Saturday, May 07, 2005

மறுவா கிறுகி....

பிறை - ஐந்து.


வணக்கம்!
'ஈழத்தமிழ்' என இன்று அறியப்படுவது பெருமளவு யாழ்ப்பாணத்தமிழையே குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஈழத்தின் வேறுபட்ட பாகங்களிடையில் மொழிப்பாவனையென்பது வேறுபட்டே இருக்கிறது. சில இடங்களில் சின்ன வேறுபாடுகளுடனும் சில இடங்களில் பெரிய வேறுபாடுகளுடனும் இருக்கிறது. அங்கே ஒருவரின் தமிழை மற்றவர் நக்கலடிப்பது வழமை. யார் பெரும்பான்மையோ அங்கே சிறுபான்மையினரின் தமிழ்நடை கேலிக்குள்ளாகும். ஆனால் பெரியளவில் மனத்தாங்கல் வருமளவு இருக்காது.

மட்டக்களப்புத்தமிழ் எனக்கு அறிமுகமானது தென்தமிழீழப் போராளிகள் மூலமாகத்தான். ஜெயசிக்குறு எதிர்ச்சமருக்காக கிழக்கிலிருந்து 1000 பேர்வரை வன்னி வநதிருந்தபோது அவர்கள் தமது மண்வாசனையை அப்படியே காவிக்கொண்டு வந்தார்கள். (ஏற்கெனவே வன்னியிலும் யாழிலும் நிறைய மட்டக்களப்பு ஆட்கள் இருந்தபோதும் அவர்கள் சூழலுக்கேட்ப மொழியை மாற்றியிருந்தார்கள். சிலரின் கதையில் அவர் மட்டக்களப்புத்தான் என்பதை சொன்னாலும் நம்ப முடியாது. ஆனால் இப்போது வந்திருந்த அணி முற்றாக மட்டக்களப்பு வாசனைதான்.)

ஒருநாள் அதிகாலை எங்கள் வீட்டுக் கிணற்றைப் பாவிக்கலாமோ என்று கேட்டு வந்தார்கள். “அண்ணே பூலி இரிக்கா?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்த முசுப்பாத்திதான். 'பூலி என்றால் என்ன என்று நான் விளங்கிக் கொள்வதற்குள் விடிந்துவிட்டது. அதன் பின் அவர்களோடு பழகும் நிறையச் சந்தர்ப்பங்கள் வந்தன. வன்னியில் எங்கு பார்த்தாலும் மட்டக்களப்புப் போராளிகளைக் காணலாம். அவர்களின் மொழிநடை எம்மிலிருந்து மிகவும் வேறுபட்டதாயிருந்தது. ஆனால் சில சொற்களைத்தவிர விளங்கிக் கொள்வதில் எந்தக் கஸ்டமுமில்லை.

'நான் “பேந்து” வாறன்' என்றால் அவர்களின் நக்கல் தாங்கமுடியாது. நாங்கள் "பேந்து" என்பதை ‘பிறகு’ எனும் பொருளில் பாவிப்போம். ஆனால் அவர்களுக்குப் "பேந்து" என்றால் ‘பிளந்து’ என்ற பொருள். (சைக்கிள் ரியூப் பேந்து போச்சு, அத்திவாரம் பேந்து போச்சு). 'பேந்து வாறன்' என்றால் அவர்கள் பொருளில் பிளந்து அதாவது வெடித்து சிதறி துண்டு துண்டா வருதல் என்ற பொருள். உண்மையில் 'பிறகு' என்பதைவிட 'பிளந்து' என்ற சொல்லுக்குக் கிட்டவாகவே 'பேந்து' என்ற சொல் இருப்பதால் மட்டக்களப்பாரின் “பேந்து” தான் கூடுதலான சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மறுபடி என்பதை 'மறுகா' என்பார்கள். அடிக்கடி “ஓப்பாய்” என்று சொல்வார்கள். சிலரின் ஒவ்வொரு வசனத்திலும் இது வரும். ஆரம்பத்தில் இச்சொல் அதிர்ச்சி தந்தாலும் அவர்களிடம் அச்சொல்லுக்கு மோசமான அர்த்தம் இல்லையென்பதைப் புரிந்துகொண்டோம். எனக்கும் இந்தக் கதை தொற்றிக் கொண்டது தனிக்கதை. ஆனால் வீட்டுக்கு வரும்போது தெண்டித்து இவற்றை நிறுத்திக்கொள்வேன்.

ஒருமுறை “கிபிர் வந்தா குண்டியில காலடிக்க ஓடேக்க தெரியும்” என்று சொன்னபோது அவர்கள் திகைத்துப் போனார்கள். எங்களிடம் இயல்பாக இருக்கும் அச்சொல் அவர்களுக்குக் கூடாத சொல். அதுபோல நாங்கள் சமையலுக்குப் பாவிக்கும் 'பூண்டு' எனும் பொருளை (இதை இந்தியாவில் வெள்ளைப் பூண்டு என்பார்கள்.) பூண்டு என்று பாவிப்பதில்லை. அது இன்னதுதான் என்று தெரிந்திருந்தலும் “உள்ளி” என்ற சொல்லே பாவிப்போம். ஆனால் அவர்கள் அந்தச் சொல்லை மறந்தும் உச்சரிக்க மாட்டார்கள். அவர்கள் பள்ளத்தை 'மடு' என்றுதான் சாதாரணமாகக் கதைக்கும்போது சொல்கிறார்கள். நாங்கள் யாரும் பேச்சுத்தமிழில் பள்ளத்தை 'மடு' என்று பாவிப்பதில்லை.

பழகுவதற்கு மிகமிக இனிமையானவர்கள். யாருடனும் உடனடியாய் இறுக்கமாய் ஒட்டிக்கொள்ளும் தன்மை அவர்களுக்கு இயல்பானது. ஒருவருடன் அரை மணிநேரம் கதைத்தாலே போதும் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத அனுபவம். அவர்கள் அனுபவித்த துன்பங்கள் எம்மிலிருந்து வேறுபட்டது. அவர்களின் கதைகேட்க மனசைப் பிளியும். அப்பா இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் நிறையப் பேர். சின்ன வயதில் இறந்து விட்டதாக நினைத்திருந்த தங்கச்சியை வன்னியில் இருவருமே போராளிகளாகச் சந்தித்த அனுபவம், இப்படி நிறைய.

இன்னும் அவர்களைப் பற்றி நிறைய அறிய வேண்டும். அவர்கள் மொழி பற்றி நிறைய அறிய வேண்டும். இன்னும் கலப்பில்லாத அருமையான தமிழ்ச்சொற்கள் அங்கே மண்டிக்கிடக்குமென்றே நினைக்கிறேன். அழகான கலைகள், எமக்கான கலைகள், என்று இன்னும் அந்த மண்ணில் நாம் தோண்ட வேண்டியவைகள் ஏராளம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மறுவா கிறுகி...." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (07 May, 2005 16:15) : 

/உண்மையில் 'பிறகு' என்பதைவிட 'பிளந்து' என்ற சொல்லுக்குக் கிட்டவாகவே 'பேந்து' என்ற சொல் இருப்பதால் மட்டக்களப்பாரின் “பேந்து” தான் கூடுதலான சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்./

வசந்தன், 'பேந்து' என்பது 'பெயர்ந்து' என்பதன் திரிபாக இருக்கலாமென்று தோன்றுகிறது.

 

said ... (07 May, 2005 17:19) : 

நா.கண்ணன் அய்யாகூட வட்டார வழக்கு மொழி என பாஷைகளை வரிசைப் படுத்தினார். அய்யா அவர்களுக்கு ஒலியாக அனுப்பி வைக்கவும்!

 

said ... (07 May, 2005 17:32) : 

வசந்தன்!

உங்க யாழ்ப்பான ஆட்களும் தான் பழகுவதற்கு இனிமையானவர்கள். எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் அச்சுவேலியிலிருந்து வந்து தங்கி இருக்கிறார்கள், 94 ஆம் வருடம் வந்தார்கள் என்று நினைக்கிறேன், தற்போது எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள்போல் பழகிவிட்டர்கள். பெரியக்கா, சின்னக்கா என எங்களை அழைத்து எங்களை அவர்களில் ஒருவராகவே நினைக்கின்றர்கள். எங்களுடைய பிரியாணி,இட்லி அவர்களுக்குப் பிரியம். அவர்களுடைய புட்டு, பால் ரொட்டி, இடிஅப்பம், மீன் சொதி எங்களுக்கு விருப்பம். நெதர்லாந், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கும் அவர்களது குழைந்தைகள் எந்த ஒரு விசஷத்திற்கும் phone பண்ணி பேசுவார்கள். எவ்வளவு இழப்புக்களை சந்தித்து இருந்தாலும், மரணங்களையும், மனப்பிறழ்வுகளையும் கண்டு வெறுத்து அகதிகளாய் (உலகத்தில் உள்ள நாம் அனைவருமே அகதிகள்தான், உலகம் நமக்கு நிரந்தர இடமா என்ன?) பிறநாடுகளில் தஞ்சம் அடைந்திருந்தாலும் மனித உறவின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மிகுந்த வியப்பளிக்கின்றது. நமக்கு பிடித்த நாய்க்குட்டி காணமல் போனாலே, "யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு., நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சுன்னு" உக்காந்திருவோம். உடமைகளை, உயிர்ச் சொந்தங்களை இழந்தாலும் கடமைக்காக வாழாமல், எவ்வளவோ உண்மைகளை மொளனமாக கத்துக்கொடுக்கின்றீர்கள் எங்களுக்கு.

 

said ... (07 May, 2005 17:36) : 

நல்ல பதிவு வசந்தன்.

யாரேனும் மட்டக்களப்பாரை வைத்து ஒரு குரல் பதிவு (இண்டைக்கில்ல எப்பாயாவது) செய்தால் நல்லது.


எனக்கு 'மரைக்காயர்'ஓ வேறு ஏதாவதோ என்று ரேடியோவில் போன ஒரு நிகழ்ச்சிதான் ஞாபகம் வருகிறது. அந்தத் தமிழ் மட்டக்களப்புத் தமிழா?


இந்த 'இரிக்கா' என்ற வழக்கை தமிழகத்திலும் எங்கேயோ கேட்ட ஞாபகம்.


சில மாதங்களுக்கு முன்பு 'வெள்ளாவி' படித்தபோது தொடக்கத்தில் குழப்பமாக இருந்ததற்குக் காரணம், அந்தத் தமிழும் என்று நினைக்கிறேன்.

-மதி

 

said ... (07 May, 2005 18:15) : 

பெயர்ந்து எனும் பொருளில் யாழ்ப்பாணத்தவரும் பாவிக்கின்றனர். (மரம் பேந்து போச்சு. கண்டு பேந்து வந்திட்டுது. அடியோட பேத்து எடு.). ஆனால் சைக்கிள் ரியூப் பேந்து போச்சு என்று யாரும் பாவித்தால் அது பிளந்து என்ற பொருளில்தான். அதைத்தான் காட்டினேன்.
கருத்துக்கு நன்றி பெயரிலி, மூர்த்தி, அப்படிப்போடு, மற்றும் மதி.

 

said ... (07 May, 2005 18:59) : 

>>>>ரேடியோவில் போன ஒரு நிகழ்ச்சிதான் ஞாபகம் வருகிறது.<<<< - மதி கந்தசாமி.

இங்கு இயல்பாக வந்து விழும் வார்த்தையிது!ரேடியோ தமிழ்கிடையாது,வானொலிதாம் தமிழ் புரியுது.ஆனால் நினைவிலி மனதில் தமிழான ரேடியோவெனும் ஒலிமாற்றுத் தமிழை அகற்றுதலிலுள்ள பிரச்சனையிதுதாம்.நாம் அனைவரும் புரிவதொன்று,ஆழ்மனம் புரிவதொன்று.பின்னதுவே நம்மீது கருத்துக்களை நேரம் பார்த்துச் சுமத்தும்- வெளிப்படுத்தும் செயலூக்கி!

 

said ... (07 May, 2005 22:45) : 

கருத்துக்கு நன்றி சிறிரங்கன்!
"உங்கள் வானொலிப் பெட்டியின் சத்தத்தைக் குறைத்து வையுங்கள்."

இது அடிக்கடி வானொலி நிகழ்ச்சிகளிற் சொல்லப்படும் வாக்கியம். கேட்டிருப்பீர்களோ தெரியாது. அது அவர்களுக்கு அடிமனத்திலிருந்து வராமற் போகலாம். ஆனால் தொடர்ச்சியாக வானொலி என்றேதான் கதைக்கிறார்கள். வெளியில் எப்படிக் கதைத்தாலும் அறிவிப்புப் பணிக்கு வந்தவுடன் வானொலி என்ற சொல்தான் தாம் பாவிக்க வேண்டுமென்று அர்களுக்குத் தெரிந்துள்ளது. அப்பிடியே பாவிக்கிறார்கள்.

எனக்கும் தெரியும் யாரும் வெதுப்பியென்று ஆழ்மனத்திலிருந்து கதைப்பதில்லை. ஆனால் அப்படி ஆழ்மனத்திலிருந்து சொல்லும் புதிய தமிழ்ச்சொற்கள் பற்றி (வெகு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட) ஏற்கெனவே எழுதிவிட்டேன். பேருந்து, தொடருந்து என்று ஆகக்குறைந்தது எழுத்துத் தமிழிலாவது தமிழ்ச்சொல் பாவிப்பது சரிவராதா?

நாம் சாதாரணமாக கதைப்பது போன்று எழுதப் புறப்படும்போது அந்தத் தமிழே வரும். மதிக்கும் அப்பித்தான் போலும். ஆனால் நாம் கைக்கொள்ளும் எழுத்து நடையொன்று உள்ளதே. அப்படி எழுதும்போது ஏன் இந்தச் சொற்களைப் பாவிக்க முடியாது?

நானும் இன்னும் பாண் என்றும் பஸ் என்றும் ட்ரெயின் என்றும் தான் பாவிக்கிறேன்.
என் பதிவுகள் குறிப்பாக கடைசிப்பதிவு சிக்கல்களை ஏற்படுத்திவிட்டதென்று நினைக்கிறேன். இனிமேல் இது குறித்து வாதிடும் எண்ணமில்லை. என்னையும் பார்த்து "எங்கே இதற்கு தமிழ்ச்சொல் சொல் பார்க்கலாம்" என்று கேள்விகள் வரும்முன் ஒதுங்கிக்கொள்கிறேன். நன்றி.

 

said ... (08 May, 2005 12:12) : 

'பேந்து' என்பது எங்கள் ஊரில் (கொங்கு நாடு) பெயர்ந்து என்பதற்காக உபயோகிக்கப்படுகிறது வசந்தன். நன்றி.

சிறுவன்

 

said ... (09 May, 2005 02:52) : 

மடு என்றால் குளம் அல்லவா.

ஈழத்தமிழ் என்பது யாழ்ப்பாணத் தமிழைத்தான் குறிக்கின்றது என்ற உங்கள் அவதானத்துக்கு நிறையக் காரணிகள் உண்டு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நாடகத்தனமான(?) நாடகங்கள் + யாழ்ப்பாண மக்களே பெரும்பான்மையாக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளார்கள் என்ற உண்மை.

 

said ... (27 May, 2005 02:10) : 

எழுதிக்கொள்வது: Nalayiny Thamaraichselvan

மட்டக்களப்பு தமிழகம் வாசியுங்கள் நல்ல பல இலக்கிய வாழ்வியல் தகவல்கள் கிடைக்கும்.


மட்டக்களப்பு தமிழகம் வாசியுங்கள் நல்ல பல இலக்கியää வாழ்வியல் தகவல்கள் கிடைக்கும்.9.38 26.5.2005

 

said ... (27 May, 2005 03:46) : 

வசந்தன் - சுவாரசியமான பதிவு. தகவல்களுக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________