மீண்டும் மிலேச்சத்தனமான தாக்குதல்
சிறிலங்கா வான்படை மீண்டும் மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றுக்கு முனைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை வன்னியின் புதுக்குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 'காந்தரூபன் அறிவுச்சோலை'யும் சிக்கியுள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் சிறுவர்களுக்காக விடுதலைப்புலிகளால் இரண்டு பராமரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில் பெண்களுக்காக நடத்தப்படுவது 'செஞ்சோலை' ஆண்களுக்காக நடத்தப்படுவது காந்தரூபன் அறிவுச்சோலை. ஏற்கனவே செஞ்சோலை வளாகம் மீது வான்தாக்குதல் நடத்தி அங்கிருந்த மாணவிகள் பலரைக் கொன்றுகுவித்தது அரசவான்படை. செஞ்சோலைச் சிறுமிகள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்தபோதும் அப்பாவி பாடசாலை மாணவிகள் அத்தாக்குதலில் மாண்டனர். உலகம் முழுவதும் சிங்களப்படைக்கு எதிராகக் குரல்கள் எழுந்தன. இப்போது மீண்டும் அப்படியொரு அவலத்தை விதைக்க வான்படை துணிந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (16.10.2006) மாலை புதுக்குடியிருப்பு வான்பரப்பிற் புகுந்த நான்கு தாக்குதல் விமானங்கள் கைவேலி எனும் கிராமத்தின்மீது தாக்குதலை நடத்தின. அப்போது அங்கிருந்த காந்தரூபன் அறிவுச்சோலை பாராமரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பராமரிப்பு நிலையத்தில் இருந்த 216 சிறுவர்களில் இருவர் காயமடைந்தனர். ஏனையோர் அதிஸ்டவசமாக உயிர்தப்பினர். இப்பராமரிப்பு நிலையத்துக்கு அண்மையில் இருந்த மக்கள் குடியிருப்பும் தாக்குதலுக்குள்ளானதில் ஒருவயதுக்குழந்தையுட்பட இரு சிறுமிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பதினைந்துபேர் காயமடைந்தனர். அறிவுச்சோலையில் யாரும் சாகாத காரணத்தாலோ என்னவோ இது பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால் சிறிலங்கா வான்படை மீண்டுமொருமுறை மிலேச்சத்தனமான வான்தாக்குதலொன்றைத் திட்டமிட்டு நடத்தியுள்ளது. உண்மையில் அதிஸ்டவசமாக மிகப்பெரும் அவலம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப்பேசாமல் விடவும் முடியாது. தாக்குதல் நடந்தபின் காந்தரூபன் அறிவுச்சோலையைச் சென்று பார்வையிட்ட கண்காணிப்புக்குழுகூட இதுவரை அதைக்கண்டித்து ஏதும் சொல்லவில்லை. அரச பயங்கரவாதம் இத்தோடு நிற்கப்போவதில்லை. களத்திலும் களத்திற்கு அப்பாலும் அரசுக்கு ஏற்பட்டுவரும் தொடர் இராணுவ இழப்புக்கள் அதை இன்னுமின்னும் வெறிகொள்ளச் செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து இப்படியான பயங்கரவாதச் செயல்களைச் செய்யத்தான் போகிறது. _______________________________________ இதனிடையே இன்று காலித் துறைமுகத்தில் கடற்படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து காலிப்பகுதி தமிழர்கள் மீது சிங்களக் காடையரின் தாக்குதல் தொடங்கியுள்ளது. மீண்டுமொரு இனப்படுகொலையைச் செய்யத் துணிகிறார்களா? _______________________________________ படம்: தமிழ்நெற் Labels: ஈழ அரசியல், செய்தி, மக்கள் துயர் |
"மீண்டும் மிலேச்சத்தனமான தாக்குதல்" இற்குரிய பின்னூட்டங்கள்
அடப்பாவீங்களா!
உருப்படுவீங்களா?
ஏன் யாருமே இதுபற்றி எழுதலை?
அமுது.
அமுது,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அதுசரி. யாரைத்திட்டுகிறீர்கள்?
எழுதிக்கொள்வது: என்றென்றும் அன்புடன் பாலா
வசந்தன்,
கொடுமை ! கடுமையான கண்டனத்துக்கு உரியது.
இந்திய அரசு ஏதாவது செய்தால் நல்லது என்று நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன் பாலா
21.46 20.10.2006
என்றென்றும் அன்புடன் பாலா,
வருகைக்கும் ஆதரவான கருத்துக்கும் நன்றி.
இச்சம்பவம் பற்றி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை.
அலட்டிக்கொள்வதற்கும் ஒருதொகை சாகவேண்டுமோ என்னவோ?