Sunday, February 20, 2005

ஐயாவும் அசட்டு விளையாட்டும்..

வணக்கம்!
சமீபத்தில் “ஐயா” படம் பார்த்தேன். சரத்குமார் இரட்டை வேடம் போட்டு நடித்த படம். (இரட்டை வேடம் போடுதல் பற்றி எனக்குப் பலத்த கேள்விகள் உள்ளன. அவற்றைப் பிறகு பதியலாம் என்றிருக்கிறேன்.) அதில் இளைய சரத்குமார் உதைபந்தாட்டம் (foot ball) ஆடும் காட்சியொன்று வருகிறது பாருங்கள். அதைப்பார்த்ததும் வயிற்றெரிச்சல் தான் வந்தது.

தங்கள் ஊர் அணி தோற்கிற கட்டத்திலிருக்கிறபோது களத்தில் (கவனிக்க மைதானத்திலில்லை) குதிக்கிறார் சரத். “அண்ணே வேணுமின்னே உதக்கிறாங்கண்ணே” என்று சொல்லும் ஒரு வீரனிடம் (?) யார்றா அது? என்று கேட்டு அறிந்துகொள்ளும் சரத், “சரி அவன நா பாத்துக்கிறேன்” என்றுவிட்டு விளையாடத் தொடங்குகிறார். சரத் களத்திலிறங்கி விட்டால் அவரை வைத்து எப்படி உதைபந்து விளையாடுவது? அருக்கேற்ற மாதிரியே குத்துச்சண்டை மாதிரி ஏதோ செய்கிறார். நடுவரென்று ஒருவர் அங்கே நிற்பது ஏனென்று தெரியவில்லை. (சில படங்களில் காவல்துறையே ஏன் நிற்கிறது என்று விளங்காதபோது இதுஎன்ன பெரிய குறை?) எதிரணி வீரர்களுக்கு ஒவ்வொரு குத்து, உதை விட்டபடியே முன்னேறிச்செல்லும் சரத் அனைவரையும் விலத்தி பந்தை உதைக்கிறார். பேற்றுக்காப்பாளனும் (Goal Keeper) சரத்துக்குச் சளைத்தவனா என்ன? அவன் பந்தைப் பிடிக்கிறான். அந்தோ பரிதாபம். பந்து அவனைப் பேற்றுக் கம்பங்களுக்கிடையால் தூக்கிக்கொண்டு (உண்மையாத்தான், ஆகாயத்தில பறந்துபோறார்) போய்விடுகிறது. சரத் அணிக்கு ஒரு கோல் கிடைத்துவிட்டது.

இவர்களுக்கு என்ன தெரிந்து படமெடுக்க வந்தார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ஒரு விளையாட்டைக் கூடவா அதை எப்படி விளையாடுவதென்று தெரியாமல் படத்திற் புகுத்தினார்கள். இப்படிக்கூட ஒரு விளையாட்டைக் கொச்சைப்படுத்த முடியுமா? (இவ்வளவு வன்முறையான விளையாட்டாகவா அது இருக்கிறது? மைதானம் விதப்புக்கு சேறடிச்ச வயல்மாதிரி கிடக்கு) கதாநாயகனை பிரமிப்பாகவும் பிரமாண்டமாகவும் காட்டுவதற்காகப் பறந்து பறந்து சண்டைபோட்டார்கள்; ஒருவனே முப்பதுபேரை நொருக்குவதாகக் கதை விட்டார்கள்; பாத்திரக்கடைகளிலும் காய்கறிச் சந்தையிலும் சண்டைபோட்டார்கள்; இப்போது விளையாட்டிலும் கைவைக்கத் தொடங்கிவிட்டார்கள். இது உதை பந்தாட்டத்திற்கு மட்டும் நடக்கவில்லை. சமீபத்தில் கில்லிக்குக் கூட கபடி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இன்னும் என்னென்ன கூத்துக்கள் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை.

"இப்ப என்னத்துக்கு இதுக்கெல்லாம் துள்ளிறியள்? இது வழமையா சினிமாவில நடக்கிறதுதானே" என்று யாராவது கேட்கக் கூடும். ஆம் இப்படிப் பலவற்றைச் சகிக்கப் பழகியாகி விட்டது. ஆனால் உதைபந்தாட்டத்தின் தீவிர இரசிகன் என்ற வகையில் இதைப்பார்த்துப் பொறுக்க முடியாமல் தான் இங்கே வந்து கொட்டி விட்டேன். (கொட்டுவதற்குத் தானே இந்த வலைப்பகுதி) இன்னும் இதைப்பற்றி யாரும் பெரிதாகக் கதைக்க வில்லை. கதைக்கவும் மாட்டார்கள். (அவனவன் என்ன வேலயத்தா திரிஞ்சிகிட்டிருக்கான்?) சில வேளை கிறிக்கெற்றில் இப்படி ஏதாவது புருடா விட்டால் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவல்.

நான் இங்கே உதைபந்தாட்டம் என்பது Foot Ball என்று ஆங்கிலத்திற் சொல்லும் விளையாட்டு. அதுவும் பெரிதளவு ஆசிய நாடுகளிலும் இங்கிலாந்திலும் சொல்லப்படும் வார்த்தை. இவ்விளையாட்டை Soccer என்று அமெரிக்க சார்ந்த நாடுகளிலும் ஊடகங்களிலும் சொல்வதுண்டு. (இதைப்பற்றின குழப்பங்கள் சுவாரசியமானவை.) Football என்பதற்கு அமெரிக்காவில் வேறு அர்த்தம். (இந்த அர்த்தத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் ஓரளவு சரியாயிருந்திருக்கும். எண்டாலும் பந்தக் கையிலயெல்லோ தூக்கிக்கொண்டு ஓடியிருக்கோணும்)

சரி தமிழில் இந்த விளையாட்டை எப்படிச்சொல்வது பொருத்தம்? கால்பந்து? உதைபந்து? இரண்டுமே பாவிக்கப்படுவதை அறிவேன். தெரிந்தவர்கள் சொல்லவும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஐயாவும் அசட்டு விளையாட்டும்.." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (20 February, 2005 15:30) : 

இப்படத்தில் வருவது சரத்தடி உதைக்கால் பந்து என்றுக் கூறலாமா?
அன்புடன்,
ராகவன்

 

said ... (20 February, 2005 15:54) : 

என்னவோ போங்க. படத்தில வாறத விட்டுத்தள்ளுங்க. (அது என்ன விளையாட்டு என்று படத்தில் சொல்லாத படியால் அவர்கள் மேல் வழக்கும் தொடுக்க முடியாது. கேட்டால் நீங்கள் சொன்ன மாதிரி தான் ஏதாவது பேர் சொல்லிச் சமாளிப்பார்கள்.) அதுசரி நான் கட்டாக் கடசியா கேட்ட கேள்விக்கு உங்கள் பதிலென்ன டோண்டு. உதைபந்தா கால்பந்தா இல்லை வேறேதாவது பெயரிருக்கா?

 

said ... (20 February, 2005 16:34) : 

உதை பந்துதான் மிகவும் சரியானது, கால்பந்து என்றால் தலையால் உதைக்கும்போது உதைக்குமே?

 

said ... (20 February, 2005 20:45) : 

நன்றி குமாரீஸ்...(அத எப்பிடிங்க உச்சரிக்கிறது?) நானும் உதைபந்தாட்டம் என்றுதான் பாவித்துள்ளேன். ஆனால் பெரும்பாலான செய்திநிறுவனங்கள் (பி.பி.சி உட்பட) கால்பந்தாட்டம் என்றே சொல்கின்றன. Foot என்பதற்காக அப்படிச் சொன்னார்களோ தெரியவில்லை. என்றாலும் "பாதப்பந்து" மாதிரித்தானே வரும். யோசிச்சா கிறுக்குப் பிடிக்கிறமாதிரி இல்ல?

 

said ... (21 March, 2005 15:17) : 

எழுதிக்கொள்வது: Dhasarathy

அருமையான கருத்து. தமிழில் மொழிபெயர்தல் என்று வரும்பொழுது நாம் அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்க கூடாது? "உதைப்பந்து" சரியென்று படுகிறது!

10.13 21.3.2005

 

post a comment

© 2006  Thur Broeders

________________