Wednesday, January 26, 2005

பலியாடுகள்?...

வணக்கம்!..
வெங்கட் அவர்களின் பி.பி.சி. செவ்வி கேட்டேன். அருமை. அதில் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதுவும் இறுதியில் பெற்றோரின் கல்வி சம்பந்தமான தலையீடு பற்றிக்கூறியிருப்பது முற்றிலும் உண்மை. இது முற்றிலும் தவறா என்று என்னால் கூற முடியாவிட்டாலும் பிள்ளைகள் தமது எதிர்காலம் குறித்த முடிவெடுப்பதில் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கூற முடியும். தனியே கல்வி விடயங்களில் மட்டுமல்ல, மதவிடயங்களில் கூட.

இங்கு இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இச்சம்பவத்தில் நானும் ஒரு பங்காளி என்பதால் சில சுயபுராணங்கள் வெளிவரலாம்.

என் நண்பனொருவன் சிறுவயதிலிருந்தே அவனது பெற்றோரால் நீ ஒரு மதகுருவாக (கத்தோலிக்க) வரவேண்டுமென்று கூறி வளர்த்து வந்தனர். ஐந்தாம் வகுப்பில் நீங்களெல்லாம் எதிர்காலத்தில் எப்படி வரஆசைப்படுகிறீர்கள் என (வழமையான) கேள்வியைக் கேட்டபோதும் அவன் ஒரு சிறந்த குருவானவராக வரவே ஆசைப்படுவதாகக் கூறினான். நண்பர்கள் நாங்களும் அவனை அடிக்கடி “அறுப்பதன்” மூலம் அவனுக்கு நினைவூட்டிக் கொண்டிருப்போம். அவனின் பெற்றோர் பகிரங்கமாகவே இதுபற்றி தம் அயலவரிடம் ஏன் கிராமம் முழுவதுமே சொல்லி விட்டார்கள். 14, 15 வயதுப்பருவத்தில் இயல்பாகத் தோன்றும் குறும்புகளைக் கூட மேற்சொன்ன காரணத்தைக் காட்டி அவனை நக்கலடித்திருக்கிறோம். பாதையில் போகும் பெண்களைப்பற்றி எமக்குள் (எமக்குள் மட்டும்தான்) ஏதாவது கதைக்கும் போது கூட அவன் நின்றால் “டேய் நீ சுவாமிக்குப் போகப் போறனி. அங்கால போ” என்று அவனை விரட்டுவோம். சினிமாப்பாடல்களைக் கேட்கையில் கூட. ஏதாவது விசயத்தில் அவன் சொல்வது பற்றி யாரும் சந்தேகம் வெளியிட்டால் “அவன் சுவாமியெல்லே பொய் சொல்ல மாட்டான்”. இப்படி நிறைய.(எல்லாம் பம்பலாகத்தான். அவனும் அதை அப்படித்தான் எடுத்துக்கொண்டான்.)

எங்களுரில் முதற்பூசையொன்று நடந்தது. அதாவது எமது கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் குருவானவராகி எமது கிராமத்தில் தனது முதல் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார். அத்திருநாளின் போது, பல பெரியவர்கள் மற்றும் சில மதகுருமார்களிடையே நாங்களும் நின்றிருந்தோம். நாங்கள் பரிபாலன சபையைச் (பூசைக்கு உதவுபவர்கள்) சேர்ந்தவர்கள். அவனது பெற்றோரும் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒரு பெரியவர் (சங்கிலித்தாம் என்று அவர்களைச் சொல்லுவோம்) தொடங்கினார். “இப்ப இன்னும் ரெண்டு பேர் செமினறியில படிச்சுக்கொண்டு இருக்கினம். அவயளுக்குப் பிறகு நீ தாண்டா மூண்டாவதா எங்கட இடத்தில இடத்தில இருந்து வாறவனாயிருப்பாய்” என்று என் நண்பனைப் பார்த்துச் சொன்னபோது அவனது பெற்றோரின் முகத்தில் வந்த பரவசத்தைப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தானே என் நண்பன். அதை மறக்க முடியாது. ஏனையவர்களும் அது பற்றியே கதைக்கத்தொடங்கினர். “எங்கட இடத்திலயிருந்து ஆக்கள் காணாது. அங்க சில்லாலையில கன பேர் போயிருக்கிறாங்கள்” என்ற ரீதியில் பேச்சுக்கள் வளரத்தொடங்கிய போது அவனுடன் நாம் அங்கிருந்து வெளியேறி விட்டோம்.

எனக்கு அவனை நினைக்கையிற் பாவமாக இருக்கும். நேரடியாக அதைப்பற்றி என்னிடம் எதுவுமே கதைப்பதில்லை என்றாலும், அவ்விசயத்தில் அவன் மிகுந்த சங்கடப்படுவது தெரிந்தது. சமயப்பாடத்தில் அவனும் நானுமே கூடுதலான கேள்விகள் கேட்போம். நிச்சயமாய் கூடுதல் மதிப்பெண் பெறுவதும் நாம் தான். “மாதா ஏன் செபமாலை வைத்திருக்கிறா? தன்னைத்தானே செபமாலை சொல்லி புகழ்ந்து கொண்டிருக்கிறாவா? என்பது போன்ற என் கேள்விகளுக்கு அவனது அபரித ஆதரவு எப்போதுமிருந்தது. சிலரிடம் (குறிப்பாக குருவானவரிடம்) அவனே அக்கேள்வியை என்சார்பில் கேட்பான். (நானறிந்த வரையில் இன்னும் எனக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை) இதுபோலவே பழைய ஏற்பாட்டில் ஆதாம் ஏவாள் படைப்புப் பற்றிய குறிப்புக்கள் ஒரு புனைகதையே என்று சமய பாடம் கற்பிக்கும் மறையாசிரியர் ஒத்துக்கொள்ளும் வரை அவரை அவன் விடவில்லை. இப்படி சமயம் சார்ந்து மட்டுமல்லாமல் பரந்து பட்ட அறிவையும் ஆவலையும் கொண்டிருந்தவன்.

இதற்கிடையே இடப்பெயர்வுகள் வந்து விட்டன. முதல் மூன்று இடப்பெயர்வுளிலும் அருகருகே வசிக்கும் பாக்கியம் எம் இருவருக்குமே கிடைத்தது. மானிப்பாய் பொது நூலகம் எமக்கான பொழுது போக்கிடமாக மாறியது. அவன் தான் எனக்கு ஜெயக்காந்தனை 13 வயதில் அறிமுகப்படுத்தியவன். சாண்டில்யனின் கடல்புறா வகையறாக்களை வேறு வித அனுபவங்களுக்காக பொத்திப்பொத்திப் படித்த போது “உதுகளையும் படி அதோட இந்தா இதுகளையும் படி” என்று யுகசந்தி சிறுகதைத் தொகுப்பையும் சில நேரங்களில் சில மனிதர்களையும் கொண்டு வந்து தந்தான். (இருபது வயதில் தான் நான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” முழுமையாக வாசித்து முடித்தேன்.)

நிற்க, விடயத்திலிருந்து வழுவி விட்டேனென்று நினைக்கிறேன். அவனைப்பற்றி ஏராளமாகக் கதைக்கலாம். கேட்ட நீங்கள் இருக்க வேண்டாமோ?பதினாறு வயதை நெருங்குகையில் அவன் நிறையவே மாறியிருந்தான். இந்நிலையில் தான் அவனை குருமடத்தில் (செமினறியில்) சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்டது. உண்மையில் அதிர்ந்து போனான். சாதாரண தரப்பரட்சையை எடுத்துவிட்டுப் போகிறேன் என்று கெஞ்சியும் யாரும் விடுவதாய் இல்லை. (பொடியன் இயக்கத்துக்குப் போய் விடுவான் என்று பெற்றோருக்குப் பயம் இருந்திருக்கலாம்.) இறுதியில் அவர்களே வென்றார்கள். கவலையோடே விடைபெற்றுப் போனான். போகும் போது என்னிடம் சிரித்தபடியே “டேய் இயேசுவுக்கும் எனக்கும் கன வித்தியாசம் இல்ல கண்டியோ” என்று விட்டுப் போனான். அவன் ஏதோ பம்பலுக்குச் சொல்கிறான் என்று விட்டு இருந்து விட்டேன். (இப்போது யோசிக்கையில் இருவருமே பலியாடு என்ற தொனியில் தான் சொன்னானோ என்று எண்ணுகிறேன்.)

குருமடம் போய் ஆறு மாதத்தில் விடுமுறையில் வந்தபோது சந்தித்தேன். வீட்டுக்குக் கூடப் போகாமல் என்னிடம் தான் நேரே வந்திருந்தான் (அவனை அழைத்து வந்த மாமன்காரனை ஏமாற்றிவிட்டு). அப்போது அவன் மிகக்குழப்பமடைந்திருந்தான். அவன் தன் எதிர்காலம்பற்றி தன் சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கணக்கிலெடுக்க முடியாதவனாயிருந்தான். குருமடத்தில் எல்லாமே நன்றாக இருப்பதாகவும் படிப்பதற்குரிய சுழல் நன்றாயுள்ளதாகவும் கூறியவன் தன் கனவு குருவானவர் ஆவதில் இல்லையென்று கூறினான். தான் போராடப் போவது ஏற்கெனவே எடுத்த முடிவென்றும் சில வேளை அது தெரிந்து தான் தன்னை இப்படி குருமடத்தில் சேர்த்து இருக்கலாம் என்றும் சொன்னான். அவனது போராட்ட விருப்புப் பற்றி எனக்குக் கொஞசமும் வியப்பில்லை. அவன் அப்படிச் சொல்லியிராவிட்டால்தான் வியந்திருப்பேன்.

அவனது அப்போதைய நிலை மிகவும் தர்மசங்கடமானது. ஊர் முழுவதும் தான் சுவாமியாகப் போகிறவன் என்று பறைஞ்சு கொண்டு திரிந்த பெற்றோருக்கு எவ்வளவு அவமானமாக இருக்கும் என்பதைப்பற்றிக் கவலைப்பட்டான். சிறுவயதிலிருந்தே தன்மீது சுமத்தப்பட்ட அப்பழுவை சுமந்துதான் ஆகவேண்டுமென்ற கட்டாயத்தில்; தானிருப்பதை எண்ணிப் புழுங்கினான். நான் எதுவுமே கதைக்கவில்லை. அவன் என்னிடம் அபிப்பிராயம் கூட கேட்கவில்லை. அவனுக்குச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஆறு நாள் விடுமுறையில் ஏறத்தாள தெரிந்தவர்கள் அயலவர்கள் நண்பர்கள் என அனைவரையும் சந்தித்தான். பிறகு போய்விட்டான். சாதாரண் தர முன்னோடிப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்த போது தான் முன்னேறிப்பாய்தலும் புலிப்பாய்ச்சலும் (இவையிரண்டும் யாழ்ப்பாணத்தைப்பிடிக்க இராணுவமும் அதை முறியடிக்க புலிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பெயர்கள்) நடந்தன. சாமான் சக்கட்டுக்களைத் தூக்கிக்கொண்டு ஓடி பின் மீண்டும் வீடு வந்து சேர்ந்த பின் என் நண்பனின் தாயார் அழுதபடியே ஓடிவந்து சொன்னா “டேய் அவனெல்லே நேற்று இயக்கத்துக்குப் போயிட்டானாம்.” அத்தோடு செமினறிச் சுவாமி மாருக்கும் விழுந்துதே பேச்சு. கேட்க ஏலாது.

சிறு வயதிலிருந்தே தன்மீது சுமத்தப்பட்ட நுகத்தடியிலிருந்து விலகுவதா வேண்டாமா என்று நீண்டகாலம் மனப்போராட்டம் நடத்திவந்தனின் மனம் தன் சொந்த வழியைத் தேர்ந்தெடுத்து விட்டது. நானோ எதுவுமே தெரியாத மாதிரி நின்றுகொண்டேன். உண்மையில் அப்போது ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட்ட ஓர் உணர்வு (ரிலாக்ஸ்?) ஏற்பட்டது. இதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இது என் நண்பன் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம். வெங்கட் அவர்களின் செவ்வியைப்பார்த்த போது ஏற்பட்ட பொறி. இவ்விடயத்தில் பெற்றோரை ஒற்றைப்படையாகக் குறைகூற நான் விரும்பவில்லை. அதற்கான துணிவும் எனக்கில்லை. தொழில் முறை சார்ந்த அழுத்தங்கள் என்றாலும் எதிர்கால வருமானம் பற்றிய ஏக்கம் என்று சொல்லலாம். இது அதுவுமில்லை. வெறும் புகழ்ச்சிக்காகத் தானோ.

பின்குறிப்பு: சுவாமி ஞானப்பிரகாசியார் பற்றி (இவர் யாரெனக் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) இளவாலை அமுது எழுதிய புத்தகம் வாசித்துள்ளீர்களா? அப்புத்தகத்தில் இதே மாதிரி நிலைமை ஒன்று வருகிறது. சுவாமி சின்னஞ்சிறுசாய் இருக்கும் போது அவன் கடவுளுக்கு என தாய் அர்ப்பணித்து விடுவாள். (என் பன்னிரண்டு வயதில் வாசித்தது. முழு விபரம் தரமுடியாததற்கு மன்னிக்கவும்.)

தலைப்பு, கொஞ்சம் கவர்ச்சியாய் இருக்கட்டுமே என் வைததது.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பலியாடுகள்?..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 January, 2005 12:30) : 

பரிசோதனை
வசந்தன்.

 

said ... (26 January, 2005 13:04) : 

.

 

said ... (26 January, 2005 13:04) : 

நண்பரைப் பட்டிய பதிவு நன்றாகத்தான் இருக்கு.

-puthiya kana

 

said ... (26 January, 2005 15:06) : 

இதைப் படித்தப் போது எனக்கு இந்தத் துணுக்கு ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு பெண் சிறு வயதில் நடனம் கற்க மிகவும் ஆசைப் பட்டாள். அவள் தாய் தந்தையர் அவள் அதைக் கற்க விடாமல் தடுத்து அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.
அப்பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாள். "அவளையாவது ஒரு பெரிய நாட்டியத் தாரகையாக்குகிறேன்" என்று அவள் தன் தோழியிடம் கூற, தோழியோ "உன் பெண்ணுக்கு அதில் விருப்பம் இல்லாதுப் போனால் என்ன செய்வாய்" என்றுக் கேட்க, அதற்கு அவள் "என் பெண் விரும்புகிறாளோ இல்லையோ அவள் நடனம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்" என்று ஆக்ரோஷத்துடன் கூறினாள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

said ... (26 January, 2005 15:09) : 

How come I am unable to give feedback as a registered user?
Dondu
http://dondu.blogspot.com

 

post a comment

© 2006  Thur Broeders

________________