Thursday, October 27, 2005

அம்மாச்சி - ஓர் ஆலமரம்.

(பூட்டனின் நினைவுகள்)

உங்களில் யாருக்காவது உங்கள் பூட்டனுடனோ பூட்டியுடனோ வாழும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதா? பெரும்பாலானோருக்கு அவர்களைக் காணும் சந்தர்ப்பமே கிடைத்திருக்காது. அனால் எனக்கு அந்த அனுபவமுண்டு. என் பதினாறு வயதுவரை என் பூட்டியோடு வாழ்ந்திருக்கிறேன். பூட்டியென்றால் என் அம்மாவின் அம்மாவின் அம்மா. இவவை அம்மாச்சி என்றே நாங்கள் அழைப்போம். (தங்கமணி தன் பேத்தியை, அதாவது தாயாரின் தாயாரை அம்மாச்சி என்று அழைத்திருந்தார்.) என் தாய்வழிச் சந்ததியில் 3 தலைமுறையோடு (அம்மா, அம்மம்மா, அம்மாச்சி) ஒரே வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். என் வாழ்நாளின் முதல் பதினைந்தாண்டுகளும் இப்படி வாழ்ந்தேன் என்பது முக்கியமானது. முழுவதும் பெண்சந்ததியென்றபடியால் (ஒப்பீட்டளவில் இளவயதில் திருமணம் முடிப்பதால்) இது சாத்தியமாயிற்று.

அம்மாச்சிக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்தாலும் எட்டுப்பேர் மட்டுமே மிஞ்சியவர்கள். இவர்களில் மூன்றாவதும் கடைசியும் ஆண்பிள்ளைகள். என் அம்மம்மா தான் மூத்தபிள்ளை. அம்மம்மாவுக்கு மூன்றும் பெண்பிள்ளைகள் என்றாலும் மிஞ்சியது கடைசி இருவரும்தான். அதில் என் தாய் கடைக்குட்டி. பெரியம்மாவுக்கு என்னைவிட 3 வயது மூத்த ஆண்பிள்ளையொருவர். அவர்தான் அம்மாச்சியின் மூத்த பூட்டன். நான் இரண்டாவது பூட்டன். விவரங்கள் விளங்கினதா? (எம் அம்மம்மாவின் சகோதரிகளை எப்படிக் கூப்பிடுவதென்று முன்பொரு பதிவு போட்டேன். சின்னம்மம்மா, ஆசையம்மம்மா, சூட்டியம்மம்மா, சீனியம்ம்மா, குட்டியம்மம்மா...)

எங்கட அம்மாச்சியின்ர எட்டுப்பிள்ளைகளும் கலியாணம் செய்தது எங்கட ஊரிலதான். வல்வெட்டித்துறையை அடியாகக் கொண்டாலும் எங்கள் ஊரிலேயே நிலைபெற்றுவிட்டது அந்தக்குடும்பம். கலியாணம் கட்டவந்த மாப்பிள்ளைகளிடம் என் பூட்டன் போட்ட ஒரே நிபந்தனை "ஊரோட இருக்கோணும்" எண்டதுதானாம் எண்டு சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். உண்மையுமிருக்கலாம். அத்தனை சகோதரங்களுக்கும் சீதனமாக பெரிய வளவைப் பிரித்துக் கொடுத்து வீடுகளும் கட்டியதால் அடுத்தடுத்த வீடுகளில்தான் அந்த 8 சகோதரங்களும் (எம் அம்மம்மாவின் பரம்பரை) இருந்தார்கள். பின் அவர்களின் பிள்ளைகளும் (என் தாய்ப்பரம்பரை) கலியாணம் முடித்து, எங்கட சந்ததி பிறந்து அதுக்குள்ளயே இருந்தோம். யோசித்துப்பாருங்கள் எப்படியிருந்திருக்குமென்று? வதவதவெண்டு பிள்ளைகள். ஒரேவகுப்பில் நாங்கள் நாலு பேர் படிப்போம்.

அம்மாச்சியின் கணவர் (இவரை எப்படி அழைப்பதென்று எனக்குத் தெரியவில்லை) நீண்டகாலத்துக்கு முன்பேயே இறந்துவிட்டதால் அவரைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஊரில் முன்புநடந்த சில சண்டித்தனங்களில் அவர் பெயர் அடிபட்டது. அதேபோல் அப்புவும் (அம்மாவின் அப்பா) அம்மாவின் சிறுவயதிலேயே (அம்மாவுக்கு 10 வயதோ என்னவோ) இறந்துவிட்டார். எங்கட பரம்பரையில வெளியில இருந்து கணவரா வாற ஆண்களுக்கு ஆயுள் குறைவுதான்;-( அம்மாச்சியின் மருமகன்களுள் இறுதி மருமகன் மட்டுமே இப்போது இருக்கிறார்.

ஊரில எங்கட அம்மாவோடதான் அம்மம்மா இருந்தா, அம்மம்மாவோடதான் அம்மாச்சி இருந்தா. எங்கட அப்பு(அம்மாவின் அப்பா) ஆசிரியரா இருந்ததால அம்மம்மா ஊரின்ர நடுப்பகுதிக்குள்ள வீடு கட்டியிருந்தா. மற்றவையெல்லாரின்ர வீடுகளும் கடற்கரையை அண்டிய பகுதியில்தான். அம்மம்மாவின்ர வீடுதான் எங்கட அம்மாவுக்குச் சீதனமா வந்ததால அங்கதான் நாங்களுமிருந்தம். தொம்மையப்பர் கோயிலுக்கு எதிர்வீடு. எங்கட ஊரின்ர பெரிய கத்தோலிக்கத் தேவாலயம் அதுதான். நாளாந்தப் பூசைகள் நடப்பதும் அங்குத்தான். ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்குப் போகாட்டா "சாவான பாவ"மெண்டதால எல்லாரும் பயத்தில கட்டாயம் ஞாயிற்றுக்கிழமைப் பூசைக்கு வருவினம். வந்தா எல்லாருக்கும் அண்டைக்கு எங்கட வீட்டைதான் காலமச் சாப்பாடு. பூசைக்கு வந்திட்டு அம்மாச்சியப் பாக்காமல் ஒருத்தரும் ஓடேலாது. கோயிலுக்கு வாற சனம் எங்கட வீட்டடியாலதான் போகவேணும். ஞாயிற்றுக்கிழமையெண்டா பெரிய கொண்டாட்டமாத்தான் எங்கட வீடு இருக்கும். பின்ன? அம்மாச்சிக்குப்பிறந்த எட்டுக்குடும்பமும் அங்கதானே நிக்கும். முத்தம் முழுக்க சைக்கிள்தான் நிக்கும். ஆரேன் பூசைக்கு வராட்டி அம்மாச்சிக்குக் கணக்குச் சொல்ல வேணும். அம்மாச்சி தூக்கிக்கொஞ்சுறதுக்கு இரண்டுவயதுக்குட்பட்ட ஒரு குழந்தையாவது (பேரப்பிள்ளையோ பூட்டப்பிள்ளையோ) எந்தநேரமும் எங்கள் சொந்தத்தில் இருந்துகொண்டிருக்கும்;-)

கடசியா ஊரைவிட்டு ஒட முதல் எங்கட சொந்தத்துக்குள்ள ஒரு கலியாணம் நடந்திச்சு. அம்மாச்சியின்ர குடும்ப அட்டவணைப்படி (அவவின் பிள்ளைகள், பின் அவர்களின் பிள்ளைகள்.. பின் அவர்களின் பிள்ளைகள்...)மொத்தம் 72 பேரில் வெளிநாட்டிலிருந்த நான்கு பேர் நீங்கலாக எல்லோரும் கூட்டாகக் கலந்துகொண்ட இறுதிக் கொண்டாட்டம் அதுதான். நாங்கள் பூட்டப்பிள்ளைகள் மாத்திரமே 16 பேர். சொன்னா நம்புவியளோ தெரியாது, அம்மாச்சியின்ர பேரன்களும் பூட்டன்களுமாச் சேந்து 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட அணியொன்றை உருவாக்கி மற்ற அணியோடு விளையாடியிருக்கிறோம். அத்தனைபேரும் 7 வருட வித்தியாசத்துக்குள்தான் இருந்தோம்.

ஒரே இடத்தில் அருகருகாக எல்லோரும் இருந்ததால உறவுநிலையில ஒப்பீட்டளவில வித்தியாசம் இருந்திச்சு. நீங்கள் ஒருவரைச் சுட்டி, 'இவர் அம்மம்மாவின்ர தங்கச்சியின்ர மகன்' எண்டு ஒருவருக்குச் சொன்னியளெண்டா, அவரின் பார்வையில் அது தூரத்துச் சொந்தம். நெருங்கின சொந்தம் என்ற வகைக்குள்ள இவ்வகைச் சொந்தங்கள் வராது. ஆனால் கூடப்பிறந்த சகோதரம் போலத்தான் இந்த அம்மம்மாவின் தங்கச்சி மகன் உறவு எங்களுக்கு.

அப்பவெல்லாம் அம்மாச்சி துடியாட்டமாகத்தான் இருந்தா. சகல வேலைகளும் செய்வா. சமையல்கூட தனித்தே செய்வா. வீட்டுக்காரரும் எதுவும் சொல்வதில்லை. ஏதாவது செய்துகொண்டிருக்க வேணுமெண்டு விட்டுவிடுவினம். தானே மீன் கழுவி வெட்டி, இறால் நோண்டி கறிவைப்பா. ஒரு பூட்டனுக்குக் மைபோட்டுக் கணவாய்க்கறி வேணும். இன்னொரு பூட்ட்னுக்கு மையில்லாமல் கணவாய்க்கறி வேணும். ஆனா அம்மாச்சி தனித்தனியக் கறிவைப்பா. அதுவும் மைகரையாமல் கணவாய் உரித்து வெட்டுவா. நான் இந்தக் கலையைப் பயின்றது அம்மாச்சியிட்ட இருந்துதான்.

அம்மாச்சிக்குத் தேத்தண்ணி போட்டுக்குடுக்கிறது சரியான கஸ்டம். பிள்ளைகளின்ர வீட்ட போனா 'இந்தா நீயே போட்டுக் குடியண' எண்டு அடுப்படியில அவவை விட்டுவிடுவினம். சாதாரணமா நாங்கள் குடிக்கிற சூடு காணாது. தேத்தண்ணி கொதிக்கக் கொதிக்க இருக்க வேணும். குசினிக்குள்ள இருந்து எடுத்துக்கொண்டாறதுக்குள்ள ஆறிப்போச்சு எண்டு சொல்லுற ரகம். அதோட சீனியும் அள்ளிப்போடுற ரகம். அதால அவவுக்குத் தனியத்தான் கலக்க வேணும். இப்ப 40 வயசு தாண்டின உடனயே சீனியை ஒதுக்கிற ஆக்களைத்தான் பாக்கிறன். ஆனா அம்மாச்சி பாணியாக்கித்தான் தேத்தண்ணி குடிக்கிறதை நினைச்சு ஆச்சரியப்படுறன். சீனியை வைத்து அம்மாச்சிக்கு எந்த வருத்தமும் வந்ததில்லை.

3 கிலோமீற்றர்கள்கூட நடந்து கடற்கரைக் கோயிலுக்குப் போய் வருவா. தன்பிள்ளைகளின் வீடுகளுக்கும் போய்வருவா. நாளாந்தப் பூசைகளுக்குப் போவது மட்டுமன்றி அலுப்பாயிருந்தால் ஒரு நடைநடந்து கோயிலுக்குப் போய் வாறதும் வழக்கம். அப்படிப்போகும்போது சொல்லும் வார்த்தை "ஆண்டவரிட்டப் போயிட்டு வாறன்"

எனக்கு அவவிட்ட பிடிக்காத, எரிச்சல் வாற விசயம் ஒண்டே ஒண்டுதான். இரவு 7 மணியெண்டா எல்லாரும் வந்து குந்தோணும். வேற என்னத்துக்கு? செபமாலை சொல்லத்தான். அதுவும் 5 காரணிக்கமும் சொல்லி முடிக்கோணும். அதில வாய்தவறிப் பிசகிப்போச்செண்டா நிப்பாட்டி முதலிலயிருந்து சொல்லவைப்பா அம்மாச்சி. எல்லாரின்ர முழு ஆத்திரமும் பிழைவிட்டவரின்ர மேலதான் திரும்பும்.
எல்லாரையும் விடிய எழுப்பிறது அம்மாச்சிதான். விடியத் திருந்தாதி அடிக்கேக்கையே அம்மாச்சி எழுப்பத்துவங்கிடுவா. பூசை தொடங்கமுதல் சில நிமிட இடைவெளிகளில் 3 தரம் மணியடிபடும். முதலாம் மணிக்கே கோயிலில நிக்கவேணுமெண்டு அம்மாச்சி சொல்லுவா. ரெண்டாம் மணிக்கு நிண்டாச்சரி எண்ட அம்மம்மா சொல்லுவா. மூண்டாம் மணிக்கு நிண்டாக்காணுமெண்டு அம்மா சொல்லுவா. தலைமுறையின்ர வளர்ச்சி தெரிஞ்சுது. நாங்கள் என்னத்தைச் சொல்லிறது?

சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்தபின்பும் மானிப்பாயில்தான் இருந்தா. அப்போது அம்மம்மாவும் அம்மாச்சியும் எங்களுக்கு அருகிலேயே இன்னொரு வீட்டில் இருந்தார்கள். ஆனால் எனக்கு இரவுப்படுக்கையைத்தவிர மிச்சமெல்லாம் அம்மம்மாவீட்டில்தான். தன் வாழ்நாளிலேயே தன் இரண்டாவது மருமகன் 89 இல் பிடித்துக்கொண்டுபோய் சுடப்பட்டதையும், 94 இல் மூன்றாவது மருமகன் நோய்வந்து இறந்துபோனதையும் பார்த்துக்கொண்டு இருந்தா. இரு பேரப்பிள்ளைகள் போராட்டக்களத்தில் வீரச்சாவடைந்ததையும் ஒரு பூட்டப்பிள்ளையும் ஒரு பேரப்பிள்ளையும் நோய் வந்து இறந்ததையும் பார்த்துக்கொண்டிருந்தா. சொந்த ஊரில அவவோடயே இருந்த பிள்ளைகளின் குடும்பங்கள் இப்போது திக்கொன்றாகப் போய்விட்டன. ஆனாலும் யாழ்ப்பாணத்துக்குள் தானென்பதால் அடிக்கடி பார்க்கக்கூடியதாயிருந்தது.

பிறகு வன்னி இடப்பெயர்வோடுதான் எல்லாம் மாறிப்போனது. அந்த இடப்பெயர்வுவரை அம்மாச்சி மிகமிகத் துடியாட்டமாகத்தான் இருந்தா. உடம்பில் எந்தக்குறையுமிருக்கவில்லை. சடுதியாக நொடித்துப்போகுமளவு உடம்பு இருக்கவில்லை. (சாகும்போதுகூட உடலில் பிரச்சினைகள் இருக்கவில்லை)ஆனால் வன்னிக்கு வந்தபோது 3 பிள்ளைகளின் குடும்பங்கள் மட்டுமே அவவுக்கு அருகில் இருக்க முடிந்தது. மிகுதிப்பேர் இந்தியாவோ கொழும்போ சென்றிருந்தனர். இருந்த குடும்பங்களிலும் பிள்ளைகள் கொழும்புக்கோ இந்தியாவுக்கோ வேறெங்கோயோ போய்விட்டார்கள். முல்லைத்தீவு - இரணைப்பாலையில் எங்கள் பெரியம்மாவோடுதான் அம்மாச்சி இருந்தா. எங்கட குடும்பம் மாங்குளம், மடு என்று இடம்பெயர்ந்துகொண்டிருந்தது. அம்மாச்சியின் கடைசிக்காலங்களில் நான் அவவோடு இல்லை. மிகவும் நொடித்துப்போய்விட்டதாகவே சொன்னார்கள். முழுக்க முழுக்க மனக்கவலைதான். உண்மையில் கடைசிக்காலத்தில் கொஞ்சிக்குலவ எந்தக் குஞ்சு குருமனும் அம்மாச்சிக்கருகில் இல்லை. மிகுந்த ஏக்கத்தோடேயே இறுதிக்காலத்தைக் கழித்திருந்தா. வாழ்வின் மீதான சலிப்பை அம்மாச்சி முதன்முதலாக வெளிப்படுத்தியதும் அப்போதுதான். (முன்பெல்லாம் தான் வயதுபோனவ எண்டதைக் காட்டிக்கொள்ளிதில்லை. மற்றவர்கள் சொல்லவும் விடுவதில்லை) மாறாட்டங்கள், மறதிகள் என்று சடுதியான மாற்றங்களோடு, இறுதிநேரத்திலாவது கொஞ்சப்பேரைப் பார்க்கவேணுமென்ற ஏக்கம் கைகூடாமலேயே 1997 முற்பகுதியில் உயிரைவிட்டா. அவ சாகும்போது மூத்த பூட்டனுக்கு 21 வயது. எனக்கு 17 வயது. மொத்தம் 24 பூட்டப்பிள்ளைகள்.

யாழ்ப்பாண இடப்பெயர்வுரை மிகமிக நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அம்மாச்சியின் வாழ்கை இறுதிக்காலத்தில் என்னைப்பொறுத்தவரை அவலமான வாழ்வுதான். வயது சாவதற்குரியதுதான். ஆனால் அச்சாவு யாழ்ப்பாணத்தில் எல்லோரும் ஒன்றாயிருந்தபோதே வந்திருக்க வேண்டும். குழந்தைகள் மீதும், பேரப்பிள்ளைகள் மீதும், பூட்டப்பிள்ளைகள் மீதும் அம்மாச்சி வைத்திருந்த பாசமும் ஏக்கமும் அவவோடையே வாழ்ந்த எனக்கு நன்கு தெரியும். இறுதிக்காலத்தில் உளரீதியாக என்ன மாதிரித் துன்பப்பட்டிருப்பா எண்டும் வடிவாத் தெரியும். தன்ர பதினாறாவது வயசிலயே கலியாணம் முடிச்சு வெளிக்கிட்ட அம்மாச்சி அதிகம் பிற இடங்களுக்குப்போனதுகூட இல்லையாம். எல்லாம் அந்த ஊரோடும் தன் விசாலமான பரம்பரையோடுமே போய்விட்டது.


இப்படி அம்மாச்சியின் கீழ் ஒன்றாகக் கூடிவாழ்ந்த நினைவுகள் சுகமானவை. இனிமேல் அது எக்காலத்திலும் சாத்தியமாகப்போவதில்லை. ஆதே ஊரில் அதே வீடுகளுக்கோ வளவுகளுக்கோகூடச் செல்லமுடியாத நிலைதான் இன்று. வெறும் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அடிக்கடி நினைத்துக் கொள்வது நல்லதுதானே?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"அம்மாச்சி - ஓர் ஆலமரம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (27 October, 2005 01:27) : 

அம்மாச்சியின் கணவரை அம்மாப்பு எண்டு நாங்கள் சொல்லுவம்.

என்ரை அம்மம்மா தன்ரை பூட்டக் குழந்தையை பாக்காமல் வாழ்வை முடிக்கிறதில்லை எண்டு அடிக்கடி சொல்லுறவ. பாப்பம்.. கடவுள் கருணை காட்டுறாரோ எண்டு

 

said ... (27 October, 2005 01:33) : 

வசந்தன், நல்ல நினைவுமீட்டல்.
சயந்தன், அவரவர் தேவைக்கு அம்மம்மா சாட்டோ? ;-)

 

said ... (27 October, 2005 01:39) : 

அருமையான பதிவு வசந்தன்.

நன்றி!

-மதி

 

said ... (27 October, 2005 02:15) : 

வசந்தன், மனதைத் தொடும் பதிவு., நானும் என் அம்மாவுடைய, அம்மாவுடைய அம்மாவுடன் இருந்திருக்கிறேன் (நாங்கள் பாட்டி என்போம்). அவர் கணவராகிய தாத்தாவுடனும் வசித்திருக்கின்றேன். இருவரும் கடுமையான உழைப்பாளிகள். இரண்டு பெண்கள் மட்டுமே அவர்களுக்கு., அந்த இருவருமே என் தாத்தாவின் (அம்மாவுடைய அப்பா) மனைவிகள் (என் அம்மாவின் அம்மா, அம்மா பிறந்தவுடன் இறந்ததால் அவரின் தங்கையை மணந்தார்). அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அத்தனை சொந்தங்களுடன் வாழ்ந்திருக்கிறார். கடைசி காலமும் அவருக்கு நிறைவாக இருந்திருக்கலாம்... ம்.. உங்கள் ஊரில் தாய், தந்தையரை பெண் பேணும் நிலை உண்மையில் எவ்வளவு அருமையான முறை?., எங்கோ இருந்து வந்த மருமகளுடன் மல்லுக்கு நின்று கொண்டு காலம் முழுவதும் கருத்து வேறுபாட்டுடன் வாழ்க்கையை ஓட்டுவதை விட மகளுடன் இருப்பதே பொற்றோருக்கும்., அந்த மகளுக்கும் நல்லது. (மருமக்களும் வாலாட்ட முடியாது...). நல்ல பதிவு., நன்றி.

 

said ... (27 October, 2005 02:44) : 

வல்வெட்டித்துறையை அடியாகக் கொண்டாலும் எங்கள் ஊரிலேயே நிலைபெற்றுவிட்டது அந்தக்குடும்பம்

அப்பிடியோ,

ஏதோ கொஞ்சம் புரியும் எண்டு நினைக்கிறன்.

 

said ... (27 October, 2005 02:57) : 

எழுதிக்கொள்வது: எவனோ ஒருத்தன் வாசித்தவன்

சயந்தனும் வசந்தனும் ஒரே நேரத்தில பதிவு போட்டிருக்கீங்க.. யாருக்கு கூட பின்னூட்டம் கிடைச்சிருக்குன்னு ஈகோ பிரச்சனையெல்லாம் வராதா.?

3.23 27.10.2005

 

said ... (27 October, 2005 04:01) : 

வசந்தன் உறவுகளில் நினைவைக் குவிப்பதற்கான ஒரு முயற்சியா?உண்மைதாம்!நாம் உறவுகளின் ஊற்றுத்தானே.இத்தகைய ஒரு கருவை வைத்துக் கனடாவில் இளைய பாரதி ஒரு வானொலி நாடகம் இயக்கியிருந்தார்.அற்புதமாக உறவுகளின் வலிவைச் சொல்லும் படைப்பு அது.அவ்வண்ணமே உங்கள் பதிவும் உறவுகளின் வலிவையும்-வலியையும் சொல்கிறது.

 

said ... (27 October, 2005 07:48) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

குமரேஸ்,
என்ன சொல்ல வருகிறீர்களென்று புரியவில்லை. என் பூட்டனை உங்கள் குடும்பத்தாருக்குத் தெரிந்திருக்கலாம் என்றா?
இருக்கலாம். முடிந்தால் தனிமடல் போடவும். வேறு ஏதாவது பொருளிருந்தாற் சொல்லவும்.
"வல்வெட்டித்துறையை அடி" என்று தடித்தெழுத்திற் போட்டுத் தடிப்புக் காட்டாதையும்.

எவனோ ஒருவனே,
நல்ல வளர்ச்சிதான். முந்தியெண்டா அவனும் இவனும் ஒண்டு எண்டியள். இப்ப ஈகோ பற்றிக் கதைக்கிறியள். நல்ல மாற்றம்தான்.

 

said ... (27 October, 2005 08:05) : 

வசந்தன் நல்லதொரு நனவிடைதோய்தல். இதை வாசித்துமுடிந்தபோது சு.வில்வரத்தினத்தின் கவிதை ஒன்றுதான் ஞாபகத்து வந்தது. ஊரெல்லாம் விட்டு வந்தாப்பிறகு வயோதிகத்தில் வரும் மரணம் தனிமையில் நடப்பதாயும், ஊரில் இருந்தால் எல்லா உறவுகளும் முன்னே நின்று மரணச்சடங்கை நடத்தி வழிநடத்தியிருக்கும், அந்தக் கொடுப்பினை கூட இல்லாமற்போய்விட்டது என்பதாய் அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கும் (தலைப்பு இப்போது நினைவினில்லை).
....
பி.கு: உம்மடை வயசையும் இருந்த ஊர்களையும் பார்த்தால் யாழ்ப்பாணத்தில் இருக்கைக்கே உம்மை எங்கையாவது ச்ந்திந்திருப்பேன் போலத் தோன்றுகிறது. முக்கியமாய் soccer matchல்.

 

said ... (27 October, 2005 12:01) : 

டி.சே.
கருத்துக்கு நன்றி.
தனிமடல் அனுப்புகிறேன். பார்க்கவும்.

சயந்தன்,
பெயரிலி சொன்னதுதான் என்ர கருத்தும்.
அம்மம்மாவையெல்லாம் இப்படியும் பயன்படுத்த முடியுமா?
விரைவிற் கரை சேர்க.
கரைசேர்ந்த பிறகு எழுதமாட்டீர் என்பது தெரியும்.
தமிழ் 'இலக்கியத்துக்கு'ப் பெரிய இழப்புத்தான்.

 

said ... (27 October, 2005 12:01) : 

நல்ல பதிவு வசந்தன். நாங்கள் அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்றழைப்போம். அம்மாச்சியின் கணவர் தாத்தாதான் போல.

அம்மம்மா என்ற உறவுப்பெயர் தமிழ்நாட்டில் இல்லை என்ரு நினைக்கிறேன். இந்தப்ப்பெயரையே நான் இலங்கை வானொலியில்தான் கேட்டிருகிறேன்.

உங்கள் நடையும் சொல்லிச்செல்லும் முறையும் நன்றாக இருக்கிறது. அம்மாச்சி (அல்லது ஒரு 2 தலைமுறைகளுக்கு முந்திய) போன்ற நெருங்கிய மனிதர்களுடன் வாழ்வது வாழ்க்கையைப் பற்றிய இன்னொரு பக்கத்தை அறிய வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களது வாழ்க்கையும், நம்பிக்கைகளும், வெற்றிகளும், தோல்விகளும் பெருமளவுக்கு மாறுபட்டவை இல்லையா?

நன்றி!

 

said ... (27 October, 2005 14:15) : 

உறவுகளை விபரிக்கிற இனியதொரு பதிவு.
நாங்கள் அம்மம்மாவின் அம்மாவை பூட்டியாச்சி என்று கூப்பிடுவோம்!
ஆகவே அவரது கணவர் பூட்டன்.
என்னோட அப்பா, தங்களட அம்மாட அக்காவை 'அம்மாச்சி' என்று சொல்லுவார்கள்..(அவர்களது அம்மா கடைசிப்பிள்ளை; 'அம்மாச்சி' எனக் கூப்பிடுபவர் ஐந்துபேரில் மூத்தவரா இருக்கலாம்)
இந்தப் பதிவை நீங்கள் ஒலிப்பதிவாயும் போடலாமே...

 

said ... (27 October, 2005 15:23) : 

கடந்த வாழ்க்கையை நினைத்து, நினைத்து உயிர் போகும்வரை அந்த ஜீவன் எப்படி துடித்திருக்கும் என்று நினைக்கும்போது, வருத்தமாய் இருக்கிறது.

 

said ... (27 October, 2005 15:30) : 

எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

அன்பின் வசந்தன் பதிவுக்கு நன்றி.

உறவுகள் பற்றிய உங்கள் பதிவை படித்தபோதுதான் ஒரு சந்தேகம். அனைத்து உறவுகளையும் எப்படி அழைக்கப்படவேண்டும் என சில நடைமுறைகள் இருப்பது போல உதாரணமாக அம்மா அப்பா தம்பி தங்கை என்பது போல கணவன் மனைவி ஆகியோருக்கு இடையில் அழைக்கும் முறைகள் ஒரு கள் என்ன?

தற்போது பெயர் சொல்லி அழைக்கும் முறைகள் வெளிநாடுகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால் எமது பண்பாட்டு அடிப்படையில் ஏதாவது முறைகள் இருக்கிறதா?

அன்புடன்
தமிழ்வாணன்.



15.51 27.10.2005

 

said ... (27 October, 2005 22:53) : 

தங்கமணி, பொடிச்சி, உசா, தமிழ்வாணன்....
கருத்துக்கு நன்றி.

உண்மைதான் தங்கமணி, அவர்களோடு இருந்தது பெரிய வித்தியாசமான அனுபவம் தான்.

பொடிச்சி,
குரல் பதிவு போடலாம்தான்.
தடிமன் பிடிச்சிக்கெல்லோ;-)

தமிழ்வாணன்,
அதைத்தானே தெனாலி சொல்லிப்போட்டார்
இஞ்சேருங்கோ ... இஞ்சேருங்கோ...

 

said ... (27 October, 2005 23:07) : 

//கணவன் மனைவி ஆகியோருக்கு இடையில் அழைக்கும் முறைகள் என்ன?
//

குட்டி, செல்லம், செல்லக்குட்டி, என்பனவும் டேய், நாயே, மாடு, எருமை என்ற பிறவுமாம்.

 

said ... (28 October, 2005 03:57) : 

அன்புள்ள வசந்தன்,
(உங்கள் பெயரைப்படிக்கும்போதெல்லாம் எனக்கு கணேஷ்-வசந்த் நினைவிற்கு வருகிறார்கள்)
நாங்கள் எங்கள் உறவில், மகள் வயிற்றுப் பேத்தி, தன் மகள் வயிற்றுப் பேரனால் பாட்டி என்றழைக்கப்பட்டதைப் பார்க்கும் நல் வாய்ப்புப் பெற்றிருந்த முதுபெரும்கிழவி ஒருவருடனும், பார்த்துக்கொண்டிருக்கும் மற்றொரு முதுபெரும்கிழவியுடனும் வாழும் இறைஅருள் பெற்றிருக்கிறோம்

.

 

said ... (28 October, 2005 05:37) : 

பாலராஜன்கீதா,
என்ன சொல்ல வருகின்றீர்கள்?
அப்படியானால், கணேஷ் என்பவர்தான் சயந்தன் என்ற பெயரிலே எழுதுகின்றாரென்றா? ;-)

 

said ... (28 October, 2005 11:26) : 

//நாங்கள் எங்கள் உறவில், மகள் வயிற்றுப் பேத்தி, தன் மகள் வயிற்றுப் பேரனால் பாட்டி என்றழைக்கப்பட்டதைப் பார்க்கும் நல் வாய்ப்புப் பெற்றிருந்த முதுபெரும்கிழவி ஒருவருடனும், பார்த்துக்கொண்டிருக்கும் மற்றொரு முதுபெரும்கிழவியுடனும் வாழும் இறைஅருள் பெற்றிருக்கிறோம்//



கீதா,
எனக்குப் புரியவில்லை.
இது பேத்தியின் பேரன் என்ற உறவா?
அப்படியானால் பூட்டி என்பதற்கு அடுத்த கொப்பாட்டன் -கொப்பாட்டி உறவா?

----------------------------

கணேஸ் - வசந் எண்டு கீதா சொல்ல,
இவரொருத்தர் வந்து கணேஸ் - சயந்தன் எண்டுவிட்டுப் போறார்.
என்னத்தைச் சொல்ல?

பெயரிலி,
எதையும் நறுக்கிச் சொல்லிற நீர், இதிலையும் மூண்டாவது மாங்காய் அடிக்கிறீரோ தெரியாது.
இதுவும் A=B, B=C.
ஃ A=C
எண்டு நிறுவிற விளையாட்டோ?

 

said ... (28 October, 2005 16:20) : 

அதே """லாம்""" தான்.

பேரன் என்பது - அந்த நாட்களில் ஒருவருடைய மகனின் மகனுக்கு அவருடைய பெயரையே வைக்கும் வழக்கத்தினால் வந்தது. இது சில குடும்பங்களில் மூத்த மகனின் முதல் மகனுக்கும், இன்னும் சில குடும்பங்களில் முதலாவது பேரப்பிள்ளைக்கும் பெயரை வைப்பார்கள். கிட்டத்தட்ட இது குடும்பப் பெயர்போன்றே.

உதாரணத்திற்கு,

நடராசா வின் மகன் சண்முகம் அவரின் மகன் மீண்டும் நடராசா, இப்படியே மீண்டும் சண்முகம்..... என்றிருந்த வழக்கம், எண்கணிதம், அதிஸ்ர இலக்கத்தில் பெயர் அமைத்தல் போன்ற காரணங்களால் வழக்கொழிந்துவிட்டது.

தற்காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்வோர், வெள்ளைக்காரன் கூப்பிடுவதற்கு ஏதுவாக இலகு பெயர்கள் என்ற ரீதியில் இரண்டெழுத்து மூன்றெழுத்து பெயர்களை வைக்கிறார்கள். அப்படியே தூய தமிழ்ப்பெயர்கள் அரிதாகி வருகின்றன.

எழிலிழங்கதிர் போன்ற பெயர்களை இனி காணமுடியாது.

"பாலராஜன்கீதா" கூறியிருப்பது மிகவும் அரியதான நிகழ்வே,

உதாரணம்:

வள்ளிப்பிள்ளை மகள் தங்கரத்தினம்
தங்கரத்தினம் மகள் இந்திராணி
இந்திராணி மகள் வசந்தி
வசந்தி மகள் அபி(ராமி)

இங்கு

வள்ளிப்பிள்ளை இன் மகள்வயிற்றுப் பேத்தி இந்திராணி

இந்திராணியின் மகள்வயிற்றுப் பேத்தி அபி

 

said ... (28 October, 2005 23:43) : 

தலை தீபாவளியை கொண்டாட இருக்கிறார். வசந்தன் வாழ்த்துக்கள்..

 

post a comment

© 2006  Thur Broeders

________________