Wednesday, September 14, 2005

கடன் வாங்கிக் கொள்ளல் அல்லது கொல்லல்.

யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகையில் அண்மையில் வந்த செய்தித் தலைப்பு இது.
“மகிந்தவுடன் சந்திரிக்கா லடாய்.”

இந்த 'லடாய்' என்ற சொல்லுக்கான விளக்கம் எனக்குத் தெரிந்திருந்தது என்றாலும் திடீரென உதயனில் இத்தலைப்பைப் பார்த்ததும் ஓர் அதிர்ச்சி.
இந்த ‘லடாய்’ என்ற சொல் யாழ்ப்பாணத்தில் யார் பயன்படுத்துவது? நானறிய யாரும் இச்சொல்லைப் பேச்சுவழக்கிற்கூடப் பயன்படுத்தியதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமே விற்பனையாகும் உதயன் பத்திரிகை இச்சொல்லை தமிழகத்திலிருந்து கடன்பெற்று யாழ்ப்பாணத்தில் செய்தித்தலைப்பாகப் போடுகிறது.

இதுமட்டுமன்று, இதற்கு முன்னரும் ஓரிரு தடவைகள், இப்படியான மக்களிடத்தில் அறவே பயன்பாட்டிலில்லாத சொற்களை வைத்துச் செய்தித்தலைப்புக்கள் போடப்பட்டன.
“மண்ணெண்ணெய் அபேஸ், குமுறுகிறார் மகேஸ்” (மகேஸ் அப்போது யாழ்மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்)
“இன்னாருடன் இன்னார் ஜல்மா”
கல்தா, மேலும் பல சினிமாக் கிசுகிசுப்பாணிச் சொற்கள்.

மக்களிடத்தில் நல்ல தமிழ்ச்சொற்களைப் பரப்புவதென்பது பத்திரிகைகள் முன்னுள்ள கடமை. ஆனால் இங்கே மாறி நடக்கிறது. மக்களிடத்தில் இயல்பான பயன்பாட்டிலிருக்கும் சொற்களைப் போட்டு செய்தி எழுதுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அறவே பயன்பாட்டிலில்லாத, அதேநேரம் அறிமுகப்படுத்தியாகவேண்டிய கட்டாயமற்ற சொற்களைப் போட்டு பத்திரிகை நடத்துவதென்பது அச்சொற்களை வலிந்து மக்கள்மீது திணிக்கும் முயற்சியாகவே படுகிறது.

உண்மையில் தமிழகத்தின் ஆனந்தவிகடன், குமுதம், குங்கும வகையறாச் சஞ்சிகைகளைப் படிக்காத யாழ்ப்பாணத்தானுக்கு ‘லடாய்’ என்றால் என்னவென்று தெரியப்போவதில்லை. இதுபற்றி முன்பு உதயனில் பணியாற்றிய ஒருவருடன் கதைத்தபோது, உதயன்தான் பல சொற்களை யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தியதென்றார். என்னை வெறுப்பேற்ற அதைப்பெருமையாகச் சொல்லி சட்டைக் கொலரை இழுத்துவிட்டுக்கொண்டார்.

உதயன் மட்டுமாவது பரவாயில்லை. அதன் சகோதரப் பத்திரிகையான சுடரொளி பயன்படுத்தும் சொற்களும் வசனநடையும் அப்பட்டமான தமிழகப் படியெடுப்பு.

யார் கண்டது? எதிர்காலத்தில் உதயனின் இச்செயல் பெரிய புரட்சியாகக்கூடச் சொல்லப்படலாம். இச்சொற்கள் யாழ்ப்பாணத்தில் சரளமான பயன்பாட்டுக்கு வந்துவிடவும்கூடும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கடன் வாங்கிக் கொள்ளல் அல்லது கொல்லல்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (14 September, 2005 23:43) : 

அனைத்தும் திட்டமிட்டுக் காரியமாக்கப்படுகிறது.அந்தப் பகுதி மக்களைக் கொஞ்சம், கொஞ்சமாகக் கருவறுத்து,சமீபத்தில் குடியேறினார்கள்... என்று வரலாறு எழுதலாம்தானே?இப்பவே விக்கிபீடீயாவில் இலங்கை வரலாறு பார்த்தால் தமிழர்கள் 12ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்திலிருந்து குடியேறினார்களென்றிருக்கிறது.அதையின்னும் சமீபகாலமாக்கணும்.ஆமிக்காரர்கள் ஆக்கிப்போடுவாங்கள்போலத்தாம் இருக்கு.

 

said ... (14 September, 2005 23:54) : 

அத்துடன் கடன் வாங்காமலும் கொல்கிறார்கள். 'அரசியலைத் துறந்த பெளத்தரின் பெயரால் போரைத் தூண்டுவதற்கான கேவலமான அரசியல்'-உதயன் சூரியகாந்தி கட்டுரையொன்று இவ்வாறு இருந்தது - பிழையான சொற்பிரயோகம்

 

said ... (15 September, 2005 01:57) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

இது உண்மையில் சிந்தனைக்குரிய விடயம். பல சொற்கள , ஏறகனவே புகுந்துவிட்டன. இதை அங்குள்ளா எந்த பத்திரிகையும் கவனுப்பதாக தெரியவில்லை. எல்லபத்திரிகையையும் கிரமமாக படித்தால் இவ்வறு பல் புகுத்தல்களை காணலாம்

18.23 14.9.2005

 

said ... (15 September, 2005 03:51) : 

In TamilNadu, Dinamani is the only exception those days..

Nowadays, they also started using these kind of foreign words

 

said ... (15 September, 2005 04:01) : 

வசந்தன் இது முக்கியமான பதிவு.

இவ்வாறான உள்நுழைவு மொழியிலே பலநிலைகளிலும் நிகழ்கின்றது; உ+ம்: ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரைகளிலே ஆபீஸர் ஆபீஸர் என்று பயன்படுத்துகிறார். இதுபோல, பல சொற்கள் எம்மை அறியாமலே புகுந்திருக்கின்றன. சிலவேளைகளிலே பகிடிக்குக் கதைப்பது பின்னாலே பழக்கமாகிவிடுகின்றாது. புதியதை அவசியமானபோது பெற்றுக்கொள்ளவே வேண்டும்; ஆனால், அநாவசியமாக வலிந்து நல்ல சொல்லைப் பெயர்த்து அர்த்தமில்லாத சொல்லைப் புகுத்திவிடுவது மொழிநலத்துக்கு மிகவும் கேடானதாகும்.

வலைப்பதிவுகளிலே பகிடிக்குக்கூட இப்படியாகக் கதைக்க இப்பவெல்லாம் யோசனையாக் கிடக்குது.

 

said ... (15 September, 2005 10:14) : 

பின்னூட்டமிட்டோருக்கு நன்றி.
சிறிரங்கன், சரியாகச் சொன்னீர்கள்.

பெயரிலி, ராஜேஸ்வரியின் பிற கட்டுரைகள், ஆக்கங்களிலும் இப்படியான மொழிநடையுண்டு. இது வேண்டுமென்று செய்வதாக நான் நினைப்பதில்லை.

இங்கே வலைப்பதிவுகளிலும் நாம் எம் சொந்த நடையை மெதுவாகப் புறந்தள்ளி வருகிறோமோ என்ற ஐயமுண்டு. ஆனால் வலைப்பதிவுகள் பெரும்பாலும் பேச்சுத்தமிழை மையமாகக் கொண்டு வருவதால் இது தவிர்க்க முடியாததுமாகும்.
ஆனால் பொறுப்பு வாய்ந்த ஒரு செய்திப்பத்திரிகை இப்படிக் கொச்சையாக எழுதுவதுதான் பிரச்சினை.

 

post a comment

© 2006  Thur Broeders

________________