This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Advertisement
Wednesday, February 07, 2007
எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2
கடந்த கிழமை மெல்பேணில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் மூத்த எழுத்தளார் எஸ்.பொ. அவர்கள் ஆற்றிய உரையை முன்னர் ஒலிவடிவில் பதிவாக்கியிருந்தேன். இப்போது எஸ்.பொ. அவர்களின் மிகுதி ஒலிப்பதிவுகளைப் பதிகிறேன். மூன்று ஒலிப்பதிவுகளும் mp3, rm ஆகிய வடிவங்களில் தரப்பட்டுள்ளன.
அவ்விழாவில் வழங்கப்பட்ட கேள்விபதில் நேரத்தில் எஸ்.பொ.விடம் கேட்கப்பட்ட கேள்விகளைம் அவற்றுக்கான பதில்களையும் முதலிரு பகுதிகளும் கொண்டுள்ளன. இரண்டாவது ஒலிக்கோப்பில், 'பின்னவீனத்துவம், நவீனத்துவம்' போன்ற சொல்லாடல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அச்சொற்கள் வாசகனை வெருட்டி பேப்பட்டம் கட்டவே சிலரால் பாவிக்கப்படுகின்றன" என்று எஸ்.பொ. பதிலளிக்கிறார்.
'கதைத்தல்' தொடர்பில் எனக்கு அண்மையில் ஒரு குழப்பம் வந்தது. இச்சொல்லை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் பயன்படுத்துகிறோம். பேசுதல் என்பதற்கு எம்மிடையே 'திட்டுதல்' என்ற ஒரு பொருளுமுண்டு.
இந்த 'கதைத்தல்' என்பதை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அண்மையில் கேட்ட ஒருபாடல் அக்கருத்தைக் குழப்பிவிட்டது. வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்வருகிறது. 'பார்த்த முதல்நாளே' என்று தொடங்கும் அப்பாடலில் இரண்டாவது சரணத்தில் ஒருவரி வருகிறது இப்படி:
கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒருபெண்ணும் நீதான் கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒருபெண்ணும் நீதான்"
இதில், 'கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்' என்று வரும் வரியில் நாங்கள் பயன்படுத்தும் பொருளில் 'கதைத்தல்' வருகிறது. இது தமிழகத்திலும் இருக்கும் வழக்கா? குறைந்தபட்சம் சில ஊர்களிலாவது பயன்பாட்டிலிருக்கும் சாத்தியமுண்டா? அல்லது ஈழத்தமிழ் வழக்குத்தான் பாடலிற் புகுந்ததா?
பாடலை எழுதியவர் தாமரை என்று நான் கருதுவதால் இரண்டாவது சாத்தியமென்று நம்ப இடமுண்டு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
உச்சரிப்புத் தொடர்பான ஒலிப்பதிவுகளை இணைத்துள்ளேன். இருபகுதிகளாக உள்ள ஒலிக்கோப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஒலிக்கோப்புக்கள் இணைத்துள்ளேன். தரவிறக்கிக் கேட்க இறுதியில் இணைப்புக்கொடுத்துள்ளேன். ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கொண்டே பதிவைப் படிப்பது பயனளிக்கும்.
பகுதி ஒன்று
பகுதி இரண்டு
தமிழ் வலைப்பதிவுகளில் நீண்டகாலமாகவே ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஈழத்தமிழர் அவற்றைப் பலுக்கும் விதம் தொடர்பில் - குறிப்பாக 'ர'கரத்தைச் செருகுதல் தொடர்பாக சர்ச்சைகள், பதிவுகள், பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே நீண்ட பதிவுகள், பலபல பின்னூட்டங்கள் என்று எழுதித் தள்ளியாயிற்று. என்றாலும் சீரான கால இடைவெளியில் யாராவது ஒருவர் இந்தப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்.
எனது முடிபு என்னவென்றால், தமிழில்தான் எங்களுக்குள் வேறுபாடுண்டு. அதுதான் அடிப்படை. அந்த வேறுபாடுதான் பிறமொழிச் சொற்களை தமிழிற் பலுக்கும்போதும் வருகிறது. சரி, தமிழிற் சில சொற்களை நாங்கள் எப்படி உச்சரிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கூடாக ஒரு தெளிவைப் புகுத்த விரும்புகிறேன்.
அதற்குமுன், இதுதான் சரியென்று நான் சொல்லவரவில்லை. சில ஈழத்தவர்களின் பின்னூட்டங்கள் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவை மிகத் தவறானவையென்பதை திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன்.
அதேபோல் ஈழத்தமிழ் என மற்றவர்களால் உணரப்பட்டது பொதுவாக யாழ்ப்பாணத் தமிழே என்பதையும், ஈழத்துள்ளேயே பிரதேசங்களைப்பொறுத்து உச்சரிப்புகள் மாறுபடுமென்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அந்தவகையில் இந்த 'ர'கர சிக்கல்கூட யாழ்ப்பாணத் தமிழருக்குரியதென்று சொல்லிக்கொண்டு மேற்செல்கிறேன். ஆனால் மயூரன் சொன்னதுபோல் 'ர'கர விசயத்தில் திருகோணமலைக்காரர் யாழ்ப்பாணத்தவர் போல் உச்சரிப்பதோ எழுதுவதோ இல்லையென்தை என்னால் இன்றுவரை நம்ப முடியவில்லை. திருகோணமலைக்காரராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட மலைநாடான், பெயரிலி போன்றோர் இப்போதுவரை நான் எழுதுவபோல், - யாழ்ப்பாணத்தார் எழுதுவதுபோற்றான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையோடு ஒத்துப்போதல் என்பதை இதற்குக் காரணமாகச் சொன்னாற்கூட பெயரிலி விசயத்தில் இது சாத்தியமற்றதென்றே நம்புகிறேன்.
யாப்பாணத்தில் 'ர'கர உச்சரிப்பு சிறுவயதிலிருந்து அறுத்து உறுத்துச் சொல்லப்படுமொன்று. இந்த மெல்லின எழுத்தைப் பெரும்பாலான இடங்களில் வல்லின உச்சரிப்பாகவே சொல்வோம். அவ்வுச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். என் பாலர் வகுப்பில் 'ர'கரச் சொற்கள் தனிக்கவனமெடுத்துச் சொல்லித் தரப்பட்டது இப்போது எனக்கு நல்ல ஞாபகம். உறுப்பெழுத்து என்று தனிப்பாடநேரம் ஒதுக்கியது போலவே உச்சரிப்புக்கும் தனிநேரம் ஒதுக்கிச் சொல்லித்தரப்பட்ட நினைவிருக்கிறது. பொதுவாக நான் பார்த்தளவில் இது யாழ்ப்பாணச் சமூகத்தின் மற்ற இடங்களிலும் இருக்கிறது.
இனி சில சொற்களைப் பார்ப்போம். அரசு அரசி அரக்கன் அரி அரிவாள் கரி பரி சரி முரசு பரிசு இரு எரு கரு உரு நெருக்கு நொருக்கு கரும்பு கருத்து
இப்படித்தான் சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்டது. இன்றுவரை நான் பெருமளவுக்கு மாறாமல் அப்படியேதான் உச்சரித்து வருகிறேன். சமகாலத்தவர்களே நிறையப்பேர் ஓரளவு மாறிவிட்டார்கள்.
பலவிடங்களில் தமிழகத்தாருக்கும் ஈழத்தாருக்கும் வித்தியாசமேயில்லாமலும் 'ர'கரம் உச்சரிக்கப்படுகிறது. ராணி என்ற பேரை நான் இன்றுவரை வல்லின உச்சரிப்பிலேயே சொல்லிவருகிறேன். ஆனால் மிகப்பெரும்பான்மையானோர் (வயது முதிர்ந்தவர்களையும் கிராமத்தார்களையும்விட) இடையின ஒலியில் (Rani) என்றுதான் சொல்கிறார்கள். இதுபோல்தான் ரவி என்ற பெயரும். ரோசா என்ற பூவின் பெயரை எப்படி எழுதுகிறீர்கள், உச்சரிக்கிறீர்கள் என்று பார்த்தால் இருதரப்புமே ஒரேமாதிரித்தான்.
'ர'கர, 'ற'கர உச்சரிப்பைப் பொறுத்தவரை இரண்டு எழுத்துக்குமே தமிழகத்தில் ஓரளவுக்கு ஒரேமாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை நேரிலும் உணர்ந்துள்ளேன். கிளிநொச்சியில் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த சில தமிழறிஞர்கள் சிலரோடு உரையாடியபோது ர, ற போன்ற எழுத்துக்களைக் குறிக்க அவர்கள் சின்ன ற பெரிய ற என்று பல சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். எங்களிடத்தில் இரண்டெழுத்துக்களையும் இப்படி வேறுபடுத்தும் முறை இல்லவேயில்லை.
அதனால்தானோ என்னவோ வலைப்பதிவுகளில் நான் கவனித்தளவில், அக்கறை - அக்கரை, பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு, பறவாயில்லை - பரவாயில்லை என்பவற்றுக்கு ஈழத்தவர்கள் தெளிவான உச்சரிப்பு வித்தியாசம் வைத்திருப்பதால் மேற்கண்ட தவறுகளைச் செய்யாமலிருக்க, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தொடர்ச்சியாக இச்சொற்கள் மட்டில் தவறாகவே எழுதிக்கொண்டிருக்கும் நிலை உள்ளதென்று நினைக்கிறேன். இது என் அவதானம் மட்டுமே.
அடிப்படையில் தமிழில் 'ர' கரத்தில் இருக்கும் இந்த உச்சரிப்புப் பேதம் தான் வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் வருகிறது. பொதுவாக நாங்கள் 'ர' வரிசை உயிர் மெய்களுக்கு ஆங்கிலத்தின் T என்ற உச்சரிப்பைக் கொண்டிருப்பதாலும் அதையே நியம உச்சரிப்பாகக் கருதுவதாலும் 'ர'கரத்தைப் போட்டு எழுதுகிறோம். அதனால்தான் ரிவி, ரின், ரொறண்ரோ, ரிக்கற், ரொம் குறூஸ் என்பவற்றை இடையினத்திலேயே தொடக்கி எழுதுகிறோம். ஆனால் வல்லினத்தில் உச்சரிக்கிறோம். இப்படி எழுதியவற்றை வாசிக்கும்படி தமிழகத்தாரிடம் சொன்னால், அவர்கள் வேறுமாதிரித்தான் உச்சரிப்பார்கள்.
ஆகவே தமிழில் எழுதிய ஒன்றை உச்சரிப்பதில்தான் இருதரப்புக்குமிடையில் வேறுபாடுண்டு.
யாழ்ப்பாணத்தவர் ரிவி என்று எழுவதை தமிழகத்தவர்கள் Reevi என்று உச்சரிப்பார்கள். தமிழகத்தவர்கள் டிவி என்று எழுதுவதை நாங்கள் DV என்றுதான் உச்சரிப்போம். ஆனால் இன்று அவர்களும் DV என்றுதான் உச்சரிக்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் TV ஐ எப்படி உச்சரிக்கார்கள் என்று கூர்ந்து பார்த்தால் எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. Sun TV என்றா Sun DV என்றா உச்சரிக்கிறார்கள்? ______________________________ இவ்வளவும் போதுமென்று நினைக்கிறேன். இங்கு, யாழ்ப்பாணத்தவர் சில சொற்களை எப்படி உச்சரிக்கார்கள், எப்படி உச்சரிக்கப் பழக்கப்பட்டார்கள், அதன்வழியே T என்ற வல்லின உச்சரிப்புக்குரிய நியம வரிவடிவமாக எதைக் கருதுகிறார்கள் என்தையும் ஒலிக்கோப்பைப் பயன்படுத்திச் சொல்லியுள்ளேன்.
• 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.
வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டபோது அதில் 68.12 விழுக்காடு இரும்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதேபோன்ற இரும்பு உலை; கசடுகள் முறிகண்டி- அக்கராயன் சாலையோரம், கோணாவிலில் அக்கராயன் கழிவாறின் கரையோரம், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் கோட்டைகட்டினகுளம் என்பவற்றிலும் கொக்காவிலிpலும் காணப்படுகின்றன. கொக்காவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உருக்குலைப் பகுதிகள் A-9 சாலை புனரமைப்புக்காக கிரவல் மண் அள்ளப்பட்டவேளையில் அழிக்கப்பட்டுவிட்டன. ஏனைய உலைகள் அப்படியே உள்ளன. இரும்பு உருக்குலைப்பகுதிகள் காலக்கணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் பெறுபேறு இந்த உலை கி.மு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தது.
இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி மிகத்தொன்மையான இரும்பு உருக்குலை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரும்பு உருக்கு உலையே சிங்கள வலராறு கூறும் விஜயன் வருகை என்பதற்கு முன்பாகவே இலங்கைத்தீவில் மனிதர்கள் வாழ்ந்து வேளாண்மை, மந்தைமேய்ப்பு, இரும்புப்பயன்பாடு என்பவற்றை மேற்கொண்டிருந்தனர் என்ற அறிக்கையை ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்கள முன்னாள் ஆணையாளர் S.U.தெரனியகலையினை வெளியிடச்செய்தது.
இதைவிட 3000 ஆண்டுகள்வரை தொன்மையான புத்தளம் பொம்பரிப்பு முதுமக்கள் தாளிகளில் எடுக்கப்பட்ட இரும்புப் பாகங்களும்இத்தீவில் இரும்புப் பயன்பாட்டை உறுதிசெய்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பூநகரியில் மேலாய்வு மேற்கொள்ளப்பட்டு இரும்பு உருவாக்கங்கள் எடுக்கப்பட்டபோதிலும் அவை காலக்கணிப்பு மூலம் இதுவரை காலம் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் அக்கராயனில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உலை காபன்-14 கதிரியக்க காலக்கணிப்பு செய்யப்பட்டு அது கி.மு 1300 ஆண்டுகள் தொன்மையானது என அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவீன அறிவியல் உலகில் தொல்லியல் சான்றுகள் காலக்கணிப்பு மூலம் உறுதி செய்யப்படும்போதே அவை அங்கீகரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டு காலக்கணிப்பு முறைகள் தொல்லியல் என்ற அறிவியல் துறையில் ஏற்புடையதாக்கப்படுவதில்லை. அந்த ரீதியில் அக்கராயன் இரும்பு உலை அறிவியல் மூலம் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழரின் பெருங்கற்காலம் எனப்படும் (கி.மு.0 முதல் 1000 வரையான) காலம் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. பெருங்கற்காலத்திலேயே தமிழர்கள் இரும்பினைப் பயன்படுத்தியதால் இது இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய இரும்பு உலைகள் தமிழர் தாயகத்தில் இருப்பதான விடயங்கள் ஆதாரபூர்வமாக இதற்குமுன்னர் வெளிவரவில்லை. ஆதாரபூர்வமாக காலக்கணிப்புடன் தமிழர் தயாகத்தில் இரும்பு உலைகள் பற்றிய விடயம் வெளியாவது இதுவே முதல் தடவையாகும்.
தமிழர் தாயகத்தில் இரும்புத்தாது திருக்கோணமலையின் சேருவலையில் உள்ளது. இந்த இரும்புத்தாதுதான் தமிழர்தாயக இரும்பு உலைகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. ஏனெனில் சேருவிலை இரும்புத்தாது இன்னமும் பயன்படுத்தாத நிலையில்தான் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அது வந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தொழில் நுட்பங்கள் எல்லாமே ஒரே இடத்தில் தோன்றின என அடிப்படை வாதம் பேசினால் அதுவே உண்மை வரலாறின் தவறாகும். ஆக எமக்கு இரும்பு நுட்பம் வேறொங்கோ இருந்தே கிடைத்திருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டில் வருகைபுரிந்த பிரிட்டிஸ் பயணியான “றொபேட் நொக்ஸ்” ;தான் இத்தீவில் பாரம்பரிய இரும்பு உருக்கு உலைகளை கண்டதாகவும் கூறி அதன் நுட்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். நவீனத்துவம் வரும்வரை இப்பாரம்பரிய உருக்குலைகள் இத்தீவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் தயாகத்திலும் மூத்த இரும்பு உருக்குலைகள் உள்ளன. இதனை வன்னி இரும்பு உருக்குலைகள் எடுத்துக்கூறுகின்றன.
-தி. தவபாலன்- _____________________________________ மூலப் பதிப்பு
நன்றி: எரிமலை. _____________________________________ இது பற்றி ஏற்கனவே வன்னியன் எழுதிய பதிவொன்று:
எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம். மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.
இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன். நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன். 'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' எண்டு போன பதிவில எழுதினன். இப்ப வேற ஒரு 'எப்படி?ப்' பதிவு.
பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே. _____________________________________
உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா? அதைப் பார்த்திருக்கிறீர்களா? மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.
சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.
ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல. ---------------------------------------------------- ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.
நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு. ------------------------------------------------------ சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.
இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு??? ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ. *************** மூலப்பதிவு ***************
மட்டுநகர் தயிர் எடுத்து வளைஞ்சு நெளிஞ்சு வாடி -என் உயிரை பிடித்து உறைய வைத்து உறியில் வைத்து போடி மண்பானை தயிர் கனக்கும் என் நெஞ்சு துடிக்கும் சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா? கண்டி குளிரிலதான் கைகால் விறைக்குதடி கொஞ்சம் சூடேத்த நெஞ்சு நினைக்குதடி
முல்லைத்தீவு போவோம் முயலிரண்டு பிடிப்போம் நீமூச்சிழுக்கும் நேரம் நான் பேச்சிழந்து போவேன்
பனங்காய் ...பணியாரமே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தரவிறக்க மூன்று இணைப்புக்கள் தந்துள்ளேன். ஏதாவதொன்று சரிவரும்.
யோகனின் கடகம் பற்றிய விகடனுக்கான விளக்கமும் அதைத்தொடர்ந்த பதிவும் பின்னூட்டங்களும் யோகனின் வலைப்பதிவுத் தொடக்கமும் என்று கடந்த நாலைந்து நாட்களாக வலைப்பதிவில் கடகம் பற்றிய கதை கொஞ்சம் பரவலாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் நான் என் கருத்தைச் சொல்லிவிட்டாலும் கடகம் போன்ற ஒன்றைப் படமாக வெளியிடுவதால் தனிப்பதிவொன்று போடலாம் என்று தோன்றியதே இப்பதிவு. ஏற்கனவே "கடகத்துட் குழந்தை" என்ற தலைப்பில் என்னால் பதியப்பட்டதே இப்படம். படத்திலிருப்பது கடகமா பெட்டியா என்று சொல்லுங்கள்.
எனக்குத் தெரிந்த பனம்பொருட்கள் பற்றி சிறுகுறிப்பைத் தரலாமென்று நினைக்கிறேன். பல சொற்களை ஞாபகப்படுத்தலாமென்பதோடு பின்னூட்டங்களில் சில விசயங்களை அறிந்துகொள்ளலாம் என்பதும் காரணம்.
கடகம்: பதிவிலும் பின்னூட்டங்களிலும் நான் பலவிடயங்களைத் தெரிந்துகொண்டேன். இப்போதும் கடகம் இழைக்கப்படுவது ஓலையாலா நாராலா என்று திட்டவட்டமாக முடிவுக்கு வரமுடியவில்லை. கண்ணை மூடி யோசித்தால் இரண்டுமே சரிபோலத் தெரிகிறது. ஆனால் ஓலையின் பக்கம் தராசு சாய்கிறது.
கடகம் கட்டாயமாக நியம அளவொன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அதுவோர் அளவுகருவி. கல், மணல், மண், ஊரி, சல்லிக்கல் என்பன முதற்கொண்டு பலபொருட்கள் இவற்றால் அளக்கப்படுகின்றன. அளவுகள் பற்றி யோகன் அளித்த தகவல்: // சாதாரண விற்பனைக்குரிய கடகங்கள்;சுமார் 18 அங்குல வாய்விட்டம் ;9 அங்குல உயரம்; அடியின் அமைப்பு 4 மூலை வைத்த சதுரமாக இருக்கும். இதை நார்ச் சிக்கனம் கருதி முதல் சற்று முற்றிய (குருத்திலிருந்து 2ம்;3ம் சுற்றில் வரும் ஓலை)பனையோலையில் ஐதாக இழைத்து விட்டு.பின் வெளிப்பகுதிக்கு பனை நாரால் இழைக்கும் போது; பலம் பெறும்; இறுதியாக வாய்ப்பக்கத்திற்கு சுமார் 2 அங்குல அகலத்தில் சுற்றி சற்றுத் தடிப்பன வாராத நாரை வைத்து பனையீக்கினால் கட்டுவார்கள். 5 கடகங்கள் உள்ள ஒரு கட்டுக் கடகங்களை ஒரு சேர்வை கடகம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்வார்கள்; ஒரு வீடுகட்டுமான வேலைக்கு; 2 சேர்வை கடகம் வாங்குவோம்; குளத்துமண் தோட்டத்துக்கு ஏற்றும் போது சுமார் 20 கூலிகள் வேலை செய்யும் போது 4 சேர்வை தேவை. அந்த நாட்களில் சாதாரணமாக ஒரு வீட்டில் குறைந்தது 3 கடகங்கள் பாவனையில் இருக்கும்! ஒரு பழங் கடகம் குப்பை கூளம் அள்ள; அடுத்தது சந்தைக்குக் கொண்டு செல்வது; 3 வது மிகப் பவுத்திரமானது. சாமியறையில் இருக்கும் சமய சம்பந்தமான காரியங்களுக்காக!கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் போது சாமான் காவவும்; பின் பொங்கலுடன் பானை சுமக்கவும்; இந்தப் புனித கடகம் பாவிக்கப்படும். ஆண்டுக்கு ஐந்தாறு தடவை சுவாமியறையை விட்டு வெளியே வரும். அப்பபோ பாவனைக்கு முதல் கழுவிக் காயவைக்கும் பழக்கமும் உண்டு. கட்டாயமும் கூட. //
நானறிந்த அளவில் கடகங்களின் அளவைப்பொறுத்து இரு வகையானவையுண்டு. சிறிய கடகம், பெரிய கடகம். ஒருமுறை எங்கள் ஊர்க் கடற்கரையிலுள்ள கோவிலொன்றில் சுற்றுப்பிரகாரம் கட்டும் வேலை நடந்தது. இரண்டு தொழிலாளிகள் செய்தார்கள். சீமெந்து, மணல், ஊரி கலந்து அச்சுற்றுப்பிரகாரம் செய்யப்பட்டது. அப்போது மணலையும் ஊரியையும் கொண்டுவந்து கொட்டுவதை எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் பொறுப்பெடுத்தனர். அதை எண்ணும்படி பங்குத்தந்தையால் நான் பணிக்கப்பட்டேன். (அப்போது பதினொரு வயது) பெரிய கடகத்தில் 30 கடகம் மணலும் சிறிய கடகத்தில் 30 கடகம் ஊரியும் கொண்டுவந்து கொட்ட வேண்டும். மணலில் சிறுகுச்சியால் கோடுபோட்டு எண்ணிக்கொண்டிருந்தேன். தொடக்கத்தில் சரியாகத்தான் இருந்தது. ஒருவர் மணல் கொண்டுவந்து கொட்ட மற்றவர் ஊரி கொண்டுவந்து கொட்டினார். இறுதிவரை ஆட்கள் மாறவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் கொண்டுவரும் கடகம் மாறிவிட்டது. சிறியகடகத்தில் மணலும் பெரிய கடகத்தில் ஊரியும் வந்தன. மணல் சற்று எட்டவாகவும் ஊரி பக்கத்திலும் இருந்தது அதற்குக் காரணம். இருபதாவது கடகத்தில் கையும் கடளவுமாகப் பிடித்ததோடு சுவாமியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் எத்தனையாவது கடகத்தில் இந்த மாற்றம் நடந்ததென்று தெரியவில்லை. அதில் இருவர் இரண்டு கடகங்களின் கனவளவுகளைக் கொண்டு கணித்து மிகுதியைச் சரிசெய்து விடப்பார்த்தனர். எத்தனையாவது கடகத்தில் மாற்றம் வந்ததென்று சரியாகத் தெரியாததால் கொட்டியவற்றை மீண்டும் அளந்து பக்கத்தில் குவிக்கவேண்டியாகிவிட்டது.
ஏன் சொல்கிறேனென்றால் கடகங்களில் இரு அளவுகள் இருந்ததாக நான் நினைப்பதற்கு இதுவொரு காரணம். உண்மையில் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
யோகன் சொல்வது போல எங்கள் வீட்டில் கூட்டிய குப்பையை அள்ள பழைய கடகமொன்றுதான் பாவிக்கப்பட்டது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெட்டிகள்: இவை முழுக்க முழுக்க பனையோலையாலும் ஈர்க்காலும் செய்யப்படுபவை. பனையோலை என்று சொன்னாலும் 'சார்வு' எனப்படும் முற்றாக விரியாத இளம் ஓலையைக் கொண்டே இவை செய்யப்படுகின்றன. மிகச்சிறிய பெட்டிகள் முதற்கொண்டு பெரிய பெட்டிகள் வரை உள்ளன. கோழிச்சாயத்தால் நிறமூட்டப்பட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள்கூட செய்யப்பட்டிருக்கும். மிகக்கச்சிதமாகப் பொருந்தக் கூடிய மூடிகளோடுகூட ஓலைப்பெட்டிகளுண்டு. எங்கள் ஊரில் அதிகாலையில் வீடுகளுக்குச் சென்று இடியப்பம், தோசை, அப்பம், சம்பல் விற்கும் ஆச்சி ஒவ்வொன்றுக்கும் விதம்விதமான சிறிய பெட்டிகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு, சுருட்டு, புகையிலை போன்றவற்றை வைத்திருப்பதற்கும் பெட்டியுண்டு. (கொட்டைப் பெட்டி : நன்றி ஜெயபால்). சந்தையில் பணம்போட்டு வைப்பதற்கு சிறிய ஓலைப்பெட்டிகளைப் பாவிப்பதைப் பெருமளவிற் காணலாம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீத்துப்பெட்டி: (எழுதும்போது நீர்த்துப்பெட்டி எனப்தே சரியென்று நினைக்கிறேன்). இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெரும்பாலும் பிட்டவிப்பதற்கும் அவ்வப்போது மா அவிப்பதற்கும் பாவிக்கப்படுகிறது. நீராவியில் அவிக்கும் பண்டங்களை இதில் வைத்து அவிக்கலாம். (இட்லியை வைக்கலாமா என்று கேட்காதீர்கள்;-)) இதுவும் பெரும்பாலும் நியம அளவொன்றைக் கொண்டிருக்கும். கூம்பு வடிவில் இழைக்கப்பட்டிருக்கும். கூம்பின் முனைப்பக்கம் கீழ்நிற்கத்தக்கவாறு நீருள்ள பானையுள் வைத்தால் அரைவாசி நீத்துப்பெட்டி உள்ளேயும் அரைவாசி பானைக்கு வெளியேயும் இருக்கத்தக்கதாக பானையில் விளிம்பில் பெட்டி பொருந்தி நிற்கும். நீத்துப்பெட்டி தொடாதவாறு பானையில் நீர் இருக்க வேண்டும். பிடித்துத் தூக்கத் தக்கதாக இரண்டு செவிகள் வைத்து இழைக்கப்பட்டிருக்கும். பத்துப்பேருக்குள் என்றால்தான் நீத்துப்பெட்டி கட்டுப்படியாகும். அதைவிட அதிகமென்றால் வேறுவழிதான். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குட்டான்: இதுபற்றியும் ஏற்கனவே பின்னூட்டங்களில் கதைக்கபட்டுவிட்டது. பனையோலையால் செய்யப்படும் ஓர் உருளை என்று சொல்லலாம். மிகச்சிறிய அளவிற்கூட குட்டான் செய்வது எனக்கு ஆச்சரியம். நாங்கள் குட்டானைப் பாவிக்கும் ஒரே இடம் பனங்கட்டிக்காகத்தான். (வேறு ஏதாவது இருக்கிறதா?) பனங்கட்டிக்குட்டான் என்று சிறுவயதில் சொல்லத் தொடங்கி இடையில் அதற்காக நக்கலடிபட்டு இப்போது பனங்குட்டான் என்று மட்டுமே சொல்கிறேன். பனங்கட்டி காய்ச்சுவது, குட்டான் இழைப்பது பற்றி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்படும் சஞ்சிகையான "அதாரத்தில்" ஒரு கட்டுரை வாசித்தேன். அதன்படி, பனங்கட்டி காய்ச்சும் தொழில் அருகிவருகிறது. பனங்கட்டி காய்ச்சுவது சுலபமானதில்லை. எந்த நவீன வசதிகளோ அளவுகருவிகளோ இன்றி குடிசைக்கைத் தொழிலாகவே இருந்துவிட்டது. இதற்கு மிகுந்த கைப்பக்குவம் தேவை.பதம் சற்றுப்பிசகினாற்கூட விற்கமுடியாதபடி வந்துவிடும். இதையொரு குலத்தொழில் என்றே பலர் கருதுகின்றனர். இத்தொழில் நுட்பங்கள் வெளியில் பரவுவதில்லை. கட்டுரையாசிரியர் பனங்கட்டி காய்ச்சுவதை நேரில் பார்ப்பதற்காக மிகுந்த கஸ்டப்பட்டுள்ளார். எல்லோரும் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. காய்ச்சும் வெப்பநிலை அளவுகள், நேர அளவுகள், கலவை அளவுகள் என்பன சம்பந்தப்பட்ட தொழிலாளின் பட்டறிவுகள் தானேயன்றி தரவு வடிவில் எவையுமில்லை. காய்ச்சுவதற்கு தேர்ந்தெடுக்கும் விறகு முதற்கொண்டு எல்லாவற்றிலும் நுணுக்கமாக இருக்கிறார்கள். சரியான வெப்பத்தில் காய்ச்ச வேண்டும். எல்லாவற்றிலும் உச்சக்கட்டம் இறக்கும் பதம்தான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் குட்டானில் ஊற்ற முடியாதது மட்டுமன்றி, அதன் சுவையும் மாறிவிடுமாம். இத்தொழில் விரிவுபடுத்தப்படாவிட்டால் இன்னும் இரண்டு சந்ததியுடன் அருகிவிடுமென்று எச்சரிக்கப்படுகிறது.
பனங்கட்டிகளும் அதன் தயாரிப்பிடத்தைப்பொறுத்து மதிப்பு ஏறி இறங்குகிறது. மடு ஆலயத்திருவிழாவில் பனங்கட்டியும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. சிங்களவரின் கித்துல் வெல்லமும் தமிழர்களின் பனங்குட்டான்களும் பரிமாறுகின்றன.
யாழ்ப்பாணத்திலும் சரி, வன்னியிலும் சரி தேனீருக்குக்கூட சீனியில்லாத நிலைமைகள் பலதடவை வந்துள்ளன. அந்நேரத்தில் சிறிதளவு சினியை ஓர் உள்ளங்கையில் வைத்து நக்கிநக்கித் தேனீர் குடிப்போம். அந்தளவுகூட சீனியில்லாத நாட்களில் ஓர் இனிப்பை வாயில் வைத்துக்கொண்டு குடிப்போம். அல்லது சிறு சக்கரைத் துண்டோடு குடிப்போம். இப்படிக்குடிப்பதை "நக்குத்தண்ணி" என்று நாம் அழைப்பதுண்டு. பருவகாலங்கள் மாறிமாறி வருவதைப்போல இப்படியான காலமும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்.
வன்னியில் அடிக்கடி இப்படி நிலைமை வரும். எல்லாம் அரசின் கைகளில்தான் இருந்தது. அரசு நினைத்தநேரத்தில் எந்தப்பொருளையும் நிப்பாட்டும். யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மட்டும் சீனிபோட்டுத் தேனீர் கொடுக்ப்பது வழக்கமாக இருந்தது. வன்னியில் அதுவும் தகர்ந்தது. நக்குத்தண்ணிக் காலங்களில் வீடுகளுக்குப் போனால் நக்குத்தண்ணியே தரச்சொல்லி விருந்தினரே சொல்லவிடுவார்.
இதை எதிர்கொள்ள புலிகள் உள்நாட்டு உற்பத்தியாக பனஞ்சீனித் தயாரிப்பை ஊக்குவித்து வழங்கினார்கள். தட்டுப்பாடற்ற முறையில் குறைந்த விலையில் பனஞ்சீனி வழங்கினாலும் யாழ்ப்பாணத்தில் எங்கள் மக்கள் நடந்துகொண்ட முறை சுவாரசியமானது. கறுப்புச்சீனி பாவிப்பது கெளரவக்குறைச்சலாகக் கருதிய மேற்தட்டு, நடுத்தட்டு (பெரும்பாலும் மணியோடர் போருளாதார வர்க்கம்) கூடுதல் காசு கொடுத்து வெள்ளைச்சீனி வாங்கும், அல்லது குடித்தால் வெள்ளைச்சீனி அல்லது ஒன்றுமில்லை என்று இருக்கும். படித்த வர்க்கம் தானே, புரிந்துகொள்ளும் என்று நினைத்தோ என்னவோ, கரும்புச்சீனியையும் பனஞ்சீனியையும் ஒப்பிட்டு பனஞ்சீனியின் அதிக பலனை விஞ்ஞான ரீதியாக மக்களிடத்தில் சேர்க்க மருதுத்துவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பிரச்சாரம்கூட செய்தார்கள். பீட்ரூட்டில் சர்க்கரைத் தாயரிப்பில்கூட பெருவெற்றியடைந்தது தமிழீழப்பொருண்மியம். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு போகத்திலேயே மகத்தான தோல்வியை வழங்கினார்கள் எங்கள் மக்கள். இறுதியில் வன்னியிலிருந்து யாழ்பபாணத்துக்கு விறகு இறக்கிய செலவுகூட எடுக்காமல் பனஞ்சீனித் திட்டம் யாழ்ப்பாணத்தில் தோல்வியில் முடிந்தது. (இதுபற்றி இங்கு அதிகம் தேவையில்லை. திசை மாறிவிடும்)
வன்னியில் சீனிக்கு மாற்று ஏற்பாடாக பனங்கட்டி உற்பத்திபற்றி அதிக கரிசனை எடுக்கப்பட்டது. அப்போதுதான் இத்தொழிலை பெருமெடுப்பில் செய்யமுடியாத நிலை உணரப்பட்டது. இந்நுட்பத்தைப் பெற்றுப் பரவலாக்கி தன்னிறைவடைய முயன்றார்கள். வெற்றியளித்ததா தெரியவில்லை. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாய்கள்: பனையோலைப் பாய் பற்றித் தெரியாதவர்கள் உண்டா? தனியே படுப்பதற்கு மட்டுமன்றி பல தேவைகளுக்கும் பனம்பாய் பாவிக்கப்படுகிறது. எங்கள்வீட்டில் 15 x 25 அடியில் பெரிய பனம்பாயொன்று இருந்தது. இடையில் பனஞ்சிலாகை வைத்துச் சுருட்டி தீராந்தியில் போட்டுவிடுவோம். அக்கம்பக்கத்தில் ஏதும் விசேசமென்றால் அந்தப்பாய்க்கு வேலை வந்துவிடும். பாயிலும் இடையிடையே கோழிச்சாயம் போட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள் இருக்கும். ஓர் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் தொடக்கம் கால் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் வரை பல்வேறு அளவுகள் கொண்ட ஓலைகளால் பாய்கள் செய்யப்பட்டிருக்கும். வயது போனவர்கள் சிலர் பொழுதுபோக்காக இப்படி பாய் இழைப்பார்கள். பினாட்டு (பனாட்டு) போடவென்று நல்ல நெருக்கமாக பாய் இழைப்பார்கள். ஊரில் எங்கள் வீட்டில் தொடர்ந்து பினாட்டுப் போடுவோம். போட்ட பினாட்டை பாயிலிருந்து எடுப்பது ஒரு கலை. கிழியாமல் எடுக்கவேண்டும். ஒரேபாயில் நான்கு, ஐந்து முறைகூட பனாட்டுப் போட்டிருக்கிறோம். பின்பொருநாள் நண்பர்களுடன் சேர்ந்திருந்தபோது பனாட்டுப் போட்டோம். இறுதியில் பனாட்டைக் கழற்றும்போது தோல்விதான். பாயோடு சேர்த்து சதுரம் சதுரமாக வெட்டிவைத்துவிட்டோம். சாப்பிடும்போது அவரவரே பாய்த்துண்டை உரித்துச் சாப்பிடவேண்டியதுதான்.
பெரிய சமையல்களில் சோறு பரப்ப பனம்பாய்தான் அதிகம் பாவிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருகணை/திருகணி: பேச்சுவழக்கில் திருகணி என்றுதான் எங்கள் பக்கம் சொல்வார்கள். சட்டி, பானை, தாச்சி என்பவற்றை இதன்மேல் வைப்போம். தனியே பனை ஈர்க்கால் மட்டும் செய்யப்பட்டவையுள்ளன. தும்புக்கயிறினால் செய்யப்பட்டவையுமுள்ளன. 'உறி' தெரியும்தானே? கள்ளத்தீனி தின்னும் என்னைப்போன்றவர்களுக்கு எப்போதும் பிடித்தது. இதுவும் பனை ஈர்க்கால் செய்யப்படுவதுதான். என்னுடைய அம்மம்மாவீட்டில் நான் தேடுவது உறியைத்தான். அனேகமாக பொரித்த மீனோ, இறாலோ, கணவாயோ எனக்காகப் பதுக்கப்பட்டிருக்கும்.
ஒரு சந்தையில் திருகணை விற்கும்போது பார்த்தேன். அதற்குக்கூட நிறச்சாயம் போட்ட ஈர்க்கால் அழகுவேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். கரிபூசப்படப்போகும் திருகணைக்கு வண்ண அலங்காரம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓலைத் தொப்பிகள், விசிறிகள்: பனையோலைத் தொப்பிகளும் விசிறிகளும் நல்ல பிரச்சித்தம். ஆடம்பரப்பொருட்களாகவே இவை மாறிவிட்டன. யாழ்ப்பாணத்தில் ஒரு நேரத்தில் (93,94) பெண்களின் மிகவிருப்புக்குரிய கவர்ச்சிப்பொருளாக ஓலைத்தொப்பி இருந்தது. துவிற்சக்கர வண்டி வைத்திருப்பவர்கள் இத்தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு போவது அந்நேரத்தில் பெரிய கவர்ச்சி. ஏதோ எங்கள் பெண்கள் வெயிலில் கறுக்காமல் இருக்கிறார்களே என்று பெருமூச்சுவிட்டால் கொஞ்சநாளின்பின் அதை ஹாண்டில் பாரில் முன்பக்கமாக கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போவது பெரிய கவர்ச்சிப் பாணியாக மாறிவிட்டது. யாராவது இளைய வலைப்பதிவாளர்களுக்கு இக்காலம் ஞாபகம் வருகிறதா? ஆண்பிள்ளைகள் ஓலைத்தொப்பி போடுவதை நினைத்துப்பாருங்கள். ஆனால் வெயில்காலத்தில் ஓலைத்தொப்பி மிகஉன்னதமானது.
மன்னார் மாவட்டத்தின் மடுத்திருவிழாவுக்குச் சென்றால் ஓலைத்தொப்பி, ஓலை விசிறி, சுளகு உள்ளிட்ட பனம்பொருட்களின் என்பவற்றின் விற்பனை தெரியும். விதம்விதமான வண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஓலைத்தொப்பிகள், விசிறிகள் விற்கப்படும். ஒரே மாதிரி வண்ணத்தில் தொப்பி போட்டுக்கொண்டு கூட்டமாகத் திரிவார்கள். ஆனால் விலை கடுமையாகவே இருக்கும். கிட்டத்தட்ட கொழும்பு விலை விற்பார்கள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுளகு: இதை தமிழகத்தில் எப்படிச் சொல்வார்கள்? பெரும்பாலும் அரிசி பிடைக்கப் பாவிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் வீட்டில் புட்டு கொத்துவது தொடக்கம் பல தேவைகளுக்குப் பாவிக்கப்படும். குசினி வெளிப்படிகளில் நின்று அரிசி பிடைக்க, முன்னால் கோழிகள் சண்டைபோட்டுக்கொண்டு "ஆ"வென்று காத்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது சுவாரசியம்தான். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பட்டம்: பனைநார் கொண்டு பட்டங்கள் செய்வோம். கொக்கன், பிராந்தன், பெட்டி, எட்டுமூலை, பாம்பன் என்று பலவிதப் பட்டங்கள். வெளவால் பட்டத்துக்கு தென்னை ஈர்க்குப் போதும். பெரிய பட்டங்களுக்குப் பனைநார் நல்லது. யாழ்ப்பாணத்துக்குள்ளேயே பட்டமே முக்கிய பொழுதுபோக்காகக் கொண்ட ஊர்களும், பாடப்புத்தகத்தில் அறிந்ததோடு தொடர்பு முடிந்த ஊர்களும் உள்ளன. இடம்பெயர்ந்து வந்திருந்த ஓரிடத்தில் பிராந்தன் பட்டம் ஏற்றியபோது, 'அதெப்படி வாலில்லாமல் பட்டம் பறக்கிறது?' என்று ஆச்சரியப்பட்ட மக்களைப் பார்த்திருக்கிறேன். மின்விளக்குகள் பூட்டி பட்டங்கள் பறக்கிவிடுவதெல்லாம் இப்போது கனவுபோலத்தான் தெரிகிறது. பத்துவயதில் (இந்திய இராணுவ காலம்) வீட்டுக்குத் தெரியாமல் இன்னொருவரோடு பலமைல்கள் சைக்கிளில் போய், அதுவும் காங்கேசன்துறைப் படைமுகாம் கடந்து மயிலிட்டி வந்து பட்டம் வாங்கிச் சென்றது (வீட்டாரைப் பொறுத்தவரை இது உயிரைப் பணயம் வைக்கும் வேலை. இளங்கன்று பயமறியாது என்பது "இந்த" விசயத்தில் உண்மை) உட்பட பல இனிய ஞாபங்களுள்ளன. 89 இல் வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வானம் தெரியாமல் பறந்துகொண்டிருந்த விதம் விதமான பட்டங்களின் காட்சி இன்றும் பசுமையாகவே உள்ளது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனையீர்க்கு: பனையீர்க்கு பலவிதங்களில் பயன்படுகிறது. தனியே ஈர்க்கு என்று பார்தால் கிடுகு வேய்வதற்கு (பேச்சில் மேய்தல் என்றும் சொல்வதுண்டு) பனையீர்க்குத்தான் அதிகம் பாவிக்கப்படுகிறது. நீரில் ஊறப்போட்டுப் பாவிப்போம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனையோலையில் செய்யப்படும் முக்கிய பொருள் பிளா. இதுபற்றிச் சொல்லத்தேவையில்லை;-) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்போது உடனே ஞாபகம் வந்தது இவைதாம். வேறு என்ன முக்கியபொருட்கள்?
****உடம்பைக் குறிக்க "மேல்" என்ற சொல்லை நாங்கள் பாவிக்கிறோம். ஈழத்தார் அனைவரும் பாவிப்பதாக நினைக்கிறேன். சரியா? இச்சொல்லை தமிழத்தார் பாவிக்கிறார்களா? இது எப்படி வந்தது? 'மெய்'யிலிருந்து வந்திருப்பதாகத் தெரியவில்லை. 'மேனி'யிலிருந்து???
முசுப்பாத்தி... இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு: நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது. 'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'. 'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.
இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.
முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary) முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி. சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.
'ஈழத்தமிழ்' என இன்று அறியப்படுவது பெருமளவு யாழ்ப்பாணத்தமிழையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஈழத்தின் வேறுபட்ட பாகங்களிடையில் மொழிப்பாவனையென்பது வேறுபட்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்தமிழில் வினவும் போது ‘ஏ’கார ‘ஓ’கார வினாவெழுத்துக்கள் இறுதியில் வரும்வண்ணம் கேள்விகள் கேட்கும் பழக்கமே அதிகமுண்டு. தமிழகத்தைப் போல் ‘ஆ'காரம் இறுதியில் வினாவெழுத்தாக வருவது (கொஞ்சக் காலத்துக்கு முதல்) மிகமிகக் குறைவு. எடுத்துக்காட்டுக்கள்: வருவியே? போவியே? சாப்பிட்டனியே? கடிதம் போட்டனியே? வருவியோ? போவியோ? கூப்பிட்டனியோ? சொன்னனியோ?...
வருவியா? போவியா? சொன்னாயா? போன்ற ஆகார வினாவெழுத்துக்கள் இறுதியில் வரும்படி கதைப்பது (முன்பு) குறைவு. இராம.கி. ஐயா குறிப்பிட்டதைப் போல 'உ'கரச் சுட்டெழுத்து மிக அதிகமான பாவனையிலுள்ளது.
ஆனால் இப்போது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது. சென்ற வருடம் நான் யாழ் சென்றபோது, (கிட்டத்தட்ட 9 வருடங்களின் பின்) இந்த 'ஏ'கார 'ஓ'கார வினையெழுத்துக்கள் குன்றி 'ஆ'கார வினாவெழுத்துக்கள் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட தோற்றப்பாடு காணப்பட்டது. வருவியா? போவியா? சாப்பிட்டியா? போன்ற நிலையிலேயே கேள்விகள் கேட்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளினதும் திரைப்படங்களினதும் ஆதிக்கம் என ஊகிக்கிறேன். இது நான் அவதானித்த ஒரு மாற்றம்தான். இதில் தவறிருப்பதாக நான் ஒருபோதும் கருதவில்லை. ஆனால் சிறிது வருத்தமாக இருந்தது. அவ்வளவுதான். ---------------------------------------------------
இன்னொரு விடயம். அங்கு வசனத்தில் இறுதியில் எழுவாயை இன்னொருமுறை கூடுதலாச் சொல்வது அல்லது வினைக்குப் பின்னாக சேரத்துச் சொல்வது என்று ஒரு மொழிநடை உள்ளது. எடுத்துக்காட்டு: நான் வந்தனான், போனனான், சாப்பிட்டனான், எழுதினனான். போன்ற சொற்கள். இங்கே வந்த, போன, சாப்பிட்ட, எழுதின எனும் சொற்களோடு (அவை வந்தேன், போனேன், சாப்பிட்டேன் என்ற வினைகளின் வடிவங்களே) நான் என்ற எழுவாய் சேர்ந்து வருகிறது. 'நான் வந்தனான்' எனும் போது 'நான்' எனும் எழுவாய் இரு தடவை வருகிறது. மிக அதிகளவில் இந்தப்பயன்பாடு இருக்கிறது. இது நீ, நீங்கள், அவன், அவள் போன்ற ஏனைய எழுவாய்களுக்கும் பொருந்தும். அவள் வந்தவள். அவன் தான் செய்தவன். நீங்கள் வந்தனீங்களே? அவங்கள் தான் சொன்னவங்கள். என்பது போன்று நிறைய எடுத்துக்காட்டுக்கள். இந்த முறையை நினைத்தால் சுவாரசியமாக இருக்கும். இது தமிழகத்திலும் பாவனையிலிருக்கிறதா தெரியவில்லை. நானறிந்த வரை இல்லையென்றே நினைக்கிறேன். இதே போல் ஈழத்தின் மற்றப் பாகங்களிலும் இப்படி இருக்கிறதா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். மேலும் நான் மேற்கூறிய விளக்கங்களிலும் தவறுகளிருக்கலாம். சுட்டிக்காட்டவும். -------------------------------------------------
அடுத்து ‘ட’கர, ‘ற’கர, ‘ர’ கர வித்தியாசங்கள் தமிழகத்துக்கும் எமக்கும் இருக்கின்றன. இது ஆங்கில உச்சரிப்பைத் தமிழில் எழுதும்போதுதான். தமிழ்ச்சொல்லிலும் இரண்டொரு வேறுபாடுகளுண்டு. எடுத்துக்காட்டு: கரிய நிறத்தை நாம் 'கறுப்பு' எனப் பலுக்குவோம். ஆனால் தமிழகத்தில் 'கருப்பு' என்று பலுக்குகிறார்கள். ஆனால் உச்சரிப்பில் நாம் உச்சரிப்பது போலவே உச்சரிக்கிறார்கள். ஆனால் 'கருப்பு' என்பதை நாம் உச்சரித்தால் அது வேறுபட்டுவிடும். ஏனென்றால் ‘ற’கரத்துக்கும் ‘ர’கரத்துக்கும் தீர்க்கமான உச்சரிப்பு வேறுபாடு எம்மிடமுள்ளது. உச்சரிப்புத்தான் மூலம். வரிவடிவங்களன்று என்பதுதான் முக்கியமானது. --------------------------------------------------
இனி ஆங்கில உச்சரிப்பை எழுதும்போது இரு தரப்பிலும் எப்படிப் பலுக்குகிறார்கள் என்று பார்ப்போம். ரீ.வி. – டி.வி. ரேக் இற் ஈசி – டேக் இட் ஈசி. ரிக்கெற் - டிக்கெட் ரின் - டின் ரெலிபோன் - டெலிபோன்
இதைவிட ஆகார ஓகார மாற்றங்களும் வரும்.
ஈழத்தமிழர்கள் ஆங்கில 'T' என்பதற்கு ‘ர்’ வரிசையின் உயிர்மெய்களைப் பயன்படுத்துகிறார்கள் (மெய்யை அன்று). அதே போல் ஆங்கில 'D' என்பதற்கு ‘ட’ வரிசையைப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் 'ர'கர, 'ற'கர வித்தியாசமுமுண்டு. R என்பதற்குப் பதிலாகவே ‘ற்’ வரிசையின் உயிர்மெய்களைப் பயன்படுத்துகிறார்கள் (மெய்யை அன்று).
இலகுவாக ‘ற’கர ‘ர’கர ஒலி வித்தியாசங்களைச் சொல்லிவிடுகிறேன். ‘ர்’ இன் உயிர் மெய்யெழுத்தெல்லாம் வல்லின உச்சரிப்பைக் கொண்டிருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஆங்கில T போல. ஆனால் மெய்யெழுத்துமட்டும் இடையின தொடரொலி உச்சரிப்பைக் கொண்டிருக்கும். அதாவது ஆங்கில R போல. தமிழகத்தில் இது மாறி இருக்குமென்று நினைக்கிறேன். ரிக்கெட் என்பதற்கும் றிக்கெட் என்பதற்குமிடையில் உச்சரிப்பில் வித்தியாசமில்லையென்றே நினைக்கிறேன்.
மாறாக, ‘ற்’ இன் உயிர்மெய்யெழுத்தனைத்தும் இடையின தொடரொலியைக் கொண்டிருக்கும். அதாவது அங்கில R போல. ஆனால் மெய்யெழுத்து மட்டும் வல்லின வெடிப்பொலியைக் கொண்டிருக்கும் ஆங்கில T போல. தமிழகத்திலும் இதே முறையுள்ளது. ஆனால் ‘ற்’ உடன் அதே உயிர்மெய் வரும்போதுதான் இருதரப்புமே மாறுபடுகிறது. நாம் ‘ற்’ இன் மெய்யுடன் அடுத்து அதே உயிர்மெய் வந்தால் அதையும் வல்லினமாகவே உச்சரிப்போம்.
குற்றம் என்று எழுதினால், அதை உச்சரிக்கும்போது ‘ற்’ என்பது வல்லின வெடிப்பொலியாகவும் ‘ற’ என்பதை இடையினத் தொடரொலியாகவும் (R) தமிழகத்தார் உச்சரிப்பர். ஆனால் நாம் இரண்டையுமே வல்லினமாகவே உச்சரிப்போம். இதே போலவே வெற்றி, நெற்றி, பற்றி, பற்றை என்பனவும் இரு தரப்புமே வித்தியாசமாக உச்சரிக்கிறோம். (ஆனால் கொஞ்சம் பழய தமிழகத் தமிழில் மாறியிருந்ததோ என்று ஐயமுண்டு. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்பதில் நெற்றி, குற்றம் என்பன நாம் உச்சரிப்பது போலுள்ளதாகப் படுகிறது. மேலும் அருணகிரி நாதர் படத்தில் சௌந்தரராஜனின் திருப்புகழ்ப் பாட்டில் (அற்றித் திருநகை?) வரும் சொல் உச்சரிப்புக்கள் நாம் உச்சரிப்பது போலவே உள்ளது. ஆக இப்போது தான் தமிழகத்தில் அந்த மாற்றம் வந்ததா? தெரிந்தவர்கள் சொல்லவும்.)
ஆனால் ஈழத்திலும் ‘ர’கர, ‘ற’கர உச்சரிப்புக்கள் சில இடங்களில் மாறி வருகிறது. ராணி, ராசா, ரவி என்பவற்றை வல்லினமாகத் தொடக்கி உச்சரித்தது அந்தக்காலம். இன்னும் கிராமங்களில் மாறாவிட்டாலும் பல இடங்களில் இப்பெயர்கள் இடையினத் தொடரொலியாகத் தொடங்கி (R) உச்சரிக்கப்படுகிறது. அதாவது றாணி, றாசா, றவி என்பவை போல. ஆனால் இவற்றுக்கு முன் 'இ'கரத்தைப் போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இந்த மயக்கமே இல்லாமல் சரியாக வாசிப்பார்கள். இராசா என்றால் நிச்சயம் வல்லின உச்சரிப்புத்தான் வரும். (இதற்காகத்தானோ முன்னோர்கள் ர்,ற்,ட் வரிசைகளுக்கு இகரமும் உகரமும் போடச்சொன்னார்கள்.)
இதை வாசிக்கும் உங்களுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். மிகுதியை என் ஆராய்ச்சிப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளவும். ----------------------------------------------------- என்ன இருந்தாலும் எனக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழில் தீராத காதலுண்டு. அதற்குக் காரணம் இன்னும் மாறாமலிருப்பதுதான். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தலைமுறை இன்னும் எந்த வேற்று மொழியின் தாக்கமுமில்லாமல், தமிழகத் தாக்கம் கூட இல்லாமல் அப்படியே தமிழை வைத்திருக்கிறார்கள். (கிளிநொச்சியில் சென்ற வருடம் நோர்வேயிலிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தபோது அவர்கள் கதைத்த தமிழ் என் பாட்டன் பரம்பரைத் தமிழை எனக்கு ஞாபகப்படுத்தியது.) 15 வருடத்துக்கு முந்திய யாழ்ப்பாணத் தமிழைத்தான் இப்போதும் கதைக்கிறார்கள். ஆனால் யாழில் சற்று மாற்றம் கண்டு வருகிறது. இன்னும் யாழில் கிராமங்களில் மொழி தன் வாசனையை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் விரைவில் மாறிவிடும் என்றே தோன்றுகிறது. என் கிராமத்தின் உதைபந்தாட்ட மைதானமும் கரப்பந்தாட்ட மைதானமும் புதர் மண்டிக்கிடக்கிறது. இளைஞர்கள் எல்லாம் தொலைக்காட்சியோடுதான் இருக்கிறார்கள்.
வணக்கம்! தொடர்ச்சியா ஒரே உறவு முறையில கனபேர் இருந்தா என்னெண்டு அவயளக் கூப்பிடுறது? அவயின்ர பேரயும் உறவு முறையையும் சொல்லிக் கூப்பிடலாம். ஆனா எங்கட இடத்தில அப்பிடிக் கூப்பிடிறது குறைவு. பேரச்சொல்லிறது மரியாதைக் குறைச்சல் எண்டு நினைச்சினமோ தெரியாது.
இப்ப அப்பிடிச் சில உறவுமுறையளச் சொல்லப்போறன். இதின்ர ஒழுங்குமுறை சிலவேள இடத்துக்கு இடம் மாறுபடலாம். ஆனாபடியா உங்கட கருத்துக்களையும் சொல்லுங்கோ.
எங்கட அம்மம்மாதான் அவயின்ர குடும்பத்தில மூத்தவ. மொத்தம் எட்டில ரெண்டு ஆம்பிளயள். மிச்ச ஆறுபேரும் பொம்பிளயள் எண்டு நான் சொல்லத் தேவயில்ல. அந்த ஆறு பேரையும் உறவு முறை சொல்லிக்கூப்பிட வேணும். ஆனா பேரும் சொல்லக்கூடாது. எனக்கு அவயள் அம்மம்மா முறை. அதால என்ர அம்மம்மாவ நான் தனிய அம்மம்மா எண்டு கூப்பிடுவன். மற்றாக்கள் பெரியம்மம்மா எண்டுவினம்.அடுத்ததா வாற உறவு முறை ஒழுங்கைப் பாருங்கோ.
சின்ன அம்மம்மா
ஆசை அம்மம்மா
சீனி அம்மம்மா
சூட்டி அம்மம்மா
குட்டி அம்மம்மா
இது தனிய அம்மம்மாவுக்கு மட்டுமில்ல எல்லா உறவு முறைக்கும் இது பொருந்தும். இந்த ஒழுங்கிலதான் நாங்கள் பாவிக்கிறது. ஆனா இதையே வன்னியல வந்து சீனியம்மம்மா எண்டு நான் கூப்பிட எல்லாரும் சிரிச்சினம். அவயள் சிரிக்கினம் எண்டதுக்காக நான் என்ர உறவு முறைய மாத்த ஏலுமே. அப்பிடிக் கூப்பிட்டாத்தான் ஒரு உறவே எனக்குத் தெரியுது. வேற மாதிரிக் கூப்பிடுறது பாசாங்குமாதிரிக் கிடக்கு எனக்கு.
இதவிட இத்தினியக்கா எண்டொரு உறவுமுறையை என்ர பக்கத்துவீட்டில கேட்டிருக்கிறன். குஞ்சியாச்சி, குஞ்சியப்பு எண்டும் உறவு முறையள் இருக்கு. ஆறுபேர விடக் கூடுதலா இருந்தா என்னெண்டு கூப்பிடுவினம் எண்டு அறிய ஆவல். ஆருக்கேன் இதவிட உறவு முறையள் தெரிஞ்சாச் சொல்லுங்கோ. (தற்செயலா எனக்கு நிறையப் பிள்ளயள் பிறந்தா அவயக் கூப்பிடுறதுக்குப் பழக்க வேணுமெல்லே)
------------------------------------------------ எங்கட பெரியம்மாவின்ர பிள்ளயள் (என்னவிட வயது கூடின ஆக்கள்) என்ர அம்மாவ சித்தியெண்டுதான் கூப்பிடோணும். ஆனா சின்னனில ஆரோ சின்னம்மா எண்டு சொல்லிக்குடுத்து (சின்னம்மா எண்ட பாவனை எங்களிட்ட இல்ல) அதுகள் ரெண்டும் வாய் தவறி சின்னனிலயே 'மென்னம்மா' 'மென்னப்பா' எண்டுதான் கூப்பிடுறவை. இண்டைக்கும் அப்பிடித்தான். 5 வயசிலயே அது பிழையான வடிவமெண்டு தெரிஞ்சாலும் அந்த உறவுமுறை மாறேல. புதுசாக் கேக்கிற ஆக்கள் கட்டாயம் சிரிப்பினம். ஆனா என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 30 வயதில அவயள் மென்னம்மா மென்னப்பா எண்டு கூப்பிறதும் மழலையாத்தான் தெரியுதோ என்னவோ. இஞ்ச டி.சே ஐ, 'சித்தியா' எண்டு கூப்பிடுறதக் கேள்விப்படேக்க எனக்கு இந்த ஞாபகம் தான் வருது.
வணக்கம்! இராம.கி. தமிழில் உறவுமுறைகள் பற்றி எழுதினார். நானும் இதுபற்றி ஓர் ஆராய்ச்சி செய்து எனது முடிவுகளைச் சுருக்கமாக இங்க பதியிறன்.
இது எங்கட ஊரில உறவுகளைக் கூப்பிட நாங்கள் பாவிக்கிற சில சிறப்புச்சொற்கள். கொஞ்சம் கொச்சையா இருக்கலாம். ஆனா ஓர் ஆள் இல்லாத சந்தர்ப்பத்தில குறிப்பிட்ட அந்த நபரை, கேட்கப்படும் நபருக்கும் தேடப்படும் நபருக்குமிடையிலான உறவுமுறையைக் கொண்டு கதைக்கப்படும்.
மேற்கூறியவைகள் யாழ்ப்பாணத்தில் சாதாரணமாகப் பயன்பாட்டிலிருக்கும் மொழிநடை. மிக முக்கியமான விசயம், அக் குறிப்பட்ட நபர் அங்கு நிற்கக்கூடாது. இனி அந்தச் சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
• கொண்ண - அண்ணை. கொண்ணன் - அண்ணன். • கொக்கா – அக்கா. • கோத்தை – ஆத்தை. (ஆத்தை என்ற சொல் பெருமளவு பயன்பாட்டிலில்லை. ஆனால் கோத்தை உண்டு) • கொம்மா – அம்மா. • கொப்பர் - அப்பர். • கொப்பா – அப்பா. • கொய்யா – ஐயா.
இவையெல்லாவற்றிலும் கவனித்தால் ஒரு விசயம் தெரியும். ‘கொ’ அல்லது ‘கோ’ ஏற்றுத் திரியும் இந்தச் சொற்களனைத்தும் வயது மூத்தவர்களைக் குறிக்கும் உறவு முறைகள். இளையவர்களைக் குறிக்கும் தம்பியை ‘கொம்பி’ என்றோ தங்கையை “__ங்கை” என்றோ தங்கச்சியை ‘கொங்கச்சி’ என்றோ அழைப்பதில்லை. ஏனெண்டா நாங்கள் மூத்தாக்கள நல்லா மரியாதை செய்யிறனாங்கள் எண்டது இதிலயிருந்து நல்லா விளங்கும். தம்பி தங்கச்சியெல்லாம் சின்ன ஆக்கள் எண்ட படியா அவைக்கு “இவ்வளவு” மரியாதை தேவயில்ல.
ஆனா ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்லுது: அப்பிடி ‘கொ’ கரமாத் திரியிற சொல்லுகளெல்லாம் ‘அ’கரம், ‘ஆ’காரத்தில தொடங்கிறதுகளாம். (ஐயன்னா அ,இ என்பவற்றின் இணைவொலிதான்)
இந்த சுருக்கமான ஆராய்ச்சிக் கட்டுரையில் திருப்தி இல்லாதவர்கள் நானெழுதி வெளியிட்ட “செந்தமிழ் உறவுமுறைச் சொற்களஞ்சியப் பேரகராதி” என்ற நூலை வாங்கிப் படித்து மேலதிகமாகவும் விடங்களை அறிந்து கொள்ளலாம்.
வணக்கம்! இந்த முறையும் நான் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்டச் சொல்லப்போறன். போன முற நான் என்ர குரலில கதைச்சு உங்களக் கேக்க வச்சன். ஆனா ஒருத்தரும் அந்த ஒலிப்பதிவு முயற்சியப் பற்றி ஒண்டும் சொல்லேல. அது வேல செய்யுதோ இல்லையோ எண்டு கூட சொல்லேல. இந்த முற அந்த ஒலிப்பதிவு இல்லாமல்தான் போடுறன்.
இப்பிடியா இருக்கேக்க, ஒருநாள் விஞ்ஞான வாத்தி வராதபடியா சும்மா வகுப்பிலயிருந்து எங்களுக்குள்ள கதச்சுச் கொண்டிருந்தம். அப்ப ஊரிலயிருந்து ஓடி வரேக்க நடந்த அனுபவத்த அவயளுக்குச் சொல்ல வேண்டி வந்துது. என்னச் சுத்தி அஞ்சாறு பேர் கத கேட்டுக்கொண்டு இருந்தீச்சினம். (அங்காலயிருந்த கொஞ்சம் “பாரடா உவன. நல்லா செல் குத்துறான்” எண்டு பொருமிக்கொண்டு இருந்தது கடைக்கண்ணால பாக்கத் தெரிஞ்சது). என்ர கதயச்சொல்லிக்கொண்டு வரேக்க “எதிர் வீட்டு லீலியாச்சியின்ர படலேக்க ஒரு செல் விழுந்தீச்சு” எண்டு ஒரு இடத்தில சொன்னன்.
“என்னது.. படலையோ… அப்பிடியெண்டா?” எண்டு கத கேட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் சந்தேகமாக் கேட்டான். “என்ன?... படலையெண்டா உனக்கு என்னெண்டு தெரியாதோ? எனக்கு வண்டில் விடுறியோ?” எண்டு அவனக் கேட்டன். பிறகுதான் பாத்தா கத கேட்டுக்கொண்டிருந்த மற்ற நாலு பேருக்கும் தெரியாது. சுதுமலைக்காரன் ஒருத்தன் மட்டும் “நான் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா நாங்கள் பாவிக்கிறேல.” எண்டு சொன்னான். இதென்ன கோதாரி? படலையெண்டா என்னெண்டு தெரியாமலும் மனுசர் இருக்கினமோ (அது தெரியாட்டி தமிழே தெரியாது எண்டது மாதிரி அப்ப நினச்சனான்) எண்டு திகச்சுப்போனன். நேரா வீட்டுக்கு வந்து நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரிட்ட (அவயளுக்கு மானிப்பாய் தான் சொந்த இடம்) கேட்டன். அவயளுக்கும் தெரியேல. கிழிஞ்சுது போ… எண்டு போட்டு அம்மாவிட்ட போய் “அம்மா அவேக்கு படலையெண்டா என்னெண்டு தெரியாதாமெல்லே...” எண்டு ஒரு இளப்பாரமா சொன்னன். அம்மா என்ன வேலயில அல்லது கொதியில நிண்டாவோ தெரியேல (அவ பள்ளிக்கூடத்தில ரீச்சர், அதுவும் கணக்குப்பாடம்) என்ர கதய காதிலயே வேண்டேல. அதுக்குப் பிறகு படலயெண்டா என்னெண்டு தெரியுமோ எண்டு காணுகிற சிலரிட்ட கேட்டுப்பாத்தன். சிலருக்கு அதின்ர பொறிமுறை செயல்முறையெல்லாம் கீறி விளங்கப்படுத்தினனான்.
ஒரு விசயம் சொல்ல வேணும். மானிப்பாயில நாங்கள் இருந்த பகுதியில பெரும்பாலும் எல்லாம் கல் வீடுகள் தான். சுத்துமதிலெல்லாம் கட்டி வசதியாத்தான் இருந்தீச்சு. எல்லா வீட்டுகளுக்கும் தகர கேற் போட்டிருந்தவை. ஆத கேற் எண்டு தான் சொல்லிறவை. (வேற என்னெண்டு சொல்லிறது?) அதாலதான் எங்கட படல பற்றி இவைக்குத் தெரியேல. “சரி இதுக்குள்ளயே எங்கயெண்டாலும் படலை இல்லாத வீடொண்டு காணக்கிடைக்காமலே போகப்போகுது. அப்ப தெரியும் தானே” எண்டு விட்டுவிட்டேன். இதுக்குள்ள வேறயும் சில சொல்லுகள் இப்பிடி அவயளுக்குத் தெரியாமல் இருக்கிற பட்டியலில சேந்திட்டுது. இதுபற்றிப் பிறகொருக்கா எழுதிறன்.
ஒருநாள் பெடியளோட நாவாலிப்பக்கம் போக வேண்டி வந்திட்டுது. அப்ப தான் நான் தேடிக்கொண்டிருந்த படலையைக் காணிற சந்தர்ப்பம் கிடைச்சுது. சடாரெண்டு பாதையிலயே சைக்கிள நிப்பாட்டிப்போட்டன். சின்னதா மண்ணெண்ணை பரல் தகரத்தில சட்டமடிச்சு ஒரு யார் அகலத்தில ஒரு படலை. அதுக்கு தானாக மூடக்கூடியமாதிரி பாரம் கட்டிவிட்டிருந்தீச்சினம். படலையில ஒரு சிலுவையும் “அறையப்பட்டிருந்தீச்சு”. படலைக்க ரியூசனுக்குப் போறதுக்காக்கும் புத்தகங்களோட ஒரு அக்கா நிண்டு கொண்டிருந்தா. (அப்ப எனக்கு ஆக 13 வயதுதான்). நான் நிண்டோடன கொஞ்சம் தாண்டிப் போய் பெடியளும் நிண்டிட்டாங்கள். நான் கொஞ்சமும் வெக்கப் படாமல் நேரா அவவிட்டப் போய் “அக்கா இத என்னெண்டு சொல்லிறனியள்?” எண்டு அந்தப் படலையக் காட்டிக் கேட்டன். அக்கா கொஞ்சம் குழம்பித்தான் போனா. பின்னயென்ன?.. முன்னபின்ன தெரியாத ஒருத்தன் இப்பிடி அதிமுக்கியமான ஒரு கேள்வி கேட்டா? கொஞ்சம் யோசிச்சவ (நிச்சயமா அதின்ர பேர யோசிக்கேல. இவன் ஏதாவது குறளி வேல பாக்கிறானோ? இல்லாட்டி இரட்டை அர்த்தத்தில ஏதாவது கேக்கிறானோ எண்டு தான் யோசிச்சிருப்பா) பிறகு பதில் சொன்னா.
“கேற்”. எண்டு அவ பதில் சொன்னோடன கொடுப்புக்க வந்த சிரிப்ப அடக்கிறதுக்குச் சரியாக் கஸ்டப்பட்டனான். திருப்பவும் கேக்கிறன் “இத கேற் எண்டே சொல்லிறனியள்?” “ஓமோம். கேற் எண்டு தான் சொல்லிறனாங்கள்."
சரியாப் போச்சு. அக்கா படலை எண்டு சொல்லுவா எண்ட எதிர்பார்ப்போட போய் அசடு வழிஞ்சு கொண்டு திரும்பின என்னப் பாத்ததும் பெடியளுக்குக் குழப்பம். “என்னடா கதச்சனி?” “ஒண்டுமில்லடா. அத என்னெண்டு சொல்லிறனியள் எண்டு கேட்டனான்.” அவங்கள் ஒருத்தருமே நம்பேல நான் இதத்தான் போய்க்கேட்டனான் எண்டு. பின்ன? ஆராவது ஒருத்தன் இப்படி விவஸ்தை இல்லாமல் போய் “படலை” தேடிக்கொண்டு திரிஞ்சிருப்பானா?
அண்மையில் தொலைக்காட்சியொண்டில “படல படல” எண்டு ஒரு நிகழ்ச்சியின்ர விளம்பரம் பாத்தன். ஆதில வாற விளம்பரப் பாட்டக் கேக்கேக்க வழமையா இந்திய நகைச்சுவைத் தொடர்களுக்கு வாறமாதிரியே தான் இருந்தீச்சு. அட அங்கயும் படல எண்ட சொல்லப் பாவிக்கினம் போல கிடக்கே எண்டிட்டு விட்டிட்டன். (நகைச்சுவை உட்பட எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியளையும் பாக்கிறதில்ல. தவிர்க்க ஏலாமல் எங்கயாவது மாட்டுப்பட்டுப் பாத்தாச் சரி.) ஒருநாள் தற்செயலா அந்த படல படல தொடரப் பாக்க வேண்டி வந்தீச்சு. அட… எங்கட தமிழ். பத்து வருசத்துக்கு முந்தி வரைக்கும் நான் கேட்ட, பேசின தமிழ். அதே உச்சரிப்பு, அதே லயம். குறிப்பாக அதே வேகம். நெஞ்சு ஒருக்கா குளிந்திது பாருங்கோ. அதுக்குப் பிறகு என்ன கஸ்டப்பட்டெண்டாலும் "படல படல" பாக்கிறதெண்டு வெளிக்கிட்டிட்டன். அதில எங்கட சனத்தின்ர குசுகுசுப்புக்களும் விடுப்புக் கேக்கிற தன்மையும் வியாக்கியானம் செய்யிற லாவகம் எண்டு அத்தனையும் அப்பிடியே வரும். எழுதி வச்சு வாசிக்காமல், பாடமாக்கி ஒப்பாமல் இயல்பா வாற அந்தக் கததான் பிடிச்சிருக்கு. நான் மொழி நடைக்காக ரசிக்கிற இன்னொரு தொடர் "நையாண்டி மேளம்". தமிழ் சினிமாவில யாழ்ப்பாணத்தமிழ் பயன்படுத்த நினைக்கிற ஆக்களுக்கு கேட்டுப்பழகிறதுக்கு நான் சிபாரிசு செய்யக் கூடிய ரெண்டு நிகழ்ச்சிகள் இதுகள்தான். (ஆராவது கமல், மணிரத்தினத்துக்குச் சொல்லுங்கோ)
இங்கே எனது பதிவின் ஒலி வடிவத்தையும் இணைத்துள்ளேன். அதை என் பேச்சுத் தமிழிலேயே பதிவு செய்துள்ளேன். தரம் குறைவென்றாலும் விளங்கக் கூடியமுறையில் உள்ளது. செயலி தொழிற்படாவிட்டால் கீழுள்ள உரலை கிளிக்கி கேட்டுக்கொள்ளுங்கள். ஒலி வடிவ முயற்சி பற்றிய உங்கள் கருத்துக்களைத் தவறாது எழுதுங்கள்.
இதுவுமில்லையென்றால் உங்கள் அதிஸ்டம் அவ்வளவுதான். (என் அமுதக் குரலைக் கேட்க முடியாமற்போகும்)
சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச உங்களுக்கு கால்பிரேக் அடிக்கிறதப் பற்றித் தெரியும். சரியான முறையில பிரேக் இல்லாத சைக்கிளுகளுக்கு பிரேக் அடிக்க காலைப் பாவிக்கிறது தான் அந்த முறை. சிலர் ரெண்டு காலையும் பாவிப்பினம், சிலர் ஒத்தக் காலப் பாவிப்பினம். செயின் கவர் இருந்தாத் தான் ரெண்டு காலும் பாவிக்கலாம். கால் பிரேக் அடிக்கேக்க வால்வ்கட்டை களண்டு காத்துப் போன சம்பவங்களும் இருக்கு. கூடுதலா றிம்மில பிரேக் அடிக்கிற ஆக்களுக்குத்தான் அப்படி. (யாழ்ப்பாணமெண்டாலும் பரவாயில்ல. வன்னியில இப்படி கால்பிரேக் அடிக்கேக்க காத்துப்போய் மைல்கணக்கில சைக்கிள் உருட்டியிருக்கிறம்.) சிலர் டயரில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். சிலர் றிம்மில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். இப்பிடி கால்பிரேக் பற்றிக் கதைச்சுக் கொண்டே போகலாம்.
யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு கால்பிரேக் அடிக்கிறது சர்வசாதாரணம். பொம்பிளயள் பெரிசா அடிக்கிறேல. ஆனா கவுரவம் அதுஇது எண்டு பாக்காத ஆக்களெல்லாம் கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி யோசிக்கிறேல. பெட்டையள் பாக்கிறாளவ எண்டுகூட கவலப்படிறேல. அவ்வளவுக்கு கால்பிரேக் அடிக்கிறதெண்டது சர்வசாதாரணம். சைக்கிள் பிரேக் பிசகினாலும் பிசகும் கால்பிரேக் ஒருக்காலும் பிசகாது. கால் பிரேக் அடிச்சுப் பழகினவனுக்கு சைக்கிளில புது பிரேக் பூட்டிக் குடுத்துப் பாருங்கோ, அவன் கால்பிரேக் தான் அடிப்பான். கால் தன்னிச்சையா பொசிசனுக்கு வந்திடும். அதிலயிருந்து மீளிறதுக்குக் கொஞ்ச நாளெடுக்கும்.
இப்ப கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி நான் பாத்த சுவாரசியமான சம்பவமொண்டச் சொல்லப்போறன்.
போன வருசம் யாழ்ப்பாணத்திக்குப் போனனான். கிட்டத்தட்ட பன்ரெண்டு வருசத்துக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போறன். அங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரிண்ட வீட்டுக்குப் போனன். ஆள் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம் தான். நானறிய அந்தாள் எந்த நேரமும் தண்ணியில மிதக்கிறவர். தண்ணியெண்டு நான் சொல்லிறது பனங்கள்ளத்தான். ஒரு பறணச் சைக்கிளில (அதுக்கு செயின்கவர், மட்காட், பெல் எண்டு எதுவுமிருந்ததா ஞாபகமில்ல.) தான் மனுசன் திரியும். கூத்து நடிக்கிறதிலயும் பாடுறதிலயும் ஆள் விண்ணன். கிட்டத்தட்ட ஒரு அண்ணாவி மாதிரி. செயின்கவர் இல்லாட்டியும் மனுசன் ரெண்டு காலாலையுந்தான் பிரேக் அடிப்பார். எனக்கு அது ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. இருக்கிற சீற்றிலயிருந்து கீழ வாற பாரில ரெண்டு பாதத்தின்ர முன்பக்கத்தையும் சேத்து வச்சுக் கொண்டு ரெண்டு குதியாலயும் பிரேக் அடிக்கிறது சாதாரணமா செய்யக்கூடியதில்ல.
சரி. இனி என்ன நடந்ததெண்டு சொல்லிறன். நான் அவரிண்ட வீட்ட போகேக்க மனுசன் எங்கயோ வெளிக்கிட்டுக் கொண்டு இருந்தார். சைக்கிள உருட்டிக் கொண்டு படலைக்க வரவும் நானும் அங்க போய் இறங்கவும் சரியா இருந்தீச்சு. ஆள் நல்ல நிதானமாத்தான் இருந்தார். ஆனா ரெண்டு குதிக்காலிலயும் பெரிய கட்டு. ரெண்டு நுனிக்காலாலயுந்தான் உன்னி உன்னி நடந்து வாறார். என்னக் கண்டதும் ஆள் உடன மட்டுக்கட்டாட்டியும் பிறகு பிடிச்சிட்டார். ‘இரடாப்பா ஒருக்காப் போட்டு வாறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டார். எனக்குத் தெரியும் மனுசன் எங்க போகுதெண்டு. வேறயெங்க தவறணைக்குத்தான். அவற்ற காண்டிலில கொழுவியிருக்கிற பைக்குள்ள இருக்கிற பிளா சொல்லிப் போட்டுது. அவர் ஒரு பொலிசி வச்சிருக்கிறார். அதென்னெண்டா தவறணையில எல்லாரும் பாவிக்கிற பிளாவில குடிக்க மாட்டார். அவங்கள் புதுசாத்தந்தாலும் குடிக்கமாட்டார். தானே தனக்கெண்டு பிளா செய்து கொண்டுபோய்க் குடிப்பார். தவறணையால ஆள் திரும்பி வரேக்க கதைக்கக் கூடிய நிலையில ஆளிருக்காது எண்டது விளங்கீற்றுது.
‘என்னண்ண நடந்தது காலில?’ இது நான். ‘அதொண்டுமில்ல’ எண்டு சடைஞ்சவர் ‘பிறகு வந்து சொல்லிறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டிட்டார்.
நானும் சரியெண்டு வீட்டுக்க போனன். வழமையான புதினங்களெல்லாம் கதைச்சு முடிஞ்சப் பிறகு அவருக்கு காலில என்ன நடந்ததெண்டு அங்கயிருந்தவேற்ற கேட்டன். பெடிபெட்டயளெல்லாம் விழுந்துவிழுந்து சிரிக்குதுகள். பிறகு வெளிநாட்டிலயிருந்து கலியாணத்துக்கெண்டு வந்து நிண்ட அவரிண்ட மச்சான்காரன்தான் சொன்னார் என்ன நடந்ததெண்டு.
ஒருநாள் இரவு எட்டுமணிபோல மச்சான்காரன் ஹீரோ ஹொண்டா மோட்டச்சைக்கிளொண்டில றோட்டால வந்துகொண்டிருக்கேக்க எங்கட கதாநாயகன் நல்ல மப்பில சைக்கிளயும் விழுத்திப்போட்டு நிக்கிறார். ஆளுக்கு இடம்வலமொண்டும் தெரியாமக்கிடந்திருக்கு. உடன மச்சான்காரன் பக்கத்து வீடொண்டில சைக்கிள விட்டுட்டு கதாநாயகன மோட்டச்சைக்கிளில ஏத்திக்கொண்டு வீட்ட விட வந்திருக்கிறார். மனுசன் மோட்டச் சைக்கிளில பின்னாலயிருந்து கொண்டு பெலத்த சத்தமா சங்கிலியன் கூத்துப்பாட்டு பாடிக்கொண்டு வந்திருக்கிறார். (மனுசனுக்கு முட் வந்திட்டா சங்கிலியன், ஞானசவுந்தரி, செபஸ்தியார் எண்டு எல்லாக்கூத்தும் நடக்கும். நான் கூத்தில பைத்தியமானதே மனுசனிண்ட பாட்டக்கேட்டுத்தான்),
ஒரு ஒழுங்கைக்க திரும்பேக்க எதிர லைற் போட்டுக்கொண்டு ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்கு. எங்கட கதாநாயகனுக்கு ஏதோ தான் சைக்கிள் ஓடுறதெண்ட நினைப்பு. தன்ன இடிக்க வாறமாதிரி தெரிஞ்ச உடன மனுசன் ரெண்டு காலயும் தூக்கி அடிச்சாரே ஒரு கால்பிரேக். ஓடிக்கொண்டிருக்கிற மோட்டச் சைக்கிளிலயிருந்து கால்பிரேக் அடிச்சா எப்பிடியிருக்கும்? அப்பிடியே அள்ளீற்றுது. இவ்வளவும் கலியாண வேலப்பரபரப்புக்க நடந்திச்சு. சனத்துக்கு வியாக்கியானம் செய்ய நல்ல ஒரு கத கிடச்சிட்டுது.
நான் நினக்கிறன் மனுசன் அண்டையோட கால்பிரேக் அடிக்கிறத மறந்திருக்குமெண்டு.
குறிப்பு: சிலருக்கு நான் பாவிச்ச சில சொல்லுகளின்ர பொருள் தெரியாமலிருக்கலாம். அதுக்காக நான் அப்பிடி நினைக்கிற சொல்லுகளின்ர கருத்துக்கள கீழ தாறன்.
படலை: இது கேற் மாதிரித்தான். வளவுக்க இருந்து வெளிய போற பாதை. ஆனா சின்ன ஒரு இடைவெளி (கிட்டத்தட்ட ஒண்டரை யார்) மட்டுந்தான் இருக்கும். ஆக்களும் சைக்கிள் மற்றது மோட்டச்சைக்கிளுகளும்தான் இதுக்கால போய் வரலாம். கிராமங்களில கூடுதலா இதுதான் இருக்கும். ஒழுங்கை: சின்னப் பாதை. பிரதான பாதையளிலயிருந்து பிரிஞ்சுவாற கிளைப் பாதையள். பெரும்பாலும் தார் போடப்பட்டிருக்காது. (அந்த நேரத்தில பிரதான வீதிகள் கூட தாரில இருக்காது.) தவறணை: கள்ளு விக்கிற இடம். அங்கேயே வாங்கி அங்கேயே குடிப்பது. பிளா: கள்ளுக்குடிக்க பாவிக்கிற பாத்திரம். பனையோலையாலேயே செய்யப்பட்டது. தோணி மாதிரி இருக்கும்.