ஈழப்போராட்டத்தில் சாட்சியங்கள்.
ஈழப்போராட்டத்தில் இது ஒரு சாட்சியம். இனவாத அரசின் செயற்பாடுகளால் எழும் வன்முறைகள் அடிமனத்தின் ஆழத்தில் புதையுண்டு போய், அதுவே சந்ததி வழியாகக் காவிச் செல்லப்பட்டு இயலுமை உண்டானபோது வெளிப்போந்து வீரியம் பெறுகின்றது. என் மகனும் இவ்வெளிப்பாட்டின் ஒரு குறியீடே. இவன் போராடப்போனபோது நான் எனக்குள் வருந்தியதுண்டு. போராடப் போய்விட்டான் என்பதற்காக அன்று. எனக்குச் சொல்லாமல் போய்விட்டான் என்பதற்காக. அது அவனுக்கும் தெரியும். ஒருநாள் விளையாட்டாக அவன் ‘அம்மா நான் போராடப் போறன்’ என்றான். நானும் நாடகப் பாணியில் ‘மகனே நான் உனக்கு என்ன குறையடா வைத்தேன்?’ என்றேன். ‘எனக்குத் தமிழீழம் இல்லாத குறைமட்டுந்தான்’ என்றான். ஒவ்வொரு போராளியின் பின்னணியிலும் ஒரு சரித்திரமுண்டு. கேணலாக இருந்தாலும் சாதாரணப் படைவீரனாக இருந்தாலும் உணர்வு நோக்கம் ஒன்றுதான். அந்தப் பிஞ்சு உள்ளத்தின் ஆதங்கத்தை நான் மதித்தேன். ஒருநாள்… ஒரேயொருநாள் அவனைத் துப்பாக்கியேந்தியவனாய்ச் சீருடையிற் பார்க்கத் துடித்தேன். கல்மடுவில் நிற்பதாய் ஒரு செய்தி. கைநிறையப் பலகாரம் கொண்டு ஓடிப்போனால் கால்மணி நேத்துக்கு முன்னரே முகாம் கைவிடப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளும் மக்களும் வீதி திருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியில் நான் வேறு வேலையாகப் போனேன். அறிமுகமான ஒருவர் ‘உங்கட மகன் இப்பதான் உந்த ரைக்ரரில போறார்’ என்று கூற, என் முழுச்சக்தியையும் கொடுத்து மிதிவண்டியைச் செலுத்தினேன். வளைவுகள் நிறைந்த காட்டுப்பாதை. உழவு இயந்திர ஓசைகேட்டுக் கொண்டேயிருந்து ஒருகட்டத்தில் மறைந்துவிட்டது. ஏமாற்றத்தோடு மீண்டேன். “ஓமந்தையில உங்கட மகனை இப்ப கண்டனான்” ஒரு போராளி கூறினான். பலகாரம் செய்ய ஏது நேரம்? பத்து ரொபி வாங்கிக்கொண்டு ஓடினேன். அவர்கள் சாப்பிட்ட இலையை நாய் நக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. இப்படிப் பலமுறை. அவனைப் பார்ப்பேனென்ற நம்பிக்கை எனக்கு. அவனை ஈச்சங்குளத்தில் புலிக்கொடி போர்த்து நாலு புலிவீரர்கள் தூக்கிவர ஒரு மலர்மாலையுடன் அவனை நிச்சயம் சந்திப்பேன். அந்தத் துணிவை, மனவலிமையை எனக்குத் தா என்று இறைவனை எந்நாளும் பிரார்த்தித்தேன். எனக்கு அந்தத் துணிவைத் தரமுடியாது என இறைவன் நினைத்தானோ என்னவோ இந்தக் காட்சியும் என் கனவோடு முடிந்துபோயிற்று. ஆகாயக் கடல்வெளிச் சமரிலே அவன் ஆகுதியான செய்தியும் எனக்கு ஆறுதலாகத் தான் வந்தது. என் மகன் இறந்துபோகவில்லை. சீருடை தரித்த ஆயுதம் தாங்கிய ஒவ்வொரு போராளியின் உள்ளேயும் அவன் வாழ்க்கிறான். அதுதான் உண்மை. அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். வாழ்கிறேன், வாழுவேன். அவர்களுடைய விருப்பமே என் விருப்பம். புதிராகிப்போன என் மக்களைப்பற்றி நான் புலம்பியதில்லை. பொல்லாத உலகம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. கல்லான மனமென்று காறி உமிழ்ந்தது. -------------------------------------------- -------------------------------------------- இது தற்போது முழுநேரப் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் போராளி, ஆசையாய் வளர்த்த மகனை போராட்டத்தில் களப்பலியாகக் கொடுத்த தாயொருத்தி, அந்த வீரச்சாவின் பின்னரும், இறந்தவனுக்கு நேர் மூத்தவன் தானும் போராடப்போவதாகக் கேட்டதால் தானே கொண்டுசென்று இயக்கத்திலிணைத்த தாயொருத்தி, எழுதிய சாட்சியம். 'தமிழ்க்கவி அம்மா' என ஆசையாக அழைக்கப்படும் இவர் ஓர் எழுத்தாளர், கலைஞர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்ரி அவர்கள் முன்பு தெல்கா வெளியிட்ட கட்டுரையைப் பற்றி எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்த அதே தமிழ்க்கவி தான். தெல்காவும் இவரது செவ்வியை வெளியிட்டிருந்தது. ஈழப்போராட்டத்தில் இவையும் சாட்சியங்கள்தாம். இன்றும் தடம்புரளாமல் இயங்கும் சாட்சியங்கள். ------------------------------------------------- ‘இனி வானம் வெளிச்சிரும்’ என்ற ஒரு படைப்பு இவரால் வெளியிடப்பட்டது. அதில்வரும் பார்வதி இவர்தான். ஒரு ஏழைத்தாயின் வாழ்க்கை, போராட்டம் என்பன அழகாகச் சொல்லப்பட்ட நவீனம். புனைவற்ற உண்மைக் கதை. இதை வாசித்த யாராவது அறிமுகம் (அல்லது விமர்சனம்) செய்யலாம். டி.ஜே. இப்படைப்பைப் பற்றியெழுதலாம். எழுதுவார்கள் என்று நம்புகிறேன். ------------------------------------------------ படஉதவி: தெல்கா |
"ஈழப்போராட்டத்தில் சாட்சியங்கள்." இற்குரிய பின்னூட்டங்கள்
வசந்தன், தமிழ்க்கவி பற்றிய அறிமுகத்துக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இவையும் ஈழப்போராட்டத்தின் சாட்சியங்கள் தான். 'இனி வானம் வெளிசிரும்' வாசித்தபோது, கிட்டத்தட்ட சில வருடங்கள்க்கு முன் வாசித்த வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' போல நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைப் பெற்றேன். ஈழத்தில் இருந்து அண்மையில் வெளிவந்த சிறப்பான பெண்ணியப்பிரதி போல இது எனக்குப்பட்டது. இந்த புதினத்தை வாசிப்பதற்காய் தோழியரிடம் தற்போது கொடுத்திருக்கின்றேன். சந்தர்ப்பம் வாய்த்தால் இது குறித்து எழுத முயற்சிக்கின்றேன். நீங்கள் பதிவிலிட்டது, 'இனி வானம் வெளிச்சிரும்' நூலில் தமிழ்க்கவி முன்னுரையில் குறிப்பிடுவது என்று நினைக்கின்றேன், சரியா?
This comment has been removed by a blog administrator.
எழுதிக்கொள்வது: Yaro
நன்றி வசந்தன். நல்ல பதிவு.
11.53 20.8.2005
மிகவும் சக்திவாய்ந்ததாய் இருக்கிறது இந்தச் சாட்சியம்.
RAW is enemy of Bangaladesh, China Nepal and Pakistan
RAW is enemy of Bangaladesh, China Nepal and Pakistan