தமிழ் வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றம்.
பிறை - ஏழு. தமிழ் வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றம். இதைப்பற்றி ஏற்கெனவே பலர் கதைத்துவிட்டார்கள். காசி தன் பதிவில் இதுபற்றி எழுதியிருந்தார். இங்கே நானும் என்பங்குக்கு எழுதுகிறேன். பெருமளவு காசியின் கருத்துக்களுடன் ஒத்திருக்கிறேன். ‘உ’கர, ‘ஊ’காரங்கள் சேர்ந்து வரும் உயிர் மெய்களுக்குத் தனித்தனி வரிவடிவம் கொடுக்கப்படுகிறது. ஏனைய உயிர்மெய் வடிவங்கள் போல் இவற்றுக்கும் பொதுவான முறையொன்று இருந்தால் தமிழைப் பயில்வோருக்கு மிக எளிதாக இருக்கும். அத்தோடு கணிணி சம்பந்தப்பட்டும் அனுகூலமுண்டு. இதனால் என்னென்ன அனுகூலங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. என்னைவிடச் சிறப்பாக வேறு யாராவது சொல்ல முடியும். ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மருத்துவர் பொன்.சத்தியநாதன் இது சம்பந்தமாக முயற்சிகள் எடுத்துள்ளார். அவரும் இதுமாதிரியான கருத்தையே கொண்டுள்ளார். கிரந்தத்துக்கு நாம் பாவிக்கும் குறியீடுகளையே இந்த 'உ'கர 'ஊ'காரமேறிய உயிர்மெய்களுக்குப் பயன்படுத்தலாம். (இதற்குப் பலரின் ஆதரவும் உண்டென்று நினைக்கிறேன்.) ஆனால் அவற்றை அப்படியே பயன்படுத்துவதிற் சில சிக்கல்களுள்ளன. கிரந்தத்தை அப்படியே பயன்படுத்துகிறோமென்ற மனோபாவம் ஒன்று. அதைவிட பக்கவாட்டு அகலம் அதிகமாகும் என்பது மற்றொன்று. இதைக் கருத்திற்கொண்டு அக்குறிகளை செங்குத்தாகப் போடுதல் நலமென்று கருதப்படுகிறது. ‘விடுதலை’ பத்திரிகை இப்படியொரு எழுத்துருவைப் பாவிப்பதாக அறிகிறேன். யாராவது விளக்கவும். பொன்.சத்தியநாதன் அவர்கள் வடிவமைத்த ஓர் எழுத்துருவைப் பாவித்து நாலைந்து வசனங்கள் தாயாரித்துள்ளேன். அவற்றில் 'உ'கர, 'ஊகார உயிர்மெய்களை உங்களாற் புரிந்து கொள்ளக் கூடியவாறுள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். படத்துக்குக் கீழே அவற்றின் தற்போதைய வடிவத்தைத் தந்துள்ளேன். இவ் எழுத்துருவில் டி,டீ என்பவற்றுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழமையாக நாம் பாவிப்பதுபோலன்றி, ‘ட’வுடன் விசிறி வரும். இந்த மாற்றங்களும் தேவையென்பது என் கருத்து. மேலதிகமாக இரு இடங்களை இவ்வெழுத்துக்களுக்காக ஒதுக்கியுள்ளோம். இவற்றையும் உங்களாற் புரிந்து கொள்ள முடிகிறதா எனப்பாருங்கள். இது பற்றிய கருத்துக்களைப் பகிரவும். இதிலிருக்கும் குறைநிறைகளை அலச வேண்டும். எனக்கு இம்மாற்றங்கள் பிடித்துள்ளது. மேலும் என்னென்ன செய்யலாமென்பதையும் சொல்லுங்கள். செய்யுங்கள். எழுத்துரு சம்பந்தமாக பரவலான விவாதமொன்று தேவை. ஒருங்குறி சம்பந்தமாகவும் பிரச்சினைகளுள்ளன. திடீரென இம்மாற்றங்கள் குழப்பத்தைத் தரலாம். வாசிப்பதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். ஆனால் இவற்றின் பலாபலன்கள் முக்கியமானதென்றால் அவற்றைச் செயற்படுத்துவது முக்கியம். இதிற் கடினமென்று சொல்ல எதுவுமில்லை. 13 எழுத்துத் திருத்தங்களைக் கொண்டு வந்தபோது நாம் ஏற்றுக்கொள்ளவில்லையா? வெறும் ஈராண்டுகளுக்குள் சரளமாக எழுதப்பழகவில்லையா? அப்படிப்பட்ட மாற்றம்தான் இதுவும். ஒலிவடிவம் தான் முதன்மையானது. வரிவடிவம் மாறாமலே இருப்பதன்று. காலத்துக்குக் காலம் அது மாற்றமடைந்து வந்துள்ளது. இதுபற்றி வேறிடத்திற் பேசியாகிவிட்டது. ஆக வரிவடிவத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்க முடியாது.முக்கியமாக அச்சில் வந்துவிட்ட இலட்சக்க்ணக்கான புத்தகங்களை என்ன செய்வது என்ற கேள்வியுண்டு. என்னைப் பொறுத்தவரை பழய முறை, புது முறை இரண்டிலுமே வாசிக்கத்தக்க தேர்ச்சி இயல்பாக மக்களிடம் இருக்கும். இன்று எழுத்துச் சீர்திருத்தத்தின்பின் நாமந்த 13 எழுத்துவடிவங்களையும் இருமுறைகளிலும் வாசித்தறியப் பழகிக்கொண்ட மாதிரி. இந்த மாற்றத்தின்படி நமக்கு உயிரெழுத்துக்கள் பதினொன்று, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு, உயிர்மெய்யைக்குறிக்கப் பாவிக்கும் குறிகள் (கீற்றுக்கள்?) ஒன்பது என முப்பத்தெட்டு விசைகள் மட்டுமே விசைப்பலகையில் தேவை. ‘ஃ’ ஐயும் சேர்த்தால் நாற்பது. (உயிரில் ‘ஒள’ என்தற்குத் தனியான விசை தேவையில்லை. அதேபோல் உயிர் மெய்யில் ‘ஒள’ இன் வரிசையில் வரும் அனைத்துக்கும் தனிக்கீற்றுத் தேவையில்லை.) இங்கே வழமையான ‘ள’கரத்தை ‘ஒள’க்குப் பாவிப்பதைப் பொன்.சத்தியநாதன் எதிர்க்கிறார். அதற்கென தனியான, ‘ள’கரத்துடன் குழப்பாத வரிவடிவமொன்றின் தேவையை அவர் விளக்குகிறார். இதற்கு சுளியற்ற ‘ள’கர வரிவடிவத்தை இப்போது அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் சிறிய எழுத்துருக்களில் வித்தியாசம் தெரியுமளவுக்கு இருக்க வேண்டும். இதே வடிவத்தை ‘ஊ’காரத்தில் வரும் ‘ள’கரத்துக்கு மாற்றாகவும் பாவிக்க வேண்டுமென்பது அவர் வாதம். 1.அவனுக்குப் பிடித்தது எனக்கும் பிடிக்கும். 2.முருகனை வேண்டுங்கள். 3.எனக்கும் இது வேண்டும். 4.இவை உங்களுக்குப் புரிகிறதா? 5.நான் கூடவே வரவா? 6.ஊழிப்பெருவினை. 7.ஒளடதம் பற்றி ஒளவையார் எழுதினார். 8.இந்த முறையை ஏற்கிறீர்களா? ------------------------------------------------------- இனிச் சும்மா பம்பலாக….. கண்ணன் சொன்னது போல் தனியே உயிர் மற்றும் மெய்களைக்கொண்டே எழுதும் முறையும் நன்று போலவே படுகிறது, என்று நான் சொன்னால் என்னை அடிக்க ஒரு கூட்டமே தயாராகி வரும். ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.முடிந்தால் கண்ணன் முறையில் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள். (மெய்யிற்குக் குற்றுப்போடாமல் எழுதுவது என் ஆலோசனை. ஆனால் இங்கே குற்றுப்போட்டே எழுதுகிறேன்.) ப்ஓங்க்அட்ஆ ம்அட்அப்ப்அச்அங்க்அளஆ. இது புரிந்துவிட்டால் அடுத்த வளர்ச்சி. உயிரில் நெடிலுக்கு ஏன் தனியெழுத்து வேண்டும். குறிலையே இருமுறை எழுதினால் ஆயிற்று. (ஆங்கிலத்தைப்போல. எமக்கு 25 போதும்.) ‘ஐ’காரத்தை முறையே அ,இ ஆகியவற்றின் இணைவொலியாகவும் ‘ஒள’காரத்தை அ,உ ஆகியவற்றின் இணைவொலியாகவும் கொண்டால் இன்னும் இரண்டு குறைந்து 23 எழுத்துக்களுடன் தமிழ் தயார். இதையும் முயன்று பாருங்கள். ப்ஒஒங்க்அட்அஅ ம்அட்அப்ப்அச்அங்க்அள்அஅ.அஇய்அஇய்ஒஒ ந்எஎர்அம்அஅய்இட்ட்உத்உ வ்அர்அட்எஎ? Labels: தமிழ், நட்சத்திரக் கிழமை, விவாதம் |
"தமிழ் வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றம்." இற்குரிய பின்னூட்டங்கள்
அவனுக்குப் பிடித்தது எனக்கும் பிடிக்கும்..... வகை போலத்தான் மலயாள மொழியிலேயும்
எழுத்துக்கள் வருகிறது!
அங்கேயும் பழைய லிபியைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். கூட்டு எழுத்தெல்லாம்
இப்ப இல்லை!
அடுத்தது ப்ஓங்க்அட்ஆ ம்அட்அப்ப்அச்அங்க்அளஆ
'போங்கடா மடப்பசங்களா' இது படிக்கக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு!
ப்ஒஒடஅஅ ம்உட்ட்அஅள்
எழுதிக்கொள்வது: NONO
இது தமிழ் எழுத்தின் அழகையை கெடுக்கிறதே... மாற்றம் தேவைதான் ஆனா இது to much...
14.8 9.5.2005
சீர்திருத்த எழுத்தைவிட நம்மிடமிருக்கும் இந்த எழுத்துக்களே மேலானது!நேர்த்தியானது.நமது தமிழ் வரிவடிவமாக ரோம லிபியை ஏற்கணும்,இல்லையா இப்போதிருப்பதை விட்டுவிடவேண்டும்.கணினிக்கேற்ற லிபி ரோம லிபியே.அதை ஏற்பதில் சிக்கல்கள் குறைவு.ஏற்காவிட்டால் நமது அழகான இந்த லிபியை விட்டுவிட வேண்டும்.மேற்காட்டிய வரிவடிவங்களைச் சகிக்கமுடியவில்லை.
வசந்தன் இந்த "ழ" னாவையும் "ள" னாவையும் ஒண்டாக்க ஏதும் வழியிருக்கா பாருங்க. அதோட நான் உச்சரிக்கேக் ரெண்டையும் ஒருமாதிரித்தான் உச்சரிக்கினறான். சில ஆக்கள் வடிவா "ழ" உச்சரிப்பீனம் நானும் முயன்று பாத்தன் ஏதோ நடிக்கிற மாதிரி இருந்துது விட்டிட்டன்.
கறுப்பி!
'ழ'கர, 'ள'கர உச்சரிப்புக்கள் இன்று எல்லாராலுமே ஒரே மாதிரியே உச்சரிக்கப்படுகிறது. மிகச்சிலரே வலிந்து இன்னும் 'ழ'கரத்துக்குரிய உச்சரிப்பைப் பேணுகிறார்கள். நானறிந்து நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி மற்றும் பண்டிதர் பரந்தாமன் ஆகியோர் அவர்களுள் அடக்கம்.
தமிழகத்திலிருந்து வந்திருந்த முனைவர் கு.அரசேந்திரனிடம் கேட்டுப்பார்த்தேன், அவரும் எம்மைப்போலவே ஒரே மாதிரியாகவே இரண்டையும் உச்சரிக்கிறார். அதைவிட முசுப்பாத்தி, 'ர'கர, 'ற'கர மாற்றங்கள் கூட அவர்களிடமில்லை. சின்ன ற, பெரிய ற என்றே கதைக்கிறார்கள்.
மலையாளிகள் 'ழ'கர உச்சரிப்பை இன்றளவும் பேணுவதாக அறிகிறேன். யாராவது தெரிந்தாற் சொல்லவும்.
என்னைப்பொறுத்த வரை அந்த 'ழ' உச்சரிப்பை இனியெம்மால் மீட்க முடியாது என்றே தோன்றுகிறது. எமது நாவு அமைப்பு தற்போது அந்த உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் அல்லாமல் மாறிவிட்டது என்றே எண்ணுகிறேன்.
உச்சரிப்பு மாற்றத்தை விடுங்கள். எழுதும்போது அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதூடாக பொருட்பிழைகளைக் குறைக்கலாம்.
எழுதிக்கொள்வது: ef;fPUd;
ஒளவையாரை அவ்வையார் என்று எழுதலாம்
ஐயத்தை அய்யம் என்று எழுதலாம்
தொல்காப்பியம் அ ய் சேர்ந்ததுதான் ஐ என்றும் அ வ் சேர்ந்தால் ஒள என்றும் சொல்கிறது. பெரியாரின் எழத்துச் சீர்திருத்தம் இதுவே
தமிழில்இந்த இரண்டு உயிர் எழுத்துக்களும் பிற்பாலத்தில் வரிவடிவத்தில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.
8.5 21.7.2005
எழுதிக்கொள்வது: யாழ் கொபி
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
15.21 17.8.2005
Related
இது எளிய, நல்ல வரிவடிவம் தான் என்ற போதும் தமிழ் எழுத்துப்போலத் தோன்றாமலிருக்கிறது. பழகிய பிறகு ஒரு வேளை வழமையாகத்தோன்றலாம். எனவே தான் நான் ஏற்கனவே உள்ள வரிவடிவத்திலிருந்து குறியீட்டைத் தயாரிக்க முற்பட்டேன