மிதிவெடி செய்வது எப்படி?
உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா? அதைப் பார்த்திருக்கிறீர்களா? மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம். சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி. ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல. ---------------------------------------------------- ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம். நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு. ------------------------------------------------------ சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது. இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு??? ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ. தமிழ்ப்பதிவுகள் |
"மிதிவெடி செய்வது எப்படி?" இற்குரிய பின்னூட்டங்கள்
ஐயையோ!
இவ்வளவும் சொல்லிவிட்டு, மிதிவெடி செய்வது எப்பிடி என்று சொல்லாமல் விட்டுவிட்டேனே.
பரவாயில்லை. பதிவாக எழுதுவதைவிட புத்தகமாகவே போட்டுவிடுகிறேன். வாங்கிப் பயன்பெறுங்கள்.
Ayetho sollap porinkannu Ninaicha Yaemaaththipootingale!
எழுதிக்கொள்வது: theevu
இந்த மிதிவெடி பற்றி அண்மையில்தான் கேள்விப்பட்டிருந்தேன்.வன்னியால் வந்த ஒரவர் புளுகியிருந்தார்.
22.7 20.10.2005
Puthkam eppo varum?
எழுதிக்கொள்வது: yarl
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7026&start=0&sid=74f61fbef9febe5d118545ee3b547d3f
5.54 21.10.2005
தினமும் அந்த வழியால் சைக்கிளில் அந்த நாட்களில் யாழ் Uniக்கு செல்வது வழக்கம். ஆனால் என் கண்களுக்கு எப்படித் தப்பியது?
வசந்தன், என்னுடைய பதிவில் தங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
ஹமீட்,
அப்ப நான் எதுவுமே சொல்லவில்லையா? ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன்.
மற்றும் தீவு, யாழ், அநாமதேயம் நன்றி. புத்தகம் இப்போதுதான் முடிந்தது. யாராவது பிரசுரக்காரர்கள் தொடர்புகொண்டால் வெளியிடலாம்.
கனாக்ஸ்,
உதென்ன கதை? சும்மா ரீ ரூமைப் பாக்காமல் அந்த வழியால போய் வந்திருக்கிறியளோ? ஆச்சரியமாய்த்தானிருக்கு.
Yamaatram "mithivedi" thayarippu nunukkangalai therinthuk kollum aavalil irunnthathaal(athu patri theriya mudiyamal ponathaal) erppattathu! matrappadi bayanulla thagavalkale!
அப்துல்லா,
முன்பே புரிந்தது.
அதுசரி, ஆருக்கு கால்கழட்ட உத்தேசம்?
"சும்மா இரு" - யோகர் சுவாமி!
Summa Iru, "Be still"
http://www.himalayanacademy.com/ssc/
This comment has been removed by a blog administrator.
வசந்தன், இப்பத்தான் இந்தப்பதிவை வாசித்தேன். வழமைபோல சுவாரசியமாக எழுதியிருக்கின்றீர். மட்ச் முடிந்து வருகையில் ரோட்டில் கண்ட, பகிடி செய்த பெண்களைப் பற்றியும் சிறு குறிப்புக்கள் எழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர் :-).
....
இந்த மிதிவெடி விவகாரம் எனக்கு ஈழத்தில் இருந்தசமயம் தெரியாது. சென்றமுறை வன்னிக்குள் போனவுடன் நந்தவனத்தில் முதன் முதலில் சாப்பிட்டது இதைத்தான்.எயர்போட்டிலிருந்து எதுவும் சாப்பிடாமல் நேராக நந்தவனத்தில் பின்னேரப்பொழுதில் வந்திறங்கியபோது சாப்பிட்ட மிதிவெடியின் சுவையை நினைத்தால் இப்பவும் வாயூறுகிறது. கனடாவிலும் ஏதோ ஒரு கடையில் விற்கிறதாய்க் கேள்விப்பட்டேன், இன்னும் சுவைத்துப்பார்த்தில்லை. நீங்கள் குறிப்பிட்டமாதிரி போர் எப்படி சாதாரண வாழ்வை எல்லாம் குரூரமாக மாற்றியிருக்கிறது என்பது புரிகிறது. செல் கோதுகளில் பூங்கனறுகள் நாட்டுவதும், காலையே கொண்டுபோகக்கூடிய மிதிவெடியை, உணவுக்குப் பெயரிடுவதும் என....இப்படி இன்னும் பல :-(.
வசந்தன் நல்லா எழுதியிருக்கிறீர்! உடனேயே ஊருக்குப் போய் சாப்பிடவேணும் போலை இருக்குது.
உம்மை மாதிரி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணச் சாப்பாடு பற்றி காலச்சுவட்டில்(செப்டெம்பர்) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். போய்ப்பாரும். அந்தக் காலச்சுவட்டிலே கனக்க விசயங்கள் சாப்பாடு பற்றித்தான். மற்றதொண்டும் உமக்கு விளங்காது. பரவாயில்லை சாப்பாட்டைப்பற்றி படியுமன்.
சுட்டி : http://tamil.sify.com/kalachuvadu/sep05/fullstory.php?id=13935039
அன்புடன்
சாதாரணன்
//உம்மை மாதிரி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணச் சாப்பாடு பற்றி காலச்சுவட்டில்(செப்டெம்பர்) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். //
சாதாரணன்,
முத்துலிங்கம் என்னைப்போல எழுதினார் எண்டுறியளா?
ஐயையோ. இந்தப் புகழ்ச்சியெல்லாம் வேண்டாம். அந்தாள் ஞாமான காலமா எழுதிறார்.
எனக்கு மற்ற விசயங்கள் விளங்காது எண்டு சொன்னதுக்கு நன்றி. என்னைப் புரிஞ்ச ஒரே ஆள் நீங்கள்தான்;-(
டி.சே.
கருத்துக்கு நன்றி. நீங்கள் கேட்டவற்றை எழுதலாம்தான். ஆனா பகிரங்கமா எழுதாமல் உமக்கு மட்டும் தனிமடலில எழுதிறன். சரிதானே?
test
நான் ஏதோ பயங்கரவாதக் கட்டுரை என்று நினைத்தேன்.
ஏமாற்றி விட்டீர்கள்.
ஜெகன்
நோர்வே