Wednesday, May 04, 2005

நல்ல தமிழ் -1

பிறை மூன்று.
(மூன்றாம்பிறை பாத்தா முழுச்சிறப்பு)

எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் -

மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன்

முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்.

வணக்கம்!
இன்று நல்ல தமிழ்ப்பாவனை பற்றி விவாதங்களும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. சிலர் அதைக் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு கிண்டல்களையும் கேலிகளையும் செய்கிறார்கள். பலரைப் பொறுத்தவரை இது நடைமுறைச் சாத்தியமேயற்ற விடயம் என்பது போலப் பேசுகிறார்கள். இதுபற்றி எனது சில அவதானிப்புக்களைச் சொல்லுகிறேன்.

தற்போது நாம் பாவிக்கும் எல்லாச் சொற்களையும் தூயதமிழ்ப்படுத்திப் பாவிப்பது கடினமானதுதான். ஏராளமான பாவனைச் சொற்களுக்கு இன்னும் தமிழ் வடிவம் வரவில்லை. அப்படி வந்தவையும் மக்களிடம் போய்ச்சேரவில்லை. சில சொற்களுக்குத் தமிழ் அறிஞர்களிடமே பிடுங்குப்பாடு. ஆனால், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. முயன்றால் முடியும் என்பதே என் கணிப்பு. இதற்குக் கடுமையான உழைப்பு வேண்டும். சில தீவிர நடவடிக்கைகள் வேண்டும். (தனிமனித உரிமை, ஜனநாயகம் என்ற கோசங்கள் இங்கே வேலைக்காகாது.)

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மட்டுமே என் வாழ்க்கை ஓடியதால் அந்த இடங்களின் அவதானிப்புக்களையே என்னால் வெளிப்படுத்த முடியும். வன்னியில் நீங்கள் தமிழில்தான் பெயர்ப்பலகைகள் பார்க்கலாம். வணிக நிலையங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவங்களையே பயன்படுத்த வேண்டும். பேக்கரி என்று பெயர்ப்பலகை யாரும் போட முடியாது. அதை வெதுப்பகம் என்ற சொல் மூலமே வெளிப்படுத்த வேண்டும். இதைப்போலவே அங்கே ஜூவலறி, ரெக்ஸ்டைல் என்ற சொற்கள் பயன்படுத்த முடியாது. விளம்பரங்களில் கூட தமிழ்ப்பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரெஸ்டோரண்ட், கூல் பார் போன்றனவும் பயன்பாட்டிலில்லை. வங்கி என்பது கூட அங்கே தமிழீழ வைப்பகம் என்ற பேரில் புலிகளின் நிதித்துறை வங்கியே செயற்படுகிறது. ஏனைய அரச வங்கிகள் வழமைபோல சிலோன் பாங், பீப்பிள் பாங் என்ற ஆங்கிலப் பெயர்களுடனும், இலங்கை வங்கி, மத்திய வங்கி என்ற தமிழ் பெயர்ப்பலகையுடனும் இயங்குகின்றன.

இப் பெயர்மாற்றம் என்ன சாதித்தது என்று கேட்டால், நிறையச் சாதித்தது என்றே சொல்வேன். இன்று வன்னியிலிருக்கும் ஒரு சிறுபிள்ளைகூட 'ரெக்ஸ்டைலுக்குப் போறன்' என்றோ 'ஜூவலறிக்குப் போறன்' என்றோ 'பாங்குக்குப் போறன்' என்றோ 'ஷொப்புக்குப் போறன்' என்றோ 'ரெஸ்ரோறண்டுக்குப் போறன்' என்றோ கதைப்பதில்லை. இவை யோசித்து வருவதில்லை. மாறாக இயல்பாக அவர்களின் நாவுகளில் தமிழ்ச் சொல்லே வருகின்றன. வானதி அழகுமாடம், அழகுநிலா நகைமாடம், போன்ற சொற்கள் அப்படியே இயல்பாக வந்து விழுகின்றன. வானொலி உட்பட விளம்பரங்களுக்கும் இதே பெயர்கள் பாவிப்பதால் அப்பிடியே அதே பெயர்களில் மக்களிடத்திற் பாவனையிலுள்ளது. தமிழீழ வானொலி விளம்பரங்கள் மிகப்பெரிய அளவில இவற்றுக்குத் துணை புரிகின்றன.

சில சொற்கள் இன்னும் எம்மக்கள் மத்தியில் முற்றாக ஒட்டவில்லை. எடுத்துக்காட்டு பேக்கரி. வெதுப்பகம் எனும் சொல்தான் பெயர்ப்பலகை மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அரைவாசிப்பேருக்கும் மேல் பேக்கரி என்றே அன்றாட வாழ்வில் கதைக்கிறார்கள். ஆனால் சிலர் வெதுப்பகம் என்று கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களது வாயில் அது இயல்பாக வரவில்லையென்றே நினைக்கிறேன். காலப்போக்கில் மாறலாம். அனால் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் வெதுப்பகம் என்றால் பேக்கரி, வெதுப்பியென்றால் பாண் (Bread) குளிர் களி என்றால் ஐஸ்கிறீம் என்று தெரிந்து வைத்திருக்கிறாரகள். ஆனால் அவர்கள் மறந்தும் bread என்று சொல்வதில்லை.

அங்கே பெயர்ப்பலகை விடயத்திற் சரியான கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இப்போது சில சமரசங்கள் செய்யப்படுகிறது. சில தென்னிலங்கை நிறுவனங்களின் விளம்பரங்கள் தனி ஆங்கிலத்தில் பெரிதாக பல்லிளிக்கிறது. வந்து போகும் வெளிநாட்டவருக்காக ஆங்கலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. (முந்தி சில கடைப் பெயர்ப்பலகையில் ஆங்கிலத்தை உன்னிப்பாய்ப் பாத்துத்தான் வாசிச்சுப் பிடிக்கலாம். இப்ப எல்லாரும் வாசிக்கக் கூடிய மாதிரி கொஞ்சம் பெரிசா எழுதுகினம். என்ன இருந்தாலும் தமிழ் எழுத்தின்ர அளவவிடக் குறைவா இருக்கும்).

பேச்சு வழக்கில் வராத நிறைய தமிழ்ச்சொற்கள் எழுத்துவழக்கிற் பயன்படுத்துகிறார்கள். சிலவற்றைப் பேச்சு வழக்கிற்குக் கொண்டு வர முடியுமா என்று நான் சந்தேகப்பட்டதுண்டு. ஆனால் அச்சந்தேகமும் ஒரு சந்தர்ப்பத்தில ஆட்டம் கண்டது. நாங்கள் 'தேத்தண்ணி' எண்டுதான் தேநீரைச் சொல்லிறனாங்கள். 'தேத்தண்ணி' மிக இயல்பா எங்கட சனத்திட்ட பாவனையில இருக்கிற சொல். ஆனால் தேநீர் எண்ட சொல் இயல்பா பாவனையில இருக்கிறத அறிஞ்சு உண்மையில திகைப்பு ஒருபக்கம், அதோட நல்ல தமிழின்ர சாத்தியம் பற்றின நம்பிக்கை ஒருபக்கம்.

விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தியைப் பற்றி அறிந்திருப்பீர்களோ தெரியாது. 'இறஞ்சித் அப்பா' என்று முன்பு அறியப்பட்டவர். இப்போது அந்தப் பேர் ஏறத்தாள மறைந்து போய் விட்டது. அவர் ஒரு தமிழ் உணர்வாளர். சிலர் அவரை தமிழ் வெறியாளர் என்றும் சொல்வார்கள். எப்போது பாரத்தாலும் தமிழ் தமிழ் என்று தான் அவரது பேச்சு இருக்குமாம். முனைவர் கு.அரசேந்திரனிடம் அவரைப்பற்றிக் கேட்டால் நிறையச் சொல்லக்கூடும். அவருக்குக் கீழே பணிபுரிபவர்களிடமும் அவர் தமிழ் மீதான பற்றை எதிர்பார்ப்பாராம். அவரைப் போலவே அவரது அடுத்த கட்டப் பொறுப்பாளர்களும் இருப்பார்களாம். மதுரன் என்றொருவர், அ.ந.பொற்கோ என்றொருவர். (அ.ந.பொற்கோ ஒரு நாடக எழுத்தாளர் மற்றும் சிறுகதை கவிதைகள் எழுதி நன்கு அறியப்பட்டவர்). அவர்களது வழங்கல் பணிமனையில் வேலைபார்க்கும் ஒரு குடிமகனோடு எனக்குப் பழக்கமுண்டு.

அவர்களது பணிமனையில் எல்லாரும் தேநீர் என்ற சொல்லைத்தான் பாவிப்பார்கள். அது கடமை நேரத்தில் அப்பிடி பாவிப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த நண்பரின் வீட்டுக்கு ஒருமுறை போனபோது, அவரது மனைவி “குளிரா ஏதும் தரட்டோ? இல்லாட்டி தேனீர் குடிக்கப் போறீரோ?”என்று கேட்டா. எனக்கு ஆச்சரியம். தேனீர் என்ற சொல்லை பொதுமக்களிடம் பேச்சு வழக்கில் நான் எதிர்பாரக்கவில்லை. ஆனால் அவவின்ர புருசன் தேனீர் என்று தான் வழமையாகப் பாவிப்பாராம். அவரிடமே கேட்டேன். “பின்ன என்ன தம்பி? மூண்டு வருசமா வழங்கல் பகுதியில வேல செய்யிறன். பகல் முழுக்க அங்கதான் நிக்கிறன். அந்தக் கத தானே வரும்?” (அத்தோடு, "தண்ணி எண்டா குளிரான நீர் எண்டுதான் அரத்தம். என்னெண்டு அத வெந்நீருக்குச் சொல்லிறது?" எண்டு விளக்கம் வேறு கிடைத்தது.)

அதன்பின் அங்கு வேலை செய்யும் இன்னும் இரண்டு மூன்று பேரின் வீட்டிலும் பரிசோதித்துப் பார்த்தேன். சந்தேகமில்லை. தேனீர் என்றே பாவிக்கிறார்கள். ஆக எதையும் பழக்கத்தில் கொண்டு வரலாம். இதைவிட அவர்களின் நிர்வாக அலுவலகங்களின் தமிழ்ப்பாவனை ஆட்களை அசத்தும். புதிதாய் அங்கு போகிறவர்களுக்கு வித்தியாசமாகவே இருக்கும். படிவம் நிரப்புதல், சிட்டை போடுதல், கோரல் போடல், என்று தான் அனைத்துக் கடமைகளும் நடக்கும்.

இன்று அணிநடையை (March-Past) முழுவதும் தமிழ்க்கட்டளைகள் மூலமே நடத்தலாம் என்று சொன்னால் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் இப்படிச் சொன்னபோது மேதாவிகள் சிலர் சிரிக்கத்தான் செய்தார்கள். ஆனால் இன்று அவர்களே வன்னிக்கு வந்து தமிழ்க்கட்டளைகளுடன் நடக்கும் அணிநடை மரியாதையை ஏற்றுச் செல்கிறார்கள். இன்று வன்னியில் ஆங்கில அணிநடைக் கட்டளை முறைகள் ஏறத்தாள மறந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டன. புலிகளின் படையணிகளும் அவர்களது துணையணிகளும் (காவல்துறை, துணைப்படை) முழுவதும் தமிழ்ப்படுத்தப்பட்ட அணிநடையினையே செய்கின்றனர். தமிழில் கட்டளையிட்டால் கம்பீரம் வராது என்று சிலர் பசப்பினார்கள். இன்று பார்த்துவிட்டுச் சொல்லட்டும் கம்பீரம் எங்கிருந்து வருகிறதென்று. தமிழீழக் காவல்துறையின் அணிவகுப்பை ஆவணப்படுத்திய பி.பி.சி. அதை சிலாகித்துச் சொன்னது. குறிப்பாக அவர்களின் கம்பீரத்தை.

அதுமட்டுமன்று, இயன்றவரை இராணுவக் கட்டளைகளைக்கூட (துப்பாக்கி சுடுதல் நிலையெடுத்தல் போன்ற) தமிழிலேயே கொண்டு வந்துவிட்டார்கள். எல்லைப்படை, துணைப்படை என அவர்களது இராணுவப் பயிற்சிகளுக்கான கட்டளைகள் கூட தமிழிலேயே இருக்கின்றன. ஆக தமிழில் செய்ய முடியாது என்றுவிட்டு ஒதுங்கியிருப்பது முட்டாள்தனம். முதலில் முயற்சிக்க வேண்டும். இன்று தமிழீழக் காவல்துறையை, கனவிற்கூட யாரும் போலீஸ் என்று சொல்வதில்லை. காவல்துறை என்றே சொல்கிறார்கள்; அச்சொல் மூலமே சிந்திக்கிறார்கள். காவல்துறை என்றால் அது தமிழீழக் காவல்துறையையும் பொலீஸ் என்றால் அது சிறிலங்காக் காவல்துறையையும்தான் குறிக்கும். மேலும் பொலிஸ்ரேசன் என்றுகூட கதைப்பதில்லை.

கடைக்குத் தமிழில் பெயர்ப்பலகை வையுங்கோ என்று யாழ்ப்பாணத்திற் சொல்லப்பட்டபோது, ஒருவர் சொன்னாராம்:
“நீங்கள் கப்டன், மேஜர், லெப்ரினட் கேணல் எண்டதுகள முதலில தமிழில கொண்டு வாங்கோ. பிறகு எங்களிட்ட வந்து தமிழில போட் போடச்சொல்லிக் கேளுங்கோ”எண்டு சொன்னாராம்.
“அன்புமணியை வேட்டி கட்டச்சொல், சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு பாப்பம்” என்று வினவுவது போல்தான் இருக்கிறது அவரது பதில். இதே இராணுவ நிலைகள் விவகாரத்தை அண்மையில் சக்கரவரத்தியும் நையாண்டி செஞ்சிரிக்காரு ஓப்பாய். (சே!... சக்கரவத்தியப் பற்றிக் கதைக்கேக்க அந்தாளிண்ட பாணியும் சேந்தே வருது)

இராணுவ நிலைகளையும் தமிழிலேயே மாற்றுவது நல்லதென்பதே என் கருத்தும். பண்டிதர் பரந்தாமனோடு ஒருமுறை கதைத்துக்கொண்டிருந்தபோது இதுசம்பந்தமான கதை வந்தபோது சொன்னார், அப்படி மொழிமாற்றப்பட்ட இராணுவ நிலைகள் உருவாக்கப்பட்டு பரிந்துரைத்ததாகவும், ஏறத்தாள ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வரும்வேளையில் யாழ். இடப்பெயர்வோடு அதுவும் நின்றுவிட்டதாகவும் பின் அது நடைமுறைக்கு வரவில்லையென்றும் சொன்னார். ஏன் வரவில்லையென்பது தெரியவில்லை. ஆனால் அதைச் சாட்டாக வைத்து, தமிழில் பேர் மாற்று எனும் கோரிக்கையை தட்டிக்கழிப்பது சுத்த அயோக்கியத் தனம். இன்று ஈழநாதத்தில் 'அழகுநிலா நகைமாடம்' என்றும் 'எழில்நிலா அழகுமாடம்' என்றும் வன்னியிலிருக்கும் கடைகளின் விளம்பரங்கள் வருகின்றன. அதே பக்கத்தில் 'சந்திரா ஜூவலறி' என்றும் 'வேல்ட் பான்சி' (world fancy) என்றும் யாழில் இருந்து விளம்பரங்கள் வருகின்றன.

இப்படி அதிகாரத்தைப் பாவித்து தமிழை நடைமுறைப்படுத்துவது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு என்னிடம் இடமில்லை. தனிமனித உரிமை, ஜனநாயகம் என்று கதைப்பவர்களோடு என்னால் வாதிட முடியாது. ஆனால் அப்படி நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சில சிக்கல்கள் உள்ளன. தவிர்க்கப்பட வேண்டியவைகளாக நான் கருதும் சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை அடுத்த பதிவில் தருகிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நல்ல தமிழ் -1" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 May, 2005 14:58) : 

/“அன்புமணியை வேட்டி கட்டச்சொல், சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு பாப்பம்” என்று வினவுவது போல்தான் இருக்கிறது அவரது பதில்/
;-)

பாவனை என்பதே தனித்தமிழ் இல்லையே

 

said ... (04 May, 2005 15:08) : 

உபயோகம் என்பதைவிட பிரயோகம் சரியாக இருக்கும்.

 

said ... (04 May, 2005 15:48) : 

நல்ல பதிவு. பல புதிய தகவல்கள் (எனக்கு), ரொம்ப நன்றி வசந்தன்.

பேக்கரி என்று பெயர்ப்பலகை யாரும் போட முடியாது. அதை வெதுப்பகம்
www.chennainetwork.comல்
அடுமணை (பேக்கரி)
என்று பார்த்தேன். வெதுப்பகம் விட அடுமணை - நல்லாருக்குல்ல!?

இப் பெயர்மாற்றம் என்ன சாதித்தது என்று கேட்டால், நிறையச் சாதித்தது என்றே சொல்வேன். ....

...இவை யோசித்து வருவதில்லை. மாறாக இயல்பாக அவர்களின் நாவுகளில் தமிழ்ச் சொல்லே வருகின்றன.

கேட்க இனிமையாக (மகிழ்ச்சியாக, சந்தோஷமாக என்ற சொற்கள்தான்(அதிலும் வார்த்தைதான் முதலில்) மனதுள் தோன்றியது:)
இருக்கிறது.

குளிர் களி என்றால் ஐஸ்கிறீம
இங்கு சிங்கையில் - குறைந்தபட்சம் பள்ளிப் புத்தகத்தில் பனிக்கூழ் என்று உள்ளது.

் 'தேத்தண்ணி' எண்டுதான் தேநீரைச் சொல்லிறனாங்கள். 'தேத்தண்ணி' மிக
ஓ... அப்படியா. இங்கும் சிலர் தேத்தண்ணி என்ற சொல் பயன்படுத்திக்கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் விருந்தினர் வந்தால் "என்ன தண்ணி சாப்பிடுறீங்க... " அல்லது காலையில் என்றால் "பசியாறியாச்சா?" என்று விசாரிப்பார்கள்.

அவர்களது பணிமனையில் எல்லாரும் தேநீர் என்ற சொல்லைத்தான் பாவிப்பார்கள்.
அப்பா.... இந்த சொல்மட்டும் இந்தியாவிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், "கட்டபொம்மன் பணிமனை" என்று பேருந்துகளின் Workshopஐத்தான் குறிப்பிடுவார்கள். இங்கு பணிமனை என்று நீங்கள் குறிப்பிடுவது office என்பதன் தமிழ்படுத்தலா இல்லை workshopதானா?

தமிழ்க்கட்டளைகளுடன் நடக்கும் அணிநடை மரியாதையை ஏற்றுச் செல்கிறார்கள். இ
அருமை. புதிய, நல்ல தகவல் நன்றி.

“அன்புமணியை வேட்டி கட்டச்சொல், சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு பாப்பம்” என்று வினவுவது போல்தான் இருக்கிறது அவரது பதில்.
ஏன்ப்பா நீங்களும் எங்க ஊரு அரசியல் பேசி கெட்டுப்போறீங்க... ஞாபகம் இருக்கிற நாலு தமிழ் வார்த்தைகளும் கண்ட கசமாலங்களால மறந்துடப் போகுது:)

மீண்டும் நன்றி நல்லவொரு பதிவுக்கு.

 

said ... (04 May, 2005 16:48) : 

வசந்தன்,இது நீர்தாம் எழுதியதோ?உம்மிடம் இவ்வளவு காட்மான விசயமெல்லாமிருக்கோ?சும்மா படங்காட்டிவிட்டுப்போய்விடுவீரென நினைத்தேன்,ஆனால் நீர் பண்டிதனானாய். 1995இல் இதுபற்றி(தமிழ்ப்படுத்தல்)ஈழமுரசில் எழுதியுள்ளேன்.புலிகளின் தமிழ்ப்படுத்தலில் எனக்கும் உடன்பாடுண்டு.ரயிலுக்குத் தொடரூந்து எனும் வார்த்தை எவ்வளவு பொருத்தமாகவுள்ளது!இவை காலப்போக்கில் ஏற்கப்படும்.

 

said ... (04 May, 2005 17:10) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (04 May, 2005 17:14) : 

நல்ல பதிவு வசந்தன்.

தமிழேந்தி அவர்களைச் சந்தித்த போது அவரது தமிழ்ப் பற்றை நானும் பார்த்தேன்.
அவர் எனது மகனுடன் தமிழ் பற்றி மட்டுமல்லாமல் தமிழர்கள் பற்றியும் (ஆதியிலிருந்து) நிறையவே கதைத்தார். எனது மகனும் ஆர்வமாக அவரோடு கதைத்த போது தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனும் இப்படித்தான் எல்லா விடயங்களையும் அறிந்து வைத்திருக்கிறார் என்று சொன்னார்.

 

said ... (04 May, 2005 17:14) : 

எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

நல்ல பதிவு.

சில படங்களையும் போட்டு ...போட்டு போட்டிருக்கலாம்.17.34 4.5.2005

 

said ... (04 May, 2005 17:14) : 

பந்தை ஆடாமல் பந்தாளியை ஆடுவது எங்களூரில் பெரும்பாலோருக்கு உள்ள வழக்கம். அரசியலில் பெரும்பாலும் அது நடைபெறும். அண்மையில் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் மருத்துவர் இராமதாசும், தொல்.திருமாவளவனும், மு.சேதுராமனும், பழ.நெடுமாறனும் இன்னும் பலரும் சில செய்திகளைச் சொல்லிவருகிறார்கள். அந்தச் செய்திகளுக்கு மறுமொழியோ, அல்லது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ செயற்படாமல் பந்தாளியை ஆடுவது தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பா.ம.க. தலைவர் கொ.க.மணி தமிழ் பாதுகாப்பு இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கியவுடனே, அதற்கு மறுமொழி சொல்லாமல், "நீ உன் பெயரை G.K.மணி என்று ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு சைக்கிளின் பாகங்களுக்கான தமிழ்ப்பெயர் தெரியுமா?" என்று முதல்வர் கேட்க, அத்தனை ஆளும் கட்சி உறுப்பினர்களும் (இன்னும் சில எதிர்க்கட்சியினரும் அவருடன் சேர்ந்து கொண்டு)கொல் என்று சிரிக்க, "தமிழை என்ன நீங்கள் பாதுகாக்கப் போகிறீர்கள்? ஆங்கிலச்சொல் எல்லாம் தான் தமிழாகி விட்டதே?" என்று முத்தாய்ப்பு வேறு. இந்த மனப்பாங்கில் "நாங்கள் தான் அறிவியல் தமிழ் கொண்டுவந்தோம்" என்ற முழக்கமும் இருக்கிறது.

இந்த பேரவை நிகழ்வைச் சாடி, அண்மையில் அ.வியனரசு என்பவர், தமிழ்ச் சான்றோர் பேரவையின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர், ஜூ.விகடனில் பேசியிருக்கிறார். கூடவே அவர் மிதிவண்டியின் சில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கொடுத்திருந்தார். இதைப் போன்ற மிதிவண்டிச் சொற்களின் இன்னும் பெரிய பட்டியலை ஏதோ ஒரு தமிழ்ச் சிற்றிதழில் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்பு படித்திருந்தேன். அப்போது குறித்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

இப்பொழுது வியனரசு கொடுத்ததை வைத்து, சில திருத்தங்கள் செய்து, மேலும் சில சொற்களைச் சேர்த்து இங்கு தந்துள்ளேன். எம் கடன் பணி செய்து கிடப்பதே.

seat, saddle = குந்துகை, இருக்கை
handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.)
wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
carrier = தூக்கி
pedal = மிதி
spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.)
bell = மணி
rim = விளிம்பு
tube = தூம்பு
tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)
break = தடை
forks = பிரிகை
sprocket = பற்சகடு
gears = பல்லிணை
pump = இறைப்பி
dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல் ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
reflector = மறுபளிப்பி
caliper = இடுக்கி
shoe = கவை
cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.
lever = எழுவை, நெம்புகோல்

மேலே உள்ள சொற்களுக்கு இன்னும் விளக்கம் கொடுக்கலாம். விரிவு கருதி விடுக்கிறேன்.
------------------------
நான் பா.ம.க. ஆளில்லை என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இல்லையென்றால் என்னையும் பந்தாடப் பலர் வந்து நிற்பார்கள்.
-----------------
அன்புடன்,
இராம.கி.

 

said ... (04 May, 2005 19:07) : 

இப்போது திருப்பிப் பார்க்கும்போது சில எழுத்துப்பிழைகளும், இலக்கணப்பிழைகளும் (வலி மிகல்) தெரிகிறது. திருப்பித் திருத்தாமலே போட்ட பதிவு. இப்போது திருத்தப்போவதுமில்லை. இப்படித் திருத்தப்போய்த்தான் என் அறிமுகப்பதிவு 3 தரம் தமிழ்மணத்தில் வந்துவிட்டது.

நிற்க, உங்கள் பின்னூட்டங்களுக்கு விரிவாகப் பதிலெழுத வேண்டும்.
பெயரிலியும் ஈழநாதனும் என்ன சொல்கிறீர்கள்?
ஈழநாதன்! பிரயோகமும் தமிழில்லை.
இவ்வளவு நுணுக்கமாகவா என் பதிவு படிப்பீர்கள்?

சிறீரங்கன்!
ஆம்! இது நானேதான். நான்தான் எழுதினேன். இன்னும் இந்தக் கிழமை இது போலவே மொழி சார்ந்து நாலைந்து பதிவுகள் இடுவேன்.

ஐயா இராம.கி.!
பின்னூட்டத்துக்கும் விளக்கத்துக்கும் தரவுகளுக்கும் நன்றி.
எனது அடுத்த பதிவுகளும் உங்களோடு சம்பந்தப்பட்டதுதான்.
தனியே என் பதிவிற் பின்னூட்டமிட்டதோடு நின்று விடாமல் மேலும் உங்கள் பணியைச் செய்ய வேண்டும்.
நீங்களே சொன்னதுபோல் உங்கள் கடன் பணிசெய்து கிடப்பதே.

அன்பு!
வெதுப்பகம் பற்றியும் வெதுப்பி பற்றியும் என் அடுத்த பதிவில் வரும். வாசியுங்கள்.
ஆம் பணிமனையென்று office ஐத்தான் சொன்னேன். அப்படித்தான் அங்கும் பயன்படுத்துகிறார்கள்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இது தொடர்பாக அடுத்த பதிவையும் வெளியிட்டுவிட்டேன். வாசித்துக் கருத்துச்சொல்லுங்கள்.
நன்றி.

 

said ... (04 May, 2005 23:12) : 

ஐயா இராம.கி.!
carrier என்பதைத் தூக்கி என்பதிலும்பார்க்க 'காவி' என்று சொல்லலாமோ?

 

said ... (05 May, 2005 01:16) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

நால்ல பதிவு வசந்தன் . தொடருங்கள்.

17.42 4.5.2005

 

said ... (05 May, 2005 08:26) : 

எழுதிக்கொள்வது: mahilan

உங்கள் பதிவுகள் நன்றாயிருக்கிறது. பல புதிய தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
அன்புடன்
மகிழன்.

8.54 5.5.2005

 

said ... (05 May, 2005 08:43) : 

எழுதிக்கொள்வது: Lingan

//தனிமனித உரிமை, ஜனநாயகம் என்ற கோசங்கள் இங்கே வேலைக்காகாது//
அப்பிடிப்போடு. சரியான போடு. இந்த வேகத்திலேயே அனைத்துத்துறைகளுக்கும் வேண்டிய தமிழ்ச்சொற்களையும் உருவாக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

9.10 5.5.2005

 

said ... (16 January, 2007 15:46) : 

தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்
TAMIL AVIATION GLOSSARY
http://geocities.com/tamildictionary/aviation

 

said ... (28 June, 2008 20:27) : 

அன்புடன் வசந்தனுக்கு

நான் வலையுலகத்திற்குப் புதியவன். இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன். மிகவும் சிறப்பாக விவரித்துள்ளீர்கள்.

//carrier என்பதைத் தூக்கி என்பதிலும்பார்க்க 'காவி' என்று சொல்லலாமோ?//

காவி எனும் சொல்லும் வன்னியில் பாவனையில் உள்ள ஒன்று அல்லவா!

களத்திற்கு அதிகமான பொருற்களை காவிச் செல்பவரை "காவு காவி" என்று அழைக்கப் படுகின்றது.

நன்றி!

 

said ... (10 July, 2008 07:47) : 

படித்து மகிழ்ந்தேன்.

உபயோகம் = பிரயோகம் = பயன்பாடு?

 

said ... (16 February, 2010 10:00) : 

உபயோகம், பிரயோகம் இரண்டுமே வடமொழி சார்ந்த சொற்கள்.. "பயன்பாடு" என்பதே சரியான

 

post a comment

© 2006  Thur Broeders

________________