Tuesday, May 03, 2005
கிண்ணியா வெந்நீரூற்று.
பிறை - ஒன்று.(மாயம்)
திருக்கோணமலையிலுள்ள (எது சரி? க் வரவேண்டுமா வரக்கூடாதா?) கிண்ணியா வெந்நீரூற்றைப்பற்றி நிறையப் பேர் அறிந்திருப்பீர்கள். நான் இன்னும் அங்குப் போகவில்லை. போக ஆசையுள்ளது. அங்கு ஏழு வெந்நீர்க்கிணறுகள் உள்ளன. அதுவும் மிக அருகருகாக உள்ளன. இக்கிணறுகளிலுள்ள நீர் எந்நேரமும் சூடாக இருக்கும். அதுவும் ஒவ்வொரு கிணறும் வெவ்வேறு சூட்டளவைக் கொண்டிருக்கும். நீர் எந்த நேரமும் சுடுவதே அதிசயம். அதுவும் மிக அருகருகாக இருந்துகொண்டு வேறுபட்ட சூட்டளவுகளைக் கொண்டிருப்பது இன்னும் அதிசயமல்லவா?
இங்கே அவற்றின் படங்களை இணைத்திருக்கிறேன். இங்கே போய் வந்தவர்கள் தங்கள் அனுபவங்களையும் மேலதிகத் தகவல்களையும் பதியவும்.
நான் இதுவரை கிண்ணியா என்றே அறிந்து வந்தேன். செய்திகளிலும் கிண்ணியா என்றே பயன்படுத்தப்படுகிறது. இந்தப் படங்களைப் பார்த்த பின்புதான் கன்னியா என்ற பெயரும் இருப்பதாக அறிந்தேன். அந்த முகப்பு வளைவுப் படத்தைப் பாருங்கள். யாரையோ பார்த்து “நீ கன்னியா” என்று கேட்பது போல இல்லையா?
--------------------------------------------------------------- வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள். இங்கே சென்று வாக்குப்போடுங்கள். Labels: நட்சத்திரக் கிழமை, படம் |
"கிண்ணியா வெந்நீரூற்று." இற்குரிய பின்னூட்டங்கள்
திருகோணமலை திரு'க்'கக் கூடாது.
திரிகோணமலைதான் சரியான வடிவம் என்று நினைக்கிறேன்.கன்னியாய் வெந்நீரூற்று என்றுதான் படித்தேன்.கிண்ணியா வேறு ஊர்
அடப்பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!
கன்னியா வேறை; கிண்ணியா வேறை.
கன்னியா திருகோணமலை யாழ்ப்பாணம் ரோட்டிலை இருக்கு (அஞ்சு மைல); கிண்ணியாக்கு, திருகோணமலை-கொழும்பு ரோட்டிலை போய் மூண்டு மைலில திரும்பி, சீனன்வாடி எயார்ப்போட் போற திசையில போகவேண்டும். தம்பலகாமம்-மூதூருக்கு இடையில எண்டு சொல்லுமன். கன்னியா முழுக்க முழுக்க சைவக்காரர் எண்டு சொல்லலாம்; கிண்ணியா முஸ்லீம் கிராமம்.
வாயைக் கிளறாதையும். 1975 இலையிருந்து தொடங்குவன்..... வேண்டாம்.
நானும் யோசித்துக்கொண்டிருந்தன். ஒரு வேளை வசந்தன் சொன்னால் சரியாக இருக்குமோ என்று..?
கன்னியாக்கு நான் போயிருக்கிறன். இப்பவெல்லாம் தண்ணீர் இருக்கும் போது போக வேணுமென்றால் அதிகாலை 4 மணிக்கு போக வேணும்.. பிறகு தண்ணி வற்றுகிறது.. ஆட்களும் வர தொடங்க..
சாத்திரத்துக்கு எடுத்து தெளித்து விட்டு தான் நான் வந்தேன்....
அடடா, அழகான 'கன்னி'யா பற்றிப் படத்தோடு எழுதியிருக்கின்றியள், வசந்தன். நல்லது.
சென்றவருடந்தான் முதல்முதலாய் திருகோணமலைக்குச் சென்றிருந்தேன். இரண்டு முறை, ஒருமுறை நண்பர்களுடனும், மற்றொருமுறை உறவுகளோடும் சென்று கன்னியாவில் குளித்துமிருக்கின்றேன். ஆனால் ஏழு கிணற்றிலும் அவ்வளவு பெரிய வித்தியாசமான தட்பவெட்பத்தை உணரமுடியவில்லை. சிலவேளைகளில் பல நாள்களாய் குளிக்காது கள்ளமடித்துவிட்டுக் குளித்தததால், தோல் மரத்துப்போய் வித்தியாசத்தை உணரமுடியாது போய்விட்டதோ தெரியாது. கன்னியாவின் முகப்பில் பல சோதிடக்காரர்கள் நின்று தம்பி வாரும் வாரும் சாத்திரம் பார்ப்பம் என்டு ஆக்கினை கொடுத்தவையள். கையைக் கொடுத்து ஏதாவது நல்லது சொல்லியிருந்தால் திருகோணமலையிலேயே settle ஆகியிருக்கலாம். விதி விளையாடியது, இங்கே வந்தாப்பிறகுதான் புரிநதது..
.....
//வாயைக் கிளறாதையும். 1975 இலையிருந்து தொடங்குவன்..... வேண்டாம்.//
பரவாயில்லை. பெயரிலிக்கு இந்தப்பதிவைப் பார்த்தவுடன், 'ஆட்டோகிராப்' ஞாபகங்கள் வருகின்றது போல. :-).
எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்
நல்ல பதிவு.
அட நம்மூரிலும் சொல்லுறதுக்கு சில விசயம் இப்பவும் இருக்கு என்பதில் ஆறுதல்.
11.5 3.5.2005
"மட்டக்களப்பை யாரும் மட்டகளப்பு எனுவதில்லை.
யாழ்ப்பாணத்தை யாரும் யாழ்பாணம் எனுவதில்லை
அப்படியாயின் திருகோணமலை மட்டும் ஏன் திருக்கோணமலை இல்லை???
சிங்களக்குடியேற்றங்களின் பின் (1975 இன் பின்?) மருவி அப்படி வந்துவிட்டதாக திருக்கோணமலை வாழ் உறவுக்காரர்கள் கம் தமிழன்பர்கள் 'இதையும் விட்டுக்கொடுக்க முடியுமா' என்கிற நோக்கோடு,
திருக்கோணமலை என வழங்கிக் கேட்டிருக்கிறேன்... ஆனால் முதன்முதலில் நானறிந்தது திருகோணமலையாய்த்தான்.
அறிந்ததை வைத்து
வரலாற்றை மாற்றமுடியாதுதானே??!
;-)
ஆகவே திருக்கோணமலை என வழங்குவது சரியே!சரியே!சரியே!
நான் பார்த்த/குளித்த ஒரே வெந்நீர் ஊற்று, மதுரை பழங்காநத்தத்தில் என் சித்தி அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்த கிணறு தான். வெந்நீர் வைக்க கரண்டு காசு/விறகு மிச்சம் :-)
தவற்றுக்கு (க் வருந்தானே?) வருந்துகிறேன். கன்னியா என்றே மாற்றி விடுகிறேன். இப்போதன்று.
மற்றும் திருக்கோணமலையென்றே இருக்க வேண்டுமென்று எனக்குத் தெரிந்த இலக்கண அறிவு சொல்கிறது. பொடிச்சி சொன்னது சரியே. மேலும் இன்றும் தமிழிற் பெயர் சொல்பவர்கள் 'திருக்கணா மலை' என்றுதான் சொல்கிறார்கள். திரு என்பது திரி (மூன்று) என்பதிலிருந்து வந்ததா? விசயம் தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும். குறிப்பாகப் பெயரிலி.
அதுக்கேன் இவ்வளவு ஈஈஈஈஈஈஈஈஈஈஈ?
திரு என்பது திரி என்பதாய் இருந்தால் திரிகோணமலை என்பது சரியே, தமிழில் மட்டும்தான் ஒற்று மிகும். தமிழ் இலக்கணப்படி வடசொற்கள் உள்ளிட்ட அயல்மொழிச்சொற்களுக்கு சந்தி வராது.
திரிகோணமலை - திரிக்கோணமலை அல்ல
கறுப்பு கார் - கறுப்புக் கார் அல்ல
கறுப்புக் குதிரை - கறுப்பு குதிரை அல்ல
கண்ணாடிப் பூக்கள் - கண்ணாடி பூக்கள் அல்ல
வெள்ளை கீபோர்டு - வெள்ளைக் கீபோர்டு அல்ல
This comment has been removed by a blog administrator.
முத்து!
அது திரி என்பதாயிருந்தாற் சரிதான். ஆனால் நீங்கள் கூறியவை போல் தமிழல்லாதவற்றுக்கு ஒற்றுப் போடத்தேவையில்லையென்பது எனக்குச் சரியாய்ப் படவில்லை. உச்சரிப்பின்படி பார்த்தாற்கூட ஒற்று வரத்தான் செய்யும். அதே இலக்கணங்களுக்குட்பட்டு வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் ஒற்றுக்களைப் பேணவேண்டுமென்பது என் கருத்து.
கறுப்புக் கார், வெள்ளைக் கீபோர்டு என எழுதலே சிறப்பென்பது என் கருத்து.
நீங்கள் என்னைத் திருத்தியமாதிரி உங்களை நானும் திருத்த வேண்டாமா?
'அல்ல' என்று நீங்கள் போட்ட இடத்திலெல்லாம் 'அன்று' என்று வந்திருக்க வேண்டும்.(சும்மா தகவலுக்காகத்தான். எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியுமென்று.)
சயந்தன்!
இப்பிடிச் சொல்லுறத விட அறைஞ்சிருக்கலாம்.'
இதுதான் சொல்லுறது நாய்க்கேன் போர்த்தேங்காயெண்டு.
இனி இப்பிடி போர்த்தேங்காய் தூக்கிறேல.
கிண்ணியா வெந்நீரூற்றிலுள்ள கிணறுகளில் தண்ணீரின் தட்ப வெட்பத்தை அறிய முடியவில்லை என்று கூறியுள்ளதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.கடந்த தடவை போயிருந்தபோது இந்தப்படத்தில் உள்ள தொஙகல் கிணற்றுத்தண்ணி உடம்பில் ஊற்றமுடியாத அளவுக்கு பயங்கரமாகக்கொதித்தது.அதனை எடுத்து ஆளுக்காள் ஊற்றிக்கலைத்துத்திரிந்த ஞாபகம் இன்னுமுள்ளதால் அதன் சூட்டை மறக்கமுடியாது.ஆனால் அதற்கு டிசே கூறிய காரணம் ஒன்றும் இல்லை.
//கிண்ணியா வெந்நீரூற்றிலுள்ள கிணறுகளில் தண்ணீரின் தட்ப வெட்பத்தை அறிய முடியவில்லை என்று கூறியுள்ளதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது//
இது நல்லாயிருக்கு அருணன்.. விடிய விடிய ராமன் கதை.. விடிஞ்ச பிறகு... ஓய்.. அது கன்னியா..
எழுதிக்கொள்வது: kulakaddan
நாங்கள் காலமை வெள்ளண போனதாலை தண்ணி வெளில கட்டு தாண்டி வாறதையும் பாத்தம். வேறு வேறு வெப்ப நிலை தான் அது உணரகூடியதே...........படம் கேட்டிருந்தா தந்திருப்பன் என்ன அந்த சாட்டில என்ரை படமும் வரட்டுமெண்டுதான்
11.6 3.5.2005
எழுதிக்கொள்வது: kulakaddan
ஆனால் நான் போன நேரம் வளைவு கட்டபடவில்லை என நினைக்கிறன். அங்கு தான் முதல் முதல் அவிச்ச கச்சான் சாப்பிட்டது.
11.14 3.5.2005
வசந்தனோ (அல்லது வேறு யாராவது) கன்னியா வெந்நீரூற்றுக்கள் தோன்றிய பின்னணியை/புராணக்கதையை விளக்கிக்கூறுங்களேன்.
டிசே சொன்னது: வசந்தனோ (அல்லது வேறு யாராவது) கன்னியா வெந்நீரூற்றுக்கள் தோன்றிய பின்னணியை/புராணக்கதையை விளக்கிக்கூறுங்களேன்.
நான் சொல்வது: பின்னணி/புராணக்கதை ஒருபுறம் இருக்க, கற்பனைக் கதைகள் இன்னும் சுவையாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. புராணக்கதைகள் கற்பனைதான் என்பதனை சற்று மறந்துவிட்டு, யாராவது ஒரு அருமையான + ஏற்கக்கூடிய + புத்திசாலித்தனமான கதையினைச் சொன்னால் சற்று கேட்டு (வாசித்து) மகிழலாம்.
நான் கன்னியாவுக்கும் போனதில்லை; கிண்ணியாவுக்கும் போனதில்லை. ஆனால் எனது குளியலறையில் பலவிதமான வெப்ப தட்ப நிலைகளில் குளிக்கலாம் என்பது நான் குளித்துக் (கண்டு?) கொண்ட உண்மை.
உண்மையில் அது ஒரு இயற்கை spring. அங்குள்ள பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயன தாக்கங்கள் காரணமாக வெப்ப நீரூற்றாக இருக்கிறது.
புராணகதை
1. ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட பொதுஇதற்குள் முட்டை அவித்தனராம். அதனால் இதன் வெப்பநிலைகள் தற்போது குறைந்துவிட்டதாம்
2. இராவணனின் தாயின் திதி செய்ய விசுவாமித்திரர் அல்லது யாரோ ஒரு முனிவர் தமது கமண்டலத்தை ஏழு முறை நிலத்தில் ஊன்றி இதை உருவாக்கினாராம்
This comment has been removed by a blog administrator.
"திருகோணமலை"
இப்படித்தான் கல்லூரிக்காலம் வரை விலாசம் எழுதிப்பழக்கம் (நைசா என்ர ஊர் எண்டு சொல்லுறன்) முறைக்கு அது "திரி"யில் இருந்துதான் வந்தது (விளக்குத் திரி இல்லை) எங்கட ஏரியாவைச் சுற்றி மூன்று மலை இருக்குது. அந்தத் திரிதான் இந்தத்திரி. "திருக்கொணா மலைய" "யாப்பணய" "மட்ட களப்புவ" இவை சிங்கள மொழி உச்சரிப்புக்கள் இதையே சிலர் தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கமண்னாய் மாத்தயா ஒக்கோ-ம கறி-வெய். (மன்னிக்கவும் இது சிங்களம். meaning - பரவாயில்லை ஐயா! எல்லாம் சரியாகிவிடும்.)
அதைவிட பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயணத் தாக்கங்கள் காரணமாகத்தான் இந்த வென்னீர் ஊற்றுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் (சொல்கிறார்கள்? - அதான் உந்த ஆராட்சி எல்லாம் செய்வினம் அவயள்)
இதைவிட இந்தப்பிரதேசத்தில் உள்ள மலை உச்சியில் 40 அடி நீளமான சமாதி ஒன்று இருக்கிறது.சிமென்ரால கட்டி வைத்திருக்கிறார்கள். கேட்டால் ஒரு இஸ்லாமியரது சமாதி என்கிறார்கள். எனக்கு இதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவர் இந்தக் கிணத்தில குளிக்கிறதெண்டா கடுமையாக் குனியோணும் என்கிற விடயம்தான் வீடு போகு மட்டும் இருந்தது. குளிச்ச ஆராவது ஏறிப்பாத்தனியளோ?
கிணற்று வாசலுக்கு வலப்பக்கமா உள்ள காடுபோன்ற மலையினைத் தான் சொல்கிறேன்.
(இப்ப அங்க விடுவாங்களோ தெரியாது)
/எங்கட ஏரியாவைச் சுற்றி மூன்று மலை இருக்குது/
என்ரை கோணேசா (இண்டைக்கு அவரில ஒரு ரெம்பரரி நம்பிக்கை வந்திட்டுது பாருங்கோ)!! இருபத்தேழு வருசமா இருந்திருக்கிறன்; இந்தப்புதுக்கதை தெரியேல்ல ;-) கேட்டால், கோணேசர்மலை, நேவிமலை, ஓசில் எண்டு சொல்லப்போறார் எல்லாளன். திருகோணமலை வரலாறு, மயூரனின் சித்தப்பா எழுதின புத்தகமொன்று இருக்கிறது; அல்லது செ. குணசிங்கத்தின் பேராதனைப்பல்கலைகழக ஆய்வுநூல் திருக்கோணேஸ்வரம் இருக்கிறது; அல்லது, பண்டிதர் வடிவேலின் திருகோணமலைமாவட்டச்சிவாலங்கள் (இந்துவிவகார அமைச்சு வெளியிட்டது) இருக்கிறது. அல்லது, அகிலேசபிள்ளையின் கோணேச புராணம் கிடக்கிறது. பார்த்தால், பத்துச்சரித்திரம் கிடைக்கும். புத்தகங்கள் அத்தனையும் வீட்டுக்குள்ளைதான் எங்கையோ கிடக்குது. ஒளிச்சுப்பிடிச்சு விளையாட்டுது; தேடிப்பிடிக்கோணும்.
திரிகோணமலை என்பதன் ஐதீகம்; வாயுவுக்கும் ஆதிஷேசனுக்கும் இடையிலே நிகழ்ந்த மேருவினை பிளக்கும் விளையாட்டிலே வருகிறதாகத்தான் படித்திருக்கிறேன். ஆதிஷேசன் சுத்திய மலையிலே வாயு பிய்த்தெறிந்தததிலே, மூன்றாம் துண்டு திரிகோணமலை என்றும் மற்றய இரண்டும் திருவானைக்கா & திருவண்ணாமலை என்பதாகவும் நானறிந்த ஐதீகம். (இந்தத்திரிகோணமலையைக் கொஞ்சம் மாத்தித்தான் என் கதைகளிலே முக்கோணக்குன்று ஆக்கி வைத்திருக்கிறேன் ;-)] இன்னுமொரு ஆங்கிலப்புத்தகமும் உண்டு. பிரிட்டிஷ் கடற்படையைச்சேர்ந்த ஒரு அதிகாரி 1900 இலே எழுதியது. இலண்டன் நூலகத்திலே கண்டெடுத்து மயூரனின் சித்தப்பா பதிப்பித்திருக்கின்றார். இன்னும் திருஞானசம்பந்தர் தேவாரம், அருணகிரீநாதர் திருப்புகழிலே திருகோணமலை குறித்து ஓரளவுக்கு வரலாற்று கிடைக்கும். என் கருத்துப்படி, கோணமலை என்பது முன்னமே இருந்திருக்கலாம்; (சம்பந்தர்கூடத் தேவாரத்திலே, "குரைகடல் ஓரம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே" என்றுதான் பாடியிருக்கின்றார். நாங்கள்தான் இந்துக்கல்லூரியிலே படிக்கையிலே, கடைசி வரியினை, இரண்டாம் முறையாக இழுத்து "திரு-கோணமாமலை அமர்ந்தாஅஅரேஎஎ" என்று முடிப்போம்)
திருக்கோணேஸ்வரம்போல திருகோணமலையைச் சுற்றிய எல்லாப்பிரதேசங்களுமே இராவணனோடு சம்பந்தப்படுத்தப்பட்டுத்தான் பேசப்பட்டிருக்கின்றன (now you all know the real reason why I hate The Hindu Ram :-)). புவிசார் இயற்கை அமைவு இராவணன் வெட்டானதுபோல, இராவணனின் தாயாரின் ஈமைக்கிரியைகளோடு சம்பந்தப்படுத்தப்படுவது (மீண்டும்) புவிசார் இயற்கை அமைவான் கன்னியா வெந்நீரூற்றுகள். அவற்றின் சராசரி வெப்பநிலைகள் தெளிவாக அளக்கப்பட்டேயிருக்கின்றன. சொல்லப்போனால், நாங்கள் ஏழாம் வகுப்பு படிக்கும்போது (1976 ;-)), எங்கள் தமிழ்ப்புத்தகத்திலே, திருகோணமலை, மூதூர் சுற்றிய அத்தனை இடங்கள் குறித்தும் மாணவர்கள் சுற்றுலா போவதுபோன்ற ஓர் அத்தியாயம் இருக்கும்; அதிலே இந்தக்கன்னியாய் வெந்நீரூற்றுகளும் அவற்றின் வெப்பநிலைகளும் தரப்பட்டிருந்தன. கடைசியாகக் கன்னியாய் போனது, இந்திய இராணுவம் இருந்தகாலத்திலே; அப்போதெல்லாம் துவிச்சக்கரவண்டியிலேதான் எம் பயணம். அதற்கு முன்னால், சில ஆண்டுகள் அப்பிரதேசத்திலே மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள்; 40 அடி கப்புறாவுக்குத் தனிக்கதை. கன்னியாய்ச்சிவன்கோவில் முன்கதவு அண்மைக்கால அவதரிப்புதான்.
எல்லாளா நீ ஆரப்பா? :-)
ஒரு பொடிச்சி மெய்யாகவே கனடாவா என்ற சந்தேகங்கூட வருகுது ;-)
பெயரிலிக்கு நன்றி.!
பிழையான தகவலப்போட்டாலும் கனவிசயத்த இந்தப் பதிவு கொண்டந்திருக்கு.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
//ஒரு பொடிச்சி மெய்யாகவே கனடாவா என்ற சந்தேகங்கூட வருகுது ;-)//
அதுதானே பாருங்கோவன்...!
முன்பு எங்களூரில் திருக்கோணமலைக்கவிராயர் என்று ஒருவர் இருந்தார். அவர் யாராவது, திருகோணமலை, திருமலை எண்டு சொன்னா முகத்துக்கு முன்னால பேசிப்போடுவாராம் என்று சித்தி அமரசிங்கம் சொல்லி கேள்விப்பட்டிருக்கீறேன்.
நான் கையெழுத்து சஞ்சிகை நடத்திய காலத்திலிருந்து வலைப்பதிவு வரைக்கும் விட்டுக்கொடுக்காமல் திருக்கோணமலை என்றுதான் போட்டுக்கொண்டிருக்கிறன்.
அதால எனக்கு சின்ன வருத்தம் ஒன்றும் இல்லாமலில்லை.
கூகிளிடும்போது யாராவது திருகோணமலை என்று தேடினால் நான் காணாமல் போய்விடுவேன்.
ஒரு வேளை வரலாற்று ஏடுகள் ( வலைத்தளங்கள்) மயூரனை மறந்துபோக ஒரு இக்கண்ணா காரணமாகுமோ என்னவோ..
அதுக்கு முதல் கூகிள் ஒரு தமிழ் சொல்திருத்தி இணைத்தால் நல்லது ;-))
பெ.பொ. சிவசேகரனாரின் கட்டுரை ஒன்று முன்பு படித்த ஞாபகம்
அதில் அவர் தரீம் தகவல்கள் இதோ-
குணகு என்பது கிழக்கு.
குணகு மலை என்ற பெயர் நாளடைவில் கோணமலை என்று திரிந்திருக்கலாம்.
பிற்காலத்தில் நம்ம சைவக்காரர் எல்லாத்துக்குமுன்னாலையும் புனிதப்படுத்தும் அடையாக "திரு" வை போடப்போய் அது திரு + கோணமலை ஆகியிருக்கலாம்.
திரு+ கைலாயம் எப்படி திருக்கைலாயம் ஆகுமோ அப்படித்தான் திருக்கோணமலையும்.
இலக்கணப்படி திருக்கோணமலை தான் சரி.
அதனால் தான் நானும் வரிந்ந்து கட்டிக்கொண்டு திருக்கோணமலைந்துகொண்டு திரியிறன்.
ஆங்கில ட்றின்கமலி, சிங்கள திருக்குணாமலய எல்லாத்திலும் க் அழுத்தப்பட்டிருப்பதை கவனித்தீர்களா?
திரு சரவண பவன் என் பெரியப்பா. சித்தப்பா அல்ல. பெயரிலிக்கு புத்தகம் கிடைத்தது சந்தோஷம் சிறிய மொழியாக்கப்புத்தகம் ஒன்றும் வந்ததே (பழைய வெள்ளைக்கார கேணல் திருக்கோணமலை பற்றி எழுதியது.) கிடைத்ததா?
மற்றது மு.மயூரன் இன்னும் உயிரோடு இருக்கிறார்.
நாளைக்கு வலைபதிவார்.
கட்டாயம் வீட்டுக்கு வாங்க.
மயூரன், நீண்டநாள்களுக்குப்பிறகு உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி. நேரங்கிடைக்கும்போது உங்கள் தளத்தில் எழுதலாமே. திலகபாமாவுடன் நடந்த கலந்துரையாடலில் தமிழ்ச்சங்கத்தில் நீங்களும் கல்ந்துக்கொண்டீர்கள் என்று நினைக்கின்றேன். ஆக்ககுறைந்தது ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அறியவாவது இவைபோன்ற விடயங்களை நீங்களோ, விகடன் போன்றவர்களோ எழுதவேண்டும். படிப்புத்தான் எழுதமுடியாது இருப்பதற்குக்காரணம் என்றால் புரிந்துகொள்ளமுடியும் :-).
This comment has been removed by a blog administrator.
அட மயூரன்!
வாங்கோ வாங்கோ.
கனகாலமாக் காணேல.
அதுசரி, கொஞ்ச நாளைக்கு முன்னம் 'திருநாளைbloger' எண்ட பேரில ஒராள் தமிழ்மணத்தில உருண்டுகொண்டு திரிஞ்சவர். ஒவ்வொரு பின்னூட்டத்திலயும் நாளைக்கு நான் புளொக் திறக்கப்போறன் எண்டு மறக்காம அடிச்சிட்டுப்போவார். அது நீங்களோ எண்ட சந்தேகம் இப்ப.
திருக்கோணமலை (இந்தப்பிரச்சினைக்காகத்தானோ எங்கட பெரும்பாலான சனம் Trinko எண்டே சொல்லுதுகள்) பற்றிய கருத்துக்கு நன்றி. திரு என்பது புனிதம் சார்ந்த பொருளில் வந்தால் நிச்சயம் வலிமிகுந்தே புணரும்.
இன்றைக்கென்று பார்த்து என் கணினி பழுதாய்ப் போய்விட்டது.
கடைசியில் நானும் ஒரு திருநாளை பதிவாளர் ஆகிடுவேனோ என்று பயமாயும் இருக்கு.