Monday, May 23, 2005

"பயங்கர வாதிகள்"- ஒரு கண்ணோட்டம்.

ரெறறிஸ்ட் படத்தின் சொல்லப்படாத கதை அல்லது இரண்டாம் பாகம்.
-------------------------------------------------------------

அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தலைமையின் நிலையென்ன? அதன் பின்னாலுள்ள மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான பதிலென்ன? மேலும் இவ்வளவு காலமும் அந்தத்தாக்குதலை நடத்த செலவிட்டவைக்கு (ஆள், பொருள்) என்ன பதில்? இனி மீண்டும் அத்தாக்குதலை நிகழ்த்துவதற்காக இழக்கப்போகும் காலம், ஆள், பொருள் இழப்புக்கள் எவ்வளவு? இனி இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? இத்தாக்குதல் நடத்தப்படாததால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு?
------------------------------------------------------------
சந்தோஷ் சிவன் இயக்கிய ரெறறிஸ்ட் படத்தைப் பற்றி மேலோட்டமாக என் பதிவொன்றிற் கூறியிருந்தேன். அப்படத்தைப் பற்றியும் அதன் முடிவு பற்றியும் அதற்குப்பின்னாலுள்ள சிக்கல்களைப் பற்றியும் இப்போது பேசலாமென்றிருக்கிறேன்.

கடல்கடந்து செல்லும் குழுவொன்றின் இலக்கு ஒருவரைக் கொல்வது. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முறை தற்கொலைத்தாக்குதல். அத்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஒரு பெண். தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாளும் நெருங்குகிறது. இதற்கிடையில் அப்பெண் கர்ப்பமாயிருப்பது தெரிய வருகிறது. ஒத்திகையும் முடிந்து தாக்குதலுக்குச் சென்றாயிற்று. கடைசிக்கணத்தில் அப்பெண் தனது மனத்தை மாற்றி தாக்குதல் நடத்தாமல் திரும்புகிறாள்.
இதுதான் கதை. ஏனைய தமிழ்ப்படங்களோடு ஒப்பிடும்போது மிகக்குறுகிய நேரத்தில் படம் முடிகிறது. பாடல்களில்லை. சண்டைக்காட்சிகளில்லை. தேவையற்ற பாத்திரப்படைப்புக்களில்லை. குடும்பம், சுற்றம் என்ற உறவுகளில்லை. பாசப்பிணைப்பென்ற பேரில் புருடாக்கள் இல்லை. நிறைய “இல்லை”களைக் கொண்டு நிறைவான ஒரு படம். மணிரத்தினம் “உயிரே” எடுத்தபின்னும் ஏன் ரெறறிஸ்ட் வந்தது என்றால், இரு படங்களையும் பார்ப்பதுதான் அதற்கான பதில். ஒன்று ஏறத்தாள வழமையான சினிமா என்பது என்கருத்து.ரெறறிஸ்டை இப்படிப் புகழ்கிறேன் என்பதற்காக அதன் அத்தனை அம்சங்களோடும் நான் உடன்படுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். படத்தலைப்பே எனக்கு முரண்பாடான முக்கிய இடம். இதைவிடவும் நிறையக் கேள்விகள் அப்படித்தின் மீதுண்டு. இயக்குநர், தனது சமயோசிதத்தால் பல இடங்களில் தன் மீதான விமர்சனத்திலிருந்துத் தப்பித்துக்கொள்கிறார். யார் மீதான கொலை முயற்சி என்பது சொல்லப்படவில்லை. படம் யாரைப்பற்றியது என்பதற்கும் படத்தில் தெளிவான பதிலில்லை. ஈழத்துக் குழுவொன்றைப் பற்றியது என்பதும் படத்திற்சொல்லப்படவில்லை. நீரைக்கடந்து செல்லும் குழு என்பதும், கழுத்தில் ஏதோவொன்றைக் கட்டியிருப்பவர்கள் என்பதையும் தவிர வேறில்லை. ஈழத்து மொழிவழக்குக் கூட பாவிக்கப்படவில்லை. ஆனாலும் புலிகளை மனத்தில் வைத்தே இயக்குநர் இப்படத்தை எடுத்தார் என்று பலரைப்போலவே நானும் நம்புகிறேன்.

இயக்குநர் தேவையற்ற விவாதங்களுக்குப் போகவில்லை. கதாநாயகி கர்ப்பமடைய ஏதுவான காட்சிகூட விவரிக்கப்படவில்லை. (வழமையான தமிழ்ச்சினிமாவை யோசித்துப் பார்க்கவும்.) அக்கர்ப்பத்துக்கு யார் காரணம் என்றும் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. (தெளிவாகச் சொல்லியிருந்தும் எனக்குத்தான் விளங்கவில்லையோ தெரியேல.) களத்தில் செத்துக்கொண்டிருக்கும் ஒருவனைக் காட்டப்படுகிறது. அவன்தானோ? அச்சந்தர்ப்பம் தானோ? ஆனால் இயக்குநருக்கு இவைகள் தேவையற்ற கேள்விகள். “அவள் கர்ப்பமாயிருக்கிறாள்; அவ்வளவுதான். மேற்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்” என்பதுதான் அவர் நிலைப்பாடு.

“பயங்கரவாதிகளில்” கிட்டத்தட்ட ஆண்கள் அனைவரையும் 15 வயதிற்கும் குறைவாகக் காட்டப்படுகிறது. (அந்தச் 'செத்துக்கொண்டிருப்பவனைத்' தவிர). மேற்சட்டையில்லாமல் நிற்கும் ஆண் “பயங்கரவாதிகளுக்குள்ளால்” அந்தப்பெண் நடந்து வருவது உறுத்துகிறது. இக்காட்சி மூலம் நாங்கள் ‘நினைத்துக்கொண்டிருப்பவர்களை’ விட்டுவிட்டு வேறு யாரையோ பற்றி படமெடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது.

திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாளராக நடிப்பவரின் பெயர் தெரியவில்லை. அவர் குருதிப்புனலில் நடித்தபோது, 'கிட்டு'வின் சாடை இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அந்தச் சாடை இருக்கும் வரை அவருக்கு இப்படியான படங்களில் “பயங்கர வாதி” வேடங்கள் உறுதி. குருதிப்புனல், ரெறறிஸ்ட், ரிமோல்ட் என்ற படங்களில் அவருக்குக் கிடைத்த வேடங்கள் அப்படி.

சரி, இனி முதன்மையான விதயத்துக்கு வருகிறேன். படத்திற் காட்டப்பட்டுள்ளபடி கதாநாயகி தன் முயற்சியைக் கைவிட்டுவிடுகிறாள். இத்தோடு படம் முடிகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அதற்குப் பின்தான் உண்மையிலேயே பிரச்சினைகள் தொடங்குகின்றன. அத்தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்தக் குழுவுக்கு, அக்குழுவைச் சார்ந்த மக்களுக்கு என்ன பதில்? அத்தாக்குதல் நடத்தப்படாததால் இனி ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் இத்தாக்குதலை மீண்டும் செய்வதற்காகக் கொடுக்கப்போகும் விலைகளுக்கும் என்ன பதில்?

இப்படம் இன்னாரைப் பற்றியது என்று ஏதும் இல்லாமலிருப்பது, பிரச்சினையை தனியே ஒரு குழுவுக்கும் இயக்கத்துக்கும் தனியொரு சம்பவத்துக்கும் மட்டுமென்று குறுக்காமல், உலகம் முழுவதும் பொதுமைப்படுத்தப் பார்க்கிறார் இயக்குநர். “ரெறறிஸ்ட்” என்று தலைப்பிடடதூடாக மக்கள் ஆதரவுள்ள, இனவிடுதலைக்காகப் போராடும் ஓர் இயக்கத்தைப் படத்தில் ஒட்டிப்பார்க்க வகையில்லாதபடி இயக்குநர் செய்து விடுகிறார். ஆனாலும் இப்படம் புலிகள் என்ற அமைப்பைத்தான் கருத்திற்கொண்டது என்று பெரும்பாலும் கருதப்பட்டதாலும், அப்படியே சில விமர்சனங்களும் வந்ததாலும், புலிகள் மட்டுமன்றி அவர்களைப் போன்ற ஏனைய விடுதலையமைப்புக்களுக்கும் தற்கொலைத்தாக்குதலென்பது பொதுவான உத்தியென்பதாலும் இப்படத்திற் காட்டப்பட்டுள்ள முடிவின் பின்னாலுள்ள சிக்கல்களைச் சொல்வதே நோக்கம். குறிப்பிட்ட இயக்கத்தையோ குறிப்பிட்ட கொலை முயற்சியையோ மட்டும் வைத்து இது எழுதப்படவில்லை. இவ்வாதம் அனைவருக்கும் பொதுவானது.

ஒரு விடுதலையமைப்புக்கு தற்கொலைத்தாக்குதல் வழிமுறையென்பது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. (இது சில சந்தர்ப்பங்களில் மாறுபடலாம்.) ஆள், ஆயுதம், பொருளாதாரம், பன்னாட்டு ஆதரவு என்பற்றில் பலமான எதிரியை எதிர்கொள்வதில் இப்படியான உத்திகள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது நிறைந்த பலனைத் தந்துமுள்ளது. "குறைந்த இழப்பு, நிறைந்த பலன்". ஈழப்போராட்டத்தை எடுத்துக்கொண்டால், அதன் முதல் தற்கொலைத்தாக்குதல் மில்லரால் நெல்லியடியில் ஆரம்பிக்கப்பட்டது. அத்தாக்குதல் எழுப்பிய பேரதிர்வு இலங்கையை ஆட்டுவித்தது. சடுதியான மாற்றங்கள் அத்தாக்குதலின்பின் நடந்தன. அன்றிலிருந்து இன்றுவரை காத்திரமான மாற்றங்கள் தற்கொலைத்தாக்குதல்கள் மூலம் நிகழ்த்தப்பட்டன. ஆகப்பிந்திய எடுத்துக்காட்டு கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்பு.

ஓர் இலக்கை அழிக்கச் சொல்லி ஒருவன் அல்லது ஒருத்தி அல்லது ஒரு கூட்டம் பணிக்கப்படுகிறது. அவர்களும் மனமுவந்து தான் அப்பணியை ஏற்கிறார்கள். பின் தாக்குதல் நடத்த வேண்டிய தளத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து அத்தாக்குதலை தமது சுயநலனுக்காகக் கைவிடுவது எத்தனை அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய துரோகம்? (இங்கே துரோகம் என்பதை அதற்குரிய மிகக்கடுமையான தொனியுடனேயே கையாளுகிறேன். இச்சொல் சகட்டு மேனிக்குப் பாவிக்கப்பட்டு தன் உண்மையான பொருள் வலுவை இழந்து வருகிறது. சமீபத்தில் இதைப்போல தன் காத்திரமான பொருள் வலுவை இழக்கத் தொடங்கியிருக்கும் பரிதாபத்துக்குரிய இன்னொரு சொல் “பாசிசம்”.)

அவர்களுக்கு முன்பேயே தாக்குதல் திட்டத்திலிருந்து விலகிவிட சந்தர்ப்பமிருக்கிறது. ஆகக்குறைந்தது தாக்குதலுக்கு செல்லும் முன்பாகவேகூட ஏதாவது செய்யலாம். மாற்றுவழிகள் யோசிக்கப்படக்கூடும். இறுதிக்கணத்தில் ஏற்படும் மாற்றத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அத்தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் அந்தத் தலைமையின் நிலையென்ன? அதன் பின்னாலுள்ள மக்களின் நிலையென்ன? அவர்களுக்கான பதிலென்ன? மேலும் இவ்வளவு காலமும் அந்தத்தாக்குதலை நடத்த செலவிட்டவைக்கு (ஆள், பொருள்) என்ன பதில்? இனி மீண்டும் அத்தாக்குதலை நிகழ்த்துவதற்காக இழக்கப்போகும் காலம், ஆள், பொருள் இழப்புக்கள் எவ்வளவு? இனி இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? இத்தாக்குதல் நடத்தப்படாததால் ஏற்படப்போகும் இழப்புக்களுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு?

படத்தில், கருவிலிருக்கும் குழந்தையைக் கருதி தாக்குதலைக் கைவிடுவதாகக் காட்டப்படுகிறது. இது நடத்தப்படாமல் போவதால் இருக்கும் பிரச்சனைகளுக்கு முன்னால் அது வெறும் தூசு. ஏன் இப்படியான இயக்கங்கள் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன என்பதற்கு (குறிப்பாக பாலியல் விசயங்களில்) இப்படம் எடுத்துக்காட்டு.

சந்தோஷ் சிவன் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கக்கூடும். அல்லது வேறொருவர் இக்கருவை வைத்து எடுக்கலாம். இல்லாவிட்டால், நானே எடுக்கக்கூடும் யார் கண்டது? . அப்படி படமெடுத்தால்;
அத்தாக்குதல் நடத்தப்படாததால் அவ்வியக்கம் எதிர்நோக்கும் பின்னடைவுகள், அவ்வியக்கத்தின் பின்னாலுள்ள மக்கள் அக்குறிப்பிட்ட- 'அழிக்கப்படாமல்' விடப்பட்ட- இலக்கால் அடையப்போகும் துன்பங்கள், இழப்புக்கள் என்பவை அப்படத்தில் சொல்லப்படும்.
அல்லது ரெறிறிஸ்ட் படத்தையே இன்னுமொரு பத்து நிமிடம் நீட்டி, அப்பெண் அத்தாக்குதலை நடத்தாமல் விட்டாலும் ஏற்கெனவே தீர்மானித்து வைக்கப்பட்ட இரண்டாவது வழிமுறை மூலம் (ஒரு திறமையான திட்டமிடல் இப்படித்தான் நடக்கும்; நடந்திருக்கிறது.) அவ்விலக்கு அழிக்கப்படுவதாக முடிக்கலாம். அத்தாக்குதலை நெறிப்படுத்தியவரே களத்தில் இறங்கி அந்த வேலையைச் செய்வதாகவும் இருக்கலாம். (அப்படியான சம்பவங்களும் உண்டு).

தற்கொலைத் தாக்குதலொன்று நடத்தப்படாமல் விடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பைச் சரியாக உணர வேண்டுமானால் கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அத்தாக்குதல் மட்டும் நடக்கவில்லையென்றால், இன்றைய யுத்த நிறுத்தமுமில்லை, சமாதானப்பேச்சு வார்த்தையுமில்லை, ஒரு 'மண்ணாங்கட்டியுமில்லை' (நன்றி சிவராம்). சிறிலங்காவின் திமிர் குறைந்திருக்கவும் வாய்ப்பில்லை.
-----------------------------------------------------
மேற்குறிப்பிட்ட விதயங்கள் தனியே புலிகளுக்கு மட்டுமன்று; எந்தவொரு விடுதலை இயக்கத்துக்கும் பொதுவானது, ரெறறிஸ்ட் படம்போல. எடுத்துக்காட்டுக்களுக்கு இலகுவாகவே புலிகளைப்பற்றி இங்கே கதைக்கப்பட்டது.
-----------------------------------------------------
Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


""பயங்கர வாதிகள்"- ஒரு கண்ணோட்டம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (23 May, 2005 10:00) : 

வசந்தன் நல்ல பதிவு.
அக்குறிப்பிட்ட தற்கொலைத் தாக்குதல் அவ்வியக்கம் ஆகக்கடைசியில் அடையப் போராடிக்கொண்டிருக்கும் இலக்கை அடையப் பெரும்தடையாய் இருக்குமானால் "அத்துரோகம்" எந்த விலையைக் கொடுத்தும் செய்யக் கூடியதே.

சில நேரங்களில், நீண்டகாலப் பின்விளைவுகளைத் தீர ஆராயாமல் எடுக்கப்படும் முடிவுகள் இலக்கினை அடையப் பெருந்துணை நிற்கும் வல்லமை பெற்ற சக்திகளை வீணே மறக்கமுடியாத அளவுக்குப் பகைத்துக்கொள்வதாய் இருந்துவிடும் சாத்தியமுண்டுதானே. என்ன இருந்தாலும் திட்டமிடும் அனைவரும் மனிதர்கள்தானே, தவறில்லா முடிவெடுக்க யாரும் கடவுள் இல்லையே. மேலும் அத்தகைய பாரதூரச் செயல்கள் நிகழாத வரை பகைமை என்பது நிரந்தரமானதல்ல அல்லது எளிதில் மறக்கக்கூடியவைதானே.

12B படம்போல, தாக்குதல் நடந்தபின் ஒன்று, நடவாததால் ஒன்று என இரு திசைகளில் கதையைச் செலுத்தி, இந்தத் திட்டமிட்ட தாக்குதல் நடவாமல் செய்த "துரோகம்" இயக்கத்தின் இலக்கினை எளிதாய் அடைய உதவுவதுபோல் வந்தாலும் நன்றாகத்தானே இருக்கும்!!.

எல்லாம் சுவாரசியமான கற்பனைகள்தான், நம்மால் கற்பனை செய்ய மட்டும்தானே முடியும் :-).

 

said ... (23 May, 2005 13:25) : 

காந்தியார் பகத் சிங் தூக்குதண்டனைக்கு நாள் குறித்து தந்த விவரம் நீங்கள் அறிந்ததுதானே. நாள், நேரம் போன்றவை குறித்து பிரக்ஞையுடன் மிகச்சரியாக அழித்தொழிப்புகளை நிறைவேற்றவேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை அவரது அந்தச் செயலில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

அது மட்டும் நடக்காமல் இருந்து காங்கிரஸ் மாநாட்டின் கிளர்ச்சி ஏற்பட்டு அது பிளவுக்கு வழி வகுத்து நாட்டில் மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தி பகத்சிங் விடுதலை செய்யப்பட்டிருந்தால் இந்திய சுதந்திரம் எப்படி இருந்திருக்கும் என்பதை யோசிப்பதும் நன்றாக இருக்கும்.


இல்லாவிட்டால், பார்த்தா, நீ கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை; ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இந்தக்கருவுக்காக நீ வருந்தி நீ தாக்குதலை நிறுத்தும் போலி ஞானம் பேசாதே என்று யாரவது கீதோபதேசம் அவளுக்கு செய்திருந்தால் நடந்திருக்கக்கூடியதையும் கூட படமாக எடுக்கலாம். இல்லையா?

 

said ... (23 May, 2005 14:23) : 

வணக்கம் வசந்தன்,
உங்கள. பதிவை வாசித்தேன்.
நன்றாக இருக்கிறது. தொடருங்கள்….

 

said ... (23 May, 2005 16:58) : 

எழுதிக்கொள்வது: http://arataiarangam.blogspot.com/

நன்றாக உள்ளது - வீ . எம்

12.57 23.5.2005

 

said ... (23 May, 2005 19:46) : 

வசந்தன் சில உறுத்தல்களுக்கு விடை கிடைத்தது

 

said ... (23 May, 2005 20:23) : 

ஈழநாதன்!
என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிறியள். என்ன உறுத்தல்?
சொல்ல ஏலாட்டி மின்னஞ்சல் போடுங்கோ.

 

said ... (23 May, 2005 20:24) : 

மற்றாக்களுக்குப் பிறகு வாறன்.

 

said ... (24 May, 2005 01:38) : 

நல்ல பதிவு.
நல்ல கேள்விகள். நீங்கள் எடுக்கப்போகும் படத்துக்காகக் காத்திருக்கிறேன்.

 

said ... (24 May, 2005 11:15) : 

கருத்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி.

முத்து! நீங்கள் சுத்திச் சுத்தி ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து பின்னூட்டியுள்ளீர்கள். நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன் இது பொதுவானதென்று. அந்தக் கருத்து உங்களது. அதே விடயத்தில் என்கருத்து வேறானது.

சரி, யார் தீர்மானிப்பது அது நல்லதா கூடாதா என்று?
தன் சுயநலத்துக்காக ஒதுங்கும் அந்த ஒருத்தியா?
அந்த முடிவில் போராட்டத்தின் எதிர்காலமோ மக்களின் எதிர்காலமோ அரசியலோ எங்கே சம்பந்தப்பட்டது?
முழுக்க முழுக்க சுயநலத்தின்பால் எடுக்கப்பட்ட முடிவது. இதிலெங்கே அரசியல் தூரநோக்கம் வந்தது?
நீங்கள் சொன்னது போல், முடிவெடுப்பவர்கள் ஒன்றும் கடவுளில்லை. அடிப்பவனும் அடிபடுபவனும், கொல்பவனும் கொல்லப்படுபவனும் மனிதனாகவே இருக்கும்போது கடவுளுக்கிங்கே என்ன வேலை?
மனிதன் தனது பிரச்சினையைத் தானேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லாம் கற்பனைகள் தான். ஆனால் நடந்தவைகள் கற்பனைகளல்லவே.

தங்கமணி!
கருத்துக்கு நன்றி. சிலரின் வெளிவேடத்தைக் கலைக்க தன்னைத்தானே ஒறுத்தவன் பகத்சிங். அதனால் அவனுக்கு ஏற்பட்ட முடிவு ஆச்சரியமானதன்று. மேலும் கீதை போதிக்கப்பட்டது எங்களுக்கல்லவே. இருந்தால் இன்னும் துணிவாக நிறையச் செய்யலாம்.

முடிவில் தெளிவாகவே ஒன்றைச் சொல்கிறேனே.
அவ்வாறு தப்பிப்போனதால் அவதிப்படுத்தும் ஓர் இலக்கு, சந்திரிக்கா.

 

said ... (24 May, 2005 12:21) : 

///முத்து! நீங்கள் சுத்திச் சுத்தி ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து பின்னூட்டியுள்ளீர்கள். நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன் இது பொதுவானதென்று. அந்தக் கருத்து உங்களது. அதே விடயத்தில் என்கருத்து வேறானது.///

வசந்தன்,
கற்பனைக்கு எல்லை உண்டா என்ன?. இதை நமது அனுபவத்தில் கண்டவற்றை வைத்துப் பார்க்காமல் கதையின் இன்னொரு பாதையாக மட்டுமே பார்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன் :-).

நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை, நீங்கள் சொல்லியவற்றை வைத்துப் பார்க்கும்போது அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட வேண்டியதற்கான நியாயத்தை ( எடுக்கப்பட்ட முடிவை அல்ல) அப்படத்தில் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. முழுமையாய் அப்பெண்ணின் சுயநலம் என்று மட்டுமே பாராது, ஒரு வகையான மனித நேயத்தாலும்கூட இம்முடிவை எடுக்க முடியும். ஒரு கதையைப் பல கோணங்களில் பார்ப்பது மிகச் சாத்தியமானதுதான். ஒன்றுக்காய் ஒருவரைத் தாக்கி அழிக்க நினைப்பதை மட்டுமல்ல, முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத ஒருவருக்காக தனது உயிரைத் தருவதும், அவரின்பால் அன்புகொள்வதும்கூடச் சாத்தியமானதே. ஒரு கற்பனையில் இதை நடத்துவது எளிதானது மட்டுமல்ல, மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளக்கூடியதும்தான்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________