காதலும் கடவுளும்.
பிறை - ஆறு அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு. பனங்காட்டு முனிவன் மதவடியில் வசந்தனுக்கு அருளிய அருளுரை. ஒருநாள் தற்செயலாக் கிடைத்த தரிசனத்தைச் சரியாகப் பயன்படுத்திய வசந்தன், தன் சந்தேகங்களைக் கேட்டு ஒரு மதவடியில் ஞானம் பெற்றான். ஐயா! எனக்கொரு சந்தேகம். கேள் மகனே கேள். சந்தேகப்படுவதால்தான் இன்னும் நீ மனிதன். ஐயா! கடவுள் இருக்கிறாரா இல்லையா? ஹஹஹஹஹ. எவ்வளவு காலமாய் இதுபற்றி யோசித்திருக்கிறாய்? நீண்டகாலமாகவே எனக்குள்ளிருக்கும் சந்தேகமிது. உங்களிடம் தெளிவு கிடைக்குமா? ஹஹஹ. நீ ஒரு முட்டாள். ஆம் கடவுள் பற்றிச் சிந்திப்பவனையெல்லாம் முட்டாள் என்றுதான் சொல்வேன். காதலும் கடவுளும் ஒன்று. இரண்டுமே முட்டாள்தனங்கள். உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? சின்ன வயதில் இருந்தது.இப்போது?சொல்லத்தெரியவில்லை. நீண்டகாலமாக வழிபடுவதில்லை. ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையாவென்று குழப்பமாயிருக்கிறது சரியா? ஆம் குருவே. இதுபற்றி உங்கள் நீண்ட விளக்கத்தைக் கேட்க ஆவலாயுள்ளேன். தம்பி! மனித மனம் விசித்திரமானது. ஏகப்பட்ட முரண்களைக்கொண்டிருக்கும் சங்கதிகளையே எந்தக் கேள்வியுமில்லாமலும் குழப்பங்களில்லாமலும் அசைபோடப் பழகிக்கொண்டது. நான் உன்னைக் கேட்கிறேன். கடவுள்தான் பூமியைப்படைத்தார் என்றால், பூமியின் தோற்றம் பற்றிய விஞ்ஞானக் கோட்பாடுகளை முற்றாக நிராகரிக்கத் தயாரா? கடவுள்தான் மனிதகுலத்தைப் படைத்தாரென்றால், டார்வினின் கொள்கைகள், அவரின் கோட்பாடுகள் எல்லாவற்றையும் நிராகரிக்கத் தயாரா? கடவுளின் படைப்புக்கொள்கையை கவனத்திலெடுக்காமற் செயற்படும் விஞ்ஞானத்தின் இற்றைவரையான முன்னேற்றத்தை நிராகரிக்கத்தயாரா? அதெப்படி முடியும் ஐயா? ஆம். முற்றாக மறுதலிக்க முடியாமல் ஆனால் கடவுளின் படைப்புக் கொள்கையை நம்பிக்கொண்டு, குறைந்தபட்சம் கடவுள் இருக்கிறாரென்று நம்பிக்கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம் பெரியது. இதில் எந்தத் தவறுமிருப்பதாகப் படவில்லை. பாடசாலையில் மூன்றாம் வகுப்பிலேயே எமது இந்த இரட்டை நிலைப்பாடு தொடங்கிவிடுகிறது. சமயபாடத்தில் இறைவனின் படைப்புத்திறன், காக்கும்திறன் என்று படித்துக்கொண்டு, அதேநேரம் சுற்றாடல் பாடத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்; அவனது மூதாதையர் ஹோமோ சேப்பியன்ஸ், ஹோமோ நியண்டதால் என்று படங்களோடு விலாவாரியாகப் படிக்கத் தொடங்குகிறோம். மனித மனம் இந்த இரு முரண்களையும் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்படியே இருந்துவிட்டுப்போக வேண்டியதுதானே. பிறகேன் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வு? கடவுட் கொள்கையைப் பலமாக ஆட்டம்காண வைப்பதற்குத் தொடக்கம் வானியல்தான். வானியலின் வளர்ச்சிதான் மதங்களுக்கு முதல் எதிரியாயிருந்தது. பின் பலவிதயங்கள் தெளிவாகியது. அந்த வானியலிற்கூட கடவுள் பக்தியுள்ளவர்கள் நிறையப்பேர் இருந்திருக்கிறார்கள். 'கல்பனா' எனும் இந்தியப் பெண்ணொருத்தி ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்றாள். ஆனால் மீண்டு வரவில்லை. அவள் இறுதியாக விண்ணிலிருந்து அனுப்பிய தொலைநகல் மிக உருக்கமானது. வரிக்குவரி கடவுள் துதிபாடும் அக்கடிதம், அவளது நம்பிக்கைகளின் வெளிப்பாடு. விண்ணிலிருந்து வானியல் ஆராய்ச்சியாளினியொருத்தி கடவுள் துதிபாடி வரைந்த அம்மடல் யாருக்கும் குழப்பத்தையூட்டவில்லை. அதுதான் தனிமனித நம்பிக்கை. நம்பிக்கை வேண்டியவர்கள் கடவுள் என்றொரு பாத்திரத்தை, உருவத்தை நினைத்து மன்றாடுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள். ஐயா! அப்படியானால் விஞ்ஞானம், கடவுள் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை? அது தன் வாதங்களையும் எடுகோள்களையும் நிருபிப்பதிலேயே குறியாக உள்ளது. கடவுள் உண்டு என்றும் சொல்லவில்லை. இல்லையென்றும் சொல்லவில்லை. கடவுள் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் அது தன் வழியிற்செல்கிறது. இந்த அசட்டையே கடவுள் இல்லையென்பதன் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். தன் கோட்பாடுகளுக்கு ஏறக்குறைய நிறைவான ஆதாரங்களைக் காட்டிவிட்டது. பலவற்றை நிரூபித்தும் விட்டது. இன்னும் முயன்று கொண்டிருக்கிறது. அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்? கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்பதெல்லாம் தேவையற்ற வாதங்கள். பரிணாமக்கொள்கையில் வேருன்றி அதன் வழியிலேயே ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானிகூட கோயில் சென்று கடவுளைத் தொழக்கூடும். அவன் தன் தொழிலில், கடமையில், ஆய்வில் கடவுளை எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புபடுத்த மாட்டான். இரண்டும் வெவ்வேறு தளங்கள். எமது மனம் இரண்டையுமே குழப்பமில்லாமற் கையாளும் தகமை பெற்றது. ஆகவே நீ குழம்பாதே. கடவுள் இல்லையென்று நம்பினால் அது சரிதான். கடவுள் இருக்கிறாரென்று நம்பினால் அதுவும் சரிதான். ஆனால் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்தால் அதுதான் தவறு. கூடவே முட்டாள்தனமும் கூட. சரி ஐயா!காதலையும் கடவுளையும் எப்படிச் சம்பந்தப்படுத்துகிறீர்கள்? சரியாகக் கேட்டாய்.இரண்டிலும் அறிவைப் பிரயோகிக்கக் கூடாது. காதலை வைத்தே உனக்கு நானிதைத் தெளிவிப்பேன். காதலில் அறிவுபூர்வமாய் யோசித்தால் என்ன நடக்கும்? காதலி இருந்துவிட்டுப்போன இருக்கையில் தானும் இருந்து லயிப்பது, அவள் மூக்குச்சளி சீறி எறிந்துவிட்டுப்போன கைக்குட்டையை எடுத்துப் பத்திரப்படுத்துவது, அதில் காதலியின்முகம் பார்ப்பது, அதனால் முகத்தைத் துடைத்து காதலி முத்தம் தருவதாகப் பரவசப்படுவது, அவள் தலையிலிருந்து விழுந்து பூவொன்றை மாதக்கணக்கிற் பத்திரப்படுத்தி அப்பூவோடு பேசுவது என்று சினிமாத்தனமான செய்கையெல்லாம் செய்ய முடியாது. அறிவைப்பாவித்தால் இவையெல்லாம் முட்டாள்தனமாயும் சிறுபிள்ளைத்தனமாயும் தோன்றும். ஆனால் இப்பிடிச் சிந்தித்தால் உன்னால் காதலின் இன்பத்தை அடையமுடியாது. கூடவே காதலியையும் அடையமுடியாது. ஆக காதலில் முட்டாள்தனங்களும் சிறுபிள்ளைத்தனங்களும்தான் தேவை. கூடவே மனித இனத்தின் தொடர்ச்சிக்கும் இது தேவை. ஆகவே காதலில் அறிவுபூர்வமாய்ச் சிந்திப்பது எவ்வளவு முட்டாள்த்தனமோ,அதுபோலவே கடவுள் விதயத்தில் அறிவைப்பாவிப்பதும் முட்டாள்த்தனமானது. கடவுள் பற்றிச் சிந்திப்பதற்கு சிறிதளவாவது உமது மூளையைப் பயன்படுத்தாதே. நினைப்பதற்கும் சிந்திப்பதற்குமுள்ள வேறுபாட்டை உனக்கு நான் தெளிவிக்கத் தேவையில்லை. நன்றி ஐயா! பூரண தெளிவு பெற்றேன். வருகிறேன். அதற்குமுன் ஒரு கேள்வி. உங்கள் பெயர் என்ன? ஹஹஹஹஹா. யாம் பலபேரில் உள்ளோம். உனக்குத் தரிசனம் தரும்போது என்பெயர் ‘வன்னிய முனிவன்’. வீடு அங்கே இருக்கிறது. இந்தப்பக்கம் ஏன் போகிறாய்? கடவுள் இல்லையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த கூற்று உண்மையானால் பத்துத் தேங்காய் உடைப்பதாக அந்த மூலைக்கோயிலில் வேண்டுதல். இப்போ கடவுள் இல்லையென்ற என்கூற்றுப் பலித்துவிட்டது. அதுதான் அந்த நேர்த்தியைச் செய்யப்போகிறேன். ஹஹஹ. விளையாட்டுப் பிள்ளையடா நீ. Labels: நட்சத்திரக் கிழமை, விவாதம் |
"காதலும் கடவுளும்." இற்குரிய பின்னூட்டங்கள்
//கடவுள் இல்லையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த கூற்று உண்மையானால் பத்துத் தேங்காய் உடைப்பதாக அந்த மூலைக்கோயிலில் வேண்டுதல். இப்போ கடவுள் இல்லையென்ற என்கூற்றுப் பலித்துவிட்டது. அதுதான் அந்த நேர்த்தியைச் செய்யப்போகிறேன்.
//
:))))
//கடவுள் இல்லையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த கூற்று உண்மையானால் பத்துத் தேங்காய் உடைப்பதாக அந்த மூலைக்கோயிலில் வேண்டுதல். இப்போ கடவுள் இல்லையென்ற என்கூற்றுப் பலித்துவிட்டது. அதுதான் அந்த நேர்த்தியைச் செய்யப்போகிறேன்.
//
ஆசையை விட்டொழிக்க வேண்டுமென புத்தர் ஆசைப்பட்டாராம் என்பது போல இருக்கிறது..
எழுதிக்கொள்வது: kulakaddan
வசந்தன் அந்த மாதிரி இருக்கு. ஆனா தேங்காயை நீரோ உடைக்க நேந்தனீர்.
18.7 7.5.2005
விளையாட்டாய்ச் சொன்ன மாதிரி இருந்தாலும் நல்ல ஆழமுள்ள ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்திருக்கிறீர்கள். நன்று. பயனுள்ளதாய் இருக்கிறது.
வசந்தன்,
இதுதான் உங்க நட்சத்திரப் பதிவுகளிலே 'டாப் 10'லே முதலிடம் பெற்றது!!!
ரொம்பவே நல்ல பதிவு!!! வாழ்த்துக்கள்!!
கடவுளோட ஆசி உங்களுக்கு எப்பவும் உண்டு!!!!
நீங்க நல்லா இருக்கணுமுன்னு கடவுளை வேண்டிக்கறேன்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
//கடவுளோட ஆசி உங்களுக்கு எப்பவும் உண்டு!!!!
நீங்க நல்லா இருக்கணுமுன்னு கடவுளை வேண்டிக்கறேன்!!!//
அடடா! இவ்வளவு எழுதினபிறகும் எனக்கு ஆசி குடுக்கிறியளே, நியாயமா?
கடசியா தேங்காய் உடைக்கிறதாச் சொன்னது, பக்தகோடியளிட்ட இருந்து ஒரு பாதுகாப்புக்குத்தான். அதுக்கு மேலயிருக்கிறதுதான் விசயமே. கடசியா ஒரு "பஞ்ச்" குடுத்து முடிக்கலாம் எண்டதும் ஒரு காரணம். மற்றும்படி, நான்தான் வன்னிய முனிவன். கடுமையா இருக்கக் கூடாது எண்டதுக்காகத்தான் இந்த சமரசம்.
அப்பிடியே உங்கட 'ரொப் 10" விவரத்தையும் வெளியிட்டீங்களெண்டா அடியேன் ஆனந்தப்படுவேன். குறைஞ்சது மின்னஞ்சலுக்காவது அனுப்புங்கோ.
கருத்துக்கள் "போட்ட" குளக்காட்டான், மதி கண்டசாமி(Kandasamy), செல்வராசு மற்றும் அநாமதேயம் ஆகியோருக்கு நன்றிகள்.
எழுதிக்கொள்வது: super
சூசூசூப்பர்.
16.4 8.5.2005
எழுதிக்கொள்வது: அருணன்
வசந்தன் நல்ல பதிவு.இது பற்றி ஏற்கனவே கறுப்பி எழுதிய பதிவிலும் நான் கூறியிருந்தேன்.அதாவது பெரியோர்கள் கூறும் பயபக்தி என்ற விடயத்தில் எனக்கு இதைச்செய்யாவிடில் கடவுள் தண்டிப்பாரோ என்ற பயம் இருக்கிறது.ஆனால் பக்தி என்ற சதமான் துண்டற இல்லை.முதல் கூறியதை பார்த்தால் மறைமுகமாக எனக்குள் கடவுள் நம்பிக்கை இருக்குபோல உள்ளது.ஆனா அதை என்னால் உணரமுடியவில்லை.நான் பக்தி உள்ளவனா இல்லாதவனா? தெரியல்லேப்பா.
17.29 8.5.2005
எழுதிக்கொள்வது: இளைஞன்
கடவுள் Hardware இலும் இருப்பார், Software இலும் இருப்பார், Webblog இலும் இருப்பார், Commentbox இலும் இருப்பார்.
வசந்தன்,
நாம் எப்படி எமது கருத்தை முன்வைக்கிறோம் என்பதில்தான் அது மற்றவர்களை சென்றடைகிறதா இல்லையா என்பது இருக்கிறது. எதிர்க்கருத்து உள்ளவர்கள் கூட நாம் சொல்கிற விதத்தில் எமது கருத்தை இரசிக்கவேண்டும். நல்ல பதிவு.
15.58 8.5.2005
/ஆனால் இப்பிடிச் சிந்தித்தால் உன்னால் காதலின் இன்பத்தை அடையமுடியாது. கூடவே காதலியையும் அடையமுடியாது. ஆக காதலில் முட்டாள்தனங்களும் சிறுபிள்ளைத்தனங்களும்தான் தேவை. கூடவே மனித இனத்தின் தொடர்ச்சிக்கும் இது தேவை.
ஆகவே காதலில் அறிவுபூர்வமாய்ச் சிந்திப்பது எவ்வளவு முட்டாள்த்தனமோ,அதுபோலவே கடவுள் விதயத்தில் அறிவைப்பாவிப்பதும் முட்டாள்த்தனமானது. கடவுள் பற்றிச் சிந்திப்பதற்கு சிறிதளவாவது உமது மூளையைப் பயன்படுத்தாதே. /
ஆகா!
அப்படிப்போடு போடு போடு!!
அடித்துப்போடு அறிவாலே!!
//காதலி இருந்துவிட்டுப்போன இருக்கையில் தானும் இருந்து லயிப்பது,
அவள் மூக்குச்சளி சீறி எறிந்துவிட்டுப்போன கைக்குட்டையை எடுத்துப் பத்திரப்படுத்துவது,
அதில் காதலியின்முகம் பார்ப்பது,
அதனால் முகத்தைத் துடைத்து காதலி முத்தம் தருவதாகப் பரவசப்படுவது,
அவள் தலையிலிருந்து விழுந்து பூவொன்றை மாதக்கணக்கிற் பத்திரப்படுத்தி அப்பூவோடு பேசுவது
என்று சினிமாத்தனமான செய்கையெல்லாம் செய்ய முடியாது. அறிவைப்பாவித்தால் இவையெல்லாம் முட்டாள்தனமாயும் சிறுபிள்ளைத்தனமாயும் தோன்றும்//
நல்ல அனுபவம் இருக்குப் போல.
கருத்துக்கள் இட்ட அருணன், பாபு, பெயரிலி மற்றும் இரு அநாமதேயங்களுக்கும் நன்றி.
பெயரிலி!
என்ன சொல்கிறீர்கள்?
'கடவுளைப் பற்றிச் சிந்திக்க மூளையைப் பாவிக்காதே' என்றுவிட்டு மினக்கெட்டு இந்தப் பதிவு எழுதினேன் என்று கேட்கிறீர்களா? அல்லது உண்மையான பாராட்டுத்தானா?
எதுவென்றாலும் நன்றி.
அநாமதேயம்!
இதுக்கெல்லாம் அனுபவம் தேவையில்லை. நேரிலே பார்க்கிறோமே கிறுக்குப் பிடித்து அலைவதை.
//காதலி இருந்துவிட்டுப்போன இருக்கையில் தானும் இருந்து லயிப்பது,
அவள் மூக்குச்சளி சீறி எறிந்துவிட்டுப்போன கைக்குட்டையை எடுத்துப் பத்திரப்படுத்துவது,
அதில் காதலியின்முகம் பார்ப்பது,
அதனால் முகத்தைத் துடைத்து காதலி முத்தம் தருவதாகப் பரவசப்படுவது,
அவள் தலையிலிருந்து விழுந்து பூவொன்றை மாதக்கணக்கிற் பத்திரப்படுத்தி அப்பூவோடு பேசுவது
என்று சினிமாத்தனமான செய்கையெல்லாம் செய்ய முடியாது.//
சினிமாவில் காட்டுவதை உண்மையென்று வைத்து எப்பிடி நீங்கள் காதலை முட்டாள்தனமானது என்பீர்கள்?
காதலி கிடைக்கவில்லையென்ற கோபத்தில் இப்படி காதலைக் கொச்சைப்படுத்துவது சரியல்ல.
'அவரவர் வழி அவரவர்க்கு'என்ற நிலை முன்பு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கும்; இன்றைய நிலை அப்படி இல்லையே! 11/9-ம்,7/7-ம் ஈராக் போரும் நம்மைத் தீண்டுவதில்லையா என்ன?
மதங்களின் நல்ல பக்கங்கள் மறக்கப்பட்டு, அதன் கரிய,அழுக்கான, தீவிரவாத பக்கமே தூக்கி நிறுவப்படும்போது உங்களைப் போன்றவர்கள் மதங்களின் negative தாக்கங்களைப்பற்றிக் கவலைப்படுவதும்,தீவிரமாய் ஈடுபடுவதும் தவிர்க்கமுடியாதது மட்டுமின்றி, மிகத் தேவையானதாகவும் உள்ளது.
ஆகவே, அந்த யாகவா முனிவர்-oh, sorry- அந்த வன்னியமுனிவர் சொன்னதைக் கண்டுகொள்ளாதீர்கள்; சரியா?
வசந்தன் (எ) சயந்தன் (எ) வன்னிய முனிவரே!
எமது அறிவுக் கண்ணை திறந்து வைத்தமைக்கு மிக்க நன்றி! ;-)
தருமி,
என் பக்கம் வந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி.
எதிர்த்தும் விமர்சித்தும் எழுதலாம் தான். ஆனால் நியாயமான பதில்களும் விவாதங்களும் நடக்காது என்பது தெரிந்தகதை.
சுதர்சன்,
பின்னூட்டத்துக்கு நன்றி.
ஆனால் இந்தப் பெயர் விசயத்தை எப்போதான் விடப்போகிறீர்களோ தெரியவில்லை;-)