Tuesday, May 03, 2005

நான் சைக்கிளோடிய அனுபவம்.

பிறை இரண்டு


என்ர முதலாவது நாளே கிண்ணியா, 'கன்னி'யா எண்டதோட நாறிப்போச்சு.இப்பிடி ஏதாவது புதுசாச் செய்வோமெண்டு வெளிக்கிட்டா இப்பிடித்தான் நடக்கும். பேசாம என்ர பாணியிலயே எழுதிறதுதான் சரியெண்டு பட்டதால இந்தப் பதிவு. இதோ பழயபாணியில் ஒரு பதிவு.

என்ர ஒன்பதாவது பிறந்த நாளுக்கு என்ர தொட்டம்மா (ஞானத்தாய் - God mother) ஒரு புதுச் சைக்கிள் வாங்கித்தந்தா. ஆனா அப்ப நான் முழுமையா சைக்கிள் ஓட மாட்டன். ஒரு பழஞ்சைக்கிளிலதான் ஓடிப்பழக வேணுமெண்டது அப்ப எழுதாதவிதி. ஒருத்தரும் அந்தச் சைக்கிளில ஓடிப்பழகிறத விரும்பேல. ஆனா ஓடிப்பழக பழய அரைச் சைக்கிள் கிடைக்கேல. இப்பிடியே கொஞ்சநாள் இழுபட்டீச்சு. என்னால சைக்கிள் ஓட ஏலும் எண்ட நம்பிக்கை எனக்கு இருந்தீச்சு. இந்தியாவில இருந்த காலத்தின்ர கடைசிப்பகுதியில களவாக வாடகைச் சைக்கிள் எடுத்து அங்கத்தையான் பெடியளின்ர உதவியோட பழகினனான். ஆனா முழுமையா பழகி முடிய முதல் யாழ்ப்பாணம் வந்தாச்சு. அந்தப் பழக்கம் இருக்கத்தானே வேணும் எண்ட நம்பிக்கை எனக்கு.

ஒருநாள் வீட்டில பெரியாக்கள் இல்லாத நிலையில தங்கச்சியளோட சேந்து சைக்கிள வெளிய எடுத்தன். தங்கச்சியாக்கள பிடிக்கச்சொல்லி வீட்டு வளவுக்கையே ஓடத்துடங்கினன். நான் ஓடிப்பழகீற்று தங்கச்சியாக்களுக்கு பிறகு பழக்கிறது எண்ட ஒரு ஒப்பந்தத்தோட தான் தங்கச்சியள் எனக்கு உதவினவை. ஒரு 10 வட்டம் ஓடினதும் நல்ல வடிவாத் துடைச்சு பழய மாதிரியே கொண்டு போய் வச்சிட்டன்.

ரெண்டாம் நாளும் ஏதோ சபைக்கூட்டம் எண்டு பெரியாக்கள் வெளிக்கிட (கர்த்தருக்கு தோத்திரம்) சைக்கிள எடுத்து ஓடத் துடங்கினன். எங்கட வீட்டு முத்தத்தில ரெண்டு வேம்பு நிக்குது. ஒரு வேம்பில ஊஞ்சல் கட்டியிருந்தது. பலகை போடாத தனிக்கயிற்று ஊஞ்சல். சும்மா நேரத்தில அடியில ஒரு முடிச்சுப் போட்டு கொஞ்சம் உயத்திக் கட்டியிருப்பம். சைக்கிளப் பிடிச்சுக்கொண்டிருந்ததுகள் திடீரெண்டு விட்டுட்டுதுகள். நானும் அதக் கவனிக்கேல. திடீரெண்டு ஓடிவாற சத்தம் கேக்கேலயெண்டு திரும்பிப்பாக்க, ஒருத்தரையும் காணேல. உடன பயம் வந்து கத்தினபடியே சைக்கிளவிட்டன். தொங்கிக்கொண்டிருந்த உஞ்சல் கயிறு அப்பிடியே உயந்து கழுத்துக்க கொழுவி,…
சைக்கிள் நேராப் போயிட்டுது. நான் தூக்கில போட்ட மாதிரி கழுத்தைக் குடுத்து விழுந்திட்டன். நல்ல வெட்டு. சைக்கிளில பெரிய சேதமில்ல. கழுத்தில வந்த காயத்த அம்மம்மாவிட்ட மட்டும் காட்டிச்சமாளிச்சிட்டன்.

இப்பிடி நாலு நாளில சைக்கிள் ஓடிப்பழகீற்றன். ஆனா துவங்கிறதும் முடிக்கிறதும் தான் பிரச்சின. ஒரு அரையடி தொடக்கம் ரெண்டடி உயரமான கட்டு அல்லது குந்து ஒண்டில காலூண்டி உன்னி வெளிக்கிட்டா, பிறகு நிப்பாட்டுறதுக்கும் அப்பிடியொரு கட்டு வேணும். அதுவும் ரெண்டு சந்தர்ப்பத்திலயும் இடப்பக்கம்தான் அந்தக் கட்டு இருக்கோணும்.

இப்பிடியொரு சந்தர்ப்பத்தில அம்மாவிட்ட நான் சைக்கிளோடப் பழகீற்றன் எண்டு ஓடிக்காட்டி அனுமதி வாங்கியாச்சு. (அப்பரிட்ட வாங்கேல.) ஒரு திங்கக்கிழம நான் புதுசா அந்தச் சைக்கிளில பள்ளிக்கூடம் போறன். அப்ப நான் ஆண்டு 4. ஏறத்தாள உயர் நிலை மாணவன். (ஏனெண்டா ஆண்டு 5 வரைக்கும்தான் வகுப்பு இருக்கு). ஏற்கெனவே வாத்திமார விட ஒரேயொரு பெடியன்தான் சைக்கிளில பள்ளிக்கூடம் வாறவன். அவனிண்ட நல்ல சின்னச் சைக்கிள். (கால் சைக்கிள்?). நான் ரெண்டாவது ஆள்.

சைக்கிள் கோயில் வளவுக்க நுழைஞ்சிட்டுது. (கோயிலும் பள்ளிக்கூடமும் ஒரே வளவுக்கதான் இருந்தது. ஆனா கோயில்வளவு எண்டுதான் சொல்லுறது.) ஆனா இப்ப சைக்கிள நிப்பாட்ட எனக்கு ஒரு கட்டு தேவை. அதுவும் இடப்பக்கம் தேவை. பள்ளிக்கூடத்தில அப்பிடித் தோதான கட்டு இல்ல. என்னெண்டடா நிப்பாட்டுறது எண்டு திரியிறன். பள்ளிக்கூடம் துவங்கிற நேரமும் ஆயிட்டுது. என்ர சைக்கிள் பயணம் நிக்கேல. கோயில் வளவுக்க ரெண்டு மூண்டு தரம் சுத்தீட்டன். கோயில் கட்டில கால வச்சு நிப்பம் எண்டு பாத்தா அது வலப்பக்கமாயிருக்கு. பிறகு சைக்கிள மற்றவளமாத் திருப்பிக் கொண்டு வந்தன்.

இவ்வளவுக்கும் பெடிபெட்டயள் எல்லாம் என்னை ஒரு மாதிரிப் பாக்குதுகள். புதுசா சைக்கிளில வந்தனான் எண்டது இருக்க இப்பிடி 'அணிலடிக்கிறதும்' அவைக்கு ஆச்சரியமாய் இருந்திருக்கோணும். என்ர வகுப்புக்காரர், சிலதுகள் “உங்க பாற்றா, வசந்தன் சைக்கிளில பள்ளிக்கூடம் வந்திருக்கிறான்.” எண்டு கூச்சல் போட்டுதுகள். ரெண்டு மூண்டு கூக்காட்டிக்கொண்டு பின்னால கொஞ்சத் தூரம் ஓடியந்துதுகள். ஆருக்குத் தெரியும் என்ர பிரச்சின. அதுக்குள்ள பள்ளிக்கூட மணியும் அடிச்சிட்டுது. இனியும் பிந்தினா பிரச்சினதான் எண்டிட்டு கோயில்படியில கால்வச்சு இறங்குவம் எண்டு வெளிக்கிட்டன். ஆனா அந்த இடத்தில நிண்ட கொஞ்சப் பெட்டயளக் கண்ட உடன என்ர தன்மானம் விடேல. சீ... இவளவ என்ன நினைப்பினம்? சைக்கிளில இருந்து இறங்கத்தெரியாது எண்டெல்லோ நினைப்பினம், எண்டிட்டு கோயில் பின்பக்கம் போய் இறங்க முடிவெடுத்துப் போனன்.

அதுக்குள்ள விசயம் கேள்விப்பட்டு என்ர தோழர்கள் வந்திட்டாங்கள். ‘டேய்! இவ்வளவு நேரமும் சைக்கிளில சுத்தி என்ன விலாசமோ காட்டிறாய்? இறங்கடா கீழ. இண்டைக்கு கூட்டிற முறைக்கும் வரேல. நாங்கள் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிறம். நீ என்னடா எண்டால் சைக்கிள் விட்டுக்காட்டுறாய் என்ன?” எண்டு கோபத்தோட சைக்கிள இழுத்து நிப்பாட்டிப் போட்டாங்கள். அப்பதான் இண்டைக்கு என்ர கூட்டுமுறை எண்டதே ஞாபகம் வந்திச்சு. ஹி..ஹி… எண்டு இளிச்சுக்கொண்டே இறங்கீட்டன். (அவங்கள் தான் சைக்கிள பிடிச்சுக்கொண்டு இருந்தாங்களே). அதுக்குள்ள வெளியில எல்லாரும் வரிசையா காலம வழிபாட்டுக்கு நிண்டிச்சினம்.

ஒருத்தருக்கும் என்ர பிரச்சினையச் சொல்லேல. எப்பிடி நினைச்சாங்களோ அப்பிடியே விட்டுட்டன். எந்த அசம்பாவிதமும் இல்லாம நான் இறங்கினது பேச்சந்தோசம். நானறிஞ்ச வரைக்கும் அண்டைக்கு காலமதான் மண்றாட்டத்தில முழுமையா மனச ஈடுபடுத்தி கடவுளுக்கு தோத்திரம் சொன்னன். கர்த்தருக்கு தோத்திரம்.

குறிப்பு:இண்டைக்கு “சைக்கிளோடிறது” எண்ட சொல்ல கண்டபடி பாவிக்க ஏலாமக் கிடக்கு. பின்னயென்ன வேற அர்த்தமெல்லோ கண்டுபிடிக்கிறாங்கள். இருந்தாலும் வேற சொல் எதுவும் எனக்கு வரேலயெண்டபடியா பாவிச்சன்.

அணிலடிக்கிறது:- மற்றாக்களுக்கு விலாசம் காட்டுறது, தம்பட்டமடிக்கிறது.

-----------------------------------------------------

வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள்.

இங்கே சென்று வாக்குப்போடுங்கள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நான் சைக்கிளோடிய அனுபவம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (03 May, 2005 16:48) : 

நான் சைக்கிளோடப் பழகினது ஒரு அக்காட சொப்பரில. அவட நண்பி எங்கட வீட்டுக்கு வந்தா "சைக்கிள் பழகியாச்சோ" என்டு கேப்பா. யார் அத ஒழுங்காப் பழகினது? ஓட வெளிக்கிட்டு விழுந்தெழும்பினதில சைக்கிளிட செயினும் கழண்டு போம். அதக் காட்டித்தான் சமாளிக்கிறது: "ஓமக்கா..பழகிட்டன்..ஓடிக்காட்டுவன், ஆனா சைக்கிள் செயின் தான் கழண்டு போச்சு" (கடவுளே அடுத்த தரம் கேட்க முதல் பழகிடோணும் என்டு நான் யோசிச்சு முடிக்க, அம்மா வந்து என்ட கதை கேட்டு நக்கலா ஒரு :oD ...Grrrrr!!)

 

said ... (03 May, 2005 18:54) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

எனக்கு இப்படி தங்கைகள் இல்ல ஆனா சைக்கிள் பழகேக்க படிச்சு நிண்டு ஏறுறதுக்கு கல்லு தேலைப்பட்டது உண்மை.

11.16 3.5.2005

 

said ... (04 May, 2005 06:03) : 

அது சரி இப்ப நல்லா ஓடுவீங்களோ ஒஸ்ரேலியாவில? எல்லாருக்கும் இப்பிடியான அனுவம் நிச்சயமாக இருக்கும். நானும் நல்லாச் சைக்கிள் ஓடுவன் ஆனால் எப்ப பழகினான் எண்டதை மறந்திட்டன். தொடர்ந்து எழுதுங்கள். நல்லா இருக்கு

 

said ... (27 May, 2005 03:19) : 

எழுதிக்கொள்வது: Nalayiny Thamaraichselvan

வாசித்து நிறைய சிரித்தோம். . எனது அனுபவத்தை சொல்லவேண்டும் போன்றதான ஒரு உந்துதல். ஏறும் போது வேலியில்பிடித்தபடி ஏறி ஓடதொடங்கினேன். இறங்குவது என்றால் துவிச்சக்கர வண்டியை கைவிட்டிட்டு பாய்ந்து விடுவேன். துவிச்சக்கர வண்டி உடையுதோ உடையேலையோ நான் மட்டும் காயமின்றி தப்பித்துக்கொள்ளுவேன்.( உங்களை மாதிரி இறங்கேலாமல் தவித்த தவிப்பில் அந்த எண்ணம் கைகுhடவே அதுவே தொடர்கதையாகியது. ) பிறகு மதவில் கால் வைத்து ஏறிää வேலியில் போய் சரித்து கையை வேலியில் பிடித்தபடி இறங்குவேன். இது வீதியில் ஓடதொடங்கிய அனுபவம். பிறகு துவிச்சக்கரத்துக்கே நான் தான் பல வித்தைகள் காட்டியதுண்டு. தொட்டிலில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அன்று துவிச்சக்கர வண்டி ஓடிய அதே அனுபவம் இன்று மோட்டார் சயிக்கிள் ஓடியபோதும் கைகொடுத்து உதவியது. முதல் முறை கணவர் பின்னே பிடித்தே வந்தார் ஓடிவருவார் என நினைத்தேன். அடடாh தாமா தாமா என்றேன் சத்தத்தையே காணம். அடுத்த கணம் ஆபத்தை உணர்ந்த நான் மோட்டார் சயிக்கிளை விட்டு பாய்ந்தே விட்டேன். மோட்டார் சயிக்கிள் பாவம் வண்டியில் இப்பவும் ஒரு சின்னக்காயம்.
Nalayiny Thamaraichselvan


9.51 26.5.2005

 

said ... (27 May, 2005 09:58) : 

எழுதிக்கொள்வது: Mayavarathaan

நீங்க சைக்கிள் ஓட்டி மோதி அடிபட்டவங்ககிட்டையெல்லாம் கூட 'நியாபகம் வருதே' ரீதியில் கருத்து கேட்டு எழுதியிருக்கலாமே வசந்தன் சார்..!

7.26 27.5.2005

 

said ... (27 May, 2005 18:23) : 

நன்றி நாளாயினி மற்றும் மாயவரத்தான்.
நாளாயினி உங்கட அனுபவமும் நல்லாத்தான் இருக்கு.
மாயவரத்தான்!
நீங்கள் சொன்ன யோசின நல்லதுதான். ஆனா இப்ப நானிருக்கிற இடத்திலயிருந்து அதச் செய்ய ஏலாதே.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________