Sunday, August 10, 2008

தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை

2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் இக்கவிதை மீள இடப்படுகிறது.
==============================

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்துவலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன்
கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை
விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று
இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை
அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல
விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி
ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இஃது
எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;
இன்றைய நாளினை நினைவிலே
வைத்துக்கொள்ளமட்டும்
எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the
race. They sent me to finish the race."


- During
1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen
Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place
winner.

மூலவிடுகை எழுதப்பட்டது: 12/17/2004 01:53:00 AM
===============================

எம்மைப் போன்றோர்க்குப் பொதுவான கனவு.
வாசிக்கும்போதே விளங்கியிருக்கும்; இக்"கவிதை" என்னால் எழுதப்பட்டதன்று.
இச்சொற்கூட்டச் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன?

முன்பொருநாள் படியெடுத்துச் சேமித்து வைத்திருந்ததைப் பதிந்திருக்கிறேன். விரைவில் மூலவிணைப்பை வழங்குகிறேன்.

===============================

மீளிணைப்பு:

மேற்கண்ட கவிதையின் மூலவிணைப்பு:
http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, May 27, 2008

'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்

"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" என்ற தலைப்பில் முன்பொரு இடுகை இட்டிருந்தேன்.
அவ்விடுகைக்கு அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்லானி பின்னூட்டத்தில் பதிலளித்திருந்தார்.

அப்பதிலை இங்குத் தனியிடுகையாக இடுகிறேன்.
இது அவ்வியக்குநருக்கு நானளிக்கும் மரியாதை எனக்கொள்க.

முந்திய இடுகையில் அப்படம் தொடர்பில் நான் குறிப்பிட்ட சில குறைபாடுகள் தொடர்பான விளக்கத்தை இயக்குநர் அளித்திருந்தார்.

விளக்கத்துக்கு நன்றி ஜெய்லானி.
உங்களின் திரைத்துறைப் பயணம் மேலும் சிறக்க ஓர் இரசிகனாக எனது ஆசிகள்.

இனி இயக்குநர் ஜெய்லானியின் பதில்.


Jailani(Director) said ... (19 May, 2008 03:09) :

வசந்தன், கேள்வி சரிதான்:-)
நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.

மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.

//"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."//

இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

//"ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்?"//

இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.

இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)

//"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)
"//


:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.

//"ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."//

படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, March 24, 2008

அஞ்சாதே - கோமாளித் திரைக்கதை?

அண்மையில் 'அஞ்சாதே' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளிவந்திருந்தது. அதைப்பற்றி பலரும் சிலாகித்து எழுதியிருந்தார்கள். நானும் படம் பார்த்தேன்.
பார்த்து முடித்தபின் மனதுள் ஒரு கேள்வி வந்தது. நாயகன் விடும் தவறொன்றை மையமாக வைத்து எந்தக் கேள்வியுமின்றிக் கதையை நகர்த்தியிருக்கிறார்களே என்று. தமிழ்த்திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் ஏதாவது கோமாளித்தனமாக செய்தாக வேண்டுமென்ற புரிதல் இருந்தாலும் பலரும் தலையில் தூக்கிவைத்து ஆடிய இப்படத்திலுமா என்ற கேள்வி வந்தது.

படத்தில் நரேன் காவல்துறையினனாக ஆகிறான். தொடக்கத்தில் அத்தொழிலை விருப்பமின்றிச் செய்கிறான். இரத்தத்தைக் கண்டால் பயம்; கொலையைக் கண்டால் பயம் என்றிருக்கும் நரேன் ஒருசந்தர்ப்பத்தில் அப்பயங்களையும், அருவருப்பையும் தூக்கியெறிந்து செயற்படுகிறான். திரைப்படத்தின் மிகமுக்கிய திருப்பமாக நான் கருதுவது அதைத்தான். ஏற்கனவே தாக்கப்பட்டிருக்கும் ஒருவனைப் பாதுகாக்கச் செல்லுமிடத்தில் இத்திருப்பம் நடக்கிறது.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை (பார்த்தீபன்?) வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். அவனுக்குப் பாதுகாப்பாக நரேனும் இன்னொருவரும் செல்லும்போது அங்கே அவனைக் கொல்ல நாலுபேர் வருகிறார்கள். நால்வரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.
'அவன போடுறதுக்கு வந்திருக்காங்க.. வா நாம போய் ஒரு ரீ குடிச்சிட்டு வந்திடலாம்' என்று நரேனை அழைக்கிறார் மற்றவர். நரேன் போகவில்லை. துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி கொலை செய்யவந்தவர்களை மிரட்டுகிறார். அதற்கு நால்வரில் தலைவன் ஏதோ சொல்கிறான் (மிரட்டவில்லை). பிறகு கையிலிருந்த துப்பாக்கியைக் கீழே போடுகிறார் நரேன்.

திடீரேன தான் முன்பு தெருரெளடியாக இருந்தது ஞாபகம் வந்தோ என்னவோ செயற்படத்தொடங்குகிறார் நரேன். அந்தக்காலத்தில் செய்தது போலவே வாய்க்குள் எதையோ போடுகிறார், உடம்பைக் குலுக்கி ஒரு துள்ளுத் துள்ளுகிறார், 'என்னை செஞ்சிட்டு அவனச் செய்யுங்கடா' என்று சொல்லி அவர்களைச் சண்டைக்கு அழைக்கிறார்.

முகமூடியோடு வந்தவர்கள் கையில் கத்தியோடு ஒவ்வொருவராக நரேனிடம் வந்து அடிவாங்கிப் போகிறார்கள். அவர்கள் ஓடக்கூட இல்லை. இயல்பாக நடப்பதைவிடவும் மெதுவாகவே நடந்து போகிறார்கள். நால்வரும் தனித்தனியாக அடிவாங்கியபின் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்கிறார்கள்.

அவர்களில் ஒருவனையாவது பிடித்து முகமூடியைக் கழற்றி முகத்தைப் பார்ப்பதோ, ஏன் பிடித்துக் காவல்நிலையம் கொண்டுவருவதோ இயலாத காரியமன்று. 'திரைப்பட நாயகனை'த் தவித்த்து நூறுவீதமான காவல்துறையினரும் செய்திருக்கக் கூடியதும் அதுவேதான். ஆனால் பார்வையாளருக்குத் 'திருப்பத்தை'க் கொடுக்க நினைத்தோ என்னவோ மிஷ்கின் அப்படிச் செய்யவில்லை.

அதன்பிறகு நடப்பதுதான் நகைச்சுவையே.
நரேனை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். காவல்துறையில் அவர் புகழ் பரவுகிறது. குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் சிறப்பாக நியமிக்கப்பட்ட பொன்வண்ணன் நரேனைத் தனக்குத் தரும்படி கேட்டுப் பெறுகிறார். அவர்களின் உடனடி வேலைத்திட்டம் என்னவென்றால் நரேனிடம் அடிவாங்கியவர்களைப் பிடிப்பது. அதுவும் எப்படி? நரேன் அடித்த சம்பவத்தில் ஒருவன் பேசினான் அல்லவா? அவனுடைய குரலை நரேனைக் கொண்டு அடையாளப் படுத்த வேண்டும். அதற்காக பொன்வண்ணன் நரேனையும் கூட்டிக்கொண்டு அலைகிறார்.

அடப்பாவிகளா! அண்டைக்கே ஒருத்தனின்ட முகமூடியைக் கழட்டிப் பாத்திருந்தா, ஏன் ஒருத்தனையாவது பிடிச்சுக் கொண்டந்திருந்தா இந்த ஆர்ப்பாட்டம் ஒண்டும் தேவையில்லையே?
சரி, அது நரேனின் தவறாகவே இருக்கட்டும். ஆனால் அத்தவறு குறித்து ஒரு கேள்விகூட நரேனிடம் கேட்கப்படவில்லை. உண்மையில் நரேன் மீது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்; நரேன் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு 'உஷார் மடையனை' ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளியிருக்க எந்த நியாயமுமில்லை.
குறைந்தபட்சம் பொன்வண்ணனாவது இது குறித்து நரேனைக் கடிந்திருக்கும் காட்சியொன்றை வைத்திருக்கலாம்.

'அரண்' என்ற திரைப்படத்திலும் இதுபோல் மிக அற்பத்தனமான காட்சியொன்றை வைத்திருப்பார்கள். நாட்டையே ஆபத்தில் தள்ளக்கூடிய முட்டாள்தனமொன்றை 'ஹீரோயிசம்' என்ற பேரில் நாயகன் செய்துவிட்டு தன்னோடு இருப்பவர்களைச் சாககக்கொடுத்துவிட்டு தன்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். அச்செயல் குறித்த கதையாடல், குற்றவுணர்வு எவையும் படத்தில் இல்லை. "அரண்" பற்றித் தனியாக எழுதிக் கிழிக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~~
இப்படத்தில் உறுத்திய இன்னொரு காட்சி, கரும்புத்தோட்டத்தில் நரேனும் பிரசன்னாவும் சண்டைபிடிக்கும் காட்சி. நகைச்சுவைக்கென தனியாக ஒருகாட்சியும் வைக்கவில்லையென்ற காரணத்தாலோ என்னவொ அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~
இப்படி எழுதுவதால் இது தரமற்ற படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். மற்றவர்கள் எழுதிய பல விடயங்களில் எனக்கு உடன்பாடுண்டு.
இன்னும் சொல்லப்போனா, நாங்கள் மினக்கெட்டு ஓரிடுகை எழுதிறதுகூட அது ஒரு வித்தியாசமான, முக்கியமான படமெண்டபடியாத்தான்.

அதுக்காக, இவ்விடுகையை வைத்து அது தரமான படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். அதுவேறு இதுவேறு. ;-)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, March 15, 2008

கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்

கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது.
ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன்.

அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன்.

படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.

ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து.

தமிழிலே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்புத்தான். (அண்மையில் பாடல்களேயில்லாமல் 'அசோகா' என்றொரு தமிழ்ப்படமும் வந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.)

படத்தின் நாயகன் ஒரு குடும்பத்தலைவன். வில்லன் என்று சொல்ல வேண்டுமானால் காவல்துறையைச் சொல்லலாம்.

படமானது முக்கியமான சிக்கலொன்றை கேள்விக்குட்படுத்துகிறது. அது 'விசாரணை முறை'. படத்தின் அடிநாதமே காவல்துறையினரின் விசாரணை முறைகள் மீதான கேள்விதான். அதை மையமாக வைத்துத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்டத்தில் நாயகன் சொல்வான்:
"விசாரணை என்பது அறிவு தொடர்பானது. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதும் விசாரணை செய்வது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மிருகத்தனமாக எல்லோரையும் போட்டு அடித்து நொருக்குவதற்குப் பெயர் விசாரணை இல்லை. பலர்கூடி பலகோணங்களில் விசாரித்து, தகவல்கள் திரட்டி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் விசாரணை"

மிகமுக்கியமான விவாதமொன்றை எழுப்பியிருக்க வேண்டிய படமானது எதுவுமின்றி படுத்துவிட்டது. திரைப்படத்திலும் இவ்விடயத்தைச் சரியான முறையில் அழுத்தமாகச் சொன்னார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு. 'தமிழ்ப்படம்' பார்க்கிறோம் என்ற உணர்வைக் கழற்றிவைத்துவிடும் ஒருவசதி தேவையென்பதும் முக்கியம்.

இத்திரைப்படத்தில், எதைச்சொல்ல வந்தார்களோ, அதை மட்டும் சொல்கிறார்கள். தேவையற்ற அலட்டல்களில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காவல்துறையின் தலைமை அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகும் நாயகன் அங்குள்ளவர்களைப் பணயக் கைதியாக்குவதோடு படம் தொடங்குகிறது.
தலைமை அலுவலரைக் கட்டிவைத்துவிட்டு தேவையானவர்களை அங்கு வரவழைத்து நாயகனே விசாரணை செய்கிறான். படம் முழுவதும் விசாரணைதான். விசாரிக்கப்படும் ஒவ்வொருவரினதும் வாக்குமூலங்கள் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன.
அப்படி என்னதான் விசாரிக்கிறான்?

குற்றவாளி ஒருவனைப்பற்றி விசாரிப்பதற்காக கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பிரித்துவைத்து விசாரிக்கிறார்கள். கணவனை மிகுந்த சித்திரவதை செய்கிறார்கள். மறுநாள் அவனை விடுவிக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மனைவி குற்றவாளியுடன் ஓடிவிட்டாள் என காவல்துறை
தரப்பிற் சொல்லப்படுகிறது. என்ன நடந்ததென்று எதுவுமே தெரியாதநிலையில்தான் நாயகன் தலைமை அலுவலரின் முன் தனது விசாரணையைத் தொடங்குகிறான்.

இறுதியில் என்ன நடந்ததென்று தெளிவாகிறது. அதற்குள் அவ்வீட்டை சிறப்புப்படை சுற்றிவளைத்துவிடுகிறது. நாயகன் காவற்றுறை அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவற்றுள் முதன்மையானது எல்லாக் காவல்நிலையங்களிலும் வீடியோ கண்காணிப்பு இருக்க வேண்டுமென்பது.

கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்று தெரிவதற்கிடையில் சிறப்புப்படை படத்தை முடித்துவிடுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமர்சனங்கள் இல்லாமலில்லை. விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையோடு சில காட்சிப்படுத்தல்கள் உள்ளதாகப் படுகிறது. நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன. இருந்தாலும் இறுதிவரை படத்தின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. திரைக்கதை ஓட்டத்தின்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும்.

படத்திலிருக்கும் வேறோர் அபத்தம் என்னவென்றால் ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்? ஆனாலும் அந்தக்காட்சி எந்தவிதத்திலும் உறுத்தாத அளவுக்கு திரைக்கதைப் போக்கு இருந்தது என்பது உண்மைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம். (அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)

ஆனால் காட்சிகளில் இருந்து நானொன்றை உணர்ந்துகொண்டேன். அதாவது நாயகனின் விசாரணையில் காவல்துறையினர் யாருமே உண்மை சொல்லவில்லை. எல்லோருமே தாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த அல்லது தான் தப்புவதற்காக அந்தநேரத்தில் தோன்றிய கதையைத்தான் சொல்கிறார்கள். கட்டித் தொங்கவிட்டு அடித்தும்கூட காவல்நிலையப் பொறுப்பதிகாரி தான் தயாரித்து வைத்திருந்த கதையை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்தான். உண்மை படிப்படியாக வெளிவருவது ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் முரண்பட்ட கதைகளிலிருந்துதான். அத்தோடு சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியின் துணையும் சேர்ந்து முழுக்கதையும் வெளிவருகிறது.

ஆக, அடித்துத் துன்புறுத்தினாலும் சரியான உண்மை வெளிவருவதற்கு உத்தரவாதமில்லையென்பதை நாயகன் காவல்துறையினரைத் துன்புறுத்துவதன் ஊடாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இதை பத்திரிகையாளனைக் கொண்டு கேட்கவைத்து நாயகனைக் கொண்டு பதில் கொடுத்திருக்கலாம். (பார்ப்பது தமிழ்ப்படமாயிற்றே. இப்படி வசனங்களை வைத்துப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலைமையிலிருக்கிறோம். நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை 'ஜனங்களின் கலைஞன்' என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்படங்களை விட்டு வெளியில் சென்றால் திரைப்படங்களுக்கான வகைப்படுத்தல்கள் பலவுள்ளன.
Action, Adventure, Comedy, Documentary, Drama, Horror, Romance, SciFi, Fantasy Thriller என்று பலதரப்பட்ட வகைப்படுத்தல்களுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் எந்தத் தமிழ்ப் படத்தையெடுத்தாலும் மேற்படி வகைகளுக்குள் தனித்தனியாக அடக்கமுடியாது. 'மசாலா' என்ற வகைக்குள் மட்டுமே அடக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அனைத்து வகைகளையும் கலந்துகட்டிய ஒரு பொட்டலாம்தான் மசாலா. (தமிழில் வந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் சிலவற்றை மட்டும் விதிவிலக்காக 'நகைச்சுவை' என்ற வகைக்குள் அடக்கலாம்.)
மசாலா என்பதற்கு வெளியில் தனியொரு வகைப்படுத்தலுக்குள் அடக்கக்கூடியதாக மிக அருந்தலாக வந்துள்ள தமிழ்ப்படங்களில் 'கேள்விக்குறி'யும் ஒன்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~


காவல்துறையின் அராஜகப் போக்கு, குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது, பெண்களை நடத்தும் முறை என்பன நாளாந்தம் நாம் அனுபவித்து வரும் நிகழ்வுகளே. அந்நிகழ்வுகளையும் அவற்றால் பாதிக்கப்படும் அப்பாவிகளையும் அவர்களின் பாதிப்புக்களையும் சரியாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படத்தில்தான் இசையமைப்பாளருக்கான பணி சரியாகப் பொருந்திவரும். தமிழ்த்திரைப்படங்களில் இசையமைப்பவர்களுக்கு இருக்கும் முதன்மை நோக்கம் நாலு பாடல்களை வெற்றிகரமாக இசையமைத்துவிட்டால் சரி. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திரைப்பட விமர்சனங்கள்கூட இசையமைப்பைப் பற்றிய குறிப்பில் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவதோடு சரி.
உண்மையில் இசையமைப்பென்பது படத்துக்கான பின்னணி இசைதான். அதில் கவனம் செலுத்த ஏதுவான சூழ்நிலையில் அதிகம் படங்கள் வருவதில்லை. யாராவது மிக நுணுக்கமாக பின்னணி இசை கோர்த்திருந்தாலும் அதுபற்றிப் பேசப்படுவதில்லை. பாடல்கள் "மட்டுமே" இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் காரணியாகவுள்ளன.

இந்நிலையில் ஒரேயொரு பாடலை மட்டுமே கொண்ட இப்படத்தில்தான் இசையமைப்பாளரின் தேவை சரிவர உணரப்பட வாய்ப்புண்டு. அவ்வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் திருப்திகரமாகவே செய்துள்ளார் எனச் சொல்லலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

இறுதியாக,
அண்மையில் வந்தவற்றுள் சிறந்த படமாக எனக்குத் தெரியும் தமிழ்ப்படமிது.
அதிகம் கவனிப்படாமல் போய்விட்டது.

சிறுசிறு விமர்சனங்களைத் தாண்டி இப்படியொரு முயற்சி எடுத்ததற்காகவே பாராட்டப்படவேண்டிய துணிச்சல் இது.
அந்தச் சிறுசிறு விமர்சனங்கள்கூட இப்போதிருக்கும் தமிழ்ச்சினிமா ஓட்டத்தில் பொருட்படுத்தத் தேவையற்றவை.

~~~~~~~~~~~~~~~~~~~~

படத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்.

படத்தின் நாயகன் ஜெய்லானி தான் இப்படத்தின் இயக்குநரும் என அறிகிறேன்.
ஜெய்லானிக்கு உளமார்ந்த வாழ்த்து.

கமரா: கே.வி. மணி.
இசை: சத்யபிரசாத்
Photo: tamilcinema.com

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 22, 2008

ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?

தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன.
அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் நா.கண்ணன் சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள்.
திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார்.
நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.

இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.

நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.

தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் 'அம்மா' பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து.
உண்மைதான்.

தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென 'மங்களகரமாக' வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா.
எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது?
கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் 'அதுவொரு கனாக்காலத்தில்' தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் 'பொல்லாதவனில்' டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.

முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.

ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.

எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா?
இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.

கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)

என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.

இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் 'மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?' என்று ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள்.
அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.

பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~
அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.

முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.

சுரேஸ் கண்ணன் சொல்லும் "டெக்னிகல்" விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.

மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.

ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். 'மார்கழியில் குளித்துப்பார்' என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.

விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் 'கோப்பி வித் அனு' நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். 'எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?' என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், 'பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்' என்று.

மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார்.
இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.

ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 29, 2007

ஓரம்போ !!! - திரைப்படம்

அண்மையில் இப்படத்தைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, பிடித்திருந்தது.

பொதுவாக தமிழ்ச்சினிமாவில் கடுப்பேற்றும் விடயங்கள்,
1. பாடற்காட்சிகள்
2. நகைச்சுவைக் காட்சிகள்
3. சண்டைக்காட்சிகள்.

இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது.
அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை.
வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது.

ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி.

ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை.
பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை.

இப்படி சில 'இல்லாமை'களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன.

படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார்.
அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார்.
வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது.

நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த 'சீத்தா' எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை.
அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது.

அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் - அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் - 'ஆக்ஷன் ஹீரோ' க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் - எதிர்ப்பார்க்கவில்லை.

அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun.
மனிதர் நன்றாக நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சி:
பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன்.

** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் 'பிகிலு' பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது.

*** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு.

அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.

இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன்.
வாழ்த்து.
ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு).

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, November 21, 2007

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.

நிகழ்ச்சியின் பெயர் 'பாமரன் பேட்டை'.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் 'பெயர் மாற்றல் நிபுணர்' இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு 'சிகரம்' தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
'பம்பாய்' என்பதை 'மும்பை' என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்' என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை 'நியு டில்லி' என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்' என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்...
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க...

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
"அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே" என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

'அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?' என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, 'மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்' என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
"அட என்னங்க நீங்க?... இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி."

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
'முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?' என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ... அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, April 18, 2007

ஈழத்துப்படைப்பாளி சந்திரபோஸ் படுகொலை

ஈழத்துப்படைப்பாளியான சந்திரபோஸ் சுதாகர் திங்கட்கிழமை (16.04.2007) இரவு வவுனியாவில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட சுதாகர் சிறந்த படைப்பாளி ஆவார். அதிகமாக கவிதைகளை எழுதிவந்த இவர் 'நிலம்' கவிதைகளுக்கான இதழை வவுனிவாயில் இருந்து வெளியிட்டு வந்தார்.

தொடக்க காலத்தில் 'வெளிச்சம்', 'ஈழநாடு', 'ஈழநாதம்' ஆகிய நாளேடுகளில் பணியாற்றிய இவர், லண்டனில் இருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழை கொழும்பில் இருந்து அதன் ஆசிரியராக இருந்து தயாரித்து வெளியிட்டு வந்தார். வீரகேசரி நாளேட்டிலும் அவர் சிலகாலம் பணியாற்றி வந்தார்.

செய்தி: புதினம்.
______________________________
சந்திரபோஸ் முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இயங்கிவந்தவர். காத்திரமான படைப்பாளி. மிகுந்த தேடலுள்ளவர். வவுனியாவுக்குச் சென்றபின் 'நிலம்' என்ற கவிதையிதழை காலாண்டு இதழாக நடத்திவந்தார்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 05, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...

அண்மையில் மெல்பேணில் நடந்த எழுத்தாளர் விழாவில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவற்றின் முதற்பகுதியை ஒலிப்பதிவாக இங்கு இணைக்கிறேன்.

அன்றைய விழாவில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி கருத்தரங்கில் எஸ்.பொ. அரைமணித்தியாலம் கதைத்தவற்றையே மூன்று பாகங்களாக இங்கு இணைத்துள்ளேன். mp3, rm ஆகிய வடிவங்களில் ஒவ்வொரு கோப்பும் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான ஒலிப்பதிவைக் கேட்கலாம்.



யாருக்காவது ஒலிக்கோப்பைத் தரவிறக்க வேண்டுமானால் கேட்கவும், இணைப்பைத் தருகிறேன்.

ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் சிலவற்றைச் சொல்கிறார். கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதில் சில பெயர்கள் தெளிவில்லை. தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம்.

எஸ்.பொ. அவர்களின் அன்றைய முத்துக்கள் சில:

**ஆறுமுகநாவலரை விடவும் தமிழுக்கு அதிகம் சேவை செய்தது விபுலானந்தர் தான்.

**வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது.
கிழக்கில் போய் உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென்று கேட்டால் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி என்றுதான் பதில்வரும். இவர்களை ஆதர்சமாக வைத்துக்கொண்டிருந்தால் எப்படி உருப்படியான படைப்பை உருவாக்குவது?
(குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேலான மயக்கம் யாழ்ப்பாணத்தாரை விடவும் கிழக்கில் அதிகமா???)

**யாழ்ப்பாண மண்வாசனையைச் சரியாக கதைகளில் கொண்டுவந்த முன்னோடி இலங்கையர்கோன்.
(இவரின் வெள்ளிப் பாதரசம் கதையைச் சிலாகித்தார்)

**எட்டாண்டுகளாக நைஜீரியாவில் எழுத்துலக அஞ்ஞாதவாசம் இருந்த தன்னை மீண்டும் எழுத வைத்தது லெ.முருகபூபதி தான்.

**சிறுகதை இலக்கியம் மீள உயிர்ப்புடன் எழுவது புலம்பெயர்ந்தவரால்தான்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு ஒலிப்பதிவை முழுமையாகக் கேளுங்கள்.
தரமற்ற ஒலிப்பதிவுக்கு மன்னிக்க.

எஸ்.பொ. பேச்சு - பகுதி ஒன்று










எஸ்.பொ. பேச்சு - பகுதி இரண்டு








S.PO.Speech2.mp3





எஸ்.பொ. பேச்சு - பகுதி மூன்று








S.PO.Speech3.mp3




________________________________________________

அன்றைய விழாவில், கருத்தரங்கு முடிந்ததும் கேள்வி - பதில் நேரத்தில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவை, பின்னர் விமர்சன அரங்கு முடிந்ததும் அவர் நிகழ்த்திய பதிலுரை, இறுதியில் பவளவிழாப் பாராட்டு நிகழ்வு முடிந்ததும் அவர் நிகழ்த்திய ஏற்புரை என்பவற்றை அடுத்த பதிவில் ஒலிப்பதிவாக இணைக்கிறேன்.

இவற்றில்,
நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வாசகனை பேப்பட்டம் கட்ட எழுத்தாளராலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தபடும் ஓர் உத்தியேயன்றி வேறில்லை என்ற கருத்தைச் சொன்னதோடு இடையில் எழுத்தாளர் சாருவையும் இழுத்தது;
சாகித்திய மண்டலப் பரிசு தனக்கு இதுவரை கிடைக்காததை வருத்தமாகவோ நையாண்டியாகவோ வெளிப்படுத்தியது;

போன்றவை வருகின்றன.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, January 18, 2007

நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்

பனுவல் -பத்மா சோமகாந்தன்-

தினக்குரல் வாரவெளியீட்டில் வெளிவந்த கட்டுரை பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.

"கோயில்களை மூடுங்கள்" என்ற புரட்சிகரமான தலைப்பில் வெளிவந்த நூலின் ஆசிரியர் பெயர் "கோரநாதன். விஷயத்தின் ஆழத்துக்கேற்ற முறையில் அமைந்த நடையிலான இந்நூல் பெரியார் ஈ.வே.ரா. விடம் கொடுக்கப்பட்டது. அதனை ஆர்வத்தோடு வாசித்து முடித்த ஈ.வே.ரா. பெரியார் இந்நூலின்" சொற்கள் வாணலியில் வறுத்து எடுத்தன போல இருக்கின்றன" என்று சுடச்சுட எழுதப்பட்ட முறையைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்து பாராட்டினார்.

பெரியாருடைய பாராட்டைப் பெறக் கூடிய வகையில் புதுமையாகச் சிந்தித்து புரட்சிகரமாக எழுத்து நடையைக் கையாண்டும், கண்டிக்க வேண்டியவற்றை கடுமையாகவும் நையாண்டியாகவும் நகைச்சுவையாகவும் எழுத்தில் வித்தை செய்யக் கூடியவராகவும், சாதாரண விஷயங்களைச் சொல்லும் போது மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் சிறு சிறு வசனங்களையும் எழுதக் கூடிய வல்லமையைக் கொண்டிருந்தவர் வல்லிக் கண்ணன் என்ற எழுத்துலக ஞானி.

1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இராஜவல்லி புரம் என்ற ஊரில் பிறந்த கிருஷ்ண சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட வல்லிக் கண்ணனின் தந்தையார் மு.சுப்பிரமணிய பிள்ளை. தாயார் மகமாயி அம்மாள். இரு அண்ணன் மாரையும் ஒரு தம்பியாரையும் உடன் பிறப்புகளாகக் கொண்டிருந்த கிருஷ்ண சாமி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஓரிரு வாரங்கள் சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பூரண சுகமடைய முடியாமல் இயற்கையெய்தினார்.

தனது பதினேழாவது வயதில் "இதய ஒலி" எனும் கையெழுத்துப் பிரதியொன்றை தானாகவே ஆரம்பித்து நடத்தி எழுத்துலகில் காலடியைப் பதிக்கத் தொடங்கிய வல்லிக் கண்ணன் என்ற புனைப் பெயரைச் சுமந்து கொண்ட கிருஷ்ண சாமி இரு வருடங்களின் பின்னர் `பிரசண்ட விகடன்' என்ற பத்திரிகையில் `சந்திர காந்தக்கல்' என்ற தனது முதலாவது சிறு கதையை வெளியிட்டு தனது எழுத்திற்கான அங்கீகாரத்தைப் பதிவு செய்து கொண்டார்.

ஆக்க இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் பிடரியைப் பிடித்துத்தள்ளவும் படைப் பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பத்திரிகை சிறு சஞ்சிகைகள், கதை, கட்டுரை, நாவல், மொழி பெயர்ப்பு, விமர்சனம், திரைக்கதை வசனம், கவிதை எனப் பற்பல அம்சங்களிலும் கூர்மையான பார்வையுடன் பேனாவைச் செலுத்தி தனது அறிவையும் ஆற்றலையும் மேன் மேலும் வளர்த்துக் கொண்டார். இதன் நிமித்தமாகத் தினமணி ஏ.என்.சிவராமன், மஞ்சரி ஆசிரியர் தி.ஐ.ரங்கநாதன், `எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா, தி.க.சி, கண முத்தையா, அகிலன், கு.அழகிரி சாமி டாக்டர் மு.வரதராஜன் தி.ஜானகிராமன், தொ.மு. சிதம்பர ரகுநாதன், சின்னக் குத்தூசி, இந்திரா பார்த்த சாரதி பி.எஸ்.இராமையா, ந.பிச்சமூர்த்தி, சே.கணேஷலிங்கம், ஜெயகாந்தன், திருப்பூர் கிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் போன்ற தலைசிறந்த சிந்தனையாளர்களதும் எழுத்துலகப் பிரம்மாக்களதும் மத்தியில் மிகவும் மதிப்பு வாய்ந்தவராகவும், போற்றப்படுபவராகவும், மிக மிக வேண்டிய வராகவும் விளங்கினார்.

குடும்பச் சுமைகளையோ, லௌகீக வாழ்க்கையையோ மேற்கொண்டிராத வல்லிக் கண்ணன் ஆக்க இலக்கியத்தின் மீதான விடுதலறியாப் பற்றினால் பல இலக்கியச் சுமைகளைத், தனது முதுகிலேயே சுமந்து கொண்டு மகிழ்ந்தார். சஞ்சிகை உலகில் சில காலம் அனுபவம் பெற்ற இவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ,எழுத்து என்பவற்றில் தனது மனதை முற்று முழுதாக ஈடுபடுத்தி உழைத்துக்கொண்டிருந்த வேளைகளில் ஈழத்து எழுத்தாளர் பலரைச் சந்தித்துப் பேசி ஈழத்து இலக்கியத்தில் பெரும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். ஈழத்து இலக்கியத்தை அறியும் ஆவல் ஈழ இலக்கியத்தின் வீச்சையும் போக்கையும் நன்கு அவதானித்து பாராட்டினார். பலருடைய ஆக்கங்களைப் பொறுமையோடும் அவதானிப்போடும் வாசித்து அவற்றை எடை போட்டு மெலெழுந்து நிற்பவற்றைப் புகழ்ந்தும் நசிவானவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்தியும் உதவுவதில் பெரும் பங்கு கொண்டிருந்த போக்கை அவரது இலக்கியத் தடத்தின் பரிமாணங்களில் சிலவாகக் கொள்ள முடியும். ஆகையினாலன்றோ ஈழத்து ஆக்க இலக்கியக் காரர் பலருடைய நூல்களுக்கு டாக்டர் நந்தியின் `தரிசனம்', பத்மா சோமகாந்தனின் `வேள் விமலர்கள்' நீ.பி.அருளானந்தத்தின் `வாழ்க்கையின் வர்ணங்கள்' என்றநாவல், எனப் பலருடைய ஆக்கங்களை வரவேற்று முன்னுரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாசக் கடைசி வாரங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் இரு தினங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டைச் சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தியது. இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உரையாற்றும் விசேட விருந்தினராகத் தமிழகத்திலிருந்து பிரபல நாவலாசிரியர், பொன்னீலன் தாமரை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோருடன் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் இலங்கைக்கு முதன் முதலாக வருகை தந்திருந்தார். பல சிரமங்களின் மத்தியிலும் முதன் முதலாகத் தான் இலங்கை வந்துள்ள விபரங்களையும் `வல்லிக் கண்ணன்' என்ற புனைபெயரையே `விசா' கடவுச் சீட்டு எடுப்பதற்காகவும் போடப்பட்ட சங்கடங்களை மாநாடு ஆரம்பித்த பின்னரே கொழும்பு சரஸ் வதி மண்டபத்தை வந்தடைய முடிந்த சிக்கல் நிறைந்த தனது பிரயாணம் பற்றியும், தனது இயற்பெயரை அறவே மறந்து விட்ட உண்மையையும் ஈழத்து இலக்கியச் கலைஞருடைய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் சுவைபடத் தனது பேச்சின் இடையே திணித்துப் பேசி ஈழத்து மக்களுடைய அன்பையும் இலக்கியதாகத்தையும் தீர்த்துக் கொண்டது இன்று நிகழ்ந்த சங்கதி போல் நினைவில் நிற்கிறது.

ஈழத்தில் வ.க. தங்கியிருந்த வேளைகளில் இங்கு வாழும் இலக்கிய நெஞ்சங்களையும் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், விமர்சகர், சுவைஞர், கலைஞர், எனப் பலதுறை சார்ந்தவர்களையும் சந்தித்துப் பேசுவதிலும் உரையாடி மகிழ்வதிலும் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். சாகித்ய இரத்தினம் வரதர் அவர்களுடைய பிறந்த நாளான முதலாம் திகதி ஜூலை மாசத்தன்று "வரத கதைகள்" என்னும் நூலை வெளியிட்டு வைத்து மகிழ்ந்து உரையாற்றினார்.

நவீன இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த வல்லிக் கண்ணன் சராசரியான தமிழக மக்கள் உரையாடுவது போலன்றி, மிகச் சுருக்கமாகவும் நறுக்கான இரண்டொரு சொற்களுடனும் மிகக் குறைவாகவே பேசுவார். ஆனாலும், அவை மிக ஆணித்தரமாகவும் வெகு நிதானமாகவுமே இருக்கும். இதுவே அவருடைய உரையாடலின் இயல்பு. அதீதிமான அமைதியும் அடக்கமான மெதுவாகப் பேசும் பாங்கையும் உடையவரே இந்த இலக்கிய யோகி. இலக்கிய சம்பந்தமான விஷயங்களையோ கடந்த கால சிறு சஞ்சிகைகள் பற்றியோ நவீன இலக்கியத்தின் வரலாறு, எழுத்துலகப் பிரம்மாக்கள் பற்றி யெல்லாம் பேசத் தொடங்கினால், காலம், நேரம், ஆண்டுகள், இடங்கள், பெயர்கள், விஷயங்கள் ஆகிய விபரங்கள் கூடச் சற்றும் பிசகாமல் அச் சொட்டாகச் சொல்லி ஆற்றொழுக்கு நடையில் விபரித்துக் கொண்டே போவார்; அவ்வேளையில் `ஜெட் விமானத்தின் வேகம் போல இருக்கும் அவர் பேச்சு.

பெருங்காற்று அடித்தால் எங்கே அள்ளுப்பட்டு வீசப்பட்டு விடுவாரோ என்று எண்ணக் கூடிய மிக மெலிந்த சுள்ளலான உருவம். இந்த மனிதனிடம் இத்தனை ஞாபகசக்தி நிறைந்த விடய அடக்கமும் ஆளுமையும் எப்படி?....! என வியந்து நிற்போரே பலர். அத்தனை தூரம் நவீன இலக்கியப் பரப்பில் தோய்ந்து எழுந்தவர் இந்த இலக்கியத் திருமூலர்.

நாம் தமிழகம் சென்று இவரைச் சந்தித்த வேளைகளிலெல்லாம் வரதர், டொமினிக் ஜீவா, சாந்தன் போன்ற எழுத்தாளர்கள் சிலரது பெயர்களைக் கூறியும் இங்கிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள், அவற்றின் செல் நெறிகள் பற்றியெல்லாம் புகுந்தகத்தில் வாழ்ந்து கொண்டு பிறந்தகத்தின் நிலையைப் பற்றி அறிய அவாவும் மணப் பெண் போல வெகு அக்கறையோடு கேட்டறிந்து கொள்வார்.

கடைசி நாட்களில், சுகவீனமுற்றிருந்த சில நாட்கள் தவிர ஏனைய நாட்களில், எண்பத்தாறு ஆண்டுகள் நிறைந்த இவரது வாழ்வில் இறக்கும் வரை காந்தியடிகளின் கொள்கைகளைச் சார்ந்து தான் உபயோகிக்கும் உடைகளையும், தான் உணவுண்ணும் பாத்திரங்களையும் தனது கரங்களாலேயே சுத்தம் செய்து கொள்ளும் பழக்கமும் பண்பும் கொண்டவர். எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த இவர் மிக உயர்ந்த சிந்தனைகளுக்கு உரியவராகவே வாழ்வை மேற்கொண்டிருந்தார்.

எழுத்தையே நேசித்து எழுத்தையே காதலித்து எழுத்தையே மணஞ்செய்து எழுத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த வல்லிக்கண்ணன் தனது பிரமச்சரிய வாழ்வினால் மட்டுமல்ல ஏனைய எழுத்தாளர்களை விட மிகவும் வித்தியாசமான போக்குகள் வரித்துக் கொண்டவர். எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாத இவர் உயர்ந்த ஒழுக்க சீலராகவே வாழ்ந்தார்.

வ.க, சொனாமுனா, கோரநாதன், இளவல், ஆர். ரத்னம், நையாண்டி பாரதி, மார்பியல், அவதாரம், ரா.சு.கி. ஞானப்பிரகாசம், எஸ். சொக்கலிங்கம், மிவாஸ்கி என ஏகப்பட்ட புனைபெயர்களுள் ஒளிந்து கொண்டு எழுதும் வல்லிக்கண்ணன் வாசிப்பதில் சூரனென்றும் எழுதுவதில் `ராட்சஸன்' என்றும் பலர் கூறி வியந்தாலும் இவ்விரு சூரத்தனமான பெயர்களுக்கும் அவரது இயல்பான சுபாவம் மிகவும் மாறுபட்டது. சிறுகதைகளைப் படிக்கும்போது அவற்றிக்கேற்ப லாவகமான நடையில் இனிமையாக எழுதும் வல்லிக்கண்ணன் புனைபெயர்களுள் மறைந்து கொண்டு அப்பெயர்களுக்கும் தான் எழுதும் விடயத்துக்குமேற்றதாகத் தன் நடையை மாற்றிக் கொள்வதில் விற்பன்னராகவே விளங்கினார். இந்த ரீதியில் வ.க. அவர்களைப் பு. பித்தனுடன் ஒப்பிடலாமெனவும் பொருளுக்கேற்ப நடையை மாற்றிக் கொள்வது ைநயாண்டியாகவும் அரசியல் கட்சி சார்பற்றும் எழுதும் வகையில் வ.க., புதுமைப்பித்தனை முன்னோடியாகக் கொண்டவரென எழுத்தாளர் ம.ந. ராமசாமி குறிப்பிடுவார். குறைவில்லாத பூரண உன்னத இலக்கியமென்பது கிடையாது. அப்படியிருக்கையில் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி எழுத்தாளனை முடக்குவது இலக்கியத்துக்குச் செய்யும் சேவையல்ல என்பதே வ.க. வின் கருத்தென்பதால் அவர் குறைவான இலக்கியங்கள் மட்டையை இரு கீற்றாகக் கிழித்துத் தலைமாடு கால்மாடாகப் போட்டுக் கழிப்பது போலச் செய்யமாட்டாரென்று இவர் அபிப்பிராயப்படுகிறார். எழுத்தாளர் என்போர் மனிதப்பிறவியில் சிறந்தவர்கள் என்ற நல்லெண்ணமே வ.க. வின் உடம்பெல்லாம் விகசித்து நின்றது.

20 ஆம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தை எதிர்கால இளைஞர்களும் ஏனையோரும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் வ.க. மணிக்கொடிக்காலம், தீபம் யுகம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் உரைநடை, சரஸ்வதிகாலம் என்ற தொகுப்பு நூல்களின் மூலம் தற்கால நவீன இலக்கியச் செல்நெறியை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் படைப்புகளோடு தொகுத்து வெளியிட்டு எதிர்கால சந்ததிக்கு கடந்தகாலம் பற்றிய ஒளியை ஏற்றி வைத்த இந்த மணிக்கொடி சகாப்த எச்சமான இம் மாணிக்கத்தின் புகழ் என்றென்றும் மங்காமல் நவீன இலக்கியம் கொடிவிட்டுப்படர ஒளிவீசிக் கொண்டே இருக்கும் என்பது சத்தியமான உண்மை; வெறும் புகழ்ச்சி*.

*பத்திரிகையில் 'வெறும் புகழ்ச்சி' என்றுதான் பதிவாகியிருக்கிறது. 'வெறும் புகழ்ச்சியன்று' என்று வந்திருக்க வேண்டும்.
___________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, January 11, 2007

மண்



மண் திரைப்படம் பற்றி ஒருபக்கம் ஆகா ஓகோ என்றும் இன்னொரு பக்கம் திட்டித் தீர்த்தும் பலவாறான கருத்துக்கள் எழுதப்பட்ட நிலையில் நானும் எனக்குப்பட்டதைச் சொல்வோமென்று எழுதியது இப்பதிவு.



ஈழத்துத் தமிழ்த்திரைப்படமாகப் பலராலும் கருதப்படும் 'மண்' படத்தின் கதை ஈழத்தின் வன்னியை மையமாக வைத்து நடக்கிறது. பெரியளவில் பேசப்படாமற்போன, தற்போது பலராற் பேசத் தயங்கப்படும் களமொன்றை திரைக்கதை கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை, அக்களமான சாதிப்பிரச்சினை, ஒடுக்குமுறை என்பவற்றை படம் ஓரளவு வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்தளவில் பாராட்டும் வரவேற்புமுண்டு.
பாராட்டப்பட வேண்டி அம்சங்களிருக்கும் அதேநேரம், ஏதோ புரட்சிகரமான, வித்தியாசமான படம் என்று தூக்கிவைத்து ஆடுமளவுக்கு இல்லாமல், வழமையான தமிழ்ச்சினிமா மாசாலக்கள் இரண்டொன்றைத் தூவி சிலசந்தர்ப்பங்களில் வெகுசாதாரண படமாகத் தோன்றும்படி வந்துள்ளதுதான் மண். அவை எவையென்று பின்னர் பார்ப்போம்.

முதலில் இதுவோர் ஈழத்துத் தமிழ்ப்படம் என்றளவில்தான் நானும் கருதிக்கொண்டிருந்தேன். அதற்கான கூறுகள் நிறையவேயுள்ளன.
கதைக்களம் நடக்கும் கனகராயன்குளப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லையென்றாலும் அம்மண்ணை, மண்வாசனையை படத்தில் கொண்டுவருகிறார்கள். குளக்கட்டுப் பாதைகள், பற்றைகள், வயல்கள், முதிரைக் கட்டைகள் நட்டு முள்ளுக்கம்பி வரிந்த வயல்வேலிகள், தென்னந்தோப்புக்கள் என்று காட்சிகள் இயல்பாகவே கதைக்களத்துக்குப் பொருந்துகின்றன. படத்தில் அவ்வப்போது வரும், குளக்கரையில் தாழ்வாக விரிந்த பெருங்கிளைகளுடன் விசாலமாக வளர்ந்த மருதமரங்கள் எனக்குக் கிளர்ச்சியூட்டின.
ஈழத்தவரின் பேச்சுவழக்கில் படம் எடுக்கிறோமென்ற பேரில் சிலர் நடத்திய கூத்துப்போலில்லாமல் கதைக்களத்துக்குரிய பேச்சுவழக்கு பெருமளவு சரியாகவே பொருந்துகிறது. ஆனால் இடையிடையே தோன்றும் - மேடைநாடகத்தில் கதைப்பதுபோன்ற இழுவையுடன் கூடிய பேச்சுவழக்கைக் குறைத்திருக்கலாம்.

பெற்றோர் கொடுக்கும் தண்டனை முறைகள் - குறிப்பாக கண்ணில் மிளகாய்த்தூள் தூவுவது குறிப்பிட்டுச சொல்லவேண்டிய காட்சிகள். சின்னச்சின்ன விசயங்கள் பலவற்றில் நல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியே பச்சைமிளகாய் தின்னவிடும் தண்டனையையும் ஒரு காட்சியாக்கியிருக்கலாம்.

பூசி மெழுகிக்கொண்டு வரும் கதாநாயகர், நாயகி, பிறபாத்திரங்கள் என்றில்லாமல் மண்ணோடு ஒட்டிய பாத்திரங்கள் நன்றாகப் பொருந்துகின்றன. இதுவரை பார்த்த தமிழ்ப்பட நாயகிகளில் அதிகம் கவர்ந்தவர் இந்த இலட்சுமிதான். ஆலங்குளம், கரப்புக்குத்தி, குறிசுட்டகுளம்... என்றுவரும் சுற்றுப்புற ஊர்களின் பெயர்களோடு கதைக்களம் மிகமிக உண்மையாக இருக்கிறது. விடுமுறைநாட்களில் வயற்காவலுக்கும் ஆடுமாடு மேய்க்கவும் மாணவர்கள் (முதலாளிகளின் மகன்மாரும்) போகவேண்டிய யதார்த்தம் நன்றாக வந்திருக்கிறது.

இவைகள் சரியாக அமைந்தமைக்கு திரைக்கதையும் இயக்கமும் ஈழத்தவரே என்பதும் முக்கிய காரணம். கதைக்களத்தையும் மக்களையும் 'கதை நடந்த காலப்பகுதியில்' நன்கறிந்தவரென்பதால் இப்படி வந்தது. [இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். குறிப்பாக வன்னியில் இன்றியமையாமற் போய்விட்ட ஆடுமாடுகளைப் பெருமளவில் காணவேயில்லை. ஒருமுறை பட்டியொன்று காட்டப்படுகிறது. மாடுகள் மேயாத, படுத்துக்கிடந்து தொல்லைப்படுத்தாத வன்னி வீதிகள் சற்று இடறுகின்றன. அதேபோல் நாயகன் குறும்படமெடுக்க வந்த நிகழ்காலமும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. வீதிப்போக்குவரத்தில் நிற்கும் காவற்றுறையையோ, அங்கிங்கு ஓடித்திரியும் புலிகளின் வாகனங்களையோ காணவில்லை. இப்படத்தை வன்னியில் எடுக்க முடிந்திருந்தால் இவற்றைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதைக் காரணமாகச் சொல்லிக்கொள்ளலாம். எனினும் இது 'இந்தியப் படமாக' திரையிடப்பட்டதும் காரணமென்றுதான் தோன்றுகிறது]

இப்படத்தின் பின்னணி பற்றிய ஒரு சம்பவம் அண்மையில் படிக்க நேர்ந்தது. முதலில் திட்டமிடப்பட்டதிலிருந்து மாற்றங்களுடன்தான் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் திரையிட வேண்டுமென்பதற்காக சிலகாட்சிகள் (தமிழீழக் காவற்றுறை சம்பந்தப்பட்ட காட்சியும் அதிலொன்று) நீக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு படம் இந்திய தணிக்கைக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டு வெளியிடப்பட்டது என்ற தகவலே அது. யதார்த்தத்தை மீறியதாகத் தெரியும் அக்கொலைக் காட்சிக்கு நீக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட காட்சிகளில் பதில் இருந்திருக்கக் கூடும்.
ஆக இந்தியத் தணிக்கைக் குழுவுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்பட்ட இப்படம் யாருக்குரிய திரைப்படம் என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. 'ஈழத்துத் திரைப்படம்' என்று ஆவலோடிருந்த எனக்கு இது ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. சிலர், ஆணிவேரையே ஈழத்துத் திரைப்படமென்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

_______________________________________
இனி இப்படத்தை சராசரி தமிழ்ப்படமாகக் கருத வைப்பவற்றில் இரண்டொரு கூறுகளைப் பார்ப்போம்.

*** படம் தொடங்கி முக்கால் மணிநேரமாகியும் எதுவும் வரவில்லையென்று ஆச்சரியப்பட்டபோது அடுத்த நிமிடமே வந்தது தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடான பாடற்காட்சி. 'ஒரு படமெடுத்தால் கட்டாயம் சில பாட்டுக்களும் ஆட்டங்களும் இருக்கவேணும்; அதிலயும் கட்டாயம் ஒரு காதல் பாட்டு வேணும்' என்ற எழுதாத விதி இங்கும் பின்பற்றப்படுகிறது. இரண்டுபேர் காதலிக்கிறார்கள் என்பதைச் சொல்ல எங்கள் இயக்குனர்களுக்கு இருக்கும் மிகச்சுலபமான வழியாக ஒரு பாட்டுக்காட்சியைத்தான் கருதுகிறார்கள். அப்படித்தான் 'மண்' இயக்குனர் புதியவனும் நினைத்தாரோ என்னவோ?

*** BBQ பாட்டும் நடனமும்:
வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கோ இன்னபிற தேவைக்கோ தாயகம் வருபவர்கள் அங்கே குடிப்பதோ கூத்தாடுவதோ இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. வெளிநாட்டுச் சரக்கில் நாலைந்து போத்தல்கள் கொண்டுவந்து (அதற்கு வரிகட்டாமல் வருவதற்கு இவர்கள் படும்பாடு!) தங்கள் ஆடம்பரங்களை மண்ணின் மைந்தர்களுக்குக் காட்டமாட்டார்கள் என்றும் இல்லை. சொல்லப்போனால் சிலர் தாயகம் வருவதே அதற்குத்தான். வெளிநாட்டில் வெயிற்காலத்தில் எப்படி உடுத்துவார்களோ அதைவிடவும் குறைவாக உடுத்தி எங்கள் பெண்கள் வன்னியர்களுக்கு பாஸ் காட்டுவார்களென்பதையும் மறைப்பதற்கில்லை.

ஆனால் மண் படத்தில் இடம்பெற்ற இப்பாடற்காட்சி இப்படியான இயல்பைச் சொல்லும் நோக்கத்தின் பாற்பட்டதன்று. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் சொந்தங்கள், தெரிந்தவர்களுக்கு விருந்தொன்று வைக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நோக்கமுமன்று. அல்லது பாடல்வரிகள் சொல்வதைப் போன்று வன்னிமக்களின் வாழ்வைச் சொல்வதற்காகப் புகுத்தப்பட்ட பாடற்காட்சியுமன்று.
இயக்குனருக்கு ஒரு ஆசையும் தேவையும் தெரிகிறது.. ஒரு நடனக்குழுவை வைத்து வண்டியையும் குண்டியையும் ஆட்டி வழமையான தமிழ்ச்சினிமாப் பாணியில் ஒரு பாடற்காட்சி தேவைப்படுகிறது. இன்றைய மொழியில் ஒரு 'குத்துப்பாட்டு'. 'உங்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை'யென்பதை கோடம்பாக்கத்துக்கு நிரூபிக்கும் இலட்சியம் இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கென்று கோடம்பாக்கத்திலிருந்தே நடன இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டுத்தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்துக்குச் சம்பந்தமில்லாமல், படம்பார்க்க வருபவரை கிளுகிளுப்பூட்டும் நோக்கத்தை மட்டும் கொண்டு சினிமாப் பொதுப்புத்தியோடு புகுத்தப்பட்ட பாடற்காட்சியாகவே அது தெரிகிறது. என்ன மாற்றமென்றால், கோடம்பாக்கம் கமராவைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு போகும்; இங்கு மாறி நடந்திருக்கிறது.

*** படத்தில் வரும் காதலை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன், படம் பார்த்த யாருக்குமே அது முடியாத விசயம். நாயகன் உண்மையில் காதலித்தானா இல்லையா என்பது தெளிவில்லை. முன்படத்தி்ல் வரும் காட்சிகள், அவன் மனமொத்துக் காதலிப்பதாகவே வருகிறது. காதலியை இழிவாய்ப் பேசியதற்காக நண்பனோடு அடிபடுகிறான். ஆனால் பின்னர் வரும் காட்சியில் அனைத்தும் திட்டமிட்டுச் செய்தாகக் காட்டப்படுகிறது. பொன்ராசுவைக் கொலை செய்யும் காட்சியின்பின் திரையில் வரும் வசனம்தான் இயக்குனர் படம்மூலம் சொல்ல வந்த கருத்தென்றுபடுகிறது. அந்தக் கருத்தை நியாயப்படுத்த வேண்டும்; கொலையாளியை நியாயப்படுத்த வேண்டும்; எனவே பொன்ராசுவை வில்லனாக்க வேண்டும். அல்லாதபட்சத்தில் சந்தர்ப்பவசத்தால், சமூகத்தின் தவறால் வெளிநாடு போகவேண்டிவந்த ஓர் அப்பாவியைக் கொலை செய்துவிட்டு புரட்சிவசனத்தைக் கருத்தாய்ச்சொல்லும் படத்தின் அபத்தம் உறைக்கும். இவை அனைத்துக்காகவும் படத்தின் இடையில் அடித்த குத்துக்கரணம்தான், பொன்ராசு எல்லாம் திட்டமிட்டே லட்சுமியை ஏமாற்றினான் என்ற கதை. இது பட இயக்கத்தில், திரைக்கதையில் மிகப்பெரிய பலவீனமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தகவற்பிழைகள், தர்க்கப்பிழைகள் என்பனவும் ஆங்காங்கே வருகின்றன.
படத்தில், 'காயாக்கன்னி' என்ற பேரில் நாயகனால் நாயகிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது ஒருமரம். 'இந்த மரத்தைப்போல உறுதியாகவும் கன்னியாகவும் எங்கட காதல் இருக்க வேணும்' என்றும் சொல்லப்படுகிறது. அதேமரத்தில் நாயகனைக் கட்டிவைத்துவிட்டு மகன்(கொலையாளி) பேசும்போது 'விளாத்தி மரத்தைக் காட்டி என்ன சொன்னனி? வைரமான மரமோ?' என்று கேட்கிறார். காயாக்கன்னி விளாத்தியானது விளங்கவில்லை.

குறும்படமெடுக்க தாயகம் திரும்பிவரும் நாயகனுக்குச் சற்று இளைத்த தோற்றத்தைக் காட்டியிருக்கலாம். கதைப்படி குறைந்தபட்சம் முப்பத்தைந்து வயது கொண்டவர். பெண்கள் எப்படியென்றாலும், பொதுவாக புலம்பெயர்ந்த எங்கட ஆண் சிங்கங்கள் விரைவில் வயக்கெட்டுப்போவார்கள் என்றுதான் நினைக்கிறேன் ;-).

அடுத்து படத்தில் வரும் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள்:
கொலையாளி போராளியா இல்லையா என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. ஆனால் அதைவைத்தே சப்பைக்கட்டு கட்ட முடியாது. அவனும் நண்பனும் 'ஜெயசிக்குறு நேரத்தில் ஆமிக் கொமாண்டர் இருந்த வீடு' பற்றிக் கதைக்கிறார்கள். அதைவிட குறும்படம் எடுக்க வந்தவருக்கு உதவிசெய்யவென்று நியமிக்கப்பட்டவர்கள்தாம் அந்த இருவரும். மேலும் பொன்ராசு பற்றி பழைய கோப்புக்கள் பார்த்து விவரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

படத்தில் காட்டப்படும் இயக்கம் விடுதலைப்புலிகளைச் சுட்டவில்லையென்பதும் வெறும் சப்பைக்கட்டுத்தான். தெளிவாகவே காலமும் இடமும் சொல்லப்படுகிறது. யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் கனகராயன்குளம் புலிகளின் நிர்வாகப்பகுதிதான். அங்கிருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் புலிகள் மட்டுமே.

BBQ பாட்டு முடியும் நேரத்தில் பொன்ராசுவைக் காணவரும் இயக்கத் தளபதிக்கிருக்கும் பாதுகாப்பு, குறைந்தபட்சம் ஒரு கேணல் தரத்தைக் காட்டுகிறது. உடனேயே அடையாளம் கண்டது ஒருபுறமிருக்க, அடுத்தகணமே பதினெட்டு வருசத்துக்கு முன்பு பழகியதுபோலவே 'என்னடா மச்சான்' என்று பேசத்தொடங்குவதும் இயல்பாகவே இல்லை.

கனகரயான்குளத்தில் கொலையாளி கைத்தொலைபேசியில் கதைக்கிறார். மறுமுனையும் வன்னிக்குள்தான் இருக்கிறது. வோக்கி ரோக்கியில் கதைப்பது போல் எடுத்திருக்க வேண்டிய காட்சியது.

கதையில் றிவோல்வர் வருகிறது. எங்காவது ஆவணமாகப் பத்திரப்படுத்தியிருந்ததைத் தூக்கிவந்துவிட்டார்களோ? அல்லது உண்மையில் புலிகள் தவிர்ந்த வேறு யாராவதுதான் கொலையாளிகளோ தெரியவில்லை. புலிகள்தான் என்று இயக்குனர் நினைத்திருந்தால் அவர்மனதில் இருக்கும் புலிகள் இயக்கம் எண்பதுகளுக்குப்பின் Update ஆகவில்லை போலுள்ளது.

_________________________________________
மேற்குறிப்பிட்டவற்றில் நிறைய விதயங்கள் பலருக்கு பொருட்படுத்தத் தேவைற்றவையாகவே இருக்கும். அவரவர் பார்க்கும் பார்வையில் மாறுபடும். என்வரையில் மணிரத்தினமோ புகழேந்தியோ எடுக்கும் படத்துக்கும் புதியவன் எடுக்கும் படத்துக்குமிடையில் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறேன். முன்னவற்றை ஒரு சினிமா என்றளவில் பார்ப்பதோடு பின்னதற்கு முட்டையில் மயிர்பிடுங்கிப் பார்ப்பேன்.

இந்தியர் ஒருவர் 'மண்' பார்ப்பது வேறு; நான் பார்ப்பதும் எதிர்பார்ப்பதும் வேறு.
அதுபோல் இந்தியர்களுக்கு 'மண்' காட்டுவது வேறு; எங்களுக்குக் காட்டப்பட வேண்டியது வேறு.

முடிவாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த இறுக்கமான பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு அதைப்பற்றிப் பேசப்புறப்பட்ட(தாக நானும் பலரும் கருதும்) படம், சில தவறுகளாலும் இலக்கற்ற தன்மையாலும் வழமையான சினிமாப்படமாகிப்போனது.

_________________________________________
இந்தியாவில் ஜனரஞ்சக அந்தஸ்துடன் ஓடிய ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன்.
பயணத்தில் தொடர்ந்து முன்னேற வாழ்த்து.

_________________________________________
ரெறறிஸ்ட் படத்தின் பின்னானவை போலவே, கொலையாளி சரணடையாத பட்சத்தில் 'மண்' படத்தின் தொடர்ச்சியாக நடப்பவை குறித்தும் திகிலூட்டும் படமொன்று எடுக்கலாம்.
கொலையாளி எப்பாடுபட்டாவது வன்னிக்குள்ளிருந்து தப்பவேண்டிய சூழ்நிலையில் நடப்பவை நிச்சயம் திகிலூட்டுபவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின் கொலை வன்னி நிர்வாகம்மீது ஏற்படுத்தும் அரசியல் பிரச்சினை, நிர்வாக நற்பெயர் இழுக்கு என்பவையும் சேர்ந்துகொள்ள நடக்கும் துரிதகதி விசாரணைகளும் தேடுதல்களும், பெரும்பாலும் முடிவில் நிகழப்போகும் இன்னொரு கொலையும் என்று ஒரு விறுவிறுப்புப் படம் பண்ணலாம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 13, 2006

நேர்காணல்: ஓவியர் விஜிதன்

_____________________________________

இது எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல்.
ஈழத்து ஓவியத்துக்குப் புது வரவான விஜிதனுடனான நேர்காணலை இங்குப் பதிகிறேன்.

_____________________________________

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை


சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி வீட்டிலவந்து ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

** இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.
ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப்படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.




** இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்திமுறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இந்தப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக்கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம்;. ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன். அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால் பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டுவந்திருக்கிறேன். அதாவது மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டுவந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.



** உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டுவந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

செவ்வியின் தொடர்ச்சி....
___________________________________________
செவ்வியின் தொடர்ச்சியையும் மேலதிக ஓவியத்தையும் எரிமையில் காணலாம். அப்பதிப்பும் ஒருங்குறியிலேயே இருப்பதால் அனைவராலும் வாசிக்க முடியும்.

நன்றி: எரிமலை

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 10, 2006

கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார்

ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.

இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்திருந்தது.

இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதான இவர், 2 பிள்ளைகளின் தந்தை ஆவார்.



மயூரன் போன்றோர் மேலதிக தகவல்களைப் பதிவார்கள் என்று நினைக்கிறேன்.
செய்தி: புதினம்.
________________________________
கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தன் குரலிலேயே பாடிய பாடல்களின் ஒலிவடிவங்களடங்கிய மதி கந்தசாமியின் முன்யை பதிவை இஙகுக் காணலாம்.

சு.வில்வரத்தினம் குரல்பதிவு

பெயரிலியின் பதிவு -சு. வில்வரத்தினம் மறைவு

சோமிதரனின் பதிவு - சு. வில்வரத்தினம். . .

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 08, 2006

படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை

"ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" என்ற தலைப்பில் தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரையொன்றை ஏற்கனவே பதிவாக்கியிருந்தேன்.
இம்முறை அக்கட்டுரையை விமர்சித்து ஒரு கட்டுரை தினக்குரலில் வந்துள்ளது.
எதிர்வினைக் கட்டுரையில் பெரியளவில் குறிப்பிடக்கூடியவையில்லையென்று நான் கருதினாலும் அதையும் இங்குப் பதிவாக்குகிறேன்.


இங்கும் சொந்தப்பேரில் எழுதும் பிரச்சினை வருகிறது. ;-)

ஏற்கனவே "பட்டியலிடுதல்" தொடர்பாக பெயரிலியுட்பட சிலரால் வலைப்பதிவுகளில் கதைக்கப்பட்டதென்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
_________________________________________________


படைப்பாளிகளின் பட்டியல் படைப்புலக அடக்குமுறை!
-எம்.நவாஸ்சௌபி-

படைப்பாளர்களை பட்டியல் படுத்தும் ஒரு நடைமுறை இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது. இதற்காக சரியான மதிப்பீடுகள் அல்லது அளவுகோல் பற்றிய ஒரு வரையறையை முன்வைக்காமல் இவ்வாறு பட்டியல் படுத்தும் முயற்சிகள் இன்னும் இடம் பெறுவது தான் பலவீனமான ஒரு விடயமாக இருக்கிறது.

`தினக்குரல்' பனுவல் பகுதியில் `ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்' எனும் தலைப்பில் தாவிது கிறிஸ்ரோ - என்பவர் படைப்பு சார்ந்த பட்டியலுடன், பின் நவீனத்துவத்திற்கான பெருத்த கண்டனத்தையும் எழுதியிருந்தார்.

அவரிட்ட பட்டியலும் புதியதல்ல. இதற்கு முன்னும் பட்டியலிட்டவர்களினால் காட்டப்பட்டுள்ள அனேக பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. அவர்களது பெயர்களை நானும் சொல்வது மீண்டும் ஒரு பட்டியலை நானும் இடுவதாய் ஆகி விடும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

படைப்புலகில் பரிசோதனை முயற்சிகள் என்று எதுவுமில்லை அவை படைப்புகளின் `வித்தியாசம்' என்று தான் பார்க்கப்பட வேண்டும். ஒரு படைப்பின் வாசிப்பை ஒரு சார்பாக கொண்டு ஏனைய படைப்புகளை புறம் தள்ளுவது என்பது படைப்புலக அடக்கு முறையாகும்.

தாவிது கிறிஸ்ரோ எழுதிய பரிசோதனை முயற்சிகள் என்ற கதையாடல் படைப்புலகின் வித்தியாசங்கள் என்று திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு ஒரு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுகிறவர்கள் ஒரு வரையறைக்குள்ளானவர்களாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறைமுகமான உளவியல் பார்வையாகும். இது அவர்களின் விசாலமான படைப்புச் செயற்பாட்டை குறுகியதாக்கி ஒரு முகப்பட்ட பார்வையை அவர்களது படைப்புகளுக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் படைப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்ட பார்வையினைக் கொண்டது. அதனை வாசகர்கள் தங்களது வாசிப்பு பிரதி மூலம் அப்படைப்பின் வேறுபட்ட கூறுகளையும் தங்களது ஆளுமைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொள்வார்கள்.இந்த வகையில் விமர்சனம் என்பதும் ஒரு படைப்பிற்கு போலித்தன்மையை உருவாக்கி விடுகிறது. அப்படைப்பின் பன்முகத் தன்மையை அது அழித்து விடுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

ஒரு படைப்பின் பரிசோதனை முயற்சியை அளவிட வித்தியாசமான உருவ அமைப்பை அடிப்படையாகக் கொள்வது தவறான ஒரு புரிதலாகும். ஒரு படைப்பிற்கு உருவ அமைப்பு என்பது கூட நிலையான ஒரு விடயமல்ல. அது மாறிக் கொண்டு வந்த வரலாறு நம்மிடமுண்டு மரபை உடைத்துக் கொண்டு புதிய கவிதை அமைப்பு உருவானது. புதியதை உடைத்துக் கொண்டு நவீன கவிதை அமைப்பு உருவானது என்ற கதைகள் இதற்கு சான்று பகிர்கின்றன.

படைப்பியலைப் பொறுத்தவரை மரபு, புதியது, நவீனம், பின் நவீனம் என்ற எந்த சித்தாந்தங்களுமில்லை என்பதே எனது கருத்து. இவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் தேவையை மட்டும் திருப்திப்படுத்துகின்ற கதையாடல்களாக இருப்பவை. இந்த சித்தாந்தங்கள் எதுவும் நிலையான இருப்புக் கொள்ள முடியாமல் காலத்தால் புறம் தள்ளப்பட்டிருப்பதை சங்க காலத்திலிருந்து எம்மால் பார்க்க முடிகிறது. இது தவிர்க்க முடியாததுமாகும்.

இத்தகைய கருத்துச் சமர்களுக்கு அப்பால் உணர்வுகளை மொழிப்படுத்தும் படைப்புலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதை எல்லாக் காலத்திலும் கவிதையாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீடும் அளவுகோலுமே அவற்றை தப்பான திசைக்கு அழைத்துச் செல்கின்றது.

ஒரு படைப்பை மதிப்பிடும் பணி இன்னொரு படைப்பாளியினுடையது அல்ல. அவ்வாறான மதிப்பீட்டில் தன் படைப்பு சார் பண்புகளையே அவர் நிறுவ முனைவது குறிப்பிட்ட படைப்பின் பன்முகத்தை இல்லாது செய்கிறது. அது வாசகர்களின் வாசிப்பு மதிப்பீடாக முன்வைக்கப்படும்போதுதான் படைப்பாளியினுடைய உழைப்பிற்கான உண்மையான ஒரு வெகுமதியை கொடுப்பதாக காண முடிகிறது. எனவே, படைப்புகளுக்கும் சித்தாந்தங்களுக்குமிடையில் ஓர் தடை கல்லாக வாசகர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படைப்புலக கருத்தியல் இவ்வாறிருக்க, பின் நவீனத்துவம் பற்றிய எதிர்வினைகள் இப்போது ஆங்காங்கே மின்னுகின்றன. இது `பெரு வெளி' எனும் சஞ்சிகையின் வருகைக்கு பின்புதான் என்பதையும் தாவிது கிறிஸ்ரோவின் கட்டுரையில் நன்றாக அறிய முடிகிறது. இவ்வாறு பின் நவீனத்துவ எதிர்வினையை செய்பவர்கள், தங்களது சொந்த பெயரில் எழுதிய கட்டுரைகள் எதனையும் காண முடியாமலிருக்கிறது. எந்த கருத்தையும் தனது சொந்தப் பெயரில் சொல்வதற்கான முதுகெலும்புடைய பேனையை வைத்துக் கொண்டு அவர்கள் எழுதிக் கொண்டால் அதன் பின்புலத்தையும் அவர்களுடைய எழுத்துக்கப்பால் அறிய உதவுமே என்பது எனது நப்பாசை.

____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, November 06, 2006

ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்

பனுவல் -தாவீது கிறிஸ்ரோ-

___________________________
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது. பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.
___________________________

மேலைத்தேய முன் முயற்சிகளின் ஆகர்சனத்தினால்தான் தமிழிலும் இலக்கியப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. சிறுகதை, நாவல், புதுக்கவிதை எனத் தமிழில் இன்று இலக்கியம் என அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் அனைத்தினதும் நதிமூலங்கள் மேலைத்தேயங்களே.

தமிழ் புதுக்கவிதை வளர்ச்சியை ஒரு இயக்கமாக முன்னெடுத்த சி.சு.செல்லப்பாவின் ` எழுத்து'விலும் அதற்கு முன்னர் ந.பிச்சமூர்த்தி தொடக்கி வைத்த புதுக்கவிதையின் தொடர்வரவாளர்களில் ஒருவராக நம் நாட்டின் தருமு சிவராமு குறிப்பிடப்பட வேண்டியவர். அவருக்குப் பின்னரான பரிசோதனையாளர்களாக தமிழகத்தில் பலர் இருந்த போதும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சிக்கால வரதர் ந. பிச்சமூர்த்தியைத் தொடர முயன்று பின்னர் அம்முயற்சியிலிருந்து விலகியவர். தா. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளில் இவ்வகைப் பரிசோதனைகளை நாம் அவதானித்தோம். பின்னரான காலங்களில் வானம்பாடிகளின் பாணியை ஒட்டிச் சற்று வித்தியாசமாக திக்குவல்லை கமால் ,அன்பு ஜவகர்ஷா போன்ற முஸ்லிம் கவிஞர்களும் பூனகரி மரியதாஸ், ஈழவாணன் போன்றவர்களும் புதுக்கவிதைகைளை எழுதினர்.

சண்முகம் சிவலிங்கம் மார்க்சியத்தை அங்கீகரித்தவர். அவரது கவிதைகள மிகவும் வித்தியாசமான ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருந்தன. அலையில் வெளிவந்த `வெளியார் வருகை' போன்ற கவிதைகளை இங்கு எடுத்துக்காட்டலாம். இதேபோல், மல்லிகையில் இவரது கவிதைகள் உருவப் பரிசோதனையோடு ஆக்கப்பட்டு வெளிவந்தன.

இதேகாலம் முற்றிலும் வித்தியாசமான மு.கனகராஜனின் `முட்கள் முறியும் ஒசையும்' வெளிவந்தது. சோலைக்கிளியின் ஆரம்பம் கூட (இன்றுவரை அது தொடர்கிறது) ஒரு பரிசோதனையின் வெளிப்பாடே.

பாலமுனை பாறுக், அன்புடீன்,மேமன்கவி போன்றோரும் பின்னரான சேரன்,ஜெயபாலன் போன்றோரும் வானம்பாடியினரின் பாணியில் வந்தோரே. தருமு சிவராமு பாணியில் பரிசோதனை செய்தவர்களில் சபா ஜெயராஜா குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் தொகுப்பாகவராவிட்டாலும் பத்திரிகைகளில் பிரசுரமான காலத்தில் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தன.

வட்டம் என்பதை .எனவும், சதுரம் என்பதை எனவும் எழுத்துகளால் கோலம் போட்ட கவிதைகள் அவருடையவை.

எம்.ஏ.நுஃமான் தம்மை ஒரு போதும் புதுக்கவிதைக்காரராகக் கூறிக் கொள்வதில்லை. இவரோடு மு.பொ. ,அ. யேசுராசா , சு.வி. என ஒரு வரிசையே இங்கே அடையாளப்படுத்த முடியும்.

சிறுகதைத்துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த ஒரு சில முன் முயற்சிப் பரிசோதனைகளைக் கூற முடியும். மு.தளையசிங்கம், காசிநாதர் போன்றவர்களின் சிறுகதைகள் சிலவற்றை இதற்குரியதாக உதாரணப்படுத்தலாம். ஜோர்ஜ் சந்திரசேகரனும் இவ்வகை முயற்சியில் ஈடுபட்டவராவார்.

இவர்களுக்கு முன்னதாக எஸ். பொ.வின் முயற்சிகளையும் இங்கு குறிப்பிடலாம். முற்றுத்தரிப்பு இல்லாமல் ஒரே வசனத்தில் ஒரு கதையை அவர் எழுதியிருந்தார். அணி, குளிர் போன்ற கதைகளும் இதில் அடக்கம்.

நீர்வை பொன்னையனின் 70 இற்குப் பின்னரான கதைகளும், எஸ். அகஸ்தியரின் உணர்வூற்றுருவாக்க சிறுகதைகளும் இதற்குள் அடக்கம்.

90 களில் சரிநிகரில் ` அருள் சின்னையா' எழுதிய ஒரு சிறுகதை பரிசோதனை முயற்சியின் வெளிப்பாடாக வெளிவந்தது. இதற்கு முன்னர் கோணைத்தென்றல் என வெளிவந்த ரோணியோ சஞ்சிகையில் தேஸ்விலோமன், ரிசிப்பிரப்ஞன்( இப்போது சித்தார்த்த சேகுவரா) எழுதிய கதைகளும் பரிசோதனைச் சிறுகதைகளே. இன்று வெளிவரும் பலபடைப்புக்களை பின் நவீனத்தும் எனும் சட்டகத்துக்குள் பொருத்திப் பார்க்கும் போது இத்தகு முன்முயற்சிகள் ( முன் நவீனத்துவம் என பெயர் சூட்டலாம்) ஏலவே, இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன.சட்டகத்துக்குள் அடங்காதவையே பின் நவீனத்துவப் படைப்புகள் என்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.

அருள் சின்னையாவைத் தொடர்ந்து `திருக்கோவில் கவியுவன்-( ஒரு விதத்தில் உமா வரதராஜனின் அரசனின் வருகை, கள்ளிச்சொட்டு என்பவற்றையும் இங்கு குறிப்பிடலாம்) அம்ரிதா.ஏ.எம்., ஓட்டமாவடி அறபாத், வி.கௌரிபாலன், திசேரா, மலர்ச்செல்வன் ஆகியோரை நாம் வரிசைப்படுத்த முடியும். ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் படைப்புகள் பின் நவீனத்துவ வகை மாதிரிக்குள் அடக்கப்படாவிட்டாலும் அம் முயற்சிகளுக்கு சற்று நெருக்கமானவை எனக் கூறலாம். சமீபத்தில் மஜீத் எழுதிய ` கதையாண்டி' எனும் புதினம் வரிந்தெழுதப்பட்ட ஒரு பின் நவீனத்துவ முயற்சியாகும்.(இக்கதை பற்றிமிகவும் காட்டமான விமர்சனம் எனக்குள்ளது. அதனைப் பிறிதொரு பத்தியில் எழுதவிருப்பதால் இப்போது தவிர்த்துக் கொள்கிறேன்). புதுக்கவிதைத்துறையின் முன்முயற்சிகளுக்கு உற்சாகம் தந்த சஞ்சிகைகளாக பூரணி, அலை, களனி, அக்னி, புதுசு போன்றவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 80 களில் திசை பின்னர் சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் இவ்வகை முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியுள்ளன.

ஒரு விதத்தில் இங்கு எழும் பிரச்சினை உருவ, உள்ளடக்கம் சார்ந்த பிரச்சினையாகவே இனங்காணப்படல் வேண்டும். சுத்த கலைவாதம் அல்லது முற்றிலும் பிரசாரம் எனும் அந்தக்காலவாதப் பிரதிவாதங்களுடன் இப்பிரச்சினையைப் பொருத்திப்பார்க்கலாம்.

மரபுப்பாணியில் சமூக உள்ளடக்கம் சார்ந்து முற்போக்கு கவிஞர்கள் பலர் எழுதிய காலத்தில் சுத்த இலக்கியவாதிகள் அவர்களை எதிர்த்தனர். நிராகரித்தனர். இம்முற்போக்கு அணியில் தான்தோன்றிக்கவிராயர், முருகையன், யாழ்ப்பாணக்கவிராயர், சுபத்திரன் போன்றோரும் எதிர் அணியில், இ.நாகராஜன்,வி.கந்தவனம், அம்பி, காசி ஆனந்தன் போன்றோரும் இருந்தனர். முன்னவர் அணியில் பின்னர் வந்த எஸ்.ஜி. கணேசவேல், புதுவை இரத்தினதுரை, முருகு கந்தராசாவைக் குறிப்பிடலாம். எதிரணிக்கு உதாரணம் காட்ட பின்னர் எவரும் கிட்டவில்லை .ஆயினும், பின்னர் வந்த முற்போக்கு அணியில் சற்று வித்தியாசமானவராக சாருமதி முகிழ்ந்தார். அவரைவிடவும் வித்தியாசமாக சிவசேகரம் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைத் தந்திருக்கிறார். போரின் முகங்கள், வடலி எனும் தொகுப்புகளின் கவிதைகள் இதற்கு நல்ல உதாரணங்களும்.

நமது போர்க்கால சூழலில் இப்போது ஏராளம் தமிழ், முஸ்லிம் கவிஞர்கள் தங்களது கவிதைத் தொகுதிகளுடன் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களின் கவிதைத் தொகுதிகளுக்கான தலைப்புகளும், கவிதைத் தலைப்புகளுமே வாசகனை தலை கிறுகிறுக்கச் செய்கின்றன.எழுதியவரது பெயரைத் தவிர்த்து கவிதைகளையும்,கவிதைத் தலைப்புகளையும் வாசித்தால் ஒருவரே சகல கவிதைகளையும் திரும்பத் திரும்ப எழுதுவதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சூழலில் நமது கவிஞர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.இது கவிதைத் தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வெளியிடப்படும் உற்பத்திப் பொருட்களில் ஒன்றாக கவிதைத்துறை மாறிவிட்டதன் அவலநிலையெனக் கொள்ள வேண்டும்.புதிய கவிஞர்கள் பலர் நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் தம்முள் ஏதோ வகையில் ஒத்து ஓடும் வெளிப்பாட்டு முறைச் சமரசத்தைக் கொண்டுள்ளார்கள். இதேநேரம், கிழக்கிலிருந்து தீவிரத்துடனும் பின் நவீனத்துவ கதையாடலுடனும் தமது அடையாளங்களைக் காட்டும் வகையில் இப்போது பெருவெளிக்குச் சிலர் வந்துள்ளனர்.

இவர்களினால் வலிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள், ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பின்னால் பொதிந்துள்ள அர்த்தப்பாடு மிக முக்கியமானது. அவை பல்வேறு விதத்தில் விரித்துரைக்கப்பட்டாலும், மக்கள் திரளின் விடிவு நோக்கிய பணியை முன்னெடுப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அர்த்தப்பாடு. அது மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, October 28, 2006

இலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா?

பனுவல் -தீவிரன்-
-------------------------------------
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது.
பயன்கருதி வெளியிடப்படுகிறது.
-------------------------------------
ஈழத்து தமிழ் இலக்கிய உலகு பற்றிப் பேசும்போது, ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், `முற்போக்கு' காலம் என்று ஒவ்வொரு காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு பேசப்படுவது வழமை. கலை இலக்கிய மாற்றங்கள் பற்றிப் பேசப்படுவதற்கு இப்பகுப்புகள் வசதியானதும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்கு தலைமைதாங்கும் ஆளுமைகளால் வெளிக்கொணரப்படுகின்றன.

ஈழகேசரி காலகட்டத்து எழுத்தாளர்களின் (சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்) ஆளுமை என்பது இந்தியச் செல்வாக்கிலிருந்து ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை ஓரளவு விடுவிக்க முயன்ற பங்களிப்பைத் தந்ததெனலாம். இவர்கள் காலத்தில் இலக்கிய விமர்சனம் என்பது பின்தள்ளப்பட்டே இருந்தது. அடுத்து வந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் (அ.செ.மு., சு.வே, வரதர், கனகசெந்திநாதன்) பெயருக்கேற்ப முன்னவர்களுடையதைவிட முற்போக்கான விடயங்களை அணுகுபவையாகவும் ஒருவகை விமர்சன நோக்கைக் கொண்டவையாகவும் இருந்தனவெனக் கொள்ளலாம்.

இவர்களுக்கு அடுத்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இன்னுமொருபடி மேலே சென்றனர். மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான அருட்டல் இவர்களிடம் முழுமையடைகிறது எனலாம். மண்வாசனை, பிரதேச வாசனை என்று வந்த புனைவுகளுக்கு சமூக உணர்வு பாய்ச்சப்பட்டு அவற்றை ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடதுசாரி (மார்க்சியக்) கருத்தியல் படைப்புகளாக மாற்றிய பெருமை முற்போக்கு எழுத்தாளர்களைச் சாரும். இவ்வாறு முற்போக்கு எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்திய காலகட்டத்தின் (1956 - 70) ஆளுமைகளாக க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் நிற்கின்றனர்.

முற்போக்கு காலகட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலும் நேர்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் இயக்கமும் அதன் உச்ச நிலையில் இருந்தபோது (1960-70) அதற்கு எதிரான குரல் எழத் தொடங்கிற்று. முற்போக்கு அணியினரின் கருத்தியல் பற்றியோ, அவர்கள் வாயிலிருந்து உதிர்க்கப்பட்ட `இயக்கவியல்', `கருத்துமுதல் வாதம்', `பொருள் முதல்வாதம்' `சோஷலிஸ்ற் றியலிஸம்', `வர்க்கபேதம்' என்பவற்றின் அர்த்தம் ஒன்றும் புரியாது ஏனைய `வட்டங்களை'ச் சேர்ந்த `எழுத்தாளர்கள் 'தலையைச் சொறிந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அதற்கெதிரான குரல் எழத்தொடங்கிற்று.

ஒன்று எஸ்.பொ.வுடையகுரல், அதேகாலத்தில் எழுந்த அடுத்த குரல் மு.த.வுடையது. எஸ்.பொ.வைப் பொறுத்தவரை தான் மு.போ.எ.சங்கத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தின் விளைவாய், அதற்குக் காரணமாய் இருந்த க.கை., சிவத்தம்பி ஆகியோர் மேல் அவர் ஆரம்பத்தில், வியாசிகதேசிகர் என்ற பேரில் அள்ளிக் கொட்டிய வசைபாடும் விமர்சனங்களையோ அல்லது அதற்குப்பின் `நற்போக்கு' என்ற பேரில் எவ்.எக்ஸி. நடராசா, சதாசிவம் ஆகிய பண்டிதர்க ளையும் கனகசெந்திநாதன் போன்ற எழுத்தாளர்களையும் கூட்டுச் சேர்த்து முன்வைத்த வாதங்களையோ, விமர்சனங்களையோ ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக வைத்த எதிர்வினை என்றோ ஒரு புதுக்கருத்தியல் என்றோ சொன்னால் அது நகைப்பிற்கிடமான ஒன்றே. எஸ்.பொ. ஒரு சிறுகதை ஆசிரியராகவோ, நாவலாசிரியரா கவோ இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிந்தனையாளரோ அல்லது தரிசனம் மிக்க எழுத்தாளரோ அல்லர். இதுவே அவரது அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. அத்தனைகாலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவரைவிடக் கல்வியறிவில் குறைவான சக முற்போக்கு எழுத்தாளர்களிடம் டானியல் ஜீவா இருந்த கருத்தியல் ரீதியான ஒழுங்கமைவு கூட இவரிடம் இல்லாமல் போனதற்கும் காரணம் இதுவே. ஆரம்பத்தில் க.கை.யின் தூண்டுதலின் பேரில் இவர் தினகரனில் `நாவலாசிரியர் வரிசையில்' என்ற தொடரில் அல்பட்டோ மொறாவியாவை பற்றி எழுதியது கூட இவரின் சொந்த அறிதலால் வந்த ஒன்றல்ல. (பார்க்கவும் விமர்சக விக்கிரகங்கள் -மு.த.)

ஆகவே, இக்காலகட்டத்தில் முற்போக்கு எமுத்தாளர்களுக்கு எதிராக எழுந்த நியாயமான ஒரே குரல் மு.த.வுடையதே. அத்தோடு, அவர்கள் போக்கை அவர் எதிர்கொண்டவிதமும் தனியானது. 1962 இல் `முற்போக்கு இலக்கியம்' என்ற தலைப்பில் (இது நூலாக 1984 `கிரியா' வால் வெளியிடப்பட்டது) மு.த .கலைச் செவ்வி யில் மூன்று தொடராக எழுதிய கட்டுரை பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திற்று. அந்த விவாதத்தில் பங்குபற்றுவதாக இருந்த க.கைலாசபதி, அதைப்படித்த பின்னர் ஏதோ நொண்டிச் சாட்டுக் கூறிக்கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால், மு.த.அத்துடன் நிறுத்தாது, `ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் தொடர் கட்டுரையை (இது கிரியாவினால் 1984 இல் நூலாக வெளியிடப்பட்டது) எழுதுகிறார். அதில் முற்போக்கு இயக்கத்தின் பிதாமகரான க.கை.ஈழத்து இலக்கியத்தின் தரத்தை மேன்மைப்படுத்த ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய அதேவேளை, அவரின் போதாமைகளையும் அதன்மூலம் ஈழத்து எதிர்கால இலக்கியப் போக்கு ஒரு திருகப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் விவகாரமாக மாறியமையும் சுட்டியதோடு முற்போக்குச் சம்பந்தப்பட்ட மாயையையும் தகர்க்கிறார். இதுமட்டுமல்லாமல் இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டும் பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்த ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாட்டையும் மு.த.முன்வைக்கிறார். இதற்கிடையில் மு.த.`விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரைத் தொடரை அறுபதுகளின் இறுதியில் `மல்லிகை'யில் எழுதுகிறார். இது அவரால் விரைவாக வெளியிடப்படவிருந்த `போர்ப்பறை'என்ற நூலின் அறிமுகமாகவும் அதன் கருத்தியலின் எளிமை விளக்க மாகவும் வந்துகொண்டிருந்தது. இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் ஒதுக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கிடந்த பல இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஏனைய எழுத்தாளர்கள் பலர் அதைப்படித் ததும் புதுவிதத்தெம்பும் தமக்கும் ஒரு கருத்தியல் இருக்கென்ற பார்வை பெற்றவர்க ளாகவும் நிமிர்கின்றனர். இதை அவர்கள் மு.த.வை நேரில் சந்தித்த போதும் அவருக்கு கடிதம் எழுதியதன் மூலமும் தெரிவித்தனர் என்பது பழைய கதை. இதைத் தொடர்ந்து மு.த.வின் `போர்ப்பறை' நூல் வெளியீடு வருகிறது. இதைப் படித்த போது பேராசிரியர் சிவத்தம்பி, ஏனைய எழுத்தாளர்கள் போலல்லாது, காழ்ப்புணர்வற்று, தனக்கேயுரிய நேர்மையோடு, "60களில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தநூல் இது" என்று மல்லிகையில் எழுதினார்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தில் குறிப்பட்ட, ஒவ்வொருகால கட்டத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளால் வெளிக்கொணரப்படு கின்றன என்பதை சிறிது விசாரணைக்குட் படுத்த வேண்டும். சமூக வரலாற்று ஓட்டமே ஆளுமைகளைத் தீர்மானிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை மிக்க ஆளுமை என்ற ஒன்றில்லை என யாந்திரீக முறையில் ஆளுமைகளை விளக்கும் வைதீக மார்க்சிய வாதிகள் இன்றும் உள்ளனர். ஆனால், அவை சிரிப்புக்கிடமான வகையில் ஒதுக்கப்படுபவையாக உள்ளன என்பதற்கு ஈழத்து இலக்கிய உலகில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்ச்சிகளாய் சாட்சியாய் உள்ளன:

ஈழத்து இலக்கிய உலகில் அறுபதுகளில் க.கை.யின் தலைமையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இரண்டு குரல்கள் எழுந்தன. ஒன்று எஸ்.பொ.வுடை யது. அடுத்தது மு.த.வுடையது. இந்த இருவரில் எஸ்.பொ.வின் ஆளுமையானது, அவரைப் பண்டிதர்களோடு கூட்டுச் சேரவைத்து, `நற்போக்கு' என்ற பேரில் படுபிற்போக்கு வாதத்திற்குத் தலைமை தாங்க வைக்க, மு.த.வுடையதோ க.கை ஆகியோர் காட்டிய முற்போக்குவாதத்தின் போதாமைகளைச் சுட்டிக் காட்டியதோடு அதற்குமப்பால் சென்று இனிவரப்போகும் உலக இலக்கியப் போக்கையும் சுட்டுவதாய் அமைந்தது என்பதிலிருந்து ஆளுமைகளும், அவற்றின் தனித்தன்மைகளும் எவ்வாறு சமூகவரலாற்று ஓட்டத்தைத் தீர்மானிக் கின்றன என்பதை அறியலாம் (இவ்விடத் தில் ரஷ்ஷியாவில் ஸ்ரலின் இருந்த இடத்திற் குப் பதிலாக புகாரினோ ட்றொஸ்கியோ இருந்திருந்தால் வரலாற்றோட்டம் எவ்வாறு மாறியிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது) ***

மு.த. இவ்வாறு தனது இலக்கிய விமர்சனங்கள், புனைவியல், தத்துவார்த்த எழுத்துகள் மூலம் பாரிய புரட்சியொன்றை முன்வைத்த போதும், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகு அதனால் எந்தவித அதிர்வுகளையும் பெற்றதில்லை. ஆகக் கூடிப்போனால் முற்போக்கு அமைப்பையும் அதற்குத்த லைமை தாங்கிய க.கை.யையும் எதிர்த்து எழுதினார் என்பதற்குமேல் எதுவும் தெரியாத தட்டையான புரிதலுடைய வைதீக மார்க்சியவாதிகளும் `நற்போக்கு' `சற்போக்கு' படைப்பாளிகளுமே அன்றும் இன்றும் இங்கு பொதுவிதியான நிலையில் இவர்களிடம் மு.த.வின் எழுத்துகள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன் அதிர்வுகளை உள்வாங்கும் frequency இருந்தால்தானே அது பற்றிப் பேசவும் அது ஒரு திருப்புமுனையா என்று அறியவும் முடியும்?

ஆனால், வரலாற்று ஓட்டம், இவர்களிடம் போய் தீக்கோழிபோல் தலையோட்டிக் கொண்டு நிற்பதில்லை. அதன் அதிர்வுகள் இலங்கையைவிட்டு தமிழ் நாட்டில் பலரைத்தொட்டது. ஆரம்பத்தில் மு.த.வோடு தொடர்புகொண்டிருந்த வெங்கட் சாமிநாதன், மு.த. `முற்போக்கு இலக்கியம்'தொடரைக் கலைச் செவ்வியில் எழுதியபோது `எவ்வாறு இதை நீங்கள் தனியனாய் நின்று செய்யமுடியும்?' என்று வியந்தவர். பின்னர் அவரது `போர்ப்பறை' நூல் வெளிவந்தபோது இதை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு அப்படிச் செய்யாது, தருமு சிவராமின் `கைப்பிடியளவு கடல்' கவிதைநூலுக்கு போர்ப்பறையில் காணப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னுரையாக எழுதினார். இதை `வெ.சாமிநாதன் ஏடு பற்றி சரிநிகரில் மு.பொ. விமர்சித்தபோது சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். அடுத்து, தமிழ்நாடு `சமுதாயம் வெளியீடு' உரிமையாளர் கோவிந்தன் மு.தவின் எழுத்துகளால் கவரப்பட்டு - இதற்கு இராஜநாராயணனும் தூண்டுதலாய் இருந்தார்- அவரது முக்கியமான அனைத்து ஆக்கங்களையும் நூலுருவில் கொணர்ந்தார். இதற்கிடையில் அமரர் சு.ரா. மு.த.வின் எழுத்துகளை வாசித்து, தன்னைப் போன்ற சுயமான சிந்தனையாளனை வரவேற்கும் பாணியில் அவர் பற்றி பின்வருமாறு எழுதினார். (பார்க்கவும் `மு.த.வின் பிரபஞ்ச யதார்த்தம், சு.ரா.)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு யாருளர்?... பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால், பாரதியின் சிந்தனையை இவர் நம்காலத்துக்கு கொண்டுவந்து இடைக்காலச் சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப் படுத்த முயன்றார் என்று சொல்லாம்.

இவ்வாறு சு.ரா.சொன்னதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தளையசிங்கம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் ஜெயமோகன் கூட்டிய தளையசிங்கம் பற்றிய விமர்சனக்கூட்டம் பல தமிழ்நாட்டு முன்னணி எழுத்தாளர்களைப் பங்குகொள்ள வைத்தது. மு.த.தனது போர்ப்பறை நூலை வெளியிட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் முடியுந்தறுவாயில் அவர் பற்றி மீண்டு சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவட்டில் (செப்டெம்பர் 2006) ஆனந்த என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.... ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றிவளர்வதைப் பற்றிய பதிவுகளாகத் தான் இருக்கு. அதாவது, evolution of forms உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாகத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமந்தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக்காலகட்டத் தேவைக்கு ஏற்ப புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது' என்று கூறும் அவர் விண்வெளி சென்று திரும்பியவர் அனுபவம் பற்றியும் இனி வரப்போகும் பரிணாமம் பற்றி அரவிந்தர் கூறிய supermind நீட்சே கூறிய superman பற்றியும் அவர் கூறுபவை எல்லாம் அறுபதுகளி லேயே மு.த. போர்ப்பறைப், மெய்புள்' நூல்களில் கூறியவை இன்று மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மு.த.முன்வைத்த சிந்தனையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு.

சரி, மு.த.முன்வைக்கும் செய்தி என்ன?

அவர் இலக்கிய, தத்துவார்த்த சிந்தனை ஊடாகப் புதிய கருத்தியல் ஒன்றை முன்வைக்கிறார். இப்பொழுது மனிதன் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் காலகட்டத்தில் நிற்கிறான் என்று கூறும் அவர், மார்க்சியம் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக, 12,13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலத்தால் கொண்டுவரப் பட்ட அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமே மார்க்சியம் என்கிறார். அதனால்தான் அது இன்னும் மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னிருந்த இலக்கிய வகைக்கு (செய்யுள், காவியம்) எதிராக மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களையே இன்றும் (சோஷலிஸப் புரட்சி ஏற்பட்ட) நாடுகளில் பின்பற்றுகிறது. இன்று அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாயிலில் நிற்கும் நாம், அந்த அடிப்படைச் சிந்தனை மாற்றத்திற்கு தடையாக இருக்கின்ற, மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கின்ற சுரத்துக்கெட்ட சிறுகதை, நாவல் கவிதை என்கின்ற இந்தப்பழைய இலக்கிய வடிவங்களை உடைத்தெறிய வேண்டும் என்று கூறும் மு.த.இன்றைய அடிப்படைச் சிந்தனை மாற்றமென்பது, பரிணாமத்தோடு (evolution) தொடர்புடைய தென்றும் ஜடம், உயிர், மனம் என்று முன்னேறிவந்த பரிணாம வளர்ச்சி, மனதையும் தாண்டிச் செல்லும் - புதிய மனித இனத்தோற்றத்திற்கு வரவு கூறும் - காலகட்டத்தில் நிற்கிற தென்றும் (on the threshold of a New Life - psycho metabolism) ஜூலியன் ஹக்ஸ்லி, ரெஹார் டி சாடின் ஆகிய உயிரியல் விஞ்ஞானிகளையும் அரவிந்தர் நீட்சே. நீட்சே (supermind, superman) ஆகிய தத்துவஞானிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார். இந்தப் புதிய அடிப்படைச் சிந்தனை மாற்றம் எப்பொழு தும் போலவே கலை இலக்கியத்திலேயே தெரியவரும் என்றும் இதுகாலவரை இருந்துவந்த கலை இலக்கிய உருவங்கள் உடைபட புதிய உருவங்கள் தோன்றும் என்றும் அத்தகைய புதிய வரவுக்கு மு.த. `மெய்யுள்' என்றும் பெயரிட்டார். கூடவே கலைஞனின் தாகம் `அண்டை வீடுகள், புதுக்குரல்கள், `உள்ளும் வெளியும் மெய்' ஆகிய புதிய வடிவங்களையும் ஆக்கிக் காட்டினார்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால் மு.த.வுக்குப் பின்னர் யாரும் `மெய்யுள்'எழுதிக்காட்டவில்லையே, ஆகவே, அவரது புதிய கலை இலக்கிய வடிவம் பற்றிய சிந்தனை தோற்றுப்போன ஒன்று எனச் சிலர் விமர்சித்தனர். இவ்வாறு ஸ்ரீ கணேசன் ஒருமுறை சரிநிகரில் (1998) எழுதிய போது அதற்கு மு.பொ. பின்வருமாறு பதில் அளித்ததாக எனக்கு ஞாபகம்: இன்று மு.த.வுக்கு பின் அவரது இலக்கி ஆர்வலர்கள் (மு.பொ. சு.வி) மெய்யுள் எழுதிக்காட்ட வில்லையே என்று கேட்பது அறியாமையே. இன்று நடைமுறையில் உள்ள கலை இலக்கிய வடிவங்களுக்கு எதிராக உலகெங்கும் எழுதப்படும் அனைத்து anti உருவங்களும் (அவற்றை எழுதுவோர் அவற்றை எழுதுவதற்கு பின்நவீனத்துவம், அமைப்பயல் வாதம், கட்டுடைப்பு என்று காரணம் காட்டினாலும்) மு.த.கூறிய இன்றைய பரிணாமத் தேவையின் கருத்தியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அத்தனை புதிய உருவங்களும் எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தில் வசப்படும் புதிய பிரக்ஞையின் (consciousness) வெளிக் காட்டல்களே - மெய்யுள். சு.ரா.வின் ஜே.ஜே. குறிப்புகளிலிருந்து வில்லியம் பரோஸின் குலைத்துப் போடும் நாவல்கள் வரை இதன் டிப்புகளே என்று புரிந்து கொண்டால் சரி. சகோதரி நிவேதிதா `அன்னை காளி'என்ற நூலில் கூறியது இன்னும் விளக்கமானது: `ஒரு சிந்தனை மற்ற காலகட்டத்தில் இடம் பெறும் மிகக்காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சித்திரவதைகள் அராஜகங்கள் அநியாயங்கள் கூட எதிர்வரப்போகும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் குருட்டுத்தனமான வெளிக்காட்டல்கள் (பார்க்கவும் `அன்னை காளி') என்றார். (இன்றைய இலங்கைக்கு இது மிகப் பொருத்தமானது)

கவிஞர் ஆனந்த கூறிய பரிணாமம் அடையும் பிரக்ஞை பற்றி இன்று நம் எழுத்தாளர்கள் பிரக்ஞை உடையவர்களாய் இருக்க வேண்டும். இது பற்றித் தெரியாது, மு.த சிந்தனையில் ஏற்படுத்திய திருப்பு முனை பற்றி எவரும் பேசமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்து கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்திப்போமாக.

_______________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006



Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________