களவும் கற்று மற.
பிறை ஆறு. களவும் கற்று மற. நான் கொழும்பில நிக்கேக்க அக்கம்பக்கத்தில தொடர்ச்சியாக் களவு நடந்தீச்சு. அதுவும் கட்டிவச்சு வெருட்டி களவெடுத்தாங்களாம். அடுத்தடுத்ததா ரெண்டு மூண்டு வீட்ட ஒரே இரவில களவு அல்லது கொள்ளை நடக்கும். ஆனா ஆரும் பிடிபட்ட மாதிரித் தெரியேல. ஆனா களவு போனதெண்டு சொல்லிற கணக்கு எக்கச்சக்கமா இருக்கும். அந்த நாக்களில எங்கட சொந்தக்காரருக்கு ஒழுங்கா நித்திரயில்ல. வந்தா என்ன செய்யிறது? கத்தியக்காட்டினா என்ன செய்யிறது? எண்டு ஒரே தலையிடி. அதுக்க நானொரு இளந்தாரி இருக்கிறன் எண்டு அவைக்கு ஒரு தெம்பு இருக்கெண்டு வேற ஒரு வீட்டுக்காரருக்குச் சொல்லேக்க, அத தற்செயலாக் கேட்ட நான் அழுறதா சிரிக்கிறதா எண்டு தெரியாமல் முழிச்சன். நல்ல காலம் நான் நிக்கேக்க கள்ளன்கள் வந்து, நான் என்ர வீரதீர பிரதாபங்களக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் வரேல. எங்க பாத்தாலும் களவும் கொள்ளையுமா கொஞ்ச நாள் இருந்தீச்சு. ஆனா பத்திரிகைகளில அந்தச் செய்திகள் வராது. எங்கயேன் வங்கிக்கொள்ளை நடந்தா வரும்போல. ஆனா கொழும்பு வாசிகளுக்கே அந்தக் களவுகள் பெரிய விசயமாத் தெரியேல. அவயளுக்குப் பழகீட்டுதாம். ஆனா எனக்கு அந்த விசயங்கள் பெரிசாத்தான் இருந்தீச்சு. வன்னியில களவுகள் எண்டது இப்பிடி பெருந்தொகையில நடக்கிறேல. இப்பிடி பெறுமதியா களவெடுக்க சனத்திட்ட சாமான் சக்கட்டும் இல்லதான். வன்னியில களவு போறதெண்டாலும் சைக்கிள்தான் களவுபோகும். ஒரு சைக்கிள் களவு போனாலே பட்டி தொட்டியெல்லாம் அதுதான் கதையா இருக்கும். காவல்துறையில முறைப்பாட்டுக்குப் போற விசயங்களில அரவாசிக்கு மேல சைக்கிள் பிரச்சினையாத் தான் இருக்கும். ஆனாலும் பெரும்பாலும் தெண்டிச்சுப் பிடிச்சிடுவினம். எங்க போறது? சுத்திச் சுத்தி அதுக்க தானே நிக்க வேணும். அதுக்க தானே சைக்கிள ஓடித்திரிய வேணும். இனி எஙகட சனத்தப் பற்றித் தெரியாதே? ஒருத்தனிட்ட ஏதும் வித்தியாசமா இருந்தா போட்டுக் குடுத்துவிடுங்கள். அதோட அங்கயிருக்கிற புலனாய்வு வலைப்பின்னல் அங்க இருந்தாக்களுக்குத்தான் தெரியும். ஒரு சைக்கிள் கடையிலபோய் “என்ர பூட்டுத் திறப்பு துலைஞ்சு போச்சு. இத ஒருக்கா உடைச்சுத்தாங்கோ” எண்டு ஒருத்தரும் போய்க் கேக்க ஏலாது. அப்பிடியெண்டா முதலில அது உங்கட சைக்கிள்தான் எண்டத உறுதிப்படுத்தோணும். அங்க தணிக்கை செய்யப்படாத படங்கள் போடத்தடை. ஆரேன் களவாக் கொப்பியெடுத்துப் போட்டா அதுகளப் பிடிச்சு தண்டப்பணம் அறவிடுறது வழக்கம். ஆனா திரைப்பட வெளியீட்டுப் பிரிவு எங்கயெங்க அப்பிடி படமோடுதெண்ட தகவல எடுக்க பெரிசாக் கஸ்டப்படுறேல. தகவல் தானா வரும். நேர போய் கையும் மெய்யுமாப் பிடிக்கிறதுதான் அவயின்ர வேல. ஒருக்கா பிடிபட்டவன் குறைஞ்சது 3 பேரையாவது பிடிச்சுக் குடுக்காம ஓய மாட்டான். சரி. விசயத்துக்கு வாறன். வன்னியில களவுப்பயத்தில நித்திர முளிச்சு இருந்ததா ஞாபகமில்ல. கள்ளனுக்குப் பயந்து பயந்து சீவிச்சதா ஞாபகமில்ல. உண்மையில அந்த விசயத்தில ஏனைய இடங்களவிட வன்னி மேல்தான். அங்க இந்த சைக்கிள் தருடிறதில நடந்த சுவாரசியமான சம்பவம் ஒண்டச் சொல்லப்போறன். புதுக்குடியிருப்பில சைக்கிள் களவு விசயத்தில ஒருத்தர் தொடர்ச்சியாப் பிடிபட்டுக் கொண்டிருந்தார். பிடிபடுறதும் தண்டனை செய்யுறதும் பிறகு பிடிபடுறதும் தணடனை செய்யிறதும் எண்டு இவரிண்ட பாடு போகுது. அவர் எடுத்த எல்லாச் சைக்கிளும் பூட்டின நிலையிலதான் எடுத்திருக்கிறார். அது ஒரு பெரிய விசயம். ஏனெண்டா பூட்டின சைக்கிளொண்ட ஒருத்தர் தூக்கிக் கொண்டு போறது வன்னியில சரியான ரிஸ்க். எங்கயேன் சைக்கிள் களவு போனா காவல்துறை முதலில நேரா இவரிட்டதான் போகும். சிலதுகள் இவர் எடுக்கேல எண்டு விடுதலை கிடைக்கும். ஒரு கட்டத்தில வெறுத்துப்போய், "ஏன்ராப்பா திருப்பித் திருப்பி இப்பிடிச் செய்யிறாய்?” எண்டு கேட்டிருக்கிறாங்கள். அவர் சொன்னாராம், “அதண்ண, அதுகளக் கண்ட உடன எடுக்க வேணும் போல கிடக்கு.” பாரதிராஜாவின்ர கண்களால் கைதுசெய் பாத்த போது உண்மை உறைத்தது. “சரி, பூட்டின சைக்கிள என்னெண்டு எடுக்கிறனி? அதையாவது சொல்லன்” எண்டு கேக்க முதலில பிகு பண்ணிப்போட்டுச் சொன்னாராம் அந்த தொழில் ரகசியத்த. சைக்கிள் றிம்மில கவ்விப்பிடிக்கக் கூடியமாதிரி ஒரு கவ்வி ஒண்டச் செய்து, அதில வீல் ஒண்டப் பூட்டி (பெரிய சூட்கேசுகளுக்கு இருக்கிறமாதிரி) நிரந்தரமா வச்சிருக்கிறது. பிறகு இரவு நேரத்தில போய் பூட்டி நிக்கிற சைக்கிள் பின் சில்லின்ர றிம்மில அதப் பூட்டிப் போட்டு சைக்கிள உருட்டிக்கொண்டு போறதாம். சைக்கிள் சில்லு உருளாது. ஆனா இந்த குட்டிவீல் உருளும். இரவில சைக்கிள உருட்டிக்கொண்டு போறவன ஏன் சனம் சந்தேகப்படப்போகுது? பகலிலயெண்டா அந்தக் குட்டிவீல் அற்றயேன் கண்ணில குத்தியிருக்கும். உங்களுக்கு இந்தத் திட்டம் விளங்கீட்டுதோ? வலைப்பதியிற சைக்கிள் திருடர்கள் இதைச் செய்து பாக்கலாம். எதுக்கும் அந்த மனுசனிட்ட 'கொப்பிறைட்' எடுத்துச் செய்யிறது நல்லம். களவும் கற்று மற. Labels: அனுபவம், நட்சத்திரக் கிழமை, பேச்சுத்தமிழ் |
"களவும் கற்று மற." இற்குரிய பின்னூட்டங்கள்
வசந்தன் களவும் கற்று மற வுக்கு வேறு அர்த்தமும் சொல்கிறார்கள்.
அதை விடுவம்.
ஒருவர் ஒவ்வொரு நாளும் சைக்கிள்ளை மண்ணைக் கட்டிக் கொண்டு போய் சைக்கிள் கடத்தின கதை உங்களுக்குத் தெரியுமோ?
எழுதிக்கொள்வது: மகிழன்
குரல்பதிவில கொஞ்சம் இரைச்சல் இருக்கு. ஆனா பரவாயில்ல. களவெடுக்கிற டெக்னிக் எல்லாம் சொல்லிறியள். கவனம்.
9.37 8.5.2005
நல்ல புத்திசாலித் சைக்கிள் திருடர்தான்! (அவருடைய மூளை அவர மரியாதைய காப்பாத்துது!). எங்க ஊரில இப்படித்தான் ஒரு நூதன திருட்டு! தோட்டத்திற்கு தண்ணி பாய்ச்சுகின்ற 'பம்பு செட்' வயர்களைத் தொடர்ந்து ஒரு ஆள் திருடிக்கொண்டு இருந்தான். ஆள் யாருன்னும் தெரியலை.. வயரத் திருடி என்ன பண்ணுவான் என்பதும் பெரிய புதிரா இருந்திச்சு. எங்கள் ஊர் நான்கு புறமும் மலைகள் சூழ்ந்த ஊர் என்பதால், ஒவ்வொரு முறை களவு போகும்போதும் சனம்மெல்லாம் மலைப் பக்கம் ஒடித் தேடுவதும், 'இங்க இருக்கான்'னு சும்மா சத்தம் போடுவதும் (தனியா தேட பயந்தான்!, ஒடிப்பாத்தா சத்தம் போட்டவனோட தம்பிதான் புதர்க்குள்ள திருடனத் தேடிட்டு இருப்பான்!). இப்படியே நாட்கள் போயிட்டு இருந்தது... ஒருநாள் அவன் திருட, பார்த்த ஒரு ஆள் சத்தம்போட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடிப்போய்விட, மற்றவர்கள் எல்லாம் மலைக்கு ஓட, எங்க அண்ணன் மட்டும் ஏதோ தோன்றி, வீடுகளுக்கு பக்கத்தில் உள்ள புதருக்குள் கையை வைத்து அப்படியே ஆளை அள்ளிக்கொண்டு வந்தது. பிறகென்ன?, எல்லாரும் சேர்ந்து, பின்னி எடுத்து, ஏன்டா திருடின? எனக் கேட்க, அவன் வயரின் உள்ளே உள்ள 'காப்பர்' எடுத்து விற்பேன் என்றான்!, எப்பிடி போக்குகாட்டுன? ஒரு ஆள் கத்த, ஆமா நீங்கள் எல்லாம் மலைப்பக்கமாத்தான் ஓடுவிங்க என்றான்!. அப்ப இம்புட்டு நளும் வீட்டுக்கு பக்கத்திலதான் ஒழிஞ்சிட்டு இருந்தியா? என ஆளுக்காள் பாய, பக்கத்தில நின்னு பாத்திட்டு இருந்த 'அமுசு' அக்கா 2 மாசத்துக்கு முன்னாடி காணமப் போன ஆட்டுக்குட்டிய குடுடா என் அடிக்க ஆரம்பிக்க, அய்யயோ... நான் ஒரு மாசமாத்தான் திருடுறேன்னு! அவன் அலற, சனங்க எல்லாம் இனிமே அவன அமுசக்கா பாத்துக்கும்னு அவங்கவங்க வீட்டுக்குப் போய்ட்டங்க! இவன பார்த்து கத்திட்டு வீட்டுக்குள்ளபோய் ஒழிஞ்ச ஆளு நாந்தான் திருடனப்பிடிச்சேன்னு வருசம் பூரா சொல்லிகிட்டு திருஞ்சாரு!