ஓரம்போ !!! - திரைப்படம்
அண்மையில் இப்படத்தைப் பார்த்தேன். ஏனோ தெரியவில்லை, பிடித்திருந்தது. பொதுவாக தமிழ்ச்சினிமாவில் கடுப்பேற்றும் விடயங்கள், 1. பாடற்காட்சிகள் 2. நகைச்சுவைக் காட்சிகள் 3. சண்டைக்காட்சிகள். இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது. அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை. வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது. ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி. ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை. பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை. இப்படி சில 'இல்லாமை'களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது. வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன. படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார். அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார். வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது. நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த 'சீத்தா' எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை. அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது. அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் - அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் - 'ஆக்ஷன் ஹீரோ' க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் - எதிர்ப்பார்க்கவில்லை. அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun. மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். பிடித்த காட்சி: பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன். ** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் 'பிகிலு' பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது. *** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு. அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன். வாழ்த்து. ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு). Labels: திரைப்படம், படைப்பாளி, விமர்சனம் |
"ஓரம்போ !!! - திரைப்படம்" இற்குரிய பின்னூட்டங்கள்
தம்பி வசந்தன் வணக்கமடா!
பொதுவாகத் தமிழ்ச் சினிமா பார்ப்பதைத் தவிர்க்கிறேன்!உனது விமாசனத்தைப் படித்துவிட்டு இன்றிந்தப்படத்தைப் பார்த்தேன்!நீ சொல்வது அவ்வளவும் உண்மை!
எனக்கும் பிடித்திருக்கிறது.
அந்த நாயகியின் உடை மிகம் பிடித்தமாக இருக்கிறது.
இத்தகையவொரு பெண்ணுடலைப் பார்ப்பது இப்போது கடினம்!
இப்போதைய உடல் மனிதக் கணங்களுக்குள் எதிர்ப்பால் வினையைமட்டும் மிகைப்படுத்தி நம்மை முட்டாள் ஆக்குவது.
இப்படமோ மனிதவுறவுகளைக் குறைந்தபட்சமாவது நேர்த்தியாகச் சொல்ல முனைகிறது.இது ஆரோக்கியமடா தம்பி!
//படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun.//
எனக்கும் அவர் நடிப்பு பிடித்திருந்தது. கடந்த ஆனந்த விகடனில் அவரின் பேட்டியும் வந்திருக்கின்றது.
// இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் 'பிகிலு' பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். //
இவர் மலையாள நடிகர்/இயக்குனர் லால்.
அனாமதேயமா வந்து முதலாவது பின்னூட்டம் போட்டவரே,
பேரொண்டைப் போட்டு எழுதலாமே?
ஒரிஜினல் முருகேசரா?
இல்லாட்டி சின்னாச்சியின்ர மோனா?
முதலில நானெழுதினது விமர்சனமில்லை.
பெண்ணுடல் அரசியல், மனித கணங்கள் எண்டெல்லாம் பெரிய பெரிய விசயங்கள் கதைக்கிறியள்; எனக்கெண்டா ஒரு கோதாரியும் விளங்கேல.
எண்டாலும் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
கானா பிரபா,
வருகைக்கு நன்றி.
அது Son of Gun எண்டுதான் வரவேணுமெண்டு நினைக்கிறன்.
லால் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.