Sunday, June 26, 2005

அன்னியன் பற்றி...

ஒரு வழியாக அன்னியன் பார்த்தாயிற்று.
இது விமர்சனம் அன்று.
அதைத்தான் செய்கிறொமென்று நிறையப்பேர் எழுதியாயிற்றே.
படம் சொல்லும் கருத்து எனக்குத் தேவையில்லாதது. குறிப்பாக சங்கரின் படத்தில் இதைப்பற்றியெல்லாம் கதைக்கமுடியாதென்பதும் என்கருத்து. பொழுதுபோக்கு என்பதைத்தாண்டி இப்படம் விதைக்கப்போகும் கருத்தியலைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. அது எனக்குப் புரியவுமில்லை.

எனக்குத் தோன்றியவை.

தமிழ்ச்சினிமாவில் ஒரு நோய் இருக்கிறது. கதைக்காக நடிகனைத் தேடாது, நடிகனுக்காகக் கதையைத் தேடுவது. அப்படிச்செய்தும் பலவற்றில் கதை இருப்பதில்லை. அப்படி வந்ததுதான் அன்னியன். விக்ரமுக்காகவென்றே ஒரு கதையைச் செய்திருக்கிறார் சங்கர். பல வேடங்களில் பின்னக்கூடியமாதிரி விக்ரமுக்கு ஒரு பாத்திரம் வரத்தக்கதாகச் சொல்லிச் செய்த கதை. விக்ரமின் நடிப்புக்குத் தீனிபோடவென்றே இக்கதை செய்யப்பட்டுள்ளது. பல வேடங்களில் வெளுத்துக் கட்ட நல்ல சந்தர்ப்பம் விக்ரமுக்கு. மனிதர் ஏமாற்றவில்லை. பின்னியெடுத்திருக்கிறார்.

ஆனால் சில இடங்களில் காசியும், பிதாமகன் வெட்டியானும் வந்து போகிறார்கள். பல முகபாவங்கள் காசியின் சாடை. தன் காதல் மறுக்கப்பட்டபோது தற்கொலை செய்ய படிக்கட்டுக்களில் இறங்கிவரும்போது, கைகள் ஆட்டாமல் ஓடும் பிதாமகன் வெட்டியான்தான் தெரிகிறது. 3 பாத்திரத்துக்குமே கன கச்சிதமாகப்பொருந்துகிறது உடம்பும் முகமும். அம்பி எல்லோரினதும் பரிதாபத்தைத் தட்டிச்செல்கிறார். நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார். மாறுபட்ட வேடங்களில் நடித்தல் என்பது முத்திப்போய், கணத்துக்குக் கணம் பாத்திரம் மாற்றிப்பேசுவது சுத்த அபத்தம். (பிரகாஷ்ராஜுடனான விசாரணைக்காட்சி. அதிலும் இவரின் நடிப்புத்திறனைப்பார்த்து கையிலிருந்த துப்பாக்கியையும் அவர் கீழே போட்டுவிடுவாராம். நானே ஒரு நடிகன் என்று தொடங்கி பிரகாஷராஜ் சொல்வது விக்ரம் பற்றிய ஒரு தற்புகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட காட்சி.)

வழமையான சங்கர் படம்தான். சண்டைக்காட்சிகள் வைப்பதென்று வந்தபிறகு அதில் ஒரு நேர்த்தியைச் செய்திருக்கிறார்கள். ஏதோ வழமையான காய்கறிச் சந்தைச் சண்டையோ, சட்டிபானைகள் உடையும் சண்டையோ இல்லாமல் புதுசா, (ஆனால் ஏறகெனவே மட்ரிக்ஸ், ஸ்பைடர் மான் என்பவற்றில் பார்த்ததுதான்) கவர்ச்சியா சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லாம் புழுகுதான் என்றாலும் வயித்தெரிச்சலைக்கிளப்பாத சண்டைகள்.

பாடல்கள் வழமையானவைதான். பின்னணி இசை பரவாயில்லை. தற்காலச் சினிமாவைக் கருத்திற்கொண்டால், சதாவுக்கு வஞ்சகம் செய்யப்படவில்லை. (அவரும் வஞ்சகம் செய்யவில்லை). வெளிநாட்டுத் தெருக்களில் ஆடாமல் கட்டடத்துள் ஆடியது, தமிழ்ச்சினிமாவில் ஒரு புதுமையான முயற்சி. வாழ்த்துக்கள் சங்கர்.

மற்றவர்களும் சிறப்பாகத்தான் செய்துள்ளார்கள். விக்ரமைவிட படத்தில் மிளிரும் ஒருநபர் பிரகாஷ்ராஜ்தான். எனக்கு மிகப்பிடித்த நடிகருள் ஒருவர். என்னைப்பொறுத்தளவில் விவேக் வந்து போகிறார் அவ்வளவே. நகைச்சுவைக்கென தனியொரு நடிகரை வைத்துக்கொள்ளும் வரை தலையிலடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

விக்ரம் ஏதோ இன்னொரு தேசியவிருது என்ற அளவுக்குப் புகழ்ந்து தள்ளியிருந்தார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுதான் அக்கருத்தின் மீதான என் கருத்து. தனியே நடிப்புக்கு மட்டுந்தான் கருத்திலெடுக்கப்படுமாயிருந்தால் சரிதான். விக்ரம் அசைக்க முடியாதவர். இன்றைய நிலையில் ஓரிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாத பாத்திரம் தான் அது. ஆனால் கதைக்களமோ சரக்கற்ற வெறும் மசாலாதான். அதில் விக்ரமை மட்டும் வைத்து எப்படி?

இப்படத்துக்கான உழைப்பை உணர முடிகிறது. விக்ரமின் உழைப்பு அலாதியானது. ஆனால் படத்துக்காக செலவு செய்யப்படும் கோடிகளின் எண்ணிக்கையும் பாவிக்கப்ட்ட கமராக்களின் எண்ணிக்கையும் தான் சிறந்தபடம் என்பதை நிர்ணயிப்பதாக நினைக்கப்படுகிறது. யாருக்குத் தேவை 25 கோடியில் படமும் 100 கமரா பாவித்து பாடலும்?

விக்ரம் தனக்கெனத் தளம்பாத ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். வர்த்தக ரீதியான படங்களிலும் அதே நேரம் தேர்ந்தெடுத்த சில நல்ல படங்களிலும் ஒரே சீராக நடிக்க வேண்டும். இப்படி ஒன்றரை வருடமாக ஒரு வர்த்தகப்படத்துக்காக மட்டுமே உழைப்பது சுத்த முட்டாள்தனம். அப்படி இதுவொன்றும் முக்கியமான படமன்று.
பாலுமகேந்திரா விக்ரமுக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார். தான் சாக முதல் இயக்க விரும்பும் ஒரு படம் விக்ரமுக்காக என்று சொல்கிறார். ஏற்கெனவே எல்லாம் தயார் பண்ணி வைத்திருக்கிறாராம். இன்னும் சில நல்ல கதைகளும் படங்களும் விக்ரமுக்காக காத்திருக்கலாம். விரைவில் நல்ல படமொன்றுடன் விக்ரமைச் சந்திக்க ஆசை.

அன்னியன் படம் பார்க்கலாம் விக்ரமுக்காக - என்னைப்பொறுத்தவரை, விக்ரமுக்காக மட்டுமே.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, June 22, 2005

சிதையா நெஞ்சு கொள்-1

தங்கமணியின் பதிவில் முத்தையன்கட்டில் குளத்துநீரைப் பாவித்து மின்னுற்பத்தி செய்த ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார். அச்செய்தியை அதற்குமுன்பே புதினத்தில் பார்த்திருந்தேன். தங்கமணியின் பதிவைப்பார்த்த பின்தான் அதன் முக்கியத்துவைத்தை உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் அந்த மனிதன் எனக்குத் தெரிந்தவனாயிருக்க வேண்டும். முகத்தைவிட பெருவிரலில்லாத வலது கைதான் எனக்கு ஆதாரமாய் இருக்கிறது. அந்த நபர் நான் நினைப்பவராக இருக்கும் பட்சத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

முத்தையன்கட்டுக் குளத்தின் சீர் செய்யப்படாத மடைக்கதவுகளுக்குள்ளால் வெளியேறி கழிவுநீராக அநாவசியமாய்ப் போகும் நீரைப்பற்றி யோசித்திருக்கிறேன். இன்னும், இரணைமடுவின் வான்பாயும் நீரையோ, அல்லது சீரமைக்கப்படாத குளக்கட்டைக் கருத்திற்கொண்டு குளத்துநீரைத் திறந்து வெளியேற்றும்போது பெருக்கெடுத்துப்பாய்ந்து அநாவசியமாய்ப்போகும் நீரைப் பார்த்தும் பொருமியிருக்கிறேன்.

தேவைகள் தான் சில கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன. அந்தவகையில் போர்க்காலத்தில் எங்கள் மக்களால் செய்யப்பட்ட சில புதுமைகளைப்பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜாம் போத்தல் விளக்கு.
இதைப்பற்றி நான் சுந்தரவடிவேலின் பதிவிற் சொன்னபோது, அவர் சாதாரண போத்தல் (Bottle) விளக்கென்று நினைத்துவிட்டார். அது சாதாரண விளக்குகளைவிட வித்தியாசமானது. எண்ணைய்ச் சிக்கனத்துக்காகத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1990 இன் ஆனியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் சிங்கள அரசுக்கெதிராகத் தொடங்கியது. போர் தொடங்கியவுடனேயே தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை போடப்பட்டது. மருந்துப்பொருட்கள் கூடத் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்த மின்நிலையமூடாக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற அளவில் சுழற்சிமுறையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. (எங்கள் ஊருக்கு பகல் பத்துமணிக்கு வரும்). பொறுக்குமா சிங்கள அரசு? சில நாட்களிலேயே அந்தச் சுன்னாக மின்நிலையம் சிங்கள வான்படையாற் குண்டுவீசி அழிக்கப்பட்டது. அத்தோடு குடாநாடு முற்றாக இருளில் மூழ்கியது.

அப்போது, குடாநாடு முற்றாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. வன்னியுடன் இணையும் ஒரே பாதையான ஆனையிறவில் இராணுவம் குந்தியிருந்தது. மற்றைய பாதை பூநகரிப் படைமுகாமால் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்தவுடன் பொருட்களின் விலைகளனைத்தும் சடுதியாக உயர்ந்தன. அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றைக் காணவே கிடைக்கவில்லை. ஒருவருக்கு 100 கிராம் சீனி வீதம் கடையொன்றில் விற்கப்பட்டபோது, அதை வாங்க 300 பேர் வரிசையில் காத்திருந்த நாட்கள் ஞாபகமிருக்கிறது. அதில் சீனி வாங்குவதற்காகவே பாடசாலை போகாமல் சில சிறுவர்களும் அடக்கம்.

இந்த நேரத்தில் மண்ணெண்ணெய் பயங்கரத் தட்டுப்பாடு. ஒரு லீற்றர் 350 ரூபா விற்றது. (இத்தொகை அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான தொகை). எங்கள் ஊரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த மோட்டார் சைக்கிளோ காரோ ஓடி நான் பார்த்ததில்லை. அவ்வளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு. பெற்றோல் வாசனையையே மறந்துவிட்டிருந்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது; நிலவு வெளிச்சம் இருக்கும் காலங்களில் எங்கள்வீட்டில் விளக்குக்கேற்றுவதில்லை. எங்கள் அயலிலும் தான். இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதைகள் சொல்லி விளையாடி, பாட்டுக்குப்பாட்டுப் போட்டி வைத்து, அம்மம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிப்போக நேரம் சரியாக இருக்கும். (அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்).

இப்படியான நேரத்தில் பத்திரிகைகளில் ஒரு விளக்கைப்பற்றிச் செய்தியும் அறிவித்தலும் வந்திருந்தன. தொடர்ச்சியாக சிலநாட்கள் அவ்விளக்கைப் பயன்படுத்தச்சொல்லி அறிவுரைகளும் வந்தன. அதுதான் ‘ஜாம் போத்தல் விளக்கு’. (இதைவிட வேறு பெயர் அந்த விளக்குக்கு இருந்ததாக நான் அறியவில்லை.)

சின்ன ஜாம் போத்தல் ஒன்றை எடுத்து அதற்குள் சிறிதளவு பஞ்சு வைத்து, கடுதாசியைச் சுருட்டிச் செய்த திரியைப் பாவித்து அந்தவிளக்குச் செய்ய வேணும். திரியைக் கவ்வ, நுனியில் சிறிய வளையம் கொண்ட கொழுக்கியொன்றைப்பாவிக்கலாம். அக்கொழுக்கி போத்தலின் விளிம்பில் கொழுவப்பட்டிருக்கும். (இதற்கெல்லாம் சைக்கிளின் வால்வ் கட்டை தான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் பழைய சைக்கிள் ரியூப்புக்களுக்கும் சரியான மரியாதை.) ஏறக்குறைய போத்தலின் அரைவாசிக்கும் சற்று மேலாக திரி முடிவடையும். பஞ்சில் ஊறக்கூடியவாறு மண்ணெண்ணெய் விட வேண்டும். பஞ்சில் ஊறிய எண்ணெய்தான் கடுதாசி வழியாக எரிகிறது. மண்ணெண்ணெய் பஞ்சில் ஊறும் அளவுக்கு மட்டுமே விடப்படவேண்டும்.

இந்த விளக்குத்தான் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பாவிக்கப்பட்டது. இதையே ஹரிக்கேன் விளக்குப்போல மேலே மூடியும் கைபிடியும் வைத்து விதம்விதமாக விளக்குகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் அவ்விளக்குப் பாவித்த ஆக்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

என்னைப்பொறுத்தவரை இது எண்ணெய்ச்சிக்கனத்தைச் சரிவரச் செய்தது. எல்லா மக்களுமே இவ்விளக்கின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். பின்னர் கொஞ்ச நாளில் உப்புப்போட்டால் எண்ணெய் இன்னும் சிக்கனப்படுத்தப்படும் என்ற கதையொன்று ஊரில் உலாவியது. (சும்மா கதைவழிதான்) கிட்டத்தட்ட எல்லோருமே பஞ்சின்மேல் உப்புப்போட்டுப்பாவித்தோம். ஆனால் உப்புப்போடுவதால் எண்ணைய்ச் சிக்கனமுண்டு என்பது எவ்வளவுதூரம் உண்மையென்று தெரியாது. அதை நாம் உணரவுமில்லை. அதற்குரிய விளக்கங்கள் ஏதுமிருப்பதாக நான் அறியவுமில்லை. ஆனால் இந்த விளக்கு மூலம் நாம் எண்ணையை மிச்சப்படுத்தலாமென்று நன்கு உணர்ந்துகொண்டோம்.

கிட்டத்தட்ட ஒருவருடம் அந்தவிளக்கு மட்டுமே பாவிக்கப்பட்டு, பின் ஏனைய விளக்குகளோடு கலந்து பாவிக்கப்பட்டு வந்தது. (பின் எண்ணைய்த் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருந்தது.) யாழ் இறுதி இடப்பெயர்வு வரை எங்கள் வீட்டில் முதன்முதல் செய்த ஜாம்போத்தல் விளக்கு பாவனையிலிருந்தது. (இதற்கிடையில் 3 இடப்பெயர்வு நடந்தாலும் அவ்விளக்கு எங்களோடு கூடவே பயணித்தது.)

இந்தவிளக்கு மூலம் மாதத்துக்கு வெறும் 250 மில்லி லீற்றர் எண்ணெய் அளவுக்குத்தான் சேமிக்க முடிந்திருக்கும். இன்றைக்கு எல்லோருக்குமே இது வெறும் தூசு என்ற அளவுதான். ஆனால் அன்றைய நிலையில் பெரிய பெறுமதி அதற்கிருந்தது. பகலில் பஞ்சிலுள்ள எண்ணெய் ஆவியாகிப் போய்விடக்கூடாதென்பதற்காய் விளக்கை மூடிவைக்கும் காலம் அது. திரியாகப் பயன்படுத்தப்பட்ட காகிதத்துண்டு மாற்றப்படும்போது, பழைய கடுதாசித்துண்டைக் கசக்கிப் பிழிந்து எண்ணைய் எடுப்போம்.

இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இதுதான் ஜாம் போத்தல் விளக்கின் கதை. கதையைச் சரியாகச் சொன்னேனா தெரியவில்லை. குறிப்பாக எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரியாக வெளிப்படுத்தினேனா தெரியாது.
இப்பதிவை இப்போது எழுதத் தூண்டிய சிறிரங்கனுக்கு நன்றி.
மேலும் தங்மணியின் தலைப்பையே நானும் பாவித்ததால் அவருக்கும் நன்றி.
-வசந்தன்-

குறிப்பு:
யாரிடமாவது இந்த ஜாம் போத்தல் விளக்கின் படம் இருந்தால் (மின்கலங்களே இல்லாத அந்த நேரத்தில் கமராவை யார் பாவித்தது என்று கேட்காதீர்கள். கீறப்பட்ட படமேதாவது இருந்தால்) தந்துதவ முடியுமா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, June 20, 2005

காத்திருப்பு -4.



மெல்பேர்ண், 12.05.05

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, June 12, 2005

குளத்தில் நீராடல்

வணக்கம்!

“நீர் ஆடல்” எண்டு ஒரு படப்பதிவு போட்டனான். அதில இந்தத் தலைப்புச் சம்பந்தமா ஓர் உண்மைச் சம்பவத்தைச் சொல்லப்போவதாக் கூறியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன்.

நான் அப்போது எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என்னோடு எட்மன் என்றொருவனும் படித்தான். ஒரே வாங்குதான் நாங்கள் ரெண்டுபேரும். நல்ல கூட்டாளியள். (இப்ப அவன் இல்ல. அவனப்பற்றி இங்கே எழுதியருக்கிறன்)

நாங்கள் எடுத்த பாடம் சித்திரம். அவன் ஓரளவு நல்லாப் படம் கீறுவான். என்னைவிட நல்லாக் கீறுவான். (கீறுதல் எண்டது சும்மா கிறுக்கிற அர்த்தத்தில இல்ல. வரையிற அர்த்தத்தில) அப்ப நடந்த ஓர் இடைத்தவணைத் தேர்வில சித்திரப் பாடத்தில எங்களுக்கு வந்த தலைப்பு, “குளத்தில் நீராடுதல்”.

நானும் எனக்குத் தெரிஞ்ச குளத்தில கொஞ்சப்பேர் குளிக்கிற மாதிரி ஒரு படம் கீறினன். தேர்வுத்தாட்கள் தாற நேரத்தில சித்திர ஆசிரியையும் புள்ளிகள வாசிச்சா. பாத்தா, எப்பவும் எண்பதுக்கு மேல எடுக்கிற எட்மனுக்கு ஐம்பதோ என்னவோ தான். பிறகு எல்லாற்ற விடைத்தாளையும் தந்திட்டு கடசியா அவனக்கூப்பிட்டு, ஏனிப்பிடி படம் கீறினனி? எண்டு கேட்டா. அப்பதான் அவன் கீறின படத்தப் பாத்தம். கேணி மாதிரியொண்டில (யாழ்ப்பாணத்தில படிக்கட்டுக்கள் வச்சு கேணி மாதிரியிருக்கிற சிலதையும் குளம் எண்டு சொல்லுறது.) தண்ணி நிக்குது. அவ்வளவு தான். என்னடா இது எண்டு பாத்தா, பிறகுதான் விளங்கீச்சு, என்ன நடந்தது எண்டு.

குளத்தில் நீராடுதல் எண்டத, குளத்தில் நீர் ஆடுதல் எண்டு விளங்கிப்போட்டான். எண்டாலும் உப்பிடி விளக்கம் எடுக்கிறது சரியான கஸ்டம் கண்டியளோ. அவன் லட்சத்தில ஒருத்தனாயிருக்க வேணும். ஆனா அவன் அப்படித்தான் விளக்கம் எடுத்திருக்கிறான். அந்தக் கேணில நீர் ஆடுறதக் காட்டுறதுக்காகச் சின்னச்சின்ன அலைகள் காட்டியிருக்கிறான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். அவனும்தான். புள்ளிகள் குறைஞ்சதுகூட அவனுக்குக் கவலையில்ல. இந்தக் கதை பள்ளிக்கூடம் முழுக்கப் பரவீட்டுது. அடுத்தநாள் எங்களுக்குப் பாடமெடுக்காத, உயர்தரத்துக்கு மட்டும் ஏதோ ஒரு பாடம் எடுக்கிற வாத்தியார் ஒருத்தர் வந்து எங்கட வகுப்பில கதைச்சார்.

இவனின்ர பிரச்சினையச் சுட்டிக்காட்டி, அதுசம்பந்தமாத்தான் நான் கதைக்க வந்தனான் எண்டிட்டுத் துவங்கினார். உது ஏதோ பொல்லாத வியாதி எண்ட மாதிரி இருந்திச்சு அந்தாளின்ர கதை. ஏதோ ஆங்கிலச் சொல்லில சொல்லீச்சு, எங்களொருத்தருக்கும் விளங்கேல. உப்பிடியே போனா உது பெரிய பிரச்சினையளக் கொண்டந்துடும்; சோதினையில சின்னக் கணக்கக்கூட பெரிசா யோசிச்சு பெரியவழியளில செய்து பிழ விட வேண்டி வரலாம்; வாழ்க்கையில சின்னப்பிரச்சினையளப் பெரிசாக் கற்பனை பண்ணி வாழ்க்கையையே குழப்பிப்போடலாம்; உப்பிடி யோசிக்கிற ஆக்கள் பின்னாளில சரியாக் கஸ்டப்படுவினம்; வேலையளில பிழை விடுவினம்; உது கனக்க யோசிக்கிறதால தான் வாறது; உத இப்பவே தடுக்க வேணும்; தியானம் தான் நல்ல மருந்து.
அப்படியிப்பிடியெண்டு மனுசன் வெளுத்துக்கட்டுது. எனக்கு இந்தப்பிரச்சின வந்திருந்தா அந்தாளின்ர கதையக் கேட்டு நான் பயந்துபோயிருப்பன். (அதோட அந்தாள் சொல்லுற அவ்வளவு பிரச்சினையளும் எனக்கு வந்திருக்கக்கூடும்.) ஆனா நல்லகாலம் எட்மன் சிரிச்சபடியே கேட்டுக்கொண்டிருந்தான். அத அவன் கடுமையான பிரச்சினையா எடுக்கவேயில்ல.

அந்தக்குணம் தானோ என்னவோ, ரெண்டு காலும் போன பிறகும்கூட அவனால சைக்கிளோடவும் படகோடவும் முடிஞ்சுது.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, June 11, 2005

மெழுகு



பட உதவி: கருணா.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, June 09, 2005

அவசரப் பதிவு.

வணக்கம்.

இப்போது தமிழ் மணத்திலே தம் பெயருக்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சகோதரர்களாகப் பழகிவிட்டு திடீரென அவர்கள் மீதே வழக்குத் தொடுப்பதும், தொடுப்பதாக மிரட்டுவதும் சிறந்ததன்று என்றாலும்கூட, சில சந்தர்ப்பங்களில் அது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனக்கும் இப்போது அந்நிலையொன்று ஏற்பட்டுவிட்டது. ஆதலால் இப்பதிவு.

எனக்கு ஏற்பட்ட அடையாளப்பிரச்சினைகளை இரு பிரிவுகளாக்குகிறேன்.
முதலாவது, என்னையும் சயந்தனையும் ஒருவரே என்றது.
இரண்டாவது, மஸ்ட் டூவும் நானும் ஒருவரே என்ற தொனியில் கருத்துவெளிப்பட்டிருப்பது.

முதலாவது பிரச்சினை எனக்கு அவ்வளவாக இழப்பை ஏற்படுத்தவில்லை. நன்றாக எழுதும் ஒருவருடன் தானே இணைத்துக் கதைக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன். மேலும் இருவரும் ஒருவரே என நினைப்பதற்கு ஏதுவான சந்தர்ப்பங்களும் இருந்தனவென்பது கவனித்தக்கது. ஆதலால் அப்பிரச்சினையை சட்ட நடவடிக்கையாக மாற்றாமல் பேசாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்போது வருந்துகிறேன். அன்று இதைச் சரியாக அணுகியிருந்தால் இன்று வந்த பிரச்சினைக்கு வாய்ப்பில்லை. ஆகவே
இத்தால் அறியத்தருவது,

நான் எதிரிகளாகக் குறிப்பிடும் நபர்கள் விரைவில் இதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதிவாதிகளாக நான் குறிப்பிடுவது,
மதிகந்தசாமி,
கறுப்பி
ஈழநாதன்
கிறுக்கன்.

மேலும் பலர் இக்குற்றச்சாட்டைச் சொல்லியிருந்தாலும், இவர்கள் நால்வரும் மீதுமே நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறேன்.

அடுத்த பிரச்சினைதான் கடுமையானது. எனது தனித்துவத்துக்கும் இறைமைக்கும் விடுக்கப்பட்ட சவால் மட்டுமன்றி, உயிர், உடமை இழப்புக்கும் வழிகோலிவிடும் அபாயமுண்டு.
மஸ்ட் டூ என்ற பெயரில் எழுதும் நபரும் நானும் ஒருவரே என்ற தொனியில் பெயரிலி அளித்திருக்கும் பின்னூட்டம் (அது அத்தொனியிலில்லை என்று அவர் வாதிடக்கூடும். எதுவாயிருந்தாலும் கோட்டில வந்து பேசிக்கோ) மிக ஆபத்தானது மட்டுமன்றி நயவஞ்சகமானதுங்கூட. அதற்கு இன்னொருவரும் பக்கப்பாட்டுப் பாடியுள்ளார்.

மஸ்ட் டூ என்ற பெயரில் எழுதுபவர், சில சிக்கலான விடயங்களைத் தொட்டுச் செல்கிறார். சிலரைக் குறிவைத்துத் தாக்குகிறார். பலரின் கவிதைகளையும் புத்தகங்களையும் சிலரின் எழுத்து நடையையும் நையாண்டி பண்ணுகிறார். உண்மையில் பலரால் தாக்கப்படும் சாத்தியமுள்ள நபரொருவரை நான்தான் எனச்சொல்வது அவ்வாபத்துக்களை என்னை நோக்கித் திருப்பிவிடும் நயவஞ்சகப் (உள்நோக்கம்) புத்தியென்றே சொல்லுவேன்.

ஆகவே எனக்கேற்பட்டிருக்கும் இவ்வாபத்தைப் போக்கும் வகையில் அக்குற்றச்சாட்டைச் சொன்னவரும் ஒத்தூதியவரும் பகிரங்க அறிக்கை விடவேண்டும்.
முதலாவது எதிரி பெயரிலி. (அவரைப் பல பெயரில் அழைத்தபோதும் அவர் அமைதிகாத்தார். ஆனால் என்னால் அப்படி முடியாது. காரணம் உயிர்ப்பிரச்சனை)
இரண்டாவது எதிரி, ஈழநாதன்.
இவர் இரண்டு பிரச்சினைகளிலும் சம்பந்தப்பட்டவர்.
இப்போதைக்கு இந்த இருவரும்தான். ஆனால் கறுப்பியின் பதிவில் வேறு யாராவது இணைந்தால் அவர்களும் இப்பட்டியலில் இணைவார்கள்.

மஸ்ட் டூ நான் தான் என நிரூபிக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை. அதற்காக தமது ஆதாரத்தை அவர்கள் வைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பகிரங்க அறிக்கை விடவேண்டும்.

நான் மஸ்ட் டூ இல்லையென்பதற்கு என்னிடமிருக்கும் சில கருத்துக்கள்.
(இரண்டு மணித்தியாலம் மினக்கெட்டு எடுத்திருக்கிறன்.)

இருவரின் எழுத்து நடையும் வெவ்வேறானது.
நான் புணர்ச்சி விதிகளை இயன்றவரைக் கடைப்பிடிப்பவன். ஆனால் மஸ்ட் டூவின் எழுத்தில் வலிமிகல் கடைப்பிடிக்கப்படுவது மிகக்குறைவு.
மேலும் 'அன்று' 'அல்ல' என்பவற்றை இயன்றவரை சரியானபடி கையாள்பவன் நான்.
மேலும் இந்தியத் தமிழில் என்னால் எழுத முடியாது. அனால் மஸ்ட் டூவின் பழைய பதிவில் இந்தியத் தமிழில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. (குறைந்த பட்சம் அவர்கள் இருவராக இருக்கக்கூடிய சந்தர்ப்பம் கூட உள்ளது.)
மேலும் எனக்கு ஆங்கிலமே மட்டுமட்டான மொழி. இதற்குள் மஸ்ட் டூவிற்கு இருக்கும் பிரஞ்சு மற்றும் ஜேர்மன் மொழி ஞானத்துக்கு நான் எங்கு போவது?
டோண்டுவால் கூட இந்த மொழியறிவுக்காகப் பாராட்டப்பட்டவர் தான் அவர்.
ஈழத்தைவிட்டுப் புறப்பட்டு வெறும் 7 மாதங்களே ஆன நிலையில் எங்கிருந்து அம்மொழியறிவைப் பெற்றுக்கொள்வது?

மேலும் மஸ்ட் டூவின் அந்தப் பக்கத்தில் குரற்பதிவுகூட உள்ளது. (இசையும் கதையும்.) எற்கெனவே என் குரலிலும் பதிவுகள் எனது தளத்திலுள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டாவது பார்த்திருக்கலாம். அந்த இசையும் கதையும் ஒலிப்பதிவில் குறைந்தது இரண்டு பேர் குரல் கொடுக்கிறார்கள்.

மேலும் பலவிருந்தாலும், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நான் அவர்தான் எனச் சொன்னவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும். (எதிராளிகளிற் சிலருக்கு மின்னஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது.)

அல்லாத பட்சத்தில் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிவருமென்பதை இத்தால் அறியத் தருகின்றேன்.
இப்போதிருந்து உங்களுக்கான நேரம் கணிக்கப்படத் தொடங்குகிறது.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, June 06, 2005

கள்ளுக் குடிக்க வாறீகளா?


கள்ளுக் குடிக்க வாறீகளா?

வணக்கம்!
சின்ன வயசிலயே (ஒன்பது வயது) இது துவங்கீட்டுது. எங்கட வீட்டு அடிவளவு பெரிய பனங்காணிதான். அதுக்க அன்னமுனா பத்தையா வளந்திருக்கும். ரெண்டு பனையில கள்ளுச் சீவிறவை. அது சீவ விடுறதுக்குக் காசு வேண்டிறேல. பதிலா அரப் போத்தல் கள்ளுதான் ஒவ்வொரு நாளும் வேண்டுறது. எங்கட குறிச்சீக்க பெரும்பாலும் எல்லாரும் இப்பிடித்தான் செய்யிறவை. நிறைய வீட்டில குடிமக்கள் இருந்தீச்சினம். ஆனா எங்கட வீட்டில அப்பிடி ஒருத்தருமில்ல. ஆனா அந்த அரப்போத்தல் கள்ளில ஒவ்வொருநாளும் ஒரு ரம்ளர் தருவார் என்ர அப்பா. அப்பதான் இறக்கின உடன் கள்ளு. நல்ல சுவையா இருக்கும். ஆரம்பத்தில கொஞ்சம் கூச்சப் பட்டனான் எண்டாலும் பிடிச்சிட்டன். ஒவ்வொரு நாளும் கள்ளுச் சீவிறவர் அரப்போத்தல் கள்ள எங்கட கிணத்தடி முருங்கையில வச்சிட்டுப் போடுவார். நான் ஒரு கப் என்ர பாட்டில எடுத்துக் குடிச்சிடுவன். ஆனா கள்ளு வைக்கக் கொஞ்சம் பிந்தினா குடிக்கேலாது. ஏனெண்டா குடிச்சு ஒரு கால் மணித்தியாலத்துக்கு வாயில அந்த வாசம் வரப் பாக்கும். அதால பள்ளிக்கூட நாக்களில கொஞ்சம் வெள்ளன குடிச்சா நல்லது.


இப்பிடி நான் கள்ளுக் குடிக்கிறது என்ர சக நண்பர்களிட்டயோ சொந்தக் காரரிட்டயோ சொல்லேல. சொல்ல ஏலாது. என்ன ஒரு மாதிரிப் பாப்பாங்கள். குடிகாரன் மாதிரியே பாப்பாங்கள் எண்ட பயம்தான். ஆனா உண்மை நிலையும் அப்பிடித்தான். ஒரு சந்தர்ப்பத்தில என்ர அப்பா கள்ளுக் குடிக்கிறவர் என்ர தகவலச் சொல்லேக்க,
“அவர் குடிகாரரோ? நான் நம்ப மாட்டன். நீ வேறயெதையோ பாத்திட்டுச் சொல்லிறாய்”
எண்டாங்கள். அதாவது கள்ளுக்குடிச்சா அட்டகாசம் போட வேணும்; தூசணங்கள் கதைக்க வேணும்; வெறியில தள்ளாடித்தள்ளாடிக் கதைக்க வேணும், எண்டதுதான் அவங்கட கணிப்பு. என்ர அப்பர் இப்பிடியொரு சோலியுமில்ல எண்ட உடன அவர் கள்ளே குடிக்கிறேல எண்டுதான் நினைச்சினம். வீட்டில நான் ஒரு ரம்ளர் குடிக்கிறதப் பற்றி எந்தப் பிரச்சினையுமில்ல. அப்பா சில வேள இன்னும் கொஞ்சம் ஊத்தித் தருவார்.

எங்கட ஊரில அப்பம் சுடுறதுக்கோ தோச சுடுறதுக்கோ மாவுக்கு அப்பச்சோடா பாவிக்கிறேல. எல்லாம் கள்ளுத்தான். அதுவும் இனியில்லயெண்டு புளிச்ச அடிமண்டிக் கள்ளுதான் வேணும். உடன் கள்ளு ஒருக்காலும் வெறிக்காது. புளிச்ச கள்ளுத்தான் வெறிக்கும் எண்டு அப்பர் சொல்லித்தந்திருந்தார். உண்மையில நான் குடிச்ச அந்தக் கள்ளு வெறிக்கிற சந்தர்ப்பம் அறவே இல்ல. தற்செயலா ஆரும் குடிக்காம விட்டா பத்து மணிக்கெல்லாம் அம்மா அத நிலத்தில ஊத்திப்போடுவா. ஆனா இப்பிடி வீட்டுக்காரரிண்ட அனுமதியோடயே கள்ளடிக்கிறதாலயோ என்னவோ இதெல்லாம் அப்பவே அலுத்துப் போச்சு. பிறகு வேறயொரு வடிவத்தில கள்ளடிக்க வெளிக்கிட்டன்.

எங்கட வீட்டுப்பக்கத்தில கூத்துப் பழகீச்சினம். இரவிலதான் கூத்துக்கான ஒத்திக பாப்பினம். அவயள் பாடத்துடங்கினாலே ஞாமான தூரத்துக்குக் கேக்கும். உடன நான் கூத்துப் பழகிறத பாக்கப் போயிடுவன். அங்க தான் சுவாரசியமே இருக்கு. பொம்பிளயள் கூத்தில ஆடுறேல. ஆம்பிளயளே தான் பொம்பிளப் பாத்திரத்தையும் செய்வினம். பொம்பிளயள் கூத்துப் பழகிறதப் பாக்கவும் வாறேல. நாங்கள் கொஞ்சப் பொடிப்பிள்ளயள் போயிருப்பம். கூத்துப் பாடுற ஆக்கள் பெரும்பாலும் குடிமக்களாத்தான் இருப்பினம். அண்ணாவியார் குடிக்க மாட்டார். மற்றாக்கள் குடிக்கிறதத் தடுக்க பாப்பார். அதோட மரியாதைக்காக அண்ணாவியாருக்கு முன்னால குடிக்கிறேல எண்டொரு பழக்கம் இருந்திச்சு. வெளியில போயிட்டா அண்ணாவியார் காணாமப் போயிடுவார். சிலவேள சண்டையள்கூட வரும். ஆனா கூத்துப்பழகிற இடத்தில அவருக்கெண்டு மரியாதை இருக்கும்.

இப்பிடி பழகிற இடத்துக்கும் ஆக்கள் கள்ளோடதான் வருவினம். ஆனா அதுகள ஒழிச்சு வைச்சிட்டு பிறகு இடைவெளி கிடைக்கேக்க ஒழிச்சிருந்து அடிப்பினம். அந்தக் கூத்துப்பழகிற வீட்டு முத்தத்தோட சேந்து பிரண்டல் பத்தையள் கொஞ்சமிருக்கு. கூத்து ஆடவாற ஆக்கள் தாங்கள் கொண்டுவாற போத்தலுகள அந்தப் பிரண்டலுக்க தான் ஒழிச்சு வைப்பினை. பிறகு தங்கட கட்டம் முடிஞ்ச உடன நைசா வந்து ரெண்டு மிடக்கு அடிச்சிட்டுப் போவின. இதைப் பாத்த நாங்கள் என்ன செய்யிறதெண்டா ஒருத்தருமில்லாட்டி நைசாப்போய் ரெண்டு மிடக்கு அடிச்சுப் பாப்பம். அதில கவனமாயிருக்கோணும். முதல்முதல் நாங்கள்தான் போத்திலத் திறக்கிற ஆக்களா இருக்கக் கூடாது. ஏற்கெனவே பாவிக்கத் துவங்கி அரகுறையா இருக்கிறதுகளிலதான் கைவைக்கலாம். நானும் இன்னும் ரெண்டு மூண்டு பேரும் சேந்து துவங்கின இந்த விளையாட்டில பிறகு வேறயும் ஆக்கள் வந்து சேந்தாங்கள். அதில மற்றாக்களுக்கு அதுதான் முதல் தடவையா இருக்கும்போல. இருந்தாலும் பழக்கியாச்சு. அஞ்சாறு நாள் பிடிபடாம குடிச்சம். அது நான் குடிக்கிற இனிப்புக் கள் இல்ல. புளிச்ச கள். கனக்கக் குடிக்க ஏலாது. அதோட வாயிலயிருந்து வாசமும் கொஞ்சம் தூக்கலா வரும். என்ன இருந்தாலும் களவாக் குடிக்கிறது நல்லாப் பிடிச்சிருந்துது.

ஒருநாள் ரெண்டு மச்சான்காரனுகளுக்குள்ள சண்டை. இந்தக் கள்ளுப் பிரச்சினைதான். ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்தில தங்கட கள்ளுப் பையள வைச்சிருக்கினம். எங்கட விளையாட்டும் நடந்திருக்கு. அப்ப கள்ளுக் குறைஞ்சிருக்கிறத தெரிஞ்சு கொண்ட ஒருத்தர் பக்கத்தல பை வைச்சிருந்தவர்தான் தன்ர கள்ளக் குடிச்சது எண்டு அவரோட சண்டை. உப்பிடியே போனா பிசகப் போகுது எண்டு நான் இந்த ஆட்டத்திலயிருந்து நிண்டிட்டன். ஆனா நான் பழக்கினவங்கள் நிண்டபாடாக் காணேல.

ஒருநாள் நான் கூத்துப் பாத்துக்கொண்டு நிக்கிறன். மற்றவங்களக் காணேல. பிரண்டலுக்க தான் போயிட்டாங்கள் எண்டிட்டு நான் கூத்தப் பாத்துக் கொண்டு நிண்டன். திடீரெண்டு 'அம்மா', 'ஐயோ' எண்டு சத்தமும் கூடவே ஆருக்கோ கும்முற சத்தமும் கேக்குது. பிரண்டலுக்க தான். எனக்கு விளங்கீட்டுது என்ன நடந்திருக்குமெண்டு. கூத்தையும் உடன நிப்பாட்டிப் போட்டு எல்லாரும் பெற்றோமக்ஸ தூக்கிக் கொண்டு (அப்ப மின்சாரம் இல்ல) பத்தைக்க போனா என்ர ரெண்டு தோழர்கள் பிடிபட்டிருக்கினம். மற்றவங்கள் வறுகீட்டாங்கள் போல. பீற்றர் அண்ணையும் இன்னொராளும் ஒழிச்சிருந்து பிடிச்சுப் போட்டாங்கள். முசுப்பாத்தியென்னெண்டா பெற்றோமக்ஸ் வெளிச்சத்திலதான் பீற்றர் அண்ணனுக்கு தெரிஞ்சுது, தான் பிடிச்சிருக்கிறது தன்ர மகனெண்டு. அதிலயே வாதனாராணியப் புடுங்கி விளாசுதான். அண்ணாவியார் இல்லாட்டி அண்டைக்கு ரெண்டு பேரிண்ட கதியும் அதோ கெதிதான். அவ்வளவு அடி வேண்டியும் என்னயும் மற்றாக்களயும் அவங்கள் காட்டிக் குடுக்கேல. இல்லாட்டி அண்டைக்கு அப்பரிண்ட மானம் காத்தோட போயிருக்கும்.

இப்பிடிக் “காய் பிடிக்கிற வயசில” செய்த திருகுதாளங்கள் கனக்க. (காய் பிடிக்கிற வயசு விளங்காட்டி கடைசியாத் தந்திருக்கிற விளக்கத்தைப் பாருங்கோ). அண்டையோட மற்றவங்கள் கூத்துப் பாக்கப் வாறேல. என்னால பாக்கேலாம இருக்கேலாது. நான் தொடர்ச்சியாப் போனன். நல்ல பிள்ளயா இருந்திட்டு வந்திடுவன்.

1992 இல ஊரவிட்டு வந்தப் பிறகு இண்டை வரைக்கும் நான் கள்ளுக் குடிச்சதா ஞாபகமில்ல. முல்லைத்தீவில இருக்கேக்க கருப்பணி மட்டும் இடைக்கிடை குடிச்சிருக்கிறன். உண்மையில கள்ளடிக்க வேண்டிய வயசில அத நான் சுவைக்கேல எண்டுதான் சொல்ல வேணும். எண்டாலும் நான் சொல்லக் கூடிய நீதியொண்டு இருக்கு.
உடன் கள் குடிக்கிறதில எந்தப் பிரச்சினையுமில்ல. நல்லாயிருக்கும்.
இன்னுமொரு விசயம், என்ர அவதானிப்புப் படி வெறி வந்து தூசனங்களாள பேசுறதும் சண்டைக்குப் போறதும் முக்கால்வாசி நடிப்புத்தான்.

போன வருசம் யாழ்ப்பாணம் போகேக்க பீற்றர் அண்ணையின்ர மகனப் பாத்தன். என்ர வயதுதான். உடன ஆள மட்டுக்கட்டேல. அறிமுகத்துக்குப் பிறகு இரவு வீட்ட வா எண்டு சொல்லீற்றுப் போயிட்டான். ஆனா பின்னேரமே சந்தியில அவனுக்கும் இன்னொராளுக்கும் பிரச்சின. போய்ப் பாத்த அம்மான் நல்ல வெறியில நிக்கிறார். எனக்கு உண்மையில அதிர்ச்சிதான். தாய் தேப்பனையும் மதிக்கிறேலயாம். பெரிய சண்டியனாம் எண்டு சனம் சொல்லீச்சு. இரவு அவனிண்ட வீட்ட போகேல. அடுத்த நாள் காலம என்னை றோட்டில மறிச்சுப் போட்டான். ஏன்ரா வரேல எண்டு சேட்டப் பிடிக்காத குறையாக் கேட்டான். அவன்ர முதல்நாள்க் கோலத்தச் சொல்லி எனக்கு அது பிடிக்கேலயெண்டதையும் சொன்னன்.
“ஏன்ரா இப்பிடிக் குடிக்கிறாய் முந்தி ஒழுங்காத்தானே இருந்தனி. எப்ப குடிக்கத் துவங்கினனி?”
எண்டு கேட்டன்.
சிரிச்சான்…
நல்லாயிருக்கு கத. நீ தானே பிரண்டல் பத்தையுக்க எனக்கு கள்ளடிக்கப் பழக்கினனி. பிறகு நல்ல பிள்ள மாதிரி நடிக்கிறாய்?”
எண்டான்.
எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு. நல்ல வேள இத ஒருத்தரும் கேக்கேல. இத வேற ஆருக்கும் சொன்னானோ தெரியேல. சொல்லியிருந்தா என்னப் பற்றி என்ன் நினைப்பினம் எண்ட நினைப்புவந்து துலைச்சுது.

குறிப்பு:
காய் பிடிக்கிற வயசு: ஒரு வயசில பழங்கள விட காய்கள் பிடிக்கும். மாம்பழத்த விட மாங்காயும், விளாம்பழத்த விட விளாங்காயும், கொய்யாப்பழத்த விட கொய்யாக்காயும் பிடிக்கிற ஒரு பருவம் இருக்கே, அதுதான் காய்பிடிக்கிற வயசு. கிட்டத்தட்ட விடலை வயசு மாதிரி. ஹிஹிஹி… எனக்கு இப்பவும் பழங்களவிடக் காய்கள்தான் பிடிக்கும்.
--------------------------
பட உதவி:- ஈழநாதன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, June 05, 2005

நம்பிக்கை.


நானிருக்கும் வீடு 15.05.2005.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, June 01, 2005

காத்திருப்பு - 3.


மெல்பேர்ண் விமானநிலையம்.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________