தமிழக ஊடகங்களின் ஈழம் பற்றிய அறிவு.
கீழே இருப்பது தமிழக ஊடகமொன்றில் வந்த செய்தி. "விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 கடற்படை வீரர்கள் பலியாயினர். விடுதலைப்புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. மன்னார் மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. காங்கேசன்துறை பகுதியில் உள்ள கடற்படை முகாம் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த மோதலில் நான்கு கடற்படை வீரர்கள் பலியாகினர். " என்று அச்செய்தி தொடர்ந்து செல்கிறது. இது thatstamil என்ற வலைச்செய்தித் தளத்தில் வந்தது. இச்செய்தி சொல்லவந்தது, நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன் துறைக்கு அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி. இவர்கள் எங்கிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள் என்ற குழப்பம் வருகிறது. புலிகளின் செய்தித்தளங்களும் இலங்கை அரசு தரப்பின் செய்தித்தளங்களும் இப்படியொரு தவறான அமைவிடத் தரவைத் தந்திருக்கமுடியாது. நாலைந்து செய்திகளை ஒன்றாகக் குழைத்துத் தருகிறார்களா? காங்கேசன்துறை கடற்படை முகாம் மீது அதிரடித்தாக்குதல் நடத்துவதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம்? பொதுவாகவே தமிழகத்தின் அச்சு மற்றும் இணைய ஊடகங்களுக்கு ஈழம் தொடர்பான அத்தியாவசிய அறிவே குறைவுதான். சில ஊடகங்கள் தெரிந்தும் விசமத்தனமாகத் திரிப்பவை. பிரபாகரனின் வருடாந்த உரையை, அவரது பிறந்தநாளுக்காக வெளியிடப்படும் உரையென்று பல ஊடகங்கள் சொல்லிவருகின்றன. இவற்றிற் சில, உண்மையிலேயே அறியாமையால் சொல்வன. சில உண்மை தெரிந்தும் விசமத்தனமாகச் சொல்வன. புலியெதிர்ப்புக் கும்பல் இதே கதையைச் சொல்லும் நோக்கத்தையே இந்த ஊடகங்களும் கொண்டிருக்கின்றன. (வலைப்பதிவுச் சூழலிலும் சிலருள்ளனர்) அதைவிட இவ்வூடகங்களுக்கு ஈழம் பற்றிய அமைவிட, பிரதேச அறிவு என்பது மிக மோசமாக உள்ளன. மேற்குறிப்பிட்ட செய்தியை எடுத்துக்கொண்டால் கூட, காங்கேசன்துறை என்பது ஏதோ குச்சொழுங்கைக்குள் இருக்கும் இடமன்று. முக்கியமான துறைமுகம். இன்றும் அதற்கு ஒரு பிரச்சினையென்றால் இந்தியக் கடற்படைதான் முதலில் வரிந்துகட்டிக்கொண்டு வந்து நிற்கும். அதைவிட இந்தியாவிலிருந்து அகதிகள் பரிமாற்றம் வரை நெருங்கிய தொடர்புள்ள துறைமுகம் இது. இதைக்கொண்டுபோய் மன்னாரில் வைத்து, அல்லது மன்னாரைக் கொண்டுவந்து காங்கேசன்துறையில் வைத்து ஒரு செய்தியைத் தருகிறார்கள். (மணிரத்தினம் செய்த 'கன்னத்தில் முத்திட்டால்' எவ்வளவோ பரவாயில்லை) ஒரு செய்தி ஊடகம் இப்படியொரு அரைகுறை பிரதேச அறிவுடன் இயங்குகிறது என்பது வருத்தத்துக்குரியதே. இந்தப் பிரதேச அறிவைப் பெற ஈழத்தில் இருந்திருக்க வேண்டுமென்ற அவசியமேயில்லை. தமிழ் தவிர்ந்த ஏனைய ஊடகங்கள் இப்படித் தவறான பிரதேச அறிவோடு செய்தி வெளியிட்டதாகவும் நினைவில்லை. குறைந்தபட்சம் இவ்வளவு காலத்தில் முக்கிய இராணுவ நிலைகள், இராணுவத் தளங்கள், விமானத்தளங்கள், கடற்படைத்தளங்கள், போர் இலக்குகள், புலிகளினதும் இராணுவத்தினதும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பற்றிய தரவுகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமாக ஒரு வரைபடமாவது குறிப்புக்களுடன் இருந்திருக்க வேண்டும். இவற்றை விட்டுப்பார்த்தாலும் இவ்வாறான செய்திகளுக்கு நம்பகரமான பல்வேறு மூலங்களுள்ளன. **************************************************** அடிப்படையில் தமிழகத்தின் அரசியல், புவியியல், கலை - இலக்கிய - கலாச்சாரம் பற்றி ஈழத்தவருக்கு இருக்கும் அறிவுக்கு எதிர்மாறானதாகவே ஈழம் பற்றி தமிழகத்தார்க்கு உள்ளது என்பது என் கருத்து. இதற்குப் பல்வேறு காரணிகளுள்ளன. ஆனால் ஒரு செய்தி ஊடகமும் ஏனோ தானோவென்று மெத்தனமாக அறிவை வைத்துக்கொண்டிருப்பது அவ்வளவு சரியில்லை. குறைந்தபட்ச தேடலாவது வேண்டும். thatstamil வலையூடகம் ஒப்பீட்டளவில் ஈழம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வலையம் என்பது எனக்குத்தெரியும். இயன்றவரை நடுநிலையையும் பேணுகிறது. ஆனால் இதே தளத்தில இப்படியான தவறான செய்திகள் வரும்போது வருத்தமாயிருக்கிறது. அதுதான் இப்பதிவு, இதுவே வேறோர் வலைத்தளத்தில் வந்திருந்தால் எழுதியிருப்பேனா தெரியாது. _____________________________________________ தமிழ்ப்பதிவுகள் |
"தமிழக ஊடகங்களின் ஈழம் பற்றிய அறிவு." இற்குரிய பின்னூட்டங்கள்