Monday, November 06, 2006

ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்

பனுவல் -தாவீது கிறிஸ்ரோ-

___________________________
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது. பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.
___________________________

மேலைத்தேய முன் முயற்சிகளின் ஆகர்சனத்தினால்தான் தமிழிலும் இலக்கியப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. சிறுகதை, நாவல், புதுக்கவிதை எனத் தமிழில் இன்று இலக்கியம் என அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் அனைத்தினதும் நதிமூலங்கள் மேலைத்தேயங்களே.

தமிழ் புதுக்கவிதை வளர்ச்சியை ஒரு இயக்கமாக முன்னெடுத்த சி.சு.செல்லப்பாவின் ` எழுத்து'விலும் அதற்கு முன்னர் ந.பிச்சமூர்த்தி தொடக்கி வைத்த புதுக்கவிதையின் தொடர்வரவாளர்களில் ஒருவராக நம் நாட்டின் தருமு சிவராமு குறிப்பிடப்பட வேண்டியவர். அவருக்குப் பின்னரான பரிசோதனையாளர்களாக தமிழகத்தில் பலர் இருந்த போதும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சிக்கால வரதர் ந. பிச்சமூர்த்தியைத் தொடர முயன்று பின்னர் அம்முயற்சியிலிருந்து விலகியவர். தா. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளில் இவ்வகைப் பரிசோதனைகளை நாம் அவதானித்தோம். பின்னரான காலங்களில் வானம்பாடிகளின் பாணியை ஒட்டிச் சற்று வித்தியாசமாக திக்குவல்லை கமால் ,அன்பு ஜவகர்ஷா போன்ற முஸ்லிம் கவிஞர்களும் பூனகரி மரியதாஸ், ஈழவாணன் போன்றவர்களும் புதுக்கவிதைகைளை எழுதினர்.

சண்முகம் சிவலிங்கம் மார்க்சியத்தை அங்கீகரித்தவர். அவரது கவிதைகள மிகவும் வித்தியாசமான ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருந்தன. அலையில் வெளிவந்த `வெளியார் வருகை' போன்ற கவிதைகளை இங்கு எடுத்துக்காட்டலாம். இதேபோல், மல்லிகையில் இவரது கவிதைகள் உருவப் பரிசோதனையோடு ஆக்கப்பட்டு வெளிவந்தன.

இதேகாலம் முற்றிலும் வித்தியாசமான மு.கனகராஜனின் `முட்கள் முறியும் ஒசையும்' வெளிவந்தது. சோலைக்கிளியின் ஆரம்பம் கூட (இன்றுவரை அது தொடர்கிறது) ஒரு பரிசோதனையின் வெளிப்பாடே.

பாலமுனை பாறுக், அன்புடீன்,மேமன்கவி போன்றோரும் பின்னரான சேரன்,ஜெயபாலன் போன்றோரும் வானம்பாடியினரின் பாணியில் வந்தோரே. தருமு சிவராமு பாணியில் பரிசோதனை செய்தவர்களில் சபா ஜெயராஜா குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் தொகுப்பாகவராவிட்டாலும் பத்திரிகைகளில் பிரசுரமான காலத்தில் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தன.

வட்டம் என்பதை .எனவும், சதுரம் என்பதை எனவும் எழுத்துகளால் கோலம் போட்ட கவிதைகள் அவருடையவை.

எம்.ஏ.நுஃமான் தம்மை ஒரு போதும் புதுக்கவிதைக்காரராகக் கூறிக் கொள்வதில்லை. இவரோடு மு.பொ. ,அ. யேசுராசா , சு.வி. என ஒரு வரிசையே இங்கே அடையாளப்படுத்த முடியும்.

சிறுகதைத்துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த ஒரு சில முன் முயற்சிப் பரிசோதனைகளைக் கூற முடியும். மு.தளையசிங்கம், காசிநாதர் போன்றவர்களின் சிறுகதைகள் சிலவற்றை இதற்குரியதாக உதாரணப்படுத்தலாம். ஜோர்ஜ் சந்திரசேகரனும் இவ்வகை முயற்சியில் ஈடுபட்டவராவார்.

இவர்களுக்கு முன்னதாக எஸ். பொ.வின் முயற்சிகளையும் இங்கு குறிப்பிடலாம். முற்றுத்தரிப்பு இல்லாமல் ஒரே வசனத்தில் ஒரு கதையை அவர் எழுதியிருந்தார். அணி, குளிர் போன்ற கதைகளும் இதில் அடக்கம்.

நீர்வை பொன்னையனின் 70 இற்குப் பின்னரான கதைகளும், எஸ். அகஸ்தியரின் உணர்வூற்றுருவாக்க சிறுகதைகளும் இதற்குள் அடக்கம்.

90 களில் சரிநிகரில் ` அருள் சின்னையா' எழுதிய ஒரு சிறுகதை பரிசோதனை முயற்சியின் வெளிப்பாடாக வெளிவந்தது. இதற்கு முன்னர் கோணைத்தென்றல் என வெளிவந்த ரோணியோ சஞ்சிகையில் தேஸ்விலோமன், ரிசிப்பிரப்ஞன்( இப்போது சித்தார்த்த சேகுவரா) எழுதிய கதைகளும் பரிசோதனைச் சிறுகதைகளே. இன்று வெளிவரும் பலபடைப்புக்களை பின் நவீனத்தும் எனும் சட்டகத்துக்குள் பொருத்திப் பார்க்கும் போது இத்தகு முன்முயற்சிகள் ( முன் நவீனத்துவம் என பெயர் சூட்டலாம்) ஏலவே, இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன.சட்டகத்துக்குள் அடங்காதவையே பின் நவீனத்துவப் படைப்புகள் என்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.

அருள் சின்னையாவைத் தொடர்ந்து `திருக்கோவில் கவியுவன்-( ஒரு விதத்தில் உமா வரதராஜனின் அரசனின் வருகை, கள்ளிச்சொட்டு என்பவற்றையும் இங்கு குறிப்பிடலாம்) அம்ரிதா.ஏ.எம்., ஓட்டமாவடி அறபாத், வி.கௌரிபாலன், திசேரா, மலர்ச்செல்வன் ஆகியோரை நாம் வரிசைப்படுத்த முடியும். ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் படைப்புகள் பின் நவீனத்துவ வகை மாதிரிக்குள் அடக்கப்படாவிட்டாலும் அம் முயற்சிகளுக்கு சற்று நெருக்கமானவை எனக் கூறலாம். சமீபத்தில் மஜீத் எழுதிய ` கதையாண்டி' எனும் புதினம் வரிந்தெழுதப்பட்ட ஒரு பின் நவீனத்துவ முயற்சியாகும்.(இக்கதை பற்றிமிகவும் காட்டமான விமர்சனம் எனக்குள்ளது. அதனைப் பிறிதொரு பத்தியில் எழுதவிருப்பதால் இப்போது தவிர்த்துக் கொள்கிறேன்). புதுக்கவிதைத்துறையின் முன்முயற்சிகளுக்கு உற்சாகம் தந்த சஞ்சிகைகளாக பூரணி, அலை, களனி, அக்னி, புதுசு போன்றவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 80 களில் திசை பின்னர் சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் இவ்வகை முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியுள்ளன.

ஒரு விதத்தில் இங்கு எழும் பிரச்சினை உருவ, உள்ளடக்கம் சார்ந்த பிரச்சினையாகவே இனங்காணப்படல் வேண்டும். சுத்த கலைவாதம் அல்லது முற்றிலும் பிரசாரம் எனும் அந்தக்காலவாதப் பிரதிவாதங்களுடன் இப்பிரச்சினையைப் பொருத்திப்பார்க்கலாம்.

மரபுப்பாணியில் சமூக உள்ளடக்கம் சார்ந்து முற்போக்கு கவிஞர்கள் பலர் எழுதிய காலத்தில் சுத்த இலக்கியவாதிகள் அவர்களை எதிர்த்தனர். நிராகரித்தனர். இம்முற்போக்கு அணியில் தான்தோன்றிக்கவிராயர், முருகையன், யாழ்ப்பாணக்கவிராயர், சுபத்திரன் போன்றோரும் எதிர் அணியில், இ.நாகராஜன்,வி.கந்தவனம், அம்பி, காசி ஆனந்தன் போன்றோரும் இருந்தனர். முன்னவர் அணியில் பின்னர் வந்த எஸ்.ஜி. கணேசவேல், புதுவை இரத்தினதுரை, முருகு கந்தராசாவைக் குறிப்பிடலாம். எதிரணிக்கு உதாரணம் காட்ட பின்னர் எவரும் கிட்டவில்லை .ஆயினும், பின்னர் வந்த முற்போக்கு அணியில் சற்று வித்தியாசமானவராக சாருமதி முகிழ்ந்தார். அவரைவிடவும் வித்தியாசமாக சிவசேகரம் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைத் தந்திருக்கிறார். போரின் முகங்கள், வடலி எனும் தொகுப்புகளின் கவிதைகள் இதற்கு நல்ல உதாரணங்களும்.

நமது போர்க்கால சூழலில் இப்போது ஏராளம் தமிழ், முஸ்லிம் கவிஞர்கள் தங்களது கவிதைத் தொகுதிகளுடன் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களின் கவிதைத் தொகுதிகளுக்கான தலைப்புகளும், கவிதைத் தலைப்புகளுமே வாசகனை தலை கிறுகிறுக்கச் செய்கின்றன.எழுதியவரது பெயரைத் தவிர்த்து கவிதைகளையும்,கவிதைத் தலைப்புகளையும் வாசித்தால் ஒருவரே சகல கவிதைகளையும் திரும்பத் திரும்ப எழுதுவதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சூழலில் நமது கவிஞர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.இது கவிதைத் தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வெளியிடப்படும் உற்பத்திப் பொருட்களில் ஒன்றாக கவிதைத்துறை மாறிவிட்டதன் அவலநிலையெனக் கொள்ள வேண்டும்.புதிய கவிஞர்கள் பலர் நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் தம்முள் ஏதோ வகையில் ஒத்து ஓடும் வெளிப்பாட்டு முறைச் சமரசத்தைக் கொண்டுள்ளார்கள். இதேநேரம், கிழக்கிலிருந்து தீவிரத்துடனும் பின் நவீனத்துவ கதையாடலுடனும் தமது அடையாளங்களைக் காட்டும் வகையில் இப்போது பெருவெளிக்குச் சிலர் வந்துள்ளனர்.

இவர்களினால் வலிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள், ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பின்னால் பொதிந்துள்ள அர்த்தப்பாடு மிக முக்கியமானது. அவை பல்வேறு விதத்தில் விரித்துரைக்கப்பட்டாலும், மக்கள் திரளின் விடிவு நோக்கிய பணியை முன்னெடுப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அர்த்தப்பாடு. அது மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (07 November, 2006 07:30) : 

/இதற்கு முன்னர் கோணைத்தென்றல் என வெளிவந்த ரோணியோ சஞ்சிகையில் தேஸ்விலோமன், ரிசிப்பிரப்ஞன்( இப்போது சித்தார்த்த சேகுவரா) எழுதிய கதைகளும் பரிசோதனைச் சிறுகதைகளே./
ப்ரோ இப்படியொரு புனைபெயரோடும் திரிந்தவரா :-)?

 

said ... (07 November, 2006 21:55) : 

டி.சே,
வருகைக்கும் கேள்விக்கும் நன்றி.
உங்களைப் போலவே நானும் பதிலறிய ஆவலாயிருக்கிறன்.
அண்ணர்தான் தெளிவுபடுத்த வேணும்.

கட்டுரையாளருக்கு அண்ணரின்ர இப்போதைய பெயருகள் தெரியாதுபோல.
;-)

 

said ... (09 November, 2006 10:00) : 

அது ரிஷி 'ப்ரப்ஞ்ஷன் அண்ணே.அப்போது திசை சிறுகதை, வீரகேசரி குறுநாவல், நோர்வே 'சுவடு' நாடகம், பிரான்ஸ் தனிநாயகம் அடிகள் நினைவுக்கதை, கனடா உலகத்தமிழர் இயக்கம் நாடகம் இவற்றுக்கு அப்போது ('87-'92) இலே இந்தப்பெயரிலேயே எழுத்து.
அதுக்கு முன்னால் ரிஷி மித்ரகுமார்
அதுக்குப் பிறகு தமிழ்நெற்றில் அனு ரிஷி 'ப்ரபஞ்ஷன் ;-) தேஸ்விலோமன் நான் அல்லன். ;-)

கோணைத்தென்றலை 89-92 காலத்திலே அப்போதோன்று இப்போதொன்றாய்க் கொண்டு வந்தோம் - என் பங்கு மிகக்குறைவே. சங்கீத மாஸ்ரர், சசிகுமார், கூட ஒத்துமட்டும் நான். பாடசாலை நண்பர்கள்.

இரண்டாவது ஆசிரியர் 'மாஸ்ரர்' 93 இலே ராமகிருஷ்ணமடத்திலே சேர்ந்து சாமியார் ஆகிவிட்டார். தேஸ்விலோமன் என்ற பெயரிலே அவர்தான் எழுதினாரென ஞாபகம்.

மூன்றாவதுஆசிரியர் சசிகுமார் தினகரன் பத்திரிகையாளராகவும் பாடசாலை ஆசிரியராகவும் திருகோணமலையிலே இருந்தான். இந்த ஆண்டு திருகோணமலையிலே சுடரொளி பத்திரிகையாளர் சுடப்பட்டதோடு ஊரைவிட்டு நகர்ந்துவிட்டான்.

சசிகுமார்தான் பத்திரிகை நிர்வாகமும் ரோனியோ பண்ணத் தாளும் இடமும் ஆட்களிடம் காலைக் கையைப் பிடித்து அந்த மாதத்துக்குரிய 'பதிப்புத்தேவையை'' நிறைவேற்றுவது.

அதற்கு முன்னரும் 92 வரைக்கும் எழுதியவை பதித்தவை வீட்டிலிருந்தால் கவனிப்பின்றிப் போகுமென்று கையிருப்பிலிருந்த எழுதியதையெல்லாம் சீமானிடமே கொடுத்துவிட்டு வந்தேன். நான்காண்டு கழித்துப்போனபோது, கறையான் அரித்துப்போனதென்றான். :-(

 

said ... (09 November, 2006 10:12) : 

அது 87- என்றிருந்திருக்கவேண்டும். ஐகேபிஎப் வந்தபபோது, நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்த கதையொன்று எழுதிய ஞாபகம் இருக்கிறது.

 

said ... (14 November, 2006 12:38) : 

உப்பிடி கனக்கப்பெயரோடு திரிவதற்கும் 'தரூமு' 'அரூப்' 'பிரமீளுக்கும்' ஏதும் தொடர்பு இருக்கோ?

 

said ... (14 November, 2006 14:55) : 

பெயரிலி,
வருகைக்கும் 'தன்னிலை விளக்கத்துக்கும்' நன்றி.
எங்க வராமப் போயிடுவியளோ எண்டு நினைச்சன்.
எண்டாலும் 'பெயரிலி' எண்ட பேரைச் சேர்க்காத பட்டியலோ கட்டுரையோ முழுமை பெறாது. ;-)

 

said ... (14 November, 2006 21:47) : 

டி.சே,
வருகைக்கும் கேள்விக்கும் நன்றி.
நிச்சயம் தொடர்பு இருக்குமெண்டு நினைக்கிறன். 'ஒரே ஒழுங்கைக்காரன்' எண்ட பேரைக் காப்பாத்த வேண்டாமோ?

 

said ... (15 November, 2006 18:51) : 

இந்த பதிவுக்கும், விதயங்களுக்கும் நன்றி வசந்தன்.

 

said ... (16 November, 2006 11:57) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

நான் கேட்க நினைச்சதை டிசே கேட்டிட்டார் கோணமலையில் குடியிருந்ததாலை எங்கடை அண்ணருக்கும் பிரமிள்ஜியின் வாசனை அடிக்குது போலை.ஏதோ வசந்தன் இந்தக் கட்டுரையை இங்கே போட்டதாலை பெயரிலியின்ரை தன்னிலை விளக்கம் கேட்க முடிந்தது.

இலங்கை இலக்கியம் பற்றி சமீபத்தில் வாசித்தவற்றில் மிக மோசமான கட்டுரை என்றுதான் இதைச் சொல்லவேணும்.தனித்தனியாக புதுக்கவிதை,கதை,நாவல் என்று பரிசோதனை முயற்சிகளை ஆராய வேண்டியிருக்க சட்னி,சாம்பார்,இட்லி,தோசை என்று கலந்து கட்டிக் கடை விரித்திருக்கிறார் கட்டுரையாளர்.

பரிசோதனை முயற்சியென்றால் எதில் உருவத்திலா உள்ளடக்கத்திலா எதைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது என்பதே தெளிவில்லை.அதுக்குள்ளே நூமான்,யேசுராசா எல்லோரும் தங்களைப் புதுக்கவிதையாளர் என்று கூறிக்கொண்டதில்லை என்று குழப்பமான குழப்பம் வேறு.

பொதுவாக நான் கவனிக்கும் இன்னொரு அம்சம் சிறீதரனின் கதைகள் எங்குமே பேசப்படுவதில்லை இங்கு உட்பட.இராமாயண கலகம் முதல் அவரது அத்தனை படைப்புகளும் மாறுபட்ட பரிசோதனை முயற்சிகளே,எஸ் பொ வின் தீ ஆண்மை சிறுகதைகள் பரிசோதனை முயற்சிகள் தான்.அந்தக் காலகட்டத்தில் பத்திரிகையில் ஒரே கதையை நால்வர் ஐவர் எழுதுவது போன்ற பல பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.


இந்தக் கட்டுரையைப் படித்தான் ஈழத்தில் இலக்கியத்தின் எல்லா வகை மாதிரியும் பரிசோதனை முயற்சிதான் என்று சொல்லத் தோன்றுகிறது

8.56 16.11.2006

 

said ... (16 November, 2006 19:09) : 

ஈழநாதன்,
வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.
எப்பிடியோ மோப்பம் பிடிச்சு வந்து சேந்திடுவியள்.

நீங்களே வலைப்பதிவில சின்னதா ஒரு கட்டுரை எழுதலாமே?

 

said ... (16 November, 2006 19:29) : 

பட்டியலில் எந்த ஒரு பெண் எழுத்தாளரும் சேர்க்கப்படாதது விமர்சன/ஆய்வுகள் எழுதுவது இன்னமும் "ஆண்களின்" தொழிலாகவே இருப்பதைக் காட்டுகிறது.

 

said ... (17 November, 2006 02:15) : 

பொறுக்கி,
கனகாலத்துக்குப்பிறகு வந்திருக்கிறியள்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (17 November, 2006 02:23) : 

//அந்தக் காலகட்டத்தில் பத்திரிகையில் ஒரே கதையை நால்வர் ஐவர் எழுதுவது போன்ற பல பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.//

மு.பொ., ஜேசுராஜா, ஆகியோர் திசைகள் பத்திரிகையில் இருந்தபோது, இத்தகைய முயற்சிகள் நடந்ததாகவும் ஒரு ஞாபகம். சிறுகதை எழுத்தாளர்களில் சட்டநாதனும் குறிப்பிடத்தக்கவர். அவர்பற்றியும் அதிகம் பேசக்காணோம்.
வசந்தன்!
பதிவுக்கு நன்றி

 

said ... (17 November, 2006 04:22) : 

இக்கட்டுரை குறித்து ஈழநாதனின் கருத்து மிகவும் பொருத்தமானது. இக்கட்டுரை அகப்பட்டத்தை அள்ளிச் சொல் கோர்த்ததுபோலத்தான் இருக்கிறது. இந்த வரலாறு குறித்து விவரமான ஆய்வுநூலொன்று தேவை. எம் வரலாற்றை நாம் எழுதாவிட்டால், எமதென்ற வரளாற்றை யாரேனும் எழுதி நாமும் வரும் தலைமுறையும் வாசித்து வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.

 

said ... (20 November, 2006 14:04) : 

எழுதிக்கொள்வது: Nasamaruppan

வணக்கம் வசந்தன்
நல்ல பதிவை பிரதி எடுத்துத் தந்தமைக்கு நன்றி.

22.19 19.11.2006

 

said ... (21 November, 2006 00:12) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (22 November, 2006 10:03) : 

நாசமறுப்பான்,
வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி.

 

said ... (09 December, 2006 05:06) : 

ஐயா!

சபா ஜெயராஜா வின் தொகுதி ஒன்று வந்திருக்கிறது.
அதற்கு ஊர் வீதி என தலைப்பு என எண்ணுகிறேன்.

 

said ... (09 December, 2006 05:10) : 

ஐயா!

சபா ஜெயராஜா வின் தொகுதி ஒன்று வந்திருக்கிறது.
அதற்கு ஊர் வீதி என தலைப்பு என எண்ணுகிறேன்.

 

said ... (09 December, 2006 05:13) : 

சபா ஜெயராஜா அவர்களின் தொகுதி ஒன்று வந்துள்ளது. அதற்கு
ஊர் வீதி
என்ற தலைப்பு என எண்ணுகிறேன்,

 

said ... (12 December, 2006 02:26) : 

ஈழத்தமிழர்கள் தங்கள் மொழியையும் இலக்கிய ஆர்வத்தையும் வற்றாது பற்றிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த மகிழ்ச்சி அனைத்திலும் பரவி விரவி அவர்கள் நிம்மதி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்.

வலைப்பூக்களில் பின்நவீனத்துவம் மிகவும் கிண்டலடிக்கப் பட்ட ஒன்று. ஆனால் அதற்கு இன்னமும் எனக்குப் பொருள் தெரியவில்லை. பின் நவீனத்துவம் என்றால் என்ன?

 

said ... (12 December, 2006 14:15) : 

தங்கமணி,
வருகைக்கு நன்றி.
கண்டு கனகாலம்.

மலைநாடான்,
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________