்லை. (அந்தளவில் நிம்மதி). கதையுடன் இயல்பாகவே வருகிறது நகைச்சுவைக் காட்சிகள். இவ்வளவு இறுக்கமான (serious) கதைக்களத்தை இயல்பாக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று எடுத்த எடுப்பில் அடித்துக்கூறும் பிரச்சாரப் பாணியில் இல்லாமல் அழகாகவே கதை சொல்லப்பட்டுள்ளது. கமல் தனது அரசியலைத் தெளிவாகச் சொல்லியுள்ளார். நான் இப்படத்தைப்பற்றி அதிகம் கதைத்து (எழுதி?) விட்டேன் போலுள்ளது. ஏனெனில் அவ்வளவுக்கு என்னைக் கவர்ந்த படமிது. படவெளியீட்டின் போதே இப்படத்தின் வர்த்தக வெற்றிபற்றி கமல் சரியாகவே கணித்திருந்தாரென நினைக்கிறேன். படவெளியீடன்று பி.பி.சி. திமிழோசையில் வெளிவந்த அவரது செவ்வியில் அது விளங்குகிறது. இப்படத்தை வெற்றியடைய விடாமற் செய்ததற்குப் பிராயச்சித்தமாக இன்னும் எவ்வளவு காலம் ஒரு நல்ல படத்திற்காகக் காத்திருக்க வேண்டும்? Labels: திரைப்படம், விமர்சனம், விவாதம் |
""அன்பே சிவம்" எனது பார்வையில்..." இற்குரிய பின்னூட்டங்கள்
எனக்கும் மிகவும் பிடித்த படம். ஆனால் தமிழ் மக்கள் இதைப்போன்ற யதார்த்த படங்களை ஏனோ வெறுக்கிறார்கள்.
பஞ்ச் டயலாக் இருந்தால் தான் பார்ப்பார்கள். என் வழி இது. உன் வழி அது என்று உதார்விட வேண்டும்.
எங்களுக்கும் மிகவும் பிடித்த படம்தான்.
மத்தபடி இப்ப வர்ற/வந்துக்கிட்டிருக்கற படங்களெல்லாம்....... ஐய்யோடா, போதும் போதும் என்று
இருக்கின்றன.
பொழுது போக்கு என்ற ஒரு நிலையில்தான் இவைகளைப் பார்க்கின்றொம். ஆனால் பல படங்கள் உங்கள் பொழுதை வீணாக்கிடுது இல்லையா?
என்றும் அன்புடன்,
துளசி.
***இப்படத்தை வெற்றியடைய விடாமற் செய்ததற்குப் பிராயச்சித்தமாக இன்னும் எவ்வளவு காலம் ஒரு நல்ல படத்திற்காகக் காத்திருக்க வேண்டும்?
****
மிகவும் உண்மையான வரிகள் கடந்த சில வருடங்களில் இதுமாதிரியானத்தொரு படமே தமிழில் வரவில்லையென்று சொல்லலாம். தமிழனாக(தமிழச்சி? :)) :P) காலரைத் தூக்கி விட்டுக்கொண்டேன்.
கமலின் படங்களிலேயே சிறந்த படமென்று சொல்லுவேன். அதுவும் இப்போதிருக்கும் சூழலில் 'அன்பே சிவம்' என்று சொல்ல நிறைய தைரியம் வேண்டும். இது ஒரு ஆங்கிலப் படத்தில் இருந்து காப்பியெடுக்கப் பட்டிருந்தது என்றாலும், அப்படத்தில் இந்தளவு அழுத்தமான கருத்து இல்லையென்றே நினைக்கிறேன்.
நமக்கு(அதாங்க தமிழருக்கு) நல்ல விஷயங்களை ரசிக்கும் மனோபாவம் இல்லைங்க. வேறென்ன சொல்ல முடியும்.
அன்பு வசந்தன்,
அந்த ரயில்விபத்து காட்சிகள் மட்டுமல்ல, 910 ரூபாய் அர்த்தம் வருகிறாற் போல் வரையப்பட்ட சிவன்படத்திலும் கலை இயக்குநரின் உழைப்பு தெரிந்தது. சின்னசின்ன தப்புக்களை மன்னித்துவிட்டால் இது ஒரு சிறந்த தமிழ்ப்படம்தான்.
Pl. continue writing like this.
Suresh Kannan
டூ டு டூ டு டூடூடூ (1.58 லிருந்து 2.22 வரைக்கும்) என்று ரெயில்வே ஊழியர் கூறி விட்டுப் போக, மாதவன் தலை மயிரைப் பிய்த்துக் கொள்ளக் கமல் அவருக்கு விளக்க நல்ல கலகல நிமிடங்கள்தான் போங்கள்.
நாசரிடம் சந்தான பாரதி கமல் வரைந்த பெயின்டிங்கிற்கு அர்த்தம் கூற, "அதை நீ எப்படித் தெரிந்துக் கொண்டாய்?" என்று நாசர் கேட்க, "கூர்ந்து பார்த்துப் புரிந்துக் கொண்டேன்" என்று சந்தான பாரதி ஒரு உடான்ஸ் விட, "டேய்" என்று நாசர் முறைக்க இன்னொரு கலகலப்புக் காட்சி. முதல் நாள் முதல் ஷோ நான் பார்த்த ஒரே படம் இதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எழுதிக்கொள்வது: Palanisamy
அன்பே சிவம் என்னை உலுக்கிய படம். இந்த படம் தோற்றது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை தேக்கத்துக்கு ஒரு எடுத்து காட்டு! கமல் இது போல படம் இனி எடுக்காமல் இருப்பது (தமிழ் மக்களை நம்பி) அவரின் வியாபர ரிதியான வளர்ச்சிக்கு நல்லது!!)
12.40 4.12.2006
அன்பே சிவம் என்னை உலுக்கிய படம். இந்த படம் தோற்றது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை தேக்கத்துக்கு ஒரு எடுத்து காட்டு! கமல் இது போல படம் இனி எடுக்காமல் இருப்பது (தமிழ் மக்களை நம்பி) அவரின் வியாபர ரிதியான வளர்ச்சிக்கு நல்லது!!
எழுதிக்கொள்வது: http://naanengiranaan.blogspot.com
மிக அற்புதமான படம். நல்ல பதிவு. ஆரம்பம் முதல் கடைசி வரை நுணுக்கமாக ஒவ்வொன்றையும் செதுக்கியிருப்பார்கள். மாதவன் 'எனக்கு அன்பு பிடிக்காது, என் பேரு A.அர்ஸ்' என்று அன்பரசுவை சுருக்கி சொல்வதிலிருந்து கடைசி வரை பிரமாதமான காட்சி அமைப்புகள். நான் மிக மிக ரசித்து பார்த்த படம். :-)
18.26 5.12.2006