கள்ளுக் குடிக்க வாறீகளா?
கள்ளுக் குடிக்க வாறீகளா? வணக்கம்! சின்ன வயசிலயே (ஒன்பது வயது) இது துவங்கீட்டுது. எங்கட வீட்டு அடிவளவு பெரிய பனங்காணிதான். அதுக்க அன்னமுனா பத்தையா வளந்திருக்கும். ரெண்டு பனையில கள்ளுச் சீவிறவை. அது சீவ விடுறதுக்குக் காசு வேண்டிறேல. பதிலா அரப் போத்தல் கள்ளுதான் ஒவ்வொரு நாளும் வேண்டுறது. எங்கட குறிச்சீக்க பெரும்பாலும் எல்லாரும் இப்பிடித்தான் செய்யிறவை. நிறைய வீட்டில குடிமக்கள் இருந்தீச்சினம். ஆனா எங்கட வீட்டில அப்பிடி ஒருத்தருமில்ல. ஆனா அந்த அரப்போத்தல் கள்ளில ஒவ்வொருநாளும் ஒரு ரம்ளர் தருவார் என்ர அப்பா. அப்பதான் இறக்கின உடன் கள்ளு. நல்ல சுவையா இருக்கும். ஆரம்பத்தில கொஞ்சம் கூச்சப் பட்டனான் எண்டாலும் பிடிச்சிட்டன். ஒவ்வொரு நாளும் கள்ளுச் சீவிறவர் அரப்போத்தல் கள்ள எங்கட கிணத்தடி முருங்கையில வச்சிட்டுப் போடுவார். நான் ஒரு கப் என்ர பாட்டில எடுத்துக் குடிச்சிடுவன். ஆனா கள்ளு வைக்கக் கொஞ்சம் பிந்தினா குடிக்கேலாது. ஏனெண்டா குடிச்சு ஒரு கால் மணித்தியாலத்துக்கு வாயில அந்த வாசம் வரப் பாக்கும். அதால பள்ளிக்கூட நாக்களில கொஞ்சம் வெள்ளன குடிச்சா நல்லது. இப்பிடி நான் கள்ளுக் குடிக்கிறது என்ர சக நண்பர்களிட்டயோ சொந்தக் காரரிட்டயோ சொல்லேல. சொல்ல ஏலாது. என்ன ஒரு மாதிரிப் பாப்பாங்கள். குடிகாரன் மாதிரியே பாப்பாங்கள் எண்ட பயம்தான். ஆனா உண்மை நிலையும் அப்பிடித்தான். ஒரு சந்தர்ப்பத்தில என்ர அப்பா கள்ளுக் குடிக்கிறவர் என்ர தகவலச் சொல்லேக்க, “அவர் குடிகாரரோ? நான் நம்ப மாட்டன். நீ வேறயெதையோ பாத்திட்டுச் சொல்லிறாய்” எண்டாங்கள். அதாவது கள்ளுக்குடிச்சா அட்டகாசம் போட வேணும்; தூசணங்கள் கதைக்க வேணும்; வெறியில தள்ளாடித்தள்ளாடிக் கதைக்க வேணும், எண்டதுதான் அவங்கட கணிப்பு. என்ர அப்பர் இப்பிடியொரு சோலியுமில்ல எண்ட உடன அவர் கள்ளே குடிக்கிறேல எண்டுதான் நினைச்சினம். வீட்டில நான் ஒரு ரம்ளர் குடிக்கிறதப் பற்றி எந்தப் பிரச்சினையுமில்ல. அப்பா சில வேள இன்னும் கொஞ்சம் ஊத்தித் தருவார். எங்கட ஊரில அப்பம் சுடுறதுக்கோ தோச சுடுறதுக்கோ மாவுக்கு அப்பச்சோடா பாவிக்கிறேல. எல்லாம் கள்ளுத்தான். அதுவும் இனியில்லயெண்டு புளிச்ச அடிமண்டிக் கள்ளுதான் வேணும். உடன் கள்ளு ஒருக்காலும் வெறிக்காது. புளிச்ச கள்ளுத்தான் வெறிக்கும் எண்டு அப்பர் சொல்லித்தந்திருந்தார். உண்மையில நான் குடிச்ச அந்தக் கள்ளு வெறிக்கிற சந்தர்ப்பம் அறவே இல்ல. தற்செயலா ஆரும் குடிக்காம விட்டா பத்து மணிக்கெல்லாம் அம்மா அத நிலத்தில ஊத்திப்போடுவா. ஆனா இப்பிடி வீட்டுக்காரரிண்ட அனுமதியோடயே கள்ளடிக்கிறதாலயோ என்னவோ இதெல்லாம் அப்பவே அலுத்துப் போச்சு. பிறகு வேறயொரு வடிவத்தில கள்ளடிக்க வெளிக்கிட்டன். எங்கட வீட்டுப்பக்கத்தில கூத்துப் பழகீச்சினம். இரவிலதான் கூத்துக்கான ஒத்திக பாப்பினம். அவயள் பாடத்துடங்கினாலே ஞாமான தூரத்துக்குக் கேக்கும். உடன நான் கூத்துப் பழகிறத பாக்கப் போயிடுவன். அங்க தான் சுவாரசியமே இருக்கு. பொம்பிளயள் கூத்தில ஆடுறேல. ஆம்பிளயளே தான் பொம்பிளப் பாத்திரத்தையும் செய்வினம். பொம்பிளயள் கூத்துப் பழகிறதப் பாக்கவும் வாறேல. நாங்கள் கொஞ்சப் பொடிப்பிள்ளயள் போயிருப்பம். கூத்துப் பாடுற ஆக்கள் பெரும்பாலும் குடிமக்களாத்தான் இருப்பினம். அண்ணாவியார் குடிக்க மாட்டார். மற்றாக்கள் குடிக்கிறதத் தடுக்க பாப்பார். அதோட மரியாதைக்காக அண்ணாவியாருக்கு முன்னால குடிக்கிறேல எண்டொரு பழக்கம் இருந்திச்சு. வெளியில போயிட்டா அண்ணாவியார் காணாமப் போயிடுவார். சிலவேள சண்டையள்கூட வரும். ஆனா கூத்துப்பழகிற இடத்தில அவருக்கெண்டு மரியாதை இருக்கும். இப்பிடி பழகிற இடத்துக்கும் ஆக்கள் கள்ளோடதான் வருவினம். ஆனா அதுகள ஒழிச்சு வைச்சிட்டு பிறகு இடைவெளி கிடைக்கேக்க ஒழிச்சிருந்து அடிப்பினம். அந்தக் கூத்துப்பழகிற வீட்டு முத்தத்தோட சேந்து பிரண்டல் பத்தையள் கொஞ்சமிருக்கு. கூத்து ஆடவாற ஆக்கள் தாங்கள் கொண்டுவாற போத்தலுகள அந்தப் பிரண்டலுக்க தான் ஒழிச்சு வைப்பினை. பிறகு தங்கட கட்டம் முடிஞ்ச உடன நைசா வந்து ரெண்டு மிடக்கு அடிச்சிட்டுப் போவின. இதைப் பாத்த நாங்கள் என்ன செய்யிறதெண்டா ஒருத்தருமில்லாட்டி நைசாப்போய் ரெண்டு மிடக்கு அடிச்சுப் பாப்பம். அதில கவனமாயிருக்கோணும். முதல்முதல் நாங்கள்தான் போத்திலத் திறக்கிற ஆக்களா இருக்கக் கூடாது. ஏற்கெனவே பாவிக்கத் துவங்கி அரகுறையா இருக்கிறதுகளிலதான் கைவைக்கலாம். நானும் இன்னும் ரெண்டு மூண்டு பேரும் சேந்து துவங்கின இந்த விளையாட்டில பிறகு வேறயும் ஆக்கள் வந்து சேந்தாங்கள். அதில மற்றாக்களுக்கு அதுதான் முதல் தடவையா இருக்கும்போல. இருந்தாலும் பழக்கியாச்சு. அஞ்சாறு நாள் பிடிபடாம குடிச்சம். அது நான் குடிக்கிற இனிப்புக் கள் இல்ல. புளிச்ச கள். கனக்கக் குடிக்க ஏலாது. அதோட வாயிலயிருந்து வாசமும் கொஞ்சம் தூக்கலா வரும். என்ன இருந்தாலும் களவாக் குடிக்கிறது நல்லாப் பிடிச்சிருந்துது. ஒருநாள் ரெண்டு மச்சான்காரனுகளுக்குள்ள சண்டை. இந்தக் கள்ளுப் பிரச்சினைதான். ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்தில தங்கட கள்ளுப் பையள வைச்சிருக்கினம். எங்கட விளையாட்டும் நடந்திருக்கு. அப்ப கள்ளுக் குறைஞ்சிருக்கிறத தெரிஞ்சு கொண்ட ஒருத்தர் பக்கத்தல பை வைச்சிருந்தவர்தான் தன்ர கள்ளக் குடிச்சது எண்டு அவரோட சண்டை. உப்பிடியே போனா பிசகப் போகுது எண்டு நான் இந்த ஆட்டத்திலயிருந்து நிண்டிட்டன். ஆனா நான் பழக்கினவங்கள் நிண்டபாடாக் காணேல. ஒருநாள் நான் கூத்துப் பாத்துக்கொண்டு நிக்கிறன். மற்றவங்களக் காணேல. பிரண்டலுக்க தான் போயிட்டாங்கள் எண்டிட்டு நான் கூத்தப் பாத்துக் கொண்டு நிண்டன். திடீரெண்டு 'அம்மா', 'ஐயோ' எண்டு சத்தமும் கூடவே ஆருக்கோ கும்முற சத்தமும் கேக்குது. பிரண்டலுக்க தான். எனக்கு விளங்கீட்டுது என்ன நடந்திருக்குமெண்டு. கூத்தையும் உடன நிப்பாட்டிப் போட்டு எல்லாரும் பெற்றோமக்ஸ தூக்கிக் கொண்டு (அப்ப மின்சாரம் இல்ல) பத்தைக்க போனா என்ர ரெண்டு தோழர்கள் பிடிபட்டிருக்கினம். மற்றவங்கள் வறுகீட்டாங்கள் போல. பீற்றர் அண்ணையும் இன்னொராளும் ஒழிச்சிருந்து பிடிச்சுப் போட்டாங்கள். முசுப்பாத்தியென்னெண்டா பெற்றோமக்ஸ் வெளிச்சத்திலதான் பீற்றர் அண்ணனுக்கு தெரிஞ்சுது, தான் பிடிச்சிருக்கிறது தன்ர மகனெண்டு. அதிலயே வாதனாராணியப் புடுங்கி விளாசுதான். அண்ணாவியார் இல்லாட்டி அண்டைக்கு ரெண்டு பேரிண்ட கதியும் அதோ கெதிதான். அவ்வளவு அடி வேண்டியும் என்னயும் மற்றாக்களயும் அவங்கள் காட்டிக் குடுக்கேல. இல்லாட்டி அண்டைக்கு அப்பரிண்ட மானம் காத்தோட போயிருக்கும். இப்பிடிக் “காய் பிடிக்கிற வயசில” செய்த திருகுதாளங்கள் கனக்க. (காய் பிடிக்கிற வயசு விளங்காட்டி கடைசியாத் தந்திருக்கிற விளக்கத்தைப் பாருங்கோ). அண்டையோட மற்றவங்கள் கூத்துப் பாக்கப் வாறேல. என்னால பாக்கேலாம இருக்கேலாது. நான் தொடர்ச்சியாப் போனன். நல்ல பிள்ளயா இருந்திட்டு வந்திடுவன். 1992 இல ஊரவிட்டு வந்தப் பிறகு இண்டை வரைக்கும் நான் கள்ளுக் குடிச்சதா ஞாபகமில்ல. முல்லைத்தீவில இருக்கேக்க கருப்பணி மட்டும் இடைக்கிடை குடிச்சிருக்கிறன். உண்மையில கள்ளடிக்க வேண்டிய வயசில அத நான் சுவைக்கேல எண்டுதான் சொல்ல வேணும். எண்டாலும் நான் சொல்லக் கூடிய நீதியொண்டு இருக்கு. உடன் கள் குடிக்கிறதில எந்தப் பிரச்சினையுமில்ல. நல்லாயிருக்கும். இன்னுமொரு விசயம், என்ர அவதானிப்புப் படி வெறி வந்து தூசனங்களாள பேசுறதும் சண்டைக்குப் போறதும் முக்கால்வாசி நடிப்புத்தான். போன வருசம் யாழ்ப்பாணம் போகேக்க பீற்றர் அண்ணையின்ர மகனப் பாத்தன். என்ர வயதுதான். உடன ஆள மட்டுக்கட்டேல. அறிமுகத்துக்குப் பிறகு இரவு வீட்ட வா எண்டு சொல்லீற்றுப் போயிட்டான். ஆனா பின்னேரமே சந்தியில அவனுக்கும் இன்னொராளுக்கும் பிரச்சின. போய்ப் பாத்த அம்மான் நல்ல வெறியில நிக்கிறார். எனக்கு உண்மையில அதிர்ச்சிதான். தாய் தேப்பனையும் மதிக்கிறேலயாம். பெரிய சண்டியனாம் எண்டு சனம் சொல்லீச்சு. இரவு அவனிண்ட வீட்ட போகேல. அடுத்த நாள் காலம என்னை றோட்டில மறிச்சுப் போட்டான். ஏன்ரா வரேல எண்டு சேட்டப் பிடிக்காத குறையாக் கேட்டான். அவன்ர முதல்நாள்க் கோலத்தச் சொல்லி எனக்கு அது பிடிக்கேலயெண்டதையும் சொன்னன். “ஏன்ரா இப்பிடிக் குடிக்கிறாய் முந்தி ஒழுங்காத்தானே இருந்தனி. எப்ப குடிக்கத் துவங்கினனி?” எண்டு கேட்டன். சிரிச்சான்… “நல்லாயிருக்கு கத. நீ தானே பிரண்டல் பத்தையுக்க எனக்கு கள்ளடிக்கப் பழக்கினனி. பிறகு நல்ல பிள்ள மாதிரி நடிக்கிறாய்?” எண்டான். எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு. நல்ல வேள இத ஒருத்தரும் கேக்கேல. இத வேற ஆருக்கும் சொன்னானோ தெரியேல. சொல்லியிருந்தா என்னப் பற்றி என்ன் நினைப்பினம் எண்ட நினைப்புவந்து துலைச்சுது. குறிப்பு: காய் பிடிக்கிற வயசு: ஒரு வயசில பழங்கள விட காய்கள் பிடிக்கும். மாம்பழத்த விட மாங்காயும், விளாம்பழத்த விட விளாங்காயும், கொய்யாப்பழத்த விட கொய்யாக்காயும் பிடிக்கிற ஒரு பருவம் இருக்கே, அதுதான் காய்பிடிக்கிற வயசு. கிட்டத்தட்ட விடலை வயசு மாதிரி. ஹிஹிஹி… எனக்கு இப்பவும் பழங்களவிடக் காய்கள்தான் பிடிக்கும். -------------------------- பட உதவி:- ஈழநாதன். Labels: அலட்டல், அனுபவம், பேச்சுத்தமிழ் |
"கள்ளுக் குடிக்க வாறீகளா?" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: ஈழாநாதன்
வசந்தன் அட்டகாசமான பதிவு உண்மையைச் சொன்னால் சின்ன வயதில் கள்ளு மேல் ஒரு கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் அதைக் குடித்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரர் பண்ணிய அட்டாகாசத்தில் இதுவரை குடித்ததே இல்லை.இனி யாழ்ப்பாணம் போகும்போது கட்டாயம் குடிக்கவேண்டும்.
14.1 6.6.2005
எழுதிக்கொள்வது: kulakaddan
அப்ப வசந்தன் குடிகாரன்............ :-)).....
நல்லாயிருக்கு.........
கள்ளு தெரியாது........கருப்பணி.....மட்டும் தான் குடிச்சு தெரியும்
13.15 6.6.2005
வசந்தன் கடலில் நீந்திவிட்டுக் கள்ளுக் குடித்துப்பாருங்கள்,எங்கேயோ போவீர்கள்!அத்துடன் சயிக்கிளும் ஓடிப்பாருங்கள்,தேவலோகத்துக்குப் பறப்பீர்கள்.இடையினில் பள்ளித் தோழிகள் வந்துவிடணும்,சயிக்கிளும் மனமும் ரொம்பக் கூத்தாடும்.நண்பர்களோடு கள்ளருந்தி கவிபாடி,தோழியரோடு மல்லுக்கட்டி,அவர்களது அப்பா,அல்லது அம்மாமார்கள் வீடுதேடி வந்து,அப்பனிடம் முறையிட்டு... பூவரசம் கம்பு முதுகில் பாயும்போது சுவைத்த கள்ளுச் சுகம் காற்றோடு கரைந்துவிடும்.
"காய் பிடிக்கிற வயசு" - விளக்கம் புதுமையா இருக்கு.
அன்னா முனா...? அண்ணா முண்ணா...?
அண்ணா முண்ணா பூ சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீங்களோ?
கள்ளு பொக்களிப்பான் வந்த ஆக்களுக்கும் குடுக்கிறவை. தெரியுமோ?
நல்ல வேளை எனக்கு ஊரிலை இருக்கு மட்டும் பொக்கிளிப்பான் வரேல்லை.
பொக்கிளிப்பான் ...?
கொப்பிளிப்பான் ...?
எது சரி?
//நல்ல வேளை எனக்கு ஊரிலை இருக்கு மட்டும் பொக்கிளிப்பான் வரேல்லை.//
அப்பிடியெண்டா கள்ளுக்குடிச்ச எங்கள ஏதோ தீண்டத் தகாத ஆக்களாயெல்லோ பாக்கிற மாதிரிக்கிடக்கு. அப்பிடி என்னவிதத்தில அது தீங்கானது?
நான் உச்சரிக்கிறத வச்சுத்தான் எழுதினனான். அதால அன்ன முனா எண்டுதான் எழுதுவன். ஏனெண்டா அப்பிடித்தான் உச்சரிக்கிறனான். 'அண்ணா முண்ணா" எண்டு நாங்கள் உச்சரிக்கிறேல. எண்டாலும் எது சரியெண்டு பாக்கவேணும். பொக்குளிப்பான் எண்டுதான் கதைக்கிறனாங்கள். இதிலயும் எது சரியெண்டு தெரியேல. அன்ன முனாப் பூ சாப்பிட்டுப் பாக்கேல.
Dear Vasanthan,
Pl. let me know ur mail id. my id is ramki@rajinifans.com
வசந்தன்
நாங்கள் அண்ணா முண்ணா எண்டுதான் சொல்லுறனாங்கள்.
அண்ணாமுண்ணாப்பூவிலும் ஒரு சுவை இருக்கிறது.
அப்பிடியெண்டா கள்ளுக்குடிச்ச எங்கள ஏதோ தீண்டத் தகாத ஆக்களாயெல்லோ பாக்கிற மாதிரிக்கிடக்கு.
அப்பிடி ஆர் சொன்னது?
அப்பிடி என்னவிதத்தில அது தீங்கானது?
பெரிசா ஒண்டும் இல்லை.
எழுதிக்கொள்வது: Thamilvaanan
பரிசோதனை
23.14 8.6.2005
//கள்ளுக் குடிக்க வாறீகளா?\\
மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.
வசந்தன் உங்கட வலைப்பதிவைத் திறந்தாலே கள்ளு நாத்தமடிக்குது. குடிகாறர்களுக்கெல்லாம் வலைப்பதிவில் இடமில்லை. போங்கோ..
உதாரப்பா குந்தியிருந்து கள்ளடிக்கிறது.. என்னமோ போங்கோ அவற்றை தலையைப் பாக்க இப்ப பரவலா கதைபடுற புலிகளின் விமான ஓடுபாதை தான் ஞாபகத்துக்கு வருது.. வலு ஈசியா வந்து இறங்கும் போலை