Wednesday, February 07, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2

கடந்த கிழமை மெல்பேணில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் மூத்த எழுத்தளார் எஸ்.பொ. அவர்கள் ஆற்றிய உரையை முன்னர் ஒலிவடிவில் பதிவாக்கியிருந்தேன்.
இப்போது எஸ்.பொ. அவர்களின் மிகுதி ஒலிப்பதிவுகளைப் பதிகிறேன். மூன்று ஒலிப்பதிவுகளும் mp3, rm ஆகிய வடிவங்களில் தரப்பட்டுள்ளன.

அவ்விழாவில் வழங்கப்பட்ட கேள்விபதில் நேரத்தில் எஸ்.பொ.விடம் கேட்கப்பட்ட கேள்விகளைம் அவற்றுக்கான பதில்களையும் முதலிரு பகுதிகளும் கொண்டுள்ளன.
இரண்டாவது ஒலிக்கோப்பில், 'பின்னவீனத்துவம், நவீனத்துவம்' போன்ற சொல்லாடல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அச்சொற்கள் வாசகனை வெருட்டி பேப்பட்டம் கட்டவே சிலரால் பாவிக்கப்படுகின்றன" என்று எஸ்.பொ. பதிலளிக்கிறார்.



எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு ஒன்று
S.PO-Q&A1.mp3





எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு இரண்டு.

S.PO-Q&A2.mp3




அவ்விழாவில் எஸ்.பொ. அவர்களுக்கு வழங்கப்பட்ட பவளவிழா விருதைப் பெற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய உரை மூன்றாவது கோப்பாக வருகிறது.
உரையின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் பதிவாகவில்லை.
தனக்கு இதுவரை சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்காதது குறித்துக் கதைத்தவை அந்த விடுபட்ட பகுதிக்குள் போய்விட்டன.
S.PO-pathilurai.mp...


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 05, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...

அண்மையில் மெல்பேணில் நடந்த எழுத்தாளர் விழாவில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவற்றின் முதற்பகுதியை ஒலிப்பதிவாக இங்கு இணைக்கிறேன்.

அன்றைய விழாவில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி கருத்தரங்கில் எஸ்.பொ. அரைமணித்தியாலம் கதைத்தவற்றையே மூன்று பாகங்களாக இங்கு இணைத்துள்ளேன். mp3, rm ஆகிய வடிவங்களில் ஒவ்வொரு கோப்பும் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான ஒலிப்பதிவைக் கேட்கலாம்.



யாருக்காவது ஒலிக்கோப்பைத் தரவிறக்க வேண்டுமானால் கேட்கவும், இணைப்பைத் தருகிறேன்.

ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் சிலவற்றைச் சொல்கிறார். கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதில் சில பெயர்கள் தெளிவில்லை. தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம்.

எஸ்.பொ. அவர்களின் அன்றைய முத்துக்கள் சில:

**ஆறுமுகநாவலரை விடவும் தமிழுக்கு அதிகம் சேவை செய்தது விபுலானந்தர் தான்.

**வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது.
கிழக்கில் போய் உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென்று கேட்டால் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி என்றுதான் பதில்வரும். இவர்களை ஆதர்சமாக வைத்துக்கொண்டிருந்தால் எப்படி உருப்படியான படைப்பை உருவாக்குவது?
(குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேலான மயக்கம் யாழ்ப்பாணத்தாரை விடவும் கிழக்கில் அதிகமா???)

**யாழ்ப்பாண மண்வாசனையைச் சரியாக கதைகளில் கொண்டுவந்த முன்னோடி இலங்கையர்கோன்.
(இவரின் வெள்ளிப் பாதரசம் கதையைச் சிலாகித்தார்)

**எட்டாண்டுகளாக நைஜீரியாவில் எழுத்துலக அஞ்ஞாதவாசம் இருந்த தன்னை மீண்டும் எழுத வைத்தது லெ.முருகபூபதி தான்.

**சிறுகதை இலக்கியம் மீள உயிர்ப்புடன் எழுவது புலம்பெயர்ந்தவரால்தான்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு ஒலிப்பதிவை முழுமையாகக் கேளுங்கள்.
தரமற்ற ஒலிப்பதிவுக்கு மன்னிக்க.

எஸ்.பொ. பேச்சு - பகுதி ஒன்று










எஸ்.பொ. பேச்சு - பகுதி இரண்டு








S.PO.Speech2.mp3





எஸ்.பொ. பேச்சு - பகுதி மூன்று








S.PO.Speech3.mp3




________________________________________________

அன்றைய விழாவில், கருத்தரங்கு முடிந்ததும் கேள்வி - பதில் நேரத்தில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவை, பின்னர் விமர்சன அரங்கு முடிந்ததும் அவர் நிகழ்த்திய பதிலுரை, இறுதியில் பவளவிழாப் பாராட்டு நிகழ்வு முடிந்ததும் அவர் நிகழ்த்திய ஏற்புரை என்பவற்றை அடுத்த பதிவில் ஒலிப்பதிவாக இணைக்கிறேன்.

இவற்றில்,
நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வாசகனை பேப்பட்டம் கட்ட எழுத்தாளராலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தபடும் ஓர் உத்தியேயன்றி வேறில்லை என்ற கருத்தைச் சொன்னதோடு இடையில் எழுத்தாளர் சாருவையும் இழுத்தது;
சாகித்திய மண்டலப் பரிசு தனக்கு இதுவரை கிடைக்காததை வருத்தமாகவோ நையாண்டியாகவோ வெளிப்படுத்தியது;

போன்றவை வருகின்றன.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, January 18, 2007

நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்

பனுவல் -பத்மா சோமகாந்தன்-

தினக்குரல் வாரவெளியீட்டில் வெளிவந்த கட்டுரை பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.

"கோயில்களை மூடுங்கள்" என்ற புரட்சிகரமான தலைப்பில் வெளிவந்த நூலின் ஆசிரியர் பெயர் "கோரநாதன். விஷயத்தின் ஆழத்துக்கேற்ற முறையில் அமைந்த நடையிலான இந்நூல் பெரியார் ஈ.வே.ரா. விடம் கொடுக்கப்பட்டது. அதனை ஆர்வத்தோடு வாசித்து முடித்த ஈ.வே.ரா. பெரியார் இந்நூலின்" சொற்கள் வாணலியில் வறுத்து எடுத்தன போல இருக்கின்றன" என்று சுடச்சுட எழுதப்பட்ட முறையைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்து பாராட்டினார்.

பெரியாருடைய பாராட்டைப் பெறக் கூடிய வகையில் புதுமையாகச் சிந்தித்து புரட்சிகரமாக எழுத்து நடையைக் கையாண்டும், கண்டிக்க வேண்டியவற்றை கடுமையாகவும் நையாண்டியாகவும் நகைச்சுவையாகவும் எழுத்தில் வித்தை செய்யக் கூடியவராகவும், சாதாரண விஷயங்களைச் சொல்லும் போது மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் சிறு சிறு வசனங்களையும் எழுதக் கூடிய வல்லமையைக் கொண்டிருந்தவர் வல்லிக் கண்ணன் என்ற எழுத்துலக ஞானி.

1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இராஜவல்லி புரம் என்ற ஊரில் பிறந்த கிருஷ்ண சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட வல்லிக் கண்ணனின் தந்தையார் மு.சுப்பிரமணிய பிள்ளை. தாயார் மகமாயி அம்மாள். இரு அண்ணன் மாரையும் ஒரு தம்பியாரையும் உடன் பிறப்புகளாகக் கொண்டிருந்த கிருஷ்ண சாமி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஓரிரு வாரங்கள் சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பூரண சுகமடைய முடியாமல் இயற்கையெய்தினார்.

தனது பதினேழாவது வயதில் "இதய ஒலி" எனும் கையெழுத்துப் பிரதியொன்றை தானாகவே ஆரம்பித்து நடத்தி எழுத்துலகில் காலடியைப் பதிக்கத் தொடங்கிய வல்லிக் கண்ணன் என்ற புனைப் பெயரைச் சுமந்து கொண்ட கிருஷ்ண சாமி இரு வருடங்களின் பின்னர் `பிரசண்ட விகடன்' என்ற பத்திரிகையில் `சந்திர காந்தக்கல்' என்ற தனது முதலாவது சிறு கதையை வெளியிட்டு தனது எழுத்திற்கான அங்கீகாரத்தைப் பதிவு செய்து கொண்டார்.

ஆக்க இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் பிடரியைப் பிடித்துத்தள்ளவும் படைப் பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பத்திரிகை சிறு சஞ்சிகைகள், கதை, கட்டுரை, நாவல், மொழி பெயர்ப்பு, விமர்சனம், திரைக்கதை வசனம், கவிதை எனப் பற்பல அம்சங்களிலும் கூர்மையான பார்வையுடன் பேனாவைச் செலுத்தி தனது அறிவையும் ஆற்றலையும் மேன் மேலும் வளர்த்துக் கொண்டார். இதன் நிமித்தமாகத் தினமணி ஏ.என்.சிவராமன், மஞ்சரி ஆசிரியர் தி.ஐ.ரங்கநாதன், `எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா, தி.க.சி, கண முத்தையா, அகிலன், கு.அழகிரி சாமி டாக்டர் மு.வரதராஜன் தி.ஜானகிராமன், தொ.மு. சிதம்பர ரகுநாதன், சின்னக் குத்தூசி, இந்திரா பார்த்த சாரதி பி.எஸ்.இராமையா, ந.பிச்சமூர்த்தி, சே.கணேஷலிங்கம், ஜெயகாந்தன், திருப்பூர் கிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் போன்ற தலைசிறந்த சிந்தனையாளர்களதும் எழுத்துலகப் பிரம்மாக்களதும் மத்தியில் மிகவும் மதிப்பு வாய்ந்தவராகவும், போற்றப்படுபவராகவும், மிக மிக வேண்டிய வராகவும் விளங்கினார்.

குடும்பச் சுமைகளையோ, லௌகீக வாழ்க்கையையோ மேற்கொண்டிராத வல்லிக் கண்ணன் ஆக்க இலக்கியத்தின் மீதான விடுதலறியாப் பற்றினால் பல இலக்கியச் சுமைகளைத், தனது முதுகிலேயே சுமந்து கொண்டு மகிழ்ந்தார். சஞ்சிகை உலகில் சில காலம் அனுபவம் பெற்ற இவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ,எழுத்து என்பவற்றில் தனது மனதை முற்று முழுதாக ஈடுபடுத்தி உழைத்துக்கொண்டிருந்த வேளைகளில் ஈழத்து எழுத்தாளர் பலரைச் சந்தித்துப் பேசி ஈழத்து இலக்கியத்தில் பெரும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். ஈழத்து இலக்கியத்தை அறியும் ஆவல் ஈழ இலக்கியத்தின் வீச்சையும் போக்கையும் நன்கு அவதானித்து பாராட்டினார். பலருடைய ஆக்கங்களைப் பொறுமையோடும் அவதானிப்போடும் வாசித்து அவற்றை எடை போட்டு மெலெழுந்து நிற்பவற்றைப் புகழ்ந்தும் நசிவானவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்தியும் உதவுவதில் பெரும் பங்கு கொண்டிருந்த போக்கை அவரது இலக்கியத் தடத்தின் பரிமாணங்களில் சிலவாகக் கொள்ள முடியும். ஆகையினாலன்றோ ஈழத்து ஆக்க இலக்கியக் காரர் பலருடைய நூல்களுக்கு டாக்டர் நந்தியின் `தரிசனம்', பத்மா சோமகாந்தனின் `வேள் விமலர்கள்' நீ.பி.அருளானந்தத்தின் `வாழ்க்கையின் வர்ணங்கள்' என்றநாவல், எனப் பலருடைய ஆக்கங்களை வரவேற்று முன்னுரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாசக் கடைசி வாரங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் இரு தினங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டைச் சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தியது. இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உரையாற்றும் விசேட விருந்தினராகத் தமிழகத்திலிருந்து பிரபல நாவலாசிரியர், பொன்னீலன் தாமரை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோருடன் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் இலங்கைக்கு முதன் முதலாக வருகை தந்திருந்தார். பல சிரமங்களின் மத்தியிலும் முதன் முதலாகத் தான் இலங்கை வந்துள்ள விபரங்களையும் `வல்லிக் கண்ணன்' என்ற புனைபெயரையே `விசா' கடவுச் சீட்டு எடுப்பதற்காகவும் போடப்பட்ட சங்கடங்களை மாநாடு ஆரம்பித்த பின்னரே கொழும்பு சரஸ் வதி மண்டபத்தை வந்தடைய முடிந்த சிக்கல் நிறைந்த தனது பிரயாணம் பற்றியும், தனது இயற்பெயரை அறவே மறந்து விட்ட உண்மையையும் ஈழத்து இலக்கியச் கலைஞருடைய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் சுவைபடத் தனது பேச்சின் இடையே திணித்துப் பேசி ஈழத்து மக்களுடைய அன்பையும் இலக்கியதாகத்தையும் தீர்த்துக் கொண்டது இன்று நிகழ்ந்த சங்கதி போல் நினைவில் நிற்கிறது.

ஈழத்தில் வ.க. தங்கியிருந்த வேளைகளில் இங்கு வாழும் இலக்கிய நெஞ்சங்களையும் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், விமர்சகர், சுவைஞர், கலைஞர், எனப் பலதுறை சார்ந்தவர்களையும் சந்தித்துப் பேசுவதிலும் உரையாடி மகிழ்வதிலும் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். சாகித்ய இரத்தினம் வரதர் அவர்களுடைய பிறந்த நாளான முதலாம் திகதி ஜூலை மாசத்தன்று "வரத கதைகள்" என்னும் நூலை வெளியிட்டு வைத்து மகிழ்ந்து உரையாற்றினார்.

நவீன இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த வல்லிக் கண்ணன் சராசரியான தமிழக மக்கள் உரையாடுவது போலன்றி, மிகச் சுருக்கமாகவும் நறுக்கான இரண்டொரு சொற்களுடனும் மிகக் குறைவாகவே பேசுவார். ஆனாலும், அவை மிக ஆணித்தரமாகவும் வெகு நிதானமாகவுமே இருக்கும். இதுவே அவருடைய உரையாடலின் இயல்பு. அதீதிமான அமைதியும் அடக்கமான மெதுவாகப் பேசும் பாங்கையும் உடையவரே இந்த இலக்கிய யோகி. இலக்கிய சம்பந்தமான விஷயங்களையோ கடந்த கால சிறு சஞ்சிகைகள் பற்றியோ நவீன இலக்கியத்தின் வரலாறு, எழுத்துலகப் பிரம்மாக்கள் பற்றி யெல்லாம் பேசத் தொடங்கினால், காலம், நேரம், ஆண்டுகள், இடங்கள், பெயர்கள், விஷயங்கள் ஆகிய விபரங்கள் கூடச் சற்றும் பிசகாமல் அச் சொட்டாகச் சொல்லி ஆற்றொழுக்கு நடையில் விபரித்துக் கொண்டே போவார்; அவ்வேளையில் `ஜெட் விமானத்தின் வேகம் போல இருக்கும் அவர் பேச்சு.

பெருங்காற்று அடித்தால் எங்கே அள்ளுப்பட்டு வீசப்பட்டு விடுவாரோ என்று எண்ணக் கூடிய மிக மெலிந்த சுள்ளலான உருவம். இந்த மனிதனிடம் இத்தனை ஞாபகசக்தி நிறைந்த விடய அடக்கமும் ஆளுமையும் எப்படி?....! என வியந்து நிற்போரே பலர். அத்தனை தூரம் நவீன இலக்கியப் பரப்பில் தோய்ந்து எழுந்தவர் இந்த இலக்கியத் திருமூலர்.

நாம் தமிழகம் சென்று இவரைச் சந்தித்த வேளைகளிலெல்லாம் வரதர், டொமினிக் ஜீவா, சாந்தன் போன்ற எழுத்தாளர்கள் சிலரது பெயர்களைக் கூறியும் இங்கிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள், அவற்றின் செல் நெறிகள் பற்றியெல்லாம் புகுந்தகத்தில் வாழ்ந்து கொண்டு பிறந்தகத்தின் நிலையைப் பற்றி அறிய அவாவும் மணப் பெண் போல வெகு அக்கறையோடு கேட்டறிந்து கொள்வார்.

கடைசி நாட்களில், சுகவீனமுற்றிருந்த சில நாட்கள் தவிர ஏனைய நாட்களில், எண்பத்தாறு ஆண்டுகள் நிறைந்த இவரது வாழ்வில் இறக்கும் வரை காந்தியடிகளின் கொள்கைகளைச் சார்ந்து தான் உபயோகிக்கும் உடைகளையும், தான் உணவுண்ணும் பாத்திரங்களையும் தனது கரங்களாலேயே சுத்தம் செய்து கொள்ளும் பழக்கமும் பண்பும் கொண்டவர். எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த இவர் மிக உயர்ந்த சிந்தனைகளுக்கு உரியவராகவே வாழ்வை மேற்கொண்டிருந்தார்.

எழுத்தையே நேசித்து எழுத்தையே காதலித்து எழுத்தையே மணஞ்செய்து எழுத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த வல்லிக்கண்ணன் தனது பிரமச்சரிய வாழ்வினால் மட்டுமல்ல ஏனைய எழுத்தாளர்களை விட மிகவும் வித்தியாசமான போக்குகள் வரித்துக் கொண்டவர். எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாத இவர் உயர்ந்த ஒழுக்க சீலராகவே வாழ்ந்தார்.

வ.க, சொனாமுனா, கோரநாதன், இளவல், ஆர். ரத்னம், நையாண்டி பாரதி, மார்பியல், அவதாரம், ரா.சு.கி. ஞானப்பிரகாசம், எஸ். சொக்கலிங்கம், மிவாஸ்கி என ஏகப்பட்ட புனைபெயர்களுள் ஒளிந்து கொண்டு எழுதும் வல்லிக்கண்ணன் வாசிப்பதில் சூரனென்றும் எழுதுவதில் `ராட்சஸன்' என்றும் பலர் கூறி வியந்தாலும் இவ்விரு சூரத்தனமான பெயர்களுக்கும் அவரது இயல்பான சுபாவம் மிகவும் மாறுபட்டது. சிறுகதைகளைப் படிக்கும்போது அவற்றிக்கேற்ப லாவகமான நடையில் இனிமையாக எழுதும் வல்லிக்கண்ணன் புனைபெயர்களுள் மறைந்து கொண்டு அப்பெயர்களுக்கும் தான் எழுதும் விடயத்துக்குமேற்றதாகத் தன் நடையை மாற்றிக் கொள்வதில் விற்பன்னராகவே விளங்கினார். இந்த ரீதியில் வ.க. அவர்களைப் பு. பித்தனுடன் ஒப்பிடலாமெனவும் பொருளுக்கேற்ப நடையை மாற்றிக் கொள்வது ைநயாண்டியாகவும் அரசியல் கட்சி சார்பற்றும் எழுதும் வகையில் வ.க., புதுமைப்பித்தனை முன்னோடியாகக் கொண்டவரென எழுத்தாளர் ம.ந. ராமசாமி குறிப்பிடுவார். குறைவில்லாத பூரண உன்னத இலக்கியமென்பது கிடையாது. அப்படியிருக்கையில் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி எழுத்தாளனை முடக்குவது இலக்கியத்துக்குச் செய்யும் சேவையல்ல என்பதே வ.க. வின் கருத்தென்பதால் அவர் குறைவான இலக்கியங்கள் மட்டையை இரு கீற்றாகக் கிழித்துத் தலைமாடு கால்மாடாகப் போட்டுக் கழிப்பது போலச் செய்யமாட்டாரென்று இவர் அபிப்பிராயப்படுகிறார். எழுத்தாளர் என்போர் மனிதப்பிறவியில் சிறந்தவர்கள் என்ற நல்லெண்ணமே வ.க. வின் உடம்பெல்லாம் விகசித்து நின்றது.

20 ஆம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தை எதிர்கால இளைஞர்களும் ஏனையோரும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் வ.க. மணிக்கொடிக்காலம், தீபம் யுகம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் உரைநடை, சரஸ்வதிகாலம் என்ற தொகுப்பு நூல்களின் மூலம் தற்கால நவீன இலக்கியச் செல்நெறியை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் படைப்புகளோடு தொகுத்து வெளியிட்டு எதிர்கால சந்ததிக்கு கடந்தகாலம் பற்றிய ஒளியை ஏற்றி வைத்த இந்த மணிக்கொடி சகாப்த எச்சமான இம் மாணிக்கத்தின் புகழ் என்றென்றும் மங்காமல் நவீன இலக்கியம் கொடிவிட்டுப்படர ஒளிவீசிக் கொண்டே இருக்கும் என்பது சத்தியமான உண்மை; வெறும் புகழ்ச்சி*.

*பத்திரிகையில் 'வெறும் புகழ்ச்சி' என்றுதான் பதிவாகியிருக்கிறது. 'வெறும் புகழ்ச்சியன்று' என்று வந்திருக்க வேண்டும்.
___________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, December 12, 2006

ஈழ எழுத்தாளருள் மார்க்சியப் பரிச்சயம்

________________________________
தினக்குரல் பத்திரிகையில் வந்த கட்டுரையிது.
பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது.
தகவல்களைப் பொறுக்கவோ புது விவாதமொன்றை உருவாக்கவோ உதவக்கூடும்.

________________________________

ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம்
பனுவல் - நந்தினி சேவியர்

கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது.

பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர்.

1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே.

`பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

அ.ந. கந்தசாமி இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தேசாபிமானிப் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் `சுதந்திரன்', `வீரகேசரி' பத்திரிகையிலும் பணியாற்றினார். மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்.

யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எம்.சி. சுப்பிரமணியம் தலைமையில் உருவான சிறுபான்மை தமிழர் மகா சபையில் அங்கத்தவர்களாக இருந்த டானியல், ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி போன்றவர்களே ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டவர்களே.

இவர்களோடு செ. கணேசலிங்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அகஸ்தியர், இளங்கீரன், எச்.எம்.பி. முகைதீன் போன்ற படைப்பாளிகளும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களும் முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது 1954 ஜூன் 27 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அமரர் பா. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பாடல், டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் மார்க்சியத்தின் பால் ஆழமான ஈடுபாடு கொண்டார்கள்.

இவர்களது படைப்புகள் பிற்கால `ஈழகேசரி'யிலும் `சுதந்திரன்' போன்ற பத்திரிகைகளிலும் ஏராளமாக வெளிவந்தன.

1960 ஆம் ஆண்டில் மு.போ.எ. சங்கம் தேசிய இலக்கியம் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் ஆரம்பிக்கப்பட்டது.

1961 இல் வெளியான இளங்கீரனின் `மரகதம்' பத்திரிகையில் தேசிய இலக்கியம் பற்றிய முதலாவது கட்டுரையை க. கைலாசபதி எழுதினார். பின்னர் ஏ.ஜே. கனகரட்ணா, அ.ந. கந்தசாமி போன்றவர்கள் தேசிய இலக்கியம் பற்றி எழுதினார்கள்.

தேசிய இலக்கியம் முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி வந்ததனால் ஆத்திரம் கொண்ட இலக்கிய சனாதனிகள், படைப்பிலக்கியவாதிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். போதிய கல்வியறிவு இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள், மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள், இவர்கள் எழுதும் இலக்கியம் இழிசினர் இலக்கியம் என்றெல்லாம் இகழப்பட்டன.

1962 இல் தினகரனில் ஆரம்பிக்கப்பட்ட விவாதத்தில் மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி அ. சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ. நடராஜா போன்றவர்கள் வாதிட எழுத்தாளர் தரப்பில் இளங்கீரன் அ.ந.க. சிவத்தம்பி போன்றோர் வாதிட்டு வென்றனர். க. கைலாசபதி `தினகரன்' ஆசிரியராக இருந்த காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நிறைய ஊக்கம் வழங்கினார். இளங்கீரன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் போன்ற எழுத்தாளர்கள் மிகவும் உற்சாகமாக தமது படைப்புகளை வெளியிட்ட காலகட்டமும் அதுவே.

கைலாசபதி பல்கலைக்கழக விரிவுரையாளராகிய பின்னர் மார்க்சிசத்தை ஆதரித்த பல எழுத்தாளர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து தோன்றினார்கள். செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன் போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். யோ. பென்டிக்ற்பாலன் இவர்களது சமகாலத்தவரே. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலரும் இருந்துள்ளனர். வ.அ. இராசரத்தினம், அ.ச. அப்துஸ்சமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

சமசமாஜக் கட்சியினைச் சேர்ந்த சு. இராசநாயகன் மார்க்சிய எழுத்தாளராக தம்மை இறுதிவரை காட்டிக்கொள்ளவில்லை. இன்னுமொரு முக்கிய விசேடம் க. கைலாசபதியினால் அறிமுகமான அ. முத்துலிங்கம் ஒரு மார்க்சிய எழுத்தாளராக உருவாகாமல் போனார். இளங்கீரனின் தென்றலும் புயலும், நீதியே நீ கேள், செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், ஒரே இனம், நல்லவன், சடங்கு, டானியல் கதைகள், மேடும் பள்ளமும், (நீர்வை பொன்னையன்) குட்டி, (யோ. பெனடிக்ற்பாலன்), ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை சாலையின் திருப்பம், என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம், யோகநாதன் கதைகள், கவிஞர் பசுபதியின் புது உலகம் முதலியன அறுபதுகளில் வெளிவந்தவையாகும். சோசலிச யதார்த்தவாத படைப்புகள் பற்றிய கருத்துகளும் மார்க்சிய விமர்சகர்களால் இக்கால கட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டன.

கவிதைத் துறையில் முருகையன், சில்லையூர், கவிஞர் பசுபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக அறியப்பட்டதுபோல் மகாகவி அறியப்படவில்லை. அவர் மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கவில்லை. இத்தலைமுறையினைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நுஃமான் போன்றவர்கள் அறிமுகமானார்கள். கவிதை புதுவீச்சுக் கொண்டது. மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் முற்போக்காளர்களோடு முரண்பட்ட காலகட்டமும் இதுவே. விமர்சன விக்கிரகங்கள், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம் ஆகிய கட்டுரைகள் இக்காலகட்டத்தில் மு. தளையசிங்கத்தால் எழுதப்பட்டன.

எஸ்.பொ. முற்போக்கு அணியினரால் வெளியேற்றப்பட்டு, நற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்து, முற்போக்காளரை எதிர்த்ததும் இக்கால கட்டத்தில்தான்.

தமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டல பரிசில்கள் வழங்கப்பட ஆரம்பித்ததும் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் பரிசு பெற்றதும் இக்காலகட்டத்தில் தான். இதனை அடுத்து, புகழ் பெற்ற முட்டை எறிவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இழிசினர் வழக்கு மண்வாசனை என்றெல்லாம் பேசப்பட்ட இலக்கிய வகைக்கமைய மரபு வாதிகள் எழுதத் தொடங்கினார்கள். பின்னர் மண்வாசனையின் பிதாமகர்கள் தாமே என மார்தட்டும் நிலைக்கு அவர்கள் வந்தனர். இந்த ஆரோக்கிய நிலைக்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இயக்கத்தினரின் போராட்டமே காரணியெனலாம்.

இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள். க. சிவத்தம்பி, ஜீவா, அகஸ்தியர் போன்றோர் ரஷ்ய சார்பு எடுத்தனர்.

"வசந்தம்" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இ.செ. கந்தசாமியால் வெளியிடப்பட்டது.

இதன்பிறகு, டொமினிக் ஜீவாவினால் "மல்லிகை" ஆரம்பிக்கப்பட்டது.

ரஷ்ய சார்பு எழுத்தாளர்களின் படைப்புகளின் உத்வேகம் மந்த நிலையை அடைந்திருந்தமையால் மு. போ. எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள், 1963 இற்கும் 1973 இற்கும் இடையில் பெரும் தேக்கம் அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகவும் பிரேம்ஜி ஆயுள்காலச் செயலாளர் என கிண்டலாகப் பேசப்பட்ட நிலையும் தோன்றியது.

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பாதைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வந்தன. செ. கணேசலிங்கனின் செவ்வானம், தரையும் தாரகையும், யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் நாவல்களும், நீர்வை பொன்னையனின் உதயம், செ. கதிர்காமநாதனின் கொட்டும் பனி, செ. யோகநாதனின் `ஒளி நமக்கு வேண்டும்' தொகுதிகளும் வெளிவரத் தொடங்கின. தமிழக விமர்சகர்களான க.ந. சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களுக்கு பதிலிறுக்கும் க. கைலாசபதியின் மார்க்சிய விமர்சனக் கட்டுரைகளும் நாவலிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன.

தீண்டாமை ஒளிப்பு வெகுஜன இயக்கம் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற அறை கூவலுடன் இயக்கம் வளர்ந்தது. புகழ் பெற்ற மாவிட்டபுரப் போராட்டம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டம், நிச்சாமம், மந்துவில், மட்டுவில், அச்சுவேலி, கன்பொல்லை என்ற சாதி அமைப்புக்கெதிரான அலை கொதித்தெழுந்தது.

போராட்ட இலக்கியங்கள் உருவாகின. சுபத்திரனின் இரத்தக்கடன், என்.கே. ரகுநாதனின் மூலக்கதையுடன் அம்பலத்தாடிகள் அவைக்காற்றிய கந்தன் கருணை, மௌனகுருவின் சங்காரம் என்பன தோன்றின. களனி, தாயகம், சமர் அணு, வாகை என முற்போக்குச் சஞ்சிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. டானியலின் பஞ்சமர், செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் போன்ற நாவல்கள் வெளிவந்தன.

சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களின் எழுச்சியைக் கூறும் இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்களாக விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டன. புதுக்கவிதை முற்போக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் நிகழ்ந்தது.

மு.போ.எ. சங்க செயற்பாடுகளில் அதிருப்பியுற்றவர்களால் செம்மலர்கள், இலக்கியவட்டம், தேசியகலை, இலக்கியப்பேரவை, திருகோணமலை முன்னோடிகள், சங்கப்பலகை போன்றவை தோற்றுவிக்கப்பட்டன. இவைபோன்ற இயக்கங்கள் கல்முனை, மன்னார் போன்ற பிரதேசங்களில் உருவாகின.

இவர்கள் திருகோணமலையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி புதிய ஜனநாயக கலாசாரத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன் போன்றவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மு.போ.எ. சங்கம் 1975 இல் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தியது. தேசிய இனப் பிரச்சினைத் தீர்விற்கான 12 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கவியரங்கில் சண்முகம் சிவலிங்கம் மாநாட்டின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் கவிதை ஒன்றைப்பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட டானியல், அன்ரனி, நந்தினி சேவியர், வ.ஐ.ச. ஜெயபாலன், சாருமதி, சசி, கிருஷ்ணமூர்த்தி, நல்லை அமிழ்தன், தில்லை முகிலன், இராஜ தர்மராஜா, பாலமுனை பாறூக் அன்புடீன், முல்லை வீரக்குட்டி, முருகு கந்தராசா, க. தணிகாசலம், சி. சிவசேகரம் போன்றவர்களும் மு. நித்தியானந்தன், சமுத்திரன் சித்திரலேகா போன்ற விமர்சகர்களும் உருவானார்கள்.

சுந்தரலிங்கம், மௌனகுரு, தாசிசியஸ், பாலேந்திரா, இளைய பத்மநாதன் போன்ற நாடக நெறியாளர்கள் உருவானதும் இக்காலகட்டத்திலேயே நிகழ்ந்தது.

செ. கணேசலிங்கனின் குமரன் சஞ்சிகையில் அ. யேசுராசா ஒரு கவிதையை எழுதியமையும் பின் `அலை' சஞ்சிகையை ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். மல்லிகையில் கூட அ. யேசுராசாவின் முற்போக்கான ஒரு கவிதை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. "ஊரில் பெருமனிதர் எடுத்த விழாவிடை பேருரைகள் ஆற்ற சில பெரிய மனிதர் மேடை அமர்ந்திருந்தார்...." என அக்கவிதை தொடங்குகிறது.

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பின் காரசார விமர்சனம் அவரை எதிரணிக்கு தள்ளியது என்ற கருத்தும் நிலவியது.

பிரசார இலக்கியங்கள் என அக்காலத்தில் வெளிவந்த இலக்கியங்களை விமர்சிக்கப்பட்டபோது புதிய இளந்தலைமுறை கலைத்துவப்பாங்கான இலக்கியங்களை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்டது. பழைய தலைமுறை எழுத்தாளர்கள் விமர்சகர்களின் தொடர்புகளைத் தவிர்த்து சுயமாக இயங்கும் பக்குவம் இத்தலைமுறைக்கு இருந்தது.

மா.ஓ. வின் யெனான் கருத்தரங்கு உரை அவர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.

செ. கணேசலிங்கன், டானியல் போன்றோரின் படைப்புகளை தோழமையுணர்வுடன் கடுமையான விமர்சனத்துக்கு இவர்கள் உள்ளாக்கினார்கள்.

பஞ்சமர் நாவல் வெளியீட்டு விழாவில் அன்றைய தினம் தினகரனில் க. கைலாசபதி தாம் எழுதிய விமர்சனத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் அளவிற்கு விமர்சனம் மிகவும் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டது.

சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் இலங்கை விமர்சனத்துறையிலும் படைப்பிலக்கியத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

. ஏ.ஜே. கனகரட்ணா போன்றவர்களே கலாசாரப் புரட்சியை வரவேற்று கருத்துக் கூறும் நிலை இருந்தது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய மாதகல் வ. கந்தசாமி, பாரதியார் கவிதைகளை விமர்சிக்கும் தீவிர போக்கு எடுத்தார். காலக்கிரமத்தில் அவர் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
திக்வெல்லை, நீர்கொழும்பு, அநுராதபுரம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கல்முனை, அக்கரைப்பற்று என்று முற்போக்கு சிந்தனைகளை அங்கீகரித்தவர்கள் பரஸ்பரம் இணைந்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின.

டானியல் பஞ்சமர் வரிசை நாவல்களை முனைப்புடன் எழுதத் தொடங்கினார். இன்று தலித்திலக்கிய முன்னோடியாக கணிக்கப்படும் டானியல் தன்னை ஒரு மார்க்சிய எழுத்தாளராகவே இறுதிவரை கூறி வந்துள்ளார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

1983 க்குப் பின்னர் ஈழத்தில் ஏற்பட்ட மாற்றம் மிக முக்கியமானது. தேசிய ஐக்கியத்தை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாதபடி தமிழர் பிரச்சினைகளை எழுதத் தலைப்பட்டனர்.

1986 செப்டெம்பர் 17 இல் இனப்பிரச்சினையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் மாநாடு ஒன்று யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது.

வானம் சிவக்கிறது எழுதிய புதுவை இரத்தினதுரை, தமிழரின் ஆஸ்தான கவிஞராக மாறினார். இரவல் தாய்நாடு போன்ற செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் ஆகியோரின் நாவல்கள் வெளிவரத் தொடங்கின.

இது சிலரால் முற்போக்கு எழுத்தாளர்களின் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனாலும், இதுவும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் ஒரு முற்போக்கான நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் மறுபரிசீலனை விமர்சனங்கள் வெளிப்பாடடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

மார்க்சிய விமர்சனத்தை அங்கீகரிக்காது இருந்த ந. சுப்பிரமணியம் போன்றவர்கள் மார்க்சிய விமர்சகர்களாக மாறியதும் இக்காலத்தில்தான்.

ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய விடயம் மார்க்சிய எழுத்தாளர்களையும் மார்க்சிய இலக்கியத்தையும் எதிர்த்தவர்கள், மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்பதுதான்.

இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். எஸ். பொ. சுபமங்களா பேட்டியில் தன்னை ஒரு மார்க்சியத்து உடன்பாட்டுக்காரராக குறிப்பிடுகிறார். அதேபோல், மு. பொன்னம்பலம் மூன்றாவது மனிதன் பேட்டியில் தன்னை மார்க்சிய விரோதியாகக் காட்டவே இல்லை. அத்தோடு, தீவிரமாக கவனிக்க வேண்டிய விடயம் மு.பொ. 50 இக்குப் பின் ஈழத்து இலக்கியம் பற்றிய பார்வை என்ன என்ற மூன்றாவது மனிதன் கேள்விக்கு.

50 க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுத்தான் வந்திருக்கிறது என ஆரம்பித்து.....

முற்போக்கு எழுத்தாளர்கள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்லி `கைலாசபதி' தினகரன் ஆசிரியராக இருந்ததும் முக்கிய பங்களிப்பு என்றும் கூறிவிட்டுத்தான் கைலாசபதி போன்றவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களையே தூக்கிப்பிடித்து நின்றார்கள் என்று கூறுகிறார்.

எம்.ஏ. நுஃமான் `ஞானம்' சஞ்சிகைப் பேட்டியில் பின்வருமாறு ஒரு கருத்தை வைத்துள்ளார்.

குழு விமர்சனம் நமது மார்க்சிய விமர்சகர்களைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு மற்றவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் யாவரும் வெவ்வேறு குழுக்களாக இயங்கினார்கள். ஆயினும், மார்க்சிய விமர்சகர்களின் சாதனையை இவர்கள் எட்டவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டும் குழு விமர்சகர்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு இவர்களில் யாருக்கும் தார்மீக உரிமையில்லை. மார்க்சிய விமர்சகர்களை விட மற்றவர்களே வசை விமர்சனத்திற்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்ற பொருள்பட சில விடயங்களைக் கூறியுள்ளார். இதே பேட்டியில் இன்னோரிடத்தில், நான் ஒருபோதும் எந்த ஒரு மார்க்சிய இயக்கத்துடனும் என்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவனில்லை. தத்துவார்த்த ரீதியில் மார்க்சியத்துடன் எனக்கு உடன்பாடு இருந்தது என்றும் பல அம்சங்களில் அந்த உடன்பாடு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார்.

செங்கையாழியான் `ஈழகேசரி'க் கதைகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கலைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் சிறுகதை படைக்கின்ற காலச்சூழலை நாம் கடந்த இந்த மண்ணில் ஏற்றத்தாழ்வற்ற சகல சுதந்திரங்களையும் அனுபவிக்கும் மானிட இருப்பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத்திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப்புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் இன்றும் கொண்டிருக்கின்றது."

இக்கருத்துகள் சமீபத்தில் வெளிவந்தவையே. எனவே, மார்க்சிய இலக்கியத்தையோ விமர்சனத்தையோ எவரும் நிராகரிக்கவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டுமே எதிர்த்தார்கள் என்பது தெளிவு.

இன்றைய நிலையில் தமிழர் பிரச்சினையை விட்டு விட்டு இலக்கியம் படைப்பது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.

இயக்கம் சார்ந்த படைப்புகளாக நிராகரிக்கப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை விஞ்சுமளவுக்கு, தமிழ்ப் போராளிகள் குழுக்களை ஆதரித்த, எதிர்த்த படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகளில்தான் வெளி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.

இது சென்ற நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியத்தின் வெற்றியென்றே கருதப்பட வேண்டும்.

நமது ஈழத்து நிலைமை தமிழக நிலைமையை விட வித்தியாசமானது. எமது சூழலை நிகர்த்த வேறு பல நாடுகளின் இலக்கியங்களோடு எமது இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு இலக்கிய விமர்சன முறைமையை நாம் செய்வதுதான் தற்போதைய கடப்பாடாக நாம் கருத வேண்டும். அதுவே இந்த நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியவாதிகளின் முக்கிய பணியாகவும் இருக்க வேண்டும்.

உசாத்துணை

1. புதுமை இலக்கியம் 2. சிறுபான்மை தமிழர் மகாசபை மலர் 3. இளங்கீரனின் தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் 4. புதுமை இலக்கியம் பேரரங்கு- 96 5. மூன்றாவது மனிதன் இதழ்- (04) 6. மூன்றாவது மனிதன் இதழ்- (05) 7. ஞானம் இதழ்- 02 8. ஞானம் இதழ்- 03 9. சுபமங்களா நேர்காணல் 10. ஈழகேசரிக் கதைகள் முன்னுரை

பின் இணைப்பாக சில குறிப்புகள்

மார்க்சியத்தை அங்கீகரிக்கும் கே.ஆர். டேவிட், ந. ரவீந்திரன் (வாசீகன்), எம்.வை. ராஜ்கபூர் போன்றவர்களும் எழுபதுகளில் முன்பின்னாக அறிமுகமாகியவர்களே. ந. ரவீந்திரனின் விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிய நோக்கிலானவை. லெனின் மதிவாணம் ஒரு மார்க்சிய விமர்சகராக 90 களில் அறிமுகமாகியுள்ளார்.

தனது 25 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த நூற்றாண்டில் வெளியீட்டுத் துறையில் மிகக் காத்திரமான பங்கினைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய இலக்கியவாதிகள் அல்லாதவர்களினதும் படைப்புகளையும் தே.க.இ. பேரவை வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு வருவது ஈழத்து மார்க்சிய இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயமாகும். `தாயகம்', பத்திரிகையை மிகுந்த நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திலேயே வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும்.

______________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 08, 2006

படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை

"ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" என்ற தலைப்பில் தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரையொன்றை ஏற்கனவே பதிவாக்கியிருந்தேன்.
இம்முறை அக்கட்டுரையை விமர்சித்து ஒரு கட்டுரை தினக்குரலில் வந்துள்ளது.
எதிர்வினைக் கட்டுரையில் பெரியளவில் குறிப்பிடக்கூடியவையில்லையென்று நான் கருதினாலும் அதையும் இங்குப் பதிவாக்குகிறேன்.


இங்கும் சொந்தப்பேரில் எழுதும் பிரச்சினை வருகிறது. ;-)

ஏற்கனவே "பட்டியலிடுதல்" தொடர்பாக பெயரிலியுட்பட சிலரால் வலைப்பதிவுகளில் கதைக்கப்பட்டதென்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
_________________________________________________


படைப்பாளிகளின் பட்டியல் படைப்புலக அடக்குமுறை!
-எம்.நவாஸ்சௌபி-

படைப்பாளர்களை பட்டியல் படுத்தும் ஒரு நடைமுறை இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது. இதற்காக சரியான மதிப்பீடுகள் அல்லது அளவுகோல் பற்றிய ஒரு வரையறையை முன்வைக்காமல் இவ்வாறு பட்டியல் படுத்தும் முயற்சிகள் இன்னும் இடம் பெறுவது தான் பலவீனமான ஒரு விடயமாக இருக்கிறது.

`தினக்குரல்' பனுவல் பகுதியில் `ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்' எனும் தலைப்பில் தாவிது கிறிஸ்ரோ - என்பவர் படைப்பு சார்ந்த பட்டியலுடன், பின் நவீனத்துவத்திற்கான பெருத்த கண்டனத்தையும் எழுதியிருந்தார்.

அவரிட்ட பட்டியலும் புதியதல்ல. இதற்கு முன்னும் பட்டியலிட்டவர்களினால் காட்டப்பட்டுள்ள அனேக பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. அவர்களது பெயர்களை நானும் சொல்வது மீண்டும் ஒரு பட்டியலை நானும் இடுவதாய் ஆகி விடும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

படைப்புலகில் பரிசோதனை முயற்சிகள் என்று எதுவுமில்லை அவை படைப்புகளின் `வித்தியாசம்' என்று தான் பார்க்கப்பட வேண்டும். ஒரு படைப்பின் வாசிப்பை ஒரு சார்பாக கொண்டு ஏனைய படைப்புகளை புறம் தள்ளுவது என்பது படைப்புலக அடக்கு முறையாகும்.

தாவிது கிறிஸ்ரோ எழுதிய பரிசோதனை முயற்சிகள் என்ற கதையாடல் படைப்புலகின் வித்தியாசங்கள் என்று திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு ஒரு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுகிறவர்கள் ஒரு வரையறைக்குள்ளானவர்களாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறைமுகமான உளவியல் பார்வையாகும். இது அவர்களின் விசாலமான படைப்புச் செயற்பாட்டை குறுகியதாக்கி ஒரு முகப்பட்ட பார்வையை அவர்களது படைப்புகளுக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் படைப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்ட பார்வையினைக் கொண்டது. அதனை வாசகர்கள் தங்களது வாசிப்பு பிரதி மூலம் அப்படைப்பின் வேறுபட்ட கூறுகளையும் தங்களது ஆளுமைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொள்வார்கள்.இந்த வகையில் விமர்சனம் என்பதும் ஒரு படைப்பிற்கு போலித்தன்மையை உருவாக்கி விடுகிறது. அப்படைப்பின் பன்முகத் தன்மையை அது அழித்து விடுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

ஒரு படைப்பின் பரிசோதனை முயற்சியை அளவிட வித்தியாசமான உருவ அமைப்பை அடிப்படையாகக் கொள்வது தவறான ஒரு புரிதலாகும். ஒரு படைப்பிற்கு உருவ அமைப்பு என்பது கூட நிலையான ஒரு விடயமல்ல. அது மாறிக் கொண்டு வந்த வரலாறு நம்மிடமுண்டு மரபை உடைத்துக் கொண்டு புதிய கவிதை அமைப்பு உருவானது. புதியதை உடைத்துக் கொண்டு நவீன கவிதை அமைப்பு உருவானது என்ற கதைகள் இதற்கு சான்று பகிர்கின்றன.

படைப்பியலைப் பொறுத்தவரை மரபு, புதியது, நவீனம், பின் நவீனம் என்ற எந்த சித்தாந்தங்களுமில்லை என்பதே எனது கருத்து. இவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் தேவையை மட்டும் திருப்திப்படுத்துகின்ற கதையாடல்களாக இருப்பவை. இந்த சித்தாந்தங்கள் எதுவும் நிலையான இருப்புக் கொள்ள முடியாமல் காலத்தால் புறம் தள்ளப்பட்டிருப்பதை சங்க காலத்திலிருந்து எம்மால் பார்க்க முடிகிறது. இது தவிர்க்க முடியாததுமாகும்.

இத்தகைய கருத்துச் சமர்களுக்கு அப்பால் உணர்வுகளை மொழிப்படுத்தும் படைப்புலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதை எல்லாக் காலத்திலும் கவிதையாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீடும் அளவுகோலுமே அவற்றை தப்பான திசைக்கு அழைத்துச் செல்கின்றது.

ஒரு படைப்பை மதிப்பிடும் பணி இன்னொரு படைப்பாளியினுடையது அல்ல. அவ்வாறான மதிப்பீட்டில் தன் படைப்பு சார் பண்புகளையே அவர் நிறுவ முனைவது குறிப்பிட்ட படைப்பின் பன்முகத்தை இல்லாது செய்கிறது. அது வாசகர்களின் வாசிப்பு மதிப்பீடாக முன்வைக்கப்படும்போதுதான் படைப்பாளியினுடைய உழைப்பிற்கான உண்மையான ஒரு வெகுமதியை கொடுப்பதாக காண முடிகிறது. எனவே, படைப்புகளுக்கும் சித்தாந்தங்களுக்குமிடையில் ஓர் தடை கல்லாக வாசகர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படைப்புலக கருத்தியல் இவ்வாறிருக்க, பின் நவீனத்துவம் பற்றிய எதிர்வினைகள் இப்போது ஆங்காங்கே மின்னுகின்றன. இது `பெரு வெளி' எனும் சஞ்சிகையின் வருகைக்கு பின்புதான் என்பதையும் தாவிது கிறிஸ்ரோவின் கட்டுரையில் நன்றாக அறிய முடிகிறது. இவ்வாறு பின் நவீனத்துவ எதிர்வினையை செய்பவர்கள், தங்களது சொந்த பெயரில் எழுதிய கட்டுரைகள் எதனையும் காண முடியாமலிருக்கிறது. எந்த கருத்தையும் தனது சொந்தப் பெயரில் சொல்வதற்கான முதுகெலும்புடைய பேனையை வைத்துக் கொண்டு அவர்கள் எழுதிக் கொண்டால் அதன் பின்புலத்தையும் அவர்களுடைய எழுத்துக்கப்பால் அறிய உதவுமே என்பது எனது நப்பாசை.

____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, November 06, 2006

ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்

பனுவல் -தாவீது கிறிஸ்ரோ-

___________________________
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது. பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.
___________________________

மேலைத்தேய முன் முயற்சிகளின் ஆகர்சனத்தினால்தான் தமிழிலும் இலக்கியப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. சிறுகதை, நாவல், புதுக்கவிதை எனத் தமிழில் இன்று இலக்கியம் என அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் அனைத்தினதும் நதிமூலங்கள் மேலைத்தேயங்களே.

தமிழ் புதுக்கவிதை வளர்ச்சியை ஒரு இயக்கமாக முன்னெடுத்த சி.சு.செல்லப்பாவின் ` எழுத்து'விலும் அதற்கு முன்னர் ந.பிச்சமூர்த்தி தொடக்கி வைத்த புதுக்கவிதையின் தொடர்வரவாளர்களில் ஒருவராக நம் நாட்டின் தருமு சிவராமு குறிப்பிடப்பட வேண்டியவர். அவருக்குப் பின்னரான பரிசோதனையாளர்களாக தமிழகத்தில் பலர் இருந்த போதும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சிக்கால வரதர் ந. பிச்சமூர்த்தியைத் தொடர முயன்று பின்னர் அம்முயற்சியிலிருந்து விலகியவர். தா. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளில் இவ்வகைப் பரிசோதனைகளை நாம் அவதானித்தோம். பின்னரான காலங்களில் வானம்பாடிகளின் பாணியை ஒட்டிச் சற்று வித்தியாசமாக திக்குவல்லை கமால் ,அன்பு ஜவகர்ஷா போன்ற முஸ்லிம் கவிஞர்களும் பூனகரி மரியதாஸ், ஈழவாணன் போன்றவர்களும் புதுக்கவிதைகைளை எழுதினர்.

சண்முகம் சிவலிங்கம் மார்க்சியத்தை அங்கீகரித்தவர். அவரது கவிதைகள மிகவும் வித்தியாசமான ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருந்தன. அலையில் வெளிவந்த `வெளியார் வருகை' போன்ற கவிதைகளை இங்கு எடுத்துக்காட்டலாம். இதேபோல், மல்லிகையில் இவரது கவிதைகள் உருவப் பரிசோதனையோடு ஆக்கப்பட்டு வெளிவந்தன.

இதேகாலம் முற்றிலும் வித்தியாசமான மு.கனகராஜனின் `முட்கள் முறியும் ஒசையும்' வெளிவந்தது. சோலைக்கிளியின் ஆரம்பம் கூட (இன்றுவரை அது தொடர்கிறது) ஒரு பரிசோதனையின் வெளிப்பாடே.

பாலமுனை பாறுக், அன்புடீன்,மேமன்கவி போன்றோரும் பின்னரான சேரன்,ஜெயபாலன் போன்றோரும் வானம்பாடியினரின் பாணியில் வந்தோரே. தருமு சிவராமு பாணியில் பரிசோதனை செய்தவர்களில் சபா ஜெயராஜா குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் தொகுப்பாகவராவிட்டாலும் பத்திரிகைகளில் பிரசுரமான காலத்தில் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தன.

வட்டம் என்பதை .எனவும், சதுரம் என்பதை எனவும் எழுத்துகளால் கோலம் போட்ட கவிதைகள் அவருடையவை.

எம்.ஏ.நுஃமான் தம்மை ஒரு போதும் புதுக்கவிதைக்காரராகக் கூறிக் கொள்வதில்லை. இவரோடு மு.பொ. ,அ. யேசுராசா , சு.வி. என ஒரு வரிசையே இங்கே அடையாளப்படுத்த முடியும்.

சிறுகதைத்துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த ஒரு சில முன் முயற்சிப் பரிசோதனைகளைக் கூற முடியும். மு.தளையசிங்கம், காசிநாதர் போன்றவர்களின் சிறுகதைகள் சிலவற்றை இதற்குரியதாக உதாரணப்படுத்தலாம். ஜோர்ஜ் சந்திரசேகரனும் இவ்வகை முயற்சியில் ஈடுபட்டவராவார்.

இவர்களுக்கு முன்னதாக எஸ். பொ.வின் முயற்சிகளையும் இங்கு குறிப்பிடலாம். முற்றுத்தரிப்பு இல்லாமல் ஒரே வசனத்தில் ஒரு கதையை அவர் எழுதியிருந்தார். அணி, குளிர் போன்ற கதைகளும் இதில் அடக்கம்.

நீர்வை பொன்னையனின் 70 இற்குப் பின்னரான கதைகளும், எஸ். அகஸ்தியரின் உணர்வூற்றுருவாக்க சிறுகதைகளும் இதற்குள் அடக்கம்.

90 களில் சரிநிகரில் ` அருள் சின்னையா' எழுதிய ஒரு சிறுகதை பரிசோதனை முயற்சியின் வெளிப்பாடாக வெளிவந்தது. இதற்கு முன்னர் கோணைத்தென்றல் என வெளிவந்த ரோணியோ சஞ்சிகையில் தேஸ்விலோமன், ரிசிப்பிரப்ஞன்( இப்போது சித்தார்த்த சேகுவரா) எழுதிய கதைகளும் பரிசோதனைச் சிறுகதைகளே. இன்று வெளிவரும் பலபடைப்புக்களை பின் நவீனத்தும் எனும் சட்டகத்துக்குள் பொருத்திப் பார்க்கும் போது இத்தகு முன்முயற்சிகள் ( முன் நவீனத்துவம் என பெயர் சூட்டலாம்) ஏலவே, இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன.சட்டகத்துக்குள் அடங்காதவையே பின் நவீனத்துவப் படைப்புகள் என்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.

அருள் சின்னையாவைத் தொடர்ந்து `திருக்கோவில் கவியுவன்-( ஒரு விதத்தில் உமா வரதராஜனின் அரசனின் வருகை, கள்ளிச்சொட்டு என்பவற்றையும் இங்கு குறிப்பிடலாம்) அம்ரிதா.ஏ.எம்., ஓட்டமாவடி அறபாத், வி.கௌரிபாலன், திசேரா, மலர்ச்செல்வன் ஆகியோரை நாம் வரிசைப்படுத்த முடியும். ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் படைப்புகள் பின் நவீனத்துவ வகை மாதிரிக்குள் அடக்கப்படாவிட்டாலும் அம் முயற்சிகளுக்கு சற்று நெருக்கமானவை எனக் கூறலாம். சமீபத்தில் மஜீத் எழுதிய ` கதையாண்டி' எனும் புதினம் வரிந்தெழுதப்பட்ட ஒரு பின் நவீனத்துவ முயற்சியாகும்.(இக்கதை பற்றிமிகவும் காட்டமான விமர்சனம் எனக்குள்ளது. அதனைப் பிறிதொரு பத்தியில் எழுதவிருப்பதால் இப்போது தவிர்த்துக் கொள்கிறேன்). புதுக்கவிதைத்துறையின் முன்முயற்சிகளுக்கு உற்சாகம் தந்த சஞ்சிகைகளாக பூரணி, அலை, களனி, அக்னி, புதுசு போன்றவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 80 களில் திசை பின்னர் சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் இவ்வகை முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியுள்ளன.

ஒரு விதத்தில் இங்கு எழும் பிரச்சினை உருவ, உள்ளடக்கம் சார்ந்த பிரச்சினையாகவே இனங்காணப்படல் வேண்டும். சுத்த கலைவாதம் அல்லது முற்றிலும் பிரசாரம் எனும் அந்தக்காலவாதப் பிரதிவாதங்களுடன் இப்பிரச்சினையைப் பொருத்திப்பார்க்கலாம்.

மரபுப்பாணியில் சமூக உள்ளடக்கம் சார்ந்து முற்போக்கு கவிஞர்கள் பலர் எழுதிய காலத்தில் சுத்த இலக்கியவாதிகள் அவர்களை எதிர்த்தனர். நிராகரித்தனர். இம்முற்போக்கு அணியில் தான்தோன்றிக்கவிராயர், முருகையன், யாழ்ப்பாணக்கவிராயர், சுபத்திரன் போன்றோரும் எதிர் அணியில், இ.நாகராஜன்,வி.கந்தவனம், அம்பி, காசி ஆனந்தன் போன்றோரும் இருந்தனர். முன்னவர் அணியில் பின்னர் வந்த எஸ்.ஜி. கணேசவேல், புதுவை இரத்தினதுரை, முருகு கந்தராசாவைக் குறிப்பிடலாம். எதிரணிக்கு உதாரணம் காட்ட பின்னர் எவரும் கிட்டவில்லை .ஆயினும், பின்னர் வந்த முற்போக்கு அணியில் சற்று வித்தியாசமானவராக சாருமதி முகிழ்ந்தார். அவரைவிடவும் வித்தியாசமாக சிவசேகரம் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைத் தந்திருக்கிறார். போரின் முகங்கள், வடலி எனும் தொகுப்புகளின் கவிதைகள் இதற்கு நல்ல உதாரணங்களும்.

நமது போர்க்கால சூழலில் இப்போது ஏராளம் தமிழ், முஸ்லிம் கவிஞர்கள் தங்களது கவிதைத் தொகுதிகளுடன் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களின் கவிதைத் தொகுதிகளுக்கான தலைப்புகளும், கவிதைத் தலைப்புகளுமே வாசகனை தலை கிறுகிறுக்கச் செய்கின்றன.எழுதியவரது பெயரைத் தவிர்த்து கவிதைகளையும்,கவிதைத் தலைப்புகளையும் வாசித்தால் ஒருவரே சகல கவிதைகளையும் திரும்பத் திரும்ப எழுதுவதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சூழலில் நமது கவிஞர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.இது கவிதைத் தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வெளியிடப்படும் உற்பத்திப் பொருட்களில் ஒன்றாக கவிதைத்துறை மாறிவிட்டதன் அவலநிலையெனக் கொள்ள வேண்டும்.புதிய கவிஞர்கள் பலர் நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் தம்முள் ஏதோ வகையில் ஒத்து ஓடும் வெளிப்பாட்டு முறைச் சமரசத்தைக் கொண்டுள்ளார்கள். இதேநேரம், கிழக்கிலிருந்து தீவிரத்துடனும் பின் நவீனத்துவ கதையாடலுடனும் தமது அடையாளங்களைக் காட்டும் வகையில் இப்போது பெருவெளிக்குச் சிலர் வந்துள்ளனர்.

இவர்களினால் வலிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள், ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பின்னால் பொதிந்துள்ள அர்த்தப்பாடு மிக முக்கியமானது. அவை பல்வேறு விதத்தில் விரித்துரைக்கப்பட்டாலும், மக்கள் திரளின் விடிவு நோக்கிய பணியை முன்னெடுப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அர்த்தப்பாடு. அது மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, October 28, 2006

இலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா?

பனுவல் -தீவிரன்-
-------------------------------------
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது.
பயன்கருதி வெளியிடப்படுகிறது.
-------------------------------------
ஈழத்து தமிழ் இலக்கிய உலகு பற்றிப் பேசும்போது, ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், `முற்போக்கு' காலம் என்று ஒவ்வொரு காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு பேசப்படுவது வழமை. கலை இலக்கிய மாற்றங்கள் பற்றிப் பேசப்படுவதற்கு இப்பகுப்புகள் வசதியானதும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்கு தலைமைதாங்கும் ஆளுமைகளால் வெளிக்கொணரப்படுகின்றன.

ஈழகேசரி காலகட்டத்து எழுத்தாளர்களின் (சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்) ஆளுமை என்பது இந்தியச் செல்வாக்கிலிருந்து ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை ஓரளவு விடுவிக்க முயன்ற பங்களிப்பைத் தந்ததெனலாம். இவர்கள் காலத்தில் இலக்கிய விமர்சனம் என்பது பின்தள்ளப்பட்டே இருந்தது. அடுத்து வந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் (அ.செ.மு., சு.வே, வரதர், கனகசெந்திநாதன்) பெயருக்கேற்ப முன்னவர்களுடையதைவிட முற்போக்கான விடயங்களை அணுகுபவையாகவும் ஒருவகை விமர்சன நோக்கைக் கொண்டவையாகவும் இருந்தனவெனக் கொள்ளலாம்.

இவர்களுக்கு அடுத்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இன்னுமொருபடி மேலே சென்றனர். மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான அருட்டல் இவர்களிடம் முழுமையடைகிறது எனலாம். மண்வாசனை, பிரதேச வாசனை என்று வந்த புனைவுகளுக்கு சமூக உணர்வு பாய்ச்சப்பட்டு அவற்றை ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடதுசாரி (மார்க்சியக்) கருத்தியல் படைப்புகளாக மாற்றிய பெருமை முற்போக்கு எழுத்தாளர்களைச் சாரும். இவ்வாறு முற்போக்கு எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்திய காலகட்டத்தின் (1956 - 70) ஆளுமைகளாக க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் நிற்கின்றனர்.

முற்போக்கு காலகட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலும் நேர்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் இயக்கமும் அதன் உச்ச நிலையில் இருந்தபோது (1960-70) அதற்கு எதிரான குரல் எழத் தொடங்கிற்று. முற்போக்கு அணியினரின் கருத்தியல் பற்றியோ, அவர்கள் வாயிலிருந்து உதிர்க்கப்பட்ட `இயக்கவியல்', `கருத்துமுதல் வாதம்', `பொருள் முதல்வாதம்' `சோஷலிஸ்ற் றியலிஸம்', `வர்க்கபேதம்' என்பவற்றின் அர்த்தம் ஒன்றும் புரியாது ஏனைய `வட்டங்களை'ச் சேர்ந்த `எழுத்தாளர்கள் 'தலையைச் சொறிந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அதற்கெதிரான குரல் எழத்தொடங்கிற்று.

ஒன்று எஸ்.பொ.வுடையகுரல், அதேகாலத்தில் எழுந்த அடுத்த குரல் மு.த.வுடையது. எஸ்.பொ.வைப் பொறுத்தவரை தான் மு.போ.எ.சங்கத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தின் விளைவாய், அதற்குக் காரணமாய் இருந்த க.கை., சிவத்தம்பி ஆகியோர் மேல் அவர் ஆரம்பத்தில், வியாசிகதேசிகர் என்ற பேரில் அள்ளிக் கொட்டிய வசைபாடும் விமர்சனங்களையோ அல்லது அதற்குப்பின் `நற்போக்கு' என்ற பேரில் எவ்.எக்ஸி. நடராசா, சதாசிவம் ஆகிய பண்டிதர்க ளையும் கனகசெந்திநாதன் போன்ற எழுத்தாளர்களையும் கூட்டுச் சேர்த்து முன்வைத்த வாதங்களையோ, விமர்சனங்களையோ ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக வைத்த எதிர்வினை என்றோ ஒரு புதுக்கருத்தியல் என்றோ சொன்னால் அது நகைப்பிற்கிடமான ஒன்றே. எஸ்.பொ. ஒரு சிறுகதை ஆசிரியராகவோ, நாவலாசிரியரா கவோ இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிந்தனையாளரோ அல்லது தரிசனம் மிக்க எழுத்தாளரோ அல்லர். இதுவே அவரது அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. அத்தனைகாலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவரைவிடக் கல்வியறிவில் குறைவான சக முற்போக்கு எழுத்தாளர்களிடம் டானியல் ஜீவா இருந்த கருத்தியல் ரீதியான ஒழுங்கமைவு கூட இவரிடம் இல்லாமல் போனதற்கும் காரணம் இதுவே. ஆரம்பத்தில் க.கை.யின் தூண்டுதலின் பேரில் இவர் தினகரனில் `நாவலாசிரியர் வரிசையில்' என்ற தொடரில் அல்பட்டோ மொறாவியாவை பற்றி எழுதியது கூட இவரின் சொந்த அறிதலால் வந்த ஒன்றல்ல. (பார்க்கவும் விமர்சக விக்கிரகங்கள் -மு.த.)

ஆகவே, இக்காலகட்டத்தில் முற்போக்கு எமுத்தாளர்களுக்கு எதிராக எழுந்த நியாயமான ஒரே குரல் மு.த.வுடையதே. அத்தோடு, அவர்கள் போக்கை அவர் எதிர்கொண்டவிதமும் தனியானது. 1962 இல் `முற்போக்கு இலக்கியம்' என்ற தலைப்பில் (இது நூலாக 1984 `கிரியா' வால் வெளியிடப்பட்டது) மு.த .கலைச் செவ்வி யில் மூன்று தொடராக எழுதிய கட்டுரை பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திற்று. அந்த விவாதத்தில் பங்குபற்றுவதாக இருந்த க.கைலாசபதி, அதைப்படித்த பின்னர் ஏதோ நொண்டிச் சாட்டுக் கூறிக்கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால், மு.த.அத்துடன் நிறுத்தாது, `ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் தொடர் கட்டுரையை (இது கிரியாவினால் 1984 இல் நூலாக வெளியிடப்பட்டது) எழுதுகிறார். அதில் முற்போக்கு இயக்கத்தின் பிதாமகரான க.கை.ஈழத்து இலக்கியத்தின் தரத்தை மேன்மைப்படுத்த ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய அதேவேளை, அவரின் போதாமைகளையும் அதன்மூலம் ஈழத்து எதிர்கால இலக்கியப் போக்கு ஒரு திருகப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் விவகாரமாக மாறியமையும் சுட்டியதோடு முற்போக்குச் சம்பந்தப்பட்ட மாயையையும் தகர்க்கிறார். இதுமட்டுமல்லாமல் இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டும் பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்த ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாட்டையும் மு.த.முன்வைக்கிறார். இதற்கிடையில் மு.த.`விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரைத் தொடரை அறுபதுகளின் இறுதியில் `மல்லிகை'யில் எழுதுகிறார். இது அவரால் விரைவாக வெளியிடப்படவிருந்த `போர்ப்பறை'என்ற நூலின் அறிமுகமாகவும் அதன் கருத்தியலின் எளிமை விளக்க மாகவும் வந்துகொண்டிருந்தது. இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் ஒதுக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கிடந்த பல இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஏனைய எழுத்தாளர்கள் பலர் அதைப்படித் ததும் புதுவிதத்தெம்பும் தமக்கும் ஒரு கருத்தியல் இருக்கென்ற பார்வை பெற்றவர்க ளாகவும் நிமிர்கின்றனர். இதை அவர்கள் மு.த.வை நேரில் சந்தித்த போதும் அவருக்கு கடிதம் எழுதியதன் மூலமும் தெரிவித்தனர் என்பது பழைய கதை. இதைத் தொடர்ந்து மு.த.வின் `போர்ப்பறை' நூல் வெளியீடு வருகிறது. இதைப் படித்த போது பேராசிரியர் சிவத்தம்பி, ஏனைய எழுத்தாளர்கள் போலல்லாது, காழ்ப்புணர்வற்று, தனக்கேயுரிய நேர்மையோடு, "60களில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தநூல் இது" என்று மல்லிகையில் எழுதினார்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தில் குறிப்பட்ட, ஒவ்வொருகால கட்டத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளால் வெளிக்கொணரப்படு கின்றன என்பதை சிறிது விசாரணைக்குட் படுத்த வேண்டும். சமூக வரலாற்று ஓட்டமே ஆளுமைகளைத் தீர்மானிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை மிக்க ஆளுமை என்ற ஒன்றில்லை என யாந்திரீக முறையில் ஆளுமைகளை விளக்கும் வைதீக மார்க்சிய வாதிகள் இன்றும் உள்ளனர். ஆனால், அவை சிரிப்புக்கிடமான வகையில் ஒதுக்கப்படுபவையாக உள்ளன என்பதற்கு ஈழத்து இலக்கிய உலகில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்ச்சிகளாய் சாட்சியாய் உள்ளன:

ஈழத்து இலக்கிய உலகில் அறுபதுகளில் க.கை.யின் தலைமையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இரண்டு குரல்கள் எழுந்தன. ஒன்று எஸ்.பொ.வுடை யது. அடுத்தது மு.த.வுடையது. இந்த இருவரில் எஸ்.பொ.வின் ஆளுமையானது, அவரைப் பண்டிதர்களோடு கூட்டுச் சேரவைத்து, `நற்போக்கு' என்ற பேரில் படுபிற்போக்கு வாதத்திற்குத் தலைமை தாங்க வைக்க, மு.த.வுடையதோ க.கை ஆகியோர் காட்டிய முற்போக்குவாதத்தின் போதாமைகளைச் சுட்டிக் காட்டியதோடு அதற்குமப்பால் சென்று இனிவரப்போகும் உலக இலக்கியப் போக்கையும் சுட்டுவதாய் அமைந்தது என்பதிலிருந்து ஆளுமைகளும், அவற்றின் தனித்தன்மைகளும் எவ்வாறு சமூகவரலாற்று ஓட்டத்தைத் தீர்மானிக் கின்றன என்பதை அறியலாம் (இவ்விடத் தில் ரஷ்ஷியாவில் ஸ்ரலின் இருந்த இடத்திற் குப் பதிலாக புகாரினோ ட்றொஸ்கியோ இருந்திருந்தால் வரலாற்றோட்டம் எவ்வாறு மாறியிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது) ***

மு.த. இவ்வாறு தனது இலக்கிய விமர்சனங்கள், புனைவியல், தத்துவார்த்த எழுத்துகள் மூலம் பாரிய புரட்சியொன்றை முன்வைத்த போதும், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகு அதனால் எந்தவித அதிர்வுகளையும் பெற்றதில்லை. ஆகக் கூடிப்போனால் முற்போக்கு அமைப்பையும் அதற்குத்த லைமை தாங்கிய க.கை.யையும் எதிர்த்து எழுதினார் என்பதற்குமேல் எதுவும் தெரியாத தட்டையான புரிதலுடைய வைதீக மார்க்சியவாதிகளும் `நற்போக்கு' `சற்போக்கு' படைப்பாளிகளுமே அன்றும் இன்றும் இங்கு பொதுவிதியான நிலையில் இவர்களிடம் மு.த.வின் எழுத்துகள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன் அதிர்வுகளை உள்வாங்கும் frequency இருந்தால்தானே அது பற்றிப் பேசவும் அது ஒரு திருப்புமுனையா என்று அறியவும் முடியும்?

ஆனால், வரலாற்று ஓட்டம், இவர்களிடம் போய் தீக்கோழிபோல் தலையோட்டிக் கொண்டு நிற்பதில்லை. அதன் அதிர்வுகள் இலங்கையைவிட்டு தமிழ் நாட்டில் பலரைத்தொட்டது. ஆரம்பத்தில் மு.த.வோடு தொடர்புகொண்டிருந்த வெங்கட் சாமிநாதன், மு.த. `முற்போக்கு இலக்கியம்'தொடரைக் கலைச் செவ்வியில் எழுதியபோது `எவ்வாறு இதை நீங்கள் தனியனாய் நின்று செய்யமுடியும்?' என்று வியந்தவர். பின்னர் அவரது `போர்ப்பறை' நூல் வெளிவந்தபோது இதை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு அப்படிச் செய்யாது, தருமு சிவராமின் `கைப்பிடியளவு கடல்' கவிதைநூலுக்கு போர்ப்பறையில் காணப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னுரையாக எழுதினார். இதை `வெ.சாமிநாதன் ஏடு பற்றி சரிநிகரில் மு.பொ. விமர்சித்தபோது சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். அடுத்து, தமிழ்நாடு `சமுதாயம் வெளியீடு' உரிமையாளர் கோவிந்தன் மு.தவின் எழுத்துகளால் கவரப்பட்டு - இதற்கு இராஜநாராயணனும் தூண்டுதலாய் இருந்தார்- அவரது முக்கியமான அனைத்து ஆக்கங்களையும் நூலுருவில் கொணர்ந்தார். இதற்கிடையில் அமரர் சு.ரா. மு.த.வின் எழுத்துகளை வாசித்து, தன்னைப் போன்ற சுயமான சிந்தனையாளனை வரவேற்கும் பாணியில் அவர் பற்றி பின்வருமாறு எழுதினார். (பார்க்கவும் `மு.த.வின் பிரபஞ்ச யதார்த்தம், சு.ரா.)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு யாருளர்?... பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால், பாரதியின் சிந்தனையை இவர் நம்காலத்துக்கு கொண்டுவந்து இடைக்காலச் சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப் படுத்த முயன்றார் என்று சொல்லாம்.

இவ்வாறு சு.ரா.சொன்னதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தளையசிங்கம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் ஜெயமோகன் கூட்டிய தளையசிங்கம் பற்றிய விமர்சனக்கூட்டம் பல தமிழ்நாட்டு முன்னணி எழுத்தாளர்களைப் பங்குகொள்ள வைத்தது. மு.த.தனது போர்ப்பறை நூலை வெளியிட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் முடியுந்தறுவாயில் அவர் பற்றி மீண்டு சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவட்டில் (செப்டெம்பர் 2006) ஆனந்த என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.... ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றிவளர்வதைப் பற்றிய பதிவுகளாகத் தான் இருக்கு. அதாவது, evolution of forms உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாகத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமந்தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக்காலகட்டத் தேவைக்கு ஏற்ப புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது' என்று கூறும் அவர் விண்வெளி சென்று திரும்பியவர் அனுபவம் பற்றியும் இனி வரப்போகும் பரிணாமம் பற்றி அரவிந்தர் கூறிய supermind நீட்சே கூறிய superman பற்றியும் அவர் கூறுபவை எல்லாம் அறுபதுகளி லேயே மு.த. போர்ப்பறைப், மெய்புள்' நூல்களில் கூறியவை இன்று மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மு.த.முன்வைத்த சிந்தனையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு.

சரி, மு.த.முன்வைக்கும் செய்தி என்ன?

அவர் இலக்கிய, தத்துவார்த்த சிந்தனை ஊடாகப் புதிய கருத்தியல் ஒன்றை முன்வைக்கிறார். இப்பொழுது மனிதன் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் காலகட்டத்தில் நிற்கிறான் என்று கூறும் அவர், மார்க்சியம் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக, 12,13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலத்தால் கொண்டுவரப் பட்ட அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமே மார்க்சியம் என்கிறார். அதனால்தான் அது இன்னும் மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னிருந்த இலக்கிய வகைக்கு (செய்யுள், காவியம்) எதிராக மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களையே இன்றும் (சோஷலிஸப் புரட்சி ஏற்பட்ட) நாடுகளில் பின்பற்றுகிறது. இன்று அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாயிலில் நிற்கும் நாம், அந்த அடிப்படைச் சிந்தனை மாற்றத்திற்கு தடையாக இருக்கின்ற, மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கின்ற சுரத்துக்கெட்ட சிறுகதை, நாவல் கவிதை என்கின்ற இந்தப்பழைய இலக்கிய வடிவங்களை உடைத்தெறிய வேண்டும் என்று கூறும் மு.த.இன்றைய அடிப்படைச் சிந்தனை மாற்றமென்பது, பரிணாமத்தோடு (evolution) தொடர்புடைய தென்றும் ஜடம், உயிர், மனம் என்று முன்னேறிவந்த பரிணாம வளர்ச்சி, மனதையும் தாண்டிச் செல்லும் - புதிய மனித இனத்தோற்றத்திற்கு வரவு கூறும் - காலகட்டத்தில் நிற்கிற தென்றும் (on the threshold of a New Life - psycho metabolism) ஜூலியன் ஹக்ஸ்லி, ரெஹார் டி சாடின் ஆகிய உயிரியல் விஞ்ஞானிகளையும் அரவிந்தர் நீட்சே. நீட்சே (supermind, superman) ஆகிய தத்துவஞானிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார். இந்தப் புதிய அடிப்படைச் சிந்தனை மாற்றம் எப்பொழு தும் போலவே கலை இலக்கியத்திலேயே தெரியவரும் என்றும் இதுகாலவரை இருந்துவந்த கலை இலக்கிய உருவங்கள் உடைபட புதிய உருவங்கள் தோன்றும் என்றும் அத்தகைய புதிய வரவுக்கு மு.த. `மெய்யுள்' என்றும் பெயரிட்டார். கூடவே கலைஞனின் தாகம் `அண்டை வீடுகள், புதுக்குரல்கள், `உள்ளும் வெளியும் மெய்' ஆகிய புதிய வடிவங்களையும் ஆக்கிக் காட்டினார்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால் மு.த.வுக்குப் பின்னர் யாரும் `மெய்யுள்'எழுதிக்காட்டவில்லையே, ஆகவே, அவரது புதிய கலை இலக்கிய வடிவம் பற்றிய சிந்தனை தோற்றுப்போன ஒன்று எனச் சிலர் விமர்சித்தனர். இவ்வாறு ஸ்ரீ கணேசன் ஒருமுறை சரிநிகரில் (1998) எழுதிய போது அதற்கு மு.பொ. பின்வருமாறு பதில் அளித்ததாக எனக்கு ஞாபகம்: இன்று மு.த.வுக்கு பின் அவரது இலக்கி ஆர்வலர்கள் (மு.பொ. சு.வி) மெய்யுள் எழுதிக்காட்ட வில்லையே என்று கேட்பது அறியாமையே. இன்று நடைமுறையில் உள்ள கலை இலக்கிய வடிவங்களுக்கு எதிராக உலகெங்கும் எழுதப்படும் அனைத்து anti உருவங்களும் (அவற்றை எழுதுவோர் அவற்றை எழுதுவதற்கு பின்நவீனத்துவம், அமைப்பயல் வாதம், கட்டுடைப்பு என்று காரணம் காட்டினாலும்) மு.த.கூறிய இன்றைய பரிணாமத் தேவையின் கருத்தியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அத்தனை புதிய உருவங்களும் எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தில் வசப்படும் புதிய பிரக்ஞையின் (consciousness) வெளிக் காட்டல்களே - மெய்யுள். சு.ரா.வின் ஜே.ஜே. குறிப்புகளிலிருந்து வில்லியம் பரோஸின் குலைத்துப் போடும் நாவல்கள் வரை இதன் டிப்புகளே என்று புரிந்து கொண்டால் சரி. சகோதரி நிவேதிதா `அன்னை காளி'என்ற நூலில் கூறியது இன்னும் விளக்கமானது: `ஒரு சிந்தனை மற்ற காலகட்டத்தில் இடம் பெறும் மிகக்காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சித்திரவதைகள் அராஜகங்கள் அநியாயங்கள் கூட எதிர்வரப்போகும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் குருட்டுத்தனமான வெளிக்காட்டல்கள் (பார்க்கவும் `அன்னை காளி') என்றார். (இன்றைய இலங்கைக்கு இது மிகப் பொருத்தமானது)

கவிஞர் ஆனந்த கூறிய பரிணாமம் அடையும் பிரக்ஞை பற்றி இன்று நம் எழுத்தாளர்கள் பிரக்ஞை உடையவர்களாய் இருக்க வேண்டும். இது பற்றித் தெரியாது, மு.த சிந்தனையில் ஏற்படுத்திய திருப்பு முனை பற்றி எவரும் பேசமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்து கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்திப்போமாக.

_______________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006



Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, October 03, 2006

அழியா வரம் பெற்ற இலக்கியங்கள்

த.சிவசுப்பிரமணியம்-
~~~~~~~~~~~~~~~~~~

தினக்குரல் வாரப் பத்திரிகையில் வந்தது இக்கட்டுரை.
தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றிய குறிப்புக்கள் இக்கட்டுரையில் வருகின்றன. பயன்கருதி படியெடுக்கப்பட்டு இங்கே பதிவாக்கப்படுகிறது.

_____________________________________________________________
மக்களால் மதிக்கப்படுகின்ற எழுத்தாளர்களுடைய நூல்கள் எந்தமொழியில் வெளிவந்தாலும் அவற்றைத் தேடி வாங்கிப் படிப்பதும், புரியாத மொழியாயின் அவற்றின் மொழிபெயர்ப்புகளை தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதும் அரங்கேறிய நிகழ்ச்சிகள். இவை இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப் பசிக்குத் தீனியாக மட்டுமன்றி, அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டுபனவாக நெறிப்படுத்தியுள்ளன. ரஷ்ய, சீன, ஆங்கில எழுத்தாளர்களுடன் இந்தியாவின் வங்காளம், மலையாளம், இந்தி, தமிழ் எழுத்தாளர்களும் உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். ரஷ்ய எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற எழுத்துகளால் போராட்ட உணர்வுகளை ஏற்படுத்தி ரஷ்யப் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார்.

`செம்மீன்' என்றால் தகழி சிவசங்கரப்பிள்ளை இலக்கிய உலகில் பேசப்படும் ஒரு எழுத்தாளராக மிளிர்கின்றார். அவருடைய செம்மீன் நாவலும் அக்கதையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமும் அவருடைய பெருமைக்குச் சான்று. மலையாள இலக்கியப் பரப்பில் கொடிகட்டிப் பறந்தவர். அத்தகைய எழுத்தாளரின் சில பதிவுகளைத் தருவதற்காக இக்கட்டுரையை எழுத முனைகின்றேன்.

கேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக் கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் தகழி என்ற சிறிய கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய சிவசங்கரப்பிள்ளை அம்பலப்புழை நடுத்தரப்பள்ளியிலும், கருவட்டாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிக் கல்வி முடிந்ததும் திருவனந்தபுரம் சென்று சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். வக்கீலாக வெளிவந்த அவர் தனது தொழிலை ஆலம்புழையில் இருந்து நடத்தினார்.

கமலாட்சி அம்மாவைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். தனது பெயருடன் தனது ஊரின் பெயரையும் சேர்த்து தகழி சிவசங்கரப்பிள்ளை என்று நாமம் பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தன்படைப்புகளில் தகழி அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது.

தகழி சிறுவயதில் இருந்து கவிதை எழுதிவந்தார். பெரும்புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளையிடம் தகழிக்குத் தொடர்பு ஏற்பட்டது. தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர் விடுகிறது என்பதை உணர்ந்து குமாரப்பிள்ளை அவரை வசனத்துறைக்குத் திருப்பி விட்டார். சட்டக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஏ.பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் சேர்ந்து கொண்டார். `கேஸரி' இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை இலக்கியம், அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்து கருத்துகளைப் பரிமாறச்செய்து அறிவுத் தளத்தை விசாலமாக்கினார். இந்தச் சூழ்நிலையில் தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. மார்க்கஸ் புரூட் உட்பட ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். `வெள்ளத்தினிடையே', `அழகுப் பாப்பா' ஆகிய அவரது கதைகள், அவர் ஒரு புனைக்கதை ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தன.

தகழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான `புதுமலர்' 1934 இல் வெளிவந்தது. அது உடனேயே பிரபல்யம் பெற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல்நாவல் `பிரதிபலம்'(கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலே பிரதிகள் முற்றும் விற்றுப் போய்விட்டன. அதே ஆண்டு `பதிதபங்கஜம்' எனும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. தொடர்ந்தும் அவரது எழுதுகோல் பல கதைகளைத் தீட்டியது. `அடியொழுகல்', `நித்திய கன்னிகை', `ஸங்கதிகள்' என்பவை குறிப்பிடத்தக்கன. இக்கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவையாகவும் இடதுசாரி அரசியல் சார்பு கொண்டவையாகவும் இருந்தன. மலையாள இலக்கியம் வசதியுள்ள நடுத்தரக் குடும்ப வாழ்க்கையோடு பின்னப்பட்டிருந்த காலத்தில், துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தகழியும் அவர் சாந்தவர்களும் வாழ்க்கையின் சகல துறைகளிலுமுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் சுக துக்கங்களைப் பற்றியும் குறிப்பாகக் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் அவலங்களைப் பற்றியும் தம் படைப்புகளில் எடுத்துக் கூறினார்.

பெரும் காட்டுத்தீபோல நாடுமுழுவதும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் இணைந்து கொண்டார். இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. திருச்சூர் அருகேயுள்ள தடக்கன்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் 1947 இல் `தோட்டியுட மகன்' நாவல் வெளிவந்தது. ஒரு தோட்டியின் வாழ்க்கையை தத்ரூபமாகச் சித்தரிக்கும் இக்கதை படிப்பவர் மனம் நொந்து போகும் அளவுக்கு வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். இக்கதை மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. அந்தளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது என்று `செம்மீன்' நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் நாராயனமேனன் `தோட்டியுட மகன்' குறிப்பிடும் அதேவேளை, இக்கதையை மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி இக்கதை தொடர்கதையாக `சரஸ்வதி' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். தகழி சிவசங்கரப்பிள்ளையின் `தோட்டியுட மகன்' என்னும் மலையாள நாவல் தமிழில் `தோட்டியின் மகன்' என்று முதற்பதிப்பு ஆகஸ்ட் 2000த்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வைத்தது.

தகழி சிறந்த நாவல் ஆசிரியர். சமுதாயத்தில் தான் கண்ட மக்களின் அவலங்களை அவர்களின் போராட்டங்களை கஷ்ட துன்பங்களை தமது நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். `இரண்டிடங்கழி' (இரண்டுபடி) என்ற நாவல் 1948 இல் வெளியாயிற்று. "ஒரு குடியானவன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளியிடுகிறேன்' என்று தகழியே கூறியுள்ளார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது. இந்நாவல் `இரண்டுபடி' என்ற பெயரிலும் தமிழிலும் வெளிவந்துள்ளது. `இரண்டிடங்கழி' என்னும நாவல் பண்ணையில் தொழில் புரியும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கீழ்த்தரமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் நிலச்சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. எழுத்தாளரின் மனிதநேயம் தெரிகிறது.

`இரண்டிடங்கழி' நாவலைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. சுமார் நாற்பது நாவல்களும் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் அநேகமான படைப்புகள் இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1956 இல் வெளிவந்த `செம்மீன்' இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. இந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டமையால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. சினிமா சாதாரண மக்களையும் சென்றடையக் கூடிய சாதனமாக இருந்தமையால் செம்மீன் பற்றி பட்டிதொட்டிகளெல்லாம் பேசப்பட்டன. தகழி கடலோர மக்களின் வாழ்க்கையை அனுபவ ரீதியாக அறிந்து அவர்களின் மொழிநடை, பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், செயற்பாடுகள், பந்தபாசங்கள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கிய நாவலை வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த நாவலில் யதார்த்தப் பண்புகள் மேலோங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இது ஒரு காதல் கதையாக இருந்தபோதிலும் ஒரு மீன்பிடிக் கிராமத்தினுடைய கொடிய வறுமை, அயரா உழைப்பு, எளிமை வாழ்வு என்பவற்றை நேரில் சென்று தரிசித்த ஒரு படைப்பாளியால் தான் இத்தகைய மனதை நெருடும் ஆக்கத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் தகழி வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். கடின உழைப்பு மிக்க நற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள் எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினார் என்பது ஆசிரியரின் மனத்தை ஈர்த்த விடயம்.

காதல் வயத்தால் அதிக ஆசை பிடித்து அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லிம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால், அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். அன்றைய சமுதாய அமைப்பு அப்படித்தான் இருந்தது. சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவையாக இருந்த காலம். பரீக்குட்டியிடமிருந்த தன் நினைவை கறுத்தம்மாவால் அகற்ற முடியவில்லை. வசந்த நாளில் தானே மலரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ணம் அவர்கள் காதல் மலர்கிறது. இருந்தும் கறுத்தம்மா தனது சமுதாய வழக்கப்படி மௌனமான சோகத்துடன் ஒரு இளம் மீனவனைக் கணவனாக ஏற்கிறாள். தனது மனப்போராட்டங்களுக்கு மத்தியிலும் கறுத்தம்மா கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ எவ்வளவோ முனைகின்றாள். இந்த மனப்போராட்டங்களை விவரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்தம்மாவின் வாழ்வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே வருகின்றது. கடைசியில் கறுத்தும்மாவினதும் பரீக்குட்டியினதும் சோக முடிவு தத்துரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் செம்மீனின் கதையின் களம்.

இருபது நாட்களுக்குள் இந்த நாவலை எழுதி முடித்தார் தகழி. எளிய கதாபாத்திரங்களையும், சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன் யூனஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளைக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பை சுந்தரராமசாமி செய்துள்ளார்.

கேரள சமூகத்தில் தோட்டி, குடியானவன், மீனவன் என்று தாழ்த்து ஒதுக்கிய சிறு சிறு இனங்களின் வாழ்க்கைக் கருவூலங்களை வெளிக்கொணர்ந்த தகழி 1959 இல் எழுதிய "ஒஸப்பின் மக்கள்" என்னும் நாவலை வெளியிட்டார். இந்நாவலில் கேரள நாட்டுக் கிறிஸ்துவக் குடிமக்களின் வாழ்வை விளக்குகிறார். தெளிந்த ஓட்டமும், வேகமும், சிருஷ்டித் திறனும் கொண்ட தகழி மக்கள் எழுத்தாளராகவே இனங்காணப்படுகின்றார்.

1965 ஆம் ஆண்டு தகழியின் `ஏணிப்படிகள்' கேரள சாகித்திய அக்கடமி பரிசையும், 1980 இல் `கயிறு' என்னும் நூல் வயலார் நினைவுப் பரிசும் பெற்றது. 1984 ஆம் ஆண்டு ஞானபீடப் பரிசும், 1985 இல் பத்மபூஷன் விருதும் கிடைத்தது. கேரளப் பல்கலைக்கழகமும் மகாத்மா காந்தி பல்கலைக்கழகமும் டி.லிட் பட்டம் அளித்துள்ளன.

மக்களின் ஏற்றத் தாழ்வுகளில் இருக்கக் கூடிய அடக்குமுறைகளைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேண்டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும் உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளன் 1999 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய இலக்கியங்கள் அழியாவரம் பெற்று இன்றும் மக்களால் மதிக்கப்படுகின்றன.

_________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் September 24, 2006

_____________________________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 04, 2006

கவிஞர் பொன்.கணேசமூர்த்தி சுட்டுக்கொலை

ஈழத்தைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியான கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.
புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான 'இலங்கை வேந்தன்' 'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் என் மனத்தில் நிற்கிறது. அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர். பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.

இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு (அவன் என்னுடைய வகுப்புத் தோழன்) அவர் எழுதிய இறுதிநாவல் (எடுக்கவோ தொடுக்கவோ???) உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான சில பாடல்களை எழுதியளித்துள்ளார்.

இவருடைய மூன்றாவது மகன் (மதன மெளனி) விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றிய இக்கலைஞன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேரிலறிந்த, மிக நெருக்கமான குடும்பம் அவருடையது.

கவிஞரின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________