வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?
இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும். கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று. “அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா எமனும் நாந்தாண்டா…. இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம். ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம். ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம். 50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை. இரசிகர்களைக் கிளுகிளுப்பூட்ட எதுவுமில்லை. சகிலா வகையறாக் காட்சிகள் எதையாவது வைத்திருக்கலாம். ஆகக்குறைந்தது கமலுக்குரிய சர்ச்சையான முத்தக் காட்சியையாவது வைத்திருக்கலாம். நகைச் சுவைக்கென யாரையாவது தனியா வைத்துப் புலம்பச் சொல்லியிருக்க வேண்டும். கதையோடு சம்பந்தப்படாமலிருந்தாலும் பரவாயில்லை. தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.
Labels: திரைப்படம், நகைச்சுவை, விமர்சனம், விவாதம் |
"வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?" இற்குரிய பின்னூட்டங்கள்
கமர்ஷியல் ஹிட்டை விட்டுத் தள்ளுங்க வசந்தன். ஒரு சிலர் மனசுல நீங்கா இடம் பிடிக்குதா அது தான் ஹிட். எத்தனை ஹிட் படம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் சொல்லிகிற மாதிரி மனசுல நிக்குதா? இல்லையே?
வசந்தன்,
செம தூள் உங்க பதிவு! இதெல்லாம் இல்லாததினால்தான்
அன்பேசிவம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது!
என்றும் அன்புடன்,
துளசி.
நல்ல தமிழ் படங்கள் பல படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் தன்னுடைய நண்பனுக்கு பிடிக்கவில்லை என்றால் தனக்கும் பிடிக்காது என்று நினைப்பதுதான். தன்னுடைய ரசனை பிறரைவிட வேறாக இருக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வில்லை. பல படங்கள் என் நண்பர்களுக்கு பிடிக்காதது எனக்கு பிடித்து இருந்து இருக்கிறது.
எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தமிழில் இப்படியெல்லாம் படங்கள் வருமா? என்று அதிசயக்கவைத்த படங்களில் ஒன்று அது.
நீங்கள் போட்டிருக்கும் பட்டியல் சினிமாக்காரர்களின் மூட நம்பிக்கைகள். இதில் எதுவுமே இல்லாமல் இதே கமல் நடித்து அபார வெற்றி பெற்ற சலங்கை ஒலி, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் நினைவுக்கு வருகிறது. இந்த உலகில் நல்லது செய்ய நினைத்தாலும் சரி; கெட்டது செய்ய நினைத்தாலும் சரி மிகவும் சாமர்த்தியமாகச் செய்தால்தான் மக்கள் அங்கீகாரம் கிடைக்கிறது.
- சத்யராஜ்குமார்
எழுதிக்கொள்வது: ஜோ
வசந்தன்,
பின்னிட்டீங்க!
20.23 22.12.2005
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அட பதிவு தொடங்கிய காலப்பகுதியில் பின்னூட்டமிட்டவருக்கு நன்றிகூடச் சொல்லத் தெரியாமலிருந்திருக்கிறேனே?
இறுதியாகப் பின்னூட்டமிட்ட ஜோவுக்கு நன்றி.