ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ்.
பிறை - நான்கு. நாலாம்பிறை பார்த்தா நாயலைச்சல். ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ். மெலிதான ஒப்புநோக்கு. 'ஈழத்தமிழ்' என இன்று அறியப்படுவது பெருமளவு யாழ்ப்பாணத்தமிழையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஈழத்தின் வேறுபட்ட பாகங்களிடையில் மொழிப்பாவனையென்பது வேறுபட்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்தமிழில் வினவும் போது ‘ஏ’கார ‘ஓ’கார வினாவெழுத்துக்கள் இறுதியில் வரும்வண்ணம் கேள்விகள் கேட்கும் பழக்கமே அதிகமுண்டு. தமிழகத்தைப் போல் ‘ஆ'காரம் இறுதியில் வினாவெழுத்தாக வருவது (கொஞ்சக் காலத்துக்கு முதல்) மிகமிகக் குறைவு. எடுத்துக்காட்டுக்கள்: வருவியே? போவியே? சாப்பிட்டனியே? கடிதம் போட்டனியே? வருவியோ? போவியோ? கூப்பிட்டனியோ? சொன்னனியோ?... வருவியா? போவியா? சொன்னாயா? போன்ற ஆகார வினாவெழுத்துக்கள் இறுதியில் வரும்படி கதைப்பது (முன்பு) குறைவு. இராம.கி. ஐயா குறிப்பிட்டதைப் போல 'உ'கரச் சுட்டெழுத்து மிக அதிகமான பாவனையிலுள்ளது. ஆனால் இப்போது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது. சென்ற வருடம் நான் யாழ் சென்றபோது, (கிட்டத்தட்ட 9 வருடங்களின் பின்) இந்த 'ஏ'கார 'ஓ'கார வினையெழுத்துக்கள் குன்றி 'ஆ'கார வினாவெழுத்துக்கள் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட தோற்றப்பாடு காணப்பட்டது. வருவியா? போவியா? சாப்பிட்டியா? போன்ற நிலையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளினதும் திரைப்படங்களினதும் ஆதிக்கம் என ஊகிக்கிறேன். இது நான் அவதானித்த ஒரு மாற்றம்தான். இதில் தவறிருப்பதாக நான் ஒருபோதும் கருதவில்லை. ஆனால் சிறிது வருத்தமாக இருந்தது. அவ்வளவுதான். --------------------------------------------------- இன்னொரு விடயம். அங்கு வசனத்தில் இறுதியில் எழுவாயை இன்னொருமுறை கூடுதலாச் சொல்வது அல்லது வினைக்குப் பின்னாக சேரத்துச் சொல்வது என்று ஒரு மொழிநடை உள்ளது. எடுத்துக்காட்டு: நான் வந்தனான், போனனான், சாப்பிட்டனான், எழுதினனான். போன்ற சொற்கள். இங்கே வந்த, போன, சாப்பிட்ட, எழுதின எனும் சொற்களோடு (அவை வந்தேன், போனேன், சாப்பிட்டேன் என்ற வினைகளின் வடிவங்களே) நான் என்ற எழுவாய் சேர்ந்து வருகிறது. 'நான் வந்தனான்' எனும் போது 'நான்' எனும் எழுவாய் இரு தடவை வருகிறது. மிக அதிகளவில் இந்தப்பயன்பாடு இருக்கிறது. இது நீ, நீங்கள், அவன், அவள் போன்ற ஏனைய எழுவாய்களுக்கும் பொருந்தும். அவள் வந்தவள். அவன் தான் செய்தவன். நீங்கள் வந்தனீங்களே? அவங்கள் தான் சொன்னவங்கள். என்பது போன்று நிறைய எடுத்துக்காட்டுக்கள். இந்த முறையை நினைத்தால் சுவாரசியமாக இருக்கும். இது தமிழகத்திலும் பாவனையிலிருக்கிறதா தெரியவில்லை. நானறிந்த வரை இல்லையென்றே நினைக்கிறேன். இதே போல் ஈழத்தின் மற்றப் பாகங்களிலும் இப்படி இருக்கிறதா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். மேலும் நான் மேற்கூறிய விளக்கங்களிலும் தவறுகளிருக்கலாம். சுட்டிக்காட்டவும். ------------------------------------------------- அடுத்து ‘ட’கர, ‘ற’கர, ‘ர’ கர வித்தியாசங்கள் தமிழகத்துக்கும் எமக்கும் இருக்கின்றன. இது ஆங்கில உச்சரிப்பைத் தமிழில் எழுதும்போதுதான். தமிழ்ச்சொல்லிலும் இரண்டொரு வேறுபாடுகளுண்டு. எடுத்துக்காட்டு: கரிய நிறத்தை நாம் 'கறுப்பு' எனப் பலுக்குவோம். ஆனால் தமிழகத்தில் 'கருப்பு' என்று பலுக்குகிறார்கள். ஆனால் உச்சரிப்பில் நாம் உச்சரிப்பது போலவே உச்சரிக்கிறார்கள். ஆனால் 'கருப்பு' என்பதை நாம் உச்சரித்தால் அது வேறுபட்டுவிடும். ஏனென்றால் ‘ற’கரத்துக்கும் ‘ர’கரத்துக்கும் தீர்க்கமான உச்சரிப்பு வேறுபாடு எம்மிடமுள்ளது. உச்சரிப்புத்தான் மூலம். வரிவடிவங்களன்று என்பதுதான் முக்கியமானது. -------------------------------------------------- இனி ஆங்கில உச்சரிப்பை எழுதும்போது இரு தரப்பிலும் எப்படிப் பலுக்குகிறார்கள் என்று பார்ப்போம். ரீ.வி. – டி.வி. ரேக் இற் ஈசி – டேக் இட் ஈசி. ரிக்கெற் - டிக்கெட் ரின் - டின் ரெலிபோன் - டெலிபோன் இதைவிட ஆகார ஓகார மாற்றங்களும் வரும். ஈழத்தமிழர்கள் ஆங்கில 'T' என்பதற்கு ‘ர்’ வரிசையின் உயிர்மெய்களைப் பயன்படுத்துகிறார்கள் (மெய்யை அன்று). அதே போல் ஆங்கில 'D' என்பதற்கு ‘ட’ வரிசையைப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் 'ர'கர, 'ற'கர வித்தியாசமுமுண்டு. R என்பதற்குப் பதிலாகவே ‘ற்’ வரிசையின் உயிர்மெய்களைப் பயன்படுத்துகிறார்கள் (மெய்யை அன்று). இலகுவாக ‘ற’கர ‘ர’கர ஒலி வித்தியாசங்களைச் சொல்லிவிடுகிறேன். ‘ர்’ இன் உயிர் மெய்யெழுத்தெல்லாம் வல்லின உச்சரிப்பைக் கொண்டிருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஆங்கில T போல. ஆனால் மெய்யெழுத்துமட்டும் இடையின தொடரொலி உச்சரிப்பைக் கொண்டிருக்கும். அதாவது ஆங்கில R போல. தமிழகத்தில் இது மாறி இருக்குமென்று நினைக்கிறேன். ரிக்கெட் என்பதற்கும் றிக்கெட் என்பதற்குமிடையில் உச்சரிப்பில் வித்தியாசமில்லையென்றே நினைக்கிறேன். மாறாக, ‘ற்’ இன் உயிர்மெய்யெழுத்தனைத்தும் இடையின தொடரொலியைக் கொண்டிருக்கும். அதாவது அங்கில R போல. ஆனால் மெய்யெழுத்து மட்டும் வல்லின வெடிப்பொலியைக் கொண்டிருக்கும் ஆங்கில T போல. தமிழகத்திலும் இதே முறையுள்ளது. ஆனால் ‘ற்’ உடன் அதே உயிர்மெய் வரும்போதுதான் இருதரப்புமே மாறுபடுகிறது. நாம் ‘ற்’ இன் மெய்யுடன் அடுத்து அதே உயிர்மெய் வந்தால் அதையும் வல்லினமாகவே உச்சரிப்போம். குற்றம் என்று எழுதினால், அதை உச்சரிக்கும்போது ‘ற்’ என்பது வல்லின வெடிப்பொலியாகவும் ‘ற’ என்பதை இடையினத் தொடரொலியாகவும் (R) தமிழகத்தார் உச்சரிப்பர். ஆனால் நாம் இரண்டையுமே வல்லினமாகவே உச்சரிப்போம். இதே போலவே வெற்றி, நெற்றி, பற்றி, பற்றை என்பனவும் இரு தரப்புமே வித்தியாசமாக உச்சரிக்கிறோம். (ஆனால் கொஞ்சம் பழய தமிழகத் தமிழில் மாறியிருந்ததோ என்று ஐயமுண்டு. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்பதில் நெற்றி, குற்றம் என்பன நாம் உச்சரிப்பது போலுள்ளதாகப் படுகிறது. மேலும் அருணகிரி நாதர் படத்தில் சௌந்தரராஜனின் திருப்புகழ்ப் பாட்டில் (அற்றித் திருநகை?) வரும் சொல் உச்சரிப்புக்கள் நாம் உச்சரிப்பது போலவே உள்ளது. ஆக இப்போது தான் தமிழகத்தில் அந்த மாற்றம் வந்ததா? தெரிந்தவர்கள் சொல்லவும்.) ஆனால் ஈழத்திலும் ‘ர’கர, ‘ற’கர உச்சரிப்புக்கள் சில இடங்களில் மாறி வருகிறது. ராணி, ராசா, ரவி என்பவற்றை வல்லினமாகத் தொடக்கி உச்சரித்தது அந்தக்காலம். இன்னும் கிராமங்களில் மாறாவிட்டாலும் பல இடங்களில் இப்பெயர்கள் இடையினத் தொடரொலியாகத் தொடங்கி (R) உச்சரிக்கப்படுகிறது. அதாவது றாணி, றாசா, றவி என்பவை போல. ஆனால் இவற்றுக்கு முன் 'இ'கரத்தைப் போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இந்த மயக்கமே இல்லாமல் சரியாக வாசிப்பார்கள். இராசா என்றால் நிச்சயம் வல்லின உச்சரிப்புத்தான் வரும். (இதற்காகத்தானோ முன்னோர்கள் ர்,ற்,ட் வரிசைகளுக்கு இகரமும் உகரமும் போடச்சொன்னார்கள்.) இதை வாசிக்கும் உங்களுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். மிகுதியை என் ஆராய்ச்சிப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளவும். ----------------------------------------------------- என்ன இருந்தாலும் எனக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழில் தீராத காதலுண்டு. அதற்குக் காரணம் இன்னும் மாறாமலிருப்பதுதான். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தலைமுறை இன்னும் எந்த வேற்று மொழியின் தாக்கமுமில்லாமல், தமிழகத் தாக்கம் கூட இல்லாமல் அப்படியே தமிழை வைத்திருக்கிறார்கள். (கிளிநொச்சியில் சென்ற வருடம் நோர்வேயிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தபோது அவர்கள் கதைத்த தமிழ் என் பாட்டன் பரம்பரைத் தமிழை எனக்கு ஞாபகப்படுத்தியது.) 15 வருடத்துக்கு முந்திய யாழ்ப்பாணத் தமிழைத்தான் இப்போதும் கதைக்கிறார்கள். ஆனால் யாழில் சற்று மாற்றம் கண்டு வருகிறது. இன்னும் யாழில் கிராமங்களில் மொழி தன் வாசனையை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் விரைவில் மாறிவிடும் என்றே தோன்றுகிறது. என் கிராமத்தின் உதைபந்தாட்ட மைதானமும் கரப்பந்தாட்ட மைதானமும் புதர் மண்டிக்கிடக்கிறது. இளைஞர்கள் எல்லாம் தொலைக்காட்சியோடுதான் இருக்கிறார்கள். Labels: ஈழத்தமிழ், நட்சத்திரக் கிழமை, பேச்சுத்தமிழ், விவாதம் |
"ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ்." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: ஜீவா
நல்ல பதிவு வசந்தன். பிறை வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது ;-)
// ஆனால் தமிழகத்தில் 'கருப்பு' என்று பலுக்குகிறார்கள்./
'பலுக்குதல்' இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை!
இதுபோல பல புது வினைச்சொற்களும்
ஈழத்தமிழில் இருக்கும் என நினைக்கிறேன்.
போரடிக்கப்போகிறது, போனால் போகட்டும், இத்துடன் விட்டுவிடுவோம் என்று நினைத்தீர்கள் போலும்! ஒரு பெரிய பட்டியல் ஒன்றை தயாரிக்கலாமே, என் போன்றவர்களுக்கு.
18.53 5.5.2005
சிங்கள தமிழ் தெரியும் அது என்ன ஈழதமிழ்
இல்லை ஜீவா!
அது ஐயா இராம.கி. தந்த சொல்.
அநாமதேயம்!
நீங்கள் யாருக்கோ இடிக்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது.
எழுதிக்கொள்வது: துளசி கோபால்
பலுக்கு' என்பது தெலுங்காச்சே!!
'பலுக்கே பங்காரமாயம்மா'ன்னு பாட்டுகூட இருக்கே!
அப்புறம் நான் 'அவதானிச்சது' சிமெண்ட் ன்னு நாங்க சொல்றதை சீமெந்து ஒரு
இடத்துலே வாசிச்சது நினைவுக்கு வருது!
13.41 6.5.2005
\\ தொலைக்காட்சிகளினதும் திரைப்படங்களினதும் ஆதிக்கம் என ஊகிக்கிறேன். இது நான் அவதானித்த ஒரு மாற்றம்தான். இதில் தவறிருப்பதாக நான் ஒருபோதும் கருதவில்லை. ஆனால் சிறிது வருத்தமாக இருந்தது. அவ்வளவுதான்.\\
|
என்ன அப்பு! இப்படி 'வீல்' பண்ணுறிகள்?., நம்மட தமிழ் மாறி விட்டதென யோசிக்கிறனிங்களே?. யாழ்ப்பானத் தமிழ் நல்ல தமிழ்த்தான்!, மக்கிம்படி, எந்த மொழி மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறதோ, அதுதானப்பு சிறந்த மொழி! சறியே?.
\\ கிளிநொச்சியில் சென்ற வருடம் நோர்வேயிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தபோது அவர்கள் கதைத்த தமிழ் என் பாட்டன் பரம்பரைத் தமிழை எனக்கு ஞாபகப்படுத்தியது\\
ஒற்று வேளை உங்க பாட்டன்ட பாட்டன் தமிழகத்தமிழ் கதைத்திருக்கலாம். தமிழகத்தமிழ் என்று தனித்தமிழ் இல்லையப்பு, மெட்ட்றாஸ் தமிழ், நெல்லைத் தமிழ், கொங்கு தமிழ் என்டுதான் கிடக்கு!. வசந்தன்!, இதை எழுதுகின்ற நான் தமிழகத்தை சேர்ந்தவள்!., இலங்கை இருக்கினற திசையைப் பார்த்தது கூட கிடையது. தமிழகத்திற்கு வந்த இலங்கை மக்களால்தான் கற்றது. உங்கள் கல்விப்பணி பற்றி வாசித்தேன். இந்த இளம் வயதில் உங்கள் பணி பாரட்டுதலுக்கு உரியது. எழுத்துக்கள் தவிர, நிறைய வார்த்தைகள் (உ.ம்) உள்ளீ -வெள்ளைப்பூண்டு (பெண் ஜென்மம் இல்ல?) மற்றும் உறவுமுறை (உ.ம்) நாங்க பேத்தி-பாட்டி என்பதை நீங்கள் தலைகீழாக மாற்றி சொல்கிறீர்கள். இதைப் பற்றியும் பதிவுகள் இடவும்.
அப்படிப்போடு!
அதென்ன பேர்?
சரி. நீங்கள் சுந்தர வெடி வேல் எழுதின பதிவில வாற வசந்தன் நான்தான் எண்டு நினைச்சிட்டியளோ? அது தவறு. அந்த வசந்தன் வேற இது வேற.
பாட்டி பேத்தி உறவிலும் தலைகீழ் மாற்றங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. என் அம்மம்மாவை பாட்டி என்போம். பேத்தி என்ற உறவுமுறை இரு வளத்தாலும் வரும். என்தங்கைக்கு என் அம்மம்மா பேத்தி. அம்மம்மாவுக்கும் என் தங்கை பேத்தி. பேரனும் அப்படியே. உள்ளி, வெள்ளைப்பூண்டு பற்றிய பதிவொன்று மட்டக்களப்புத் தமிழைப்பற்றி எழுதும்போது எழுதுவேன்.
உங்கள் எழுத்து இரண்டையும் கலந்து ஒரு புதுமாதிரியாக இருக்கிறது.
துளசி, நீங்கள் இராம.கி. இடம்தான் கேட்கவேணும்.
அடடே ! அந்த வசந்தன் நீங்க இல்லையா? அதனல் என்ன? மிக நன்றாக எழுதுகின்ற நீங்களும் பாராட்டுக்குரியவர்தான். (பதிவுகளில் இதெல்லாம் சகஜமப்பா!... இது சும்ம பகடிக்கு சொன்னனான்., என் பாராட்டு இதயபூர்வமனது!)
நல்லதொரு விளக்கம்.
ஆறுதலா, நிதானமாப் படிக்கேக்க கொஞ்சம் விளங்குது. இன்னும் எழுதுங்கோ.
ர, ற பற்றிய நல்ல விளக்கம் வசந்தன்.
அன்புடன் வசந்தனுக்கு!
தங்கள்; இந்த ஆக்கத்தைப் படித்தபின்;நான் பழகிய சில மலையக;தென்னிந்திய நண்பர்களின் பேச்சுவழக்கையும்;ஈழத்தின் பலபாகங்களில் உள்ள வழக்கையும்;மீட்டுப்பார்த்தேன். தாங்கள் உன்னிப்பாகத்தான் கவனித்துள்ளீர்கள். மிகச்சுவாரசியமாகவும்;இப்பிடியா? நாம் பேசுகிறோம்!!!???
என ஆச்சரியமாகவும் இருந்தது.
நீங்கள் குறிப்பிட்ட; அருணகிரிநாதர் திருப்புகழில் வரும் சொற்றொடர்; "அற்றித்திருநகை" அல்ல
அது" முத்தைத்தரு பக்தித் திருநகை-அத்திக்கிறை சக்திச் சரவண- முத்திக்கொரு வித்துக்குருபர"
என வரும். இச்சொற்றொடர்- ஒருதடவையே; வருகிறது. அச்சுப் பிழையாகவும்;இருக்கலாம்; இதற்கு முதல் பின்னூட்டமிட்டோர்,எவரும் குறிப்பிடவில்லை. அதனால் குறிப்பிட்டேன்.
நன்றி
யோகன்
பாரிஸ்
எழுதிக்கொள்வது: arunagiri
"கரிய நிறத்தை நாம் 'கறுப்பு' எனப் பலுக்குவோம். ஆனால் தமிழகத்தில் 'கருப்பு' என்று பலுக்குகிறார்கள்".
இது சரி என்று தோன்றவில்லை. தமிழகத்தமிழிலும் கறுப்பு என்று தான் (தரமான எழுத்தாளர்கள்) எழுதுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். (பலுக்குதல் என்றால் எழுதுதல் என்று அர்த்தமா? தமிழகத்தமிழுக்கு இது புதிய வார்த்தை).
"குற்றம் என்று எழுதினால், அதை உச்சரிக்கும்போது ‘ற்’ என்பது வல்லின வெடிப்பொலியாகவும் ‘ற’ என்பதை இடையினத் தொடரொலியாகவும் (R) தமிழகத்தார் உச்சரிப்பர். ஆனால் நாம் இரண்டையுமே வல்லினமாகவே உச்சரிப்போம். இதே போலவே வெற்றி, நெற்றி, பற்றி, பற்றை என்பனவும் இரு தரப்புமே வித்தியாசமாக உச்சரிக்கிறோம்".
நீங்கள் சொல்வது ஓரளவுக்கே உண்மை. 'ற'வினை இடையினமாக உச்சரிப்பது கடந்த பத்தாண்டுகளின் டிவி பாதிப்பேயன்றி, தமிழகத்தமிழின்
characteristic என்று சொல்ல முடியாது
"உச்சரிப்புத்தான் மூலம். வரிவடிவங்களன்று என்பதுதான் முக்கியமானது".
இதனை ஒரு முக்கிய அவதானிப்பாக நினைக்கிறேன். இது எதன் விளைவு என்றால், ஈழத்தமிழ்நடைப் புத்தகங்கள் கடந்த நூற்றாண்டில் ஆகப் பெரும்காலம் ஈழத்தை (அல்லது ஈழத்தமிழ் தெரிந்தவரை) மட்டுமே சந்தையாகக் கொண்டிருந்ததன் விளைவே இது எனத் தோன்றுகிறது. As this market expands, அடுத்த 10-15 ஆண்டுகளில் ஈழத்தமிழ் வரிவடிவங்களுக்கும் அதிக முக்கியம் தந்து மாற்றமடையும் என்பது என் கணிப்பு.
உள்ளி= வெள்ளைபூண்டு, மலையாளத்தில்.
20.31 15.4.2006
அருணகிரி,
'பலுக்குதல்' என்பது spell என்பதற்கிணையான சொல்லாக இராம.கி. அவர்கள் சொல்லி நாங்கள் சிலர் பயன்படுத்துகிறோம்.
ஈழத்தில் இச்சொல் இல்லை.
தமிழகத்தார் எல்லோருமே 'கருப்பு' என்று எழுதுவதாகத்தான் நான் நினைத்து வைத்திருந்தேன். முதன்முதல் Voice on Wings இன் பதிவில் இதுபற்றி அவர் எழுதியபோதுதான் 'கருப்பு' என்பது இடையில் வந்த வடிவமென்று உணர்ந்தேன். அதன்பின்தான் அகராதிகளைப் பார்த்தேன். தமிழகத்திலிருந்து வந்த அகராதிகளிற்கூட 'கருப்பு' என்று நிறத்தைக் குறிக்கும் சொல் இல்லை.
ஆனால், எத்தனைபேர் 'கறுப்பு' என்று எழுதுகிறார்கள் என்று உங்களாற் சொல்ல முடியுமா? வலைப்பதியும் இந்தியத்தமிழர்களில் 'Voice on Wings', 'விடாது கறுப்பு' என இருவர் மட்டுமே 'கறுப்பு' என்று எழுதுவதாக எனக்குத் தெரிகிறது. (உன்னிப்பாக இச்சொல் கொண்டு மட்டும் தேடவில்லையென்றாலும் தொன்னூறு வீதமான இந்திய வலைப்பதிவாளர்கள் 'கருப்பு' என்றுதான் எழுதுகிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மேற்குறித்த இருவரையும் தவிர வேறாட்களை அடையாளங்காண ஆவல்.)
இராம.கி ஐயா கூட 'கருப்பு' என்றுதான் எழுதுகிறார்.
நீங்கள் 'தரமான எழுத்தாளர்கள்' என்று யாரைக் குறிப்பிடுகிறீர்களென்று தெரியவில்லை. ஆனால் வைரமுத்து முதற்கொண்டு 'கருப்பு' எழுத்தாளர்கள் நிறையப்பேரை அடையாளங்காட்ட முடியுமே.
இன்னொரு முக்கிய அவதானிப்பு. வலைப்பதிவுகளில் 'ர'கர,'ற'கர பிழைகள் அதிகம் வருவது இந்திய வலைப்பதிவாளர்களின் பதிவுகளில்.
அக்கறை - அக்கரை, பறவாயில்லை - பரவாயில்லை போன்றன.
இவற்றைத் தட்டச்சுப்பிழை என்று சொல்லமுடியாதபடி குறிப்பிட்ட சிலர் தொடர்ச்சியாக இப்படி எழுதுகிறார்கள். இதற்கு இரண்டு எழுத்துக்களுக்குமான அவர்களின் உச்சரிப்புக்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியிருப்பது காரணமென்று நினைக்கிறேன்.
இரண்டு வருடங்களின் முன் ஈழம் வந்திருந்த மொழியியல் அறிஞர் முனைவர் கு.அரசேந்திரன் அவர்களோடு கதைத்தபோது ஒன்றைக் கவனித்தேன். அவரால் 'ர','ற' இரண்டையும் வேறுபடுத்திச் சொல்ல முடியவில்லை. சின்ன 'ற', பெரிய 'ற' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார். எங்களுக்குத்தான் இப்படிச் சொல்கிறாரா அல்லது வழமையே இப்படித்தானா என்று கேட்டால் அங்கே வழமையாகவே இப்படித்தான் இரு எழுத்துக்களையும் சொல்வதாக அறிந்தேன்.
குறிப்பு: எங்கட 'ர'கர உச்சரிப்புப் பற்றி எனக்கு விமர்சனமுண்டு. பல சந்தர்ப்பங்களில் நாங்கள் சொல்லும் உச்சரிப்புத் தவறானது என்ற புரிதலுள்ளது.
*****************************
ஈழப்புத்தகங்களின் பரந்துபட்ட சந்தை பற்றி நீங்கள் சொன்னது கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவ்வளவு எளிதானதல்ல. இப்போதிருக்கும் நிலையில் இன்னுமின்னும் பாதகமாகவே சென்று சென்றுகொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் அரசிலதிகாரம் கைகூடிவந்தால் ஒருவேளை சரிவரலாம்.
வசந்தன், அருமையான தகவல்கள். இதை இன்னும் விரிவாக நீங்கள் எழுத வேண்டும் என்பதே என் ஆசை.
This comment has been removed by a blog administrator.