இருபடங்களும் தமிழ்ச்சினிமாவும்.
பிறை - ஒன்று. வணக்கம்! இந்தக் கிழமையில் முதலாவதாக எதை எழுதலாம் என்று மூளையைப் பிசைந்து கொண்டிருந்தேன். சில யோசனைகளுக்குப் பிறகு ஒரு பதிவை எழுதினேன். ஆனால் இறுதிவரை அது முதலாவது பதிவாகப் போடத்தக்க தகுதியுள்ளதாகப் படவில்லை. இப்போதுதான் சரியான ஒரு பதிவைக் கண்டுபிடித்தேன். சினிமாதான் அது. நான் தெரிவு செய்யப்பட்டிருக்கும் இச்சூழலில் சினிமாப் பதிவொன்றின்மூலம் என் கிழமையைத் தொடங்குவது எத்துணைச் சிறப்பானது? ஆகவே இதோ பதிவொன்று போடுகின்றேன். மற்றவர்களைப்போல் ‘தீவிர’ சினிமா பற்றி என்னாற் பேசமுடியாது. அப்படிப் பேச எனக்குத் தெரியாது. வேற்றுமொழித் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. பார்த்தாலும் ஏதும் புரிந்ததாக ஞாபகமில்லை. (என் மொழியறிவு அப்படி). ஆகவே நான் பார்த்த தமிழ்த்திரைப்படங்களிலிருந்து என்னைக் கவர்ந்த, என்னைப் பாதித்த சில விடயங்களைச் சொல்லலாமென்றிருக்கிறேன். இது விமர்சனமன்று. என் சில எண்ணங்கள், அவ்வளவே. சினிமா பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்ற கட்டாயத்தாற்கூட இருக்கலாம். ஏற்கெனவே இப்படி ‘அன்பே சிவம்’ பற்றியும், அது ஏன் தோற்றுப்போனது என்றும் ‘முகம்’ பற்றியும் எழுதியுள்ளேன். அவற்றைப்போலவே இதுவும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்றொரு படம் வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. என்னை மிகவும் கவர்ந்த தமிழ்ப்படங்களில் இதுவுமொன்று. ‘ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து’ எனச்சொல்வதிலும் பார்க்க, அருமையான கதையொன்றை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படமென்பது என் எண்ணம். ஈழப்பிரச்சினையைத் தொட்டபடியால் அக்கதையின் கனம், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தன. கதை நகர்த்தும் பாணி, நடிகை நடிகர்களின் பங்கு அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவும் இசையமைப்பும் அருமை. இப்படத்தை ஒரு இந்தியர் தயாரிப்பதால் இருக்கக்கூடிய சிக்கல்கள் நிறையவே இப்படத்திலுண்டு. மொழிப்பிரச்சினை முக்கியமானது. ஈழத்தமிழ், ஏனைய படங்களைவிட ஓரளவு நன்றாகப் பாவிக்கப்பட்டுள்ளது என்றாலும் மணிரத்தினம் போன்றவர்கள் இவற்றோடு திருப்திப்பட்டுக்கொள்ளக் கூடாது. என் கருத்து என்னவென்றால் ஈழத்தமிழ் என அவர்கள் நினைக்கும் தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்களைப் பின்னணிக்குரல் கொடுக்க வைக்கலாம். சிலருக்கு அது பொருந்தாது. கமலுக்கு இன்னொருவர் குரல் கொடுப்பதென்பது நினைத்துப்பார்க்க முடியாதது. ஆனால் மற்றவர்களுக்கு இது பொருந்தும். நிறையத் தகவற்பிழைகள் உள்ளன. குறிப்பாக பிரதேசஅமைவிடங்கள் ஏனோதானோவென்று பயன்படுத்தப்பட்டுள்ளன போலுள்ளது. மணிரத்தினம் இதுபற்றிக் கூறும்போது, தனக்குக் கதைதான் முக்கியம். பிரதேச அறிவென்பது இரண்டாம்பட்சம்தான், என்பது போலக் கூறியிருந்தார். மணிரத்தினம் போன்றவர்கள் இப்படி அசட்டையாக ஒரு படம் தயாரிப்பது வியப்பாக இருக்கிறது. மாங்குளம் ஒரு கடல்சார்ந்த பிரதேசமாகக் காட்டப்படுகிறது. மேலும் சுப்பிரமணியப் பூங்கா பற்றியும் அதற்குள் கதை வருகிறது. மாங்குளத்திலேயே சிங்களவர்கள் வசிப்பது போற் காட்டப்படுகிறது. இராணுவம் மக்களை வெளியேறச்சொல்லி அறிவிக்கிறது. மக்களும் இடம்பெயர்கிறார்கள். இப்படி நிறைய. சும்மா மாங்குளம், சுப்பிரமணியப் பூங்கா என்று இரண்டு இடங்களைக் கேள்விப்பட்டு அவற்றை வைத்துப் படமெடுத்தது போலுள்ளது. படத்துக்கான அவரது தேடல் கேள்விக்குட்படுகிறது. (ஒரே ஓட்டோவில் ஆண்போராளியும் பெண்போராளியும் ஒன்றாக வருகிறார்கள். சகோதரர்கள் என்றாலும் இது சாத்தியமில்லை. இப்படி நிறையச் சில்லறைத் தவறுகள் உள்ளன. அவற்றை விட்டுவிடலாம்.) புலிகளைக் காட்டியிருக்கும் பாங்கும் கவனிக்கத்தக்கது. படத்தில் வருவதன்படி புலிகள் இருந்தது இந்திய இராணுவக்காலப்பகுதியில்தான். படத்தில் பெண்போராளிகளைக் காட்டியவிதம் மக்களிடம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனக்கு அதுபற்றிக் கருத்தில்லை. அழகு பற்றிய விவாதம் தேவையற்றது. எனினும் வழமையான சினிமா வரையறைக்குள் அப்பெண்களைக் காட்டாமல் விட்டதற்கு மணிரத்தினத்துக்குக் கோடி புண்ணியம். போராளிகளால் மாதவன் இழுத்துச் செல்லப்படும்போது கவிதை சொல்வது அப்பட்டமான சினிமாத்தனம். சிலவேளை குறியீடாக ஏதாவது அக்காட்சியில் இருந்து எனக்குத்தான் அது விளங்கவில்லையோ தெரியாது.
-------------------------------------------------- வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள். இங்கே சென்று வாக்குப்போடுங்கள். Labels: திரைப்படம், நட்சத்திரக் கிழமை |
"இருபடங்களும் தமிழ்ச்சினிமாவும்." இற்குரிய பின்னூட்டங்கள்
வசந்தன் நல்ல பதிவு. தொடருங்கள்.
இரண்டு படங்களுமே ஈழப்போடாட்டரம் என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. நாங்கள் ஈழம் என்பதைத் தவிர்த்து விட்டு போராட்டத்தால் ஏற்படும் மனித உளவியல் பாதிப்பு என்று பொதுவில் எடுத்துக்கொள்ளலாம். ஈழம் என்று பிரத்தியேகமாகக் கூறப்போய்த்தான் "ரெறரிஸ்ட்" தோல்வியடைந்தது என்று நான் நம்புகின்றேன். கனடாவில் தமிழ் திரையரங்கில் போட்டார்கள் போராட்டத்தைப் போராளியைக் கொச்சைப்படுத்தும் திரைப்படம் என்று அது ஓடவில்லை. பின்னர் கனேடியர்களின் திரையரங்கில் வந்த போதுதான் நான் போய்ப்பார்த்தேன். ஈழத்தமிழர்களுக்கு ஒரு போராளி தடுமாறிப் போவது என்பது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. யதார்த்தம், உளவியல் பிரச்சனைகள் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.
எழுதிக்கொள்வது: ஜீவா
மூன்று படங்களும் அற்புதமான படங்கள். நீங்கள் சொல்வதெல்லாம் குறைகளாக தெரிந்தாலும், மற்ற நல்ல விஷயங்களை ஒப்பிடும்போது, குறைகளெல்லாம் காணாமல் போகின்றன.
இந்த படங்கள் மாபெரும் வெற்றி பெறாமைக்கு காரணங்கள் வேறு - அது தமிழ் சினிமாவின் மசாலா ரசிகர்களெனும் சாபக்கேடு. எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா வரலாற்றின் மூன்று படங்களும் வைரங்கள்!
9.23 2.5.2005
அந்தப்படங்களைப் பற்றி என் கருத்தைச் சொல்லிவிட்டேன்.
கறுப்பி!
ஒரு போராளி மனம்பிறள்வதல்ல இங்குப்பிரச்சினை. அதன்பின்னுள்ள விசயங்கள் மிகப் பாரதூரமானவை. இதுபற்றிப் பிறகு எழுதுகிறேன். ஆனால் மக்கள் அந்தப்படங்களைப் பார்க்காமல் விட்டதற்கு என்ன காரணமோ நானறியேன். நீங்கள் தனியே ஈழத்தவரை மட்டும் வைத்தே ரெறறிஸ்ட் பற்றிச் சொல்லியுள்ளீர்கள் என்று படுகிறது. ஆனால் கன்னத்தில் முத்தமிட்டால் இலங்கையில் ஓரளவு பரவாயில்லாமல் ஓடியது என்றே நினைக்கிறேன்.
வசந்தன் ரெறறிஸ்ட் படம் நான் பார்க்கவில்லை.ஆனால் கன்னத்தில் முத்தமிட்டாலில் மணிரத்தினம் அடிமுட்டாள் தனமான சில யதார்த்தத்துக்கு புறம்பான காட்சிகளை எடுத்தது ஈழத்தின் இருப்பு குறித்த ஒரு பிழையான பிரசாரத்தை மேற்கொண்டுவிட்டார்.கன்னத்தில் முத்தமிட்டால் உண்மையில் ஒரு அநாமதேய அலைவரிசை.
ஈழம் என்ற சொல்லை பிரத்தியேகமாகக்கூறி ரெறறிஸ்ட் தோல்வியடைந்ததாக கூறும் கறுப்பியின் கருத்து ஆரோக்கியமாக இல்லை.அப்படிப்பார்க்கப்போனால் உணர்ச்சி மிக்க போராட்டவிடயங்களை பொழுதுபொக்கு சாதனமான சினிமாவில் கொண்டுவந்ததே தப்புதானே.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தைப் பற்றி இத்தனை ஒழுக்கமான விமர்சனத்தைப் படிப்பது இதுவே முதன் முறை. திரைப்படம் வந்த புதிதில், - ஈழப் பின்புலம் கொண்ட ஆக்கங்களைப் அதற்கு முன்பு பார்த்ததில்லை என்ற காரணத்தால் - மிகவும் பிரமிப்பு ஊட்டுவதாக இருந்தது. விமர்சனங்களைப் படித்ததும் அது கரைந்தது. சென்னை வீனஸ் காலனி பக்கமாக ஒரு முறை போன போது, மணிரத்னத்தின் வீட்டுக்கு அருகில், அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்து இன்னும் குழப்பம் ஏற்படுத்தியது. யோசித்துப் பார்த்தால், மணிரத்னத்துக்கு, ஈழத்தமிழரின் நிலை குறித்து தன்னுடைய அக்கறை என்ன என்பதைத் காண்பிப்பதைக் காட்டிலும், அந்த பரபரப்பை, தன் குழந்தை-வளர்ப்புத்தாய்-தாய் முக்கோண உறவுச் சிக்கல் கதைக்கான பின்புலமாக உபயோகப் படுத்துவதில் தான் கவனம் செலுத்தி இருக்கிறார் என்று தெரியவரும். உண்மைச் சம்பவங்களைப் பின்புலமாக வைத்து கதை பண்ணுவது, மணிரத்னத்துக்கு பழக்கமான உத்தி. தன் நண்பருடைய வாழ்க்கையை ஒட்டி எடுத்த மௌனராகம், தமிழ்நாட்டு பீரோக்ராட் ஒருவரின் சொந்த வாழ்க்கைக்குள் நுழைந்து எடுத்த அக்னிநட்சத்திரம், இந்தியன் ஆயில் துரைசாமியின் ரோஜா, வரதராஜமுதலியின் நாயகன், 1992 பம்பாய், சமீபத்திய ஆய்த எழுத்து என்று பல உதாரணங்கள். இந்தத் திரைப்படத்தை வைத்து, மணிரத்னம், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவானவர் அல்லது எதிரானவர் என்று நிறுவ முயற்சி செய்யும் சில விமர்சன்ங்களை படித்து சிரித்திருக்கிறேன். நல்ல விமர்சனத்துக்கு நன்றி, வசந்தன்.
எழுதிக்கொள்வது: kulakaddan
வசந்தன் ரெரரிஸ்ட் பார்க்க விடைக்கவில்லை. ஆனால் கன்னத்தில் முத்தமிட்டால் பார்க்கக்கிடைத்தது. அதில் போராளிகளை யதார்த்மற்று காட்டியது............இடங்கள் யதார்த்தம் புரியாது எடுக்கப்பட்டிருச்தமையும் கோபத்தை உண்டுபண்ணியது. அது இடஅமைவை தெரியாத பலருக்கும் புரியாது.
16.50 2.5.2005
அருணன் நான் சொல்ல வந்ததைத் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ தெரியவில்லை. ரெரறிஸ்ட் திரைப்படம் கனடாவில் ஈழமக்களிடையே போய்ச் சேராததற்குக் காரணம் அவர்கள் ஒரு போராளியின் மனநிலை எப்படிக் கடைசி நேரம் தனது சுயநலத்திற்காக மாறலாம் என்ற கேள்வியை எழுப்பி இது எமது இயக்கங்களைக் கொச்சைப் படுத்துகின்றது. எமது போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகின்றது என்று ஒதுக்கி விட்டார்கள். அதனால்;தான் ஒரு தரமாக திரைப்படம் ஈழம் என்ற அடைப்புக் குறிக்குள் வந்ததால் ஈழமக்களால் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று கூறினேன். ஒரு போராளி தனது சுயநலத்திற்காக (அவள் இருக்கும் பின்புலனைச் சார்ந்து) மனம் மாறுவது என்பது எங்கும் எந்த நாட்டிலும் நடக்கலாம். அதைத்தான் நான் கூற வந்தேன்.
பின்னூட்டமிட்ட அருணன், பிரகாஸ், ஜீவா, குளக்காட்டான் ஆகியோருக்கு நன்றி.
ரெறறிஸ்டில் ஈழத்தைப் பற்றி எதுவுமில்லை. ஈழத்துக் கதைவழக்குக் கூட இல்லை. அது சந்தோஷ் சிவனின் சாணக்கியமென்றே நினைக்கிறேன். ஆனால் பரப்புரைகள் அது விடுதலைப்புலிகளை மையப்படுத்தியது என்றே நடத்தப்பட்டன. அந்த அடிப்படையில் நோக்கினால் நிறைய வாதிக்கலாம்.
இப்படம் பற்றி என் கருத்தைத் தனிப்பதிவாக இடுவேன்.
முடிக்கப்படாத, பேசப்படாத கதையொன்று அப்படத்தில் உண்டு.
/இந்தத் திரைப்படத்தை வைத்து, மணிரத்னம், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவானவர் அல்லது எதிரானவர் என்று நிறுவ முயற்சி செய்யும் சில விமர்சன்ங்களை படித்து சிரித்திருக்கிறேன். /
அப்படியானால், அவர் இலங்கை குறித்து அபிப்பிராயம் ஏதும் இல்லாதவர் என்பதுதானா உங்கள் கருத்து? ;-) ப்ரகாஷ், கன்னத்தில் முத்தமிட்டால் இனைத் தனியாகப் பிரித்தெடுத்துப் பார்ப்பதிலும் பொதுவாகவே தமிழகத்திரைப்படத்துறையின் இலங்கை குறித்த பார்வையை காலவோட்டத்தோடு எப்படியாக மாறுகின்றதெனப் பார்ப்பது முக்கியமென்று நினைக்கிறேன்.
கறுப்பி, நீங்கள் சொல்லும் போராளியின் சுயநலமென்றதை ஒப்புக்கொள்கிறேன். ஸந்தோஷ்சிவனின் ரெரரிஸ்ட் போலத்தான் மணிரத்தினத்தின் உயிரே உம் என்று வாசித்தவற்றினைக் கொண்டு ஊகிக்கிறேன் (இரு படங்களையும் பார்க்கவில்லை). இதுபோன்று கடைசி நேரத்திலே தயங்கித் தவிர்த்த போராளிகளுக்கு உதாரணமான ஒரு பலஸ்தீனிய ஹமாஸ் போராளியின் செவ்வியினைத் (இஸ்ரேல் சிறைச்சாலையிலே வைத்துத்தான் எடுக்கப்பட்டது) தொலைக்காட்சியிலே பார்த்திருக்கிறேன். அதனால், நீங்கள் சொல்வதோடு ஒப்புதல் உண்டு. அதனால், ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கைத்தமிழர்கள் நடைமுறையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் எனலாம். ஆனால், இலங்கைத்தமிழர் குறித்த வகையிலே ஏதோவொரு (+/-) வகையிலே ஈடுபாடு உள்ளோர் இலங்கை குறித்த படத்தினை எடுக்கும்போதும் விமர்சிக்கும்போதும் தனியே படம் படத்துக்காக என்று மட்டுமே அபிப்பிராயமின்றி படமெடுக்கின்றனர் விமர்சிக்கின்றனர் என்று கொள்ள நான் தயாராக இல்லை.
எழுதிக்கொள்வது: குமரேஸ்
வசந்தன்,
நீங்கள் தமிழக கூத்தாடிக் கூட்டத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள், அவர்களின் ஆதியும் அந்தமுமான நோக்கம் காசு பார்ப்பதுதான். இதிலிருந்து அவர்கள் என்றைக்குமே தவறமாட்டார்கள். திறமையான இயக்குநராக இருக்கலாம், நடிகராக இருக்கலாம், தொழில்நுட்ப வல்லுனராக இருக்கலாம், தாய்மொழி தமிழில் வார்த்தைகளால் வித்தைகாட்டும் கவிஞராகவோ, வசனகர்தாவாகவோ இருக்கலாம், இவையெல்லாம் வெளியே, உள்ளே அப்பட்டமான ஓர் வியாபாரி. அதுவும் சில சறுக்கல்களுக்குப்பின் அவர்களுக்குத் தேவை அடுத்த படத்திற்கான முதல். இதனை வெகு இலகுவாக சர்வதேச உரிமை என்ற பெயரில் முற்பணமாகப் பெறவேண்டுமானால், அதற்கு வழி, அடுத்த படம் ஈழத்தமிழரின் கதை என்ற ஓர் மாயமான். ஏனென்றால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள்தான், இன்றைய தமிழக கூத்தாடிக் கூட்டத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அட்சய பாத்திரம். அவர்கள்தான் திரைப்படம் பூசை போடப்படுவதற்கு முன்னரே முற்பணமாக கொட்டிக் கொடுப்பவர்கள். அவர்களின் பணத்தில்தான் கூத்தாடிகளின் சம்பள முற்பணம் முதற்கொண்டு என்று எல்லாமே ஆரம்பமாகின்றது.
அதன் பின், திரைப்படத்தின் கிட்டத்தட்ட அரைப்பங்கு வேலைகள் முடிந்தபின், அதனை போட்டுக் காண்பித்துத்தான் உள்ளூர்(சென்னை) வினியோகஸ்தர்களிடமிருந்து (பொதுவாக இவர்களும் திரைப்படம் தயாரிப்பவரின்/இயக்குநரின் நெருங்கிய வட்ட வியாபார நண்பர்களே) பெறப்படும் பணத்தில்தான் மிகுதி உள்ள வேலைகள் முடிக்கப்படும். அதன்பின் வெளி மாவட்ட / மாநில வினியோகஸ்தர்களுக்கு முழுத் திரைப்படத்தையும் காண்பித்துதான் திரைப்படம் விற்கப்படுகின்றது.
இதில் சர்வதேச உரிமைக்காக, முற்பணமாக கொட்டிக் கொடுத்த ஈழத்தமிழர், அவர் வதியும் தேசத்தில் இருந்துகொண்டு, தொலைபேசியில் நிலவரத்தை அறிவதுடன் அவரது ஈடுபாடு முடிந்துவிடும்.
இந்நிலையில் அத்திரைப்படத்தில் வியாபார தந்திர அளவிற்குமட்டுமே "இது ஈழத்தமிழரின் கதை"யாக இருக்கும், இதில் நீங்கள் உங்களின் உணர்வுகளையோ, நியாயங்களையோ, யதார்த்தங்களையோ, உளவியல் பிரச்சனைகள் பற்றியோ எதிர்பார்ப்பது மிக மிக முட்டாள்த்தனமான செயல்தான்.
22.7 2.5.2005
ரமணீ...
//அப்படியானால், அவர் இலங்கை குறித்து அபிப்பிராயம் ஏதும் இல்லாதவர் என்பதுதானா உங்கள் கருத்து? ;-) //
அவருக்கு அபிப்ராயம் இருக்கும். அவரும் ஹிந்துவும், விடுதலையும் படித்து வளர்ந்த மயிலாப்பூர் ஐயர்தானே? ஆனால் பிரச்சனை அதில்லை. அவர் படத்திலே , நேராகவும் , மறைபிரதியாகவும் சொல்ல வரும் விஷயத்துக்கும், அவருடைய சொந்த அபிப்ராயங்களுக்கும் எத்தனை தூரம் தொடர்பு இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவருக்கு ஈழத்தமிழர் விவகாரம் என்பது, ஒரு virgin pasture. கன்னி கழியாதிருக்கும் அந்த விவகாரத்தை எக்ஸ்ப்ளோய்ட் செய்வது, அவருக்கு ஒரு சேலஞ்சிங்கான விஷயம். துணைக்கு சுஜாதா வேறு. ரோஜாவின் கொடியெரிப்பு மாதிரி இதில் ஒரு பரபரப்பான காட்சி வேணுமே? இருக்கவே இருக்கிறார் சேரன். அவ்வளவுதான். விமர்சனம் என்ற அளவிலே, எதையாவது இதிலே சொல்லி பார்த்த நினைவு இருக்கிறதா? [ஆயுதவியாபாரிகளின் சதிதான் இந்தப் பிரச்சனைக்குக் என்கிற oversimplified சித்தாந்தங்கள், சுஜாதாவின் கைவண்ணம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.] "நீங்க நல்லவரா கெட்டவரா?" என்று குழந்தை சக்திவேல், வேலுநாயக்கரிடம் வைக்கும் கேள்வியும், " இந்துன்னா என்ன , முஸ்லீம் னா என்ன? என்று ஒரு குழந்தை, அரவிந்தசாமியிடம் வைக்கும் கேள்வியும், " ஏன் இங்க இப்படி நடக்குது? எதுக்காக?" என்று க.மியில் , சிறுமி அமுதா, மாதவனிடம் வைக்கும் கேள்வியும், மணிரத்னத்துக்கு ஒன்றேதான். நிஜத்தில் மூன்றும் ஒன்றல்ல.
பொதுவாக நான் வக்கீல் வேலை பார்க்கிறவன் தான், ஆனால், இந்த விஷயத்தில் ஒரு பார்வையாளனாவே தான் சொல்கிறேன்.
//கன்னத்தில் முத்தமிட்டால் இனைத் தனியாகப் பிரித்தெடுத்துப் பார்ப்பதிலும் பொதுவாகவே தமிழகத்திரைப்படத்துறையின் இலங்கை குறித்த பார்வையை காலவோட்டத்தோடு எப்படியாக மாறுகின்றதெனப் பார்ப்பது முக்கியமென்று நினைக்கிறேன்//
தமிழ்த் திரைப்படத்துறையின் இலங்கை குறித்த பார்வையா? அப்படி ஏதாவது இருக்கிறது என்று நிசமாகவே? நினைக்கிறீர்களா? .தெனாலியிலெ இலங்கைத் தமிழ் பேசுவதும், விவரம் புரியாமல் , பாலசந்தர், போகிற போக்கில், 'பவர்·புல் டைலாகு' எழுதுவதும், இலங்கைப் பிரச்ச்னை பற்றி பேசுகிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா? கன்னத்தில் முத்தமிட்டால் ஐ, தனித்துப் பார்க்கக் காரணம், ஓரளவுக்காவது, அதன் நம்பகமான depiction. ஒருக்கால், எங்காவது படித்து, கொஞ்சம் ஆராய்ச்சி செய்து, தகவல்கள் சேகரித்து எடுத்திருக்க வேண்டும். (இன்னும் சிறிது ஆழமாக ஆராய்ச்சி செய்திருந்தால், தகவல் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.) அதனால் அது தனியாகத் தெரிகிறது. அதுக்காக, இலங்கை பிரச்சனை குறித்து ஆதரவான/ எதிரான பார்வை கிடைக்கும் என்று நம்ப முகாந்திரம் ஏதும் இல்லை.
/தமிழ்த் திரைப்படத்துறையின் இலங்கை குறித்த பார்வையா? அப்படி ஏதாவது இருக்கிறது என்று நிசமாகவே? நினைக்கிறீர்களா? /
பிரகாஷ், அதைத்தான் சொல்கிறேன். "விற்கும் பார்வை"
/ஏனென்றால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள்தான், இன்றைய தமிழக கூத்தாடிக் கூட்டத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அட்சய பாத்திரம்./
இது மிகவும் அநியாயத்துக்கு உருப்பெருப்பிக்கப்பட்ட தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் அல்லது பனங்காயைக் காவுவதாக எண்ணிக்கொள்ளும் குருவி அபிப்பிராயம் எனப்படுகிறது.
கருத்துக்கூறிய அனைவருக்கும் நன்றி.
குமரேஸ்!
அவர்களின் வர்த்தக நோக்கம் தெளிவானதுதான். இந்த நோக்கம் பற்றி நளதமயந்தியில் கமலே சொல்லியுள்ளார். வெளிநாடுகளில் வந்து அவர்கள் பேசும் தமிழை வானளாவப் புகழ்வதே அப்பட்டமான வால்பிடிதான். மலேசியாவில் போய் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளி பையை நிறைத்துக்கொண்டு போவதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயரிலி சொல்வது போல் "அட்சயபாத்திரம்" என்பது அளவுக்கதிகமாக ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது போல்தான் எனக்கும் தெரிகிறது.
கட்டாயம் சொல்லப் படவேண்டிய விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி இந்திய மலேசிய மொறிசியஸ் தென்னாபிரிக்க தமிழர்களிடம் ஒரு ஆழமான பதிவை இட்டது கன்னத்தில்முத்தமிட்டால் என்பது என்கருத்து. ஈழப்போராட்டம் பற்றி எடுக்கப்பட்ட பல படங்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிலையில் அது பற்றி ஒரு படத்தை எடுத்தமை பாராட்டுக்குரியது.
அப்படத்தில் சில தவறுகள் இருந்தாலும் சொன்னசேதிகள் ஏராளம். அதனை வெளிப்படுத்திய விதம் அபாரமானது.
அப்படத்தில் எடுக்கபட்ட சண்டைக்காட்சி (யுத்த காட்சி) மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.
எனவே - மட்டும் பார்க்காமல் + ஐயும் பட்டியலிடுங்கள்.
கன்னத்தில் முத்தமிட்டால் படம் எடுத்தவிதம் பிடித்திருந்தது. அருமையான ஒளிப்பதிவு, locations, இசையமைப்பு, சிம்ரன், கீர்த்தனாவின் நடிப்பு என்று பலவிதங்களில் பிடித்திருந்தது. உயிரே எடுத்துவிட்டு, கன்னத்தில் முத்தமிட்டாலில் சடுதியாக மணிரத்தினம் மாறியது உண்மையில் மணிரத்தினம் தன்னளவில் மாறினாரா அல்லது வெளிநாட்டு மார்க்கெட் காரணமா என்று தெரியவில்லை. இந்தப்படம் குறித்து விமர்சனம் வந்தபோது, சுஜாதாவோ அல்லது மணிரத்தினமோ, ஈழப்போராட்டத்தைக் கூறுவதைவிட சின்னப்பிள்ளையின் மனநிலையைத்தான் முக்கியநநோக்கமாய் கொண்டுதான் இந்தப்படத்தை எடுத்தார்கள் என்று வாசித்ததாய் நினைவு. ஏழோ அல்லது எட்டு வயதுக்குழந்தையிடம், தத்தெடுக்கும் எந்தப்பெற்றோரும் உண்மையை உடைத்துவிடமாட்டார்கள் என்ற யதார்த்தம் ஒருபுறம் இருக்கட்டும். அதைப் பெரிய மனிதர்கள் மாதிரி பிள்ளை விளங்கிக்கொண்டு அம்மாவைத் தேடி ராமேஸ்வரத்துக்கு பஸ்சில் போகும் அபத்தத்தை என்னவென்று சொல்வது. மணிரத்தினத்தின் குழந்தைகள் ஒருபோதும் உண்மையான குழந்தைகளாய் இருப்பதில்லை. அவை அளவுக்கு மீறிய வளர்ச்சியுடன், intellectuals தரத்துடந்தான் இருக்கின்றன. க.முவில் கீர்த்தனா நந்திதா தாஸிடம் கேட்டும் கேள்விகள ஒரு உதாரணம்.
மணிரத்தினத்தை நல்ல இயக்குநனராய் அடையாளங்காட்டுவது மெளனராகம், அலைபாயுதே, அஞ்சலி என்று மனித உறவுகளைப் பற்றிப் பேசும் படங்கள். அவருக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத விடயங்களான தேசியம்/போராட்டங்களை விட்டுவைக்கலாம். பம்பாயில் எல்லோரும் கைகளைப் பிணைப்பதுடன் ஏதோ இந்து-முஸ்லிம் பிரச்சினை தீர்வதுமாதிரியும், உயிரேயில், நாயகன் நாயகியைக் கட்டிப்பிடித்து குண்டை வெடிக்கவைப்பதுடன் (அதற்கு சாவது தான் காதலின் ஏழாம் நிலை என்று நமது கவிப்பேரரரசுவின் பின்னணிப்பாடல் வேறு) எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைப்பதுமாதிரியும் அபத்தமாய் காட்சிப்படுத்துகின்றார்.
....
கன்னத்தில் முத்தமிட்டாலுடன் தமிழ்ச்சினிமாவின் அரசியலையும் கண்டுகொள்ளலாம். போராளிகளை அப்பட்டமாய் காட்டும் க.முத்தமிட்டாலுக்கு சென்சாரால் எந்தப்பிரச்சினையுமில்லை. புகழேந்தி எடுத்த , காற்றுக்கென்ன வேலிக்கு சென்சார் கொடுத்த தொல்லை யாவரும் அறிவர். இப்போது பெண்போராளிகளைப் பற்றி ஒரு ஆவணம் தயாரிக்க வன்னிக்குச் சென்ற குறும்படம் எடுக்கும் ரேவதிக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகள். இப்போதும் அவர் தமிழ்நாட்டுப்போலிசாரால் கண்காணிக்கப்படுகின்றார் என்றுதான் செய்திகள் சொல்கின்றன.
"..பெண் போராளிகளைப் பற்றித் தமிழில் எடுக்கப்பட்ட சில படங்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. குழந்தைக்குத் தாயாகக் கூடிய ஒரு பெண் போராளியாகின்றாள் என்ற வியப்பு ஒரு பக்கம். அவள் கற்பழிக்கப்படுவதாலோ (should be used proper word :-( ) அவளது சகோதரகள் கொல்லப்படுவதாலோ போராளி ஆகின்றாள் என்று பாதிக்கப்பட்ட நபராக அவளைச் சித்தரிப்பது இன்னொரு பக்கம். இந்த இரு பக்கங்களிலிருந்துதான் அந்தப் படங்கள் பெண் போராளிகளைப் பார்க்கின்றன. யாழ்ப்பாணம் மாதிரியான 'கன்சர்வேட்டிவ்' சமூகத்தில் பிறந்த ஒருபெண் தன்னையே மாய்த்துக்கொள்ளும் போராளியாகின்ற தனிப்பட்ட பயணத்தையே நான் காட்ட விரும்புகின்றேன்....' என்கின்றார் ரேவதி (புதிய பார்வை, மார்ச் 16-31 இதழ்).
யதார்த்தத்தை நேரில் அவதானித்த ரேவதி போன்றவர்களிடமிருந்துதான் ஒருவிதமான நடுநிலைமையான பார்வையை எதிர்பார்கலாமே தவிர, மணிரத்தினம் போன்றவர்களிடமோ, ஒரு கிரனைட் வெடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்று இணையத்தில் அலசி ஆராய்ந்து முடிவைச் சொல்லும் (உயிரேயில்) சுஜாதா போன்ற வசனகர்தாக்களிடமோ அல்ல.
வசந்தன்
"கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தைப் பற்றிய பார்வைகளில் உங்கள் பார்வை நன்றாக அமைந்துள்ளது.
அனேகமான இந்திய சினிமாக்களில் வெறுமனே வியாபாரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஈழத்துப் பிரச்சனை வலிந்து சொருகப் படுவது எனக்கு பல சமயங்களில் விசனத்தையே ஏற்படுத்தியுள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் மட்டும் ஈழமக்கள் மேல் கொண்ட அக்கறையால் எடுக்கப் பட்ட படம் என்று நான் சொல்ல வரவில்லை. எல்லாமே வியாபார நோக்கும் புகழ் போதையும்தான். ஆனாலும் இப்படத்தில் ஓரளவுக்கேனும் நன்றாகச் சொல்லப் பட்டிருந்தன. நீங்கள் குறிப்பிட்ட குறைகள் ஈழவர் ஒவ்வொருவரையும் படம் பார்க்கையில் எரிச்சல்ப் படுத்தத் தவறவில்லை.
அடுத்து-
குறிப்பிட்ட ஒருவரின் கொலையை விவரிக்கும் விதமாகப் படமாக்கப் பட்டு திரையரங்குக்கு வரத் தடை விதிக்கப் பட்ட The Terrorist படத்தை நானும் பார்த்தேன். ஓரளவுக்குத் தத்ரூபமாக எடுக்கப் பட்டிருந்தது. ஒரு ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது. அடிக்கடி அவள் தமிழ்பெண் என்ற நினைவு மனதை உறுத்தியது.
குறிப்பிட்ட ஒருவரைக் கொல்வதற்கு அவள்தான் தகுதியானவள் என்பது போல அவளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் போது அவளிடம் இருந்த உறுதி... போகப் போகக் தளர்வது போலவே படம் நகர்ந்தது. அழகிய அந்தப் பெரிய விழிகளில் உறுதியையும் மீறித் தேங்கி நிற்கும் பயமும் தயக்கமும் படத்தில் முனைந்து முனைந்து காட்டப் பட்டிருந்தன......
இந்தப் படம் பற்றிய விமர்சனம் ஒன்றை நேரம் வரும் போது தனியாக எழுதும் எண்ணம் இருப்பதால் அது பற்றிய எனது மேலதிக கருத்துக்களை இங்கு எழுதவில்லை.
வசந்தன் உங்கள் பார்வையில் பல கோணங்கள் சரியெனப் படுகின்றன.கன்னத்தில் முத்தமிட்டால் காத்திருந்து பார்த்த படம்.அந்தளவுக்கு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் ஓரளவுக்குத் திருப்தி தந்த படம்.கணவன் மனைவியின் உரையாடலில் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு மண்ணை எடுத்து இது பிடிக்கும் என்று ஒருவர் மீது ஒருவர் பூசிக்கொள்ளும் காட்சி நெகிழவைத்தது அந்த ஒரு காட்சிக்காகவே இரண்டுதரம் திரையில் பார்த்தேன்.அந்தக் காட்சியில் உள்ள அழுத்ததுக்காகவே மற்றைய குறைகளைப் பட்டியலிட விரும்பவில்லை.
கன்னத்தில் முத்தமிட்டால் கதை தேவகாந்தன் உதவியுடன் எழுதப்பட்டது என்று சுஜாதா கற்றதும் பெற்றதுமில் சொல்லியிருந்த ஞாபகம் ஆகவே குறை அக்கரையில் மட்டுமல்ல என்கிறேன்
ஈழநாதன் !
நீங்கள் திரைக்கதையைச் சொல்கிறீர்களா? அல்லது உரையாடலைச் சொல்கிறீர்களா?
திரைக்கதை பற்றியே பெரிய சர்ச்சையுண்டு. அதைவிடுவோம். ஆனால் உரையாடல் விசயத்தில் எப்பிடித்தான் சரியாக ஈழத்தமிழை எழுதினாலும் அதைச் சரியாக உச்சரிப்பது தமிழகத்தார்க்குக் கடினமே. குறிப்பாக மொழியின் லயம் வராது.
எனவேதான் நான் சொல்கிறேன் ஈழத்தவரைப் பினனணிக்குரல் கொடுக்க விடல் நன்று.
அப்படத்தில் சாப்பிட்டு முடிந்ததும் நந்திதாவின் கணவன் கையைச் சூப்புவாரே! ஏனோ அந்த இடம் என்னைக் கவர்ந்தது. எனக்கு மிகக்கிட்டவாக அந்தக் காட்சி வந்து நின்றது.
மற்றும் பின்னூட்டமிட்ட சந்திரவதானாவுக்கும் நன்றி. உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன்.