Saturday, October 21, 2006

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1

வன்னியில் நான் வாழ்ந்த இடங்களில் ஒன்று. என்னை அதிகம் கவர்ந்த இடம். ஏற்கனவே சில இடங்களில் முத்தையன்கட்டைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது. பட்டினம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. முத்தையன்கட்டுக்குளம் என்ற வன்னியின் - ஏன் வட இலங்கையின் மிகப்பெரும் நீர்வளமொன்றை மையப்படுத்தியே அவ்விடம் பிரசித்தம்.

சில நாட்களுக்கு முன் (13.10.2006) அன்று இந்நிலபரப்பின்மீது சிறிலங்கா வான்படை மிகக்கோரமான வான்தாக்குதலைச் செய்துள்ளது. காலை ஏழு மணிதொடக்கம் ஒன்பது மணிவரையான இரண்டு மணித்தியால இடைவெளிக்குள் 48 குண்டுகளை வீசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குண்டும் குறைந்தபட்சம் 250 கிலோகிராம் கொண்டவை.
முழுப்போர்க்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இப்படியான அகோர வான்தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.
ஒன்றுமட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது, கடந்த பதினோராம் திகதி முகமாலை - கிளாலியில் சிங்களப் படைகளுக்கு நடந்தது எவ்வளவு தாக்கம் நிறைந்ததென்று.

முதற்கட்டத் தகவலின்படி இத்தாக்குதலில் பல மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போராளிகளுக்கோ மக்களுக்கோ ஏதும் சேதங்களிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிறைய வயல், தோட்ட நிலங்கள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது.
செய்தி கேட்டதும் ஒருமாதிரித்தான் இருந்தது. உடனடியாக ஏதாவது எழுதத் தோன்றினாலும் சற்று ஆறப்போட்டு அவ்விடம் பற்றி சிலவற்றைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வன்னி என்றாலே மாடுகள் அதிகமுள்ள இடம்தான். அதிலும் முத்தையன்கட்டு இன்னுமதிகம். பெரும்பாலும் வீடுகளிலோ பட்டிகளிலோ அவை இருப்பதில்லை. வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரியும், வீதிகளிலேயே படுத்தெழும்பும். வன்னி வந்த தொடக்கத்தில் அதிகாலையில் வீதியால் போவது பெரிய கரைச்சல். சிலவேளைகளில் சுவாரசியமாகவும் இருந்தது. சைக்கிளில் போபவர்கள் ஒருவாறு சமாளித்துப் போய்விடலாம். வாகனக்காரரின் பாடு பெரும்பாடு. காலை ஏழுமணிவரைக்கும் மாடுகள் வீதியை விட்டு நகரா. அந்தந்த நிலையிலேயே படுத்திருக்கும். வாகனத்தை எவ்வளவுதான் உறுமி, சத்தம் போட்டாலும் அவை நகரா. அதிலும் எருமைகள் இன்னும் சுத்தம். எழும்பக்கூட மாட்டா. யாராவது இறங்கிப்போய் எழுப்பிக் கலைத்தால்தான் உண்டு. பின்பு போகப்போக, சனத்தொகையும் அடர்த்தியாக மாடுகளும் கொஞ்சம் திருந்திவிட்டன.


ஓரிருவர் ஐநூறு, அறுநூறு மாடுகள் என்றுகூட வைத்திருந்தார்கள். அண்ணளவாகத்தான மாடுகளின் கணக்குச் சொல்வார்கள். நூறு மாடுகள்வரை வீட்டில் வைத்திருப்பார்கள், மிகுதியை முத்தையன்கட்டுக் குளத்தின் அக்கரைக்கு அனுப்பிவிடுவார்களாம். அவை பல்கிப்பெருகும், சிலதுகள் வேட்டைக்குச் சுடுபடும். சில மாதங்களின்பின் அந்தக் கூட்டத்தை வரவழைத்து புதிதான அங்கத்தவர்களுக்குக் குறிசுட்டுவிடுவார்கள். நாங்கள் 'குழுவன்' என்று சொல்லும் மாடுகள் இப்படியானவற்றிலிருந்து பிரிந்து காட்டிலேயே வளர்ந்துவிடுபவைதாம். காட்டெருமை என்றும் சொல்வார்கள், ஆனால் பேச்சுவழக்கில் குழுவன்தான்.

வேட்டையில் ஒரு நடைமுறை பின்பற்றப்படும். குறிசுடப்படாத மாடுகள் எல்லாம் குழுவன்கள்தாம். பிரச்சினை ஏதும் வராது. மிக ஆபத்தானவை என்று செவிவழியாகக் கேள்விப்பட்டாலும் இவற்றால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஒருமுறை இப்படியான மாட்டுக்கூட்டத்தால் நாக்குத் தொங்கத் துரத்தப்பட்ட அனுபவமுண்டு.

யாழ்ப்பாண நடைமுறைகளுக்கும் வன்னி நடைமுறைகளுக்கும் பல விசயங்களில் நிறைய வித்தியாசங்களுண்டு. முதன்முதல் இவற்றை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆடுமாடுகள் விசயத்திலும் அப்படித்தான்.
யாழ்ப்பாணத்தில் ஓர் ஆடு குட்டி போடுவதென்றாலோ அல்லது ஒரு மாடு கன்று போடுவதென்றாலோ பெரிய விசயம். அக்கம்பக்கத்துக்குச் சொல்வதுண்டு. மற்ற வீட்டாரும் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவர்.
ஆனால் வன்னியில் அதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பெரும்பாலான ஆடுமாடுகள் தாஙகள் மேய்ச்சலுக்குப் போன இடங்களிலேயே குட்டியையோ கன்றையோ ஈன்றுவிட்டு அவற்றை பத்திரமாக வீட்டுக்கும் கூட்டிவந்துவிடுங்கள். உண்மையில் முதலில் இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கற்சிலைமடுவில் எங்களுக்கு எதிர்வீட்டில் பத்துப்பதினைந்து ஆடுகள் இருந்தன. ஓர் அழகான செவியாடு நிறைமாசமா இருந்தது. இரணைக்குட்டி போடுமென்றார்கள். ஏற்கனவே அதேவீட்டில் இன்னோர் ஆடு ஒரேதடவையில் மூன்றுகுட்டி போட்டு, அதிலொன்றுக்குக் குறிப்பிட்ட காலம் 'போச்சி'யில் பால்பருக்கிய சுவாரசியமான சம்பவம் நடந்ததாலோ என்னவோ இந்த ஆட்டின் பிரசவத்திலும் எனக்கு ஆர்வம் இருந்தது. கடைசி இரண்டுமூன்று நாட்கள், ஆடு குட்டி போட்டிட்டுதா எண்டு விசாரித்திருந்தேன். ஒருமாதிரியாகப் பார்ததார்கள்.
அண்டைக்குப் பொழுதுபட பேப்பர் வாங்கப்போனபோது பார்த்தால் அந்த ஆட்டைக்காணேல. விசாரிச்சா அது வீட்டுக்கு வந்துசேரேலயாம். மற்றதுகள் எல்லாம் வந்திட்டுதுகள்.
'ஆரேன் தேடப்போனதோ?' எண்டு கேட்டால், இல்லயாம். 'அது ஈண்டிருக்கும்போல. விடிய வந்து சேர்ந்திடும்' எண்டு அலட்சியமான பதில்வேற. குழப்பமாகத்தான் இருந்தது எண்டாலும் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆக்கள் இப்பிடித்தான் எண்டதால பேசாமல் இருந்திட்டன்..
அடுத்தநாள் காலம ஒரு பத்துமணிபோல ரெண்டுகுட்டிகளோட செவியாடு வீட்டுக்கு வந்திட்டுது.

யாழ்ப்பாணத்தில குட்டியோ கண்டோ ஈண்ட பிறகு சீம்பால் ('கடும்பு' எண்டுதான் எங்கட வீட்டுப்பக்கம் சொல்லிறதா ஞாபகம். சரிதானே?)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே? அக்கம்பக்கத்தில குட்டியோ கண்டோ போட்டால் சொல்லிவைச்சு கடும்பு காய்ச்சிப்போடுவம். அவையள் என்ன நினைச்சிருப்பினம எண்டு தெரியேல.
குட்டிகளுக்கோ கண்டுகளுக்கோ அந்தப்பாலை விட்டா அதுகளுக்கு வருததம் வந்திடும் எண்டு சின்ன வயசில எனக்கு (எனக்கென்ன - மற்றவர்களுக்கும் இப்பிடித்தான் கிடைச்சிருக்கும்) விளக்கம் தரப்பட்டதாக நினைவு.

யாழ்ப்பாணத்தில் குழைகட்டியே ஆடு வளத்துப்போடுவம். பொழுதுபட்டா குழைமுறிக்கிறது ஒரு கடமை. ஊரான்வீட்டு வேலியில குழைமுறிச்சு பேச்சு வாங்கிறதும் கலைபடுறதும் இடைக்கிடை நடக்கும். எங்கட வீட்டு ஆட்டுக்கு வாதனாராணிக்குழை குடுத்துப் பழக்கினப்பிறகு அதுக்குப் பூவரசங்குழை பிடிக்காமல் போட்டுது. யாழ்ப்பாணததில பூவரசை விட்டா வேற நாதி? கொஞ்சநாள் பட்டினி கிடந்திட்டு பூவரசுக்கே வந்திட்டுது எங்கட ஆடு.
வன்னியில குழைகட்டி வளக்கிறது எண்ட கதைக்கே இடமில்லை.
_______________________________________________

முத்தையன்கட்டு என்று எடுத்துக்கொண்டால் சிறிய இடத்தைத் தவிர மக்கள் நெருக்கமென்பது குறைவு. ஒரு வீதியை மையமாக வைத்து இரண்டொரு கோவில்கள், சில கடைகள், அத்தோடு இணைந்த சில வீடுகள் என்று சனம் நெருக்கமாயுள்ள சிறிய பகுதியுண்டு. மற்றும்படி வயல்களையும் தோட்டங்களையும் வாய்க்கால்களையும் மையமாக வைத்து மிகமிக ஐதான சனப்பரம்பலுடைய இடம் அது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கணிசமான யாழ்ப்பாணத்தவர்கள் ஊர் திரும்பியதால் இன்னுமின்னும் ஐதாகிக்கொண்டு வந்தது அவ்விடம்.

முத்தையன்கட்டுக் குளத்தின் துலுசுக் கதவுகள் பழுதடைந்து பெருமளவு நீர் ஆண்டுமுழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டிருந்தாலும் சிறுபோக நெல்விளைச்சலுக்கோ தோட்டப் பயிர்ச்செய்கைக்கோ வஞ்சகம் இல்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருந்தது முத்தையன்கட்டுக்குளம். அக்குளத்தின் கீழான நூறுவீத விவசாய நிலங்களும் பயிச்செய்கைக்குப் பயன்படுத்தப்படவில்லையென்பதும் ஒரு காரணம்.

[முத்தையன்கட்டுக் குளத்தின் ஒருபகுதியின் பின்னேரத் தோற்றம்.]

மாரிகாலத்தில் குளம்நிரம்புவதால் நீர் வெளியேற்றப்படும்போதும் சிறுபோகத்தின்போது நீர் வெளியேற்றப்படும்போதும் முத்தையன்கட்டுக்குளத்தின் வாய்க்கால்களில்தான் பெருமளவு மக்களின் குளிப்பு. சிறுவர் சிறுமிகளுக்கு அது பெரும் கொண்டாட்டம். பெரியவர்கள்கூட அவ்வாய்க்காலில் குளிப்பதே வழக்கம். முத்தையன்கட்டுக்குளத்திற்கு இரு பெரும் வாய்க்கால்கள். இடதுகரை, வலதுகரை என்று பெயர்கள்.

[முத்தையன்கட்டு வாய்க்கால்]

அவ்வாய்க்கால்கள் பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இடையிடையே பல சிறுகுளங்களை நிரப்பியபடியே போகின்றன. இக்குளங்களைவிட வாய்க்கால்களின் இடையில் நீர் தேங்கி நிற்கும் அகண்ட பரப்புக்கள் வரும். அவற்றை "மோட்டை" என்றுதான் சொல்வார்கள். யாரும் 'குளம்' என்று சொல்வதில்லை. யாழ்ப்பாணத்திலென்றால் அவையெல்லாம் குளங்கள்தாம். ஆரியகுளம் அளவுக்கு நீர் தேங்கிநின்றாற்கூட அவை மோட்டை என்றுதான் அழைக்கப்படுகின்றன.

பெருமளவு நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் 'சேறடித்து' விதைக்கப்படுவன. 'சேறடிப்பு' என்றுதான் அச்செயற்பாடு மக்களாற் குறிப்பிடப்படுகிறது. அதாவது வயலில் பலநாட்கள் நீரைத் தேக்கிவைத்து, புற்களை அழுகவிட்டு, பின் உழுது சேறாக்குவார்கள். கறுத்த நிறத்தில் குழாம்பாணியாக இருக்கும். குறைந்தபட்சம் முக்கால் அடி ஆழத்துக்குப் புதையும்வகையில் வயல்நிலம் கறுப்பு நிறத்தில் கூழாக்கப்பட்டிருக்கும். பின் விதைநெல்லைத் தூவிவிடுவார்கள்.

இதற்கு எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் உழவு இயந்திரத்தைப் பாவிப்பார்கள். எருமையால் உழுவதெல்லாம் எங்களுக்குப் புதிது. (எருமையே எங்களுக்குப் புதுசுதானே?) எருமைகளை நினைத்து ஆச்சரியப்பட்டுவதுண்டு. அந்தச் சேற்றுக்குள் எங்களால் நடக்க முடியாது. உழுபவர் சேறடிக்கும் கலைப்பைக்கு மேல் ஏறிநின்றுகொள்வார். சாதாரண கலப்பையிலிருந்து இது வேறுபட்டது. நல்ல அகலமானது. உழுபவர் கையில் ஒரு வானொலிப்பெட்டியோடு அவர் சங்கமமாகிவிடுவார். எருமைகள் அவைபாட்டுக்குச் சுத்திச்சுத்தி இழுத்துக்கொண்டிருப்பினம்.

புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில மன்னாகண்டல் சந்தி எண்டு ஒரு சந்தி இருக்கு. அதிலயிருந்து ஒருபாதைமுத்தையன்கட்டுக்கு வருது. அந்தச் சந்தியில இருந்து குளத்துக்கு வரேக்க பாதையின்ர வலப்பக்கம் குளத்தின்ர இடதுகரை வாய்க்கால் வந்துகொண்டிருக்கும். வாய்க்காலை அடுத்து பெருங்காடு. இடைக்கிடை நாலைஞ்சு மோட்டைகளும் இருக்கு. இடப்பக்கம் வயல்வெளிகள். வாற பாதையில பாத்துக்கொண்டுவந்தா பகல் நேரத்தில வலப்பக்கம் இருக்கிற வாய்க்காலுக்க மூக்கை மட்டும் வெளிய நீட்டிக்கொண்டு எருமைகள் கூட்டம்கூட்டமாப் படுத்திருக்கும். இரவில அப்பிடியே ஏறி பாதையில படுத்திருக்கும். எங்க மேயுது, எப்ப மேயுது எண்டு தெரியாது.

முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் நெல்தான் முதன்மையானது. பெரும்போகம் சிறுபோகம் என இருபோகங்களும் விதைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைவிட தோட்டப்பயிர்ச்செய்கையுமுண்டு. சில மேட்டுநிலங்களில் நீரிறைப்பு இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து நீரிறைத்துத் தோட்டம் செய்வார்கள். பெரும்பாலான மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்படும்.
நெல்லுக்கு அடுத்தபடியாக என்றுபார்த்தால் கச்சான் (வேர்க்கடலை) செய்கையைச் சொல்லலாம். சிறுபோகத்திலேயே பெருமளவு கச்சான் செய்கை பண்ணப்படுகிறது. அடுத்த நிலையில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது எனலாம்.

ஏற்கனவே சொன்னதுபோல வீதியின் ஒருபுறம் பிரதான வாய்க்காலும் மற்றப்பக்கம் பயிர்ச்செய்கை நிலங்களும் இருக்கின்றன. வீதியின் இடையிடையே குழாய்கள், மதகுகள் மூலம் நீர் வீதியைக்கடந்து பயிரிச்செய்கை நிலப்பக்கம் போகிறது. ஆனால் சில இடங்கிளில் அந்த வசதி சரியான முறையில் இல்லை. அந்த நிலக்காரர்கள் நேரடியா வீதியைக்கடந்து நீரை எடுக்க வேண்டும். வீதியோ வாய்க்காலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட்து. குழாயும் வீதியின் மேலாகத்தான் செல்ல வேண்டும்.
ஆனால் வாய்க்காலின் நீர்மட்டம் வயற்பகுதியைவிட உயரமாகவே இருக்கும்.இந்த இடங்களில் இயந்திரமில்லாமல் நீர்ப்பாசனம் செய்வதைப் பார்ப்பது சுவாரசியமானது.

வளையக்கூடிய குழாய்முழுவதும் நீரை நிறைத்துவிட்டு இரு முனைகளையும் பொத்தியபடி ஒருவர் வாய்க்காலிலும் மற்றவர் வீதியின் மறுபக்கம் வயற்பகுதியிலும் நிற்பார்கள். வாய்க்காற்பக்கமுள்ளவர் நீருக்குள் குழாய் முனையை அமிழ்த்தியபின் ஒன்று, இரண்டு, மூன்று என்று கத்தி கையை எடுப்பார். அதேநேரம் மறுபக்கத்தில் இருப்பவரும் கையை எடுக்க வேண்டும். வாய்க்கால் நீர் தொடர்ச்சியாக குழாய்வழியாக வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் நீர் தொடர்ச்சியாக வெளியேறாது.
சிலர் இதில் தேர்ச்சியானவர்கள். முதல்முறையிலேயே சரியாகச் செய்துவிடுவர். சிலருக்கு நாலைந்து தடவைகள் எடுக்கும்.

நாங்கள் சிலர் பொழுதுபோக்காக இதைச் செய்து பார்ப்பதுண்டு. ஒருமுறை அரைமணித்தியாலம் முயன்றும் சரிவரவில்லை.
என்ன சிக்கலென்றால் ஒருமுறை பிசகினாலும் பிறகு குழாய் முழுவதும் (கிட்டத்தட்ட இருபத்தைந்துஅடி நீளம்) நீரை நிரப்பித்தான் அடுத்த தடவை முயலவேண்டும்.
___________________________________________
முத்தையன்கட்டில இருக்கிற இன்னொரு தொழில் மீன்பிடிக்கிறது. பலருக்கு அது முழுநேரத் தொழில். எங்களப்போல ஆக்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு. அதுபற்றியும் இன்னும் சிலதுகள் பற்றியும் இன்னொருக்கா...
___________________________________________

படங்கள்: அருச்சுனா தளம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (21 October, 2006 17:51) : 

எழுதிக்கொள்வது: கானா.பிரபா

படங்களும் பதிவும் அருமை, நினைவுகளின் தொடர்ச்ச்சியைக் காண ஆவல்.

கானா.பிரபா

18.12 21.10.2006

 

said ... (21 October, 2006 19:23) : 

வசந்தன் நல்ல ஒரு பதிவு. ஒரே ஒரு முறை முத்தையன் கட்டு குளத்துக்கும் அதை அண்மித்த தோட்ட நிலங்களுக்கும் போய் இருக்கிறேன்.மனதை கவர்ந்த இடம்.

உங்கள் விளம்பர பக்கங்கள் இணைக்கும் போது ஏற்பட்ட தவறால்?? அளவுக்கு அதிகமாக இடத்தை பிடித்து எழுதிய விடயத்தை கேழே தள்ளி விடுகிறது. அதை கவனிக்க கூடாதா??

 

said ... (21 October, 2006 20:27) : 

எழுதிக்கொள்வது: அன்புடன் சாதாரணன்

வசந்தன் நல்லா எழுதியிருக்கிறீர். எண்டாலும் இன்னொருக்கா உம்மட குரலில் கேட்கவும் விருப்பமாக இருக்குது. ஊரிலை இருக்கேக்கை தவறவிட்ட விசயங்களை உம்மட எழுத்திலும் குரலிலும் கொஞ்சமாவது தரிசிக்கமுடியுது.

20.34 21.10.2006

 

said ... (21 October, 2006 23:03) : 

வசந்தன்!
சரியாச் சொன்னீர்! யாழ்ப்பாணத்தில் மாடு கன்று போடுவது!! புதினம் தான் ,வன்னியில பத்தோடு பதினொண்டு,,, மிக அருமையாகச் சொல்லுகிறீர். இந்த மாட்டுத் தொல்லையை முதல் பஸ்சில் வந்தால் அனுபவிக்கலாம்.
யோகன் பாரிஸ்

 

said ... (22 October, 2006 19:04) : 

பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குழைக்காட்டான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எனது கணிணியில் எல்லாம் சரியாகத் தெரிகிறது. உலாவிகள்கூட மாற்றிப்பார்த்தேன். ஒரு பிரச்சினையுமில்லை.

சரிசெய்ய முயற்சிக்கிறேன்.

 

said ... (23 October, 2006 00:15) : 

சாதாரணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முழுப்பதிவுக்குமே என்னைக் கதைக்கச் சொல்லுவியள் போல கிடக்கு.

யோகன்,
உங்களுக்கும் மாடுகள் றோட்டை மறிச்சு நிண்ட அனுபவம் இருக்கா?

 

said ... (23 October, 2006 10:27) : 

நல்ல பதிவு.
தொடர்ச்சியை எதிர்பாக்கிறோம்.
மற்றதை உங்கட குரலில் தரவும்.

ஜெகன்.

 

said ... (23 October, 2006 14:21) : 

ஜெகன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (25 October, 2006 17:16) : 

வசந்தன்
நல்ல நினைவுப் பகிர்வும், ஒப்பீடும்.
யாழ்ப்பாணத்தில் ஆடு குட்டி போடுவதும்... கடும்புப் பாலம். விசேசமனாவைதான்.

குட்டி ஈன்றதும் உடனே குட்டியைத் தூக்கி கால் நகங்களை அம்மா அல்லது அம்மம்மா வெட்டி விடுவார்கள். அது நகம் அல்ல. வேறு ஏதோ ஒரு பெயர். நினைவில் வரவில்லை. வெட்டா விட்டால் குட்டி வளர்ந்த பின் அது அழகில்லாமல் இருக்குமாம். அப்பா கேட்பார் "காட்டுக்குள் ஈணப்படும் குட்டிகளக்கெல்லாம் யார் வெட்டி விடுவது என்று."

 

said ... (26 October, 2006 21:10) : 

வசந்தன்!

முத்தையன்கட்டுப் பற்றிக் கதைக்க எனக்கும் சிலவுண்டு. தற்போது நேரம் பற்றாக்குறையாகவுள்ளது. விரைவில் தொடர்வேன்... நன்றி!

 

said ... (27 October, 2006 22:22) : 

சந்திரவதனா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (28 October, 2006 16:02) : 

மலைநாடான்,
வருகைக்கு நன்றி.
நீங்களும் பதியுங்கள் உங்கள் அனுபவங்களை.

 

said ... (10 November, 2006 20:44) : 

சந்திரவதனா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (08 February, 2007 14:09) : 

நினைவுகளைக் கிளறிய பதிவு வசந்தன். நான் திருவையாறு மற்றும் உருத்திரபுரத்தில் இருந்திருக்கிறேன். நல்ல வளமான பூமி அது. வாய்க்காலைப் பாக்க இறங்கி காலை நனைச்சுக்கொண்டு நிக்கவேணும் போலை கிடக்கு(எனக்கு நீச்சல் தெரியாது)ஒப்பனைகளற்ற நல்ல வர்ணனை.

 

said ... (09 February, 2007 12:14) : 

தமிழ்நதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பின்னூட்டமிட்டு இப்பதிவை நினைவுபடுத்திவிட்டீர்கள்.
இன்னும் சில எழுதுகிறேன்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________