Friday, September 02, 2005

'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி.

எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பாவனையில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.
நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பாவிக்கக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (02 September, 2005 01:40) : 

உம்மைத் திட்டுறதுக்கு ஒரு வார்த்தை தேடியண்டு இருந்தனான். நல்ல வார்த்தையொண்டைப் போட்டிருக்கிறீர்.

நன்றி.

;)

-மதி

 

said ... (02 September, 2005 01:51) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தகுமாரா கன நாளா மறந்து போன சொல்லு ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.

18.18 1.9.2005

 

said ... (02 September, 2005 02:57) : 

Niee Sariaanaa otu AppakKoppei!

 

said ... (02 September, 2005 08:48) : 

//உம்மைத் திட்டுறதுக்கு ஒரு வார்த்தை தேடியண்டு இருந்தனான். நல்ல வார்த்தையொண்டைப் போட்டிருக்கிறீர்.//

அதே.

 

said ... (02 September, 2005 13:28) : 

அடுத்ததா என்ன அருஞ்சொல் விளக்கம்?

 

said ... (02 September, 2005 16:14) : 

'பன்னாடை' என்பதன் பொருள் வேறு. தென்னம்பாலையின் கீழே வலை போல இருக்கும் மட்டை தான் பன்னாடை. அதை கள் வடிகட்ட பயன்படுத்துவார்கள். தென்னங்கள்ளில் இருக்கும் தூசு, தும்பு, பூச்சிகள் போன்றவற்றை அது பிடித்துக் கோண்டு கள்ளை மட்டும் கீழே விடும். கேட்கிறவற்றிலே கெட்டதைப் பிடித்துக் கொண்டு நல்லதை விட்டு விடுபவரை திட்ட 'பன்னாடை' பயன்படுகிறது.

 

said ... (23 September, 2005 16:03) : 

எழுதிக்கொள்வது: kumar

அப்ப வசந்தன் இவற்றுக்கும் அர்த்தம் சொல்லுங்க. மடச்சாம்பிராணி என்பார்களே.மயிர்க்கதை கதையாதே.

11.58 23.9.2005

 

said ... (08 October, 2005 20:05) : 

//அப்ப வசந்தன் இவற்றுக்கும் அர்த்தம் சொல்லுங்க. மடச்சாம்பிராணி என்பார்களே.மயிர்க்கதை கதையாதே.//


உது எனக்குத் திட்டின மாதிரிக்கிடக்கே?

 

post a comment

© 2006  Thur Broeders

________________