This is a tb_b_20060122 with one sidebar and a fluid (flexible) content.
Advertisement
Tuesday, May 27, 2008
'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்
"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" என்ற தலைப்பில் முன்பொரு இடுகை இட்டிருந்தேன். அவ்விடுகைக்கு அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்லானி பின்னூட்டத்தில் பதிலளித்திருந்தார்.
அப்பதிலை இங்குத் தனியிடுகையாக இடுகிறேன். இது அவ்வியக்குநருக்கு நானளிக்கும் மரியாதை எனக்கொள்க.
முந்திய இடுகையில் அப்படம் தொடர்பில் நான் குறிப்பிட்ட சில குறைபாடுகள் தொடர்பான விளக்கத்தை இயக்குநர் அளித்திருந்தார்.
விளக்கத்துக்கு நன்றி ஜெய்லானி. உங்களின் திரைத்துறைப் பயணம் மேலும் சிறக்க ஓர் இரசிகனாக எனது ஆசிகள்.
இனி இயக்குநர் ஜெய்லானியின் பதில்.
Jailani(Director) said ... (19 May, 2008 03:09) :
வசந்தன், கேள்வி சரிதான்:-) நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.
மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.
//"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."//
இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.
இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)
//"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது. அது முரணாக இல்லையா? படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?) "//
:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.
//"ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."//
படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.
அண்மையில் 'அஞ்சாதே' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளிவந்திருந்தது. அதைப்பற்றி பலரும் சிலாகித்து எழுதியிருந்தார்கள். நானும் படம் பார்த்தேன். பார்த்து முடித்தபின் மனதுள் ஒரு கேள்வி வந்தது. நாயகன் விடும் தவறொன்றை மையமாக வைத்து எந்தக் கேள்வியுமின்றிக் கதையை நகர்த்தியிருக்கிறார்களே என்று. தமிழ்த்திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் ஏதாவது கோமாளித்தனமாக செய்தாக வேண்டுமென்ற புரிதல் இருந்தாலும் பலரும் தலையில் தூக்கிவைத்து ஆடிய இப்படத்திலுமா என்ற கேள்வி வந்தது.
படத்தில் நரேன் காவல்துறையினனாக ஆகிறான். தொடக்கத்தில் அத்தொழிலை விருப்பமின்றிச் செய்கிறான். இரத்தத்தைக் கண்டால் பயம்; கொலையைக் கண்டால் பயம் என்றிருக்கும் நரேன் ஒருசந்தர்ப்பத்தில் அப்பயங்களையும், அருவருப்பையும் தூக்கியெறிந்து செயற்படுகிறான். திரைப்படத்தின் மிகமுக்கிய திருப்பமாக நான் கருதுவது அதைத்தான். ஏற்கனவே தாக்கப்பட்டிருக்கும் ஒருவனைப் பாதுகாக்கச் செல்லுமிடத்தில் இத்திருப்பம் நடக்கிறது.
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை (பார்த்தீபன்?) வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். அவனுக்குப் பாதுகாப்பாக நரேனும் இன்னொருவரும் செல்லும்போது அங்கே அவனைக் கொல்ல நாலுபேர் வருகிறார்கள். நால்வரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள். 'அவன போடுறதுக்கு வந்திருக்காங்க.. வா நாம போய் ஒரு ரீ குடிச்சிட்டு வந்திடலாம்' என்று நரேனை அழைக்கிறார் மற்றவர். நரேன் போகவில்லை. துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி கொலை செய்யவந்தவர்களை மிரட்டுகிறார். அதற்கு நால்வரில் தலைவன் ஏதோ சொல்கிறான் (மிரட்டவில்லை). பிறகு கையிலிருந்த துப்பாக்கியைக் கீழே போடுகிறார் நரேன்.
திடீரேன தான் முன்பு தெருரெளடியாக இருந்தது ஞாபகம் வந்தோ என்னவோ செயற்படத்தொடங்குகிறார் நரேன். அந்தக்காலத்தில் செய்தது போலவே வாய்க்குள் எதையோ போடுகிறார், உடம்பைக் குலுக்கி ஒரு துள்ளுத் துள்ளுகிறார், 'என்னை செஞ்சிட்டு அவனச் செய்யுங்கடா' என்று சொல்லி அவர்களைச் சண்டைக்கு அழைக்கிறார்.
முகமூடியோடு வந்தவர்கள் கையில் கத்தியோடு ஒவ்வொருவராக நரேனிடம் வந்து அடிவாங்கிப் போகிறார்கள். அவர்கள் ஓடக்கூட இல்லை. இயல்பாக நடப்பதைவிடவும் மெதுவாகவே நடந்து போகிறார்கள். நால்வரும் தனித்தனியாக அடிவாங்கியபின் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்கிறார்கள்.
அவர்களில் ஒருவனையாவது பிடித்து முகமூடியைக் கழற்றி முகத்தைப் பார்ப்பதோ, ஏன் பிடித்துக் காவல்நிலையம் கொண்டுவருவதோ இயலாத காரியமன்று. 'திரைப்பட நாயகனை'த் தவித்த்து நூறுவீதமான காவல்துறையினரும் செய்திருக்கக் கூடியதும் அதுவேதான். ஆனால் பார்வையாளருக்குத் 'திருப்பத்தை'க் கொடுக்க நினைத்தோ என்னவோ மிஷ்கின் அப்படிச் செய்யவில்லை.
அதன்பிறகு நடப்பதுதான் நகைச்சுவையே. நரேனை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். காவல்துறையில் அவர் புகழ் பரவுகிறது. குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் சிறப்பாக நியமிக்கப்பட்ட பொன்வண்ணன் நரேனைத் தனக்குத் தரும்படி கேட்டுப் பெறுகிறார். அவர்களின் உடனடி வேலைத்திட்டம் என்னவென்றால் நரேனிடம் அடிவாங்கியவர்களைப் பிடிப்பது. அதுவும் எப்படி? நரேன் அடித்த சம்பவத்தில் ஒருவன் பேசினான் அல்லவா? அவனுடைய குரலை நரேனைக் கொண்டு அடையாளப் படுத்த வேண்டும். அதற்காக பொன்வண்ணன் நரேனையும் கூட்டிக்கொண்டு அலைகிறார்.
அடப்பாவிகளா! அண்டைக்கே ஒருத்தனின்ட முகமூடியைக் கழட்டிப் பாத்திருந்தா, ஏன் ஒருத்தனையாவது பிடிச்சுக் கொண்டந்திருந்தா இந்த ஆர்ப்பாட்டம் ஒண்டும் தேவையில்லையே? சரி, அது நரேனின் தவறாகவே இருக்கட்டும். ஆனால் அத்தவறு குறித்து ஒரு கேள்விகூட நரேனிடம் கேட்கப்படவில்லை. உண்மையில் நரேன் மீது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்; நரேன் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு 'உஷார் மடையனை' ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளியிருக்க எந்த நியாயமுமில்லை. குறைந்தபட்சம் பொன்வண்ணனாவது இது குறித்து நரேனைக் கடிந்திருக்கும் காட்சியொன்றை வைத்திருக்கலாம்.
'அரண்' என்ற திரைப்படத்திலும் இதுபோல் மிக அற்பத்தனமான காட்சியொன்றை வைத்திருப்பார்கள். நாட்டையே ஆபத்தில் தள்ளக்கூடிய முட்டாள்தனமொன்றை 'ஹீரோயிசம்' என்ற பேரில் நாயகன் செய்துவிட்டு தன்னோடு இருப்பவர்களைச் சாககக்கொடுத்துவிட்டு தன்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். அச்செயல் குறித்த கதையாடல், குற்றவுணர்வு எவையும் படத்தில் இல்லை. "அரண்" பற்றித் தனியாக எழுதிக் கிழிக்க வேண்டும்.
~~~~~~~~~~~~~~~ இப்படத்தில் உறுத்திய இன்னொரு காட்சி, கரும்புத்தோட்டத்தில் நரேனும் பிரசன்னாவும் சண்டைபிடிக்கும் காட்சி. நகைச்சுவைக்கென தனியாக ஒருகாட்சியும் வைக்கவில்லையென்ற காரணத்தாலோ என்னவொ அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~ இப்படி எழுதுவதால் இது தரமற்ற படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். மற்றவர்கள் எழுதிய பல விடயங்களில் எனக்கு உடன்பாடுண்டு. இன்னும் சொல்லப்போனா, நாங்கள் மினக்கெட்டு ஓரிடுகை எழுதிறதுகூட அது ஒரு வித்தியாசமான, முக்கியமான படமெண்டபடியாத்தான்.
அதுக்காக, இவ்விடுகையை வைத்து அது தரமான படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். அதுவேறு இதுவேறு. ;-)
கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது. ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன்.
அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன்.
படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.
ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து.
தமிழிலே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்புத்தான். (அண்மையில் பாடல்களேயில்லாமல் 'அசோகா' என்றொரு தமிழ்ப்படமும் வந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.)
படத்தின் நாயகன் ஒரு குடும்பத்தலைவன். வில்லன் என்று சொல்ல வேண்டுமானால் காவல்துறையைச் சொல்லலாம்.
படமானது முக்கியமான சிக்கலொன்றை கேள்விக்குட்படுத்துகிறது. அது 'விசாரணை முறை'. படத்தின் அடிநாதமே காவல்துறையினரின் விசாரணை முறைகள் மீதான கேள்விதான். அதை மையமாக வைத்துத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்டத்தில் நாயகன் சொல்வான்: "விசாரணை என்பது அறிவு தொடர்பானது. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதும் விசாரணை செய்வது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மிருகத்தனமாக எல்லோரையும் போட்டு அடித்து நொருக்குவதற்குப் பெயர் விசாரணை இல்லை. பலர்கூடி பலகோணங்களில் விசாரித்து, தகவல்கள் திரட்டி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் விசாரணை"
மிகமுக்கியமான விவாதமொன்றை எழுப்பியிருக்க வேண்டிய படமானது எதுவுமின்றி படுத்துவிட்டது. திரைப்படத்திலும் இவ்விடயத்தைச் சரியான முறையில் அழுத்தமாகச் சொன்னார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு. 'தமிழ்ப்படம்' பார்க்கிறோம் என்ற உணர்வைக் கழற்றிவைத்துவிடும் ஒருவசதி தேவையென்பதும் முக்கியம்.
இத்திரைப்படத்தில், எதைச்சொல்ல வந்தார்களோ, அதை மட்டும் சொல்கிறார்கள். தேவையற்ற அலட்டல்களில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காவல்துறையின் தலைமை அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகும் நாயகன் அங்குள்ளவர்களைப் பணயக் கைதியாக்குவதோடு படம் தொடங்குகிறது. தலைமை அலுவலரைக் கட்டிவைத்துவிட்டு தேவையானவர்களை அங்கு வரவழைத்து நாயகனே விசாரணை செய்கிறான். படம் முழுவதும் விசாரணைதான். விசாரிக்கப்படும் ஒவ்வொருவரினதும் வாக்குமூலங்கள் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன. அப்படி என்னதான் விசாரிக்கிறான்?
குற்றவாளி ஒருவனைப்பற்றி விசாரிப்பதற்காக கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பிரித்துவைத்து விசாரிக்கிறார்கள். கணவனை மிகுந்த சித்திரவதை செய்கிறார்கள். மறுநாள் அவனை விடுவிக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மனைவி குற்றவாளியுடன் ஓடிவிட்டாள் என காவல்துறை தரப்பிற் சொல்லப்படுகிறது. என்ன நடந்ததென்று எதுவுமே தெரியாதநிலையில்தான் நாயகன் தலைமை அலுவலரின் முன் தனது விசாரணையைத் தொடங்குகிறான்.
இறுதியில் என்ன நடந்ததென்று தெளிவாகிறது. அதற்குள் அவ்வீட்டை சிறப்புப்படை சுற்றிவளைத்துவிடுகிறது. நாயகன் காவற்றுறை அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவற்றுள் முதன்மையானது எல்லாக் காவல்நிலையங்களிலும் வீடியோ கண்காணிப்பு இருக்க வேண்டுமென்பது.
கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்று தெரிவதற்கிடையில் சிறப்புப்படை படத்தை முடித்துவிடுகிறது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விமர்சனங்கள் இல்லாமலில்லை. விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையோடு சில காட்சிப்படுத்தல்கள் உள்ளதாகப் படுகிறது. நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன. இருந்தாலும் இறுதிவரை படத்தின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. திரைக்கதை ஓட்டத்தின்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.
நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும்.
படத்திலிருக்கும் வேறோர் அபத்தம் என்னவென்றால் ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்? ஆனாலும் அந்தக்காட்சி எந்தவிதத்திலும் உறுத்தாத அளவுக்கு திரைக்கதைப் போக்கு இருந்தது என்பது உண்மைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது. அது முரணாக இல்லையா? படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம். (அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)
ஆனால் காட்சிகளில் இருந்து நானொன்றை உணர்ந்துகொண்டேன். அதாவது நாயகனின் விசாரணையில் காவல்துறையினர் யாருமே உண்மை சொல்லவில்லை. எல்லோருமே தாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த அல்லது தான் தப்புவதற்காக அந்தநேரத்தில் தோன்றிய கதையைத்தான் சொல்கிறார்கள். கட்டித் தொங்கவிட்டு அடித்தும்கூட காவல்நிலையப் பொறுப்பதிகாரி தான் தயாரித்து வைத்திருந்த கதையை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்தான். உண்மை படிப்படியாக வெளிவருவது ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் முரண்பட்ட கதைகளிலிருந்துதான். அத்தோடு சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியின் துணையும் சேர்ந்து முழுக்கதையும் வெளிவருகிறது.
ஆக, அடித்துத் துன்புறுத்தினாலும் சரியான உண்மை வெளிவருவதற்கு உத்தரவாதமில்லையென்பதை நாயகன் காவல்துறையினரைத் துன்புறுத்துவதன் ஊடாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இதை பத்திரிகையாளனைக் கொண்டு கேட்கவைத்து நாயகனைக் கொண்டு பதில் கொடுத்திருக்கலாம். (பார்ப்பது தமிழ்ப்படமாயிற்றே. இப்படி வசனங்களை வைத்துப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலைமையிலிருக்கிறோம். நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை 'ஜனங்களின் கலைஞன்' என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~ தமிழ்ப்படங்களை விட்டு வெளியில் சென்றால் திரைப்படங்களுக்கான வகைப்படுத்தல்கள் பலவுள்ளன. Action, Adventure, Comedy, Documentary, Drama, Horror, Romance, SciFi, Fantasy Thriller என்று பலதரப்பட்ட வகைப்படுத்தல்களுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் எந்தத் தமிழ்ப் படத்தையெடுத்தாலும் மேற்படி வகைகளுக்குள் தனித்தனியாக அடக்கமுடியாது. 'மசாலா' என்ற வகைக்குள் மட்டுமே அடக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அனைத்து வகைகளையும் கலந்துகட்டிய ஒரு பொட்டலாம்தான் மசாலா. (தமிழில் வந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் சிலவற்றை மட்டும் விதிவிலக்காக 'நகைச்சுவை' என்ற வகைக்குள் அடக்கலாம்.) மசாலா என்பதற்கு வெளியில் தனியொரு வகைப்படுத்தலுக்குள் அடக்கக்கூடியதாக மிக அருந்தலாக வந்துள்ள தமிழ்ப்படங்களில் 'கேள்விக்குறி'யும் ஒன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
காவல்துறையின் அராஜகப் போக்கு, குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது, பெண்களை நடத்தும் முறை என்பன நாளாந்தம் நாம் அனுபவித்து வரும் நிகழ்வுகளே. அந்நிகழ்வுகளையும் அவற்றால் பாதிக்கப்படும் அப்பாவிகளையும் அவர்களின் பாதிப்புக்களையும் சரியாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இப்படத்தில்தான் இசையமைப்பாளருக்கான பணி சரியாகப் பொருந்திவரும். தமிழ்த்திரைப்படங்களில் இசையமைப்பவர்களுக்கு இருக்கும் முதன்மை நோக்கம் நாலு பாடல்களை வெற்றிகரமாக இசையமைத்துவிட்டால் சரி. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திரைப்பட விமர்சனங்கள்கூட இசையமைப்பைப் பற்றிய குறிப்பில் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவதோடு சரி. உண்மையில் இசையமைப்பென்பது படத்துக்கான பின்னணி இசைதான். அதில் கவனம் செலுத்த ஏதுவான சூழ்நிலையில் அதிகம் படங்கள் வருவதில்லை. யாராவது மிக நுணுக்கமாக பின்னணி இசை கோர்த்திருந்தாலும் அதுபற்றிப் பேசப்படுவதில்லை. பாடல்கள் "மட்டுமே" இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் காரணியாகவுள்ளன.
இந்நிலையில் ஒரேயொரு பாடலை மட்டுமே கொண்ட இப்படத்தில்தான் இசையமைப்பாளரின் தேவை சரிவர உணரப்பட வாய்ப்புண்டு. அவ்வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் திருப்திகரமாகவே செய்துள்ளார் எனச் சொல்லலாம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறுதியாக, அண்மையில் வந்தவற்றுள் சிறந்த படமாக எனக்குத் தெரியும் தமிழ்ப்படமிது. அதிகம் கவனிப்படாமல் போய்விட்டது.
சிறுசிறு விமர்சனங்களைத் தாண்டி இப்படியொரு முயற்சி எடுத்ததற்காகவே பாராட்டப்படவேண்டிய துணிச்சல் இது. அந்தச் சிறுசிறு விமர்சனங்கள்கூட இப்போதிருக்கும் தமிழ்ச்சினிமா ஓட்டத்தில் பொருட்படுத்தத் தேவையற்றவை.
~~~~~~~~~~~~~~~~~~~~
படத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்.
படத்தின் நாயகன் ஜெய்லானி தான் இப்படத்தின் இயக்குநரும் என அறிகிறேன். ஜெய்லானிக்கு உளமார்ந்த வாழ்த்து.
ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?
தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன. அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் நா.கண்ணன் சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள். திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார். நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.
இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.
நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.
தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் 'அம்மா' பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து. உண்மைதான்.
தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென 'மங்களகரமாக' வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா. எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது? கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் 'அதுவொரு கனாக்காலத்தில்' தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் 'பொல்லாதவனில்' டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.
முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.
ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.
எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா? இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.
கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)
என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.
இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் 'மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?' என்று ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள். அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.
பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~ அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.
முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.
சுரேஸ் கண்ணன் சொல்லும் "டெக்னிகல்" விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.
மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.
ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். 'மார்கழியில் குளித்துப்பார்' என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.
விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் 'கோப்பி வித் அனு' நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். 'எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?' என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், 'பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்' என்று.
மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார். இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.
ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.
இவற்றில் இரண்டாவதும் மூன்றாவதும் இப்படத்தில் இல்லையென்பதால் எனக்குப் பிடித்திருந்தது. அதற்காக படத்தில் நகைச்சுவையே இல்லையென முடிவுகட்டிவிடாதீர்கள். நான் சொல்வது, தனியே நகைச்சுவைக்கென ஒருவரையோ ஒரு கும்பலையோ நடிக்கவிட்டு வரும் காட்சிகளை. வடிவேலுவோ விவேக்கோ இன்னபிற நகைச்சுவைக்கென இருக்கும் நடிகர்களோ அவர்களின் பரிவாரங்களோ இப்படத்தில் இல்லை. கதைக்கான தேவையைவிட்டு நகைச்சுவைக்கென தனியான ஒழுக்கெதுவும் இப்படத்திலில்லை. எனவே இப்படம் பிடித்திருக்கிறது.
ஒரேயொரு சண்டைக்காட்சி வருகிறது, அதுகூட நாயகன் பத்துப்பேரைப் பந்தாடுவதாக காட்சிப்படுத்தப்படவில்லை. தனது ஆட்டோவைக் களவெடுத்துச் செல்வதைத் தடுத்துச் சண்டைபோடுகிறார் நாயகன். நாலைந்து பேருக்கு நாலைந்து அடியோடு சரி.
ஆ.. ஊ.. வென்று வாய்கிழிய வசனம்பேசும் நாயகனில்லை. பார்வையாளனுக்கான உபதேசங்கள் இல்லை.
இப்படி சில 'இல்லாமை'களுக்காக இப்படம் எனக்குப் பிடித்திருக்கிறது.
வழமையாக படங்களில் எரிச்சலேற்படுத்தும் பாடற்காட்சிகள் கூட இப்படத்தில் எனக்கு எரிச்சலேற்படுத்தவில்லை. அந்த ஒரேயொரு காதற்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். மற்றவை படத்தோடும் கதையோடும் இயல்பாகப் பொருந்துவதாகத் தோன்றுகின்றன.
படத்தில் ஆட்டோ ஓட்டப்போட்டி நடத்துகிறார்கள். படத்தின் மையக் கருவே அதுதான். படத்தில் வரும் முதலாவது போட்டியில் நாயகன் வெல்கிறார். அதன்பிறகு தோற்கிறார், தோற்கிறார், தோற்றுக்கொண்டேயிருக்கிறார். வழமையாக முதலில் நாயகன் தோற்பார், பிறகு வெல்வார். இங்கு தலைகீழாக நடக்கிறது.
நாயகனும் அவரது நண்பனும் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். கையிலிருப்பது, யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்திருந்த 'சீத்தா' எனுமொரு ஆட்டோ. யாரையும் தொடக்கூட விடுவதில்லை. அதைப் பந்தயமாக வைத்து இறுதிப் போட்டி நடக்கவிருக்கிறது. ரஜனி ஒத்தை ரூபாயை வைத்து எல்லாக் கோடிகளையும் மீட்பது போல நாயகனும் அவனது நண்பனும் இதைவைத்தே இழந்த எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களோ என்று நினைத்துப் பயந்துகொண்டிருந்தேன். அதற்குரியமாதிரி பந்தயத்தில் நாயகன் வென்றால் இவர்கள் இழந்த அனைத்தையும் மீளத்தரவேண்டுமென்பதே பந்தயமாகவும் இருந்தது.
அட! அந்த இறுதிப்போட்டியிற்கூட நாயகனும் தோழனும் தோற்றுப்போகிறார்கள். இப்பிடியொரு அதிர்ச்சியைத் தமிழ்ச்சினிமாவில் - அதுவும் முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் - 'ஆக்ஷன் ஹீரோ' க்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்யா நடிக்கும் படத்தில் - எதிர்ப்பார்க்கவில்லை.
அதிஷ்டவசமாகக் கிடைத்த இரண்டு கறுப்பு முத்துக்கள் மூலம் நிறையப் பணம் கிடைத்து ஆர்யாவும் நண்பனும் வாழ்க்கையில் நிலைபெறுகிறார்கள் என்று காட்டி படத்தை முடிக்கிறார்கள். திருப்பவும் ஓட்டப்போட்டிக்கு வருவதாகக் காட்டவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ படத்தில் பிடித்த பாத்திரம்: Sun Of Gun. மனிதர் நன்றாக நடித்திருக்கிறார்.
பிடித்த காட்சி: பூஜாவை, தன்னுடன் படம்பார்க்க திரையரங்கு அழைத்துச் செல்வதற்காக ஆர்யா போடும் தூண்டில். பூஜாவின் பிரியாணியில் கதையைத் தொடங்கி எதிராளிக்குச் சந்தேகம் வராதமாதிரி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே திரையரங்குக்குப் போக சம்மதிக்கவைக்கும் அந்தக்காட்சியை மிகவும் இரசித்தேன்.
** இப்படத்தில் நாயகனின் நண்பனாக வரும் 'பிகிலு' பல படங்களில் ஆக்ரோசமான வில்லனாக நடித்திருக்கிறார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். மும்பை எக்ஸ்பிரசில் பசுபதியைப் பார்த்த ஞாபகம் வந்தது.
*** படத்தில் கதையென்று எதுவுமில்லையென்று சிலர் சொன்னார்கள். உண்மைபோற்றான் தெரிகிறது. கதையென்று தனியே எழுதிவிட முடியாது. நாலைந்து சிறுகதைகளை ஒன்றாக்கி அவற்றுள் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி ஒரு படமெடுத்ததுபோல் இருக்கிறது. ஆனால் இரசிக்கும்படியான திரைக்கதையமைப்பு.
அவனவன் ஒரேகதையை வைத்துப் பத்துப்படம் பண்ணும்போது, இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பெண்ணென்று அறிகிறேன். வாழ்த்து. ஜனரஞ்சகமான படங்களுள் பெண்களின் வருகை களிப்பூட்டுகிறது (கண்ணாமூச்சி ஏனடா இன்னோர் எடுத்துக்காட்டு).
மண் திரைப்படம் பற்றி ஒருபக்கம் ஆகா ஓகோ என்றும் இன்னொரு பக்கம் திட்டித் தீர்த்தும் பலவாறான கருத்துக்கள் எழுதப்பட்ட நிலையில் நானும் எனக்குப்பட்டதைச் சொல்வோமென்று எழுதியது இப்பதிவு.
ஈழத்துத் தமிழ்த்திரைப்படமாகப் பலராலும் கருதப்படும் 'மண்' படத்தின் கதை ஈழத்தின் வன்னியை மையமாக வைத்து நடக்கிறது. பெரியளவில் பேசப்படாமற்போன, தற்போது பலராற் பேசத் தயங்கப்படும் களமொன்றை திரைக்கதை கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை, அக்களமான சாதிப்பிரச்சினை, ஒடுக்குமுறை என்பவற்றை படம் ஓரளவு வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்தளவில் பாராட்டும் வரவேற்புமுண்டு. பாராட்டப்பட வேண்டி அம்சங்களிருக்கும் அதேநேரம், ஏதோ புரட்சிகரமான, வித்தியாசமான படம் என்று தூக்கிவைத்து ஆடுமளவுக்கு இல்லாமல், வழமையான தமிழ்ச்சினிமா மாசாலக்கள் இரண்டொன்றைத் தூவி சிலசந்தர்ப்பங்களில் வெகுசாதாரண படமாகத் தோன்றும்படி வந்துள்ளதுதான் மண். அவை எவையென்று பின்னர் பார்ப்போம்.
முதலில் இதுவோர் ஈழத்துத் தமிழ்ப்படம் என்றளவில்தான் நானும் கருதிக்கொண்டிருந்தேன். அதற்கான கூறுகள் நிறையவேயுள்ளன. கதைக்களம் நடக்கும் கனகராயன்குளப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லையென்றாலும் அம்மண்ணை, மண்வாசனையை படத்தில் கொண்டுவருகிறார்கள். குளக்கட்டுப் பாதைகள், பற்றைகள், வயல்கள், முதிரைக் கட்டைகள் நட்டு முள்ளுக்கம்பி வரிந்த வயல்வேலிகள், தென்னந்தோப்புக்கள் என்று காட்சிகள் இயல்பாகவே கதைக்களத்துக்குப் பொருந்துகின்றன. படத்தில் அவ்வப்போது வரும், குளக்கரையில் தாழ்வாக விரிந்த பெருங்கிளைகளுடன் விசாலமாக வளர்ந்த மருதமரங்கள் எனக்குக் கிளர்ச்சியூட்டின. ஈழத்தவரின் பேச்சுவழக்கில் படம் எடுக்கிறோமென்ற பேரில் சிலர் நடத்திய கூத்துப்போலில்லாமல் கதைக்களத்துக்குரிய பேச்சுவழக்கு பெருமளவு சரியாகவே பொருந்துகிறது. ஆனால் இடையிடையே தோன்றும் - மேடைநாடகத்தில் கதைப்பதுபோன்ற இழுவையுடன் கூடிய பேச்சுவழக்கைக் குறைத்திருக்கலாம்.
பெற்றோர் கொடுக்கும் தண்டனை முறைகள் - குறிப்பாக கண்ணில் மிளகாய்த்தூள் தூவுவது குறிப்பிட்டுச சொல்லவேண்டிய காட்சிகள். சின்னச்சின்ன விசயங்கள் பலவற்றில் நல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியே பச்சைமிளகாய் தின்னவிடும் தண்டனையையும் ஒரு காட்சியாக்கியிருக்கலாம்.
பூசி மெழுகிக்கொண்டு வரும் கதாநாயகர், நாயகி, பிறபாத்திரங்கள் என்றில்லாமல் மண்ணோடு ஒட்டிய பாத்திரங்கள் நன்றாகப் பொருந்துகின்றன. இதுவரை பார்த்த தமிழ்ப்பட நாயகிகளில் அதிகம் கவர்ந்தவர் இந்த இலட்சுமிதான். ஆலங்குளம், கரப்புக்குத்தி, குறிசுட்டகுளம்... என்றுவரும் சுற்றுப்புற ஊர்களின் பெயர்களோடு கதைக்களம் மிகமிக உண்மையாக இருக்கிறது. விடுமுறைநாட்களில் வயற்காவலுக்கும் ஆடுமாடு மேய்க்கவும் மாணவர்கள் (முதலாளிகளின் மகன்மாரும்) போகவேண்டிய யதார்த்தம் நன்றாக வந்திருக்கிறது.
இவைகள் சரியாக அமைந்தமைக்கு திரைக்கதையும் இயக்கமும் ஈழத்தவரே என்பதும் முக்கிய காரணம். கதைக்களத்தையும் மக்களையும் 'கதை நடந்த காலப்பகுதியில்' நன்கறிந்தவரென்பதால் இப்படி வந்தது. [இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். குறிப்பாக வன்னியில் இன்றியமையாமற் போய்விட்ட ஆடுமாடுகளைப் பெருமளவில் காணவேயில்லை. ஒருமுறை பட்டியொன்று காட்டப்படுகிறது. மாடுகள் மேயாத, படுத்துக்கிடந்து தொல்லைப்படுத்தாத வன்னி வீதிகள் சற்று இடறுகின்றன. அதேபோல் நாயகன் குறும்படமெடுக்க வந்த நிகழ்காலமும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. வீதிப்போக்குவரத்தில் நிற்கும் காவற்றுறையையோ, அங்கிங்கு ஓடித்திரியும் புலிகளின் வாகனங்களையோ காணவில்லை. இப்படத்தை வன்னியில் எடுக்க முடிந்திருந்தால் இவற்றைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதைக் காரணமாகச் சொல்லிக்கொள்ளலாம். எனினும் இது 'இந்தியப் படமாக' திரையிடப்பட்டதும் காரணமென்றுதான் தோன்றுகிறது]
இப்படத்தின் பின்னணி பற்றிய ஒரு சம்பவம் அண்மையில் படிக்க நேர்ந்தது. முதலில் திட்டமிடப்பட்டதிலிருந்து மாற்றங்களுடன்தான் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் திரையிட வேண்டுமென்பதற்காக சிலகாட்சிகள் (தமிழீழக் காவற்றுறை சம்பந்தப்பட்ட காட்சியும் அதிலொன்று) நீக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு படம் இந்திய தணிக்கைக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டு வெளியிடப்பட்டது என்ற தகவலே அது. யதார்த்தத்தை மீறியதாகத் தெரியும் அக்கொலைக் காட்சிக்கு நீக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட காட்சிகளில் பதில் இருந்திருக்கக் கூடும். ஆக இந்தியத் தணிக்கைக் குழுவுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்பட்ட இப்படம் யாருக்குரிய திரைப்படம் என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. 'ஈழத்துத் திரைப்படம்' என்று ஆவலோடிருந்த எனக்கு இது ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. சிலர், ஆணிவேரையே ஈழத்துத் திரைப்படமென்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
_______________________________________ இனி இப்படத்தை சராசரி தமிழ்ப்படமாகக் கருத வைப்பவற்றில் இரண்டொரு கூறுகளைப் பார்ப்போம்.
*** படம் தொடங்கி முக்கால் மணிநேரமாகியும் எதுவும் வரவில்லையென்று ஆச்சரியப்பட்டபோது அடுத்த நிமிடமே வந்தது தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடான பாடற்காட்சி. 'ஒரு படமெடுத்தால் கட்டாயம் சில பாட்டுக்களும் ஆட்டங்களும் இருக்கவேணும்; அதிலயும் கட்டாயம் ஒரு காதல் பாட்டு வேணும்' என்ற எழுதாத விதி இங்கும் பின்பற்றப்படுகிறது. இரண்டுபேர் காதலிக்கிறார்கள் என்பதைச் சொல்ல எங்கள் இயக்குனர்களுக்கு இருக்கும் மிகச்சுலபமான வழியாக ஒரு பாட்டுக்காட்சியைத்தான் கருதுகிறார்கள். அப்படித்தான் 'மண்' இயக்குனர் புதியவனும் நினைத்தாரோ என்னவோ?
*** BBQ பாட்டும் நடனமும்: வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கோ இன்னபிற தேவைக்கோ தாயகம் வருபவர்கள் அங்கே குடிப்பதோ கூத்தாடுவதோ இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. வெளிநாட்டுச் சரக்கில் நாலைந்து போத்தல்கள் கொண்டுவந்து (அதற்கு வரிகட்டாமல் வருவதற்கு இவர்கள் படும்பாடு!) தங்கள் ஆடம்பரங்களை மண்ணின் மைந்தர்களுக்குக் காட்டமாட்டார்கள் என்றும் இல்லை. சொல்லப்போனால் சிலர் தாயகம் வருவதே அதற்குத்தான். வெளிநாட்டில் வெயிற்காலத்தில் எப்படி உடுத்துவார்களோ அதைவிடவும் குறைவாக உடுத்தி எங்கள் பெண்கள் வன்னியர்களுக்கு பாஸ் காட்டுவார்களென்பதையும் மறைப்பதற்கில்லை.
ஆனால் மண் படத்தில் இடம்பெற்ற இப்பாடற்காட்சி இப்படியான இயல்பைச் சொல்லும் நோக்கத்தின் பாற்பட்டதன்று. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் சொந்தங்கள், தெரிந்தவர்களுக்கு விருந்தொன்று வைக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நோக்கமுமன்று. அல்லது பாடல்வரிகள் சொல்வதைப் போன்று வன்னிமக்களின் வாழ்வைச் சொல்வதற்காகப் புகுத்தப்பட்ட பாடற்காட்சியுமன்று. இயக்குனருக்கு ஒரு ஆசையும் தேவையும் தெரிகிறது.. ஒரு நடனக்குழுவை வைத்து வண்டியையும் குண்டியையும் ஆட்டி வழமையான தமிழ்ச்சினிமாப் பாணியில் ஒரு பாடற்காட்சி தேவைப்படுகிறது. இன்றைய மொழியில் ஒரு 'குத்துப்பாட்டு'. 'உங்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை'யென்பதை கோடம்பாக்கத்துக்கு நிரூபிக்கும் இலட்சியம் இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கென்று கோடம்பாக்கத்திலிருந்தே நடன இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டுத்தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்குச் சம்பந்தமில்லாமல், படம்பார்க்க வருபவரை கிளுகிளுப்பூட்டும் நோக்கத்தை மட்டும் கொண்டு சினிமாப் பொதுப்புத்தியோடு புகுத்தப்பட்ட பாடற்காட்சியாகவே அது தெரிகிறது. என்ன மாற்றமென்றால், கோடம்பாக்கம் கமராவைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு போகும்; இங்கு மாறி நடந்திருக்கிறது.
*** படத்தில் வரும் காதலை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன், படம் பார்த்த யாருக்குமே அது முடியாத விசயம். நாயகன் உண்மையில் காதலித்தானா இல்லையா என்பது தெளிவில்லை. முன்படத்தி்ல் வரும் காட்சிகள், அவன் மனமொத்துக் காதலிப்பதாகவே வருகிறது. காதலியை இழிவாய்ப் பேசியதற்காக நண்பனோடு அடிபடுகிறான். ஆனால் பின்னர் வரும் காட்சியில் அனைத்தும் திட்டமிட்டுச் செய்தாகக் காட்டப்படுகிறது. பொன்ராசுவைக் கொலை செய்யும் காட்சியின்பின் திரையில் வரும் வசனம்தான் இயக்குனர் படம்மூலம் சொல்ல வந்த கருத்தென்றுபடுகிறது. அந்தக் கருத்தை நியாயப்படுத்த வேண்டும்; கொலையாளியை நியாயப்படுத்த வேண்டும்; எனவே பொன்ராசுவை வில்லனாக்க வேண்டும். அல்லாதபட்சத்தில் சந்தர்ப்பவசத்தால், சமூகத்தின் தவறால் வெளிநாடு போகவேண்டிவந்த ஓர் அப்பாவியைக் கொலை செய்துவிட்டு புரட்சிவசனத்தைக் கருத்தாய்ச்சொல்லும் படத்தின் அபத்தம் உறைக்கும். இவை அனைத்துக்காகவும் படத்தின் இடையில் அடித்த குத்துக்கரணம்தான், பொன்ராசு எல்லாம் திட்டமிட்டே லட்சுமியை ஏமாற்றினான் என்ற கதை. இது பட இயக்கத்தில், திரைக்கதையில் மிகப்பெரிய பலவீனமாகவே எனக்குத் தோன்றுகிறது.
தகவற்பிழைகள், தர்க்கப்பிழைகள் என்பனவும் ஆங்காங்கே வருகின்றன. படத்தில், 'காயாக்கன்னி' என்ற பேரில் நாயகனால் நாயகிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது ஒருமரம். 'இந்த மரத்தைப்போல உறுதியாகவும் கன்னியாகவும் எங்கட காதல் இருக்க வேணும்' என்றும் சொல்லப்படுகிறது. அதேமரத்தில் நாயகனைக் கட்டிவைத்துவிட்டு மகன்(கொலையாளி) பேசும்போது 'விளாத்தி மரத்தைக் காட்டி என்ன சொன்னனி? வைரமான மரமோ?' என்று கேட்கிறார். காயாக்கன்னி விளாத்தியானது விளங்கவில்லை.
குறும்படமெடுக்க தாயகம் திரும்பிவரும் நாயகனுக்குச் சற்று இளைத்த தோற்றத்தைக் காட்டியிருக்கலாம். கதைப்படி குறைந்தபட்சம் முப்பத்தைந்து வயது கொண்டவர். பெண்கள் எப்படியென்றாலும், பொதுவாக புலம்பெயர்ந்த எங்கட ஆண் சிங்கங்கள் விரைவில் வயக்கெட்டுப்போவார்கள் என்றுதான் நினைக்கிறேன் ;-).
அடுத்து படத்தில் வரும் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள்: கொலையாளி போராளியா இல்லையா என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. ஆனால் அதைவைத்தே சப்பைக்கட்டு கட்ட முடியாது. அவனும் நண்பனும் 'ஜெயசிக்குறு நேரத்தில் ஆமிக் கொமாண்டர் இருந்த வீடு' பற்றிக் கதைக்கிறார்கள். அதைவிட குறும்படம் எடுக்க வந்தவருக்கு உதவிசெய்யவென்று நியமிக்கப்பட்டவர்கள்தாம் அந்த இருவரும். மேலும் பொன்ராசு பற்றி பழைய கோப்புக்கள் பார்த்து விவரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.
படத்தில் காட்டப்படும் இயக்கம் விடுதலைப்புலிகளைச் சுட்டவில்லையென்பதும் வெறும் சப்பைக்கட்டுத்தான். தெளிவாகவே காலமும் இடமும் சொல்லப்படுகிறது. யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் கனகராயன்குளம் புலிகளின் நிர்வாகப்பகுதிதான். அங்கிருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் புலிகள் மட்டுமே.
BBQ பாட்டு முடியும் நேரத்தில் பொன்ராசுவைக் காணவரும் இயக்கத் தளபதிக்கிருக்கும் பாதுகாப்பு, குறைந்தபட்சம் ஒரு கேணல் தரத்தைக் காட்டுகிறது. உடனேயே அடையாளம் கண்டது ஒருபுறமிருக்க, அடுத்தகணமே பதினெட்டு வருசத்துக்கு முன்பு பழகியதுபோலவே 'என்னடா மச்சான்' என்று பேசத்தொடங்குவதும் இயல்பாகவே இல்லை.
கனகரயான்குளத்தில் கொலையாளி கைத்தொலைபேசியில் கதைக்கிறார். மறுமுனையும் வன்னிக்குள்தான் இருக்கிறது. வோக்கி ரோக்கியில் கதைப்பது போல் எடுத்திருக்க வேண்டிய காட்சியது.
கதையில் றிவோல்வர் வருகிறது. எங்காவது ஆவணமாகப் பத்திரப்படுத்தியிருந்ததைத் தூக்கிவந்துவிட்டார்களோ? அல்லது உண்மையில் புலிகள் தவிர்ந்த வேறு யாராவதுதான் கொலையாளிகளோ தெரியவில்லை. புலிகள்தான் என்று இயக்குனர் நினைத்திருந்தால் அவர்மனதில் இருக்கும் புலிகள் இயக்கம் எண்பதுகளுக்குப்பின் Update ஆகவில்லை போலுள்ளது.
_________________________________________ மேற்குறிப்பிட்டவற்றில் நிறைய விதயங்கள் பலருக்கு பொருட்படுத்தத் தேவைற்றவையாகவே இருக்கும். அவரவர் பார்க்கும் பார்வையில் மாறுபடும். என்வரையில் மணிரத்தினமோ புகழேந்தியோ எடுக்கும் படத்துக்கும் புதியவன் எடுக்கும் படத்துக்குமிடையில் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறேன். முன்னவற்றை ஒரு சினிமா என்றளவில் பார்ப்பதோடு பின்னதற்கு முட்டையில் மயிர்பிடுங்கிப் பார்ப்பேன்.
இந்தியர் ஒருவர் 'மண்' பார்ப்பது வேறு; நான் பார்ப்பதும் எதிர்பார்ப்பதும் வேறு. அதுபோல் இந்தியர்களுக்கு 'மண்' காட்டுவது வேறு; எங்களுக்குக் காட்டப்பட வேண்டியது வேறு.
முடிவாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த இறுக்கமான பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு அதைப்பற்றிப் பேசப்புறப்பட்ட(தாக நானும் பலரும் கருதும்) படம், சில தவறுகளாலும் இலக்கற்ற தன்மையாலும் வழமையான சினிமாப்படமாகிப்போனது.
_________________________________________ இந்தியாவில் ஜனரஞ்சக அந்தஸ்துடன் ஓடிய ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன். பயணத்தில் தொடர்ந்து முன்னேற வாழ்த்து.
_________________________________________ ரெறறிஸ்ட் படத்தின் பின்னானவை போலவே, கொலையாளி சரணடையாத பட்சத்தில் 'மண்' படத்தின் தொடர்ச்சியாக நடப்பவை குறித்தும் திகிலூட்டும் படமொன்று எடுக்கலாம். கொலையாளி எப்பாடுபட்டாவது வன்னிக்குள்ளிருந்து தப்பவேண்டிய சூழ்நிலையில் நடப்பவை நிச்சயம் திகிலூட்டுபவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின் கொலை வன்னி நிர்வாகம்மீது ஏற்படுத்தும் அரசியல் பிரச்சினை, நிர்வாக நற்பெயர் இழுக்கு என்பவையும் சேர்ந்துகொள்ள நடக்கும் துரிதகதி விசாரணைகளும் தேடுதல்களும், பெரும்பாலும் முடிவில் நிகழப்போகும் இன்னொரு கொலையும் என்று ஒரு விறுவிறுப்புப் படம் பண்ணலாம்.
_______________________________ எரிமலை இதழில் வெளிவந்த மு.பொ. அவர்கள் எழுதிய கட்டுரை. எழுதப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டாலும் மிகமுக்கியமான கட்டுரையென்பதால் பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது. இந்நேரத்தில் படத்துக்கான தடை விலக்கப்பட்டிருக்கக் கூடும். _______________________________
அண்மைக்காலத்தில் கலை, இலக்கியம், சினிமா அழகியல் என்பவற்றுக்கு அப்பால் பெரும் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது பிரபல இளம் சிங்கள திரைப்படக் கலைஞர் அசோகா ஹந்தகமவுடைய தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமான 'அக்ஷரய' (அக்கினி எழுத்து)தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய நம்மவர்களுக்கு ஹந்தகமவின் 'அக்ஷர'யவை விளங்கிக் கொள்வது கடினம், காரணம், சண்டை, ஆட்டம், பாட்டு,காதல் என்கிற வாய்ப்பாட்டுக்குள் இயங்கும் தமிழ்ச்சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயர்ந்த திரைக்கலை ஆக்கமான இது, நம்மவரின் 'ரேஸ்ட்' க்குள் அகப்படப்போவதில்லை.
அப்படியானால் இத்திரைப்படம் எதற்காக பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது? இதை விளக்குவதற்குமுன் சிங்கள சீரியஸ்ஸான சினிமா, இன்று எந்நிலையில் உள்ளது என்பது பற்றித்தெரிந்துகொள்ளுதல் அவசியம். இந்தியச் சினிமா உலகில் சீரியஸ்ஸான திரை ஆக்கங்களுக்கு சத்திய ஜித்ராய் எவ்வாறு வழிகாட்டியாய் இருந்தாரோ அவ்வாறே உயர்ந்த சிங்களச் - சினிமாவுக்கு லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முக்கியமானவர். அவருக்குப்பின் சிங்களத்திரையுலகில் பல இளங்கலைஞர்கள் தோன்றி பலவகையான பரிசோதனைகளைச் செய்யத் தலைப்பட்டனர். அதனால் சிங்களத் திரையுலகில் உலகத் தரம்மிக்க திரை ஆக்கங்கள் தோன்றவாரம்பித்தன.
லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் 'ரேகாவ' 'கம்பெரலிய' ஆகிய (கிராமப் பிறழ்வு) திரைப்படங்களின் வருகை சிங்களச் சினிமாவில் ஒரு உடைப்பை ஏற்படுத்திற்று. அதற்குப்பின் வந்த அவருடைய 'நிதானய' இன்னொரு மைல்கல். இதற்குபின் மளமளவென பல சிறந்த திரை ஆக்கங்கள் வரத்தொடங்கின. அதற்குக் காரணம் இளஞ்சந்ததியினர் மத்தியிலிருந்து துடிப்புள்ள இளங்கலைஞர்கள் தோன்ற ஆரம்பித்ததே. தர்மசிறி பண்டாரநாயக்கா, தர்மசேன பத்திராஜா, வசந்த லுபேசேகர, பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம, சோமரத்ன திசானாயக்க போன்றோரின் திரைப்படங்கள் சிங்களச் சினிமா உலகில் சூறாவளி ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. வசந்த ஒபேசேகராவின் 'தீர்த்த யாத்ரா' தர்மசேனபத்திராஜாவின் மத்துயம் தவச (எதிர்காலத்தில் ஒருநாள்) அசோகா ஹந்தகமவின் சந்தகின்னரி (நிலவுப்பெண்) பிரசன்ன விதானகேயின் 'புரசந்தகலுவற' (ஓர் புரணையில் மரணம்) தர்மசிறிபண்டாநாயக்காவின் 'பவதுக்க' ஆகிய திரைப்படங்கள் பிரபலமானவை மட்டுமல்ல நமது தமிழ்சினிமா உலகத்தவரால் எட்டமுடியாத தரத்தை உடையவை. (மேலே குறிப்பிட்ட அனைத்துப்படங்களும் சென்ற வருடம். தர்மசிறிபண்டாரநாயக்காவின் 'திரிகோண' அமைப்பினால் 'சினியாத்ரா' என்ற பேரில் (திரை உலா) வட கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையிடப்பட்டதோடு இவை பற்றிய கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டன) இந்தப் பின்னணியில்தான பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் அசோக ஹந்தகமவின் 'அக்ஷரய' வைப் பார்க்க வேண்டும். ஹந்தகம இளைஞர், ஒரு கணிதப்பட்டதாரி, வங்கியொன்றில் வேலைபார்க்கும் இவர், ஏற்கனவே தயாரித்த திரைப்படங்கள் மூலம் இலங்கையிலும் வெளியிலும் புகழ்பெற்றவர். உள்நாட்டு போரினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிங்களக்கிராம மக்கள் பற்றியும் தமிழருக்கெதிரான இனவாதத்தில் மூழ்கியுள்ள பௌத்த சிங்களக் கிராமத்தின் தூய்மை பற்றியும் எந்த அச்சமும் இன்றி அலசிச் செல்லும் போக்கையும் இவரது திரைப்படங்கள் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவர் தயாரித்த 'சந்த கின்னேரி' (நிலவுப்பெண்) 1994ல் பல விருதுகளைப்பெற்றது. 'இது என்னுடைய சந்திரன்' ('மே மகே சந்தாய்) என்ற இரண்டாவது படம், யுத்தகளத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த போது, ராணுவவீரனொருவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணுக்கும் அந்த ராணுவக்காரனுக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றியது இக்கதை. இதுவும் இவருக்கு பலவிருதுகளைப் பெற்றுக் கொடுத்ததோடு வெளியுலகிலும் இவர் பிரபலமாகக்காரணமாய் இருந்துள்ளது. இத்திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவிலும் பரீஸ் சிங்கப+ர் டில்லி, பாங்கொக் போன்ற நகரங்களிலும் காட்டப்பெற்று பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. இவ்வாறே இவரது 'ஒரு சிறகோடு பறத்தல்' என்ற திரைப்படம் 2004ல் பரீசிலும் லண்டனிலும் திரையிடப்பட்டு பெரும் புகழை இவருக்குத் தேடிக் கொடுத்தன.
சிங்கள சினிமா உலகில் இத்தனை சிறப்பான இடத்தைப்பெற்ற ஹந்தகமவுக்கு இப்போது ஒரு சோதனைக்காலம் எனலாம். அதற்கு காரணமாய் இருப்பது, 'அக்ஷரய' (அக்கினி எழுத்து) என்ற அவரது புதிய திரைப்படமாகும். இத்திரைப்படம் தணிக்கையாளர்களின் பார்வைக்கு விடப்பட்டு அவர்களாலும் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னரும் இதற்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன? சினிமாவின் தரம் அதன் நுணுக்கங்கள் பற்றிய எந்த அறிவுமில்லாதோரின் தூண்டுதலினால் கலாசார அமைச்சர் இதில் தலையிட்டுள்ளார். அதனால் இத்திரைப்படம் திரையிடப்படக்கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்படம் சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கொண்டதாக இருப்பது என்பதே கலாசார அமைச்சின்வாதம். இன்றைய பிரதான தேசிய ஊடகங்கள் இத்திரைப்படம் பற்றிய - அது இன்னும் திரையிடப்படாத நிலையிலும் - வாதம் பிரதிவாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
இத்திரைப்படத்தில், குளியல் தொட்டியில் ஒரு சிறுவனை நிர்வாணமான நடிகை முன்னே நிற்பாட்டுவதன் மூலம் ஹந்கம சிறுவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதே கலாசார அமைச்சரதும் சிறுவர் துஷ்பிரயோக திணைக்களத்தின் பொலிசாரும் கண்டுள்ள குற்றமாகும். ஆனால் ஹந்தகமவுக்கு சார்பாக வாதிடுவோர் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றனர். 1. கலாசார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தணிக்கை சபை அனுமதித்த பின்னர் அதை ரத்த செய்வதற்கு அமைச்சருக்கு என்ன அதிகாரம் உண்டு? அப்படியானால் அவர் நியமித்த தணிக்கை சபை பிழையானதா? அறிவற்றதா? தமது தீர்ப்பை ரத்து செய்தமைக்குப் பின்னரும் தணிக்கை குழு ஏன் இன்னும் தமது பதவியிலிருந்து விலகாது இந்த அவமரியாதையைத்தாங்கிக் கொண்டிருக்கிறது? 2. ஏற்கனவே சோமரத்ன திசாநாயக்காவினால் தயாரிக்கப்பட்ட 'சமனலதட்டு', 'சூரிய ஆரண்ய' ஆகிய இரண்டு படங்களிலும் ஹந்தகமவின் படத்தில் உள்ள காட்சிக்கு இணையான காட்சிகள் உள்ளன. துஷ்பிரயோகத்திற்கு பின்னர் நிர்வாணமாக ரோட்டில் ஓடும் சிறுவனின் காட்சி 'சமனல தட்டு'வில் இடம் பெறுகிறது. 'சூரிய அரண்ய'வில் சிறுவனான புத்தபிக்கு காவியுடையை களைந்துவிட்டு தனது விளையாட்டுத் தோழனோடு ஓடிப்போகும் காட்சி இடம் பெறுகிறது. ஏன் இக்காட்சிகள் கலாசார அமைச்சுக்கு துஷ்பிரயோகமாகப்படவில்லை? இன்னும் இரண்டாவது படத்திலுள்ள காட்சி, பௌத்த சமயம் போற்றும் 'வினைய' கோட்பாட்டுக்கே எதிரானது. இவற்றையெல்லாம் கலாசார அமைச்சு எவ்வாறு சகித்துக் கொண்டது? இப்படங்களைத் தயாரித்தவர்' தற்போதுள்ள ஆளுங்கட்சியின் பெரும் பிரச்சாரகராக இருந்தார் என்பதாலா?
கடந்தவாரத்திற்கு முதல்வாரம் தர்மசிறிபண்டாரநாயக்காவின்' திரிகோண' நிலையத்தில் நாம் சிலர் ஹந்தகமவைச் சந்தித்து உரையாடியபோது அவர் தனது திரைப்படத்திற்கு, திரைப்படம் பற்றிய அறிவற்ற சமான்யர்களால் ஏற்படுத்தப்பட்ட அபத்தமான விளைவுகளை விளக்கினார்.
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் பொலிசார், ஹந்தகமவின்மேல் சுமத்தும் குற்றம், அவர் ஒரு சிறுவனை நிர்வாண நடிகையின் முன்னால் நிறுத்திபடமெடுத்ததோடுஅவளால் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட வைத்தார் என்பதே. இதில் வேடிக்கை என்னவெனில் இன்றைய திரைப்படம் எடுத்தல் தொடர்பாகவுள்ள தொழில்நுட்பம் எதுவும் தெரியாதவர்களின் பாமரத்தனமான குற்றச்சாட்டே இது.
ஹந்தகம பொலிசாருக்கு கொடுத்த தனது வாக்கு மூலத்தின்போது, பிரச்சினைக்குரிய காட்சியானது தனித்தனியே எடுக்கப்பட்டு எடிட்டிங்மூலம் இணைக்கப்பட்டதேயொழிய சிறுவன் நிர்வாணப் பெண்ணெதிரே குளியல் தொட்டியில் நிற்பாட்டப்படவில்லை என்பதை விளக்கினார். பொலிசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தில் நடித்த சிறுவனும் இதை உறுதி செய்ததோடு படமெடுக்கப்பட்டபோது அங்கிருந்த சிறுவனின் தாயாரும் நிர்வாணப் பெண்ணின் முன்னால் தன்னுடைய மகன் விடப்படவும் இல்லை அவளால் தாக்கப்படவுமில்லை என்பதையும் உறுதி செய்தார். இதை விளங்கிக் கொள்ள முடியாத கலாசார அமைச்சும் சொலிசாரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பதே வேடிக்கை.
தன்மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் பற்றி ஹந்தகம இறுதியாக பின்வருமாறு கூறினார். "ஒருகட்டத்தில், இந்தப் பாமரத்தனமான குற்றங்களைக் கேட்டபோது, எனக்கு அழுகையே வந்துவிட்டது. காரணம் எனக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள்".
எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம். மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.
இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன். நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன். கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கு முந்தி எழுதின பதிவிது.
பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.
இன்னுமொரு பதிவும் இருக்கு. அதை அடுத்ததாக மீள்பதிவாக்கிறன்.
இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப்பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும்.
கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று. “அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா எமனும் நாந்தாண்டா…. இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம்.
ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம்.
ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.
50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை.
தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.
படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:
எப்படியோ கிரண் கமலைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்திருக்க வேண்டும். கமல் வந்து போனதை எப்படியோ அறிந்து கமலைத் தேடி கிரண் ஒரு பாட்டுப் பாட கமல் ஓடி வந்து….
தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மை உச்சக் காட்சியான ரயில் நிலையத்தில் மாதவன் கமலைப் பிடித்து அழைத்து வந்து…..
இறுதி நேரத்தில், கிரணுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருந்து அவர்தான் மாதவன் மூலம் இப்படி ஒரு நாடகமாடி கமலை வரவழைத்தார் என்று படத்தை முடித்திருக்கலாம்.
கமலின் நாய் தாலியைத் தூக்கிக் கொண்டு கமலைத் தேடி ஓட துரத்திக் கொண்டு வரும் மாதவனும் கிரணும் கமலைக் காண….
கமலே நாசருடனும் அடியாட்களுடனும் பயங்கரச் சண்டை போட்டு கிரணை மீட்டிருக்கலாம். தேவையானால் மாதவனுடன் கூட சண்டை போட்டிருக்கலாம். அதிலும் பயங்கர அடிவாங்கி சாகுந்தருவாயில் கமல் இருக்கையில் காதலியின் கதறல் கேட்டு மீண்டும் சக்தி வந்து செயலற்றிருந்த கை காலெல்லாம் சரிவந்து ஒரே அடியில் அனைவரையும் தூக்கியெறிந்திருந்தால்... இன்னும் நன்று. அல்லது ஏதாவதொரு சாமியின் அருள் வந்து செய்வதாகக் கூட காட்டியிருக்கலாம். செத்துப் போனதாக மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு கூட இவ்வளவும் சாத்தியமே. (சொக்லேட் மாதிரி).
இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது. ஏதாவது செய்திருக்கலாம்.
சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார்.
‘‘இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... ‘‘ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது’’ உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்’’ என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்.
கேள்வி: ஆணிவேர் முயற்சியின் தொடக்கம் பற்றி...
பதில்: ‘‘நான் சச்சின் படம் பண்ணி முடித்து அது தியேட்டரில் ஒடிக்கொண்டிருந்த போது சுவிட்சர்லாந்தில் 'தமிழ் லீவிங் மீடியா நெட் வொர்க்' நிறுவனத்தை நடத்திவரும் பிரபாகரன் அவர்கள் சச்சின் பார்த்துவிட்டு என்னை அழைத்து விஷ் பண்னினார். அப்புறம் என்னிடம் ஈழத் தமிழர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர முடியுமா என்று கேட்டார். ஒரு பிலிம் மேக்கரா எனக்கு இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இருக்குண்ணு தெரியும், ஆனா அதோட அரசியலோ கடந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் ஈழ மண்ணில் யுத்தம் நிகழ்த்தியிருக்கும் கோர தாண்டவம் பற்றியோ எனக்கு தெரியாது.. ஆனால் ஒரு யுத்த பின்னணியை வைத்து ஒரு சினிமா பண்ணவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. பிரபாகரன் நிறைய புத்தகங்கள், வி.சி.டி என கடந்த கால வரலாற்று ஆவணங்களை கொடுத்தார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் அடைந்த துயரங்களை பார்த்தேன். படம் எடுப்பதற்கு முன்னால் ஈழப்பகுதிகளுக்கு போகவேண்டும் என்று சொன்னேன். அங்கே போய் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து மக்களை சந்தித்தேன். ஒவ்வொரு கதைகளும் ஒரு ஈழ சினிமாதான். நிறைய பேரை சந்தித்தேன். நீண்ட நேரம் பலமான அவர்களின் கதையை, வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்தேன். நான் பதிவு பண்னின மொத்த விஷவலையும் வெச்சு இரண்டு வருஷத்துக்கு ஒரு மெகா சீரியலே பண்ணலாம். அங்கே ஈழத்தில் இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள். ஒன்று யுத்தத்தின் நெருக்குவாரத்தை சந்தித்து தினம் தினம் மரணத்தோடு இன்னும் சொந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்து உலகெங்கிலும் தாயகம் பற்றிய கனவுகளோடு வாழ்பவர்கள். ஐம்பதுகளில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இவளவு கொடூரம் நடந்தும் இன்னும் இது சரியாக வெளியுலகத்துக்கு வரவில்லை என்கிற ஏக்கமும் கோபமும் அவங்ககிட்டே இருக்கு. இரண்டு சமூகங்கள் ஒரு பிரச்சனை காரணமாக மோதி அதில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டா அதுக்கு பேர் கலவரம். ஆனா இலங்கையில் காலம் காலமா தமிழர்கள்தானே பாதிக்கப்படுறாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதலை கலவரமாகத்தான உலக மீடியாக்கள் பார்க்குது. இப்படிபட்ட வருத்தங்கள் அவங்களுக்கு இருக்கு. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட இரண்டாவது ஆயுதமாக சினிமாவை கையிலெடுத்திருக்காங்கண்னு நினைக்கிறேன்.
கேள்வி: ஆணிவேர் படம் எடுப்பதற்க்காக நீங்கள் ஈழத்தில் எவளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த அனுபவம் எப்படியிருந்தது?
பதில்: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன்.சென்னையில் இருந்து கொழும்புக்கு போய் இறங்கிய போது ஒரு தமிழ் நாளிதழை வாங்கி பார்த்தேன் ‘‘கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள்’’ என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள். ஈழத்தில் உள்ள போராளிகளாக உள்ள பொது நிலையினரின் வாழ்க்கையை அந்த தலைப்பு எனக்கு உணர்த்தியது. ஏகப்பட்ட பரிசோதனைகள் கொழும்பில் உலவுகிற ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களோடு கண்காணிக்கப்படுகிறான். புல்லட் நிரப்பப்பட்ட ஒப்பன் செய்யப்பட்ட ஏகே 47 நவீன ரக துப்பாக்கிகள் வழியாக ஊர்ந்துதான் கடுமையான கெடுபிடிகளை தாண்டி ஈழத்துக்குள் பிரேவசிக்க முடிந்தது. என்னை அழைத்து வந்த காரோட்டி சொன்னார் ‘‘சார் கை தவறுதலாக பட்டால் கூட அந்த துப்பாக்கியின் குண்டுக்கு யாரோ ஒருத்தர் பலியாக நேரிடும்’’ என்றார். அப்புறம் ஈழத்துக்கு போய் என்னோட பணிகளை கவனித்தேன். அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது யுத்தத்தோடு தொடர்புடைய கதை. ஒவ்வொரு மனிதனும் சகோதரியையோ,தாயையோ.உறவுகளையோ இழந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ மனிதனாகவோ இதற்க்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று எனக்கு தெரியவில்லை. ஒரு தாயை சந்தித்தேன் அவங்களோட மகனை சில வருடங்களாகவே காணவில்லை. பின்னர் செம்மணி புதை குழி மர்மங்கள் வெளிபட்ட போது அதில் அவங்களோட மகனும் கொலை செய்யப்பட்டாராம். அதே மாதிரி இன்னொருத்தங்க ஒரு கதை சொன்னாங்க. ஒரு நாள் ஆர்மிக்காரன் வருகிறான் என்று எல்லோரும் ஒடியிருக்காங்க அப்படி ஒடினபிறகு பார்த்தா அவங்களோட குழந்தையை மிஸ் பண்னிட்டாங்க பதறிப்போய் பார்க்கும் போது அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டிருக்காங்க. அதே மாதிரி தன்னோட தாய் இறந்து போயிட்டாங்க எனபது கூட தெரியாமல் தாயோட மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையின் கதை ஒன்றை ஒரு டாக்டர் சொன்னாங்க. அவங்க அந்த சமூகத்தோட மனச்சாட்சி மாதிரி ஏண்ணா?அவங்கதானே யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா பார்க்கிறாங்க மருத்துவம் செய்றாங்க. ஒரு நாள் ஷெல் அடிக்கும் போது குழந்தையோட பதுங்கின தாய்க்கு தோளில் நல்ல காயம் ஏற்ப்பட்டிருக்கு அந்தம்மாவுக்கு அவசரமா ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டும் அவங்ககிட்டே மயக்க மருந்து எடுத்துக்கோங்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாவது ஆகும என்று டாக்டர் சொன்னபோது ‘‘வேணாம் அவளவு நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க முடியாது.மயக்க மருந்து இல்லாமலே பண்ணுங்க’’ எனறு சொல்லி மயக்க மருந்து இல்லாமலே அந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கு இதை மனத்தைரியமா எடுத்துக்கறதா?இல்லை போர் இப்படி ஒரு மன இறுக்கத்தை அந்த மக்களிடம் ஏற்ப்படுத்தியிருக்குண்னு நினைக்கிறதாண்னு தோணலை...தர்ஷினி கொலை செய்யப்பட்டது பற்றி ஒரு ஆசிரியரிடம் பேசினேன் அவங்க சொன்னதும் நான் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது காரணம் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது அவங்களோட ஒவ்வொரு அடியும் இராணுவத்தால் கண்காணிக்கப்படுவதும் பரிசோதனை என்கிற பெயரில் கொடூரமான வக்கிரமான வதைகளுக்கு ஆட்படுவதும் இன்றும் தொடர்கிறது.அதை நேரில் என்னால் பார்க்க முடிந்தது.
[இச் செவ்வி முழுமையாக சலனம் வலைப்பக்கத்தில் இருக்கிறது. அதுவும் ஒருங்குறியில் இருப்பதால் முழுச் செவ்வியையும் இங்குப் பதியாமல் இணைப்புக் கொடுத்துள்ளேன்.]
இச்செவ்வி பற்றி ஏற்கனவே யாராவது வலைப்பதிவில் பதிந்தார்களா தெரியது. முக்கியமான சுவாரசியமான செவ்வி என்பதால் இங்கே பதிவாக்கினேன்.
ஆணிவேர் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் அதுபற்றி பதிகிறேன்.
வெளியான முதல்நாளே பார்க்கவேண்டுமென்று இன்றுவரை நான் எந்தப்படத்துக்கும் முயன்றதில்லை. அப்படிப் பார்த்ததுமில்லை. ஆனானப்பட்ட தலை, வால்களின் படங்களுக்கே அப்படித்தான்.
முதன்முறையாக இம்சைஅரசனுக்கு முயன்றேன்.
கதையை முழுக்கச் சொல்லி வழமையாக விமர்சனமென்ற பெயரில் பலர் செய்யும் கேலிக்கூத்தை நான் செய்யப்போவதில்லை. எனக்குப் படம் பிடித்திருக்கிறது. நிறைவைத் தருகிறது. கதையென்று புதிதாக ஏதுமில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளை நாமே முன்கூட்டிக் கற்பனை செய்துகொள்ளக்கூடியதாக உள்ளது. பெரும்பாலும் சரியாகவே அனுமானங்கள் அமைகின்றன. அவற்றை அழகாகக்கோர்த்து முழுநீளப் படமாகத் தந்துள்ளார்கள்.
என் கணிப்பில் நகைச்சுவைக்கென்று தனியாக நடித்தவர்களில் நாகேசுக்கு அடுத்ததாக வடிவேலுவைச் சொல்லலாமென்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு அருவருப்பையும் அயர்ச்சியையுமே தந்தார். (விவேக் போட்டியிலேயே இல்லை). மற்றவர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுமளவுக்கு நான் வடிவேலுவைக் கொண்டாடியதில்லை. ஆனாலும் ஏதோவொன்று அவரிடம் என்னை ஈர்க்கிறது.
நாயகிகள் பலர். அந்தப்புரப் பாட்டுக்காட்சியில் 'குறைந்தபட்சம்' மூன்று நடிகைகளோடு ஆடுகிறார். இவ்வளவுகாலமும் கதாநாயக நடிகர்கள் எனற பேரில் திரையில் வந்தவர்களுக்கு மட்டும் கிடைத்த பேறு இம்முறை முழுநேர நகைச்சுவை நடிகனுக்கு. நன்றாக இருந்தது. பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகப்பிடித்தன. முக்கிய காரணம் இசைதான். பாடல்வரிகள் புலமைப்பித்தன். நல்ல தேர்வு. பாடற்காட்சிளும் அருமை. நீண்டகாலத்தின் பின் பாடற்காட்சிகளை இரசித்திருக்கிறேன். சில காட்சிகள் எம்.ஜி.ஆர், ஜெமினியை ஞாபகப்படுத்தின.
நகைச்சுவைக் காட்சிகளை தொட்டுக்கொள்ளும் அளவுக்கு வைத்துக்கொள்ளும் படங்களிலேயே அருவருப்பான காட்சிகளும் வசனங்களும் தாராளமாக இடம்பெறும். சொல்லப்போனால் இரட்டையர்த்த வசனங்களும் கீழ்த்தரமான காட்சிகளுமே நகைச்சுவையென்ற மனப்பான்மை வந்துவிட்டது. ஆனால் முழுநீள நகைச்சுவைப் படத்தில் அப்படியேதுமில்லாதது ஆச்சரியம்தான்.
படத்தில் எங்குமே தொய்வு இருந்ததாக நான் உணரவில்லை. என்வரையில் திரைக்கதை அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. அரங்கமைப்புக்கள் இயன்றவரை சரியாக இருக்கின்றன. தமிழ்ச்சினிமாவுக்குரிய எல்லையைப் பார்த்தால் திருப்தி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வில், அம்பு போன்றவற்றில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சாதிச்சண்டைக் காட்சியின்போது ஒருவர் தற்கால 'இரட்டைத் தொலைநோக்கி'யைப் பாவிப்பது தவறா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
படத்தின் ஒரேகுறையாக நான் சொல்வது வெள்ளையர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தாம். படத்தில் எவ்விதத்திலும் ஒட்டவில்லையென்பதுடன் முழுக்கோமாளித்தனமாக இருந்தன. ஆங்கிலேயர் தமிழ்பேசுவதைத் தவிர்த்து வேறொரு முறையைக் கையாண்டிருக்கலாம். ஆனால் இப்படம் மிகச்சாதாரண மக்களை இலக்காகக் கொண்டது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. (உயர்வாகச் சிந்தித்தாலும் ஹேராமுக்காக கமல் வாங்கிய விமர்சனம் போல்தான் வரும்)
திரையில் அனைவரும் தத்தமது பாத்திரத்தைச் சரியாகச் செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். வடிவேலுவுக்கு அடுத்து முக்கிய பாத்திரம் நாசர்தான். நன்றாகச் செய்திருக்கிறார்.
வடிவேலு திரையில் வரும் முதற்காட்சியிலேயே வரலாறு தடம்புரளத் தொடங்குகிறது. முக்கியமான தலைவர்கள், மன்னர்களைச் சொல்லி அவர்களைப்போல் தானும் ஆளவேண்டும் என்று கடவுளை வேண்டும்போது நெப்போலியனின் பெயரையும்சொல்கிறார். ஆனால் படத்தில் அக்காட்சி நெப்போலியனுக்கு முந்திய காலம். அடடா, கதையில் பிசகு விடத் தொடங்கிவிட்டார்களே என்று நினைத்தவேளையில் ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் இவற்றை எதிர்பார்க்கக்கூடாதென்று அடங்கிவிட்டேன். ஆனால் அது தெரிந்தே சொல்லப்பட்டது என்று நினைக்கும் வகையில் பின்வரும் காட்சிகள் பல இருந்தன. இயக்குனர் சமகாலத்தையும் கலந்துதான் படத்தைச் செய்துள்ளார். முக்கியமான இடங்களில் அவர் சமகாலத்தைப் புகுத்தி அருமையான நகைச்சுவையைத் தந்துள்ள்ளார்.
இரண்டு வடிவேலுக்களும் சந்தித்துக் கொண்டபின் சோதிடர், "நீங்கள் ரெண்டு பேரும் இணைவீர்களென்று எனக்கு முன்பே தெரியும்" என்று சொல்வார். "தெரியுமா? எப்படியப்பா?" என்று ஆவலோடு கேட்டுக்கொண்டு வருவார்கள். அப்போது சோதிடர் சொல்வார், "இரட்டைக்குழந்தை பிறந்தால் திரைக்கதையில் வேறெதைத்தான் செய்ய முடியும்?"
நாசருடன் உக்கிரபுத்திரன் (வீரன் வடிவேலு) வாட்சண்டை செய்துகொண்டிருக்க புலிகேசி (கோழை வடிவேலு) பதுங்கியிருந்து ஒரு கதவுக்குள்ளால் எட்டிப்பார்ப்பார். கதவில் "Enter the Dragon புரூஸ் லீ" யின் இரத்தக் கீறல்கள் விழுந்த உடம்பில் வடிவேலுவின் தலைபொருத்திய ஓவியம்.
படம் முடியும்போது வடிவேலு எல்லோருக்கும் ஒரு பிரசங்கம் வைப்பார். அதில் பல இராசாக்களைச் சொல்லி அவர்களைப் போல் நாமும் வீரமுடன் பகைவரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று முடிப்பார். அதில் இராசஇராசன் தொடக்கம் பலரைச் சொல்லி, Brave Heart மெல்ஜிப்சனையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார். இருக்கையை விட்டு ஓடும் முனைப்பிலிருக்கும்போது இவ்வசனம் வரும். பலருக்கு வெளியில் வந்து மற்றவர்கள் சொல்லித்தான் அந்த இறுதி வசனம் புரிந்தது.
படம் நல்ல வெற்றி பெறும் என்பதிற் சந்தேகமில்லை. வடிவேலு இனி தனக்குரிய படங்களையும் பாத்திரங்களையும் கவனத்திற் கொள்வது நன்று. இதுவரைகாலமும் அவர் செய்த பல காட்சிகள் அருவருப்பானவை. குறிப்பாக பெண்வேடமிட்டு அவர் செய்த படங்கள் மோசமானவை. இனிமேலும் அப்படி நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேவேளை இப்படம் தமிழ்ச்சினிமாவில் புதிய போக்கைத் தொடங்கிவிடுமா? தமிழ்ச்சினிமாவில் நீண்ட இடைவெளியில் யாரும் இறங்காத, பழைய காலத்துக் கதைக்குள் இறங்குவார்களா? முழுநீள நகைச்சுவைப்படங்கள் புதிய பரிமாணத்தோடு வெளிவருமா? (கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் வெற்றி பெறாதது தமிழ்ச்சினிமாவின் சறுக்கலே. கமலின் சறுக்கலன்று).
ரெறறிஸ்ட் படத்தின் சொல்லப்படாத கதை அல்லது இரண்டாம் பாகம். ------------------------------------------------------------- அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தலைமையின் நிலையென்ன? அதன் பின்னாலுள்ள மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான பதிலென்ன? மேலும் இவ்வளவு காலமும் அந்தத்தாக்குதலை நடத்த செலவிட்டவைக்கு (ஆள், பொருள்) என்ன பதில்? இனி மீண்டும் அத்தாக்குதலை நிகழ்த்துவதற்காக இழக்கப்போகும் காலம், ஆள், பொருள் இழப்புக்கள் எவ்வளவு? இனி இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? இத்தாக்குதல் நடத்தப்படாததால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு? ------------------------------------------------------------ சந்தோஷ் சிவன் இயக்கிய ரெறறிஸ்ட் படத்தைப் பற்றி மேலோட்டமாக என் பதிவொன்றிற் கூறியிருந்தேன். அப்படத்தைப் பற்றியும் அதன் முடிவு பற்றியும் அதற்குப்பின்னாலுள்ள சிக்கல்களைப் பற்றியும் இப்போது பேசலாமென்றிருக்கிறேன்.
கடல்கடந்து செல்லும் குழுவொன்றின் இலக்கு ஒருவரைக் கொல்வது. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முறை தற்கொலைத்தாக்குதல். அத்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஒரு பெண். தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாளும் நெருங்குகிறது. இதற்கிடையில் அப்பெண் கர்ப்பமாயிருப்பது தெரிய வருகிறது. ஒத்திகையும் முடிந்து தாக்குதலுக்குச் சென்றாயிற்று. கடைசிக்கணத்தில் அப்பெண் தனது மனத்தை மாற்றி தாக்குதல் நடத்தாமல் திரும்புகிறாள்.
இதுதான் கதை. ஏனைய தமிழ்ப்படங்களோடு ஒப்பிடும்போது மிகக்குறுகிய நேரத்தில் படம் முடிகிறது. பாடல்களில்லை. சண்டைக்காட்சிகளில்லை. தேவையற்ற பாத்திரப்படைப்புக்களில்லை. குடும்பம், சுற்றம் என்ற உறவுகளில்லை. பாசப்பிணைப்பென்ற பேரில் புருடாக்கள் இல்லை. நிறைய “இல்லை”களைக் கொண்டு நிறைவான ஒரு படம். மணிரத்தினம் “உயிரே” எடுத்தபின்னும் ஏன் ரெறறிஸ்ட் வந்தது என்றால், இரு படங்களையும் பார்ப்பதுதான் அதற்கான பதில். ஒன்று ஏறத்தாள வழமையான சினிமா என்பது என்கருத்து.
ரெறறிஸ்டை இப்படிப் புகழ்கிறேன் என்பதற்காக அதன் அத்தனை அம்சங்களோடும் நான் உடன்படுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். படத்தலைப்பே எனக்கு முரண்பாடான முக்கிய இடம். இதைவிடவும் நிறையக் கேள்விகள் அப்படித்தின் மீதுண்டு. இயக்குநர், தனது சமயோசிதத்தால் பல இடங்களில் தன் மீதான விமர்சனத்திலிருந்துத் தப்பித்துக்கொள்கிறார். யார் மீதான கொலை முயற்சி என்பது சொல்லப்படவில்லை. படம் யாரைப்பற்றியது என்பதற்கும் படத்தில் தெளிவான பதிலில்லை. ஈழத்துக் குழுவொன்றைப் பற்றியது என்பதும் படத்திற்சொல்லப்படவில்லை. நீரைக்கடந்து செல்லும் குழு என்பதும், கழுத்தில் ஏதோவொன்றைக் கட்டியிருப்பவர்கள் என்பதையும் தவிர வேறில்லை. ஈழத்து மொழிவழக்குக் கூட பாவிக்கப்படவில்லை. ஆனாலும் புலிகளை மனத்தில் வைத்தே இயக்குநர் இப்படத்தை எடுத்தார் என்று பலரைப்போலவே நானும் நம்புகிறேன்.
இயக்குநர் தேவையற்ற விவாதங்களுக்குப் போகவில்லை. கதாநாயகி கர்ப்பமடைய ஏதுவான காட்சிகூட விவரிக்கப்படவில்லை. (வழமையான தமிழ்ச்சினிமாவை யோசித்துப் பார்க்கவும்.) அக்கர்ப்பத்துக்கு யார் காரணம் என்றும் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. (தெளிவாகச் சொல்லியிருந்தும் எனக்குத்தான் விளங்கவில்லையோ தெரியேல.) களத்தில் செத்துக்கொண்டிருக்கும் ஒருவனைக் காட்டப்படுகிறது. அவன்தானோ? அச்சந்தர்ப்பம் தானோ? ஆனால் இயக்குநருக்கு இவைகள் தேவையற்ற கேள்விகள். “அவள் கர்ப்பமாயிருக்கிறாள்; அவ்வளவுதான். மேற்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்” என்பதுதான் அவர் நிலைப்பாடு.
“பயங்கரவாதிகளில்” கிட்டத்தட்ட ஆண்கள் அனைவரையும் 15 வயதிற்கும் குறைவாகக் காட்டப்படுகிறது. (அந்தச் 'செத்துக்கொண்டிருப்பவனைத்' தவிர). மேற்சட்டையில்லாமல் நிற்கும் ஆண் “பயங்கரவாதிகளுக்குள்ளால்” அந்தப்பெண் நடந்து வருவது உறுத்துகிறது. இக்காட்சி மூலம் நாங்கள் ‘நினைத்துக்கொண்டிருப்பவர்களை’ விட்டுவிட்டு வேறு யாரையோ பற்றி படமெடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாளராக நடிப்பவரின் பெயர் தெரியவில்லை. அவர் குருதிப்புனலில் நடித்தபோது, 'கிட்டு'வின் சாடை இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அந்தச் சாடை இருக்கும் வரை அவருக்கு இப்படியான படங்களில் “பயங்கர வாதி” வேடங்கள் உறுதி. குருதிப்புனல், ரெறறிஸ்ட், ரிமோல்ட் என்ற படங்களில் அவருக்குக் கிடைத்த வேடங்கள் அப்படி.
சரி, இனி முதன்மையான விதயத்துக்கு வருகிறேன். படத்திற் காட்டப்பட்டுள்ளபடி கதாநாயகி தன் முயற்சியைக் கைவிட்டுவிடுகிறாள். இத்தோடு படம் முடிகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதற்குப் பின்தான் உண்மையிலேயே பிரச்சினைகள் தொடங்குகின்றன. அத்தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்தக் குழுவுக்கு, அக்குழுவைச் சார்ந்த மக்களுக்கு என்ன பதில்? அத்தாக்குதல் நடத்தப்படாததால் இனி ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் இத்தாக்குதலை மீண்டும் செய்வதற்காகக் கொடுக்கப்போகும் விலைகளுக்கும் என்ன பதில்?
இப்படம் இன்னாரைப் பற்றியது என்று ஏதும் இல்லாமலிருப்பது, பிரச்சினையை தனியே ஒரு குழுவுக்கும் இயக்கத்துக்கும் தனியொரு சம்பவத்துக்கும் மட்டுமென்று குறுக்காமல், உலகம் முழுவதும் பொதுமைப்படுத்தப் பார்க்கிறார் இயக்குநர். “ரெறறிஸ்ட்” என்று தலைப்பிடடதூடாக மக்கள் ஆதரவுள்ள, இனவிடுதலைக்காகப் போராடும் ஓர் இயக்கத்தைப் படத்தில் ஒட்டிப்பார்க்க வகையில்லாதபடி இயக்குநர் செய்து விடுகிறார். ஆனாலும் இப்படம் புலிகள் என்ற அமைப்பைத்தான் கருத்திற்கொண்டது என்று பெரும்பாலும் கருதப்பட்டதாலும், அப்படியே சில விமர்சனங்களும் வந்ததாலும், புலிகள் மட்டுமன்றி அவர்களைப் போன்ற ஏனைய விடுதலையமைப்புக்களுக்கும் தற்கொலைத்தாக்குதலென்பது பொதுவான உத்தியென்பதாலும் இப்படத்திற் காட்டப்பட்டுள்ள முடிவின் பின்னாலுள்ள சிக்கல்களைச் சொல்வதே நோக்கம். குறிப்பிட்ட இயக்கத்தையோ குறிப்பிட்ட கொலை முயற்சியையோ மட்டும் வைத்து இது எழுதப்படவில்லை. இவ்வாதம் அனைவருக்கும் பொதுவானது.
ஒரு விடுதலையமைப்புக்கு தற்கொலைத்தாக்குதல் வழிமுறையென்பது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. (இது சில சந்தர்ப்பங்களில் மாறுபடலாம்.) ஆள், ஆயுதம், பொருளாதாரம், பன்னாட்டு ஆதரவு என்பற்றில் பலமான எதிரியை எதிர்கொள்வதில் இப்படியான உத்திகள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது நிறைந்த பலனைத் தந்துமுள்ளது. "குறைந்த இழப்பு, நிறைந்த பலன்". ஈழப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால், அதன் முதல் தற்கொலைத்தாக்குதல் மில்லரால் நெல்லியடியில் ஆரம்பிக்கப்பட்டது. அத்தாக்குதல் எழுப்பிய பேரதிர்வு இலங்கையை ஆட்டுவித்தது. சடுதியான மாற்றங்கள் அத்தாக்குதலின்பின் நடந்தன. அன்றிலிருந்து இன்றுவரை காத்திரமான மாற்றங்கள் தற்கொலைத்தாக்குதல்கள் மூலம் நிகழ்த்தப்பட்டன. ஆகப்பிந்திய எடுத்துக்காட்டு கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்பு.
ஓர் இலக்கை அழிக்கச் சொல்லி ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு கூட்டம் பணிக்கப்படுகிறது. அவர்களும் மனமுவந்து தான் அப்பணியை ஏற்கிறார்கள். பின் தாக்குதல் நடத்த வேண்டிய தளத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து அத்தாக்குதலை தமது சுயநலனுக்காகக் கைவிடுவது எத்தனை அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய துரோகம்? (இங்கே துரோகம் என்பதை அதற்குரிய மிகக்கடுமையான தொனியுடனேயே கையாளுகிறேன். இச்சொல் சகட்டு மேனிக்குப் பாவிக்கப்பட்டு தன் உண்மையான பொருள் வலுவை இழந்து வருகிறது. சமீபத்தில் இதைப்போல தன் காத்திரமான பொருள் வலுவை இழக்கத் தொடங்கியிருக்கும் பரிதாபத்துக்குரிய இன்னொரு சொல் “பாசிசம்”.)
அவர்களுக்கு முன்பேயே தாக்குதல் திட்டத்திலிருந்து விலகிவிட சந்தர்ப்பமிருக்கிறது. ஆகக்குறைந்தது தாக்குதலுக்கு செல்லும் முன்பாகவேகூட ஏதாவது செய்யலாம். மாற்றுவழிகள் யோசிக்கப்படக்கூடும். இறுதிக்கணத்தில் ஏற்படும் மாற்றத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தலைமையின் நிலையென்ன? அதன் பின்னாலுள்ள மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான பதிலென்ன? மேலும் இவ்வளவு காலமும் அந்தத்தாக்குதலை நடத்த செலவிட்டவைக்கு (ஆள், பொருள்) என்ன பதில்? இனி மீண்டும் அத்தாக்குதலை நிகழ்த்துவதற்காக இழக்கப்போகும் காலம், ஆள், பொருள் இழப்புக்கள் எவ்வளவு? இனி இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? இத்தாக்குதல் நடத்தப்படாததால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு?
படத்தில், கருவிலிருக்கும் குழந்தையைக் கருதி தாக்குதலைக் கைவிடுவதாகக் காட்டப்படுகிறது. இது நடத்தப்படாமல் போவதால் இருக்கும் பிரச்சனைகளுக்கு முன்னால் அது வெறும் தூசு. ஏன் இப்படியான இயக்கங்கள் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன என்பதற்கு (குறிப்பாக பாலியல் விசயங்களில்) இப்படம் எடுத்துக்காட்டு.
சந்தோஷ் சிவன் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடும். அல்லது வேறொருவர் இக்கருவை வைத்து எடுக்கலாம். இல்லாவிட்டால், நானே எடுக்கக்கூடும் யார் கண்டது? . அப்படி படமெடுத்தால்; அத்தாக்குதல் நடத்தப்படாததால் அவ்வியக்கம் எதிர்நோக்கும் பின்னடைவுகள், அவ்வியக்கத்தின் பின்னாலுள்ள மக்கள் அக்குறிப்பிட்ட- 'அழிக்கப்படாமல்' விடப்பட்ட- இலக்கால் அடையப்போகும் துன்பங்கள், இழப்புக்கள் என்பவை அப்படத்தில் சொல்லப்படும். அல்லது ரெறிறிஸ்ட் படத்தையே இன்னுமொரு பத்து நிமிடம் நீட்டி, அப்பெண் அத்தாக்குதலை நடத்தாமல் விட்டாலும் ஏற்கெனவே தீர்மானித்து வைக்கப்பட்ட இரண்டாவது வழிமுறை மூலம் (ஒரு திறமையான திட்டமிடல் இப்படித்தான் நடக்கும்; நடந்திருக்கிறது.) அவ்விலக்கு அழிக்கப்படுவதாக முடிக்கலாம். அத்தாக்குதலை நெறிப்படுத்தியவரே களத்தில் இறங்கி அந்த வேலையைச் செய்வதாகவும் இருக்கலாம். (அப்படியான சம்பவங்களும் உண்டு).
தற்கொலைத் தாக்குதலொன்று நடத்தப்படாமல் விடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பைச் சரியாக உணர வேண்டுமானால் கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அத்தாக்குதல் மட்டும் நடக்கவில்லையென்றால், இன்றைய யுத்த நிறுத்தமுமில்லை, சமாதானப்பேச்சு வார்த்தையுமில்லை, ஒரு 'மண்ணாங்கட்டியுமில்லை' (நன்றி சிவராம்). சிறிலங்காவின் திமிர் குறைந்திருக்கவும் வாய்ப்பில்லை. ----------------------------------------------------- மேற்குறிப்பிட்ட விதயங்கள் தனியே புலிகளுக்கு மட்டுமன்று; எந்தவொரு விடுதலை இயக்கத்துக்கும் பொதுவானது, ரெறறிஸ்ட் படம்போல. எடுத்துக்காட்டுக்களுக்கு இலகுவாகவே புலிகளைப்பற்றி இங்கே கதைக்கப்பட்டது. -----------------------------------------------------
வணக்கம்! இந்தக் கிழமையில் முதலாவதாக எதை எழுதலாம் என்று மூளையைப் பிசைந்து கொண்டிருந்தேன். சில யோசனைகளுக்குப் பிறகு ஒரு பதிவை எழுதினேன். ஆனால் இறுதிவரை அது முதலாவது பதிவாகப் போடத்தக்க தகுதியுள்ளதாகப் படவில்லை. இப்போதுதான் சரியான ஒரு பதிவைக் கண்டுபிடித்தேன். சினிமாதான் அது. நான் தெரிவு செய்யப்பட்டிருக்கும் இச்சூழலில் சினிமாப் பதிவொன்றின்மூலம் என் கிழமையைத் தொடங்குவது எத்துணைச் சிறப்பானது? ஆகவே இதோ பதிவொன்று போடுகின்றேன். மற்றவர்களைப்போல் ‘தீவிர’ சினிமா பற்றி என்னாற் பேசமுடியாது. அப்படிப் பேச எனக்குத் தெரியாது. வேற்றுமொழித் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. பார்த்தாலும் ஏதும் புரிந்ததாக ஞாபகமில்லை. (என் மொழியறிவு அப்படி). ஆகவே நான் பார்த்த தமிழ்த்திரைப்படங்களிலிருந்து என்னைக் கவர்ந்த, என்னைப் பாதித்த சில விடயங்களைச் சொல்லலாமென்றிருக்கிறேன். இது விமர்சனமன்று. என் சில எண்ணங்கள், அவ்வளவே. சினிமா பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்ற கட்டாயத்தாற்கூட இருக்கலாம். ஏற்கெனவே இப்படி ‘அன்பே சிவம்’ பற்றியும், அது ஏன் தோற்றுப்போனது என்றும் ‘முகம்’ பற்றியும் எழுதியுள்ளேன். அவற்றைப்போலவே இதுவும்.
'கன்னத்தில் முத்தமிட்டால்' என்றொரு படம் வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. என்னை மிகவும் கவர்ந்த தமிழ்ப்படங்களில் இதுவுமொன்று. ‘ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து’ எனச்சொல்வதிலும் பார்க்க, அருமையான கதையொன்றை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்ட படமென்பது என் எண்ணம். ஈழப்பிரச்சினையைத் தொட்டபடியால் அக்கதையின் கனம், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தன.
கதை நகர்த்தும் பாணி, நடிகை நடிகர்களின் பங்கு அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவும் இசையமைப்பும் அருமை. இப்படத்தை ஒரு இந்தியர் தயாரிப்பதால் இருக்கக்கூடிய சிக்கல்கள் நிறையவே இப்படத்திலுண்டு. மொழிப்பிரச்சினை முக்கியமானது. ஈழத்தமிழ், ஏனைய படங்களைவிட ஓரளவு நன்றாகப் பாவிக்கப்பட்டுள்ளது என்றாலும் மணிரத்தினம் போன்றவர்கள் இவற்றோடு திருப்திப்பட்டுக்கொள்ளக் கூடாது. என் கருத்து என்னவென்றால் ஈழத்தமிழ் என அவர்கள் நினைக்கும் தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்களைப் பின்னணிக்குரல் கொடுக்க வைக்கலாம். சிலருக்கு அது பொருந்தாது. கமலுக்கு இன்னொருவர் குரல் கொடுப்பதென்பது நினைத்துப்பார்க்க முடியாதது. ஆனால் மற்றவர்களுக்கு இது பொருந்தும்.
நிறையத் தகவற்பிழைகள் உள்ளன. குறிப்பாக பிரதேசஅமைவிடங்கள் ஏனோதானோவென்று பயன்படுத்தப்பட்டுள்ளன போலுள்ளது. மணிரத்தினம் இதுபற்றிக் கூறும்போது, தனக்குக் கதைதான் முக்கியம். பிரதேச அறிவென்பது இரண்டாம்பட்சம்தான், என்பது போலக் கூறியிருந்தார். மணிரத்தினம் போன்றவர்கள் இப்படி அசட்டையாக ஒரு படம் தயாரிப்பது வியப்பாக இருக்கிறது. மாங்குளம் ஒரு கடல்சார்ந்த பிரதேசமாகக் காட்டப்படுகிறது. மேலும் சுப்பிரமணியப் பூங்கா பற்றியும் அதற்குள் கதை வருகிறது. மாங்குளத்திலேயே சிங்களவர்கள் வசிப்பது போற் காட்டப்படுகிறது. இராணுவம் மக்களை வெளியேறச்சொல்லி அறிவிக்கிறது. மக்களும் இடம்பெயர்கிறார்கள். இப்படி நிறைய. சும்மா மாங்குளம், சுப்பிரமணியப் பூங்கா என்று இரண்டு இடங்களைக் கேள்விப்பட்டு அவற்றை வைத்துப் படமெடுத்தது போலுள்ளது. படத்துக்கான அவரது தேடல் கேள்விக்குட்படுகிறது. (ஒரே ஓட்டோவில் ஆண்போராளியும் பெண்போராளியும் ஒன்றாக வருகிறார்கள். சகோதரர்கள் என்றாலும் இது சாத்தியமில்லை. இப்படி நிறையச் சில்லறைத் தவறுகள் உள்ளன. அவற்றை விட்டுவிடலாம்.)
புலிகளைக் காட்டியிருக்கும் பாங்கும் கவனிக்கத்தக்கது. படத்தில் வருவதன்படி புலிகள் இருந்தது இந்திய இராணுவக்காலப்பகுதியில்தான். படத்தில் பெண்போராளிகளைக் காட்டியவிதம் மக்களிடம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனக்கு அதுபற்றிக் கருத்தில்லை. அழகு பற்றிய விவாதம் தேவையற்றது. எனினும் வழமையான சினிமா வரையறைக்குள் அப்பெண்களைக் காட்டாமல் விட்டதற்கு மணிரத்தினத்துக்குக் கோடி புண்ணியம். போராளிகளால் மாதவன் இழுத்துச் செல்லப்படும்போது கவிதை சொல்வது அப்பட்டமான சினிமாத்தனம். சிலவேளை குறியீடாக ஏதாவது அக்காட்சியில் இருந்து எனக்குத்தான் அது விளங்கவில்லையோ தெரியாது.
தாயொருத்தி இப்படிக் குழந்தையை விட்டுவிட்டு வர மாட்டாள் என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டது. ஆனால் இப்படிச் செய்வது சாத்தியமே என்பது என் கருத்து. அவளின் அந்தநேரச் சூழ்நிலையே இதைத் தீர்மானிக்கிறது. அவள் குழந்தையைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுவரவில்லை. ஓரளவு நம்பகமான பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டே வந்தாள். (மேலும் பிள்ளைகளைத் தாமாகவே இயக்கத்துக்கு அனுப்பிய பெற்றோரையும் நான் பார்த்தவனாயிற்றே.) இடப்பெயர்வு காட்சியும் கடலில் மக்கள் பயணம்செய்யும் காட்சியும் மிகவும் உணர்ச்சிகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. தமிழ்ச்சினிமாவில் இது ஒரு முக்கிய மைல்கல்.
படத்தின் கதை உணர்வைப்பிழிவதாகவோ கண்ணீரைத் தாரைதாரையாக ஓட வைப்பதாகவோ எனக்குப்படவில்லை. நான் சார்ந்தவர்களுக்கும் அப்படிப் படவில்லையென்றே நினைக்கிறேன். ஆனால் வெளியே இது அதீத பாதிப்பை உண்டுபண்ணியுள்ளது. நிறையப்பேர் இப்படத்தைப்பார்த்து தாம் அடைந்ததாகக் கூறும் பாதிப்பு, படம்பார்க்கும்போது எனக்குத் தோன்றவில்லை. அங்கேயே இருந்ததுதான் காரணமோ தெரியவில்லை. ஈழத்தமிழனாக எனக்கு இப்படத்தின்மேல் நிறைய விமர்சனமுண்டு. சில கோபங்களும். ஆனால் ஒரு சினிமா ரசிகனாக என்னை மிகவும் ஈர்த்தது இப்படம். தமிழ்த்திரையுலகில் இப்படிக்கூட படமெடுக்கிறார்கள் என்று வியக்கவைக்கும் படங்களில் இதுவுமொன்று. உண்மையில் புதியசரித்திரமொன்று படைத்திருக்க வேண்டியபடம். ஆனால் தோற்றுப்போய்விட்டது. இதன்தோல்வி வித்தியாசமாக ஏதோவொன்றை தமிழ்ச்சினிமாவிலிருந்து எதிர்பார்க்கும் ஒவ்வொருக்கும் வருத்தமேற்படுத்தும் செய்தி. எனக்கும் தீராத வருத்தம்தான். இத்தோல்வியோடு இன்னபிற நல்ல முயற்சிகளும் கிடப்பிற்போயிருக்கும்.
இதேபோல் சந்தோஷ் சிவன் ‘ரெறறிஸ்ட்’ என்றொரு படத்தையெடுத்தார். யாரைச் சொல்கிறார் என்று படத்திற் சரியாகச் சொல்லப்படவில்லை. ரெறறிஸ்ட் என்ற வார்த்தையே இப்போது அலுத்துவிட்டது. அதன் சரியான பொருள் எனக்குக் குழப்பமாகவே இருக்கிறது. ஓரு சினிமா ரசிகன் என்ற வகையில் இப்படமும் என் உள்ளங்கவர்ந்த படம். தமிழின் திருப்புனைகளில் முக்கியமான படமென்று நான் சொல்வேன். மிக வேகமாக குறைந்த நேரத்துக்குள் கதை சொல்லப்பட்டுள்ளது. பாட்டுக்கள் அடிதடிகள் எதுவுமில்லை. ஒருவரைக் கொல்ல வரும் தற்கொலைப்படைப் பெண் தன் கர்ப்பத்தின் காரணமாக அக்கொலையைச் செய்யாமல் விடுகிறாள். இத்தோடு படம் முடிகிறது. எனக்கோ அதன்பிறகுதான் உண்மையான கதையே ஆரம்பிக்கிறது. அக்கதை பற்றி இப்போது இங்கே வாதிக்கவில்லை. பிறகு எழுதுகிறேன். வழமையான தமிழ்ச்சினிமாவிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இப்படமும் தோல்விதான். பலருக்கு அப்படியொரு படம் வந்ததே தெரியாது. வெளிநாட்டில் பல விருதுகளைக் குவித்தாலும் தமிழ்ச்சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டது. சந்தோஷ் சிவன் சொன்னார்: “என்ன செய்வது? இரண்டரை மணிநேரம் படமெடுத்தால்தான் அது படம் என்ற நிலைமையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.” அத்தோடு நாலு பாட்டு நாலு சண்டை (உண்மையான சண்டையில்லை. ஒருத்தனே பத்துப்பேரை துவைக்கவேண்டும்) போட்டால்தான் படமோடும்.
ஆனால் இப்படங்கள் தோல்வியடைந்ததிலும் ஒரு ஆறுதல், நிம்மதி உண்டு. தமிழ்த்திரையுலகில் ஒரு படம் வெற்றிபெற்றால் பத்துப்படம் அதேபோல் வரும். இதுதான் நிலை. தற்செயலாகக் கன்னத்தில் முத்தமிட்டால் அல்லது ரெறறிஸ்ட் மாபெரும் வெற்றி பெற்றிருந்தால்,… நிலைமையை நினைக்கவே பயமாக இருக்கிறது. அவர்களின் கதைக்குக் களங்கள் தேடி எல்லா இயக்கத்தையும் சந்திக்கு இழுத்திருப்பார்கள். நக்சலைட்டுக்களிலிருந்து கடல்கடந்த இயக்கங்கள் அனைத்தையும் படத்தில் சேர்த்திருப்பார்கள். மணிரத்தினத்தின் படத்திலிருந்த ஓரளவு நடுநிலைமையும் யதார்த்தமும்கூட அப்படங்களிற் கிடைத்திருக்காது. அனைத்தையுமே நினைத்தபடி பந்தாடியிருப்பார்கள். அப்படியொரு அபத்தம் தவிர்க்கப்பட்ட ஒரு காரணத்துக்காக இப்படங்களின் தோல்விகளுக்காக நான் ஆறுதலடைகிறேன். மேற்சொன்ன இருபடங்களும் அவற்றின் வித்தியாசமான முயற்சிக்காக, புதுப்பாதையொன்றை ஏற்படுத்த முயன்றதற்காக ஆதரிக்கிறேன். திருப்பவும் சொல்கிறேன் ஓர் ஈழத்தவனாக இப்படங்கள் மீது எனக்கு விமர்சனமுண்டு கோபங்களுண்டு, குறிப்பாக ரெறறிஸ்ட் மீது.
வந்ததுதான் வந்தீர்கள். அப்பிடியே ஊடகவியலாளன் 'மாமனிதன்' சிவராமின் கொலைக்கு நீதியான விசாரணை தேவையென மனித உரிமைகள் ஆணையகத்துக்கு முறையிடும் மனுவில் உங்கள் பொன்னான வாக்குகளையும் போட்டுச் செல்லுங்கள்.
சந்திரமுகியில் தலைவர் பின்னியெடுத்திருக்கிறார். ரஜனி படத்துக்குரிய அத்தனை சூத்திரங்களையும் உள்ளடக்கி (அரசியல் உட்பட) வெளிவந்து சக்கை போடு போடுகிறது சந்திரமுகி. ஏறத்தாழ 3 வருடங்களின் பின் வரும் படமிது. பாபா படத்தோல்வியில் துவண்டிருந்த ரசிகர்களுக்கு நல்ல தீனி. எல்லோரும் ‘ஜென்ம சாபல்யம்’ அடைந்து விட்டார்கள். பிறவிப் பயனை அடைந்த அவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாலே புரியும். இனி படத்திற்கு வருவோம்.
திரைக்கதை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மணிச்சித்திரதாழின் படி தானென்றாலும் அருமையாக கதை பின்னப்பட்டுள்ளது. அழகான படியெடுப்பாளன் என்ற பட்டம் வாசுவுக்குத் தரலாம். ரஜனி பின்னியெடுத்திருக்கிறார். அவர் அறிமுகமாகும்போது சருகுகள் அந்தரத்தில் நிற்பது அழகான ‘சூப்பர்’ கற்பனை. அறிமுகக் காட்சியில் அவர் ஆட்களைத் துவைத்தெடுப்பது கலக்கல். பிரபுவும் நடித்திருக்கிறார். அடிக்கடி அவர் சீரியசாகக் கதைக்கும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.
வடிவேலு நகைச்சுவைக்காக வருகிறார். ஆனால் நிறைய காட்சிகள் அருவருப்பாக இருக்கின்றன. நாசர் ஒப்புக்கு நடித்துள்ளார். படம் முழுவதும் ரஜனி ஆதிக்கம் தான். ஜோதிகா கடைசி 30 நிமிடங்களில் தான் யாரென்று நிருபிக்கிறார். அழகான ஆக்ரோசமான நடிப்பு. சந்திரமுகியின் ஆவி புகுந்த பின் அவரின் நடிப்புத்திறன் ‘சூப்பர்’.
இசை பரவாயில்லை ரகம். தேவுடா பாட்டு வழமையான ரஜனியின் அறிமுகப் பாட்டுக்கள்(opening song) போல் வரவில்லை. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. அறிவியல் உண்மைகளின் படிதான் எல்லாக் காட்சிகளும் போகிறது என்று சொல்ல முடியாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அறிவியல் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது. இதில் மிகை நடிப்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. ஆனால் இருப்பதாகப் படுகிறது. மிகக் கவனமாக மூடநம்பிக்கை பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்புகிறது. ஆனால் மூடநம்பிக்கை ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. அது எப்படி சாத்தியப்படுகிறது என்பதில்தான் நெறியாள்கையின் (டைரக்சன்) திறமை உள்ளது. உண்மையில ஆவி இருப்பதாகச் சொல்லப்படுகிறதா? அல்லது அதெல்லாம் பொய், வெறும் ‘பிளவாளுமை’ என்று சொல்லப்படுகிறதா? தீர்மானமாச் சொல்ல முடியாது. நல்ல பட்டிமன்றம் ஒன்றுக்கான அருமையான தலைப்பு.
படத்தில் ஒரு பாம்பு காட்டப்படுகிறது. அது ஏன் என்று பலரும் குழம்புகிறார்கள். அதில்தான் படத்தின் மையமே இருக்கிறது. அதை பலவிதமான வாசிப்புக்கு உட்படுத்தலாம். எப்படியெப்படி வாசிக்கலாம் (பாக்கிறதைத் தான் சொல்லிறன்) என்பதை நான் இங்கே சொன்னால் சுவையில்லை. உங்களின் அனுமானத்துக்கே விட்டுவிடுகிறேன்.
மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையா என்பதை இனி படம் பார்க்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும். அப்ப இன்னும் படம் பார்க்கவில்லையா? என்று கேட்கிறீர்களா? இல்லை. படம் பார்க்கவில்லை. பிறகெப்படி இவ்வளவும் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா? தமிழ்மணத்தில் சந்திரமுகி பற்றி எழுதப்பட்ட பதிவுகளில் பொறுக்கியைவதாம். மேற்கூறியவைகள் எவையும் என் கருத்துக்களே அல்ல. அப்போ ஏன் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா? அதுதான் முக்கியமே. இப்போது கொஞ்ச நாட்களாக எழுத முடியாமல் நிறைய வேலை. பரீட்சைகள் வேறு நெருங்கி வருகிறது. கொஞ்ச நாளா எழுதுவதில்லை என்று இருந்த நான் திடீரென்று அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால்;
சந்திரமுகி பற்றி நாலு வார்த்தை எழுதாவிட்டால் எங்கே நாம் தொலைந்து போவோமோ, மறக்கடிக்கப்பட்டு விடுவோமோ, தனித்துப் போய்விடுமோ என்று எழுந்த பயத்தில், கும்பலில் கோவிந்தாவாக கோசம் போட்டு எழுதின பதிவுதான் இது. என்னையும் உங்கள் ஆலாபனையில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே. சந்திர முகிக்கு ஒரு ஓ............
தமிழ்ச் சினிமாவில் இரட்டை வேடம் என்பது ஒன்றும் புதிதன்று. தற்போது பத்திலொரு படமாவது நடிகனோ நடிகையோ இரட்டைவேடம் ஏற்று நடிக்கும் படங்களாக வெளிவருகின்றன. இரட்டை வேடம் போடுதல் எனும் நிலைப்பாடு தேவைதானா என்பதே என்கேள்வி.
ஒரே மாதிரியுள்ள இரு நபர்களால் (அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள, உதாரணம் மைக்கேல் மதன காமராஜன்) ஏற்படும் குழப்பங்களை வைத்துச் சில படங்கள் வெளிவந்துள்ளன. (ஆளவந்தான், பங்காளி, அட்டகாசம், பார்த்தீபன் கனவு, வாலி) அவ்வாறான படங்களுக்கு இரட்டை வேடத்தில் நடித்தல் என்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் கதையே அதுதானே.
ஆனால் உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்கள் எந்த விதத்திலும் சம்பந்தப்படாமலும் இரட்டை வேடமேற்று நடித்துள்ள நிறையப்படங்கள் வந்துள்ளன. (ஒரு கைதியின் டயறி, அமைதிப்படை, அய்யா, நட்புக்காக) இவற்றிற் பெரும்பாலானவற்றில் ஒரே நடிகர் தந்தை மகனாக நடிப்பார். இந்த உறவுமுறை கூட இல்லாமலும் இரட்டை வேடமேற்ற சில படங்கள் வந்துள்ளன. உதாரணம் பார்த்தீபன் கனவு, ஜெய்சூரியா. பார்த்தீபன் கனவில் வரும் சினேகாக்கள் சகோதரிகளோ உறவினரோ கூட இல்லை. அதுபோலவே ஜெய்சூரியாவில் வரும் அர்ஜூன்களும். ஆனால் ஒருவரையே இரு பாத்திரத்துக்கும் நடிக்க வைத்து உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களைக் கலந்து படத்தை ஒப்பேற்றி விட்டார்கள். அப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா என்று சிந்திக்கக் கூடாது. சினிமாவில் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பது இப்போது பைத்தியக் காரத்தனமாய்ப் போய்விடும்.
உருவ ஒற்றுமையால் ஏற்படும் குழப்பங்களைச் சம்பந்தப்படுத்தாமல் வரும் படங்களில் இரட்டை வேடங்களை வைத்துப் படம் பண்ணுவது தேவைதானா? அது அக்குறிப்பிட்ட கதாநாயகனையோ கதாநாயகியையோ மிகைப்படுத்தும் ஒரு செயற்பாடு தானே. ஒருவரை ‘அதிகமாய்’ நடிக்க வைத்து தனிமனிதத் திறமையையும் புகழையும் ஈட்டும் ஒரு நடவடிக்கை தானே. உதாரணமாக கமல் இரட்டை வேடம் செய்கிறாரென்றால் அது அவரது நடிப்புக்குக் கிடைத்த ‘தீனி’ யாகப் பார்க்கப்படுவதும் புகழப்படுவதும் இங்கு சாதாரணம். உண்மையில் அவ்விரண்டு பாத்திரங்களையும் அவரே செய்ய வேண்டிய கதைச்சூழல் நிச்சயமாய் இருக்காது. தேவையே இல்லாமல் ஒருவரின் புகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகவே இது இருக்கிறது. கதாநாயகர்களுக்காகவே கதைகள் உருவாக்கப்படும் இச்சூழ்நிலையில் இரட்டை வேடக் கதைகளும் அப்படியே உருவாகின்றன.
இது பல நடிகர்களையும் தாண்டி இன்று சரத்குமார் இதில் கொடிகட்டிப் பறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அவர் இரட்டை வேடமேற்று (தந்தை-மகன்) நடித்த படங்களெல்லாம் வெற்றிப் படங்கள் என்று செய்திகளும் விளம்பரங்களும் கூறுகின்றன. இது இன்னும் முற்றிப்போய் சத்தியராஜ் வில்லனாகவும் கதாநாயகனாகவும் வந்து ‘கலக்கிய’ சமீபத்துப் படமான ‘ஐயர் ஐ.பி.எஸ்’ வரை வந்துவிட்டன.
எதற்கு இரண்டு நடிகர்களுக்குச் சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும்? ஒருவரின் சம்பளத்தோடே இரண்டு பாத்திரங்களையும் முடித்து விடலாம் என்ற வியாபார நோக்கோடு கூட இம்முறை பயன்படுத்தப் படலாம். ஆனாலும் இம்மாதிரி முயற்சிகளும் இந்தப்போக்கும் சினிமாவுக்கு நல்லதா என்று எனக்கு விளங்கவில்லை. இப்போதெல்லாம் இரட்டை வேடமேற்று நடிக்கும் படங்களைப் பார்த்தால் ரசிக்க முடிவதில்லை. எனக்கு மட்டுமே இப்படிப் பிரச்சினை இருக்கலாம். தமிழ்ச் சினிமாவின் தேக்கத்துக்கு அல்லது பின்னடைவுக்கு இந்த இரட்டை வேடக் காதாபாத்திரங்களும் குறிப்பிட்ட அளவாவது காரணமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். என் மனத்துக்குத் தோன்றியவற்றை இங்கே எழுதினேன், அவ்வளவே.
தமிழ்ச் சினிமாவை விட்டு அமெரிக்க மற்றும் ஏனைய படவுலகுகளிலும் இப்படி இரட்டை வேட நடைமுறை இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத்தெரிந்தவர்கள் அதுபற்றி சின்னக் குறிப்பை எழுதிவிட்டுப் போங்கள்.
சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னேனா தெரியாது. கோர்வையாக வராதது போல் ஒரு தோற்றமேற்படுகிறது. புரிந்தால் ஏதாவது சொல்லுங்கள்.
வணக்கம்! சமீபத்தில் “ஐயா” படம் பார்த்தேன். சரத்குமார் இரட்டை வேடம் போட்டு நடித்த படம். (இரட்டை வேடம் போடுதல் பற்றி எனக்குப் பலத்த கேள்விகள் உள்ளன. அவற்றைப் பிறகு பதியலாம் என்றிருக்கிறேன்.) அதில் இளைய சரத்குமார் உதைபந்தாட்டம் (foot ball) ஆடும் காட்சியொன்று வருகிறது பாருங்கள். அதைப்பார்த்ததும் வயிற்றெரிச்சல் தான் வந்தது.
தங்கள் ஊர் அணி தோற்கிற கட்டத்திலிருக்கிறபோது களத்தில் (கவனிக்க மைதானத்திலில்லை) குதிக்கிறார் சரத். “அண்ணே வேணுமின்னே உதக்கிறாங்கண்ணே” என்று சொல்லும் ஒரு வீரனிடம் (?) யார்றா அது? என்று கேட்டு அறிந்துகொள்ளும் சரத், “சரி அவன நா பாத்துக்கிறேன்” என்றுவிட்டு விளையாடத் தொடங்குகிறார். சரத் களத்திலிறங்கி விட்டால் அவரை வைத்து எப்படி உதைபந்து விளையாடுவது? அருக்கேற்ற மாதிரியே குத்துச்சண்டை மாதிரி ஏதோ செய்கிறார். நடுவரென்று ஒருவர் அங்கே நிற்பது ஏனென்று தெரியவில்லை. (சில படங்களில் காவல்துறையே ஏன் நிற்கிறது என்று விளங்காதபோது இதுஎன்ன பெரிய குறை?) எதிரணி வீரர்களுக்கு ஒவ்வொரு குத்து, உதை விட்டபடியே முன்னேறிச்செல்லும் சரத் அனைவரையும் விலத்தி பந்தை உதைக்கிறார். பேற்றுக்காப்பாளனும் (Goal Keeper) சரத்துக்குச் சளைத்தவனா என்ன? அவன் பந்தைப் பிடிக்கிறான். அந்தோ பரிதாபம். பந்து அவனைப் பேற்றுக் கம்பங்களுக்கிடையால் தூக்கிக்கொண்டு (உண்மையாத்தான், ஆகாயத்தில பறந்துபோறார்) போய்விடுகிறது. சரத் அணிக்கு ஒரு கோல் கிடைத்துவிட்டது.
இவர்களுக்கு என்ன தெரிந்து படமெடுக்க வந்தார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ஒரு விளையாட்டைக் கூடவா அதை எப்படி விளையாடுவதென்று தெரியாமல் படத்திற் புகுத்தினார்கள். இப்படிக்கூட ஒரு விளையாட்டைக் கொச்சைப்படுத்த முடியுமா? (இவ்வளவு வன்முறையான விளையாட்டாகவா அது இருக்கிறது? மைதானம் விதப்புக்கு சேறடிச்ச வயல்மாதிரி கிடக்கு) கதாநாயகனை பிரமிப்பாகவும் பிரமாண்டமாகவும் காட்டுவதற்காகப் பறந்து பறந்து சண்டைபோட்டார்கள்; ஒருவனே முப்பதுபேரை நொருக்குவதாகக் கதை விட்டார்கள்; பாத்திரக்கடைகளிலும் காய்கறிச் சந்தையிலும் சண்டைபோட்டார்கள்; இப்போது விளையாட்டிலும் கைவைக்கத் தொடங்கிவிட்டார்கள். இது உதை பந்தாட்டத்திற்கு மட்டும் நடக்கவில்லை. சமீபத்தில் கில்லிக்குக் கூட கபடி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இன்னும் என்னென்ன கூத்துக்கள் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை.
"இப்ப என்னத்துக்கு இதுக்கெல்லாம் துள்ளிறியள்? இது வழமையா சினிமாவில நடக்கிறதுதானே" என்று யாராவது கேட்கக் கூடும். ஆம் இப்படிப் பலவற்றைச் சகிக்கப் பழகியாகி விட்டது. ஆனால் உதைபந்தாட்டத்தின் தீவிர இரசிகன் என்ற வகையில் இதைப்பார்த்துப் பொறுக்க முடியாமல் தான் இங்கே வந்து கொட்டி விட்டேன். (கொட்டுவதற்குத் தானே இந்த வலைப்பகுதி) இன்னும் இதைப்பற்றி யாரும் பெரிதாகக் கதைக்க வில்லை. கதைக்கவும் மாட்டார்கள். (அவனவன் என்ன வேலயத்தா திரிஞ்சிகிட்டிருக்கான்?) சில வேளை கிறிக்கெற்றில் இப்படி ஏதாவது புருடா விட்டால் என்ன செய்வார்கள் என்று அறிய ஆவல்.
நான் இங்கே உதைபந்தாட்டம் என்பது Foot Ball என்று ஆங்கிலத்திற் சொல்லும் விளையாட்டு. அதுவும் பெரிதளவு ஆசிய நாடுகளிலும் இங்கிலாந்திலும் சொல்லப்படும் வார்த்தை. இவ்விளையாட்டை Soccer என்று அமெரிக்க சார்ந்த நாடுகளிலும் ஊடகங்களிலும் சொல்வதுண்டு. (இதைப்பற்றின குழப்பங்கள் சுவாரசியமானவை.) Footballஎன்பதற்கு அமெரிக்காவில் வேறு அர்த்தம். (இந்த அர்த்தத்தில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் ஓரளவு சரியாயிருந்திருக்கும். எண்டாலும் பந்தக் கையிலயெல்லோ தூக்கிக்கொண்டு ஓடியிருக்கோணும்)
சரி தமிழில் இந்த விளையாட்டை எப்படிச்சொல்வது பொருத்தம்? கால்பந்து? உதைபந்து? இரண்டுமே பாவிக்கப்படுவதை அறிவேன். தெரிந்தவர்கள் சொல்லவும்.
ஜெயகாந்தனின் நாவல் படமாக்கப்பட்டுள்ளது. கறுப்பு வெள்ளையில் வந்த இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று நீண்ட நாட்களாய் அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மலேசியாவின் கோலாலம்பூரில் கண்ணில் தெரியும் வீடியோக் கடைகளில் எல்லாம் ஏறி இறங்கியும் பலனில்லை. பலருக்கு அப்படி ஒரு படம் வந்ததே தெரிந்திருக்கவில்லை. கொழும்பிலும் நிறையக் கடைகள் ஏறிஇறங்கியும் பலனில்லை. இறுதியில் யாழ்ப்பாணம் குருநகரில் ஒரு பழைய கடையில் கண்டுபிடித்தேன். (பிரபலமான வேறுகடைகளில் கிடைக்கவில்லை). படக்கொப்பி பரவாயில்லை. பார்க்கக் கூடியவாறு இருந்தது. படமும் அப்படித்தான்.
எழுத்தாளராக வரும் நாகேஷ் அசத்தியிருந்தார். மற்ற நடிகர் நடிகைகளின் பெயர்கள் தெரியாது. ஏறத்தாள எல்லோரும் நன்றாகவே நடித்திருந்தனர்.அதில் கங்காவாக வருபவரின் நடிப்புத்தான் அசத்தல். யாரது நடிகை இலட்சுமியா? என்னைப்பொறுத்தவரைஇ கங்காவை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார். அவர் தான் படத்தின் அத்திவாரமே. ம்…இப்படி நடிப்பையும் நடிகைகளையும் இனி எங்கே பார்க்கப்போகிறோம். இதேபோல் பெண்ணை (மட்டுமே?) மையப்படுத்தி தமிழ்த் திரைப்படங்கள் வருமா? பாசிலின் “பூவே பூச்சூடவா” வை ஓரளவு சொல்லலாம்.
படத்தின் முடிவு நாவலிலிருந்து மாறுபாடாகக் காட்டப்பட்டிருந்தாலும் ஏனைய பகுதிகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. நாவலில் ஏற்பட்ட உணர்வு சிதையாமல் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் நாவலை வாசித்து ஊறியபின் படத்தைப்பார்த்ததால் முழுமையான உணர்வைப் பெற்றேன். நாவலைப் படிக்காத யாராவது இப்படத்தைப் பார்த்துவிட்டு பின் நாவலைப்படிக்கும் போது ஏற்படும் அல்லது ஏற்பட்ட உணர்வை அறிய ஆவலாயிருக்கிறேன். இப்படம் வழமையிலிருந்து மாறுபட்ட ஒரு மாற்றுச் சினிமா முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஜெயக்காந்தனின் இந்நாவல் உருவாக்கிய சர்ச்சையளவுக்கு இப்படம் பேசப்படவில்லையென்றே நினைக்கிறேன். (பெண்ணொருத்தி பிற ஆடவன் ஒருவனுடன் கலந்த பாவத்தைப் போக்க தலையில் தண்ணீர் ஊற்றிப் பாவத்தைக் (?) கழுவிக்கொள்வது)
ஏன் இயக்குநரால் நாவலின் முடிவு மாற்றப்பட்டது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும்.
கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று. “அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா எமனும் நாந்தாண்டா…. இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம்.
ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம்.
ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.
50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை.
தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.
படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:
எப்படியோ கிரண் கமலைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்திருக்க வேண்டும்.
கமல் வந்து போனதை எப்படியோ அறிந்து கமலைத் தேடி கிரண் ஒரு பாட்டுப் பாட கமல் ஓடி வந்து….
தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மை உச்சக் காட்சியான ரயில் நிலையத்தில் மாதவன் கமலைப் பிடித்து அழைத்து வந்து…..
இறுதி நேரத்தில், கிரணுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருந்து அவர்தான் மாதவன் மூலம் இப்படி ஒரு நாடகமாடி கமலை வரவழைத்தார் என்று படத்தை முடித்திருக்கலாம்.
கமலின் நாய் தாலியைத் தூக்கிக் கொண்டு கமலைத் தேடி ஓட துரத்திக் கொண்டு வரும் மாதவனும் கிரணும் கமலைக் காண….
கமலே நாசருடனும் அடியாட்களுடனும் பயங்கரச் சண்டை போட்டு கிரணை மீட்டிருக்கலாம். தேவையானால் மாதவனுடன் கூட சண்டை போட்டிருக்கலாம். அதிலும் பயங்கர அடிவாங்கி சாகுந்தருவாயில் கமல் இருக்கையில் காதலியின் கதறல் கேட்டு மீண்டும் சக்தி வந்து செயலற்றிருந்த கை காலெல்லாம் சரிவந்து ஒரே அடியில் அனைவரையும் தூக்கியெறிந்திருந்தால்... இன்னும் நன்று. அல்லது ஏதாவதொரு சாமியின் அருள் வந்து செய்வதாகக் கூட காட்டியிருக்கலாம். செத்துப் போனதாக மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு கூட இவ்வளவும் சாத்தியமே. (சொக்லேட் மாதிரி).
இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது. ஏதாவது செய்திருக்கலாம்.
சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார்.