Thursday, May 05, 2005

நல்ல தமிழ் -3

பிறை - மூன்று.
(மூண்டாம்பிறை பாத்தா முழுநிம்மதி.)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

தமிழ் எழுதும் முறை.

தமிழில் வடமொழிச்சொற்கள் கலந்து எழுதுவது பற்றி அவ்வப்போது விவாதங்கள் நடந்துள்ளன. வடமொழிச்சொற்களையோ எழுத்துக்களையோ கலந்து எழுதக் கூடாது என்று பிடிவாதமாக வாதிப்பவர்கள் பழமைவாதிகள், மொழிவெறியர்கள் என்றெல்லாம் திட்டப்படுவதுண்டு. இங்கே மிக ஆழமாக அப்பிரச்சினையை ஆராய்வது நோக்கமன்று. அப்பிடிச் செய்ய எனக்கு அறிவும் போதாது. ஆனால் எனக்குப்பட்ட சிலவற்றை, என் ஆதங்கங்கள் சிலவற்றைச் சொல்வதே நோக்கம்.

இயன்றவரை வேற்றுமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதையோ பேசுவதையோ தவிர்க்க வேண்டும். அதுவும் எழுதும்போது இயன்றவரை கவனமெடுக்கலாம். 'இயன்றவரை' என்பதற்கு என்ன விளக்கம் என்று கேட்கலாம். எமக்குத் தெரிந்திருந்தும் வீம்பாகச் சில இடங்களில் தவறுவிடுகிறோம். அவற்றைத் தவிர்த்தாலே இப்போதைக்குப் போதும். செய்திகளிலும் விளம்பரங்களிலும் அறிவித்தல்களிலும் கட்டுரைகளிலும் இயன்றவரை நல்ல தமிழைப் பாவிக்கலாம். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்கள் இருக்கத்தக்கதாக வேற்றுமொழிச்சொற்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். ஒரு பத்தியில் கணணி என்று வந்து மறு பத்தியிலேயே கொம்பியூட்டர் என்று வருகிறது. இவற்றைத் தவிர்க்கலாம். இன்றும் கூட திரைப்பட எழுத்தோட்டத்தில் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஸன் என்று போடுகிறார்கள். இந்த டைரக்ஸன் என்பதை இயக்கம் என்று போட முடியாதா? (சில இடங்களில் இதை நெறியாழ்கை என்கிறார்கள்).

இதைவிட முக்கியமான விடயம், வடமொழி எழுத்துக்கள். வடமொழியெழுத்துக்களின் உச்சரிப்பை எல்லாச் சந்தர்ப்பத்திலும் எம்மால் தமிழெழுத்துக்களில் இருந்து பெற முடியாது என்பது உண்மை. (முற்றிலும் வடமொழியெழுத்தைத் தவிர்க்க வேண்டுமென்று இப்போதுநான் சொல்லவில்லை. ஆனால் அக்கோரிக்கைக்கு நான் எதிரானவனல்லன்) ஆனால் தமிழெழுத்துக்களை வைத்தே பெறக்கூடிய ஒலிகளுக்குக் கிரந்தத்தைப் பாவிப்பதை என்னவென்று சொல்வது? இதைத் அறிந்தே செய்கிறார்களா என்பது தான் என் கேள்வி. ‘வஸந்’ என்று எழுதி உச்சரிப்பதற்கும் ‘வசந்’ என்று எழுதி உச்சரிப்பதற்குமிடையில் ஏதாவது வேறுபாடு உண்டா? மெய்யொன்றைத் தொடர்ந்து வராத சந்தர்ப்பத்தில் மொழியின் இடையில் வரும் ‘ச’கர வரிசையெல்லாம் கிரந்த ‘ஸ’ ஒலிவடிவத்தையே பெறும். இந்த இடத்திற் கிரந்தத்தைப் பாவிப்பதை என்னவென்பது?

மன்மதன் பட எழுத்தோட்டத்திலும் விளம்பரங்களிலும் இயக்குநரின் (டைரக்டர்) பெயர் ‘முருஹன்’ என்று வரும். இந்த ‘ஹ’ போடுவது ஏன்? முருகன் என்று ஏழுதி உச்சரிப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது. முருகன் என்ற தமிழ்ப் பெயரையே கிரந்தம் கலந்து ஆனால் அதே உச்சரிப்பிற் பலுக்குகிறார்கள். இவர்களை என்ன செய்ய? இப்படி இன்னும் நிறைய இருக்கிறது. மகா நதியும் மஹா நதியும் ஒரே உச்சரிப்புத்தான். ஆனால் கிரந்தத்தில் எழுதினால்தான் அவர்களுக்குப் புரியும். நான் கூற வருவது என்னவென்றால் வலைப்பதியும் நாமாவது இப்படியான தவறுகளைத் திருத்திக் கொள்வோம்.
------------------------------------------------------------

இன்னொரு விடயம். பாவனையிலிருக்கும் பிறமொழிச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச்சொற்கள் அவ்வப்போது தென்படுகின்றன. இவையனைத்தும் ஓரிடத்தில் தொகுக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு சந்தர்ப்பத்தில் 'ரெம்பிளேட்' என்பதற்கு இராம.கி. ஐயா மற்றும் காசி ஆகியோர் ஏதோ சட்டகம் என்று ஒரு சொல்லைத் தீர்மானித்ததைக் கண்டேன். போகிற போக்கில் பாரத்துவிட்டுப் போய்விட்டேன். பிறிதொருநாள் எனக்கு அச்சொல் தேவைப்பட்டபோது அதை எங்குப் பார்த்தேன் என்பதை மறந்துவிட்டேன். தேடிச் சலித்துக் கைவிட்டுவிட்டேன். இப்போது இராம.கி. சில சொற்களை அதன் வேர்ச்சொல் விளக்கங்களுடன் தந்துள்ளார். இவற்றையும் ஏற்கெனவே இருக்கும் சொற்களையும் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற் சேமித்து வைத்தால் எல்லோருக்கும் இலகுவாக இருக்கும். கூடவே அதன் விளக்கங்களையும் சேர்த்து வைத்தல் நன்று. அதற்கென சிறப்பாக ஒரு வடிவமைப்பை அப்பக்கம் கொண்டிருத்தல் நலம். [இப்போது என் 'நல்ல தமிழ் 1' பதிவிலும் ஈருருளியின்(சைக்கிளை இப்பிடித்தான் வன்னியிற் சொல்கிறார்கள். துவிதமும் சக்கரமும் தமிழன்றாம்) பாகங்கள் சிலவற்றின் தமிழ் வடிவங்களைத் தந்துள்ளார்.]

சில வலைப்பக்கங்களில் விவாதங்கள் நடக்கும். ஆனால் ஒரு முடிபும் (இந்த இடத்தில் 'முடிவு' என்று வருவது தவறு என்று அறிகிறேன். தீர்மானம் எனும் பொருளில் வரும்போது 'முடிபு' என்றுதான் எழுதவேண்டுமென்றும் 'முடிவு' என்பது end எனும் பொருளில்தான் வரும் என்றும் அறிகிறேன். மொழிவல்லுநர்கள் தெளிவுபடுத்தவும்.) இன்றி முடிந்துவிடும். ஜீவாவின் பக்கத்தில் குறுந்தகடு, குறுவட்டு, இறுவட்டு, என்றும் அதை எரித்தல் பொசுக்குதல் தீத்தல் என்று பலவிதமான விவாதங்கள் நடந்து கடைசியில் ஒன்றுமில்லாமல முடிந்துவிட்டது. இவற்றையும் ஒரு பொதுக்களத்தில் விவாதத்துக்கு எடுத்து விவாதித்தல் நன்று. குறிப்பிட்ட வடிவத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் விவாதத்துக்கு வருதல் முக்கியம்.

இப்போது தமிழ்மணத்தின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. அதன் வாசகவட்டமும் எழுத்துவட்டமும் நாளுக்குநாட் பெருகிவருகின்றன. ஒரு நேரத்தில் சமூகத்திற் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொள்ளுமளவுக்கு இது வளரலாம். அந்நேரத்தில் நிச்சயமாக எம்மிடையேயான கூட்டுமுயற்சிகள் நிறைந்த பலனைத்தரும்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நல்ல தமிழ் -3" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 May, 2005 12:09) : 

எழுதிக்கொள்வது: Tulsi Gopal

வசந்தன்,

'நல்ல தமிழ்' தெரியாதேப்பா?

என்றும் அன்புடன்,
துளஸி

14.35 5.5.2005

 

said ... (05 May, 2005 13:12) : 

சுஷ்மம்! சுஷ்மம்!
கஸமாலம்! கஷ்டம்!1
-/.

 

said ... (05 May, 2005 15:02) : 

மிகவும் நல்ல பதிவு வசந்தன்.

இராம.கி. அய்யாவின் பதிவுகளை ஏதாவதொரு வழியில் ஆவணப்படுத்த வேண்டும்!

ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

 

said ... (06 May, 2005 00:21) : 

எழுதிக்கொள்வது: Nikhil

சக்கரம் தமிழ்ச்சொல்லே.வடசொல்லென்று நாம் மயக்கமுறும் பல சொற்கள் தமிழ்ச்சொற்கள் தாம்.தமிழ் சொற்களென நினைத்திருக்கும் பல தமிழ்ச்சொற்கள் வடசொற்கள்.பல சொற்களை நாம் தமிழ்படுத்த வேண்டும்.புதிய சொற்களை உருவாக்க வேண்டும்.இணையத்தில் இது போன்ற ஒத்த சிந்தனை கொண்டோரை இணைத்து இந்தப் பணி நடைபெற வேண்டும்.பின்னர் அதையெல்லாம் ஓர் இணையத்தளம் செய்து போட வேண்டும்.அந்தப் பணியை யாராவது முன்னெடுத்தால் அவர்களுக்கு உதவத் தயாராக உள்ளேன்.
நல்ல பணி வசந்தன்!

பி.கு.: அது நெறியாள்கை! 'ழ்'அல்ல!

16.41 5.5.2005

 

said ... (06 May, 2005 07:59) : 

வசந்தன்!
கறுப்பி ஆராய்ச்சியொண்டு செய்திருக்கிறா பாத்தனியளோ? அதுபற்றி உங்கட கருத்தென்ன?

 

said ... (06 May, 2005 09:42) : 

நிகிழி!
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தவறைத்திருத்தி விடுகிறேன்.

துளசி!
நான் கிரந்தங்களைத் தேவையற்றுப் பாவிக்க வேண்டாமென்று எழுதிய பிறகு வேண்டுமென்றே 'துளஸி' என்று எழுதியிருக்கிறீர்கள்.

கறுப்பி பற்றி எனக்குக் கருத்தில்லை.

 

post a comment

© 2006  Thur Broeders

________________