ஆத்திரமும் அஞ்சலியும்
அனைவருக்கும் வணக்கம்! கடற் பெருக்கின் அழிவு தொடங்கிய பின் எதுவும் எழுதவில்லை. உண்மையில் எழுத முடியவில்லை. எதையும் எழுதும் மனநிலையில்லை. தனியே வாசிப்பதுடன் மட்டும் நின்று விட்டேன். (ஜாபர் அலி போல கிறுக்குவதை விட இது எவ்வளவோ மேல். உண்மையில் கடவுள் (அவரது பாசையில் அல்லா) ஒரு காட்டுமிராண்டி என்று சொல்வதற்கு ஜாபர் அலிக்கு இருக்கும் துணிவு எவருக்கும் வராது.) இலங்கை வன்னியின் கரையோரங்களின் மக்களையும் அங்குள்ள நிலைமைகளையும் நன்கறிந்தவன் எனும் வகையில் (குறிப்பாக முல்லைத்தீவு) மிகவும் கலவரத்துடனேயே காலம் கழிந்தது. அரசினதும் உலக ஊடகங்களினதும் பாராமுகம் அதிர்ச்சியளிக்கவில்லை. வழமை போல ஆத்திரம் தான் வந்தது. எல்லா இடமும் அழிவுதானென்றாலும் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும் புலிகளின் பகுதிகளுக்குச் சென்று காட்சிகளைப் பதிவுசெய்து ஒளிபரப்ப, முன்னனி நிறுவனங்களுக்கு முடியாமற் போனது வேதனைக்குரியது. பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் மற்றவர்கள் எங்கு போனார்களோ தெரியவில்லை. (கருணாவிடம் என்றால் உயிரையும் பொருட்படுத்தாமல் போய்வரத் துணிவுண்டு, இந்து உட்பட) பி.பி.சி. தமிழோசையில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் புலிகளின் பகுதிக்கு வரத் தயங்குகிறார்கள், அவர்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி “தமிழ்ச் செல்வனிடம்” கேட்டபோது ஆத்திரம் தான் வந்தது. புலிகள் பகிரங்கமாகவே சர்வதேசத்திடம் ஆதரவு கோரி அவசர அழைப்பு விடுத்த பின்பும் (இது கூட பெரும்பாலும் ஊடகங்களில் வந்தது தான்) இது என்ன பம்மாத்து? பிரதமர் வேறு, இந்நிறுவனங்கள் அவர்களின் பகுதிக்குச் செல்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம் எனக்கூறுகிறார். எதைச் சமாளிப்பதற்கு இந்தப் பசப்பு வார்த்தைகள்? ஏதோ, இப்போது ஒருவழியாக வன்னிக்கும் இதரப் பகுதிகளுக்கும் நிவாரண உதவிகள் போகத் தொடங்கயுள்ளன. அந்த நிம்மதியுடனேயே இதை எழுதுகிறேன். அது எவ்வளவு போகிறது என்பதை விட ஏதோ கிள்ளியாவது கொடுக்கிறார்களே என்று ஆறுதலடைய வேண்டியதுதான். ஆனால் கடந்த மூன்று நாட்களாக நடந்த கூத்துக்கள், தனித் தேசத்திற்கான அல்லது தனி நிர்வாகத்திற்கான தேவையை ஓங்கிப் பறைசாற்றுவதாகவே இருக்கின்றன. இந்நிலையில் தனியார் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சக்தி வானொலி மற்றும் தொலைக்காட்சிச் சேவை ஏறத்தாள 40 பாரவூர்தி (லொறி) பொருட்களைச் சேகரித்து வன்னிக்கு அனுப்பியதாக அறிகிறேன். மிக்க நன்றி. விரைவில் இவ்வவலம் எல்லா இடத்திலும் முடிவுக்கு வர ஆசிக்கிறேன். மட்டு அம்பாறை திருமலை என பாதிப்படைந்த அனைத்துப் பிரதேசங்களுமே சராசரிக்கும் கீழே வாழ்க்கைத்தரமுடைய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை. போரினால் மிகமோசமாகப் பாதிப்படைந்தவர்கள். முல்லையில் நானறிந்த சில குடும்பங்கள் ஆறு ஏழு முறை இடம்பெயர்ந்தவர்கள். சிலர் பத்துத் தடவைகூட. இறுதியாக, இவ் அவலத்தில் அழிந்து போன இவ்வுலக மானுடர்கள் அனைவருக்கும் என் அஞ்சலிகள். குறிப்பாக முல்லைத்தீவில் மாண்டு போன என் உறவுகளான அன்ரன் அண்ணா, என் விஜிதாக் குட்டி மற்றும் ஜீவதாஸ் குட்டிக்கும், நண்பர்கள் தெரிந்தவர்கள், அயலவர்களுக்கும் என் இதய அஞ்சலிகள். Labels: மக்கள் துயர், விமர்சனம் |
"ஆத்திரமும் அஞ்சலியும்" இற்குரிய பின்னூட்டங்கள்
வசந்தன்,
இழப்பின் துயரில் ஆழ்ந்திருந்தாலும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி இப்படி ஒரு பதிவு எழுதியமைக்கு நன்றி. இதே பிரச்சினைதான் இங்கும். CNN னிலிருந்து CBC வரை எல்லோருக்கும் இலங்கையில் பாதிப்படைந்தது தெற்குப்பகுதி மட்டுந்தான். எல்லா video clipsம் அதைத்தான் காட்டுகின்றன. இது குறித்து CBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு பெண்மணி நேரடியாக அழைத்துக்கேட்டபோது, தங்களால் அங்கே போகமுடியாதுள்ளதால், வடகிழக்குப்பிரதேசங்களின் பாதிப்புப் பற்றி எதுவும் அறியமுடியாதிருக்கின்றது என்று கூறினார்களாம். அழைத்த பெண்மணியும் சளைக்காமல், நாங்கள் video clips எடுத்துத்தந்தால் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டபோது கிடைத்தால் செய்கிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே தமிழ் தொலைக்காட்டியினரால் video clips & information எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாம். என்ன செய்வது இயற்கை மட்டுமல்ல, aftermathம் எங்களுக்குச் சதி செய்துகொண்டுதானிருக்கிறது.