கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
வணக்கம்! இங்கே எனது பதிவின் ஒலி வடிவத்தையும் இணைத்துள்ளேன். அதை என் பேச்சுத் தமிழிலேயே பதிவு செய்துள்ளேன். தரம் குறைவென்றாலும் விளங்கக் கூடியமுறையில் உள்ளது. செயலி தொழிற்படாவிட்டால் கீழுள்ள உரலை கிளிக்கி கேட்டுக்கொள்ளுங்கள். ஒலி வடிவ முயற்சி பற்றிய உங்கள் கருத்துக்களைத் தவறாது எழுதுங்கள். இல்லாவிட்டால் இங்கே முயற்சியுங்கள். இல்லாவிட்டால் இங்கே முயற்சியுங்கள். இதுவுமில்லையென்றால் உங்கள் அதிஸ்டம் அவ்வளவுதான். (என் அமுதக் குரலைக் கேட்க முடியாமற்போகும்) சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச உங்களுக்கு கால்பிரேக் அடிக்கிறதப் பற்றித் தெரியும். சரியான முறையில பிரேக் இல்லாத சைக்கிளுகளுக்கு பிரேக் அடிக்க காலைப் பாவிக்கிறது தான் அந்த முறை. சிலர் ரெண்டு காலையும் பாவிப்பினம், சிலர் ஒத்தக் காலப் பாவிப்பினம். செயின் கவர் இருந்தாத் தான் ரெண்டு காலும் பாவிக்கலாம். கால் பிரேக் அடிக்கேக்க வால்வ்கட்டை களண்டு காத்துப் போன சம்பவங்களும் இருக்கு. கூடுதலா றிம்மில பிரேக் அடிக்கிற ஆக்களுக்குத்தான் அப்படி. (யாழ்ப்பாணமெண்டாலும் பரவாயில்ல. வன்னியில இப்படி கால்பிரேக் அடிக்கேக்க காத்துப்போய் மைல்கணக்கில சைக்கிள் உருட்டியிருக்கிறம்.) சிலர் டயரில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். சிலர் றிம்மில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். இப்பிடி கால்பிரேக் பற்றிக் கதைச்சுக் கொண்டே போகலாம். யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு கால்பிரேக் அடிக்கிறது சர்வசாதாரணம். பொம்பிளயள் பெரிசா அடிக்கிறேல. ஆனா கவுரவம் அதுஇது எண்டு பாக்காத ஆக்களெல்லாம் கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி யோசிக்கிறேல. பெட்டையள் பாக்கிறாளவ எண்டுகூட கவலப்படிறேல. அவ்வளவுக்கு கால்பிரேக் அடிக்கிறதெண்டது சர்வசாதாரணம். சைக்கிள் பிரேக் பிசகினாலும் பிசகும் கால்பிரேக் ஒருக்காலும் பிசகாது. கால் பிரேக் அடிச்சுப் பழகினவனுக்கு சைக்கிளில புது பிரேக் பூட்டிக் குடுத்துப் பாருங்கோ, அவன் கால்பிரேக் தான் அடிப்பான். கால் தன்னிச்சையா பொசிசனுக்கு வந்திடும். அதிலயிருந்து மீளிறதுக்குக் கொஞ்ச நாளெடுக்கும். இப்ப கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி நான் பாத்த சுவாரசியமான சம்பவமொண்டச் சொல்லப்போறன். போன வருசம் யாழ்ப்பாணத்திக்குப் போனனான். கிட்டத்தட்ட பன்ரெண்டு வருசத்துக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போறன். அங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரிண்ட வீட்டுக்குப் போனன். ஆள் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம் தான். நானறிய அந்தாள் எந்த நேரமும் தண்ணியில மிதக்கிறவர். தண்ணியெண்டு நான் சொல்லிறது பனங்கள்ளத்தான். ஒரு பறணச் சைக்கிளில (அதுக்கு செயின்கவர், மட்காட், பெல் எண்டு எதுவுமிருந்ததா ஞாபகமில்ல.) தான் மனுசன் திரியும். கூத்து நடிக்கிறதிலயும் பாடுறதிலயும் ஆள் விண்ணன். கிட்டத்தட்ட ஒரு அண்ணாவி மாதிரி. செயின்கவர் இல்லாட்டியும் மனுசன் ரெண்டு காலாலையுந்தான் பிரேக் அடிப்பார். எனக்கு அது ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. இருக்கிற சீற்றிலயிருந்து கீழ வாற பாரில ரெண்டு பாதத்தின்ர முன்பக்கத்தையும் சேத்து வச்சுக் கொண்டு ரெண்டு குதியாலயும் பிரேக் அடிக்கிறது சாதாரணமா செய்யக்கூடியதில்ல. சரி. இனி என்ன நடந்ததெண்டு சொல்லிறன். நான் அவரிண்ட வீட்ட போகேக்க மனுசன் எங்கயோ வெளிக்கிட்டுக் கொண்டு இருந்தார். சைக்கிள உருட்டிக் கொண்டு படலைக்க வரவும் நானும் அங்க போய் இறங்கவும் சரியா இருந்தீச்சு. ஆள் நல்ல நிதானமாத்தான் இருந்தார். ஆனா ரெண்டு குதிக்காலிலயும் பெரிய கட்டு. ரெண்டு நுனிக்காலாலயுந்தான் உன்னி உன்னி நடந்து வாறார். என்னக் கண்டதும் ஆள் உடன மட்டுக்கட்டாட்டியும் பிறகு பிடிச்சிட்டார். ‘இரடாப்பா ஒருக்காப் போட்டு வாறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டார். எனக்குத் தெரியும் மனுசன் எங்க போகுதெண்டு. வேறயெங்க தவறணைக்குத்தான். அவற்ற காண்டிலில கொழுவியிருக்கிற பைக்குள்ள இருக்கிற பிளா சொல்லிப் போட்டுது. அவர் ஒரு பொலிசி வச்சிருக்கிறார். அதென்னெண்டா தவறணையில எல்லாரும் பாவிக்கிற பிளாவில குடிக்க மாட்டார். அவங்கள் புதுசாத்தந்தாலும் குடிக்கமாட்டார். தானே தனக்கெண்டு பிளா செய்து கொண்டுபோய்க் குடிப்பார். தவறணையால ஆள் திரும்பி வரேக்க கதைக்கக் கூடிய நிலையில ஆளிருக்காது எண்டது விளங்கீற்றுது. ‘என்னண்ண நடந்தது காலில?’ இது நான். ‘அதொண்டுமில்ல’ எண்டு சடைஞ்சவர் ‘பிறகு வந்து சொல்லிறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டிட்டார். நானும் சரியெண்டு வீட்டுக்க போனன். வழமையான புதினங்களெல்லாம் கதைச்சு முடிஞ்சப் பிறகு அவருக்கு காலில என்ன நடந்ததெண்டு அங்கயிருந்தவேற்ற கேட்டன். பெடிபெட்டயளெல்லாம் விழுந்துவிழுந்து சிரிக்குதுகள். பிறகு வெளிநாட்டிலயிருந்து கலியாணத்துக்கெண்டு வந்து நிண்ட அவரிண்ட மச்சான்காரன்தான் சொன்னார் என்ன நடந்ததெண்டு. ஒருநாள் இரவு எட்டுமணிபோல மச்சான்காரன் ஹீரோ ஹொண்டா மோட்டச்சைக்கிளொண்டில றோட்டால வந்துகொண்டிருக்கேக்க எங்கட கதாநாயகன் நல்ல மப்பில சைக்கிளயும் விழுத்திப்போட்டு நிக்கிறார். ஆளுக்கு இடம்வலமொண்டும் தெரியாமக்கிடந்திருக்கு. உடன மச்சான்காரன் பக்கத்து வீடொண்டில சைக்கிள விட்டுட்டு கதாநாயகன மோட்டச்சைக்கிளில ஏத்திக்கொண்டு வீட்ட விட வந்திருக்கிறார். மனுசன் மோட்டச் சைக்கிளில பின்னாலயிருந்து கொண்டு பெலத்த சத்தமா சங்கிலியன் கூத்துப்பாட்டு பாடிக்கொண்டு வந்திருக்கிறார். (மனுசனுக்கு முட் வந்திட்டா சங்கிலியன், ஞானசவுந்தரி, செபஸ்தியார் எண்டு எல்லாக்கூத்தும் நடக்கும். நான் கூத்தில பைத்தியமானதே மனுசனிண்ட பாட்டக்கேட்டுத்தான்), ஒரு ஒழுங்கைக்க திரும்பேக்க எதிர லைற் போட்டுக்கொண்டு ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்கு. எங்கட கதாநாயகனுக்கு ஏதோ தான் சைக்கிள் ஓடுறதெண்ட நினைப்பு. தன்ன இடிக்க வாறமாதிரி தெரிஞ்ச உடன மனுசன் ரெண்டு காலயும் தூக்கி அடிச்சாரே ஒரு கால்பிரேக். ஓடிக்கொண்டிருக்கிற மோட்டச் சைக்கிளிலயிருந்து கால்பிரேக் அடிச்சா எப்பிடியிருக்கும்? அப்பிடியே அள்ளீற்றுது. இவ்வளவும் கலியாண வேலப்பரபரப்புக்க நடந்திச்சு. சனத்துக்கு வியாக்கியானம் செய்ய நல்ல ஒரு கத கிடச்சிட்டுது. நான் நினக்கிறன் மனுசன் அண்டையோட கால்பிரேக் அடிக்கிறத மறந்திருக்குமெண்டு. குறிப்பு: சிலருக்கு நான் பாவிச்ச சில சொல்லுகளின்ர பொருள் தெரியாமலிருக்கலாம். அதுக்காக நான் அப்பிடி நினைக்கிற சொல்லுகளின்ர கருத்துக்கள கீழ தாறன். படலை: இது கேற் மாதிரித்தான். வளவுக்க இருந்து வெளிய போற பாதை. ஆனா சின்ன ஒரு இடைவெளி (கிட்டத்தட்ட ஒண்டரை யார்) மட்டுந்தான் இருக்கும். ஆக்களும் சைக்கிள் மற்றது மோட்டச்சைக்கிளுகளும்தான் இதுக்கால போய் வரலாம். கிராமங்களில கூடுதலா இதுதான் இருக்கும். ஒழுங்கை: சின்னப் பாதை. பிரதான பாதையளிலயிருந்து பிரிஞ்சுவாற கிளைப் பாதையள். பெரும்பாலும் தார் போடப்பட்டிருக்காது. (அந்த நேரத்தில பிரதான வீதிகள் கூட தாரில இருக்காது.) தவறணை: கள்ளு விக்கிற இடம். அங்கேயே வாங்கி அங்கேயே குடிப்பது. பிளா: கள்ளுக்குடிக்க பாவிக்கிற பாத்திரம். பனையோலையாலேயே செய்யப்பட்டது. தோணி மாதிரி இருக்கும். |
"கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”" இற்குரிய பின்னூட்டங்கள்
http://www.geocities.com/maathahal/Voice/Aboutcylebreak.rm
இதை கொப்பி பண்ணி பிறெளசரில ஒட்டி முயற்சித்துப் பாருங்கோ
எழுதிக்கொள்வது: அல்வாசிட்டி.விஜய்
கால் பிரேக் அனுபவம் எனக்கும் நிறையவே இருக்கு. நீங்கள் சொல்வது போலவே என் நண்பன் ஒருவனும் TVS 50 -ல் கால் பிரேக் அடிச்சதை நாங்கள் பார்த்து இன்னமும் அவனின் கால் பிரேக் விசயத்தை போட்டு அவனை பகடி பண்ணிக் கொண்டிருப்போம்
9.17 13.3.2005
எழுதிக்கொள்வது: Eelanathan
The web site you are trying to access has exceeded its allocated data transfer. Visit our help area for more information.
Access to this site will be restored within an hour. Please try again later.
11.43 13.3.2005
இப்போது புதிதாக இரண்டு இணைப்புக் கொடுத்துள்ளேன். சரிபார்க்கவும்.
ஈழநாதன்! இதென்ன குறும்பு. ஏதோ உதவி சொல்லப்போறியள் எண்டு நினைச்சா இப்பிடி ஒட்டி வச்சிருக்கிறியள். இப்பிடி ஒலிவடிவக் கோப்புக்கள எப்படி ஒலிக்கச் செய்யலாமெண்டு அறிவுள்ள ஆக்கள் (எல்லாருக்கும் இருக்கெண்டுதான் நினைக்கிறேன்) ஆராவது அறிவுரை தந்தியளெண்டா நல்லம்.
வசந்தன், அருமையான பதிவு. எங்க ஊரில, பிளாவை 'கோட்டை' என்று சொல்லுவார்கள். பனை மரத்தடியில் கள் குடிப்பவர்கள், கோட்டையில் தான் குடிப்பார்கள். சின்ன பாதைகளை 'இட்டாலி' என்று சொல்லுவார்கள்.
அம்மான் எனக்கொருக்கா மின்னஞ்சல் போடுங்கோ eelanathan at yahoo.com
வசந்தன்
வழக்கில் இல்லாத (அதாவது யேர்மனியில் அதிகம் எங்களுக்குத் தேவைப்படாத) சொற்களோடு
கால் பிரேக்.. சுவையாக இருந்தது. அந்த மனிதர்தான் பாவம். பறணைச் சைக்கிள் கூட இங்கு பாவிக்கப் படாத சொல்.
This comment has been removed by a blog administrator.
நன்றி விஜய், ஈழநாதன், சின்னப் பொடியன் (சிறுவன்), சந்திரவதானா. பறணை என்றால் மிகப்பழைய என்ற அர்த்தத்தில் வரும். இது இப்போதும் பரந்தளவில் எங்களிடையே பாவனையிலுள்ள சொல்.
எழுதிக்கொள்வது: Theivigan
வசந்தன்!எழுதுவதற்கு தேர்ந்தெடுத்த தலைப்பு மண்மணம் கமழ்கிறது.தாயகப்புழுதி வாசனையை வடிகாலமைத்து வாரி எறிந்ததற்கு நன்றி.ஆக்கங்கள் இப்படியான அபூர்வ தலைப்புகளில் அமைவது வரவேற்கத்தக்கது.தொடர்க!
தெய்வீகன்
13.59 17.3.2005
எழுதிக்கொள்வது: பாலு மணிமாறன்
பள்ளீ காலத்தில் என்னோடு படித்த சிவகுருவின் ஞாபகம் வந்தது - இதைப் படித்ததும். குட்டை வாடகை சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு போய், நல்ல வேகமெடுத்ததும், சட்டென்று தரையில் காலை ஊன்றி எழுந்து கொள்வான் சிவகுரு. சைக்கிள் மட்டும் தனியாகப் போய்க் கொண்டிருக்கும். ஓடிப் போய் யாராவது பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆசாமியின் தோளைத்தட்டி சிவகுரு சொல்லுவான் .. " அதோ பார்ரா ஒரு சைக்கிள் தானாப் போகுது ! " சிவகுருவின் அந்த சாகசங்களும், தோள் தட்டப்பட்டவர்களின் " ஆவென்ற" பார்வைகளும் இன்னும் ஞாபகத்தில் நிற்கிறது...
உங்கள் மொழிநடை நிறைய ஊகத்திற்கு வழி தருகிறது. நாங்கள் ஊகித்துவிட்டுப் போகிறோமே... விளக்கமெல்லாம் எதற்கு வசந்தன்?
11.57 17.3.2005
பாலு மற்றும் தெய்வீகன்! பின்னூட்டங்களுக்கு நன்றி. தெய்வீகன் நீங்களும் வலைப்பதிய வரலாமே. பாலு! எமது சில சொற்கள் தமிழ்நாட்டுத் தமிழருக்குப் புரியாது என்பதனால்த் தான் அப்படி விளக்கங்கள் போட்டேன். சுயமாக ஊகித்தறிவதிலும் அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதை எழுதியதால்தான் தமிழகத்தில் புழங்கும் சில வார்த்தைகளை அறிய முடிந்தது. நன்றி.
வசந்தன் கால்பிறேக் அடிச்சு காலில் காயம் வாங்கிய அனுபவம் எனக்கும் இருக்கு. உங்கள் கால் பிறேக் அடியை அனுபவிச்ச உணர்வை மீளவும் நினைவுபடுத்திய உங்கள் ஞாபகப்பகிர்வுக்கு நன்றிகள். பப்பாசியில் ஏறிடாதையுங்கோ வசந்தன். அச்சாக்குரல். வாழ்த்துக்கள்.
அன்புடன் சாந்தி
சாந்தி,
வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.
வசந்தன்!
இன்றுதான் உங்கள் முன்னைய ஒலிப்பதிவுகள் கேட்கமுடிந்தது. நானும் மனைவியுமாகக் கேட்டோம். கேட்டோமா? கண்ணில் கண்ணீர் வரும்வரை சிரித்து மகிழ்ந்தோம். ஒலிபரப்புத்துறைசார்ந்து உழைத்தவன் எனும் அனுபவத்தில் மீண்டும் சொல்கின்றேன். மிக அருமையான குரல்வளமும், ஒலிவடிவுக்கேற்ற பிரதியாக்கமும், நேரக்கட்டுமானமும், மிக அழகாக உங்கள் பதிவுகளில் தெரிகிறது. தொடர்ந்து செய்யுங்கள்.
பாராட்டுக்களும் நன்றிகளும்.
பிறேக் அடிச்ச ஆள் நீங்களில்லைத்தானே...:)