Sunday, August 30, 2009

ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்

இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.

ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி மூடப்பட்டுள்ளது.

ஆனால் சொல்லப்பட்ட கட்டுரைதான் இன்னும் எழுதப்படவில்லை.
இந்நிலையில் இன்று கிருத்திகனின் வலைப்பதிவில் அவர் ஆங்கில ஒலியியல், பாமினி, தமிழ்நெற்-99 முறைகளில் தட்டச்சுவது பற்றிச் சொன்ன கருத்தொன்றுக்கான எதிர்வினையாற்ற இவ்விடுகை எழுதப்படுகிறது.

தொடரிலக்கத்தைப் பார்த்து அதிகம் யோசிக்காதீர்கள்.
நாங்களெல்லாம் தொடர் எழுதினாலும் ஆண்டுக்கொரு பாகம் எழுதும் பேர்வழிகள். ‘மரங்கள்’ தொடரைப் பார்த்து விளங்கிக் கொள்க ;-)

ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும்போது தட்டச்சுபவரின் மூளையில் ஆங்கில வரிவடிவங்களூடாகவே அவர் எழுத்துக்கூட்டுவார் என்பது அம்முறைக்கெதிரான ஒரு வாதம். சிறிது கால இடைவெளியில் அது தாக்கத்தைத் தராது; ஆனால் வருடக்கணக்கில் ஒருவர் அப்படியே தொடர்ந்தும் தட்டச்சுவாராக இருந்தால் அம்முறை அவரின் தமிழ்ச்சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு விளக்கம்.

அதை மறுக்க வந்த இடத்தில் கிருத்திகன் இப்படிச் சொல்கிறார்.

//மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும்.//

கிருத்திகன்,
முதலில் உமக்கு எனது பாராட்டு. ஏனென்றால் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான வாதமாக வைக்கப்படுபவற்றுள் ஒன்றான ‘ஆங்கில வரிவடிவங்கள் மூளையில் பதிதல்’ என்பதைச் சரியாக விளங்கியிருக்கிறீர். அதை ஏற்றுக்கொள்ளாதது, மறுப்பது, அது தேவையற்ற பயம் என்று சொல்வது நியாயமான நடவடிக்கையே.

இப்போது நான் மேலே மேற்கோளிட்ட உம்முடைய கருத்துக்கு வருவோம்.
உமது கருத்து முற்றிலும் தவறானது என்பது என் கருத்து. பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுவதில்லை, ஆனால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாகவே எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பது எனது கருத்து.

இவற்றில் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீர் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களும் அப்படியே என்கிறீர். உண்மையில் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களின் நிலை அப்படியில்லை. அவர்கள் தமிழ் வரிவடிங்களூடே சிந்திக்கிறார்கள்.

ஆறு வருடங்களாக மிகமிகச் சரளமாகத் தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கும் பாமினிக்காரன் ஆகிய எனக்கு அம்மா என்று தட்டச்சுவதற்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிங்களைச் சொல்ல முடியாது. நீர் தந்திருக்கும் ஆங்கில எழுத்துக்கள் சரிதானா என்பதைக்கூட நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அ’வுக்கு எந்த விரல், ‘ம்’ எழுத எந்த விரல்கள் ‘மா’ எழுத எந்த விரல்கள் எந்த வரிசையில் தட்ட வேண்டும் என்பதே. சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது. [நான் எங்காவது வேலையாக நிற்கும்போது ‘டேய் ‘கூ’வன்னா அடிக்க வேணுமெண்டா எந்தக் கீ அடிக்க வேணும்?’ என்று தொலைபேசியில் கேட்பார்கள். விசைப்பலகை என்முன் இல்லையென்றால் உடனே என்னால் சொல்லமுடியாது. ஒருசுற்றுவழி மூலம் இதைக் கண்டுபிடித்துச் சொல்வேன். அச்சுற்றுவழி இறுதியில்…]

இன்னும் விளக்கமாக ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம்.

பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது.

இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்”.

உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. (சிலவேளை ஒன்றிரண்டு எழுத்துக்கள் மிகச்சிரமப்பட்டுச் சரியாகச் சொல்லக்கூடும்). ஏனென்றால் பாமினியிலும் தமிழ்நெற்99 இலும் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடு சிந்திப்பதில்லை. (அப்படித்தான் சிந்திப்பார்களென்றால் அவர்களால் உடனடியாக உமது கேள்விக்கான பதிலை கடகடவெனச் சொல்ல முடியும். அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனம் அவர்களுக்கும் பொருந்தும். தட்டச்சத் தொடங்கி நீண்டகாலமாகியும் விசைப்பலகையைப் பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விசையாகக் குத்திக் கொண்டிருப்பார்களென்றால் சிலவேளை அவர்கள் இந்த வகைக்குள் வரக்கூடும்.) ஆனால் இதே கேள்வியை ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள். தயக்கமே இல்லாமல் பதில் வரும்.

இப்போது புரிகிறதா ‘ஆங்கில வரிவடிவங்ளூடாக’ மனதில் எழுத்துக்கூட்டுவது என்று எதைச் சொல்கிறோமென்று? பாமினியிலோ தமிழ்நெற்99 முறையிலோ தட்டச்சுபவர்கள் தமிழெழுத்துக்களாகவே சிந்திக்கிறார்கள்.

==============================

தமிழெழுத்துக்கான விசையின் ஆங்கில வடிவத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுற்றுவழியைப் பயன்படுத்தலாமென்று சொல்லியிருந்தேன். அது என்னவென்றால் விசைப்பலகையில் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி அதன்மூலம் கண்டுபிடிப்பது. எடுத்துக்காட்டாக ‘அ’ என்ற எழுத்துக்கான விசையின் ஆங்கில எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். விசைப்பலகையில் ‘அ’ தட்டச்சுவதைப் போன்று செய்து பார்த்துக் கொள்வது, பிறகு ஆங்கிலத்தில் அதேமுறையில் விரலைப் பயன்படுத்தும்போது வரும் எழுத்து எதுவென்று பார்ப்பது. அதுகூட சுலபமான காரியமன்று.

“அம்மா இங்கோ வாவா, ஆசைமுத்தம் தாதா” என்ற வசனத்தை நான் முயன்று பார்த்தேன். அதாவது அவற்றுக்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்ல வேண்டுமென்று. அவ்வெழுத்துக்களைத் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் அதேபோன்று தட்டச்சும்போது உருவாகும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றேன். மிகமிகக் கடினமாக இருந்தது.

ஏனென்றால் பொதுவாக ஓரெழுத்தை எப்படித் தட்டச்சுவது என்றுதான் பழக்கப்பட்டிருக்கிறோம். விரல்கள் இயல்பாகவே அந்தந்த நிலைக்குச் சென்று விசைகளை அழுத்துகின்றன. ஆனால் இந்த விரலால் இப்படித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? என்று எதிர்வளமாக யோசித்தால் விடை காண்பது எளிதன்று. எமது மனம் அதற்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. Shift உடன் வலதுகையின் நடுவிரலை நடுவரிசையில் அழுத்தினால் ‘மு’ வருமென்று கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் ஆங்கிலமுறையில் இதேமாதிரித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? ம்ஹும். தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘K’ எழுதவேண்டுமென்று கேட்டால் தன்னிச்சையாகவே இடது சின்னிவிரல் shift விசையை அழுத்திப்பிடிக்க வலதுபக்க நடுவிரல் நடுவரிசையில் தனக்குரிய விசையை அழுத்துகிறது, அதாவது ‘மு’ எழுதுவதற்குப் பயன்படுத்திய அதே விசை.

இத்தோடு இவ்விடுகை நிறைவுபெறுகிறது.
இவ்விடுகைகூட அவசரமாகவே எழுதப்படுகிறது. நேரமிருந்தால் பிழைதிருத்தியோ இன்னும் விளக்கம் அதிகமாகவோ மேம்படுத்தலாம்.

- பின்னூட்டங்களில் சந்திப்போம்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (31 August, 2009 01:20) : 

வசந்தன் அண்ணா,
என்னுடைய பிரச்சினை இதுதான்... இப்போது நான் தமிழ் 99 அல்லது பாமினி முறைக்கு மாறப்போகிறேன் என்று வைத்துக்கொள்வோம்... அப்போது நான் முதலில் அந்த முறைகளில் தட்டச்ச முயலும்போது ‘இந்த' ஆங்கில எழுத்தில் ‘இந்த' தமிழ் எழுத்து இருக்கிறது என்றுதானே தட்டச்சப் போகிறேன்? அது முழுமையாகத் தவறல்லவா? அதனால் தான் தமிழில் தட்டச்ச தமிழ் மொழி பதித்த விசைப்பலகைகள் மூலம் பழகவேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு என்னால் ஆங்கிலத்தில் விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்ச முடியும்... ஆரம்பகாலத்தில் நானும் தேடித்தேடித்தான் குத்தினேன். இப்போது பழகிவிட்டேன். அது போலவே தமிழ் எழுத்துக்கள் பதித்த விசைப்பலகையில் தேடித்தேடிக் குத்திப் பழகிக் கொள்ள விரும்புகிறேன். அப்போது ‘f' அடித்தால் ‘க' என்று பதியாமல் ‘க' அடித்தால் ‘க' என்று பதியும். (அடுத்த சந்ததிக்கு தமிழ் எழுத்துருக்களை எப்படிக் கொண்டு போகப்போகிறோம் என்பது அடுத்த பிரச்சினை)

///சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது///
இதை ஒப்புக்கொள்கிறேன். ஆங்கில ஒலியியகாரர்களுக்கு (என் போன்றவர்களுக்கு அது முடிகிறது. அது சரியா தவறா என்று கேட்டால் தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இப்போது நான் கேட்பது என்னவென்றால், சடுதியாக பாமினிக்கோ தமிழ் 99க்கோ மாறமுயலும் என் போன்றவர்களுக்கு ‘இந்த' எழுத்தைத் தட்ட ‘இந்த; எழுத்து வரும் என்று பதிகிற அபாயம் இல்லையா? இருந்தால் அதைத் தவிர்த்து ‘அம்மா' ‘அம்மா' வாகவே படியுமா??

 

said ... (31 August, 2009 05:03) : 

வணக்கம் வசந்தன், பதிவுக்கு நன்றி.

கீத்...
ஒரு முன்னாள் பாமினி (2002-2005), ஆங்கில ஒலிய (2005-2008) மற்றும் இந்நாள் தமிழ் 99 பயனர் என்ற முறையில் எனது கருத்துக்கள்.


//இப்போது நான் கேட்பது என்னவென்றால், சடுதியாக பாமினிக்கோ தமிழ் 99க்கோ மாறமுயலும் என் போன்றவர்களுக்கு ‘இந்த' எழுத்தைத் தட்ட ‘இந்த; எழுத்து வரும் என்று பதிகிற அபாயம் இல்லையா? இருந்தால் அதைத் தவிர்த்து ‘அம்மா' ‘அம்மா' வாகவே படியுமா??//

அம்மா அம்மாவாகவே பதியும்.

பாமினியா தமிழ் 99ஆ என்பதல்ல பிரச்சனை. இரண்டிலுமே இந்த எழுத்தை தட்ட இது வரும் என்பது பிரச்சினை இல்லை. இது எனது அனுபவம் தந்த பாடம்.

{அத்தோடு எனது ஆங்கில ஒலிய -> தமிழ் 99 மாற்றத்துக்கு எனக்கு தேவைப்பட்டது நான் எனது வலைப்பதிவில் எழுதிய முதல் மூன்று பதிவுகள் (மற்றும் ஒரு கறுப்பு மையால் தமிழ் எழுத்துக்கள் குறித்த வெள்ளை விசைப்பலகை - முதல் நாள் மட்டும்). மூன்று நாட்களுக்குள் என்னால் விசைப்பலகை பார்க்காமல் தமிழில் தட்டச்ச முடிந்தது. நான் பாமினி பழகிய காலத்திலும் இதையொத்த பயிற்சியே எனக்கு தேவைப்பட்டது.}

 

said ... (31 August, 2009 10:42) : 

முன்பு நான் கண்டியில் இருந்தபோது வேலவனுக்கு கடிதம் எழுதுவௌண்டு. (அது செல்பேசிகள் பரவாத காலம்)

மிக அந்தரங்கமான, அவன் பெற்றோர் பார்த்தால் வாசிகக்க்கூடாத சில விசயங்களை எழுத நாம் ஒரு குறிமுறை வைத்திருந்தோம்.
அது வேறொன்றுமில்லை, பாமினி முறை ஆங்கில எழுத்துக்களில் தமிழ்க்கடிதத்தை எழுதுவது.

சரளமாக அப்பை எழுதவும், பிரச்சினை இன்றி அதை வாசிக்கவும் அப்போது எம்மால் முடிந்தது.

 

said ... (02 September, 2009 15:48) : 

கிருத்திகன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தாமதமான பதிலுக்கு மன்னிக்க.

/இப்போது நான் கேட்பது என்னவென்றால், சடுதியாக பாமினிக்கோ தமிழ் 99க்கோ மாறமுயலும் என் போன்றவர்களுக்கு ‘இந்த' எழுத்தைத் தட்ட ‘இந்த; எழுத்து வரும் என்று பதிகிற அபாயம் இல்லையா? இருந்தால் அதைத் தவிர்த்து ‘அம்மா' ‘அம்மா' வாகவே படியுமா??//

எழுத்தைத் தேடித்தேடிக் குத்துவது தவறான அணுகுமுறையே என்பது என் கருத்து. தட்டச்சுப் பழகும்போதே அதற்குரிய நியம முறைப்படி - பத்துவிரல்களையும் பயன்படுத்தி (விரல்கள் இழந்தவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முடியாதவர்களுக்கு என்னிடம் பதிலில்லை)விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சும் முறையிலேயே பழகத் தொடங்க வேண்டுமென்பது என் கருத்தும் ஆலோசனையும்.

அப்படிப் பழகுவதொன்றும் கடினமாதன்று. சிலமணி நேரங்களிலேயே பழகிவிடலாம். பாமினி எழுத்துருவுக்கான எனது தொடக்கப்பயிற்சி வெறும் 3 மணித்தியாலங்கள் மட்டுமே. வேறு இருவர் அதே நேரப்பகுதியில் என்னால் பழக்கப்பட்டார்கள். சிலருக்குச் சற்றுக் கூடுதலாக எடுக்கலாம்.

ஒரேகாலப்பகுதியில் பாமினி, தமிழ்நெற்99 விசைப்பலகை முறைகளைப் பயின்றவன் நான். என்றபோதும் பாமினி மிக இலகுவாகவும் வேகமாகவும் எனக்குக் கைவந்தது. இதற்கான காரணங்கள் இரண்டு.
1. தமிழ்நெற்99 முறையிலான எனது தேவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக 'பால்ஸ் மின்னகராதி'யைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே நான் அவ்விசைப்பலகை முறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் பாமினி முறையில் நிறையவே தட்டச்ச வேண்டிய தேவையிருந்தது.
2. கையால் எழுதுவதைப் போலவே பாமினியிலும் தட்டச்சுவது. ஒருங்குறி மாற்றத்துக்கு வெளியே கதைத்தால், தமிழ்நெற்99 முறையைவிட பாமினிக்கு இருக்கும் ஓர் அனுகூலம் இது. அதாவது எப்படி கையால் ஓர் ஒற்றையில் (தாளில்) எழுதிக்கொண்டு போவோமோ அப்படியேதான் பாமினியிலும் எழுத்துக்களையும் எழுத்தின் பகுதிகளையும் வரிசைக் கிரமமாக எழுதிக்கொண்டு போவோம். எனவே எமது எழுத்துக்கூட்டும் சிந்தனை முறை, கணனிக்கு வெளியேயும் கணனிக்கு உள்ளேயும் ஒரேமாதிரி இருந்தாலே போதுமானது. ஆனால் தமிழ்நெற்99 இல் நாம் நமது எழுத்துக்கூட்டும் சிந்தனை முறையைச் சற்று மாற்றியே ஆகவேண்டும்.

இந்த விடயம் பற்றிச் சற்று விரிவாகவே கதைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நெற்99 முறையான தமிழின் அடிப்படை ஒலிப்புணர்ச்சி முறையில் எழுத்துக்களை ஒன்றுசேர்ப்பதை நான் எதிர்ப்பதாகக் கருத்து வந்துவிடும். தனிப்பட்ட அளவில் தமிழின் வளர்ச்சிக்கு அம்முறை உதவியாகவே இருக்கும் - குறிப்பாக நுட்பியலில்.

இங்கே நான் சொல்லவந்தது புதிதாகத் தட்டச்சத் தொடங்கும்போது கணனிக்கென்று எமது எழுத்துக்கூட்டும் சிந்தனை முறையை மாற்றவேண்டிய தேவை பாமினியில் இல்லையென்பதையே. அதன் காரணத்தாலும் பாமினி எனக்கு இலகுவாகவும் வேகமாகவும் இருந்தது என்பதைச் சுட்டவே.

========================
சரி, கிருத்திகன்.
எங்கோ தொடங்கி எங்கோ போய்விட்டேன்.

ஆக, நான் சொல்லவருவது, தட்டச்சப்பழகும்போதே நியமமுறைப்படி பழகுங்கள் என்பதையே. அதை எப்படிச் செய்வதென்று பிறகு ஓரிடுகை எழுதுகிறேன்.

மற்றும்படி நீர் சொல்வதைப்போல் ஒவ்வோர் எழுத்தாகப் பார்த்துப் பார்த்துக் குத்துவதென்றால், அதையே தொடர்ந்தும் பயன்படுத்தப் போகிறார்களென்றால், ஆம், அப்படிப் பழகுவதில் ஆங்கில வரிவடிவங்கள் அவர்களின் மனதில் பதியும் ஆபத்து உண்டே. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அப்படி ஒவ்வோர் எழுத்தாகப் பார்த்துப் பார்த்துத் தட்டச்சி பாமினியோ தமிழ்நெற்99 முறையோ பழகியவர்கள், இப்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் தமிழ்வசனமொன்றைத் தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்லும் நிலையில் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அப்படிச் சொல்லக்கூடிய நிலையில் இருந்தால், அவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடே சிந்திக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அப்படி அவர்களால் சொல்ல முடியாத நிலை இருக்கிறதென்றால், அவர்கள் ஏதோவொரு கட்டத்தில் தமிழ் வரிவடிவங்களூடாகவே சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

 

said ... (03 September, 2009 13:32) : 

உண்மைதான் வசந்தன்,

அன்றைக்கு எனது உறவினர் ஒருவர் தொலைபேசி நீங்கள் தட்டச்சிற முறையில ணகரத்தை எப்படி தட்டச்சுவது என்று கேட்டார்.

உண்மையில் எனக்குத் தெரியாது. நான் தட்டச்சும் முறை இன்ஸ்கிரிப்ட். அப்ப நான் சொன்னன்,

எனக்குத் தெரியாது... விசைப்பலகையில சரியா கைகளை வச்சா இடது கையின் நடுவிரல் இருக்கிற விசைக்கு கீழ் விசையை Shift உடன் அழுத்தினாச் சரியெண்டு.

ஃபோனரிக் தவிர ஏனைய முறைமைகளுக்கு இந்நிலைதான் இருக்கும். நான் தமிழில்தான் சிந்திக்கிறேன் தட்டச்சுவதற்காக.

ஆனால் இப்போது சிந்திக்காமலே அடிக்கிற அளவில இருக்கிறேன்.

 

said ... (03 September, 2009 15:11) : 

நிமல்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புதிய எழுத்துருவொன்றில் தட்டச்சிப் பழகுவது கடினமில்லை என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள்.
------------------
மயூரன்,
உமது திறமை ஆச்சரியமாகவே இருக்கிறது. நான் பார்த்தவரையில் யாரும் இவ்வளவு ஆழமாக பாமினியை நேசித்தது இல்லை;-)

கடிதத்தைச் சங்கேதமொழியில் எழுதவும் வாசிக்கவும் வேண்டிய தேவையிருந்ததாலேயே நீரும் உமது நண்பரும் அத்திறமையை வளர்த்துக் கொண்டீர்களென்று நினைக்கிறேன். தனியே தட்டச்சியதாலேயே அவ்வளவு தூரம் வந்திருக்குமென்றால் அது உங்கள் திறமைதான்.

 

said ... (04 September, 2009 17:46) : 

//பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது.

இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்”.

உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. //

நான் நான்கு ஆண்டுகளாக தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துகிறேன். கண்டிப்பாக மேற்கண்டபடி என்னால் எழுதிக்காட்டவோ, சிந்திக்கவோ. சொல்லவோ முடியாது. தமிழ்99 முறையில் எழுதுகிற எவருக்கும் இதே நிலை தான். எவ்வளவு வேண்டுமானாலும் பந்தயம் கட்டலாம் :)

நீங்கள் கடைசியில் சொன்ன சுற்று வழி கூட உதவாது. நான் ஆங்கிலத் தட்டச்சும் முறைப்படி பழகாததால் எந்த ஆங்கில எழுத்து எங்க இருக்கு என்று பலகையைப் பார்த்தால் தான் தெரியும். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் நீங்கள் குறிப்பிட்ட படி பலகையைப் பார்க்காமலேயே பழகியதன் விளைவு :)

 

said ... (04 September, 2009 17:51) : 

உங்கள் முந்தைய இடுகையை கூகுள் ரீடரில் பார்த்து விட்டு ஏதோ பாட்டுப் போட்டி போலன்னு நினைச்சிட்டேன் :)

தமிங்கில முறையை மட்டும் விட்டால் போதும். இலங்கையில் பாமினி பயன்பாட்டுக்கான பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களைப் புரிந்து கொள்கிறேன். உண்மையில், பாமினி போன்ற ஒரு தட்டச்சு முறையை விட்டு தமிழ்99க்குத் தாவுவது சிரமம். எனவே, புதிதாக தமிழ்த் தட்டச்சு பழக விரும்புவோர், திறமான ஒரு முறையை விரும்பினால், தமிழ்99ஐயும் முயன்று பார்க்கலாம்.

 

said ... (04 September, 2009 17:59) : 

//சடுதியாக பாமினிக்கோ தமிழ் 99க்கோ மாறமுயலும் என் போன்றவர்களுக்கு ‘இந்த' எழுத்தைத் தட்ட ‘இந்த; எழுத்து வரும் என்று பதிகிற அபாயம் இல்லையா? இருந்தால் அதைத் தவிர்த்து ‘அம்மா' ‘அம்மா' வாகவே படியுமா??//

தமிழ்99 முறையில் இந்த ஆங்கில எழுத்துக்கு இன்ன தமிழ் எழுத்து என்று நினைவு வைப்பது இயலாத விடயம். ammaa = அம்மா என்று நினைவு வைப்பதை விட 100 மடங்கு சிரமம். அம்மா எனத் தான் தொடக்கம் முதலே படியும். அப்படி படிந்தால் தான் பழகவே முடியும்.

http://wk.w3tamil.com/

பாருங்கள். இதில் ஆங்கில எழுத்தே கிடையாது. இன்ன தமிழ் எழுத்து இந்த இடத்தில் வரும் என்று விரலையும், மனதையும் பழக்க வேண்டும்.

 

said ... (05 September, 2009 06:14) : 

தமிழ் விசைப்பலகை முறைகள் தொடர்பான எனது புரிதல்களை தயவுசெய்து செவ்வைப்படுத்துங்கள்.

http://manimanasu.blogspot.com/2009/09/blog-post.html

 

said ... (07 September, 2009 22:38) : 

இரவி சங்கர்,
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

கூகிள் றீடரில் எனது வலைப்பதிவையும் வைத்திருக்கிறீர்களா? ஐயோ பாவம்! மாசக்கணக்காக அது வெறும் இடத்தை நிரப்புவதற்காகவே இருந்திருக்கும்.

பாட்டுப் போட்டியாகத் தோன்றியதில் வியப்பில்லை. 'எதிர்ப்பாட்டு' என்று நான் இடுகை போட்டாலும் போட்டேன், சயந்தன் 'இசைப்பாட்டு' என்றோர் இடுகையும் கானாபிரபா 'பின்பாட்டு' என்றோர் இடுகையும் எழுதினார்கள்.

நீங்கள் தமிழ்நெற் காரர் நம்பிப் பந்தயம் பிடிப்பியள், நாங்கள் பாமினிக் காரர் என்னெண்டு பிடிக்கிறது, மயூரன் இருக்கிறார் ஆப்படிக்க ;-).

பாமினியைப் (அட எழுத்துருவைச் சொல்றேன்) புரிந்து கொண்டதற்கு நன்றி. பேர் வைச்சவங்கள் பெட்டையின்ர பேரை வைச்சும்கூட உவங்கள் கனபெடியள் விட்டிட்டு ஓடீட்டாங்களெண்டது யோசிக்க வேண்டிய விசயம்தான்.;-)

 

said ... (07 September, 2009 22:39) : 

மணி, உங்கள் வலைப்பதிவிலேயே ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

அதை இங்கும் பதிகிறேன்.

=================
அழுத்தப்படும் விசைகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்திற் கொண்டு பார்த்தால் பாமினியை விட தமிழ்நெற்99 முறை விரைவானதாகத் தோன்றும். ஆனால் ஒருங்குறி எழுத்துரு மாற்றத்துக்கு வெளியே நின்று யோசித்தால் பாமினிக்கு ஓர் அனுகூலமுண்டு என்று கருதுகிறேன்.

தாளில் கையால் எழுதுவதைப் போன்றே பாமினி முறையில் தட்டச்சுகிறோம். 'கொம்பு' என்று தாளில் எழுதும்போது முதலில் ஒற்றைக்கொம்பை எழுதுவோம், பிறகு கானா, அதன்பிறகு அரவு(கால்), அதன்பின் மானா பிறகு அதன்மேல் ஒரு குற்று, கடைசியாக பூனா. இப்படி எழுதிப்பழகிய, அப்படியே மனதில் எழுத்துக்கூட்டிப் பழகிய எமக்கு தட்டச்சும்போதும் அதைப்போன்றே எழுத்துக்கூட்டிச் சிந்திப்பது இலகு. தட்டச்சுவதற்கென்று தனியாக ஓர் எழுத்துக்கூட்டும் சிந்தனை முறைக்குப் பழக்கப்படத் தேவையில்லை.

பாமினியில் அச்சொட்டாக நாம் எழுதுவதைப் போன்றே தட்டச்சுகிறோம். 'கொம்பு' என்று தட்டச்ச வேண்டுமானால் முதலில் ஒற்றைக்கொம்பு, கானா, அரவு, மானா, குற்று, இறுதியாக பூனா.

தமிழ்நெற்99 முறைக்கு தமிழின் அடிப்படையான ஒலிப்பிறப்பு முறையில் சிந்திக்க வேண்டும். 'கொ' என்றால் க+ஒ, 'பு' என்றால் ப+உ என்று சிந்திக்க வேண்டும். (அதுவும் மெய்யுக்குக் குற்றுப்போடாமல் எழுதவும் சிந்திக்கவும் தொடங்குவது எந்த விளைவைத் தருமென்பது இன்னொரு வாதமாக வரும். சிந்தனை முறையில் ஏற்படுத் தாக்கமே தமிழ் விசைப்பலகை முறைகள் பற்றி விவாதத்தில் முதன்மைக் கருப்பொருள். இந்நிலையில் தமிழ்நெற்99 உம் ஒருவகையில் பிரதிகூலத்தைக் கொண்டிருக்கிறதோ என எண்ணுகிறேன். இப்போதைக்கு எனது நிலை, பாமினியா தமிழ்நெற்99 ஆ என்பதன்று. ஆங்கில ஒலியியலை எதிர்ப்பதே முதன்மைத் தேவை.)

'பாமினியைப் பழக்காதீர்கள்' என்ற அறிவுரையை வலுப்படுத்த நியாயமான காரணங்கள் எவற்றையும் நான் இதுவரை காணவில்லை. வேகக்குறைவு என்பது முக்கியமான காரணமன்று. ஆங்கில ஒலியியலை எதிர்ப்பதற்கு நான் வேகக்குறைப்பை முக்கியமாக காரணியாகச் சொல்வதில்லை.
=======================

 

said ... (09 September, 2009 03:28) : 

வசந்தன், உங்களது கருத்துகளுக்கும் உங்களது வருகைக்கும் எனது நன்றிகள். உங்களது கருத்துக்கள் தமிழ் விசைப்பலகை முறைகள் தொடர்பான எனது மனசின் புரிதல்களை நிறையவே செவ்வைப்படுத்தியிருந்தன.

http://manimanasu.blogspot.com/2009/09/blog-post.html

 

said ... (13 September, 2009 02:59) : 

நோக்கியா செல்பேசிகளில் தமிழ் எழுதும் முறையும் தமிழ்99 முறையை ஒத்திருக்கிறது.

த+ஆ = தா என்று வருகிறது. மற்றபடி கணினி தமிழ்99 போல் எளிமைப்படுத்தும் விதிகள் இல்லை.

கணினி, இணையத்தை விட தமிழ் செல்பேசிகள் பரவலான புழக்கத்தில் இருப்பதால், அவர்கள் கணினிக்கு வருகையில் தமிழ்99 கற்க இலகுவாக இருக்கலாம்.

பார்க்க: தமிழ் செல்பேசி

 

said ... (07 February, 2011 00:03) : 

test

 

post a comment

© 2006  Thur Broeders

________________