Tuesday, March 13, 2007

வன்னிக்குட் புகுந்த நினைவு

நாள்: 01.03.1996
இடம்: கிளாலிக் கடனீரேரி
நேரம்: மாலை

படகுகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. அவை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வன்னிப் பெருநிலப்பரப்பு நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. இனிமேல் யாழ்ப்பாணம் திரும்புவோமா இல்லையா என்பதே தெளிவில்லாமல் எல்லோரும் பயணிக்கிறார்கள். நிறையப் பேருக்கு அது யாழ்ப்பாணத்தினின்று நிரந்தர இடப்பெயர்வு.

மிகுதிக் கதைக்கு முன் ஒரு சுருக்கம்:
1995 ஒக்ரோபர் 17ஆம்நாள் சூரியக்கதிர்-1 என்ற நடவடிக்கையை இலங்கை அரசபடைகள் தொடங்கியிருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமத்தைக் கைப்பற்றும் நோக்கில் இந்நடவடிக்கை நடந்தது. ஒக்ரோபரின் இறுதிப்பகுதியில் வலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்கு வந்திருந்தனர். முன்னேறும் இராணுவத்தை எதிர்த்து கடும் சண்டை நடைபெற்றது. இறுதியில் நவம்பர் இறுதியில் - மாவீரர் நாளுக்குப் பின்பாக யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் கைப்பற்றியதோடு அந்நடவடிக்கை முடிவுக்கு வந்தது. பின்னர் சில மாதங்கள் எதுவுமில்லை. இந்நேரத்தில் பல குடும்பங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். வன்னிக்கு வரும்படி புலிகள் மக்களை அறிவுறுத்தினர். சூரியக்கதிர் -2, 3 என்ற பெயர்களில் தொடர் நடவடிக்கைகள் செய்து ஏப்ரலில் யாழ். குடாநாடு முழுவதையும் சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்தன.

எமது பயணம் யாழ்.குடாநாடு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட முதல் நிகழ்கிறது.

கிளாலிக் கடனீரேலியில் முன்பு பயணம் செய்வதிலுள்ள பேராபத்தையும் கோரத்தையும் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபற்றி முன்பொரு இடுகையும் இட்டிருந்தேன். ஆனால் இப்பயணம் அப்படியான பயமேதுமற்ற பயணம். முன்பெல்லாம் இரவில் மட்டுமே பயணம். ஆனால் இப்போது பகலிலேயே படகுப்பயணம். மாலை நேரத்தில் நல்ல வெளிச்சத்தில் கிளாலிக்கரையிலிருந்து படகுகள் புறப்படுகின்றன. இப்போது தொடுவையாகவே படகுகள் பயணிக்கின்றன. அதாவது பலபடகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும். முதலாவது படகில் மட்டும் இயந்திரம் தொழிற்படும். மிகுதிப்படகுகள் அதன்பின்னால் இழுபட்டுக்கொண்டு போகும்.

நான் இயந்திரம் பொருத்தப்பட்ட முதலாவது படகில் இருக்கிறேன். மொத்தமாக பன்னிரண்டு படகுகள் பிணைக்கப்பட்டுப் பயணப்பட்டதாக ஞாபகம். இடப்பெயர்வு என்பதைத் தாண்டி எனக்கு அதுவொரு இரசிப்புக்குரிய பயணமாகவே இருந்தது. சூரியன் மேற்கே விழுந்துகொண்டிருக்கும் நேரத்தில், எதிரிகளாற் கொல்லப்படுவோமென்ற பயமற்ற, அமைதியான கடற்பயணம்.

அப்போது எனக்கு நீச்சல் அறவே தெரியாது. கடற்கரைக் கிராமமொன்றையே சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், கடற்கரையோடே வாழ்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாது. வருடத்துக்கொருமுறை கடற்கரையில் நடக்கும் மாதா திருநாளின்போது மட்டும் கடற்குளிக்க அனுமதி. அதுவும் இடுப்பளவு நீரில் முக்கிமுக்கி எழும்புவதுதான் குளிப்பு. அப்பர் கண்காணித்துக்கொண்டிருப்பார். இவ்வளவுக்கும் அப்பருக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதும் - அதுவும் சிறுவயதிலிருந்தே நீந்துவாரென்பதும் ஒரு முரண். கடற்கரையிலேயே வளர்ந்த எங்களுக்கே இப்படியென்றால் யாழ்ப்பாணத்தின் மற்றக் கிராமங்களையும் பட்டினங்களையும் யோசித்துப் பாருங்கள். பரம்பரையாகக் கடற்றொழில் செய்பவர்களை விட்டுப்பார்த்தால் மற்றவர்கள் யாராவது வீட்டில் முரண்டுபிடித்து, பெற்றோருக்குத் தெரியாமல் எங்காவது நண்பர்களோடு சேர்ந்து நீச்சல் பழகினால்தான் உண்டு. வன்னி - யாழ்ப்பாணச் சமூகங்கங்களை ஒப்பிடுகையில் இந்த நீச்சலும் வித்தியாசக் காரணியாக இருக்கும். நானும் வன்னிக்கு வந்துதான் நீந்தப் பழகிக்கொண்டேன்.

படகுப்பயணத்துக்கு வருவோம். அந்தப்பயணத்தில் நீந்தத் தெரியாமை எனக்குப் பயத்தைத் தரவில்லை. தற்செயலாக விழுந்தாலும் பக்கத்திலிருக்கும் யாரோ காப்பாற்றுவார்கள்; ஓட்டியாவது காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையிருந்தது. கடற்பயணத்தில் நிறையப்பேர் சத்தி எடுப்பார்கள். அந்தப் பயணத்திலும் சிலர் எடுத்தார்கள். ஆனால் எனக்குச் சத்தி வரவில்லை. அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏனென்றால் வாகனப் பயணங்களில் கட்டாயம் சத்தி எடுத்தே தீருவேன். எங்கள் கிராமத்திலிருந்து யாழப்பாண நகருக்கு பேருந்தில் வந்தால் குறைந்தது இரண்டு தடவையாவது சத்தி எடுக்காமல் வந்து சேர்ந்ததில்லை. அதுகூட கையில்வைத்துக் கசக்கும் தேசிக்காயின் உபயத்தில்தான் மட்டுப்படுத்தபட்டிருக்கும். இதனாலேயே என் பன்னிரண்டாவது வயதின்பின் யாழ்ப்பாணத்துள் எங்குச் செல்வதென்றாலும் சைக்கிள் பயணம்தான். மானிப்பாயிலிருந்து பளைக்குச் செல்வதென்றால் 'ஐயோ சைக்கிளிலயோ?' என்று மற்றவர்கள் வாய்பிளக்கும் நேரத்தில் நான் சைக்கிளில் மட்டுமே பளைக்கு வந்து செல்வேன். கொம்படி - ஊரியான் பாதை நடைமுறையிலிருந்த போது (எனக்குப் பன்னிரண்டு வயதுகூட நிறைவடையவில்லை) புலோப்பளையில் சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்று ஒருகிழமை தங்கிவிட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நானும் அம்மம்மாவும் மூன்றுவயது மூத்தவரான ஒன்றுவிட்ட அண்ணாவும் இரண்டு சைக்கிள்களில் வன்னி வந்து மூன்றுநாள் ஊர்சுற்றிவிட்டுத் திரும்பினோம். குஞ்சுப் பரந்தன் அடையும்வரை ஒரு குவளை பச்சைத்தண்ணீர்கூட குடிக்கமுடியாமல் இயங்கவேண்டியிருந்த - தண்ணீரின் அருமையை வாழ்க்கையில் முதன்முதல் உணர்ந்த அவ்வனுபவத்தை விட்டுப்பார்த்தால் அப்பயணம் மிகுந்த உல்லாசமாகவே எனக்கு இருந்தது. அந்தக் கள்ளப் பயணத்திலேயே வன்னி மீது எனக்கொரு அதீத பிடிப்பு வந்துவிட்டது. சைக்கிளில் வன்னி சென்று சுற்றி வந்ததை என் நெருங்கிய நண்பர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. அப்பயணம் பற்றி பிறகொருக்கால் பேசலாம்.
வாகனப் பயணங்களில் தவறாமல் சத்தி எடுத்தே தீரும் நான், அனுபவமற்ற கடற்பயணத்தில் சத்தியெடுக்காமல் வந்தது ஆச்சரியம்தானே?

படகுகள் மெதுவாகப் பயணி்த்துக்கொண்டிருந்தன. நேவி வருவானோ? அடிவிழுமோ என்று முன்புபோல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யவேண்டிய தேவையில்லை. இப்போதெல்லாம் நேவி இக்கடலில் வருவதேயில்லை.
படகுகள் ஆலங்கேணியை அண்மிக்கின்றபோது பொழுதுபட்டுக்கொண்டிருந்தது. இருள் சூழத்தொடங்கியது. கரையில் அரிக்கன் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. படகுகள் கரையை அண்டின. தரையில் இறங்கினோம். வன்னிமண் நிரந்தரக் குடிமக்களாக எங்களை ஏற்றுக்கொண்டது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் உழவு இயந்திரத்தில் மட்டும்தான் பயணிக்கலாம். பிறகுதான் ஏனைய வாகனங்களில் போகலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாகனம் ஓரிடத்தில் நின்றது. இது என்ன இடம் என்று கேட்டேன். 'விசுவமடு றெட்பானா' என்றார்கள். பின்னர் இன்னொரு சந்தியில் நின்றது. வாகனத்தில் ஏதோ பிரச்சினை என்று சொல்லி எங்களை இறக்கிவிட்டு ஒரு திருத்தகம் தேடிப்போனார்கள். அது என்ன சந்தி என்று கேட்டேன். 'புதுக்குடியிருப்புச் சந்தி' என்றார்கள். "இந்தப்பாதை எங்க போகுது, அது எங்க போகுது" என்று விவரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒருபாதை முல்லைத்தீவு போகிறது.
'உப்பிடியே போனா நேர முல்லைத்தீவுக் காம்புக்குப் போகலாம்'
'கனதூரமோ?'
'சீச்சி!. ஒரு பத்துமைல் வரும்'.
இவ்வுரையாடல் நடந்து மூன்றுமாதங்களில் முல்லைத்தீவுப் படைத்தளம் தமிழர்களின் வசமாகியது. வன்னிப்பெருநிலப் பரப்புக்குள் தனித்துத் துருத்திக்கொண்டிருந்த ஒரே இராணுவப் படைத்தளம் இதுதான்.

நாங்கள் வன்னி வந்தபோது புதுக்குடியிருப்புச் சந்தியில் நாலோ ஐந்து கடைகள் மட்டுமே இருந்தன. இரவு எட்டு, ஒன்பது மணியோடு அவை பூட்டப்பட்டுவிடும். சந்தியில் மாடுகள் படுத்திருந்தன. சிலநாட்களிலேயே அச்சந்தி மாறத்தொடங்கி, பின் வன்னியின் மிகமுக்கியமான பட்டினமாகவே மாறிவிட்டது.

அன்றைய பயணம் புதுக்குடியிருப்பிலிருந்து முத்தையன்கட்டு நோக்கி உழவியந்திரமொன்றில் தொடங்கியது. விடிகின்ற நேரமாகிவிட்டது என்றாலும் பாதையை மூடி வளர்ந்திருந்த அடர்ந்தகாடு இன்னும் முழுமையான வெளிச்சத்தை விடவில்லை. மன்னாகண்டல் சந்திக்கு வருமுன்பே இருமுறை யானைகளைச் சந்தித்துவிட்டோம். எனது ஐந்தாவது வயதில் மடுவுக்கு நடந்துவந்தபோது காட்டுயானைகளைப் பார்த்தபின் இப்போதுதான் பார்க்கிறேன். அவை எதுவுமே செய்யவில்லை. தம்பாட்டுக்கு வீதியைக்கடந்து காட்டுக்குள் இறங்கின. முத்தையன்கட்டுக்கு வரும்வழியில் நீர்த்தேக்கங்கள் சில வந்தன. யாழ்ப்பாணத்து ஆரியகுளம் அளவுக்கு - சில அவற்றைவிடப் பெரிதாகவும் இருந்தன. அந்தக் குளங்களுக்கு என்ன பேர் என்று கேட்டபோது அவை குளங்களல்ல; மோட்டைகள் என்று விளக்கம் தரப்பட்டது.

முத்தையன்கட்டுக்கு வந்தாயிற்று. ஆனால் முத்தையன்கட்டுக் குளத்தைப் பார்க்கவில்லை. அடுத்தநாளே இரணைமடுவுக்குப் போகவேண்டி வந்தது. அந்த அதிகாலையில்தான் நான் முதன்முதல் இரணைமடுவைப் பார்க்கிறேன். எதிர்ப்பக்கத்துக் கரை தெரியவில்லை. முதலில் நான் இதை ஏதோ ஒரு கடனீரேரி என்றுதான் நினைத்திருந்தேன். பிறகுதான் சொன்னார்கள் இதுதான் இரணைமடுக்குளமென்று. பெரியகுளமென்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு பெரிதாயிருக்குமென்று நினைக்கவேயில்லை. அந்த ஆச்சரியத்தோடே முத்தையன்கட்டு வந்தேன். அந்தக்குளமும் அப்படியேதான்.

பங்குனி மாசம் மிகக்கடுமையான பனி. அதுவும் முத்தையன்கட்டுக் குளத்தின் சுற்றுப்புறங்கள் மிகக்கடுமையான பனியாக இருக்கும். பல நேரங்களில் இருபதடியில் ஒருவர் நிற்கிறார் என்பதே தெரியாதளவுக்குப் பனிப்புகார் மூடியிருக்கும். மிக மகிழ்ச்சியாகவும் புதுமையாகவும் அந்த அனுபவம் இருந்தது.

நாங்கள் வன்னி வந்தபோது வன்னி வன்னியாகவே அதன் இயல்போடு இருந்தது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் 'முகம்' என்று ஒரு திரைப்படம் வெளியிட்டிருந்தார்கள். அதில் வன்னியை வளங்கொழிக்கும் பூமியாகவும் அங்குக் குடிபெயர்வது நன்மை பயக்குமென்றும் ஒரு கருத்து இடம்பெறும். புதுவை இரத்தினதுரை வன்னிப் பெருநிலம் பற்றி எழுதிய "வன்னி அள்ளியள்ளி வழங்குகிறார் கொள்ளை வளம்" என்ற வரிவரும் அருமையான பாட்டொன்றும் அப்படத்தில் இடம்பெற்றது. பாடலிற்சொல்லப்பட்டது போல்தான் அப்போது வன்னியிருந்தது. பொதுவாக எல்லாப் பொருட்களும் யாழ்ப்பாணத்தோடு ஒப்பீட்டளவில் மிகமிக மலிவாக இருந்தன. பழவகைகளோ மீன், இறைச்சி வகைகளோ மிகமிக மலிவு. அப்போது வன்னியில் கிலோ மாட்டிறைச்சி வெறும் இருபது ரூபாய்கள் மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் இது எண்பது ரூபாவாக இருந்தது. நல்ல தேங்காய்கள் நாலு, ஐந்து ரூபாயாக இருந்தன. கொஞ்சநாட்களில் வன்னியிலும் எல்லாம் மாறத்தொடங்கியது. புதிய குடியிருப்புக்கள் வந்தன. நிறையக் கடைகள் முளைத்தன. விலைகள் அதிகரித்தன.

நான் முத்தையன்கட்டு வந்த முதல்அதிகாலை மறக்கமுடியாதது. விடிந்தபோது எங்கும் வண்ணத்துப்பூச்சிகள். அருகிலிருந்த தோட்டமொன்றிலிருந்து காட்டுப் புதர்நோக்கி போவதும் வருவதுமாக மஞ்சள் நிறத்தில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள். அதற்குப்பின்னான வருடங்களில் அப்படியொரு வண்ணத்துப்பூச்சிப் பவனியை நான் பார்க்கவில்லை.
வந்த முதற்சில நாட்களில் மரங்கள், தாவரங்களை அறிவதில் சுவாரசியமாகப் போனது. வன்னி மரங்களில் பாலை மட்டுமே உடனடியாகக் கண்டுபிடிக்கக்கூடியவாறு முன்பே அறிமுகமாக இருந்தது. மற்றும்படி பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த முதிரை, கருங்காலி போன்ற வைர மரங்களுட்பட அதுவரை கேள்விப்படாத பலவற்றையும் அறிந்தேன். எல்லாப் பாலைமரங்களும் காய்ப்பன என்று அதுவரை நினைத்திருந்த நான் பெருமளவான பாலைமரங்கள் தம் வாழ்நாளில் காய்ப்பதேயில்லை என்பதை அறிந்துகொண்டேன்.
"தேவாங்கு" என்று மனிதரைத் திட்டப் பயன்படும் அந்த விலங்கு பலஇரவுகள் உரத்து அழுதுகொண்டிருக்கும். எங்களுக்கு அழுவதுபோல் இருந்தாலும் அதுதான் அவ்விலங்கின் உண்மையான ஒலி. அதைப்பார்க்க வேண்டுமென்ற என் விருப்பம் ஒருவருடம் தாண்டியபின்தான் நிறைவேறியது. யானைகள், மயில்கள், குரங்குகள் என்று மிகச்சாதாரணமாகப் பார்க்க முடிந்த விலங்குகள் நிறைய.

மேலும் சில விசயங்கள் சொல்லப் போனால் இடுகை நீள்வது மட்டுமன்றி முதன்மைத் தொனியிலிருந்து மாறுபட்டுவிடுமென்பதால் அவற்றை வேறோர் இடுகையில் வைத்துக் கொள்ளலாம்.

பிறகு எல்லாம் தலைகீழ். யானை பார்ப்பதென்றால் தவமிருக்கவேண்டிய நிலை. மயில்களும் வெகுவாகக் குறைந்து போயின. குரங்குகள் மட்டும் எப்போதும்போல இருந்தன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய அந்தப் படகுப்பணயத்தை மீள நினைக்கிறேன். யாழ்.குடாநாடு முழுமையாக அரசபடையால் ஆக்கிரமிக்கப்படப் போகிறதென்பதிலோ, ஆக்கிரமித்த இராணுவம் அடித்துவிரட்டப்படும்வரை மீளவும் யாழ்ப்பாணம் திரும்புவதில்லையென்பதிலோ எந்தச் சந்தேகமுமின்றி தெளிவாக இருந்தேன். நிறைய மக்கள் அப்படித்தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருக்கும் அப்பயணம் யாழ்ப்பாணத்துக்கான 'பிரியாவிடை' நிகழ்வு. சிலருக்கு நிரந்தரமான பிரிவு. கண்ணீரும் கம்பலையுமாகத்தான் பலர் பிரிந்தார்கள், இடப்பெயர்வில் எதிர்கொள்ளப் போகும் அவலங்களை நினைத்துமட்டுமன்று, யாழ்ப்பாணம் என்ற நிலப்பகுதியை விட்டுப் பிரிவதாலும்தான்.
அன்றைய நாளில் நான் இப்படியான உணர்ச்சிகளுக்கு ஆட்படாமலிருந்தேன் என்றுதான் நினைக்கிறேன். இனிமேல் வன்னிதான் நிரந்தரம் என்று அன்றே முடிவாகியிருந்தேன் என்றுதான் உணர்கிறேன். வன்னிமீது எனக்கிருந்த மயக்கமும் அந்தநேரத்தில் பொறுப்புணர்ச்சியற்றவனாய் இருந்த சூழ்நிலையும் புதிய அனுபவங்களையும் வாழ்க்கைச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆர்வமும் சேர, அப்பயணம் ஓர் உல்லாசப்பயணம் போன்றிருந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

பிரதேசங்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது என்வரையில் தவறேயன்று. பிரதேச அடையாளங்களைத் தொலைத்துவிட்டோ மறைத்துவிட்டோ வாழ்வது அத்தனை சுலபமில்லையென்பதோடு அவசியமுமற்றது. என்னதான் இருந்தாலும் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகும் நபர்களில் இயல்பாக ஏதோவோர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. [ஆனால் சொந்த மாவட்டக்காரன் (யாழ்ப்பாணம்) என்று வரும்போது எனக்கு எள்ளளவும் இந்த ஈர்ப்பு வருவதேயில்லை.] புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஒருவருடத்தின் பின்புதான் நான் யாழ்ப்பாணம் போனேன். அங்குச் செல்ல வைத்தது சொந்தக் கிராமத்தில் நடந்த ஒரு கோயில் திருநாள்தான். ஊரைப் பார்க்கும் ஆவலோடு, இலங்கைக்குள் மட்டுமன்றி உலகத்தில் சிதறி வாழ்ந்த ஊர்க்காரரையும் உறவினரையும் ஒன்றிணைத்த அத்திருநாளில் எல்லோரையும் காணலாம் என்ற அவாவுமே என்னை அங்குப் போகவைத்தது. கிராமத்தின் எல்லா இடமும் திரிய முடியாதபடி தடையிருந்தாலும் சில இடங்களிலாவது காலாற நடந்து சிறுவயது ஞாபகங்களின் நினைவை மீட்டி இன்புற முடிந்தது. நிறையப் பேரை நீண்டகாலத்தின் பின் கண்டு அளவளாவ முடிந்த திருப்தியோடும், ஆயிரக்கணக்கான பனைகள் தறிக்கப்பட்டு ஓ வென்று வெட்டையாத் தெரிந்த இடங்களைப் பார்த்த பொருமலோடும், இன்னமும் கோயில் திருவிழாக்கள் முன்புபோலவே சண்டை சச்சரவுகளோடுதான் நடக்கின்றன என்ற புரிதலோடும், எங்கள் சொந்த வீட்டிலும் காணியிலும் முகாம் அமைத்து இருந்துகொண்டு அந்தச் சுற்றாடலையே உயர்பாதுகாப்பு வலயமாக்கி, கிட்டப் போயல்ல - எட்டத்திலிருந்தே வீட்டைப் பார்க்கும் விருப்பத்தையும் அனுமதிக்காமல் விரட்டிவிட்ட இராணுவத்தைச் சபித்துக்கொண்டும் "மூன்றுநாள் சூராவளிச் சுற்றுப்பயணத்தை" முடித்துக்கொண்டு யாழ்ப்பணத்தை விட்டு வெளியேறினேன்.

பிரதேச அடையாளத்தைப் பொறுத்தவரை, இன்னொரு பிரதேசத்தையோ அதன் குடிமக்களையோ தாழ்வாகக் கருதுவதும் ஒடுக்குதலுக்குள்ளாக்குவதும், தான்மட்டுமே உயர்ந்தவனென்ற இறுமாப்பும்தான் பிரச்சினைக்குரியது. அவ்வகையில் பிரதேசப்பெருமை கூடக் கவனமாகக் கையாளப்பட வேண்டியது. பலநேரங்களில் பிரதேசப்பெருமையையும் அடையாளத்தையும் ஓர் எதிர்வன்முறையாகவே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின் குறிப்பிட்ட படிப்பொன்றுக்காக யாழ்ப்பாணம் போன தங்கைகூட ராஜபக்ச பதவிக்கு வந்ததும் ஓடிவந்துவிட்டாள். யாழ்ப்பாணத்தில் வீடும் காணியும் பதிவில் மட்டுமே சொந்தமாக இருக்கிறது. வன்னியில் காணியும் வீடும் சொந்தமாச் சம்பாதித்தாயிற்று.

நினைவு தெரிந்தபின் என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலமும் வன்னியில் வாழ்ந்த காலமும் ஒரேயளவானவை. யாழ்ப்பாணத்தில் சிறுபராயம், வன்னியில் வளர்பராயம்.
இடத்தைக் கொண்டு அடையாளப்படுத்தவோ பெருமைப்படவோ வேண்டுமென்றால் நான் எந்த இடத்துக்குரியவனாக வெளிப்படுவேன் என்பது என்னைப்போலவே உங்களுக்கும் தெளிவாகத் தெரியும் (என்று நினைக்கிறேன் ;-)).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடர்புடைய பழைய இடுகைகள்:
1. முத்தையன்கட்டு-சில நினைவுகள்-1
2. முத்தையன்கட்டு-சில நினைவுகள்-2

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வன்னிக்குட் புகுந்த நினைவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (13 March, 2007 23:48) : 

அவசியமான பதிவு வசந்தன்.
....
பதின்மங்களில் எங்கே கூடக்கழிக்கின்றோமோ அந்த இடந்தான் அதிக நெருக்கமாய் அநேகருக்கு இருக்கும். சேரன் கூட ஓரிடத்தில் கூறியிருப்பார், பதிமங்களின் நினைவுகள்தான் கனவுகளாய் இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன என்று பொருள்பட.

 

said ... (14 March, 2007 00:10) : 

வசந்தன் உங்களை விட 3 மாதத்திற்கு முன்னர் கிளம்பிட்டம். 30.12.1995
அதே பயமில்லாத பயணம் ஒரு மதியப் பொழுதில். தற்காலிகம் என்று நினைக்க முடியாத அளவுக்கு எழுதுமட்டுவாளில் இருந்த தோட்டத்தில் சேகரித்த 800 மட்டை கிடுகுகளோடு.. ( அவை கேடி றூட்டில் வந்தன.;)) நீங்கள் போன அதே பாதையில் புதுக்குடியிருப்புக்கு முன்பாக தேவிபுரத்தில் திரும்பியாயிற்று. எனது O/L காலம் வன்னியில் தான். அதுவும் முதற் தடவையாக கலவன் பாடசாலை. இனிய நினைவுகள். கனவுகள். சந்தோசங்கள். ஏமாற்றங்கள்.:(
இறுதியில் வன்னியை விட்டு இந்தியா புறப்பட பல காரணங்கள்.
எல்லோரும் யாழ்ப்பாணம் போய் விட ஏற்பட்ட தனிமை. அட்டவணை போட்டுத் தாக்கிய மலேரியா. ஜெயசிக்குறு இவற்றோடு பல சொல்லலாம்.
2 வருடங்களும் மறக்க முடியாதவை. வாழ்க்கையில் ஒரு சில முதல்கள்... அங்கே தான். ;)

 

said ... (14 March, 2007 10:45) : 

உம்மட அனுபவத்தைக் கண்முன் கொண்டுவந்திட்டீர். வன்னி என்பது எனக்கு வெறுமனே கொழும்புப் பயணத்துக்கான இடைத்தங்கலாக மட்டுமே எனக்கிருந்தது. "ஊரான ஊரிழந்தோம்" ஜெயபாலனின் வரிகள் தான் நினைவுக்கு வருகுது.

 

said ... (14 March, 2007 16:32) : 

வசந்தன் கிளாலி கடல் கடந்த அனுபவம் இல்லை. கேரதீவு சங்குபிட்டி பாதையால் போய் வந்திருக்கிறன். வன்னில சில பகுதிகளை எண்டாலும் பாக்க கிடைத்தது பாதை திறந்தா பிறகு தான்.

இடம் பெயர சொல்லி அறிவிப்பு வந்த போது அண்ணா போய் இருக்க இடம் பாத்து வந்தார் ஆனா வெளிக்கிடவில்லை....

 

said ... (14 March, 2007 22:32) : 

டி.சே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//பதின்மங்களில் எங்கே கூடக்கழிக்கின்றோமோ அந்த இடந்தான் அதிக நெருக்கமாய் அநேகருக்கு இருக்கும்.//

பதின்மங்கள் எண்டால்கூட முன்னரைவாசி யாழ்ப்பாணத்தில் பின்னரைவாசி வன்னியில்.
பிந்திய பதின்மங்கள் எண்டு சொல்லலாமோ?
_________________________
சயந்தன்,
நீர் முந்தி சொன்னது ஞாபகம் இருக்கு. 'மனுசர் போகக்காணேல, உங்களுக்கு நாய் கேக்குதோ' எண்டு திட்டு வேண்டிக்கொண்டு கூட்டிவந்த நாய் காலநிலை ஒத்துவராமல் செத்துப் போன சம்பவத்தைச் சொல்லியிருந்தீர்.
வன்னிக்கு யாழ்ப்பாணத்திலயிருந்து கிடுகு காவியந்திருக்கிறியள்.

 

said ... (15 March, 2007 14:22) : 

கானா பிரபா, வி. ஜெ. சந்திரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 

said ... (15 March, 2007 14:41) : 

This comment has been removed by the author.

 

said ... (15 March, 2007 14:49) : 

வசந்தனண்ணா நிறைய நினைவுகளை வரவழைத்து விட்டீர்கள்.நான் கிளாலி நீரேரியைக் கடக்கவில்லை ஆனால் இரண்டுதடவை போயிருக்கிறேன்.ஒருமுறை அப்பாவையும் மாமாவையும் வழியனுப்பப் போயிருந்தோம்.புதினம் பார்க்கிற வயசு ஸோ பெரிசா ஆக்கள் படுற கஷ்டமெல்லாம் விளங்கேல்ல.அப்பாவையும் மாமாவையையும் ஏத்திவிட்டிட்டு நாங்கள் சுழிபுரம் அப்பிடி இப்பிடியென்று ஊர் சுற்றிவிட்டு அடுத்த நாள் வீட்ட போக அங்க மற்ற மாமா(படகில போன மாமான்ர தம்பி) அதே கிளாலிக் கடல் நீரேரியில் நடைபெற்ற சமரில் வீரமரணமடைந்து அப்பத்தான் அவருடைய வித்துடலை உள்ளுக்க கொண்டு வரினம் (ரெஜி-கப்டன் மதியழகன்).

ஜென்மத்துக்கு மறக்க முடியாத நாள்...அதிகமாகச் சிரிக்கக்கூடாதென்று சொல்றவையல்லா அதுக்கு அர்த்ம் அன்றுதான் விளங்கியது.

மற்றது பதின்ம வயதில் இருந்த இடங்களையும் பழகிய மனிதர்களையும் உருவான நட்பும் வாழ்வில ஒரு வசந்தகாலம் :-)) நான் பிடுங்கி நடப்பட்ட செடிகள் என்று அந்தக்காலத்தைப்பற்றி எழுதி வைச்சிருக்கிறன் (நான் மட்டும் வாசிக்க)

 

said ... (15 March, 2007 15:46) : 

வசந்தன்!

மற்றுமொரு அழகான நினைவுப் பதிவு. அண்மையில் திருமலை நண்பர் ஒருவர் கதைக்கும்போது சொன்னார், திருமலையில் உவர்மலை என்றொரு பகுதியுண்டு. அது அந்தக்காலத்தில்என்னைப் போன்ற பலரது, இயற்கைப்பூங்கா. இப்போது இடப்பெயர்வு காரணமாக பலரும் வந்து சேர்ந்து விட்டதால், அதனுடை அந்த அழகான அமைதி அற்றுப் போய்விட்டதென்று. வன்னியிலும் அந்த இயல்பு மாறியுள்ளதை உங்கள் பதிவில் தெரிந்து கொள்ள முடிந்தது. நாம், நாமாக வாழ நல்லதோர் மண் வன்னி என்பது என் எண்ணம்.
நன்றி!

 

said ... (15 March, 2007 15:50) : 

வன்னியின் குளங்களைப் போல் கிழக்கிலும் நிறையப் பார்த்ததில் எனக்கு அதன் பிரமாண்டம் பெரிதாகத் தெரியவில்லை. ஆயினும் இயற்கை அழகில் கந்தளாய், பொலனறுவை, யை விட, இரணைமடுவும், அக்கராயனும், எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

said ... (19 March, 2007 15:40) : 

சினேகிதி,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
கிளாலிக் கடனீரேரி கடக்கவில்லையென்றால் எப்படி குடாநாட்டிலிருந்து வெளியேறினீர்கள்?
இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் விமானம்மூலம் கொழும்பு வந்தீர்களா?

_________________________
மலைநாடான்,
யாழ்ப்பாணத்தாரின் வன்னிக்கான இடப்பெயர்வின் பேறு தனியே பாதகமாகத் தெரியவில்லை. நிறையச் சாதகங்களேயுள்ளன.
வன்னியரும் யாழ்ப்பாணத்தாரும் பரஸ்பரம் நன்மையே அடைந்தனர்.
இது இன்னும் ஆழமாகப் பார்க்கவேண்டிய விடயம்.

'யாழ்ப்பாணியத்திலிருந்து' வெளிவருதல் என்பது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருதலோடு நேரடியாகத் தொடர்புடையது என்றுதான் நினைக்கிறேன். (வெளிய வந்து நேரடியா கொழும்பிலயோ வெளிநாட்டிலயோ போய் குந்தியிருப்பதைச் சொல்லவில்லை;-))

வன்னியில் குடிசனப் பரவலாக்கம் சரியானமுறையில் நடத்தப்பட முடியாமைக்கு தொடர்ந்த போரே காரணம். வன்னிக்கு வந்தவர்களில் கிளிநொச்சியிலும் அதன் சுற்றாடலிலும் தங்கியிருந்த ஏராளமானோர் நாலைந்து மாதங்களிலேயே அடுத்த இடப்பெயர்வுக்கு ஆளாகினர். அது நடந்து ஐந்தாறு மாதத்தில் ஜெயசிக்குறு தொடங்கியதால் மீண்டும் மீண்டும் ஓட்டம். இறுதியில் புதுக்குடியிருப்பை மையமாகவைத்த ஒரு தொகுதியிலும் மறுபக்கம் மல்லாவியை மையமாகவைத்த இன்னொரு தொகுதியிலுமென்று சுருங்கிப் போனார்கள்.

காட்டுவிலங்குகளின் அழிவுக்கும் மறைவுக்கும் போர்தான் முதன்மைக்காரணம். ஜெயசிக்குறு நடைபெற்ற முழு இடமுமே காடுகள்தாம்.

 

said ... (21 March, 2007 17:01) : 

வசந்தன்
//இனிமேல் யாழ்ப்பாணம் திரும்புவோமா இல்லையா என்பதே தெளிவில்லாமல் எல்லோரும் பயணிக்கிறார்கள்.//
ஒவ்வொருவருக்கும் யாழ்ப்பாணத்தை விட்டுப் பிரியும்போது ஒவ்வொருவித சோக அனுபவங்கள்.

//நிறையப் பேருக்கு அது யாழ்ப்பாணத்தினின்று நிரந்தர இடப்பெயர்வு.// என் அன்னை யாழ்ப்பாணத்தை விட்டுப் பிரியாமல் அங்கேயே இருந்து, சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியிருந்தார்.
இவற்றை எல்லாம் நினைத்தால் மனம் கலங்கும், எழுதக் கைவருமா?

 

said ... (22 March, 2007 12:09) : 

வசந்தன்,
நல்ல பதிவு. இப்படியான துயரச் சம்பவங்களை நான் அனுபவிக்கவில்லை, நேரில் பார்க்கவில்லை என்றாலும், பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவை வரலாற்றுக் குறிப்புகள். தொடர்ந்தும் இப்படியான உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

 

said ... (28 March, 2007 19:32) : 

வசந்தன்

weird பற்றி எழுத அன்புடன் உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்:-)
நன்றி

 

said ... (07 May, 2007 03:05) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (20 May, 2007 11:38) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (22 May, 2007 03:49) : 

This comment has been removed by a blog administrator.

 

post a comment

© 2006  Thur Broeders

________________