"படலையும்" பால்ய நினைவும்.
வணக்கம்! இந்த முறையும் நான் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்டச் சொல்லப்போறன். போன முற நான் என்ர குரலில கதைச்சு உங்களக் கேக்க வச்சன். ஆனா ஒருத்தரும் அந்த ஒலிப்பதிவு முயற்சியப் பற்றி ஒண்டும் சொல்லேல. அது வேல செய்யுதோ இல்லையோ எண்டு கூட சொல்லேல. இந்த முற அந்த ஒலிப்பதிவு இல்லாமல்தான் போடுறன். மதியக்கா சொன்னதுக்காக ஒலி வடிவத்தப் போட்டிருக்கிறன். கீழ இருக்கிற செயலியளில ஒவ்வொண்டையும் முயற்சித்துப் பாருங்கோ.
இல்லாட்டி கீழயிருக்கிற இணைப்புக்கள அழுத்திப் பாருங்கோ. இணைப்பு ஒன்று இணைப்பு இரண்டு இணைப்பு மூன்று. ஊரிலயிருந்து இடம்பேந்து (இடம்பெயர்ந்து) மானிப்பாயில தங்கியிருந்த காலம். அப்ப பின்னேரப் பள்ளிக்கூடம்தான் எங்களுக்கு. பின்னேரம் பள்ளிக்கூடத்தில இருக்கிறதும் பகலில வீட்டில இருக்கிறதும் உடனடியா ஒத்து வரேல. அதோட மானிப்பாய்ப் பெடியளுக்குக் காலமயும், எங்களுக்குப் பின்னேரமும் எண்டு பள்ளிக்கூடம் இருந்ததால அவங்களோட பழகி சினேகிதம் பிடிக்கிறதுக்குக் கொஞ்ச நாளெடுத்திச்சு. இதுக்கு உதவியா இருந்தது தனியார் நடத்திற ரியூசன் தான். சனி ஞாயிறில எல்லாருக்கும் ஒண்டாத்தான் வகுப்புகள் நடக்கிறதால எல்லாரும் பழகி சினேகிதம் பிடிச்சம். இப்பிடியா இருக்கேக்க, ஒருநாள் விஞ்ஞான வாத்தி வராதபடியா சும்மா வகுப்பிலயிருந்து எங்களுக்குள்ள கதச்சுச் கொண்டிருந்தம். அப்ப ஊரிலயிருந்து ஓடி வரேக்க நடந்த அனுபவத்த அவயளுக்குச் சொல்ல வேண்டி வந்துது. என்னச் சுத்தி அஞ்சாறு பேர் கத கேட்டுக்கொண்டு இருந்தீச்சினம். (அங்காலயிருந்த கொஞ்சம் “பாரடா உவன. நல்லா செல் குத்துறான்” எண்டு பொருமிக்கொண்டு இருந்தது கடைக்கண்ணால பாக்கத் தெரிஞ்சது). என்ர கதயச்சொல்லிக்கொண்டு வரேக்க “எதிர் வீட்டு லீலியாச்சியின்ர படலேக்க ஒரு செல் விழுந்தீச்சு” எண்டு ஒரு இடத்தில சொன்னன். “என்னது.. படலையோ… அப்பிடியெண்டா?” எண்டு கத கேட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் சந்தேகமாக் கேட்டான். “என்ன?... படலையெண்டா உனக்கு என்னெண்டு தெரியாதோ? எனக்கு வண்டில் விடுறியோ?” எண்டு அவனக் கேட்டன். பிறகுதான் பாத்தா கத கேட்டுக்கொண்டிருந்த மற்ற நாலு பேருக்கும் தெரியாது. சுதுமலைக்காரன் ஒருத்தன் மட்டும் “நான் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா நாங்கள் பாவிக்கிறேல.” எண்டு சொன்னான். இதென்ன கோதாரி? படலையெண்டா என்னெண்டு தெரியாமலும் மனுசர் இருக்கினமோ (அது தெரியாட்டி தமிழே தெரியாது எண்டது மாதிரி அப்ப நினச்சனான்) எண்டு திகச்சுப்போனன். நேரா வீட்டுக்கு வந்து நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரிட்ட (அவயளுக்கு மானிப்பாய் தான் சொந்த இடம்) கேட்டன். அவயளுக்கும் தெரியேல. கிழிஞ்சுது போ… எண்டு போட்டு அம்மாவிட்ட போய் “அம்மா அவேக்கு படலையெண்டா என்னெண்டு தெரியாதாமெல்லே...” எண்டு ஒரு இளப்பாரமா சொன்னன். அம்மா என்ன வேலயில அல்லது கொதியில நிண்டாவோ தெரியேல (அவ பள்ளிக்கூடத்தில ரீச்சர், அதுவும் கணக்குப்பாடம்) என்ர கதய காதிலயே வேண்டேல. அதுக்குப் பிறகு படலயெண்டா என்னெண்டு தெரியுமோ எண்டு காணுகிற சிலரிட்ட கேட்டுப்பாத்தன். சிலருக்கு அதின்ர பொறிமுறை செயல்முறையெல்லாம் கீறி விளங்கப்படுத்தினனான். ஒரு விசயம் சொல்ல வேணும். மானிப்பாயில நாங்கள் இருந்த பகுதியில பெரும்பாலும் எல்லாம் கல் வீடுகள் தான். சுத்துமதிலெல்லாம் கட்டி வசதியாத்தான் இருந்தீச்சு. எல்லா வீட்டுகளுக்கும் தகர கேற் போட்டிருந்தவை. ஆத கேற் எண்டு தான் சொல்லிறவை. (வேற என்னெண்டு சொல்லிறது?) அதாலதான் எங்கட படல பற்றி இவைக்குத் தெரியேல. “சரி இதுக்குள்ளயே எங்கயெண்டாலும் படலை இல்லாத வீடொண்டு காணக்கிடைக்காமலே போகப்போகுது. அப்ப தெரியும் தானே” எண்டு விட்டுவிட்டேன். இதுக்குள்ள வேறயும் சில சொல்லுகள் இப்பிடி அவயளுக்குத் தெரியாமல் இருக்கிற பட்டியலில சேந்திட்டுது. இதுபற்றிப் பிறகொருக்கா எழுதிறன். ஒருநாள் பெடியளோட நாவாலிப்பக்கம் போக வேண்டி வந்திட்டுது. அப்ப தான் நான் தேடிக்கொண்டிருந்த படலையைக் காணிற சந்தர்ப்பம் கிடைச்சுது. சடாரெண்டு பாதையிலயே சைக்கிள நிப்பாட்டிப்போட்டன். சின்னதா மண்ணெண்ணை பரல் தகரத்தில சட்டமடிச்சு ஒரு யார் அகலத்தில ஒரு படலை. அதுக்கு தானாக மூடக்கூடியமாதிரி பாரம் கட்டிவிட்டிருந்தீச்சினம். படலையில ஒரு சிலுவையும் “அறையப்பட்டிருந்தீச்சு”. படலைக்க ரியூசனுக்குப் போறதுக்காக்கும் புத்தகங்களோட ஒரு அக்கா நிண்டு கொண்டிருந்தா. (அப்ப எனக்கு ஆக 13 வயதுதான்). நான் நிண்டோடன கொஞ்சம் தாண்டிப் போய் பெடியளும் நிண்டிட்டாங்கள். நான் கொஞ்சமும் வெக்கப் படாமல் நேரா அவவிட்டப் போய் “அக்கா இத என்னெண்டு சொல்லிறனியள்?” எண்டு அந்தப் படலையக் காட்டிக் கேட்டன். அக்கா கொஞ்சம் குழம்பித்தான் போனா. பின்னயென்ன?.. முன்னபின்ன தெரியாத ஒருத்தன் இப்பிடி அதிமுக்கியமான ஒரு கேள்வி கேட்டா? கொஞ்சம் யோசிச்சவ (நிச்சயமா அதின்ர பேர யோசிக்கேல. இவன் ஏதாவது குறளி வேல பாக்கிறானோ? இல்லாட்டி இரட்டை அர்த்தத்தில ஏதாவது கேக்கிறானோ எண்டு தான் யோசிச்சிருப்பா) பிறகு பதில் சொன்னா. “கேற்”. எண்டு அவ பதில் சொன்னோடன கொடுப்புக்க வந்த சிரிப்ப அடக்கிறதுக்குச் சரியாக் கஸ்டப்பட்டனான். திருப்பவும் கேக்கிறன் “இத கேற் எண்டே சொல்லிறனியள்?” “ஓமோம். கேற் எண்டு தான் சொல்லிறனாங்கள்." சரியாப் போச்சு. அக்கா படலை எண்டு சொல்லுவா எண்ட எதிர்பார்ப்போட போய் அசடு வழிஞ்சு கொண்டு திரும்பின என்னப் பாத்ததும் பெடியளுக்குக் குழப்பம். “என்னடா கதச்சனி?” “ஒண்டுமில்லடா. அத என்னெண்டு சொல்லிறனியள் எண்டு கேட்டனான்.” அவங்கள் ஒருத்தருமே நம்பேல நான் இதத்தான் போய்க்கேட்டனான் எண்டு. பின்ன? ஆராவது ஒருத்தன் இப்படி விவஸ்தை இல்லாமல் போய் “படலை” தேடிக்கொண்டு திரிஞ்சிருப்பானா? அண்மையில் தொலைக்காட்சியொண்டில “படல படல” எண்டு ஒரு நிகழ்ச்சியின்ர விளம்பரம் பாத்தன். ஆதில வாற விளம்பரப் பாட்டக் கேக்கேக்க வழமையா இந்திய நகைச்சுவைத் தொடர்களுக்கு வாறமாதிரியே தான் இருந்தீச்சு. அட அங்கயும் படல எண்ட சொல்லப் பாவிக்கினம் போல கிடக்கே எண்டிட்டு விட்டிட்டன். (நகைச்சுவை உட்பட எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியளையும் பாக்கிறதில்ல. தவிர்க்க ஏலாமல் எங்கயாவது மாட்டுப்பட்டுப் பாத்தாச் சரி.) ஒருநாள் தற்செயலா அந்த படல படல தொடரப் பாக்க வேண்டி வந்தீச்சு. அட… எங்கட தமிழ். பத்து வருசத்துக்கு முந்தி வரைக்கும் நான் கேட்ட, பேசின தமிழ். அதே உச்சரிப்பு, அதே லயம். குறிப்பாக அதே வேகம். நெஞ்சு ஒருக்கா குளிந்திது பாருங்கோ. அதுக்குப் பிறகு என்ன கஸ்டப்பட்டெண்டாலும் "படல படல" பாக்கிறதெண்டு வெளிக்கிட்டிட்டன். அதில எங்கட சனத்தின்ர குசுகுசுப்புக்களும் விடுப்புக் கேக்கிற தன்மையும் வியாக்கியானம் செய்யிற லாவகம் எண்டு அத்தனையும் அப்பிடியே வரும். எழுதி வச்சு வாசிக்காமல், பாடமாக்கி ஒப்பாமல் இயல்பா வாற அந்தக் கததான் பிடிச்சிருக்கு. நான் மொழி நடைக்காக ரசிக்கிற இன்னொரு தொடர் "நையாண்டி மேளம்". தமிழ் சினிமாவில யாழ்ப்பாணத்தமிழ் பயன்படுத்த நினைக்கிற ஆக்களுக்கு கேட்டுப்பழகிறதுக்கு நான் சிபாரிசு செய்யக் கூடிய ரெண்டு நிகழ்ச்சிகள் இதுகள்தான். (ஆராவது கமல், மணிரத்தினத்துக்குச் சொல்லுங்கோ) Labels: அலட்டல், அனுபவம், ஈழத்தமிழ், ஒலி, நகைச்சுவை, நினைவு, பேச்சுத்தமிழ் |
""படலையும்" பால்ய நினைவும்." இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: மதி கந்தசாமி
போன பதிவில் சொல்லியிருக்கோனும். உங்களுடைய குரல் பதிவு நன்றாக இருந்தடு. பல பழைய சொற்களை நினைவூட்டிக்கொண்டேன்.
இப்போது எழுதியிருபப்தைப் படிக்கவில்லை. நீங்கள் பேசியிருபப்தை இங்கே இடுஙளஎன். கேட்டுவிட்டு/ படித்துவிட்டு சொல்கிறேன்.
எனக்கு நினைவலைகள் மிகவும் பிடித்த விஷயம். எத்தனை என்றாலும் அலுக்காமல் கேட்பேன்/படிப்பேன். தொடர்ந்து எழுதவும்.
அவசரமாக எழுதுவது. எழுத்துப்பிழைகளை மன்னிக்கவும்.
23.48 18.3.2005
எழுதிக்கொள்வது: disee
வசந்தன், கடைசியில் படலையைக் 'கையும் மெய்யுமாய்' பிடித்து, உங்களின் நண்பர்களிடம் வெற்றிக்கொடி நாட்டினீர்களா அல்லது இல்லையா? சொல்லவேயில்லையே?
சென்றபதிவில் முதலில் பார்த்தபோது உங்கள் குரல் வேலைசெய்யவில்லை. இரண்டாவது முறை சென்றபோது ஏற்கனவே அந்தப்பதிவை வாசித்தபடியால், கொஞ்சம் மட்டும் உங்கள் குரலில் பதிந்ததைக் கேட்டிருந்தேன். நல்ல குரல். இப்படியான ஆக்களின் குரல்களைக் கேட்கும்போது எனக்கு சரியாகப் பொறாமையாக இருக்கிறது. எனென்னால் எனக்கு அப்படியொரு அற்புதமான குரல். இனிமேல் யாராவது எனக்குப் பிடிக்காத பதிவுகள் எழுதினால், பின்னூட்டத்தில் எழுதுவதற்கு பதிலாய் எனது குரலைப் பதிவுசெய்து பயமுறுத்துவது என்று நினைத்திருக்கின்றேன். பார்ப்போம்.
......
யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர முன்னர் எந்தப்பள்ளிக்கூடத்தில் நீங்கள் படித்திருந்தீர்கள்?
0.43 19.3.2005
எழுதிக்கொள்வது: டிசே
வசந்தன், கடைசியில் படலையைக் 'கையும் மெய்யுமாய்' பிடித்து, உங்களின் நண்பர்களிடம் வெற்றிக்கொடி நாட்டினீர்களா அல்லது இல்லையா? சொல்லவேயில்லையே?
சென்றபதிவில் முதலில் பார்த்தபோது உங்கள் குரல் வேலைசெய்யவில்லை. இரண்டாவது முறை சென்றபோது ஏற்கனவே அந்தப்பதிவை வாசித்தபடியால், கொஞ்சம் மட்டும் உங்கள் குரலில் பதிந்ததைக் கேட்டிருந்தேன். நல்ல குரல். இப்படியான ஆக்களின் குரல்களைக் கேட்கும்போது எனக்கு சரியாகப் பொறாமையாக இருக்கிறது. எனென்னால் எனக்கு அப்படியொரு அற்புதமான குரல். இனிமேல் யாராவது எனக்குப் பிடிக்காத பதிவுகள் எழுதினால், பின்னூட்டத்தில் எழுதுவதற்கு பதிலாய் எனது குரலைப் பதிவுசெய்து பயமுறுத்துவது என்று நினைத்திருக்கின்றேன். பார்ப்போம்.
......
யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர முன்னர் எந்தப்பள்ளிக்கூடத்தில் நீங்கள் படித்திருந்தீர்கள்?
0.43 19.3.2005
0.45 19.3.2005
எழுதிக்கொள்வது: ஒருவன்
மாயாவி படத்திலையும் யாழ்ப்பாணத் தமிழ் கதைக்கிற ஒரு குடும்பம் வருது. ஏதோ மேடையில பேசுற இலக்கணச் சுத்ததமிழ் தான் யாழ்ப்பாணத்தார் கதைக்கினம் எண்டு இன்னமும் தமிழ் நாட்டிலை நினைக்கினம் போலை. அப்படி இல்லப் பாருங்கோ -
16.52 19.3.2005
இலக்கணச் சுத்தத்தமிழ் என்பதை விட வேண்டுமென்றே இழுத்திழுத்துக் கதைப்பது எரிச்சலை வரவழைக்கிறது.
டி.சே! பப்பாவில ஏத்திறது எண்டா என்னெண்டு தெரியுமோ? வழமையா நான் தான் இப்பிடி மற்றாக்கள ஏத்திறனான்.
அதுசரி படிச்ச பள்ளிக்கூடம் பற்றிக் கேட்டிருந்தியள். நிச்சயமா நீங்கள் படிச்ச பள்ளிக்கூடமில்ல. ஏனெண்டா தும்புக்கட்டையளுக்கெல்லாம் சண்டை பிடிக்கிற பழக்கம் எங்களுக்கில்ல. (ம்... உங்களுக்கு அந்தச் சந்தர்ப்பமாச்சும் கிடைச்சுதே. நாங்கள் பாத்துக் கதக்கக் கூட ஏலாது. ஏனெண்டா ஆண்கள் பாடசாலை. பாட்னர் பள்ளிக்கூடம் எண்டு சொல்லிக் கொண்டு ஒரு மைல் தாண்டி ஒரு ஒழுங்கைக்குள்ள அவயளின்ர பள்ளிக்கூடத்த வச்சிருந்தாங்கள். சும்மா போற வாற பாதையெண்டாலும் பரவாயில்ல. அந்தப் பாதையுக்க இறங்கினாலே உடன சொல்லிப்போடலாம் இவர் அங்க தான் போறாரெண்டு.)
கண்டுபிடிக்கக் கூடியமாதிரி இருக்கோ எந்தப் பள்ளிக்கூடமெண்டு? (ஒரு தகவல்: உதைபந்தாட்டத்துக்குப் பிரசித்தமானது)
டி.சே! நாவூறு படுத்திப் போட்டியளே. அந்த ஒலிக்கோப்பின்ர இணைப்பைக் குடுத்தனான். ஆனா வேல செய்யுதில்ல. இதுக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல. நான் யாஹ_ ஜியோசிட்டியிலதான் சேமிச்சு இணைப்புக் குடுத்திருக்கிறன். ஆருக்கும் மாற்று வழியள் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுங்கோ.
வசந்தன் நீங்க எங்க இருக்கிறீங்அக் என்று தெரியவில்லை. ஐரோப்பா அல்லது வட அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா என்றால் ஓடியோ ப்ளோக்கரைப் பயன்படுத்துங்கோ. அது அழிஞ்சு போகாம நிக்கும்.
இல்லையெண்டா யாழ்.நெற்றில் வலைப்பதைவைத் தொடங்கி இட ஏலுமோ பாருங்க.
there are some free webhosting companies. i dont know if they are reliable or not. but you could try them
one eg.
http://www.cjb.net/
try this
http://www.thefilebin.com/
Thanks Mathay. I will try it.
இப்போது புதிதாக வேறு இணைப்புக்களும் கொடுத்துள்ளேன். முயற்சி செய்து பார்க்கவும்.
Interesting.
எழுதிக்கொள்வது: மதி கந்தசாமி
sharemation ந்ன்றாக வேலை செய்கிறது. இன்றைக்குக் கூட்டமாக உட்கார்ந்து உங்கள் பதிவுகள் இரண்டையும் கேட்டோம்.
எல்லோரும் நன்றாக ரசித்தார்கள். மலரும் நினைவுகள் போட்டிபோட்டுக்கொண்டு வந்துவிழுந்தன.
பறண சைக்கிள், பிரேக் அடிப்பது, தவறணை (என்னுடைய ஊரில் எங்கே இருந்தது என்ற தகவல்), மொடாக்குடியர்கள் பற்றிய தகவல்கள், படலை பற்றி - தானாக மூடும் என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கல்லுக்கட்டி விட்டிருப்பினம் என்று ஒருவர் சொல்லிவிட்டார். என் வீட்டிலும் படலை இருந்து கேற்றுக்கு மாறிவிட்டார்களும் கேள்விகளும்.
1. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் - கேட்டது அந்த கொழுகட்டை அக்கா. (பூவரசம் மரம் பற்றி நீங்கள் என் பதிவில் எழுதியதையும் படித்தார்.
பூவரசம் மரம், பனை மரம், மா மரம் என்று எல்லா விசயங்களையும் சின்ன விசயம் என்று நினைக்காது பேசிப்பதியுமாறு சொன்னார்.
2. இதுபோன்ற பதிவுகளை அடிக்கடி உங்கள் குரலில் தாருங்கள் - எல்ல்லோரும்.
3. கூத்துப்பாடல்களைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். உங்கள் குரல் நன்றாக இருப்பதால் கூத்துப்பாடல்களை முறையாக வரிகளையும் தந்து பதியவும் - அக்கா கணவர். என்ன நானோ என்றெல்லாம் தயங்க வேண்டாம் - நான்.
4. படலை, நகைச்சுவை----- என்று இரண்டு நிகழ்ச்ச்சிகள் பற்றிச் சொன்னீர்கள். ரேடியோ நிகழ்ச்சியா? தொலைக்காட்சி நிகழ்ச்சியா? தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் இங்கே கடைகளில் கிடைக்குமா என்று விசாரிக்க வேண்டும். நன்றி. - அண்ணி
6. மாமா/அண்ணா - மதியன்ரி பாட்டுகளை ஒரு இடத்தில் சேர்த்து வச்சிருக்கிறா. அதுக்கு படம் கீறித்தரச் சொல்லி ஆக்களிட்ட கேட்டிருக்கிறாவாம். அதைமாதிரி பாடுறதுக்கும் ஆக்களைத் தேடுறா. நீங்க பாடி எங்களுக்கு சொல்லித்தரலாம்தானே? சுந்தரவடிவேல் மாமாவிட்ட இதைச் சொல்லச் சொல்லி மதியன்ரிட்ட சொல்லியிருக்கிறம் - (பெயரிடாஅமல் என் அக்கா அண்ணர்களின் பிள்ளைகள். கூடவே மாமாசித்திசித்தப்பா பிள்ளைகளும். சின்னாக்கள் கெட்டதை முதல்ல சொல்லிட்டன்.)
இங்க சன் டீவியில் காலைல சோலமன் பாப்பையா வருவேர். அதைக்கேட்டு இப்ப என் அண்ணன் மகள் கொஞ்சம் கூட தமிழ் கதைக்கிறாள். இது சும்மா கொசுறு.
நல்லாயிருக்கெ ண்டும் எழுது என்று பின்னுக்கு இருந்தபடி எல்லோரும் கோரஸ் பாடுகிறார்கள்.சனி மாலையை இனிதாக்கியதற்கு நன்றி வசந்தன்.
-மதி
23.15 19.3.2005
மதியக்கா!
என்ன இது? தியேட்டரில படம் பாக்கிறமாதிரி இருக்கு. குடும்பங்களா இருந்து கேட்டிட்டு இப்பிடி எழுதுவியள் எண்டு கனவிலயும் நினக்கேல. உங்களுக்கு பழய ஞாபகங்களக் கொண்டு வந்திருந்தா அதில நான் சந்தோசப்படுறன். ஆனா ஏற்கெனவே டி.சே. க்கு ‘பப்பாவில ஏத்திறதப்’ பற்றிச் சொன்னதால உங்களுக்கும் சொல்லத் தேவையில்ல.
எனக்குச் சரியான பயமாக்கிடக்கு. நீங்கள் என்னட்ட அளவுக்கதிகமா எதிர் பாக்கிறியள்.
என்ர பதிவ ரசிக்கிற உங்களுக்கு அதுபற்றின கருத்தச் சொல்ல உரிமையிருக்குத் தானே. ஏதோ சும்மா கிறுக்குவம் எண்டு வெளிக்கிட்ட இந்தப் பக்கத்தில முதல், ரெண்டு படம் பற்றிச் சொல்லிப் போட்டு, பிறகு தடம் மாறி ஏதோவெல்லாம் சொல்லி, பிறகு சொல்ல ஒண்டுமில்ல எண்டுபோட்டு இப்பிடி சிலதுகளச் சொல்லுவம் எண்டு வெளிக்கிட்டனான். ஆனா இப்ப இது பெரும்பாலான ஆக்களுக்குப் பிடிச்சுப் போச்சுப் போல.
சரி. இப்படி வேறயும் சில சுவாரசியமான சம்பவங்கள் இருக்கிறதால கொஞ்ச காலம் இப்படியே எழுதலாம்.
ஆனா பாட்டுப்பாடுறது கூத்துப்பாடுறது பற்றி கேக்காதையுங்கோ. எனக்கும் அந்தச் சின்னப் பிள்ளயளின்ர பாட்டுக்கள ஆராவது பாடி அதப்பதிஞ்சு மற்றாக்களும் கேக்க வைக்கிறதில சரியான ஆச. இத நானும் உங்கட கத்தரித்தோட்டத்து வெருளியில பின்னூட்டமாப் போட்டனான். ஆனா அதுக்காக என்னையே பாடச்சொல்லிறது சரியான கொடுமை. அதவிட என்ர குரலப்பற்றிச் சொல்லிறது ஆகக் கொடுமை. எனக்குத் தெரியும் என்ர குரலப்பற்றி. பெடியளும் சொல்லிறவங்கள். சத்தமா ஏதாவது வாசிக்க வேணுமெண்டா நான்தான் வாசிக்கிறனான். பள்ளிக்கூடத்திலயும் வாசிக்கிறதெண்டா நான்தான். ஆனா இது செய்தி வாசிக்கிறதுக்குத்தான் உதவுமேயொழிய பாட உதவாது. ஆனபடியால் நான் பாடுவன் எண்ட கருத்த விடுங்கோ. அந்த தம்பி தங்கச்சியளுக்கும் சொல்லுங்கோ.
மேலும், ‘படலை படலை’ எண்ட நிகழ்ச்சியும் ‘நையாண்டி மேளம்’ எண்ட நிகழ்ச்சியும் தீபம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். எங்க எடுக்கலாமெண்டு தெரியேல. விசாரிச்சுப் பாருங்கோ.
அந்த கொழுக்கட்டை அக்காவுக்கு நான் எங்க இருக்கிறணெண்டு நீங்களே சொல்லுங்கோ. உங்களுக்குத் தெரியும்தானே.
பூவரச மரம் சம்பந்தப்படுற ஒரு சம்பவம் இருக்கு. பிறகொருக்கா அதச் சொல்லிறன்.
ஸ்ரேயாவின்ர மழைப்பதிவில கமகமத்த பவள மல்லிக வாசம் இன்னும் தீரேல. அதுக்குள்ள என்ர முற்றத்தில நிண்ட பவள மல்லிக பற்றியும் சொல்லேனும் எண்டு யோசிச்சுக் கொண்டே...... இருக்கிறன். அதோட நிண்டு அத அழிச்ச 'வாதனாராணி' பற்றியும் எழுதோணும்.
இயலுமான வரை ஒலி வடிவத்தையும் இணைக்கிறதுக்கு முயற்சி செய்யிறன்.
நன்றி. மதியக்கா.
கருத்துக்கள் தெரிவித்த மதியக்கா, டி.சே, ஈழநாதன்,ஒருவன் ஆகியோருக்கு நன்றி.
எழுதிக்கொள்வது: மகிழன்
குரல் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து இப்படியான பதிவுகளைத் தாருங்கள்.
17.21 21.3.2005
the link doesn't work. please check it.
எழுதிக்கொள்வது: sajee
undefined
16.50 22.3.2005
ஊருலகத்திலை படலைக்கு இந்தக் கதியோ...!
நீங்கள் சொல்லுற பறணை பிலா படலை.. எல்லாமே எங்கள் ஊரிலும் பாவிக்கப் படுகிற சொற்கள்தான்.
இங்கு யேர்மனியிலைதான் இல்லை.
இன்றுதான் உங்கள் குரலையும் கேட்டேன். பப்பா மரத்தலை ஏத்துற ஐடியா ஒண்டும் எனக்கில்லை.
உங்கடை கதையைக் கேட்டதாலை எழுத்துத் தமிழைத் தள்ளிப் போட்டு பேச்சுத் தமிழ் வந்து முன்னுக்கு நிக்குது.
அப்பிடியே எழுதுறன்.
ரீரீஎன்னிலை படலைக்குப் படலை நிகழ்ச்சியை நானும் ஓண்டு இரண்டு தரம் பார்த்தனான். அந்தத் தமிழ் மட்டுமில்லை. நடிப்புக் கூட வெகு இயல்பு. அருமையாகச் செய்கிறார்கள். எடுத்துக் கொள்ளுற விசயங்கள் கூட எங்கடை வீடுகளுக்குள்ளை நடக்கிற பிரச்சனையள்.
படலை என்ற சொல் யாழ்பாணத்தில் எங்களின் விட்டிலும் பாவனைக்கு இருந்தது, பின் மதில் கட்டப்பட்டபின் படலை அகற்றி கேற் போடப்பட்டுது!!!