மெல்பேர்ண் மெல்லிசை நிகழ்ச்சி
நேற்று முன்தினம் மாலை மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிதிக்காக மெல்லிசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. மாலை 6.00 மணிக்குத் தொடங்குமென அறிவிப்பு இருந்தபோதிலும், ‘எங்கட சனத்தின்ர நகழ்ச்சி தானே’ என்ற நினைப்பில் சரியான நேரத்துக்குச் செல்ல முயலவில்லை. நான் மண்டபத்தை அடையும்போது 6.15. உள்ளே “அந்தி மழை பொழிகிறது” பாட்டுப் போய்க்கொண்டிருந்தது. துலைவார் சரியா 6.00 க்கு ஒரு நிமிசமும் பிந்தாமல் நிகழ்ச்சியத் தொடங்கிப்போட்டாங்கள். இசைக்குழு ஜோய் மகேஸ்வரனது என்று ஏற்கெனவே தெரியும். 'ஜோய்' யாரென்று கேட்கிறீர்களா? விடுதலைப்புலிகளின் பொருளாதார ஆலோசகராக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளிற் கலந்து கொண்டவர். சுனாமி மீள் கட்டமைப்பு மற்றும் ஏனைய ஆலோசனைச் சபைகளிலும் கலந்து கொண்டவர். இன்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணியாளராயிருப்பவர். இவர் அந்த இசைக்குழுவை நெறிப்படுத்துபவர் என்றே நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரே பாடகராகவும் வாத்தியக் கலைஞராகவும் இருப்பார் என்று நினைக்கவில்லை. ஒருநேரம் தபேலாவுடனும் பலநேரம் கிற்றாருடனும் இருந்தார். அவர் பாடிய சுனாமிப் பாடல் நெஞ்சை உருக்கியது. இசையும் வரிகளும் அற்புதம் என்றாலும் ஜோய் மகேஸ்வரனின் குரல் தான் உண்மையான உணர்வைத் தந்தது. பாடப்பட்ட பாடல்கள் மனத்தைத் தொட்டன. பாடல்தெரிவுகள் என் ரசனைக்கு ஏற்றாற்போல் இருந்தன. “அந்தி மழை பொழிகிறது” “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” “கூட்டத்திலே கோயில் புறா” “குமரிப்பெண்ணில் உள்ளத்திலே” “பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா” “செந்தூரப் பூவே செந்தூரப் பூவே… சில்லென்ற காற்றே” “பொன்மகள் வந்தால் பொருள்கோடி தந்தாள்” மனதை வருடும் இடைக்கால மற்றும் பழைய பாடல்கள். இந்தப் பாடற்றெரிவுக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது ரசிகர்களைத்தான். வந்திருந்தவர்களில் அந்தப் பாடல்களுக்குரிய ரசிகத் தலைமுறைதான் அதிகமானது. இளையவர்களில் மொழி தெரிந்து ரசிக்கத்தக்கவர்கள் எத்தனை பேரென்று தெரியாது. அவர்களின் ரசனைக்காகவும் சில பாடல்கள் பாடப்பட்டன. குறிப்பாக இரண்டு இந்திப்பாடல்கள். சும்மா சொல்லக்கூடாது இந்திப்பாடல்களை நன்றாகவே பாடினார்கள். குறிப்பிட்ட திசையிலிருந்து பலமான வரவேற்புக் கிடைத்தது. (“ஈழத்தில் இந்தியெதிர்ப்பு இல்லாமையால் தான் இப்படி இந்திப்பாடல் பாடவும் அதைக்கேட்டு ரசிக்கவும் முடிகிறது, குறைந்த பட்சம் ஒஸ்ரேலியாவில் இந்தியெதிர்ப்பு இல்லை” என்றுகூட பின்னூட்டம் வந்தாலும் ஆச்சரியப்படப்போவதில்லை) இதற்கிடையில் சில கோமாளிப்பாடல்களும் (என்னைப் பொறுத்தவரை) பாடப்பட்டன. போய்ஸ் படத்திலிருந்து ஒரு பாட்டு. அதற்குள் ஹரினியும் சித்தார்த்தும் அந்தரத்தில் தொங்கும் காட்சிகளும் போட்டுக்காட்டினார்கள். பாடலின் இறுதியில் ஓ..ஓ..ஓ..ஓ.. என்று ஊளையிடவும் வேண்டும். ஆனால் பலர் ரசித்தார்கள் என்பதையும் சொல்லத்தான் வேணும். (பாடல்கள் மூலத்திலிருந்து வேறுபடவில்லை. என் எரிச்சல் மூலப்பாடல்கள் மீதே இருக்கிறது.) பாடப்பட்ட புதியபாடல்களில் நான் ரசித்தது, சங்கமம் படத்தில் வரும், “ஒரு முறை கிள்ளிப் பார்த்தேன், முதல் முறை கண்ணில் வேர்த்தேன்” ஆறிவிப்பாளருக்கு வைரமுத்துவின் நினைப்பும் எடுப்பும் இருக்கிறது போலுள்ளது. அதே வகிடெடுத்த தலைமுடி, வெள்ளையுடை, கவிதையாகவே அறிவிப்புச் செய்கிறாராம். இறுதியில் அவை தான் எழுதியவையல்ல, சிறிஸ்கந்தராசா தான் எழுதினார் என்பதையும் சொன்னார். அறிவிப்பாளினி ஜோய் மகேஸ்வரனின் மனைவி. அறிவிப்பு கலகலப்பாக இருந்தாலும் அதிகமாகப் போய்விட்டது போன்ற உணர்வு வந்தது. நடனப்பள்ளியை இயக்கிவரும் பெண்மணியொருவரை மேடையிலழைத்துக் கௌரவித்தார்கள். வழமையாக ஒவ்வொரு மேடையிலும் கலைத்துறை சார்ந்த ஒருவரைக் கௌரவம் செய்வது வழமையாம். இடைவேளைக்குப் பின் நிகழ்ச்சியில் பாடல்களுக்கு விசிலடிப்பதும் கூக்குரலிடுவதும் சேரத்தொடங்கியது. குறிப்பாகப் பல்கணியில் இருந்த கூட்டத்திடமிருந்து தான் இந்த வரவேற்பு வந்தது. அபிமான ‘வலைப்பதிவாள’ரும் அந்த விசிலடிச்சான் கூட்டத்தின் நாயகமாக இருந்திருப்பார் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. ரசிகர்களிடமிருந்து அதிக வரவேற்புக் கிடைத்த பாடல், இதயக்கோவில் படத்தின் “கூட்டத்திலே கோயில் புறா”. ஆனால் நான் அதிகம் விரும்பி ரசித்தது, “பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா”. நிகழ்ச்சியின் இறுதியில் சில பாடல்களைக் கலந்துகட்டி தந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சரணம் பாடினர். ஜோய் மகேஸ்வரன், “அஞ்சுக்குள்ள நால வையி, ஆழம் பாத்துக் கால வையி.” என்ற ‘அருமையான’ தத்துவப்பாடலின் ஒரு சரணத்தைப் பாடிச் சென்றார். என்னைக் கேட்டால் அந்த இறுதிச்சாம்பாறு தேவையில்லாத ஒன்று என்றே சொல்வேன். எனக்கு எரிச்சலைத் தந்ததும் அதுதான். ஆனால் வந்திருந்த ரசிகர்களில் நான் ஒருவன் மட்டுமே. எப்படியிருந்தாலும் மனதுக்கு நிறைவான, இனிமையான ஓர் இரவு நிகழ்ச்சியென்பதில் ஐயமில்லை. பொதுவாக எனக்கு இசை நிகழ்ச்சிகள் பற்றியிருந்த அபிப்பிராயம் ஓரளவு மாறியிருந்தது. படங்கள் எதுவும் கைவசமில்லையென்பதால் போடமுடியவில்லை. மன்னிக்கவும். சயந்தனின் பதிவில் படங்களுடன் போட்டுள்ளார். |
"மெல்பேர்ண் மெல்லிசை நிகழ்ச்சி" இற்குரிய பின்னூட்டங்கள்
So you were also in Balcony.
எழுதிக்கொள்வது: yaaro
துலைவார் சரியா 6.00 க்கு ஒரு நிமிசமும் பிந்தாமல் நிகழ்ச்சியத் தொடங்கிப்போட்டாங்கள்.:)
22.25 10.8.2005
எழுதிக்கொள்வது: சயந்தன்
என்ன இருந்தாலும் அந்த கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் பாட்டுக்கு முதலில கீ போட்டில ஒரு கலக்கு கலக்கி பிறகு எடுத்தினம்.. அந்த மாதிரி!!! உம்மையும் பல்கணிக்கு வரச்சொல்லி கேட்டனான் தானே.. நீர் தான் கிழடு கட்டையளோடை போய் இருந்திட்டீர்.. மேலை வந்திருக்கலாம்..
19.0 9.8.2005