Friday, August 11, 2006

கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்

யோகனின் கடகம் பற்றிய விகடனுக்கான விளக்கமும் அதைத்தொடர்ந்த பதிவும் பின்னூட்டங்களும் யோகனின் வலைப்பதிவுத் தொடக்கமும் என்று கடந்த நாலைந்து நாட்களாக வலைப்பதிவில் கடகம் பற்றிய கதை கொஞ்சம் பரவலாக இருக்கிறது.
ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் நான் என் கருத்தைச் சொல்லிவிட்டாலும் கடகம் போன்ற ஒன்றைப் படமாக வெளியிடுவதால் தனிப்பதிவொன்று போடலாம் என்று தோன்றியதே இப்பதிவு.
ஏற்கனவே "கடகத்துட் குழந்தை" என்ற தலைப்பில் என்னால் பதியப்பட்டதே இப்படம்.
படத்திலிருப்பது கடகமா பெட்டியா என்று சொல்லுங்கள்.


எனக்குத் தெரிந்த பனம்பொருட்கள் பற்றி சிறுகுறிப்பைத் தரலாமென்று நினைக்கிறேன். பல சொற்களை ஞாபகப்படுத்தலாமென்பதோடு பின்னூட்டங்களில் சில விசயங்களை அறிந்துகொள்ளலாம் என்பதும் காரணம்.

கடகம்:
பதிவிலும் பின்னூட்டங்களிலும் நான் பலவிடயங்களைத் தெரிந்துகொண்டேன். இப்போதும் கடகம் இழைக்கப்படுவது ஓலையாலா நாராலா என்று திட்டவட்டமாக முடிவுக்கு வரமுடியவில்லை. கண்ணை மூடி யோசித்தால் இரண்டுமே சரிபோலத் தெரிகிறது. ஆனால் ஓலையின் பக்கம் தராசு சாய்கிறது.

கடகம் கட்டாயமாக நியம அளவொன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அதுவோர் அளவுகருவி. கல், மணல், மண், ஊரி, சல்லிக்கல் என்பன முதற்கொண்டு பலபொருட்கள் இவற்றால் அளக்கப்படுகின்றன. அளவுகள் பற்றி யோகன் அளித்த தகவல்:
// சாதாரண விற்பனைக்குரிய கடகங்கள்;சுமார் 18 அங்குல வாய்விட்டம் ;9 அங்குல உயரம்; அடியின் அமைப்பு 4 மூலை வைத்த சதுரமாக இருக்கும். இதை நார்ச் சிக்கனம் கருதி முதல் சற்று முற்றிய (குருத்திலிருந்து 2ம்;3ம் சுற்றில் வரும் ஓலை)பனையோலையில் ஐதாக இழைத்து விட்டு.பின் வெளிப்பகுதிக்கு பனை நாரால் இழைக்கும் போது; பலம் பெறும்; இறுதியாக வாய்ப்பக்கத்திற்கு சுமார் 2 அங்குல அகலத்தில் சுற்றி சற்றுத் தடிப்பன வாராத நாரை வைத்து பனையீக்கினால் கட்டுவார்கள். 5 கடகங்கள் உள்ள ஒரு கட்டுக் கடகங்களை ஒரு சேர்வை கடகம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்வார்கள்; ஒரு வீடுகட்டுமான வேலைக்கு; 2 சேர்வை கடகம் வாங்குவோம்; குளத்துமண் தோட்டத்துக்கு ஏற்றும் போது சுமார் 20 கூலிகள் வேலை செய்யும் போது 4 சேர்வை தேவை.
அந்த நாட்களில் சாதாரணமாக ஒரு வீட்டில் குறைந்தது 3 கடகங்கள் பாவனையில் இருக்கும்! ஒரு பழங் கடகம் குப்பை கூளம் அள்ள; அடுத்தது சந்தைக்குக் கொண்டு செல்வது; 3 வது மிகப் பவுத்திரமானது. சாமியறையில் இருக்கும் சமய சம்பந்தமான காரியங்களுக்காக!கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் போது சாமான் காவவும்; பின் பொங்கலுடன் பானை சுமக்கவும்; இந்தப் புனித கடகம் பாவிக்கப்படும். ஆண்டுக்கு ஐந்தாறு தடவை சுவாமியறையை விட்டு வெளியே வரும். அப்பபோ பாவனைக்கு முதல் கழுவிக் காயவைக்கும் பழக்கமும் உண்டு. கட்டாயமும் கூட.
//

நானறிந்த அளவில் கடகங்களின் அளவைப்பொறுத்து இரு வகையானவையுண்டு. சிறிய கடகம், பெரிய கடகம்.
ஒருமுறை எங்கள் ஊர்க் கடற்கரையிலுள்ள கோவிலொன்றில் சுற்றுப்பிரகாரம் கட்டும் வேலை நடந்தது. இரண்டு தொழிலாளிகள் செய்தார்கள். சீமெந்து, மணல், ஊரி கலந்து அச்சுற்றுப்பிரகாரம் செய்யப்பட்டது. அப்போது மணலையும் ஊரியையும் கொண்டுவந்து கொட்டுவதை எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் பொறுப்பெடுத்தனர். அதை எண்ணும்படி பங்குத்தந்தையால் நான் பணிக்கப்பட்டேன். (அப்போது பதினொரு வயது) பெரிய கடகத்தில் 30 கடகம் மணலும் சிறிய கடகத்தில் 30 கடகம் ஊரியும் கொண்டுவந்து கொட்ட வேண்டும். மணலில் சிறுகுச்சியால் கோடுபோட்டு எண்ணிக்கொண்டிருந்தேன். தொடக்கத்தில் சரியாகத்தான் இருந்தது. ஒருவர் மணல் கொண்டுவந்து கொட்ட மற்றவர் ஊரி கொண்டுவந்து கொட்டினார். இறுதிவரை ஆட்கள் மாறவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் கொண்டுவரும் கடகம் மாறிவிட்டது. சிறியகடகத்தில் மணலும் பெரிய கடகத்தில் ஊரியும் வந்தன. மணல் சற்று எட்டவாகவும் ஊரி பக்கத்திலும் இருந்தது அதற்குக் காரணம். இருபதாவது கடகத்தில் கையும் கடளவுமாகப் பிடித்ததோடு சுவாமியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் எத்தனையாவது கடகத்தில் இந்த மாற்றம் நடந்ததென்று தெரியவில்லை.
அதில் இருவர் இரண்டு கடகங்களின் கனவளவுகளைக் கொண்டு கணித்து மிகுதியைச் சரிசெய்து விடப்பார்த்தனர். எத்தனையாவது கடகத்தில் மாற்றம் வந்ததென்று சரியாகத் தெரியாததால் கொட்டியவற்றை மீண்டும் அளந்து பக்கத்தில் குவிக்கவேண்டியாகிவிட்டது.

ஏன் சொல்கிறேனென்றால் கடகங்களில் இரு அளவுகள் இருந்ததாக நான் நினைப்பதற்கு இதுவொரு காரணம். உண்மையில் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

யோகன் சொல்வது போல எங்கள் வீட்டில் கூட்டிய குப்பையை அள்ள பழைய கடகமொன்றுதான் பாவிக்கப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெட்டிகள்:
இவை முழுக்க முழுக்க பனையோலையாலும் ஈர்க்காலும் செய்யப்படுபவை. பனையோலை என்று சொன்னாலும் 'சார்வு' எனப்படும் முற்றாக விரியாத இளம் ஓலையைக் கொண்டே இவை செய்யப்படுகின்றன. மிகச்சிறிய பெட்டிகள் முதற்கொண்டு பெரிய பெட்டிகள் வரை உள்ளன. கோழிச்சாயத்தால் நிறமூட்டப்பட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள்கூட செய்யப்பட்டிருக்கும். மிகக்கச்சிதமாகப் பொருந்தக் கூடிய மூடிகளோடுகூட ஓலைப்பெட்டிகளுண்டு.
எங்கள் ஊரில் அதிகாலையில் வீடுகளுக்குச் சென்று இடியப்பம், தோசை, அப்பம், சம்பல் விற்கும் ஆச்சி ஒவ்வொன்றுக்கும் விதம்விதமான சிறிய பெட்டிகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு, சுருட்டு, புகையிலை போன்றவற்றை வைத்திருப்பதற்கும் பெட்டியுண்டு. (கொட்டைப் பெட்டி : நன்றி ஜெயபால்).
சந்தையில் பணம்போட்டு வைப்பதற்கு சிறிய ஓலைப்பெட்டிகளைப் பாவிப்பதைப் பெருமளவிற் காணலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீத்துப்பெட்டி:
(எழுதும்போது நீர்த்துப்பெட்டி எனப்தே சரியென்று நினைக்கிறேன்).
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெரும்பாலும் பிட்டவிப்பதற்கும் அவ்வப்போது மா அவிப்பதற்கும் பாவிக்கப்படுகிறது. நீராவியில் அவிக்கும் பண்டங்களை இதில் வைத்து அவிக்கலாம். (இட்லியை வைக்கலாமா என்று கேட்காதீர்கள்;-))
இதுவும் பெரும்பாலும் நியம அளவொன்றைக் கொண்டிருக்கும். கூம்பு வடிவில் இழைக்கப்பட்டிருக்கும். கூம்பின் முனைப்பக்கம் கீழ்நிற்கத்தக்கவாறு நீருள்ள பானையுள் வைத்தால் அரைவாசி நீத்துப்பெட்டி உள்ளேயும் அரைவாசி பானைக்கு வெளியேயும் இருக்கத்தக்கதாக பானையில் விளிம்பில் பெட்டி பொருந்தி நிற்கும். நீத்துப்பெட்டி தொடாதவாறு பானையில் நீர் இருக்க வேண்டும். பிடித்துத் தூக்கத் தக்கதாக இரண்டு செவிகள் வைத்து இழைக்கப்பட்டிருக்கும்.
பத்துப்பேருக்குள் என்றால்தான் நீத்துப்பெட்டி கட்டுப்படியாகும். அதைவிட அதிகமென்றால் வேறுவழிதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குட்டான்:
இதுபற்றியும் ஏற்கனவே பின்னூட்டங்களில் கதைக்கபட்டுவிட்டது.
பனையோலையால் செய்யப்படும் ஓர் உருளை என்று சொல்லலாம். மிகச்சிறிய அளவிற்கூட குட்டான் செய்வது எனக்கு ஆச்சரியம்.
நாங்கள் குட்டானைப் பாவிக்கும் ஒரே இடம் பனங்கட்டிக்காகத்தான். (வேறு ஏதாவது இருக்கிறதா?)
பனங்கட்டிக்குட்டான் என்று சிறுவயதில் சொல்லத் தொடங்கி இடையில் அதற்காக நக்கலடிபட்டு இப்போது பனங்குட்டான் என்று மட்டுமே சொல்கிறேன். பனங்கட்டி காய்ச்சுவது, குட்டான் இழைப்பது பற்றி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்படும் சஞ்சிகையான "அதாரத்தில்" ஒரு கட்டுரை வாசித்தேன்.
அதன்படி,
பனங்கட்டி காய்ச்சும் தொழில் அருகிவருகிறது. பனங்கட்டி காய்ச்சுவது சுலபமானதில்லை. எந்த நவீன வசதிகளோ அளவுகருவிகளோ இன்றி குடிசைக்கைத் தொழிலாகவே இருந்துவிட்டது. இதற்கு மிகுந்த கைப்பக்குவம் தேவை.பதம் சற்றுப்பிசகினாற்கூட விற்கமுடியாதபடி வந்துவிடும். இதையொரு குலத்தொழில் என்றே பலர் கருதுகின்றனர். இத்தொழில் நுட்பங்கள் வெளியில் பரவுவதில்லை. கட்டுரையாசிரியர் பனங்கட்டி காய்ச்சுவதை நேரில் பார்ப்பதற்காக மிகுந்த கஸ்டப்பட்டுள்ளார். எல்லோரும் மற்றவர்களை அனுமதிப்பதில்லை.
காய்ச்சும் வெப்பநிலை அளவுகள், நேர அளவுகள், கலவை அளவுகள் என்பன சம்பந்தப்பட்ட தொழிலாளின் பட்டறிவுகள் தானேயன்றி தரவு வடிவில் எவையுமில்லை. காய்ச்சுவதற்கு தேர்ந்தெடுக்கும் விறகு முதற்கொண்டு எல்லாவற்றிலும் நுணுக்கமாக இருக்கிறார்கள்.
சரியான வெப்பத்தில் காய்ச்ச வேண்டும். எல்லாவற்றிலும் உச்சக்கட்டம் இறக்கும் பதம்தான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் குட்டானில் ஊற்ற முடியாதது மட்டுமன்றி, அதன் சுவையும் மாறிவிடுமாம்.
இத்தொழில் விரிவுபடுத்தப்படாவிட்டால் இன்னும் இரண்டு சந்ததியுடன் அருகிவிடுமென்று எச்சரிக்கப்படுகிறது.

பனங்கட்டிகளும் அதன் தயாரிப்பிடத்தைப்பொறுத்து மதிப்பு ஏறி இறங்குகிறது.
மடு ஆலயத்திருவிழாவில் பனங்கட்டியும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. சிங்களவரின் கித்துல் வெல்லமும் தமிழர்களின் பனங்குட்டான்களும் பரிமாறுகின்றன.

யாழ்ப்பாணத்திலும் சரி, வன்னியிலும் சரி தேனீருக்குக்கூட சீனியில்லாத நிலைமைகள் பலதடவை வந்துள்ளன. அந்நேரத்தில் சிறிதளவு சினியை ஓர் உள்ளங்கையில் வைத்து நக்கிநக்கித் தேனீர் குடிப்போம். அந்தளவுகூட சீனியில்லாத நாட்களில் ஓர் இனிப்பை வாயில் வைத்துக்கொண்டு குடிப்போம். அல்லது சிறு சக்கரைத் துண்டோடு குடிப்போம். இப்படிக்குடிப்பதை "நக்குத்தண்ணி" என்று நாம் அழைப்பதுண்டு. பருவகாலங்கள் மாறிமாறி வருவதைப்போல இப்படியான காலமும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்.

வன்னியில் அடிக்கடி இப்படி நிலைமை வரும். எல்லாம் அரசின் கைகளில்தான் இருந்தது. அரசு நினைத்தநேரத்தில் எந்தப்பொருளையும் நிப்பாட்டும். யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மட்டும் சீனிபோட்டுத் தேனீர் கொடுக்ப்பது வழக்கமாக இருந்தது. வன்னியில் அதுவும் தகர்ந்தது. நக்குத்தண்ணிக் காலங்களில் வீடுகளுக்குப் போனால் நக்குத்தண்ணியே தரச்சொல்லி விருந்தினரே சொல்லவிடுவார்.

இதை எதிர்கொள்ள புலிகள் உள்நாட்டு உற்பத்தியாக பனஞ்சீனித் தயாரிப்பை ஊக்குவித்து வழங்கினார்கள். தட்டுப்பாடற்ற முறையில் குறைந்த விலையில் பனஞ்சீனி வழங்கினாலும் யாழ்ப்பாணத்தில் எங்கள் மக்கள் நடந்துகொண்ட முறை சுவாரசியமானது. கறுப்புச்சீனி பாவிப்பது கெளரவக்குறைச்சலாகக் கருதிய மேற்தட்டு, நடுத்தட்டு (பெரும்பாலும் மணியோடர் போருளாதார வர்க்கம்) கூடுதல் காசு கொடுத்து வெள்ளைச்சீனி வாங்கும், அல்லது குடித்தால் வெள்ளைச்சீனி அல்லது ஒன்றுமில்லை என்று இருக்கும். படித்த வர்க்கம் தானே, புரிந்துகொள்ளும் என்று நினைத்தோ என்னவோ, கரும்புச்சீனியையும் பனஞ்சீனியையும் ஒப்பிட்டு பனஞ்சீனியின் அதிக பலனை விஞ்ஞான ரீதியாக மக்களிடத்தில் சேர்க்க மருதுத்துவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பிரச்சாரம்கூட செய்தார்கள். பீட்ரூட்டில் சர்க்கரைத் தாயரிப்பில்கூட பெருவெற்றியடைந்தது தமிழீழப்பொருண்மியம். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு போகத்திலேயே மகத்தான தோல்வியை வழங்கினார்கள் எங்கள் மக்கள். இறுதியில் வன்னியிலிருந்து யாழ்பபாணத்துக்கு விறகு இறக்கிய செலவுகூட எடுக்காமல் பனஞ்சீனித் திட்டம் யாழ்ப்பாணத்தில் தோல்வியில் முடிந்தது. (இதுபற்றி இங்கு அதிகம் தேவையில்லை. திசை மாறிவிடும்)

வன்னியில் சீனிக்கு மாற்று ஏற்பாடாக பனங்கட்டி உற்பத்திபற்றி அதிக கரிசனை எடுக்கப்பட்டது. அப்போதுதான் இத்தொழிலை பெருமெடுப்பில் செய்யமுடியாத நிலை உணரப்பட்டது. இந்நுட்பத்தைப் பெற்றுப் பரவலாக்கி தன்னிறைவடைய முயன்றார்கள். வெற்றியளித்ததா தெரியவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாய்கள்:
பனையோலைப் பாய் பற்றித் தெரியாதவர்கள் உண்டா?
தனியே படுப்பதற்கு மட்டுமன்றி பல தேவைகளுக்கும் பனம்பாய் பாவிக்கப்படுகிறது.
எங்கள்வீட்டில் 15 x 25 அடியில் பெரிய பனம்பாயொன்று இருந்தது. இடையில் பனஞ்சிலாகை வைத்துச் சுருட்டி தீராந்தியில் போட்டுவிடுவோம். அக்கம்பக்கத்தில் ஏதும் விசேசமென்றால் அந்தப்பாய்க்கு வேலை வந்துவிடும்.
பாயிலும் இடையிடையே கோழிச்சாயம் போட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள் இருக்கும். ஓர் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் தொடக்கம் கால் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் வரை பல்வேறு அளவுகள் கொண்ட ஓலைகளால் பாய்கள் செய்யப்பட்டிருக்கும்.
வயது போனவர்கள் சிலர் பொழுதுபோக்காக இப்படி பாய் இழைப்பார்கள்.
பினாட்டு (பனாட்டு) போடவென்று நல்ல நெருக்கமாக பாய் இழைப்பார்கள். ஊரில் எங்கள் வீட்டில் தொடர்ந்து பினாட்டுப் போடுவோம். போட்ட பினாட்டை பாயிலிருந்து எடுப்பது ஒரு கலை. கிழியாமல் எடுக்கவேண்டும். ஒரேபாயில் நான்கு, ஐந்து முறைகூட பனாட்டுப் போட்டிருக்கிறோம்.
பின்பொருநாள் நண்பர்களுடன் சேர்ந்திருந்தபோது பனாட்டுப் போட்டோம். இறுதியில் பனாட்டைக் கழற்றும்போது தோல்விதான். பாயோடு சேர்த்து சதுரம் சதுரமாக வெட்டிவைத்துவிட்டோம். சாப்பிடும்போது அவரவரே பாய்த்துண்டை உரித்துச் சாப்பிடவேண்டியதுதான்.

பெரிய சமையல்களில் சோறு பரப்ப பனம்பாய்தான் அதிகம் பாவிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருகணை/திருகணி:
பேச்சுவழக்கில் திருகணி என்றுதான் எங்கள் பக்கம் சொல்வார்கள். சட்டி, பானை, தாச்சி என்பவற்றை இதன்மேல் வைப்போம். தனியே பனை ஈர்க்கால் மட்டும் செய்யப்பட்டவையுள்ளன. தும்புக்கயிறினால் செய்யப்பட்டவையுமுள்ளன.
'உறி' தெரியும்தானே? கள்ளத்தீனி தின்னும் என்னைப்போன்றவர்களுக்கு எப்போதும் பிடித்தது.
இதுவும் பனை ஈர்க்கால் செய்யப்படுவதுதான். என்னுடைய அம்மம்மாவீட்டில் நான் தேடுவது உறியைத்தான். அனேகமாக பொரித்த மீனோ, இறாலோ, கணவாயோ எனக்காகப் பதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு சந்தையில் திருகணை விற்கும்போது பார்த்தேன். அதற்குக்கூட நிறச்சாயம் போட்ட ஈர்க்கால் அழகுவேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். கரிபூசப்படப்போகும் திருகணைக்கு வண்ண அலங்காரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓலைத் தொப்பிகள், விசிறிகள்:
பனையோலைத் தொப்பிகளும் விசிறிகளும் நல்ல பிரச்சித்தம். ஆடம்பரப்பொருட்களாகவே இவை மாறிவிட்டன.
யாழ்ப்பாணத்தில் ஒரு நேரத்தில் (93,94) பெண்களின் மிகவிருப்புக்குரிய கவர்ச்சிப்பொருளாக ஓலைத்தொப்பி இருந்தது. துவிற்சக்கர வண்டி வைத்திருப்பவர்கள் இத்தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு போவது அந்நேரத்தில் பெரிய கவர்ச்சி. ஏதோ எங்கள் பெண்கள் வெயிலில் கறுக்காமல் இருக்கிறார்களே என்று பெருமூச்சுவிட்டால் கொஞ்சநாளின்பின் அதை ஹாண்டில் பாரில் முன்பக்கமாக கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போவது பெரிய கவர்ச்சிப் பாணியாக மாறிவிட்டது.
யாராவது இளைய வலைப்பதிவாளர்களுக்கு இக்காலம் ஞாபகம் வருகிறதா?
ஆண்பிள்ளைகள் ஓலைத்தொப்பி போடுவதை நினைத்துப்பாருங்கள்.
ஆனால் வெயில்காலத்தில் ஓலைத்தொப்பி மிகஉன்னதமானது.

மன்னார் மாவட்டத்தின் மடுத்திருவிழாவுக்குச் சென்றால் ஓலைத்தொப்பி, ஓலை விசிறி, சுளகு உள்ளிட்ட பனம்பொருட்களின் என்பவற்றின் விற்பனை தெரியும். விதம்விதமான வண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஓலைத்தொப்பிகள், விசிறிகள் விற்கப்படும். ஒரே மாதிரி வண்ணத்தில் தொப்பி போட்டுக்கொண்டு கூட்டமாகத் திரிவார்கள். ஆனால் விலை கடுமையாகவே இருக்கும். கிட்டத்தட்ட கொழும்பு விலை விற்பார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுளகு:
இதை தமிழகத்தில் எப்படிச் சொல்வார்கள்?
பெரும்பாலும் அரிசி பிடைக்கப் பாவிக்கப்படுகிறது.
ஆனால் எங்கள் வீட்டில் புட்டு கொத்துவது தொடக்கம் பல தேவைகளுக்குப் பாவிக்கப்படும்.
குசினி வெளிப்படிகளில் நின்று அரிசி பிடைக்க, முன்னால் கோழிகள் சண்டைபோட்டுக்கொண்டு "ஆ"வென்று காத்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது சுவாரசியம்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பட்டம்:
பனைநார் கொண்டு பட்டங்கள் செய்வோம். கொக்கன், பிராந்தன், பெட்டி, எட்டுமூலை, பாம்பன் என்று பலவிதப் பட்டங்கள். வெளவால் பட்டத்துக்கு தென்னை ஈர்க்குப் போதும். பெரிய பட்டங்களுக்குப் பனைநார் நல்லது.
யாழ்ப்பாணத்துக்குள்ளேயே பட்டமே முக்கிய பொழுதுபோக்காகக் கொண்ட ஊர்களும், பாடப்புத்தகத்தில் அறிந்ததோடு தொடர்பு முடிந்த ஊர்களும் உள்ளன. இடம்பெயர்ந்து வந்திருந்த ஓரிடத்தில் பிராந்தன் பட்டம் ஏற்றியபோது, 'அதெப்படி வாலில்லாமல் பட்டம் பறக்கிறது?' என்று ஆச்சரியப்பட்ட மக்களைப் பார்த்திருக்கிறேன். மின்விளக்குகள் பூட்டி பட்டங்கள் பறக்கிவிடுவதெல்லாம் இப்போது கனவுபோலத்தான் தெரிகிறது. பத்துவயதில் (இந்திய இராணுவ காலம்) வீட்டுக்குத் தெரியாமல் இன்னொருவரோடு பலமைல்கள் சைக்கிளில் போய், அதுவும் காங்கேசன்துறைப் படைமுகாம் கடந்து மயிலிட்டி வந்து பட்டம் வாங்கிச் சென்றது (வீட்டாரைப் பொறுத்தவரை இது உயிரைப் பணயம் வைக்கும் வேலை. இளங்கன்று பயமறியாது என்பது "இந்த" விசயத்தில் உண்மை) உட்பட பல இனிய ஞாபங்களுள்ளன. 89 இல் வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வானம் தெரியாமல் பறந்துகொண்டிருந்த விதம் விதமான பட்டங்களின் காட்சி இன்றும் பசுமையாகவே உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனையீர்க்கு:
பனையீர்க்கு பலவிதங்களில் பயன்படுகிறது.
தனியே ஈர்க்கு என்று பார்தால் கிடுகு வேய்வதற்கு (பேச்சில் மேய்தல் என்றும் சொல்வதுண்டு) பனையீர்க்குத்தான் அதிகம் பாவிக்கப்படுகிறது. நீரில் ஊறப்போட்டுப் பாவிப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனையோலையில் செய்யப்படும் முக்கிய பொருள் பிளா.
இதுபற்றிச் சொல்லத்தேவையில்லை;-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்போது உடனே ஞாபகம் வந்தது இவைதாம்.
வேறு என்ன முக்கியபொருட்கள்?

இப்பதிவுக்கான மூலப்பதிவுகள்
யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு -இலவசக் கொத்தனார்
சுஜாதா-நான்-கடகம் -யோகன்.
இப்போதெல்லாம் பதிவு எழுதவே பஞ்சி. அரைகுறையாகவென்றாலும் இந்தப்பதிவை எழுத ஒரு தூண்டுதலாயிருந்தவர்களுக்கு நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

****உடம்பைக் குறிக்க "மேல்" என்ற சொல்லை நாங்கள் பாவிக்கிறோம். ஈழத்தார் அனைவரும் பாவிப்பதாக நினைக்கிறேன். சரியா?
இச்சொல்லை தமிழத்தார் பாவிக்கிறார்களா?
இது எப்படி வந்தது? 'மெய்'யிலிருந்து வந்திருப்பதாகத் தெரியவில்லை. 'மேனி'யிலிருந்து???


_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (11 August, 2006 22:20) : 

நல்லதொரு பதிவு வசந்தன்.

சுளகைத் தமிழகத்திலே முறம் என்டு சொல்வார்கள் என்டு நினைக்கிறன்.

//பிராந்தன் பட்டம் ஏற்றியபோது, 'அதெப்படி வாலில்லாமல் பட்டம் பறக்கிறது?' //
வாலில்லாமல் பட்டமா? [இதை எனக்குச் சின்னனில (மறந்து போயோ/தெரியாமலோ)வாலில்லாமப் பட்டம் செய்து தந்தவரிட்டக் காட்டப்போறதில்ல. பிறகு அவர் அதைத்தான் செய்து தந்தனான் என்டு சொல்லக்கூடும்!! :O))
விண் பூட்டிப் பட்டம் விட்டகாலம் ஞாபகம் வருது..

பிளா? மண்டையப் பிச்சுக்கொண்டதுதான் மிச்சம்.. என்னண்டு சொல்லுமப்பா.. ஞாபகமே வருதில்ல :O((

 

said ... (11 August, 2006 22:23) : 

நல்ல பதிவு, பல முறை நானும் செய்ய வேண்டுமென்று நினைப்பவற்றில் பனம் பொருள் மகிமையும் ஒன்று. நீங்கள் தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
முதலில் உங்கள் கேள்வியைப் பார்ப்போம்.
மேல் என்பது, மேல் உடம்பின் சுருக்கமாகப் பாவிக்கப் படும் சொல். "கால் மேல் கழுவி விட்டு வா" என்ற தொடர் ஊரில் வழக்கம்.

பனம் பொருள் மகிமைக்காக மேலும் சில சொற்கள். விளக்கமாக நீங்களே தொடருங்கள்.
காவோலை, ஊமல், பாளைத் தாறு,
கருக்கு மட்டை, பன்னாடை, தும்பு, மூரி.

 

said ... (11 August, 2006 22:39) : 

விரிவான அழகான நடையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தாயகம் தழுவிய சொந்தச் சரக்கை எடுத்துவிட்டிருக்கிறீர்கள், அருமை.

 

said ... (11 August, 2006 22:40) : 

வசந்தா!
உங்கள் கடகம் கலக்குது! படம் பிரமாதம்; கருவாட்டைப் பார்க்க வாயூறுது; மொட்டைக்கருப்பன் நெல்லரிசி மாவில் ,உடன் தேங்காய் போட்டுப் பிட்டவித்து;இந்தக் கருவாடும் சுட்டுச் சாப்பிட்டால்;;;"அந்த நாளும் வந்திடாதோ!; பன்னை வேலையின் பெரும் பகுதியை படம் போட்டுக் காட்டி விட்டுள்ளீர்கள். இத்துடன் "உமல்" என்பது அந்த நாட்களில் சாக்கு; உரப்பை போல் பொருட்களை பயணங்களில் காவ உபபோகித்த; ஒருவகை பை தான் சுமார் 3 அடி நீளம்; 1 1/2 அடி அகலம் இருக்கும்; சீமேந்துப் பை; அல்லது இப்போ பசுமதி அரிசி வரும் பை போல் இருக்கும்.
யோகன் பாரிஸ்

 

said ... (11 August, 2006 22:43) : 

எழுதிக்கொள்வது: johan-paris

வசந்தா!
உங்கள் கடகம் கலக்குது! படம் பிரமாதம்; கருவாட்டைப் பார்க்க வாயூறுது; மொட்டைக்கருப்பன் நெல்லரிசி மாவில் ,உடன் தேங்காய் போட்டுப் பிட்டவித்து;இந்தக் கருவாடும் சுட்டுச் சாப்பிட்டால்;;;"அந்த நாளும் வந்திடாதோ!; பன்னை வேலையின் பெரும் பகுதியை படம் போட்டுக் காட்டி விட்டுள்ளீர்கள். இத்துடன் "உமல்" என்பது அந்த நாட்களில் சாக்கு; உரப்பை போல் பொருட்களை பயணங்களில் காவ உபபோகித்த; ஒருவகை பை தான் சுமார் 3 அடி நீளம்; 1 1/2 அடி அகலம் இருக்கும்; சீமேந்துப் பை; அல்லது இப்போ பசுமதி அரிசி வரும் பை போல் இருக்கும்.
யோகன் பாரிஸ்



15.6 11.8.2006

 

said ... (11 August, 2006 23:03) : 

பயனான பதிவு

 

said ... (12 August, 2006 01:02) : 

எழுதிக்கொள்வது: கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்

நல்ல பதிவு. ஊருக்கே போய் வந்தேன்.
வடலி. பனையொலை விசிறியின் காத்தும் சுகமாக இருக்கும்.


17.17 11.8.2006

 

said ... (12 August, 2006 01:29) : 

எழுதிக்கொள்வது: குறும்பன்

"மேலுக்கு நல்லா சோப்பு போட்டு குளி" "மேலெல்லாம் ஒரே வலி" "மேலுக்கு என்னடா ஆச்சு?" என்று கூறுவார்கள். இங்கு மேல் என்பது உடம்பை, மேனியை குறிக்கும்.


மேனி என்பதே மறுவி மேலாக இங்கு புழங்கப்படுகிறது. தமிழகத்தில் தான்.

11.27 11.8.2006

 

said ... (12 August, 2006 02:23) : 

நன்றி வசந்தன் ...நல்ல விரிவான விளக்கமான பதிவு

 

said ... (12 August, 2006 02:23) : 

வசந்தன்,
நல்ல பதிவு.

//இப்போது உடனே ஞாபகம் வந்தது இவைதாம். வேறு என்ன முக்கிய பொருட்கள்? //

தவறாயின் பொறுத்தருள்க. பழைய காலத்தில் எழுதுவதற்கு இந்த பனை ஓலையைத்தானே பயன்படுத்தினார்கள், இல்லையா? என்னுடைய தந்தையாரின் குறிப்பு [ஜாதகம்] ஓலையில் தான் எழுதப்பட்டுள்ளது.

 

said ... (12 August, 2006 03:50) : 

படம் நன்றாக இருக்கிறது. அது சுடுகருவாடா? தயிர்ச்சோற்றுக்குப் பிரமாதமாக இருக்கும்.

சுளகு என்பது தென்தமிழ்நாட்டில் சுளகுதான். வடதமிழ்நாட்டில் முறம் என்கிறார்கள். எங்கூருல இன்னும் சொளகுதான்.

யோகன், நீங்கள் பச்சரிசி மாவோடு கருவாடு உண்டீர்களா? மாவு என்றால் பிட்டு போலவா? அத்தோடு குழப்பிக் கொள்ள?

 

said ... (12 August, 2006 03:50) : 

வசந்தன் மறந்துபோன சொற்களை/நினைவுகளை எல்லாம் மீளக்கொணர்ந்திருக்கின்றது இந்தப்பதிவு. நனறி.

/விண் பூட்டிப் பட்டம் விட்டகாலம் ஞாபகம் வருது../
ஷ்ரேயா, மற்ற ஆக்கள் பட்டமேற்ற நீஙக்ள் பக்கத்தில்
நின்றுகொண்டு 'விண்'ணாணம் மட்டும் கதைத்ததாயெல்லோ கேள்விப்பட்டனான் :-).

 

said ... (12 August, 2006 14:59) : 

ஷ்ரேயா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஓமோம். வாலில்லாத பட்டங்கள்தாம். சிறிய குஞ்சம் வைப்போம். அதுகூட நாலு அல்லது ஐந்து அங்குல நீளம்தான்.

//பிளா? மண்டையப் பிச்சுக்கொண்டதுதான் மிச்சம்.. என்னண்டு சொல்லுமப்பா.. ஞாபகமே வருதில்ல :O((//
ஐயோ ஐயோ!!!
அடப்பாவியளா!
உருப்படுவியளோ?
'சின்ன வயசில் நான் அருந்திய பானம்' எண்டு நீங்கள் சொன்ன பானத்தை அருந்தப் பாவிக்கிறது. பனையோலை மடிச்சு சின்ன படகு மாதிரி.....
ஞாபகம் வருதோ?

 

said ... (12 August, 2006 16:12) : 

ஜெயபால்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொன்னவை பற்றி பிறகொருதரம் பார்ப்போம்.
ஊமல், பாளைத்தார் என்பன நாங்கள் ஆமி-புலி விளையாடப் பாவித்த ஆயுதங்கள்.
முடிந்தால் எங்கள் விளையாட்டுப் பற்றி பின்பு எழுதுகிறேன்.

கானா பிரபா,
வருகைக்கு நன்றி.

 

said ... (12 August, 2006 18:24) : 

டிசே நீரும் பக்கத்தில நின்ட மாதிரிச் சொல்லுறீர்??? :O)))

ஓம் வசந்தன், நேற்று நண்பரொராளிட்டக் கதைக்கேக்குள்ள கேட்டன்.. சொன்னார். நான் நல்ல பிள்ளை என்ட படியால எனக்குத் தெரியாமல்/மறந்து போனதில ஆச்சரியமில்லத்தானே??;O))

 

said ... (12 August, 2006 20:10) : 

யோகன்,
மூலவரே வந்தாச்சு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஜெயபால் கட்டது 'உமல்' அன்று 'ஊமல்' பனங்கொட்டை உக்கிப்போகும்போது அடுத்தநிலை.
விறகாப் பாவிக்கப்படுவதுண்டு.
எங்கள் ஊரில் இருந்தவரை விறகு காசு கொடுத்து வாங்குவதில்லை. வளிவிலிருந்து கிடைக்கும் தென்னைமட்டை, கங்குமட்டை, போகத்துக்கு வேலி வெட்டும்போது கதியால்கள் போக மிஞ்சும் கழிவுப் பூவரசந்தடிகள், பொச்சுமட்டை என்று விறகில் தன்னிறைவு இருந்தது. முதலாவது இடப்பெயர்வின் பின்தான் விறகு காசுகொடுத்து வாங்கும் நிலைமை.
பொச்சுமட்டை, பன்னாடை, சிரட்டை என்பனகூட யாழ்ப்பாணத்தில் விறகுக்காக விற்கப்பட்ட பொருட்கள். வன்னியில் இதை நினைத்தால் சிரிப்புவரும்.

"உமல் பை" பற்றிய விளக்கத்துக்கு நன்றி.

 

said ... (13 August, 2006 00:19) : 

சந்திரவதனா, பெயரில்லாதவர், குறும்பன், சின்னக்குட்டி, வெற்றி,
வருகைக்கு நன்றி.

 

said ... (14 August, 2006 19:39) : 

வசந்தன்!
நிறைவான ஒரு பதிவு. பனையோலையாலும், பனைமட்டை நாராலும், செய்யப்படும் பாவனைப்பொருட்களைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவற்றோடு, ஜெயபால் குறிப்பிட்ட பட்டை, யோகன் குறிப்பிட்ட உமல் (பை), என்பனவற்றுடன், சிறு கிண்ணம் போன்று செய்யப்படும் தொன்னை யையும் கூடச் சேர்ர்துக்கொள்ளலாம். தொன்னை பனைஓலை, தென்னை ஓலை, வாழையிலை, என்பவற்றில் சிறு கிண்ணம் இல்லது பெட்டி போலச் செய்யப்படுவது.மரண வீடுகளில் படையலுக்கு பாவிக்கப்படுவது. நினைவுக்கு வந்தததினால் தெரியப்படுத்துகின்றேன்.
நன்றி!

 

said ... (14 August, 2006 23:53) : 

// பிளா? மண்டையப் பிச்சுக்கொண்டதுதான் மிச்சம்.. என்னண்டு சொல்லுமப்பா.. ஞாபகமே வருதில்ல :O(( //

தவமாய்த் தவமிருந்து படத்தில், ஒரேயொரு ஊருக்குள்ளே
ஒரேயொரு அம்மா அப்பா
பாடலில், ராஜ்கிரன் கஞ்சி குடிக்கும் பாத்திரம் தான் பிளா.
ஆனால் ஈழத்தில் இது பாவிக்கப் படுவது கள் அருந்த.

 

said ... (01 October, 2006 05:52) : 

தகவல் பூர்வமான பதிவு.

'மேல்' என்பது உடம்பைக் குறிக்கும் சொல்லாக கொங்கு வட்டாரத்திலும் அறியப்படுகிறது, ஏற்கனவே சிலர் சொன்னது போல.

 

said ... (02 October, 2006 01:56) : 

மலைநாடான்,
மேலதிக விவரங்களுக்கும் வருகைக்கும் நன்றி.

ஜெயபால்,
பிளா பற்றித் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
பிளா எண்டதும் கள்ளைத்தவிர வேற எதுவும் ஞாபகம் வரமுடியாத அளவுக்கு பிளா பாவிக்கப்படுது.
;-)

 

said ... (04 October, 2006 01:36) : 

Kuppusamy Chellamuthu,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (05 October, 2006 13:26) : 

எழுதிக்கொள்வது: manikandan

அருமையான தகவல்கள். நன்றி.
தமிழ்நாட்டிலும் சுளகு என்று தான் சொல்வார்கள்.

9.17 5.10.2006

 

said ... (07 October, 2006 01:19) : 

மணிகண்டன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (07 October, 2006 02:06) : 

எழுதிக்கொள்வது: இலவசக்கொத்தனார்

வசந்தன், பல நாட்க்களுக்குப் பின் ஒரு வெண்பா பதிவு - http://payananggal.blogspot.com/2006/10/14.html

வந்து பங்கு கொள்ளுங்கள்.

12.34 6.10.2006

 

said ... (07 October, 2006 23:05) : 

கொத்தனார்,
வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி.
நான் எப்போதாவது வெண்பா எழுதியிருக்கிறேனா?
பிழைபிடிப்பது மட்டும்தானே எம்வேலை?
வந்து செய்கிறேன்.
நன்றி.

 

said ... (04 December, 2006 12:58) : 

எழுதிக்கொள்வது: சிந்தாநதி

கடகம்: நாங்கள் கடவம் என்போம். பொதுவில் நார்பெட்டி/ஓலைப்பெட்டி என்றாகி விட்டது
சுளகு: வயதான பாட்டிமார் இப்பவும் 'சுளவு' என்று சொல்லுனும். மற்றபடி 'முறம்'


7.49 4.12.2006

 

said ... (04 December, 2006 23:00) : 

சிந்தாநதி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீண்டகாலத்தின்பின் வந்து கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
மதியின் பதிவிலிருந்து வந்திருக்கிறீர்கள் போலுள்ளது.

 

post a comment

© 2006  Thur Broeders

________________