Friday, August 11, 2006

திருமலையில் நூறு தமிழர்கள் கொலை.

நேற்றும் இன்றும் திருகோணமலையில் கடும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள்மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா அரசபடையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் குறைந்தது நூற்றுப்பத்துப் பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். 300 பேருக்குமதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்நது சென்ற மக்களைக்கூட துரத்தித்துரத்திக் கொன்றுள்ளது அரசபடை.
இத்தோடு மாவிலாற்றை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற்ற முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறது. அதை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கின்றனர் புலிகள்.

சிலநாட்கள் முன்பு புலிகள் இராணுவத்தினர் மீது தொடுத்த போரில் மூதூர்ப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. அதுவும் தாக்குதல் நடத்தப்பட முன்பே அம்மக்களுக்குத் தெரிவித்து, பாதுகாப்பாக விலகியிருக்கும்படி சொல்லிய பின் நடத்தப்பட்ட தாக்குதல் அது.
ஆனால் ஏதோ முஸ்லீம்கள் மட்டும்தான் அதில் பாதிக்கப்பட்டது போல எல்லா செய்தி ஊடகங்களும் நடந்துகொண்டன. கிடைத்த சந்தர்ப்பத்தை சில முஸ்லீம்களும் பயன்படுத்தி புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் சேறடிக்கத் தவறவில்லை. இதுவொரு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கை என்பது போலவும் சிலர் எழுதினர்.

உண்மையில் யதார்த்தம் என்ன?
இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கும் சிங்களவருக்கும் இடப்பெயர்வு நிவாரணம் முதல் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கிறது. ஊடகங்கள் சுத்திச்சுத்தி அவர்களையே பேசவைக்கிறார்கள். ஆனால் அதே மூதூர் நிகழ்வில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன நடந்தது? பலருக்கு அப்படி தமிழர் இடம்பெயர்ந்ததே தெரியாது. இன்றுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு உதவச்சென்ற செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களைக்கூட இன்னும் அரசபடைகள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கென்று எடுத்துச்சென்ற பொருட்கள் பாரஊர்திகளோடு தடுத்து வைக்க்பபட்டுள்ளன. மூதூர் முஸ்லீம்களுக்கு இது முதலாவது இடப்பெயர்வு. ஆனால் தமிழர்களுக்கு???

இப்போது நடந்த சம்பவத்தை விடுவோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருகோணமலைக்குள் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் முப்பதாயிரம் பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்தனர்.
மாவிலாற்று நீர்தடுப்புக்குக் காரணங்கள் என்ன? விடுதலைப்புலிகளின் பகுதி மக்களுக்கு அத்தியாவசரிய உணவுப்பொருட்கள் கூட தடைசெய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பால்மா முதல் பல பொருட்கள் அங்கே தட்டுப்பாடானவை.
சம்பூர் மக்களுக்கு நீண்டகாலமாகவே பல்வேறு பொருளாதாரத் தடைகள். புலிகள் அரசோடு வெளிநாட்டில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூருக்கு பொருளாதாரத் தடை இருந்தது. இடையிடையே மக்கள் போராட்டம் நடத்துவதும் விடுவதுமாகவே காலம் கழித்தனர். இன்றுவரை கட்டடப் பொருட்களுக்கான தடை தொடர்ந்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனமொன்று கட்டித்தரப் புறப்பட்ட நீர்த்தாங்கியொன்றைக் கட்டவிடாமல் அரசாங்கம் தடை செய்ததால் ஆத்திரமுற்ற மக்கள், ஏற்கனவே அவர்கள் எதிர்கொண்ட பல பிரச்சினைகளோடு சேர்த்து எல்லாவற்றுக்குமாக ஆற்றைத் தடைசெய்ய வேண்டி வந்தது. அதன் பின் புலிகள் இருக்கிறார்களோ இல்லையோ, மிகமிக நியாயமான போராட்டம் அது.

அந்த விசயத்தில் சிங்களஅரசு எப்படி நடந்துகொண்டதென்பது எல்லோருக்கும் தெரியும். மக்களின் கோரிக்கையைக் கேட்கக்கூட விரும்பாத அரசு அதற்கு இராணுவப்பரிமாணம் கொடுத்து இன்றுவரையான போருக்குத் தூபமிட்டது. ஆற்றுநீருக்குத்தான் சண்டையென்றால் புலிகள் நல்லெண்ண அடிப்படையாக ஆற்றைத்திறந்தபின் ஏன் மூர்க்கமான தாக்குதலை நடத்த வேண்டும். ஆற்றுநீரைத் திறந்துவிட்டபின் நூற்றுக்குமதிகமான பொதுமக்களைப் படுகொலை செய்துள்ளது இலங்கை அரசு.

இன்று அகதிகளாக பாதுகாப்புத் தேடி ஓடிய மக்களைக் கலைத்துக் கலைத்துக் கொல்கிறது. யாரும் ஏனென்று கேட்கப்போவதில்லை. கண்காணிப்புக்குழுவோ தாங்கள் அந்தப்பகுதிக்கு வர பாதுகாப்பு உத்தரவாதமில்லை என்று ஒரு சொல்லில் பிரச்சினையை முடித்துவிடும். மிகமிக அதிகபட்சமாக அரசை நோகாமல் கண்டித்து ஒரு அறிக்கைவிடும். அதை மிஞ்சி எதுவுமில்லை. எங்கள் பாதுகாப்புக்கு யாரையும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.
பாலஸ்தீன மக்களையும் ஈழத்தவரையும் ஒப்பிட்டு நாம் கொஞ்சம் நிம்மதி அடையலாம். எப்போதும் பரிதாபத்துக்குரியவர்களாயிருப்பது ஒருபோதும் வி்டுதலையைத் தராது. பாலஸ்தீனியருக்குக் கிடைத்த உலக அனுதாபம், ஆதரவுடன் ஒப்பிடும்போது ஈழத்தவருக்குக் கிடைத்தது ஒன்றுமேயில்லை. இவ்வளவு காலத்தின் பின்னும் இன்றும் கேட்பாரற்றுச் செத்துக்கொண்டிருக்கும் லெபனான் மக்களைப் பார்த்தால் அவர்கள் மேல் தான் கோபம் வரும்.
ஈழத்தவரும் பரிதாபத்துக்குரியவர்களாக இருந்தகாலத்தில் எல்லோரும் உச்சுக்கொட்டிக் கொண்டிருந்தார்கள் இன்று லெபனானுக்குக் கொட்டுவது போல. ஆனால் உலகம் விழுந்தடித்து வந்தது எப்போதென்றால் எதிர்த்தரப்பைப் பரிதாபத்துக்குரியவர்களாக ஆக்கியபோதுதான்.

இன்று நூறு பொதுமக்களை திருகோணமலையில் அரசு கொலை செய்துள்ளது. இதற்கு சர்வதேசத்திடமிருந்து எந்தத் தீர்வும் இல்லை. முதலில் அந்தத் தொகையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை உறுதிசெய்து அவர்களை நம்பவைக்கவே நிறைய உழைக்கவேண்டியிருக்கும். இனியும் போர்நிறுத்த உடன்படிக்கை, உலக ஒழுங்கு, பன்னாட்டு அழுத்தம், பன்னாடை என்று யோசித்துக் கொண்டிருந்தால் கதை கந்தல்தான்.
அண்மையில் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைப்பற்றிய இடங்களைக்கூட விட்டுவிட்டு திரும்பினர். காரணம் ஒப்பந்தமாம். சிங்களவன் ரெண்டு கிழமையாக நிலங்களைப் பிடிக்க படாதபாடு படுறான். ஒருவேளை அரசபடைகள் புலிகளின் நிலையைப் பிடித்தால் அவர்களைத் திரும்பிப்போ என்று யாரும் சொல்லப்போவதில்லை.
முன்னேறிவரும் எதிரிகள்மேல் நீண்டகாலத்துக்கு மறிப்புத்தாக்குதல் மட்டும் நடத்திக்கொண்டிருப்பது களத்தில் பாதகமான நிலை. மக்களும் அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் உடனடியாகச் செய்யவேண்டியது புதிய களமுனைகளைத் திறந்து தமது வலுவைக்காட்ட வேண்டும். புலிகள் நிலமீட்பைத் தொடங்கினால் சில கோமாளிகள் "ஐயோ ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, போர்நிறுத்த மீறல், பாசிசம்" என்று ஒப்பாரி வைக்கத்தான் போகிறார்கள். இவர்களைக் கருத்திற்கொண்டால் அம்போதான்.
முன்னைய மூதூர் நடவடிக்கையிலும் புலிகளுக்கு வேறு தெரிவுகள் இல்லாதபட்சத்தில்தான் அவர்கள் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

இன்றைய நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை, பேச்சுமூலம் தீர்வுகாணுவதில் அதற்கிருக்கும் விருப்பின்மையை, போர்மூலம் தீர்வு காண்பதில் அதற்கிருக்கும் வேட்கையை, மக்களைக் கொன்றுகுவிக்கும் அதன் காட்டுமிராண்டித்தனத்தை இதற்கு மேலும் உலகுக்கு வெளிப்படுத்தத் தேவையில்லை. இவ்வளவு நிகழ்விலும் அதைப்புரிந்துகொள்ளாதவர்கள் இனிமேல் எதையும் புரிந்துகொள்ளப்போவதில்லை. தமிழர் பிரச்சினையை அது எப்படி அணுக முற்படுகிறது? இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்படியான தீர்வை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி மிகத்தெளிவான முடிவுக்கு வரமுடியும்.

யுத்தம் மட்டுமே தீர்வு என்று சிங்களத்தரப்பு மிகத்தெளிவாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் அதைக்கண்டிக்காத, கண்டுகொள்ளா சக்திகளின் நற்சான்றிதழுக்கு தமிழர் தரப்புக்காத்திருப்பது சுத்த முட்டாள்தனம். சிங்களத்தரப்பின் அறிவிப்பை, சவாலை எதிர்கொள்வது மட்டுமே தமிழர்முன்னுள்ள தெரிவு. அதைமட்டுமே எமது தெரிவாகவும் கொள்ளவேண்டும்.
விரைவில் களநிலைகள் மாறுமென்று நம்புகிறேன்.


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"திருமலையில் நூறு தமிழர்கள் கொலை." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (11 August, 2006 01:54) : 

எழுதிக்கொள்வது: சுந்தரவடிவேல்

இந்த நூறு பேர் மட்டுமில்லை இதற்கு முன் அரசால் சாகடிக்கப்பட்ட அத்தனைத் தமிழர்களையும் மூடிப் புதைத்த சர்வதேச ஊடகங்கள், உலக அரசுகள் எல்லோருக்கும் புலிகளின் போர்வழியான வெற்றியே புரிகின்ற மொழியாக இருக்கும். இந்தியா புலிகளின் மேல் இருக்கும் தடையை நீக்கி, இலங்கையரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய தருணம் இது.

12.9 10.8.2006

 

said ... (11 August, 2006 02:24) : 

/ஆற்றுநீருக்குத்தான் சண்டையென்றால் புலிகள் நல்லெண்ண அடிப்படையாக ஆற்றைத்திறந்தபின் ஏன் மூர்க்கமான தாக்குதலை நடத்த வேண்டும். ஆற்றுநீரைத் திறந்துவிட்டபின் நூற்றுக்குமதிகமான பொதுமக்களைப் படுகொலை செய்துள்ளது இலங்கை அரசு/
முக்கியமான கேள்வி. இதையெல்லாம் பற்றி யாருக்கு அக்கறை? அவரவர் அவரவர்க்கான அரசியலில் காற்றிலேறி வார்த்தைப் போர் புரியவேண்டியதுதான்.
......
லெபனான் மக்கள் பற்றிய உங்கள் குறிப்புப்பற்றி சிலவற்றைக் கூறவிருப்பம். நேரங்கிடைக்கும்போது வந்து எழுதுகின்றேன்.

 

said ... (11 August, 2006 08:02) : 

மிகவும் மனதைப் பாதிக்கிற ஒரு பதிவு. கைப்பிடித்த இடங்களை விட்டுவிட்டு திரும்பவும் வந்திருப்பது
புலிகள் தரப்பின் நம்பிக்கையின்மையைக்காட்டுகிறது. இலங்கை அரசின் பொதுமக்கள் மீதான வன்முறைக்கு உடனுக்குடன் தகுந்த பதிலடி கொடுக்கப்படவேண்டும். ஏற்கனவே மோதல்களில் தோல்வியடைந்து, குழம்பிப்போயிருக்கிற அரசின் மீதான புலிகளின் ஒட்டு மொத்தமான ஒரு வலிய தாக்குதல் தமிழர்களுக்கு சாதகமான முடிவைத் தரலாம்.

 

said ... (11 August, 2006 09:03) : 

தமிழர்கள் அவதியுற்றால் கேட்க நாதியில்லை என்ற உண்மையினாலயே இலங்கை ராணுவம் குண்டு போடுகிறது.

பின்னால் யாரும் குறை கூறக்கூடாது என்று போர் நிறுத்த கண்காணிப்பு அமைப்பு இது தண்ணீருக்கான சண்டையில்லை என்று யாருக்கும் கேட்காமல் முனகி விட்டுவிட்டது.

எந்த நாடும் ஈழ தமிழர்களுக்கு துணைக்கு வராது குரல் கொடுக்காது அவர்கள் பலமே அவர்களுக்கு துணை.

 

said ... (11 August, 2006 15:23) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

மூதூரில் தமிழர் இருந்தார்களா? சொல்லவே இல்லை.


13.43 11.8.2006

 

said ... (11 August, 2006 18:50) : 

'போர் என்னறால் போர்' எனப் போர் பிரகடணம் செய்து போராடியே வெற்றிகொள்ளப்பட முடியாத யுத்தத்தை வலிந்து தொடங்கும் அரசை என்னவென்று சொல்வது? மக்களின் அழிவு எண்ணி விலகியிருந்தால், வீழ்சியுற்றார்கள் என்று கூத்தாடும் மதிகுறைந்தோரை என்ன சொல்வது?

 

said ... (11 August, 2006 21:13) : 

//விரைவில் களநிலைகள் மாறுமென்று நம்புகிறேன்.//
அதே .

-theevu-

 

said ... (11 August, 2006 22:52) : 

உலகே உனக்குக் கண்ணில்லையா

 

post a comment

© 2006  Thur Broeders

________________