“முகம்” எனது பார்வையில்.....(திரைநோக்கு).
“டிசூம் டிசூம்..” என்று ஒருவனே 20 பேரை அடிக்கும் சண்டைகளேதுமற்று, நினைத்த மாத்திரத்திற் பல நாடுகளுக்குச் சென்று கட்டிப் புரண்டு பாடும் டூயட் எதுவுமில்லாமல், வாய்ச்சவடாலடிக்கும் வசனங்களோ நடிகர்களோ இல்லாமல், நகைச்சுவை (காமடி) என்ற பேரில் அலட்டல்களோ கோமாளிக்கூத்துக்களோ இல்லாமல்;;.... இப்படி தமிழ்ச்சினிமாவுக்கே உரித்தான “அடிப்படைத் தகுதிகள்” இல்லாமல் வெளிவந்த படம் “முகம்”.கோரமான முகம் கொண்ட ஒருவன், அம்முகத்துக்காகவே சமூகத்தாற் புறக்கணிக்கப்படுகிறான். வேலை கூட எடுக்க முடியவில்லை@ தன்னைக் காதலிக்கிறாள் என நினைப்பவளின் நிராகரிப்பு. இப்படி தன் முகத்துக்காகவே எல்லாவற்றிலும் நிராகரிக்கப்படும் ஒருவன், தற்செயலாய் முகமூடியொன்றால் அழகான முகத்தோற்றத்தைப் பெறுகிறான். முன்பு தன்னை நிராகரித்துக் கேவலப்படுத்திய சினிமாவில் நட்சத்திரமாகிறான். யாரும் நெருங்க முடியாத உயரம். நாடே அவனை வணங்குகிறது. திருமணம் கூட நடந்து விடுகிறது. இருந்தாலும், தன் முகம் போலவே தன்னைச் சுற்றியிருக்கும் கும்பலும் புகழும் ஏன் பாசமும் கூட போலியானதென்பதை நன்றாக உணர்கிறான். தன் பழைய முகத்துக்காக ஏங்குகிறான். இறுதியிற் பழைய முகத்தை அடைகிறான். ஆனால் தான் இன்னார் தானென்று கதறிச் சொன்னபோதும் அதைக் கேட்காமல் அடித்துத் துரத்துகிறது சமூகம், மனைவி உட்பட. அப்போதுதான், உயிர்வாழ்வதற்கென்றாலும் தனக்கு ஒரு போலி முகம் கட்டாயம் தேவை என்பதை உணர்கிறான். பழையபடி முகமூடி அணிந்து வருபவனை தங்கள் தலைவனாய் வணங்கி ஆர்ப்பரிக்கிறது சமூகம். போலியே நிரந்தரமாக, போலியாகவே வாழ்ந்து விடுவதென்று தயாராகிறான் அம் மனிதன். இது தான் கதை. கதாநாயகனாக நாசர். நாசர் தான் படமே. அவரைவிட படத்தில் ஓரளவு தெரிவது மணிவண்ணன் தான். படத்தின் முதன்மைப் பாத்திரங்கள் நாசரும் அந்த முகமூடியும் தான். நாசர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அசத்தியிருக்கிறார் மனிதர். பருக்களும் வடுக்களும் நிறைந்த அந்தக் கோரமுகத்தோடு;ம் சரி, சினிமா சூப்பர் ஸ்டாராகவும் சரி, குற்ற உணர்வோடு குமுறுபவராகவும் சரி, தன் பழைய முகத்தையும் சுதந்திரத்தையும் யாசித்து ஏங்குவதிலும் சரி, கொடி நாட்டியிருக்கிறார். அந்த முகத்தோடேயே சினிமாவில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்ததும் (வேலைக்காரன் வேடம்) அவர் அடிக்கும் பந்தா, அதே படத்தைத் திரையிற் பார்த்துக்கெண்டிருக்கும் போது அவர் நடித்த காட்சி வந்ததும் திரையைக் கிழித்து நாசமாக்கி கீழத்தரமான வார்த்தைகளால் திட்டி அவரைத்தேடி அடித்த மக்களிடம் உதை வாங்கும் காட்சி என்று படம் முழுவதும் நிறைந்திருக்கிறார் நாசர். நாசரின் நீண்ட சினிமா வரலாற்றில் “முகம்” ஒரு ‘மகுடம்’. கதாநாயகியாக வருபவர் ரோஜா. உண்மையில் அதிக வேலையில்லை. புடத்தில் கதை தான் முதன்மையென்பதால் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. நாசரின் அழகான (போலியான) முகத்தைக் காதலிக்கும் ரோஜா தர்ணா (வீட்டின் முன் இருந்து போராட்டம்) இருந்து அவரைக் கல்யாணம் செய்கிறார். காதலிக்கும்(?) போதும் சரி, கல்யாணத்தின் பின்பும் சரி, இயல்பாகவே இருக்கிறார். (வழமையானபடி இரண்டு இடத்திலும் இரண்டிரண்டு பாடல்கள் வரவேண்டும், அதுவும் இரண்டு பாடல்களாவது வெளிநாட்டில் இருக்க வேண்டும். விதியை மீறியதால் இயக்குநருக்கு தடா போட வேண்டும்.) படம் பின்பகுதியில் வேகமாகவே நகர்கிறது. ரோஜாவின் ஆசை, தர்ணா, கல்யாணம் எல்லாமே படுவேகம். (அவ்வளவுக்கு “மசாலாக்களை” தவிர்ப்பதில் இயக்குநர் குறியாகவேஇருந்துள்ளார்). வில்லனென்று சொல்ல ஒருவர் கூட படத்திலில்லை. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர இப்படத்தைப் பார்க்க வேண்டும். இசைஞானி பின்னியெடுத்திருக்கிறார். பாடல்கள் இல்லாததும் ஒரு காரணமோ? ஓளிப்பதிவு நன்றாக உள்ளது. அதுவும் நாசர் நடிகனான பின்வரும் காட்சிகள் கண்ணுக்குக் குளிர்மை. பட ஆரம்பத்திற் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம். ஒளிப்பதிவாளரின் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும். சினிமாவைச் சாடை மாடையாய் நக்கலடிப்பதையும் விடவில்லை. எடுத்துக்காட்டுக்கள்: மணிவண்ணின் மேக்கப் கொமன்ட்ஸ்; நாசரிடம் படக்கதை விபரிக்கையில் அவர் கதை பிடிக்காமல் நல்ல சினிமா எடுக்க ஆலோசனை கூறுவது. இருந்தாலும் இப்படத்திற் சில குறைகள்: நாசருக்கு முகமூடி மூலம் முகம் மாறுவதும் அதை அவர் நீக்கமுடியாமலிருப்பதும் தர்க்க ரீதியிற் சரியாக இல்லை. அம்புலிமாமா கதை போலுள்ளது. கொஞ்சம் ஹொலிவூட் பாணியில் யோசித்து காட்சியை அமைத்திருக்கலாம். இருந்தாலும் இப்படியான நல்ல படங்களுக்குரிய பட்ஜெட்டுக்குள் இவ்வளவுதான் முடியும் என்ற நிலையுள்ளது. வழமையான சினிமா வட்டத்திற்குள்ளருந்து வெளிவந்து ஓர் அழகான, வலிமையான படத்தைத் தந்த இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களுக்கு நன்றி. (பாரதி, காமராஜ் போன்ற அருமையான படங்களைத் தந்தவர் இவரே.) இப்படத்துக்கு மக்களிடமிருந்து பணம் கிடைத்திருக்காது என்பது தெரியும். ஏதாவது விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததா தெரியவில்லை. Labels: திரைப்படம், விமர்சனம், விவாதம் |
"“முகம்” எனது பார்வையில்.....(திரைநோக்கு)." இற்குரிய பின்னூட்டங்கள்
காமராஜ் படத்தை இயக்கியது அ.பாலகிருஷ்ணன்.ஞான ராஜசேகரன் இயக்கிய மற்றொரு முக்கிய படம் "மோகமுள்".
தகவலுக்கு நன்றி. தவறுக்கு வருந்துகிறேன். நீங்களே சொல்லுங்கள் தவறைத் திருத்தவா? வேண்டாமா?
The Cimatographer of the movie is Mr.P.C.Sreeram. :)
-- Guru Prasath
குரு பிரசாத்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
அதுசரி, எப்படி இந்தப் பதிவைத் தோண்டியெடுத்தீர்கள்?