Monday, March 24, 2008

அஞ்சாதே - கோமாளித் திரைக்கதை?

அண்மையில் 'அஞ்சாதே' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளிவந்திருந்தது. அதைப்பற்றி பலரும் சிலாகித்து எழுதியிருந்தார்கள். நானும் படம் பார்த்தேன்.
பார்த்து முடித்தபின் மனதுள் ஒரு கேள்வி வந்தது. நாயகன் விடும் தவறொன்றை மையமாக வைத்து எந்தக் கேள்வியுமின்றிக் கதையை நகர்த்தியிருக்கிறார்களே என்று. தமிழ்த்திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் ஏதாவது கோமாளித்தனமாக செய்தாக வேண்டுமென்ற புரிதல் இருந்தாலும் பலரும் தலையில் தூக்கிவைத்து ஆடிய இப்படத்திலுமா என்ற கேள்வி வந்தது.

படத்தில் நரேன் காவல்துறையினனாக ஆகிறான். தொடக்கத்தில் அத்தொழிலை விருப்பமின்றிச் செய்கிறான். இரத்தத்தைக் கண்டால் பயம்; கொலையைக் கண்டால் பயம் என்றிருக்கும் நரேன் ஒருசந்தர்ப்பத்தில் அப்பயங்களையும், அருவருப்பையும் தூக்கியெறிந்து செயற்படுகிறான். திரைப்படத்தின் மிகமுக்கிய திருப்பமாக நான் கருதுவது அதைத்தான். ஏற்கனவே தாக்கப்பட்டிருக்கும் ஒருவனைப் பாதுகாக்கச் செல்லுமிடத்தில் இத்திருப்பம் நடக்கிறது.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை (பார்த்தீபன்?) வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். அவனுக்குப் பாதுகாப்பாக நரேனும் இன்னொருவரும் செல்லும்போது அங்கே அவனைக் கொல்ல நாலுபேர் வருகிறார்கள். நால்வரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.
'அவன போடுறதுக்கு வந்திருக்காங்க.. வா நாம போய் ஒரு ரீ குடிச்சிட்டு வந்திடலாம்' என்று நரேனை அழைக்கிறார் மற்றவர். நரேன் போகவில்லை. துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி கொலை செய்யவந்தவர்களை மிரட்டுகிறார். அதற்கு நால்வரில் தலைவன் ஏதோ சொல்கிறான் (மிரட்டவில்லை). பிறகு கையிலிருந்த துப்பாக்கியைக் கீழே போடுகிறார் நரேன்.

திடீரேன தான் முன்பு தெருரெளடியாக இருந்தது ஞாபகம் வந்தோ என்னவோ செயற்படத்தொடங்குகிறார் நரேன். அந்தக்காலத்தில் செய்தது போலவே வாய்க்குள் எதையோ போடுகிறார், உடம்பைக் குலுக்கி ஒரு துள்ளுத் துள்ளுகிறார், 'என்னை செஞ்சிட்டு அவனச் செய்யுங்கடா' என்று சொல்லி அவர்களைச் சண்டைக்கு அழைக்கிறார்.

முகமூடியோடு வந்தவர்கள் கையில் கத்தியோடு ஒவ்வொருவராக நரேனிடம் வந்து அடிவாங்கிப் போகிறார்கள். அவர்கள் ஓடக்கூட இல்லை. இயல்பாக நடப்பதைவிடவும் மெதுவாகவே நடந்து போகிறார்கள். நால்வரும் தனித்தனியாக அடிவாங்கியபின் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்கிறார்கள்.

அவர்களில் ஒருவனையாவது பிடித்து முகமூடியைக் கழற்றி முகத்தைப் பார்ப்பதோ, ஏன் பிடித்துக் காவல்நிலையம் கொண்டுவருவதோ இயலாத காரியமன்று. 'திரைப்பட நாயகனை'த் தவித்த்து நூறுவீதமான காவல்துறையினரும் செய்திருக்கக் கூடியதும் அதுவேதான். ஆனால் பார்வையாளருக்குத் 'திருப்பத்தை'க் கொடுக்க நினைத்தோ என்னவோ மிஷ்கின் அப்படிச் செய்யவில்லை.

அதன்பிறகு நடப்பதுதான் நகைச்சுவையே.
நரேனை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். காவல்துறையில் அவர் புகழ் பரவுகிறது. குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் சிறப்பாக நியமிக்கப்பட்ட பொன்வண்ணன் நரேனைத் தனக்குத் தரும்படி கேட்டுப் பெறுகிறார். அவர்களின் உடனடி வேலைத்திட்டம் என்னவென்றால் நரேனிடம் அடிவாங்கியவர்களைப் பிடிப்பது. அதுவும் எப்படி? நரேன் அடித்த சம்பவத்தில் ஒருவன் பேசினான் அல்லவா? அவனுடைய குரலை நரேனைக் கொண்டு அடையாளப் படுத்த வேண்டும். அதற்காக பொன்வண்ணன் நரேனையும் கூட்டிக்கொண்டு அலைகிறார்.

அடப்பாவிகளா! அண்டைக்கே ஒருத்தனின்ட முகமூடியைக் கழட்டிப் பாத்திருந்தா, ஏன் ஒருத்தனையாவது பிடிச்சுக் கொண்டந்திருந்தா இந்த ஆர்ப்பாட்டம் ஒண்டும் தேவையில்லையே?
சரி, அது நரேனின் தவறாகவே இருக்கட்டும். ஆனால் அத்தவறு குறித்து ஒரு கேள்விகூட நரேனிடம் கேட்கப்படவில்லை. உண்மையில் நரேன் மீது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்; நரேன் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு 'உஷார் மடையனை' ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளியிருக்க எந்த நியாயமுமில்லை.
குறைந்தபட்சம் பொன்வண்ணனாவது இது குறித்து நரேனைக் கடிந்திருக்கும் காட்சியொன்றை வைத்திருக்கலாம்.

'அரண்' என்ற திரைப்படத்திலும் இதுபோல் மிக அற்பத்தனமான காட்சியொன்றை வைத்திருப்பார்கள். நாட்டையே ஆபத்தில் தள்ளக்கூடிய முட்டாள்தனமொன்றை 'ஹீரோயிசம்' என்ற பேரில் நாயகன் செய்துவிட்டு தன்னோடு இருப்பவர்களைச் சாககக்கொடுத்துவிட்டு தன்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். அச்செயல் குறித்த கதையாடல், குற்றவுணர்வு எவையும் படத்தில் இல்லை. "அரண்" பற்றித் தனியாக எழுதிக் கிழிக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~~
இப்படத்தில் உறுத்திய இன்னொரு காட்சி, கரும்புத்தோட்டத்தில் நரேனும் பிரசன்னாவும் சண்டைபிடிக்கும் காட்சி. நகைச்சுவைக்கென தனியாக ஒருகாட்சியும் வைக்கவில்லையென்ற காரணத்தாலோ என்னவொ அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~
இப்படி எழுதுவதால் இது தரமற்ற படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். மற்றவர்கள் எழுதிய பல விடயங்களில் எனக்கு உடன்பாடுண்டு.
இன்னும் சொல்லப்போனா, நாங்கள் மினக்கெட்டு ஓரிடுகை எழுதிறதுகூட அது ஒரு வித்தியாசமான, முக்கியமான படமெண்டபடியாத்தான்.

அதுக்காக, இவ்விடுகையை வைத்து அது தரமான படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். அதுவேறு இதுவேறு. ;-)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"அஞ்சாதே - கோமாளித் திரைக்கதை?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (24 March, 2008 13:26) : 

//முகமூடியோடு வந்தவர்கள் கையில் கத்தியோடு ஒவ்வொருவராக நரேனிடம் வந்து அடிவாங்கிப் போகிறார்கள்.//

மிஷ்கின் முந்தைய படத்திலும் சண்டைக்காட்சியே இப்படித்தான் இருக்கும், ஒவ்வொரு ஆளா தான் வந்து அடி வாங்கிட்டு போவாங்க :-))

அதான் அவரது ஸ்டைல் போல!

உண்மைல எக்கசக்க ஓட்டைகள் படத்தில இருக்கு, கொஞ்சம் லோக்கல் வாசனையுடன் படத்தை எடுத்திருப்பதால் மக்களிடம் ஆதரவு வாங்கிடுச்சு.

தமிழக காவல்துறை வழக்கை எப்படி கையாள்வார்கள் என்றே தெரியாமல் சினிமா போலிசாகவே படத்தை எடுத்திருக்கார்.

சந்தேகப்பட்டா அவனைத்தூக்கிட்டு வந்து அடி பின்னி எடுத்திருவாங்க , அவனே உண்மையை கக்கிடுவான். படத்தில் வருவது போல முதலில் சப்பைனு வரக்கேரக்டர்கிட்டே தயவாலாம் பேச மாட்டாங்க!

இதனாலே சம்பத்தில் ஈடுபட்டவங்க உடனே தலைமறைவு ஆவது, தலைமறைவு ஆனால் அவன் தான் குற்றவாளினு உறுதிப்படுத்திக்கொண்டு காவல்துறை அவன் குடும்பத்தில இருக்கவங்கள உள்ள வச்சுடும், அப்புறம் என்ன குற்றவாளி தானா சரண்டர் தான்,இப்படித்தான் தமிழகத்தில் வழக்குகளை கண்டுப்பிடிக்கிறார்கள்.

இதைவிட காமெடி கடத்துற பொண்ணுங்களை எப்போதும் மயக்க மருந்தூ கொடுத்தே வச்சிருக்கவங்க கிளைமேக்ஸ்ல கடத்துற ஐ.ஜி பொண்ணுங்களுக்கு மட்டும் மருந்தே கொடுக்கமாட்டாங்க, அப்போ தானே கரும்பு தோட்டத்திலே ஓட விட முடியும்:-))

 

said ... (24 March, 2008 14:32) : 

///அடப்பாவிகளா! அண்டைக்கே ஒருத்தனின்ட முகமூடியைக் கழட்டிப் பாத்திருந்தா, ஏன் ஒருத்தனையாவது பிடிச்சுக் கொண்டந்திருந்தா இந்த ஆர்ப்பாட்டம் ஒண்டும் தேவையில்லையே?
///

:) முதல் சீன்லயே எல்லாம் முடிஞ்சுட்டா அப்பரம் 3 மணி நேரம் என்னதான் காட்டுவாங்க.

நல்ல படங்க அது. சில 'ஓட்டை' எல்லாம் சினிமாக்கு அவசியமான ஓண்ணு. ரொம்ப லாஜிக் எதிர்பாத்தா கஷ்டம்தேன் :)

 

said ... (25 March, 2008 13:07) : 

வவ்வால்,
வருகைக்கு நீண்ட பின்னூட்டுக்கும் நன்றி.

SurveySan,

//:) முதல் சீன்லயே எல்லாம் முடிஞ்சுட்டா அப்பரம் 3 மணி நேரம் என்னதான் காட்டுவாங்க.//

நல்ல கேள்வி;-)

நீங்கள் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிலர் இதையே சீரியசாகச் சிந்தித்து என்னிடம் எதிர்க்கேள்வி கேட்கக்கூடும்.

அந்த முகமூடி மனிதர்களுடனான சம்பவத்தை தனித்த ஒரு சம்பவமாகக் கொண்டுவந்திருக்கலாம். அதாவது அந்த மனிதர்களையே பின்னர் தேடுவதாகக் கதையில்லாமல், நரேன் பயத்தை உதறி துணிந்து செயற்படத் தொடங்கியதைக் காட்டுவதற்காக மட்டும் அக்காட்சியை வைத்திருக்கலாம். பின்னர் நரேனின் திறமையைப் பார்த்து பொன்வண்ணன் தன்னோடு சேர்த்துக்கொள்வதாகவும், சிறுமிகளைக் கடத்துபவர்களை அவர்கள் தேடுவதாகவும் கதையைக் கொண்டு போயிருக்கலாம்.

அன்றி, அதே முகமூடி மனிதர்களைத் தான் தேடப்போகிறார்கள் என்றால், நரேன் அவர்களைக் கைது செய்யாத முட்டாள்தனத்தைக் குறித்த விசாரணை, கண்டிப்பு என்பவற்றையும் சேர்த்துக் கதையை நகர்த்தியிருக்க வேண்டும்.

இதுதான் நான் சொல்ல வந்தது.

 

said ... (25 March, 2008 15:41) : 

திரைப்படத்தில் ஆரம்பத்தில் சொல்லும் கருத்தும் தவறானது. என்ன பிழை செய்தாலும் பரவாயில்லை, எங்கள் வேலையை முடித்தால் சரி என்கிறமாதிரி!

 

post a comment

© 2006  Thur Broeders

________________