Wednesday, May 04, 2005

சைக்கிள் கும்பல்..

பிறை - இரண்டு
களவும் கற்று மற.


வணக்கம்!
என்ர பதிவொண்டில
“நீங்கள் மோட்டர் சைக்கிள் Gang எதிலயும் இருந்தனியளோ?”
எண்டு டி.சே. கேட்டிருந்தார். நான் அப்பிடியொண்டிலயும் இருக்கேல. ஆனா சைக்கிள் gang எண்டு சொல்லக்கூடிய ஒண்டில இருந்தனான்.

ஆண்டு 6 இல பக்கத்து ஊரிலயிருக்கிற பள்ளிக்கூடமொண்டில சேத்துவிட்டினம். அது எங்கட ஊரிலயிருந்து கிட்டத்தட்ட மூண்டு மைல் வருமெண்டு நினைக்கிறன். எங்கட ஊரிலயிருந்து அங்க போற எல்லாரும் ஒண்டாத்தான் போவம். ஒரு மூண்டு வருச வித்தியாசமிருக்கிற ஆக்கள் எல்லாரும் ஒரு பிரிவாயும், அதவிட கூட வயது இருக்கிற ஆக்கள் (பெரும்பாலும் ஏ.எல் எடுக்கிற ஆக்களா இருப்பினம்) ஒரு பிரிவாயும் போவம். ஒண்டா வெளிக்கிட்டாகூட ஆராவது ஒரு கோஷ்டி பிந்தி மற்றாக்கள விட்டிடும். அப்பதான் எங்கடயோ அவயின்ரயோ திருகுதாளங்கள் மற்றக் குழுவுக்குத் தெரியாமல் பாத்துக்கொள்ளலாம்.

இப்பிடி சைக்கிள்ப் பயணம் வெளிக்கிட்டா ஒழுங்கா வரிசையா எங்கட ஊர் சந்திவரைக்கும் போவம். அதிலயிருந்து ஒழுங்கைக்குள்ள இறங்கினா பிறகு எங்கட விளையாட்டுத்தான். கத்துவம், பாட்டுப்பாடுவம். அடுத்த ஊர் வரும்வரை இடையில அரைமைல் தூரத்துக்கு சனமில்ல. பத்தைக்காடுதான். அதோட எங்கட சகோதரப்பாடசாலைக்குப் போற எங்கடஊர் பெண்டுகளும் இதை மாதிரித்தான் போவினம். பெரிசா நக்கலடிச்சுக் கொழுவுறேல. வேற ஊராக்களெண்டாத்தான் எங்கட வீரதீரங்கள் வெளியில வரும். ஆனா அவயளுக்குப் பின்னாலயே போவம். அதில ஒரு இது இருக்குது.
பத்தைக்காடு முடிஞ்சு அடுத்த ஊர் வந்திட்டா, அவயள முந்திப் போடுவம். அங்கால எங்கட பாட்டில வேகமா போயிடுவம். கொஞ்சக்காலத்தில அவயளப் பாக்கிறத விட்டுட்டு நாங்கள் எங்கட பாட்டுக்கு போய் வரத்துவங்கினோம். பள்ளிக்கூடம் முடிஞ்சு வரேக்கதான் முசுப்பாத்தி கூடும். வாற வழியில ஒருத்தரும் கவனிக்காத விளா மரங்கள் ரெண்டுமூண்டு ஒரு இடத்தில நிக்குது. அதில முதலில பொன்வண்டு பிடிக்கத்தான் ஏறினனாங்கள். நிறையப் பொன்வண்டுகள் கிடைச்சாப்போல தொடர்ச்சியா அதால போய் வந்தம். அப்ப அந்த விளாத்தி காய்க்கத் தொடங்கீச்சு. பிறகென்ன? ஒவ்வொருநாளும் கல்லெறிதான். சொன்னா நம்ப மாட்டியள். அந்த இடத்தில எறியத் தோதான கல்லுகள் கிடைக்காது. கிடந்ததுகளும் முடிஞ்சுது. எறிஞ்ச கல்ல அந்தப் பத்தையளுக்க தேடியெடுக்கிறதுக்கு மூளை வேல செய்யேல. பள்ளிக்கூடத்திலயிருந்து கல் பொறுக்கிக் கொண்டு போறனாங்கள் விளாத்திக்கு எறிய.

இப்பிடிப்போன எங்கடபாடு மாரிகாலம் வந்த உடன வேற ஒரு பாதையில போகத்துடங்கீட்டுது. அதுதான் குறோட்டன் முறிக்கிறது. எங்கட பள்ளிக்கூடம் இருக்கிற ஊரில கொஞ்சத் தூரத்துக்கு சுத்துமதில் கட்டி உள்ள குறோட்டன் வளக்கிற கொஞ்சம் வசதியான வீடுகள் இருந்தீச்சு. பள்ளிக்கூடம் முடிஞ்சு வரேக்க மதிலுக்கால அந்தக் குறோட்டனுகள முறிச்சுக்கொண்டு வாறதுதான் வேல. ஆக்களிட்ட கேட்டா வெட்டித்தருங்கள். ஆனாக் கேக்கிறேல. மாரியில நிறையச்சனம் குறோட்டனுகளுக்கு முடிவெட்டிவிடுறவை. அப்பிடி வெட்டின குறோட்டன் தடியெல்லாம் குப்பையுக்க போகும். அதுகளக் கேட்டு வேண்டுறேல. களவாப் பிடுங்கிறதுதான் எங்கட நோக்கம். பிடுங்கிக்கொண்டுபோய் நடுறதுமில்ல. எங்கட ஊர் எல்லயில பத்தைக்க எறிஞ்சிட்டு நல்ல பிள்ள மாதிரி வீட்ட போறது.

இந்தக் குறோட்டன் பிடுங்கிற வேல எல்லாரும் செய்யேலாது. அல்லது செய்ய விரும்பிறேல. அதுக்கெண்டு சிலர்தான் வெளிக்கிடுறது. மற்றாக்கள் நல்லா எட்டப்போய் நிக்கிறதுதான் வேல. பிடுங்கிற அதிரடி (கொமாண்டோ) அணியில நானுமொருவன். நாலு பேர்தான் ரெண்டு சைக்கிளில போவம், முறிப்பம், ஓடுவம். சனத்துக்குச் சரியான கோபம். சில இடத்தில முறிக்க வெளிக்கிட்டா கண்டு அப்பிடியே அடியோட பேந்து (பெயர்ந்து) வந்திடும். ஒடிச்சுவிட்டபடியே நாய் கலைக்க அரைகுறையா ஓடியந்திடுவம். ஒரு வீட்டில முறிச்சா பிறகு அங்க கைவரிசயக் காட்டுறேல. புதுசா வேற இடம் பாக்கிறது. இப்பிடித்தான் அண்டைக்கு ஒரு வீட்டில குறோட்டன் முறிச்சம். அது கொஞ்சம் பதிவான மதில். ஆனா அது ஆரிண்ட வீடெண்டு தெரியாது.

பொன். கணேசமூர்த்தி எண்டு பிரபல்யமான கவிஞர் ஒருவர் இருக்கிறார். அவரிண்ட 3 பெடியள் எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிக்கிறாங்கள். ரெண்டாவது பெடியன் என்ர வகுப்பு. (அவன் வன்னியில் பெயர்தெரியாத ஒரு வருத்தம் வந்து செத்துப்போனான். இதை வைத்து கணேசமூர்த்தி ஒரு நாவலே எழுதினார்.) அடுத்தநாள் தங்கட வீட்ட குறோட்டன் முறச்ச சம்பவம் பற்றி எங்களிட்ட அவன் சொன்னான். எனக்கு எங்கயோ பொறிதட்டி, எவ்விடத்தில உங்கட வீடு எண்டு விசாரிச்சா அது நாங்கள் முதல்நாள் கைவரிசை காட்டின வீடுதான். நாங்கள் தான் அந்தாக்கள் எண்டத அவன் அடையாளம்பிடிக்கேல. ஆனா நல்ல சுலபம். ஏனெண்டா அந்தப் பாதையால போய்வாற ஒரே குழு நாங்கள்தான்.

இந்த முறை திருப்பவும் அந்த வீட்டயே முறிக்க வேண்டியதேவ. ஏனெண்டா குறிப்பிட்ட ஒரு குறோட்டன் எங்களுக்குத் தேவப்பட்டீச்சு. ஆரோ ரீச்சர் கேட்டவவாம் எண்டு எங்கட ஒருத்தன் விண்ணப்பிச்சான். உடன எங்கட கொமாண்டோ குழுவும் சரியெண்டு அந்த வீட்டிலயே இண்டைக்கும் முறிக்கிறதெண்டு திட்டம் போட்டாச்சு. எல்லாம் வழமை மாதிரித்தான் நடந்தீச்சு. எல்லாரும் நல்லா எட்டப்போய் நிண்டாங்கள். நாங்களும் முறிக்கப்போறம். நேற்று முறிச்ச வீடெண்ட படியா அலேட்டா இருக்கோணுமெண்டு சொல்லித்தான் போனனாங்கள். நான் சரியான அலேட்டாத்தான் நிண்டனான். வீடு பூட்டியிருந்திச்சு. வெளியில ஒரு சைக்கிளையும் காணேல. நான் வடிவா கண்ணால ஒரு துலாவு துலாவினன். ஆற்றயோ தலையொண்டு வீட்டின்ர பின்பக்கமிருந்து எட்டிப்பாக்கிற மாதிரி தெரிஞ்சுது.

உடன மற்றாக்கள அலேட் ஆக்க திரும்பி மெல்லமாக் கூப்பிட்டன். அதுக்குள்ள நாயொண்டு குலைக்கிற சத்தம். பாத்தா ஆவேசமா நாயொண்டு பாஞ்சு வருது. அந்த மனிசத்தலை வேறொரு பக்கத்தால ஒளிச்சு ஓடியாறது தெரிஞ்சுது. சைக்கிள எடுக்கேலாது எண்டது விளங்கீட்டுது. முதலில நாய் நிச்சயமா மதில் பாயுமெண்டு விளங்கீட்டுது. அந்த நேரத்திலயும் என்னோட படிக்கிற ரெண்டாவது பெடியன சபிச்சன். பின்னயென்ன? இப்பிடியொரு நாய் நிக்கிறதப் பற்றி ஒண்டுமே சொல்லவேயில்ல? நாய் மதில்பாயவும் நான் இன்னொருத்தன இழுத்துக்கொண்டு மதிலிலயிருந்து உள்ள பாயவும் சரியா இருந்தீச்சு. அப்பிடியே அவனையும் இழுத்துக்கொண்டு வளவுக்கால ஓடி பக்கவாட்டு முள்ளுக்கம்பி வேலி பாஞ்சு, (என்னெண்டு பாயிறது எண்டு கேக்காதயுங்கோ. அதெல்லாம் அந்த நேரம் வரும்) தப்பிச்சாச்சு. நாயும் அந்த மனுசத்தலையும் எங்க வெளியில எதிர்பாத்திருந்ததால நாங்கள் தப்பிச்சம். ஆனா என்ர சைக்கிளும் மற்ற ரெண்டு பேரும் பிடிபட்டிருப்பினமெண்டதில சந்தேகமேயில்ல. நிண்டு பாக்காம தூரத்தில நிண்ட எங்கட மிச்ச ஆக்களிட்ட ஓடிப்போய் விசயத்தச் சொன்னம். அதுக்குள்ள தலை மாதிரி நிண்டவன் சொன்னான், “டேய்! இது ஊர்ப்பிரச்சின. ஒருத்தரும் இடையில போகக் கூடாது. என்னெண்டாலும் சேந்து தான்.”

சரி. இப்ப என்ன செய்யிறது எண்டு விளங்கேல.
“ஆற்றா அது? மௌலியோ?" (கணேச மூர்த்தியின்ர மூத்தவன்)
“இல்ல அவரில்ல. இது பக்கத்துவீட்டுக்காரன் போல கிடக்கு.”
“சரி. நீ வா. போய்க்கதைப்பம்.”
என்னையும் இன்னும் ரெண்டு பேரயும் கூட்டிக்கொண்டு தலை போறார். கலைச்சுப் பிடிச்சவன் பக்கத்து வீட்டுக்காரன்தான். இந்த வீட்டில ஒருத்தருமில்ல. நல்லா வெருட்டிப்போட்டான். சைக்கிளத் தர ஏலாது எண்டு சொன்னான். எனக்கு அழுக வந்திட்டுது. பிறகு ஒரு மாதிரி குறோட்டன் புடுங்கத்தான் வந்தனாங்கள் எண்டு கெஞ்சிக் கூத்தாடி விடுதலையாகி வந்தம். நான் திரும்ப ஓடிப்போய் இத ரதன் (என்னோட படிக்கிறவன்) ஆக்களிட்ட சொல்லிப்போடாதையுங்கோ எண்டு அவனிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டு வந்தன். பின்ன?.. இது தெரிஞ்சா வகுப்பில என்ர மானமெல்லே போயிடும். அவனும் சொல்லேல எண்டுதான் நினைக்கிறன். அண்டையோட குறோட்டன் பிடுங்கிற கொமாண்டோ அணி கலைக்கப்பட்டது.

ஆனா வேற விளையாட்டுக்கள் நடந்தீச்சு. மாங்காய், விளாங்காய் எண்டு வேற திசையில கவனம் போயிட்டுது. அதுவும் எங்கட கோயில் விளாங்காயும் மகிழங்காயும் பிடுங்கிறது பெரிய திறில். இத விட சைக்கிளில கைய விட்டிட்டு ஓடுறது கொறுஞ்சநாள் நடந்தீச்சு. எங்கட குறூப்பில நான் இதுகளில நல்ல தேர்ச்சி. ஆனா சின்னப்பெடியள் பாறுக்குக் கீழால சைக்கிள் ஓடுவாங்கள் கவனிச்சிருப்பியள். சைக்கிள் சீற்றை கமக்கட்டுக்க வச்சுக்கொண்டு வலக்கால பாறுக்கு இடையால போட்டு ஒருபக்கம் சாஞ்சுகொண்டு ஓடுவாங்கள் தெரியுமோ? அந்த பாணியில சைக்கிள் ஓடத் தெரியாது. எல்லாரும் அப்பிடி ஓடித்தான் சைக்கிளோடப் பழகினவங்களாம். ஆனா நான் அப்பிடியில்ல. பிறகு அப்பிடி ஓடப்பழகி ரெண்டு மூண்டுதரம் விழுந்தடிச்சதோட அத விட்டுட்டன். இண்டைக்கு வரைக்கும் பாறுக்குக் கீழால சைக்கிள் ஓடத்தெரியாதது பெரிய குறையாத்தான் தெரியுது.

வன்னியில 100 கி.மீ. தூரம் கூட சாதாரணமா காலம போய் பின்னேரம் வாற தூரம். அதுவும் றோட்டு முழுக்க புழுதி குடிச்சுக்கொண்டு ஒட வேணும். அதெல்லாம் சர்வ சாதாரணம். இப்பிடியே சைக்கிளோட என்ர வாழ்வு போச்சுது. அஙக சைக்கிள்தான் வாழ்க்கை. அதுவும் நடையும் தான் நம்பிக்கையான வாகனம்.

2002 இல யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்து வன்னிக்கு இருந்த பொருளாதாரத்தடை எடுத்தாச்சு. அந்த நேரம் என்ன சாமான் பெருமளவில வந்தது தெரியுமே. சைக்கிள்தான். வேற ஒரு சாமானும் அப்பிடி வரேல. லொறி லொறியா சைக்கிள்தான். எங்க பாத்தாலும் சைக்கிள் அடுக்கின வாகனங்கள்தான். ஆமிக்காரன் கேட்டானாம், “உதுகள் என்ன சைக்கிளையோ சாப்பிடுறதுகள்?”
-----------------------------------------------
***மிக இளம்பராயத்தில் போராடப்போய் தோளில் துவக்கோடு போகும் ஒரு புலிவீரனைப்பார்த்து ஒரு கவிஞன் கேட்பான் (நிலா தமிழின்தாசன் என்று நினைக்கிறேன்.):
"உன் வயதில் நான் என்ன செய்தேன்?
வெள்ளையப்பா வீட்டு
விளாத்திக்குக் கல்லெறிந்தேன்."
என்று தொடரும் அக்கவிதை.
வாசித்த போது எங்கோ குத்தியது.

-----------------------------------------------

வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள்.

இங்கே சென்று வாக்குப்போடுங்கள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சைக்கிள் கும்பல்.." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 May, 2005 12:44) : 

எழுதிக்கொள்வது: மூர்த்தி

இவ்வார சிறப்பு நட்சத்திரம் வசந்தன் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்!

11.13 4.5.2005

 

said ... (04 May, 2005 15:01) : 

//இண்டைக்கு வரைக்கும் பாறுக்குக் கீழால சைக்கிள் ஓடத்தெரியாதது பெரிய குறையாத்தான் தெரியுது.//

நானும் அந்த மனக்குறையுள்ள கட்சியில உறுப்பினர் :o)

 

said ... (04 May, 2005 19:32) : 

பின்னூட்டமிட்ட மூர்த்திக்கும் ஷ்ரேயாவுக்கும் நன்றி.

ஷ்ரேயா அப்ப புதுக்கட்சியொண்டு துவங்க வேண்டியதுதான். இஞ்ச ஒஸ்ரேலியாவிலயெண்டாலும் ஓடிப்பழகுவமெண்டா எல்லாம் குட்டிச் சைக்கிளாக் கிடக்கு.

 

said ... (05 May, 2005 09:38) : 

எழுதிக்கொள்வது: செல்வராஜ்

இலங்கைத் தமிழில் உங்கள் உரையைப் படிக்க நன்றாக இருந்தது. நன்றாகக் கதை சொல்லி இருக்கிறீர்கள்.

19.46 4.5.2005

 

said ... (03 June, 2005 09:48) : 

எழுதிக்கொள்வது: latha

//சின்னப்பெடியள் பாறுக்குக் கீழால சைக்கிள் ஓடுவாங்கள் கவனிச்சிருப்பியள். சைக்கிள் சீற்றை கமக்கட்டுக்க வச்சுக்கொண்டு வலக்கால பாறுக்கு இடையால போட்டு ஒருபக்கம் சாஞ்சுகொண்டு ஓடுவாங்கள் தெரியுமோ? //
நாங்க அதை அரை பெடல் என்போம். சில பெடியன்களுக்கு சைக்கிள் சீட்டில் உட்கார்ந்தால் கால் எட்டாது எனவே, சைக்கில் ஃபிரேமில் உட்கார்ந்து ஓட்டுவர். அதன் பெயர் முக்கால் பெடல். :-))

3.5 3.6.2005

 

said ... (05 June, 2005 09:42) : 

/சின்னப்பெடியள் பாறுக்குக் கீழால சைக்கிள் ஓடுவாங்கள் கவனிச்சிருப்பியள். சைக்கிள் சீற்றை கமக்கட்டுக்க வச்சுக்கொண்டு வலக்கால பாறுக்கு இடையால போட்டு ஒருபக்கம் சாஞ்சுகொண்டு ஓடுவாங்கள் தெரியுமோ? //
சின்ன வயசில் இந்த மாதிரி ஓட்டி கிழேயும் விழுந்திருக்கிறேன்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________