இரட்டை வேடம்...
வணக்கம்! தமிழ்ச் சினிமாவில் இரட்டை வேடம் என்பது ஒன்றும் புதிதன்று. தற்போது பத்திலொரு படமாவது நடிகனோ நடிகையோ இரட்டைவேடம் ஏற்று நடிக்கும் படங்களாக வெளிவருகின்றன. இரட்டை வேடம் போடுதல் எனும் நிலைப்பாடு தேவைதானா என்பதே என்கேள்வி. ஒரே மாதிரியுள்ள இரு நபர்களால் (அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள, உதாரணம் மைக்கேல் மதன காமராஜன்) ஏற்படும் குழப்பங்களை வைத்துச் சில படங்கள் வெளிவந்துள்ளன. (ஆளவந்தான், பங்காளி, அட்டகாசம், பார்த்தீபன் கனவு, வாலி) அவ்வாறான படங்களுக்கு இரட்டை வேடத்தில் நடித்தல் என்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கதையே அதுதானே. ஆனால் உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்கள் எந்த விதத்திலும் சம்பந்தப்படாமலும் இரட்டை வேடமேற்று நடித்துள்ள நிறையப்படங்கள் வந்துள்ளன. (ஒரு கைதியின் டயறி, அமைதிப்படை, அய்யா, நட்புக்காக) இவற்றிற் பெரும்பாலானவற்றில் ஒரே நடிகர் தந்தை மகனாக நடிப்பார். இந்த உறவுமுறை கூட இல்லாமலும் இரட்டை வேடமேற்ற சில படங்கள் வந்துள்ளன. உதாரணம் பார்த்தீபன் கனவு, ஜெய்சூரியா. பார்த்தீபன் கனவில் வரும் சினேகாக்கள் சகோதரிகளோ உறவினரோ கூட இல்லை. அதுபோலவே ஜெய்சூரியாவில் வரும் அர்ஜூன்களும். ஆனால் ஒருவரையே இரு பாத்திரத்துக்கும் நடிக்க வைத்து உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களைக் கலந்து படத்தை ஒப்பேற்றி விட்டார்கள். அப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா என்று சிந்திக்கக் கூடாது. சினிமாவில் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பது இப்போது பைத்தியக் காரத்தனமாய்ப் போய்விடும். உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களைச் சம்பந்தப்படுத்தாமல் வரும் படங்களில் இரட்டை வேடங்களை வைத்துப் படம் பண்ணுவது தேவைதானா? அது அக்குறிப்பிட்ட கதாநாயகனையோ கதாநாயகியையோ மிகைப்படுத்தும் ஒரு செயற்பாடு தானே. ஒருவரை ‘அதிகமாய்’ நடிக்க வைத்து தனிமனிதத் திறமையையும் புகழையும் ஈட்டும் ஒரு நடவடிக்கை தானே. உதாரணமாக கமல் இரட்டை வேடம் செய்கிறாரென்றால் அது அவரது நடிப்புக்குக் கிடைத்த ‘தீனி’ யாகப் பார்க்கப்படுவதும் புகழப்படுவதும் இங்கு சாதாரணம். உண்மையில் அவ்விரண்டு பாத்திரங்களையும் அவரே செய்ய வேண்டிய கதைச்சூழல் நிச்சயமாய் இருக்காது. தேவையே இல்லாமல் ஒருவரின் புகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகவே இது இருக்கிறது. கதாநாயகர்களுக்காகவே கதைகள் உருவாக்கப்படும் இச்சூழ்நிலையில் இரட்டை வேடக் கதைகளும் அப்படியே உருவாகின்றன. இது பல நடிகர்களையும் தாண்டி இன்று சரத்குமார் இதில் கொடிகட்டிப் பறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அவர் இரட்டை வேடமேற்று (தந்தை-மகன்) நடித்த படங்களெல்லாம் வெற்றிப் படங்கள் என்று செய்திகளும் விளம்பரங்களும் கூறுகின்றன. இது இன்னும் முற்றிப்போய் சத்தியராஜ் வில்லனாகவும் கதாநாயகனாகவும் வந்து ‘கலக்கிய’ சமீபத்துப் படமான ‘ஐயர் ஐ.பி.எஸ்’ வரை வந்துவிட்டன. எதற்கு இரண்டு நடிகர்களுக்குச் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும்? ஒருவரின் சம்பளத்தோடே இரண்டு பாத்திரங்களையும் முடித்து விடலாம் என்ற வியாபார நோக்கோடு கூட இம்முறை பயன்படுத்தப் படலாம். ஆனாலும் இம்மாதிரி முயற்சிகளும் இந்தப்போக்கும் சினிமாவுக்கு நல்லதா என்று எனக்கு விளங்கவில்லை. இப்போதெல்லாம் இரட்டை வேடமேற்று நடிக்கும் படங்களைப் பார்த்தால் ரசிக்க முடிவதில்லை. எனக்கு மட்டுமே இப்படிப் பிரச்சினை இருக்கலாம். தமிழ்ச் சினிமாவின் தேக்கத்துக்கு அல்லது பின்னடைவுக்கு இந்த இரட்டை வேடக் காதாபாத்திரங்களும் குறிப்பிட்ட அளவாவது காரணமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். என் மனத்துக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதினேன், அவ்வளவே. தமிழ்ச் சினிமாவை விட்டு அமெரிக்க மற்றும் ஏனைய படவுலகுகளிலும் இப்படி இரட்டை வேட நடைமுறை இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத்தெரிந்தவர்கள் அதுபற்றி சின்னக் குறிப்பை எழுதிவிட்டுப் போங்கள். சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னேனா தெரியாது. கோர்வையாக வராதது போல் ஒரு தோற்றமேற்படுகிறது. புரிந்தால் ஏதாவது சொல்லுங்கள். நன்றி. Labels: திரைப்படம், விமர்சனம் |
"இரட்டை வேடம்..." இற்குரிய பின்னூட்டங்கள்
உருவ ஒற்றுமையை வைத்துக் கதை என்றால் இரட்டை வேடம் தவிர்க்க முடியாதுதான். மற்றப்படி வெயிட்டாக இரண்டு பாத்திரங்கள் இருந்தால் அவற்றை ஒருவரே ஏற்று நடிப்பது பேராசையே. உதாரணம் பிரான் மற்றும் அமிதாப் ஜஞ்சீரில் நடித்த இரு பாத்திரங்களையும் அதன் தமிழாக்கத்தில் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்தது. பிரான் மற்றும் மனோஜ் குமார் பேயிமானில் நடித்தப் பாத்திரங்களை சிவாஜி ஒருவராக ஏற்றது. ஏன் இந்த வேண்டாத வேலை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உருவ ஒற்றுமையை வைத்துக் கதை என்றால் இரட்டை வேடம் தவிர்க்க முடியாதுதான்.//
நானும் அதையேதான் சொன்னேன். நன்றி டோண்டு.
மற்றப்படி அப்பா-மகன், மாமா-மருமான் என்றாலும் கூட ஒத்துக் கொள்ளலாம். வேறு தருணங்களில் உருவ ஒற்றுமைக் குழப்பம் கூட இருவரை வைத்துக் காட்டப்பட்டது. உதாரணம் சஷி மற்றும் ரிஷி கபூர்கள். குழப்பம் ராக்கிக்கு மட்டுமே. குழந்தையும் தெய்வமும் படத்தின் மூல ஜெர்மானியக் கதையில் (Das doppelte Loettchen) நிஜமான இரட்டைச் சகோதரிகள் நடித்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்