Tuesday, October 03, 2006

அழியா வரம் பெற்ற இலக்கியங்கள்

த.சிவசுப்பிரமணியம்-
~~~~~~~~~~~~~~~~~~

தினக்குரல் வாரப் பத்திரிகையில் வந்தது இக்கட்டுரை.
தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் வருகின்றன. பயன்கருதி படியெடுக்கப்பட்டு இங்கே பதிவாக்கப்படுகிறது.

_____________________________________________________________
மக்களால் மதிக்கப்படுகின்ற எழுத்தாளர்களுடைய நூல்கள் எந்தமொழியில் வெளிவந்தாலும் அவற்றைத் தேடி வாங்கிப் படிப்பதும், புரியாத மொழியாயின் அவற்றின் மொழிபெயர்ப்புகளை தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதும் அரங்கேறிய நிகழ்ச்சிகள். இவை இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப் பசிக்குத் தீனியாக மட்டுமன்றி, அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டுபனவாக நெறிப்படுத்தியுள்ளன. ரஷ்ய, சீன, ஆங்கில எழுத்தாளர்களுடன் இந்தியாவின் வங்காளம், மலையாளம், இந்தி, தமிழ் எழுத்தாளர்களும் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். ரஷ்ய எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற எழுத்துகளால் போராட்ட உணர்வுகளை ஏற்படுத்தி ரஷ்யப் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார்.

`செம்மீன்' என்றால் தகழி சிவசங்கரப்பிள்ளை இலக்கிய உலகில் பேசப்படும் ஒரு எழுத்தாளராக மிளிர்கின்றார். அவருடைய செம்மீன் நாவலும் அக்கதையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் அவருடைய பெருமைக்குச் சான்று. மலையாள இலக்கியப் பரப்பில் கொடிகட்டிப் பறந்தவர். அத்தகைய எழுத்தாளரின் சில பதிவுகளைத் தருவதற்காக இக்கட்டுரையை எழுத முனைகின்றேன்.

கேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக் கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் தகழி என்ற சிறிய கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய சிவசங்கரப்பிள்ளை அம்பலப்புழை நடுத்தரப்பள்ளியிலும், கருவட்டாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிக் கல்வி முடிந்ததும் திருவனந்தபுரம் சென்று சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். வக்கீலாக வெளிவந்த அவர் தனது தொழிலை ஆலம்புழையில் இருந்து நடத்தினார்.

கமலாட்சி அம்மாவைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். தனது பெயருடன் தனது ஊரின் பெயரையும் சேர்த்து தகழி சிவசங்கரப்பிள்ளை என்று நாமம் பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தன்படைப்புகளில் தகழி அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது.

தகழி சிறுவயதில் இருந்து கவிதை எழுதிவந்தார். பெரும்புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளையிடம் தகழிக்குத் தொடர்பு ஏற்பட்டது. தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர் விடுகிறது என்பதை உணர்ந்து குமாரப்பிள்ளை அவரை வசனத்துறைக்குத் திருப்பி விட்டார். சட்டக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஏ.பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் சேர்ந்து கொண்டார். `கேஸரி' இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை இலக்கியம், அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்து கருத்துகளைப் பரிமாறச்செய்து அறிவுத் தளத்தை விசாலமாக்கினார். இந்தச் சூழ்நிலையில் தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. மார்க்கஸ் புரூட் உட்பட ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். `வெள்ளத்தினிடையே', `அழகுப் பாப்பா' ஆகிய அவரது கதைகள், அவர் ஒரு புனைக்கதை ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தன.

தகழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான `புதுமலர்' 1934 இல் வெளிவந்தது. அது உடனேயே பிரபல்யம் பெற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல்நாவல் `பிரதிபலம்'(கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலே பிரதிகள் முற்றும் விற்றுப் போய்விட்டன. அதே ஆண்டு `பதிதபங்கஜம்' எனும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. தொடர்ந்தும் அவரது எழுதுகோல் பல கதைகளைத் தீட்டியது. `அடியொழுகல்', `நித்திய கன்னிகை', `ஸங்கதிகள்' என்பவை குறிப்பிடத்தக்கன. இக்கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவையாகவும் இடதுசாரி அரசியல் சார்பு கொண்டவையாகவும் இருந்தன. மலையாள இலக்கியம் வசதியுள்ள நடுத்தரக் குடும்ப வாழ்க்கையோடு பின்னப்பட்டிருந்த காலத்தில், துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தகழியும் அவர் சாந்தவர்களும் வாழ்க்கையின் சகல துறைகளிலுமுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் சுக துக்கங்களைப் பற்றியும் குறிப்பாகக் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அவலங்களைப் பற்றியும் தம் படைப்புகளில் எடுத்துக் கூறினார்.

பெரும் காட்டுத்தீபோல நாடுமுழுவதும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் இணைந்து கொண்டார். இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. திருச்சூர் அருகேயுள்ள தடக்கன்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் 1947 இல் `தோட்டியுட மகன்' நாவல் வெளிவந்தது. ஒரு தோட்டியின் வாழ்க்கையை தத்ரூபமாகச் சித்தரிக்கும் இக்கதை படிப்பவர் மனம் நொந்து போகும் அளவுக்கு வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். இக்கதை மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. அந்தளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது என்று `செம்மீன்' நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் நாராயனமேனன் `தோட்டியுட மகன்' குறிப்பிடும் அதேவேளை, இக்கதையை மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி இக்கதை தொடர்கதையாக `சரஸ்வதி' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். தகழி சிவசங்கரப்பிள்ளையின் `தோட்டியுட மகன்' என்னும் மலையாள நாவல் தமிழில் `தோட்டியின் மகன்' என்று முதற்பதிப்பு ஆகஸ்ட் 2000த்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வைத்தது.

தகழி சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட மக்களின் அவலங்களை அவர்களின் போராட்டங்களை கஷ்ட துன்பங்களை தமது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். `இரண்டிடங்கழி' (இரண்டுபடி) என்ற நாவல் 1948 இல் வெளியாயிற்று. "ஒரு குடியானவன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளியிடுகிறேன்' என்று தகழியே கூறியுள்ளார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது. இந்நாவல் `இரண்டுபடி' என்ற பெயரிலும் தமிழிலும் வெளிவந்துள்ளது. `இரண்டிடங்கழி' என்னும நாவல் பண்ணையில் தொழில் புரியும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கீழ்த்தரமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் நிலச்சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. எழுத்தாளரின் மனிதநேயம் தெரிகிறது.

`இரண்டிடங்கழி' நாவலைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. சுமார் நாற்பது நாவல்களும் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் அநேகமான படைப்புகள் இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1956 இல் வெளிவந்த `செம்மீன்' இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. இந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டமையால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. சினிமா சாதாரண மக்களையும் சென்றடையக் கூடிய சாதனமாக இருந்தமையால் செம்மீன் பற்றி பட்டிதொட்டிகளெல்லாம் பேசப்பட்டன. தகழி கடலோர மக்களின் வாழ்க்கையை அனுபவ ரீதியாக அறிந்து அவர்களின் மொழிநடை, பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், செயற்பாடுகள், பந்தபாசங்கள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கிய நாவலை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த நாவலில் யதார்த்தப் பண்புகள் மேலோங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இது ஒரு காதல் கதையாக இருந்தபோதிலும் ஒரு மீன்பிடிக் கிராமத்தினுடைய கொடிய வறுமை, அயரா உழைப்பு, எளிமை வாழ்வு என்பவற்றை நேரில் சென்று தரிசித்த ஒரு படைப்பாளியால் தான் இத்தகைய மனதை நெருடும் ஆக்கத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் தகழி வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். கடின உழைப்பு மிக்க நற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள் எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினார் என்பது ஆசிரியரின் மனத்தை ஈர்த்த விடயம்.

காதல் வயத்தால் அதிக ஆசை பிடித்து அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லிம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால், அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். அன்றைய சமுதாய அமைப்பு அப்படித்தான் இருந்தது. சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவையாக இருந்த காலம். பரீக்குட்டியிடமிருந்த தன் நினைவை கறுத்தம்மாவால் அகற்ற முடியவில்லை. வசந்த நாளில் தானே மலரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ணம் அவர்கள் காதல் மலர்கிறது. இருந்தும் கறுத்தம்மா தனது சமுதாய வழக்கப்படி மௌனமான சோகத்துடன் ஒரு இளம் மீனவனைக் கணவனாக ஏற்கிறாள். தனது மனப்போராட்டங்களுக்கு மத்தியிலும் கறுத்தம்மா கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ எவ்வளவோ முனைகின்றாள். இந்த மனப்போராட்டங்களை விவரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்தம்மாவின் வாழ்வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே வருகின்றது. கடைசியில் கறுத்தும்மாவினதும் பரீக்குட்டியினதும் சோக முடிவு தத்துரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் செம்மீனின் கதையின் களம்.

இருபது நாட்களுக்குள் இந்த நாவலை எழுதி முடித்தார் தகழி. எளிய கதாபாத்திரங்களையும், சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன் யூனஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளைக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பை சுந்தரராமசாமி செய்துள்ளார்.

கேரள சமூகத்தில் தோட்டி, குடியானவன், மீனவன் என்று தாழ்த்து ஒதுக்கிய சிறு சிறு இனங்களின் வாழ்க்கைக் கருவூலங்களை வெளிக்கொணர்ந்த தகழி 1959 இல் எழுதிய "ஒஸப்பின் மக்கள்" என்னும் நாவலை வெளியிட்டார். இந்நாவலில் கேரள நாட்டுக் கிறிஸ்துவக் குடிமக்களின் வாழ்வை விளக்குகிறார். தெளிந்த ஓட்டமும், வேகமும், சிருஷ்டித் திறனும் கொண்ட தகழி மக்கள் எழுத்தாளராகவே இனங்காணப்படுகின்றார்.

1965 ஆம் ஆண்டு தகழியின் `ஏணிப்படிகள்' கேரள சாகித்திய அக்கடமி பரிசையும், 1980 இல் `கயிறு' என்னும் நூல் வயலார் நினைவுப் பரிசும் பெற்றது. 1984 ஆம் ஆண்டு ஞானபீடப் பரிசும், 1985 இல் பத்மபூஷன் விருதும் கிடைத்தது. கேரளப் பல்கலைக்கழகமும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் டி.லிட் பட்டம் அளித்துள்ளன.

மக்களின் ஏற்றத் தாழ்வுகளில் இருக்கக் கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும் உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளன் 1999 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய இலக்கியங்கள் அழியாவரம் பெற்று இன்றும் மக்களால் மதிக்கப்படுகின்றன.

_________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

_____________________________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"அழியா வரம் பெற்ற இலக்கியங்கள்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 October, 2006 14:31) : 

எழுதிக்கொள்வது: கானா.பிரபா

கேரளத்தின் எழுத்தாளர் பலர் தம்மூர்ப்பெயரோடு தம்பெயரினையும் இணைப்பது வழக்கம். இவரும் அப்படித்தான். கேரள மக்களும் அரசும் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதையே தனி. தகழி என்ற இவர் பிறந்தகம் இப்போது நினைவிடமாக்கப்பட்டிருக்கிறதாம். ஆலப்புழா அருகே உள்லது. அடுத்தமுறை செல்லும் போது பார்க்கவேண்டும்.

கானா.பிரபா

14.51 4.10.2006

 

said ... (04 October, 2006 15:54) : 

எழுத்தாளர்களுக்கு மலையாளமும் வங்கமும் தரும் மதிப்பே தனி. வீண்கூச்சல்களும் எழுத்தாளர்கள் போடுவதில்லை. கருத்தியல் வாதங்கள் ஆனால் இருக்கும்.

தகழியின் செம்மீனைத் தமிழில் சுந்தர ராமசாமியின் உதவியோடு வாசித்திருக்கிறேன். ஒன்பதாவது...இல்லை பத்தாவது படிக்கையில். அந்த வயதில் நான் படித்து என்னைக் கவர்ந்த இரண்டு நாவல்கள் செம்மீனும் பொன்னியின் செல்வனும்.

ராமு கரியத்தின் இயக்கத்தில் திரைப்படமாகவும் பார்த்திருக்கிறேன். இன்று கூட தொலைக்காட்சியில் "மானச மைனே வரு" பாடலைப் பார்த்து ரசிக்க நேர்ந்தது.

சிலதுகள் காலம் மாறினாலும் ருசியாகத்தான் இருக்கிறன. கருவாடு போல ஊறுகாய் போல தேன் போல.

 

said ... (04 October, 2006 19:53) : 

//இதன் தமிழ் மொழி பெயர்ப்பை சுந்தரராமசாமி செய்துள்ளார்//

சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பு (1964 பதிப்பு) வைத்திருக்கிறேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கும் எண்ணத்தைத் தூண்டி விட்டுள்ளது இந்தப் பதிவு. நன்றிகள்.

 

said ... (05 October, 2006 08:48) : 

கானா பிரபா,
இராகவன்,
கனகர்,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

 

said ... (05 October, 2006 11:09) : 

எழுதிக்கொள்வது: கார்திக்வேலு

காலத்தில் நிலைத்து நிற்கும் படைப்புகள்.
தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வசந்தன்.

11.26 5.10.2006

 

said ... (05 October, 2006 19:01) : 

எழுதிக்கொள்வது: johan-paris

வசந்தன்!
தகழியின்; புத்தகமெதுவும் வாசிக்கக் கிடைக்கவில்லை. செம்மீன் படம் மூலமே அவர் அறிமுகம்;தங்கள் பட்டியல் பார்த்து தேடிப்படிக்கும்(கிடைத்தால்) என்ணம் உண்டு.
தகவில் பகிர்வுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

11.20 5.10.2006

 

said ... (06 October, 2006 00:30) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

வசந்தன் செம்மீன் போலவே தகழியின் தொட்டியின் மகனும் நல்லதொரு நாவல் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்திருக்கிறார்.

22.47 12.8.2006

 

said ... (06 October, 2006 09:26) : 

கார்த்திக் வேலு,
யோகன் பாரிஸ்
ஈழநாதன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________