Thursday, September 27, 2007

நேற்றும் ஒருவன் போனான் - சயந்தன்

நீண்ட நாட்களாக தீண்டப்படாமல் இருந்ததாலேயோ என்னவோ எனது சாரல் வலைப்பதிவை spamblog எனக்கருதி பூட்டி வைத்துள்ளார்களாம். கதவு திறக்கவேண்டுமெனில் அவர்களுக்கு அறிவித்து இரு நாட்கள் காத்திருக்க வேண்டுமாம். பதிவொன்றினை எழுதிக்கொண்டு உட்சென்ற பிறகு தான் இந்த விடயமே எனக்குத் தெரிந்தது. ஆகவே அவசரத்திற்கு வசந்தனின் பக்கத்தினைப் பயன்படுத்தி இப்பதிவை இடுகின்றேன்.

நிசாந்தன் என்னிலும் இருவயது இளையவன். ஆகவே பாடசாலை வகுப்புக்களிலோ அல்லது ரியூசன் வகுப்புக்களிலோ நான் அவனோடு சந்தித்துப் பழகியிருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஊரின் கலைநிகழ்வுகள் கோயில் நிகழ்வுகள் அல்லது விளையாட்டுத் திடலாய் நிரந்தரமாய் நாம் மாற்றியிருந்த சீக்காய் வயல் என்பவற்றில் நாம் அறிமுகமாகி நெருங்கியிருக்க முடிந்தது.

நிசாந்தன் சிறுவயது முதலே சங்கீதம் கற்றிருந்தான். என்னோடு மிருதங்கம் கூட கற்க வந்தவன் எனக்கு முன்பே அதை கைவிட்டது ஏனென்று தெரியவில்லை. நடிப்பு ஆற்றலும் கூடவே இருந்தது.

தொன்னூறின் இறுதி , மாவீரர் தினமென்று நினைக்கின்றேன். இசை நிகழ்ச்சி நாடகம் வில்லுப்பாட்டு என பல நிகழ்ச்சிகளில் நானும் அவனும் பங்குபற்றியிருந்தோம்.

பாதைகள் வளையாது - இந்தப்
பயணங்கள் முடியாது
போகுமிடத்தைச் சேரும் வரைக்கும்
பாதைகள் வளையாது - இந்தப்
பயணங்கள் முடியாது

என அவன் பாடினான்.

அதன் பின்வந்த ஒரு சில ஆண்டுகளில் ஒரு நவராத்திரி நிகழ்வு. எல்லாளன் நாடகத்தில் துட்டகைமுனுவின் தம்பி பாத்திரத்தை விருப்பமின்றி ஏற்று நடித்தான். எதுவாக இருப்பினும் எல்லாளன் பக்கத்துப் பாத்திரமொன்றைத் தாருங்கள் என்றவனை ஏதோவெல்லாம் சொல்லிச் சமாளித்தார்கள். இறுதியில் கைமுனுவின் தம்பியாக நடிக்கச் சம்மதித்தான். நான் கைமுனுவாக நடித்திருந்தேன். ஒரு காட்சியில் அவன் சுழற்றிய வாள் பார்வையாளர் மத்தியில் விழுந்து பரபரப்பை உண்டுபண்ணியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு 2002 இல் மீசை முளைத்த வாலிபனாகக் கண்டேன். கணக்கியல் துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். கணணி தொடர்பிலும் நிறைய ஆர்வமுற்றிருந்தான். கொழும்பு சென்று கல்வியைத் தொடர விரும்புவதாகச் சொன்னான்.

அப்போது ஊரின் பொறுப்பான இளைஞனாகிவிட்டிருந்தான். வாசிகசாலை சனசமூக நிலையம் என பல அமைப்புக்களில் பொறுப்புக்கள் அவனிடமிருந்தன.

2005 இல் அவனைச் சந்தித்த போது GCE – O/L பரீட்சையில் சித்தியடைந்த அவ்வூரினைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டிப் பரிசில் வழங்கும் நிகழ்வொன்றிற்காக மும்மரமாய் நின்றான்.

நிகழ்வின் இறுதியில் இசை நிகழ்வு - அன்றும் அவன் பாடினான் - முதன் முறையாக அவ்வாறான நிகழ்வொன்றிற்காக நான் அறிவிப்புச் செய்தேன். சொல்லத்தான் நினைக்கிறான் பாடலைப் பாடப்போவதாய்ச் சொன்னவனை மேடைக்கு அழைத்து உண்மையாகவே காதல் சுகமானது தானா எனக் கேட்ட போது வெட்கப்பட்டுச் சிரித்தான். நான் விளங்கிக் கொண்டேன்.

இதற்கு மேல் நேற்றைய புதினம் இணையச் செய்தியினைப் படியுங்கள்.

யாழில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மானிப்பாய் காரைநகர் சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டில்,
சங்கானை சிவப்பிரகாச வித்தியாசாலை இசை ஆசிரியையான சாரதா பரஞ்சோதி ,
உடுவில் உதவி அரசாங்க அதிபர் செயலக தொழில்நுட்பப் பணியாளர் காந்தன் நிசாந்தன்
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னே விரித்துக் கிடக்கும் ஆல்பத்தில் கசூர்ணா கடற்கரையோரத்தில் நானும் அவனும். தன் விரல்களால் என் தலையின் பின்னால் கொம்புகள் வைத்தபடி சிரித்த முகத்துடன் நிசாந்தன் !

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நேற்றும் ஒருவன் போனான் - சயந்தன்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (27 September, 2007 06:52) : 

:(

 

said ... (27 September, 2007 07:30) : 

நேற்று இருந்தவன் இன்று இல்லை, நோய் கொண்டு போய் இருந்தாலும் பரவாயில்லை , அநியாமான முறையில் அல்லவா இறந்துவிட்டான். மிகக்கொடூரம் இது.அரசு ஊழியர் போல இருக்கிறது பின் ஏன் இராணுவம் இப்படி செய்தது? மிக வருத்தம் தந்த செய்தி, ஏதோ சாதாரணமாக நினைத்து இப்பதிவினை திறந்தால் அதிர்ச்சி அளிக்கிறது.
:-(

 

said ... (27 September, 2007 08:21) : 

வலிக்கின்றது, உங்களின் நிலையில் இருந்தால் இன்னும் கனக்கும். :(

நிசாந்தன் என்ற பெயர் ஏனோ எனக்கு நன்கு தெரிந்தவரின் பெயராக இருக்கின்றது, அதுவும் உடுவிலில் வேலை என்றதும் இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

இவரைப் போல எத்தனையோ உறுதிப்படுத்தப்படாத மரணங்களை என் நண்பர்கள் சந்தித்துவிட்டார்கள். பலரின் நிலமை இன்னும் தெரியாது.

 

said ... (27 September, 2007 14:51) : 

நாளும் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டு தெருவோரங்களில் வீசப்பட்டுக் கிடக்கும் பிணங்களைப் புரட்டி இது என் பிள்ளையா எனத் தேடும் தாய்மார்கள் , சகோதரிகள்,.... என்று தான் இதற்கெல்லாம் முடிவு கிட்டுமோ?!

இக் கொலைகள் அனைத்தும் புத்தரின் பெயரால்...

என்ன சொல்வது...உங்களின் வலி புரிகிறது.

 

post a comment

© 2006  Thur Broeders

________________